Loading

அத்தியாயம் 2

 

வாசந்தியும் கமலக்கண்ணனும் உணவு மேஜையில் அமர்ந்தபடி அவர்களின் ஒரே புதல்வனின் திருமணத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத முகபாவனையுடன் வந்து அமர்ந்தான் தீரன் ஆத்ரேயன்.

 

அவன் அறைக்கு செல்லும்போது இருந்த இலகு பாவம் இப்போது கிஞ்சித்தும் இல்லை அவனிடத்தில்.

 

அவனை சுட்டிக்காட்டி கண்ஜாடையில் கணவனும் மனைவியும் பேசிக் கொள்ள, “ப்ச், இப்போ பரிமாறப் போறீங்களா, இல்ல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பார்த்துக்க போறீங்களா?” என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மிக பொறுமையாக வினவினான்.

 

‘இவனுக்கு மட்டும் எப்படி பொசுக்குன்னு கோபம் வருதோ!’ என்று மனதிற்குள் புலம்பியபடியே, மறந்தும் திருமண பேச்சுக்களை வெளியிடாமல் பார்த்துக் கொண்டனர் தீரனின் பெற்றோர்.

 

ஒருவழியாக தீரன் சாப்பிட்டு முடித்து பணிக்கு செல்ல, “ஏங்க, இவன் இப்படி எந்நேரமும் முசுட்டுத்தனமா இருந்தா, எந்த பொண்ணுக்கு தான் பிடிக்கும்?” என்று கவலையாக கேட்டார் வாசந்தி.

 

“ஹ்ம்ம், நானும் அதை தான் யோசிக்குறேன். இந்த சீரியல்ல எல்லாம் பொண்ணுக்கு முக்காடு போட்டு கல்யாணம் பண்ணி வைக்குறாங்களே, அதே மாதிரி நம்மளும் ஏதாவது பொய்யை சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான். கல்யாணத்துக்கு அப்பறம், அவனாச்சு அந்த பொண்ணாச்சு!” என்று கமலக்கண்ணன் சலித்துக் கொண்டே கூற, அவரை முறைத்தார் அவரின் மனைவி.

 

“உங்ககிட்ட போய் புலம்புனேன் பாருங்க, என்னை சொல்லணும்!” என்று தலையிலடித்துக் கொண்ட வாசந்தியோ, “இனிமே, வெட்டியா உட்கார்ந்து டிவில சீரியல் பார்த்தீங்கன்னா அவ்ளோ தான். போங்க வெளிய போயிட்டு அப்பறமா வாங்க.” என்று துரத்தாத குறையாக அனுப்பி வைத்த பின் தான் நிதானமாக அமர்ந்தார் வாசந்தி.

 

“இப்படி ரிட்டயர்ட்டான காலத்துல வெளிய துரத்தி விடுறாளே!” என்ற புலம்பலுடன் நண்பரை பார்க்கச் சென்றார் கமலக்கண்ணன்.

 

*****

 

அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டியவனின் கண்கள் என்னவோ பாதையை மட்டும் நோக்கிக் கொண்டிருந்தாலும், அவன் மீது படியும் பார்வைகளையும் உணர்ந்தே தான் இருந்தான் தீரன் ஆத்ரேயன்.

 

அதில் எப்போதும் போல எரிச்சல் அவனை ஒட்டிக்கொள்ள, காலையில் உண்டான கோபத்திற்கு மேலும் தூபம் போட்டது போலிருந்தது அவர்களின் நடவடிக்கைகள்.

 

விட்டிருந்தால், அவனை நோக்கிய கண்களுக்குரிய அத்தனை நபர்களையும் கோபக்கணைகளால் துளைத்திருப்பான். நல்லவேளையாக, அவர்களை அவனிடமிருந்து காப்பாற்றியது அவனின் ஒரே நண்பன் அமீர் தான்.

 

ஆம், ஒரே ஒரு நண்பன்!

 

தீரனின் கோபம் நட்பையும் எட்டாத தூரத்திற்கு தள்ளியிருக்க, அமீர் ஒருவன் மட்டும் அந்த கோபத்திற்கே போக்கு காட்டி தீரனுடன் ஒட்டிக் கொண்டு திரிகிறான்.

 

‘நாய்க்கு வாக்கப்பட்டா குறைக்கணும்’ என்பது போல, துர்வாசரின் மாடர்ன் அவதாரமாக ஜனித்திருக்கும் தீரனுடன் நண்பனாக இருக்க வேண்டுமென்றால், அவன் கோபத்தை தாங்கிக் கொள்ள வேண்டுமே. அது தானே உலக வழக்கம்!

