Loading

டீசர் 2

 

“ம்மா, என்னம்மா இது? நான் என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னா சொன்னேன்? படிச்சு முடிச்சதும், நீங்க யாரை சொல்றீங்களோ கல்யாணம் பண்ணிக்குறேன்னு தான சொன்னேன்! உங்களை யாரு இப்போ எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்க?” என்று பொறிந்தாள் உதயராகா.

 

“அடியேய், கொஞ்சம் என்னையும் பேச விடுடி. அப்படியே அப்பாவை மாதிரியே பொறந்து தொலைஞ்சுருக்கு!” என்று மகளை திட்டும் சாக்கில் கணவரையும் திட்டியவரோ, “யாரு இப்போ உனக்கு மாப்பிள்ளை பார்த்தா? அதுவும், நீ படிச்சு முடிச்ச பின்னாடி தான் கல்யாணம்னு ஸ்டிரிக்ட்டா சொன்னன்னு, உன் அப்பா ஜாதகம் பார்க்க கூட விடல.” என்றார்.

 

“அப்போ எதுக்கு திடீர்னு கூப்பிட்டு பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னீங்க?” என்று உதயராகா குழப்பமாக வினவ, “உன் ஃபோட்டோ பார்த்து பிடிச்சு போய் அவங்க தான் கேட்டாங்க டி. நல்ல சம்பந்தம்னு நான் தான் உங்க அப்பாவுக்கு வேப்பிலை அடிச்சுருக்கேன். நீ நடுவுல புகுந்து எதையும் கெடுத்து விட்டுடாதடி.” என்றார்.

 

“நினைச்சேன், அது நீயா தான் இருக்கும்னு. நான் அப்பா செல்லம்னு என்மேல உனக்கு பொறாமைன்னு தெரியும். ஆனா, அதுக்காக இப்படி என்னை பேக்கப் பண்றதுக்கான வேலையை தான் பார்த்துட்டு இருக்கியா?” என்று விளையாட்டாக அவள் வினவ, “எது பேக்கப் பண்றேனா? க்கும், இதுல பொறாமை வேறயா? எனக்கு ஒரு ஆமையும் இல்ல மா மகளே! வேணும்னா, உன் கல்யாணத்துக்கு அப்பறம், நீயே உங்க அப்பாவை கூட்டிட்டு போய் வச்சுக்கோ. தொல்லை ஒழிஞ்சுது.” என்றார்.

 

“சரி சரி, போதும் உங்க புலம்பல்ஸ். மாப்பிள்ளையோட ஃபோட்டோ எங்க?” என்று உதயராகா வினவினாள்.

 

இது தான் உதயராகா. தனக்கு பிடிக்காத நிகழ்வு நடந்தாலும், உடனே எதையும் வெளியே காட்டிவிட மாட்டாள். என்ன ஏதென்று ஆராய்ந்து பார்த்தே தன் உணர்வுகளை கூட வெளிக்காட்டுவாள். அத்தனை நிதானம் அவளிடம்!

 

மேலும், அவளுக்கு பிடிக்காத எதையும் அவளின் பெற்றோர் செய்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அபாரமாகவே இருந்தால் தான், இந்த நிதானத்திற்கு காரணமோ?

 

பின்வரும் காலத்தில் இந்த நிதானம் எங்கோ மறைந்து விடும் என்று இப்போது அவளுக்கு தெரியாதல்லவா?

 

உதயராகாவின் அன்னை கொடுத்த புகைப்படத்தில் சாதாரண ஃபார்மலில் கூட கம்பீரமாக தெரிந்தான் அவன்.

 

உதயராகாவின் விழிகள் அவனை அவளுக்கு தெரியாமலேயே உள்வாங்கிக் கொண்டிருந்தன.

 

‘ஹ்ம்ம், ஹேண்சமா தான் இருக்கான்!’ என்று தனக்குள் கூறிக் கொண்டவள், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “ம்மா, இதென்ன இவர் இவ்ளோ அழுத்தமா இருக்காரே. எப்பவும் இப்படி தானா? இப்படியே இருந்தா, என் நிலைமை என்ன ஆகுறது?” என்றாள்.

 

“ஹ்ம்ம், எல்லாருக்கும் ஆசைப்பட்ட மாதிரி கிடைச்சுடுமா? கிடைச்சதை வச்சு வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்! நான் உங்க அப்பாவை வச்சு காலம் தள்ளுறேனே அப்படி!” என்று அவளின் அன்னை அவளுக்கு சளைத்தவர் இல்லை என்று நிரூபித்தார்.

 

*****

 

பொன் அந்தி சாயும் வேளை… ஆயினும், ‘கஃபே டே’யில் கூட்டம் கணிசமாகவே இருந்தது. அதிலும் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த மேஜை என்னவோ பிறரின் கவனத்தை ஈர்க்காததை போல தான் இருந்தது.

 

ஆனாலும், அவன் பார்வை எதிரிலிருந்தவளை நோட்டம் விடாமல், சுற்றிலும் அலைந்து கொண்டிருந்தது. அது அவளுக்கு சிறு கோபத்தை உண்டாக்கினாலும், அவனின் அந்த உடல்மொழி கூட அவளை ஈர்க்க தான் செய்தது.

 

‘சுத்தம்! இப்படி பராக்கு பார்க்கவா மீட் பண்ண கூப்பிட்டேன்? அது சரி, வரவே மாட்டேன்னு சொன்னாராமே!’ என்று முணுமுணுத்துக் கொண்டவள், அவன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு செருமினாள்.

 

ஒருநொடி அவளைப் பார்த்தவன், மீண்டும் சுற்றத்தில் கவனத்தை திருப்ப, இப்போது அவளுக்கு கடுப்பாகி விட்டது.

 

“ஹலோ சார், ரொம்ப நேரமா யாரையோ தேடுறீங்களே, யாருன்னு சொன்னா நானும் தேடுவேன்ல. ஏன்னா, அதுக்கு தான் இங்க வந்துருக்கேன்!” என்று அவள் நொடித்துக் கொள்ள, அப்போது தான் அவன் பார்வை அவள் மீது முழுதாக படிந்தது.

 

அடுத்து என்ன? கதையில் பார்ப்போம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்