 

அதன்படி, “தீரா, என்ன இன்னைக்கு ரொம்ப கிளாமரா வந்துருக்க?” என்று தானாக வந்து சிக்கினான் அமீர்.

 

அந்த அவர்களின் பார்வைகளால் உண்டான கோபம், இப்போது நண்பனின் ‘கிளாமர்’ என்ற சொல்லில் வெடித்துக் கொண்டு கிளம்பியது.

 

அப்போதும் நாசுக்காக அமீரை தனியே அழைத்துச் சென்ற தீரன், “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? வயசு முப்பதாக போகுது. இன்னும் எங்க எப்படி பேசணும்னு தெரியலையா உனக்கு?” என்று அமீர் கதற கதற கத்தி விட்டே ஓய்ந்தான்.

 

“தீரா, இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்துற? உனக்கு காம்ப்ளிமெண்ட் தானடா குடுத்தேன்!” என்று அமீர் பாவமாக வினவ, “மன்னாங்கட்டி காம்ப்ளிமெண்ட்! இது தான் நீ காம்ப்ளிமெண்ட் குடுக்குற லட்சணமா?” என்று விவாதித்தான் தீரன்.

 

“ஏன்டா கிளாமரா இருக்கன்னு சொன்னது ஒரு குத்தமா? இந்த வயசுல கிளாமரா இருக்காம, பின்ன அறுபது வயசுலயா நீ கிளாமரா இருக்கப் போற!” என்று புலம்பிய அமீரை கோபமாக முறைத்தவன், பின்னர் என்ன நினைத்தானோ, தலையை இருபுறமாக அசைத்துவிட்டு சென்று விட்டான்.

 

“ரொம்ப தான் டா வாத்தியா இருக்க! பார்க்குறேன் எத்தனை நாளைக்குன்னு! நாளைக்கே என் தங்கச்சி வந்து காம்ப்ளிமெண்ட் குடுக்கும்போது இப்படி தான் கிளாஸ் எடுக்குறியான்னு பார்க்கத்தான போறேன்.” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்த அமீருக்கு, ‘அவன் செஞ்சாலும் செய்வான்!’ என்று மறுமொழி கூறியது அவனின் மனசாட்சி.

 

தனியே தனக்குள் பேசியபடியே நின்று கொண்டிருந்தவனை பார்த்து கேலியாக சிரித்தபடி பெண்கள் கூட்டம் நகர, அப்போது தான் நிகழ்வுக்கு வந்தான் அமீர்.

 

‘ச்சை, இவனால இந்த சில்வண்டுங்க எல்லாம் என்னை பார்த்து சிரிக்குதுங்களே!’ என்று மீண்டும் புலம்பியபடி நண்பனை தேடிச் சென்றான்.

 

*****

 

தீரன் ஆத்ரேயன் – அந்த நகரத்தில் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவில் விரிவுரையாளனாக பணிபுரிகிறான்.

 

ஐந்தே முக்கால் அடி அழகனாக இருந்தாலும், பல நற்பண்புகளை கொண்டவனாக இருந்தாலும், அவனின் கோப முகமும், எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கும் தைரியமும் தான், மாணவிகளின் மத்தியில் அவன் பிரபலமாவதற்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தன.

 

“இதென்ன காலேஜ் பொண்ணுங்க சைக்காலஜியோ! கோபமா இருக்குறவனை க்ரஷ்ன்னு சொல்லிட்டு இருக்குறது!” என்று ஒருமுறை அமீர் கூற, “ப்ச், எத்தனை முறை சொல்லிருக்கேன், இப்படி என்னையும் அவங்களையும் இணைச்சு பேசாதன்னு! அவங்க என்னோட ஸ்டுடெண்ட்ஸ். நான் அவங்களுக்கு ப்ரொஃபெசர். இத்தனை மரியாதையான போஸ்ட்டிங்கை இப்படி வல்கரா போட்ரைட் பண்ற நீ!” என்றான் தீரன்.

 

ஏதோ நல்ல மனநிலையில் இருந்ததால் பெரிதாக திட்டவில்லை!

 

“எது, நான் வல்கரா போட்ரைட் பண்றேனா? ரைட்டு டா. ஆமா, எனக்கு இப்படி லெக்ஷர் எடுக்குறியே, உன்னை வெறிச்சு வெறிச்சு பார்க்குற அவங்களை கூப்பிட்டு கிளாஸ் எடுக்க வேண்டியது தான?” என்று அமீர் கேட்க, “இதை கண்டுக்காம விடுறது தான் பெட்டர். இல்லன்னா, நான் என்னமோ அவங்களை கேர் பண்றது போல ஆகிடும்.” என்று விட்டான் தீரன்.

 

அவன் அப்படி தான்! அவனுக்கு அவன் நியாயங்கள் மட்டுமே!

 

அவனது துறையில் சிறந்தவன் அவன். பலருக்கு பாடம் எடுக்கும் உன்னத பதவியில் இருக்கும் தன்மீது ஒருவரும் குற்றம் சொல்லிவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருப்பவன்.

 

இதுவரை அவன் மீது குற்றம் சொல்லும்படி எவ்வித நிகழ்வுகளும் ஏற்படவில்லை.

 

இனி?

 

*****

 

மதிய உணவு இடைவேளையின் போது கூட தீரன் கோபமாக இருப்பதைக் கண்ட அமீருக்கு, நண்பனின் கோபத்திற்கு காரணம் தான் அல்ல என்பது புரிய, அவனிடம் நேரடியாகவே கேட்டான்.

 

“என்னதான் டா உனக்கு பிரச்சனை? தினமும் நீ கோபப்படலைன்னா சாமிக்குத்தம் ஆகிடும்னு யாராவது சொன்னாங்களா?” என்று அமீர் கேட்க, அவனை முறைத்த தீரனோ, காலையில் தனக்கு வந்த செய்தியை காட்டினான்.

 

அதை ஒருமுறை பார்த்த அமீரோ தீரனிடம், “நான் தான் அப்போவே சொன்னேன்ல. நீதான் என்னமோ சந்திரமுகி ஜோதிகா மாதிரி, ‘எனக்கா தெரியாது’ன்னு சீன் போட்ட!” என்று சமயம் பார்த்து நண்பனின் காலை வாறிவிட்டான்.

 

“இப்போ நான் ஏமாந்ததை குத்திக்காட்டியே ஆகனுமா?” என்று எரிச்சலுடன் தீரன் வினவ, “அஃப்கோர்ஸ் டா, பின்ன ஃபிரெண்டுன்னு நான் எதுக்கு இருக்கேன்?” என்று பற்கள் தெரிய சிரித்த அமீரை தலையிலேயே கொட்டினான்.

 

“ஹலோ, உனக்கும் எத்தனை முறை சொல்றது, இப்படி கேன்டீன்ல இருக்கும்போது தலையில கொட்டாதன்னு. இங்க என்னோட ஸ்டுடெண்ட்ஸ் எத்தனையோ பேர் இருப்பாங்க. நான் அவங்களுக்கு ப்ரொஃபெசர். இத்தனை மரியாதையான போஸ்ட்டிங்ல இருக்க என்னை, இப்படி காமெடியனா போட்ரைட் பண்ற நீ!” என்று அவன் கூறியதை அவனுக்கே கூற, அவர்களை சுற்றி பார்த்த தீரனோ, அந்த ஒட்டுமொத்த கேன்டீனிலும் அவர்கள் இருவர் தவிர யாருமில்லாததை கண்டு மேலும் எரிச்சலாகி, “நானே கொலை காண்டுல இருக்கேன். வெறுப்பேத்துன அவ்ளோ தான்!” என்று மிரட்டினான்.

 

“ச்சு, ரொம்ப டென்ஷனா இருக்கியேன்னு கூல் பண்ணலாம்னு நினைச்சேன். சரி விடு, அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?” என்றான் அமீர்.

 

“எனக்கு… இன்னும் சந்தேகமா தான் இருக்கு. இது உண்மையா இல்லையான்னு செக் பண்ணிட்டு தான், அடுத்து என்னன்னு யோசிக்கணும்.” என்று தீரன் கூறியதும், ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அமீருக்கே கோபம் வந்து விட்டது.

 

“சரிங்க உத்தமரே! நீங்க உண்மையை கண்டுபிடிங்க, இல்ல என்னமோ பண்ணுங்க. எனக்கென்ன?” என்று சத்தமாக கூறியவன், அங்கிருந்து விலகியவன், “மனுஷன்னா, பிறரை கொஞ்சமாச்சும் நம்பனும்.” என்றபடி நடந்து செல்ல, அவனைப் பார்த்த தீரனோ கண்களை மூடி பெருமூச்சு விட்டான்.

 

*****

 

காலையில் மனைவி துரத்தி வெளியே சென்ற கமலக்கண்ணன் மதியம் தான் வீடு திரும்பினார்.

 

அவருக்கு உணவை பரிமாறிய வாசந்தியையும் அமரச்செய்து அவருக்கு உணவு பரிமாறிய கமலக்கண்ணனோ, “வாசு, இன்னைக்கு என் ஃபிரெண்டு ராஜசேகரை மீட் பண்ணேன். பழைய கதைகள் பேசிட்டு இருந்த நாங்க, அப்படியே குடும்பம் குழந்தை பத்தி பேச ஆரம்பிச்சோமா, அப்போ தான் அவன் ஒரு ப்ரோபோசலை சொன்னான். அவனோட அண்ணன் பொண்ணுக்கு வரன் பார்த்துட்டு இருக்காங்களாம். அதான் நம்ம தீரனுக்கு பார்க்கலாமான்னு கேட்டான்.” என்றார்.

 

அதில் மகிழ்ந்த வாசந்தியோ, “நீங்க என்ன சொன்னீங்க?” என்று வினவ, “என்ன சொல்ல? உன் பையனை நம்பி வாக்கு தர முடியுமா?” என்றார் கமலக்கண்ணன்.

 

“ப்ச், ஆரம்பிக்கும்போதே இதென்ன பேச்சு? நீங்க ஃபோனை போட்டுக் குடுங்க, நான் பேசிக்குறேன்.” என்றார் வாசந்தி.

 

ஆக, மாப்பிள்ளைக்கே தெரியாமல் இங்கு திருமணப் பேச்சு துவங்கியிருந்தது.

 

*****

 

“அப்போ அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்லிடவா?” என்று மகிழ்வுடன் வினவினார் கரிகாலன்.

 

அவரின் மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பது போல, “அப்பா, அதுக்கு முன்னாடி, எனக்கொரு கண்டிஷன் இருக்கு.” என்று உதயராகா கூற, இதை தன்னிடம் கூறாத மனைவியை முறைத்தார் கரிகாலன்.

 

‘ப்ச், இவரு வேற, என்னன்னே தெரியாம என்னை முறைக்க வேண்டியது!’ என்று உள்ளுக்குள் புலம்பிய தாமரைச்செல்வியோ, “ஹே, என்னடி புதுசா எதுவோ சொல்ற?” என்று மகளை சத்தமிட்டார்.

 

“ம்ச், பொறுமையா இரும்மா சொல்றேன்.” என்ற உதயராகாவோ கரிகாலனிடம் திரும்பி, “அவங்க வீட்டுல இருந்து பொண்ணு பார்க்க வரதுக்கு முன்னாடி, எனக்கு மாப்பிள்ளை கிட்ட தனியா பேசணும்.” என்றாள்.

 

மகள் கூறியதைக் கேட்டு, அவளிடம் எதுவும் சொல்ல முடியாத கரிகாலனோ மனைவியை, ‘என்ன இது?’ என்பது போல பார்த்து வைக்க, மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட தாமரைச்செல்வி, “அட, அதான் பொண்ணு பார்க்க வராங்கள, அப்போ எப்படியும் தனியா பேச தான போறீங்க? அதுக்கு முன்னாடியே எதுக்கு பேசணும்?” என்றார்.

 

“ம்மா, நீ இன்னும் எந்த காலத்துல இருக்க? எல்லாரும் டேட்…” என்று பேச ஆரம்பித்தவள், அப்போது தான் கரிகாலன் இருப்பதை கவனித்து, பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள்.

 

கரிகாலன் இப்போதும் மனைவியை முறைக்க, “ஷப்பா, இவருக்கு யாரோ கல்யாணம் பண்றதே பொண்டாட்டியை முறைக்க தான்னு தப்பா சொல்லிக் குடுத்துருக்காங்க.” என்று முணுமுணுக்க, அதைக் கேட்டதும் உதயராகாவுக்கு சிரிப்பு வந்தாலும், சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

 

மனைவியின் முணுமுணுப்பை கேட்டு சலித்துக் கொண்ட கரிகாலனோ, இம்முறை தானே மகளிடம், “உதயா, என்னம்மா இது? இது எப்படி?” என்று தயக்கத்துடன் கேட்க, “ப்பா, பேசி பார்க்காம எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஒருத்தரை பத்தி இன்னொருத்தருக்கு எல்லாமே தெரியலைன்னாலும், கொஞ்சமாச்சும் தெரிஞ்சுக்கணும்ல. அப்படி எங்களுக்குள்ள ஒத்துப்போனா, அவங்க வீட்டுலயிருந்து வந்து பார்க்கட்டும். இல்லன்னா, வேண்டாமே.” என்று உதயராகா தெளிவாக கூறினாள்.

 

மகள் கூறுவதிலும் நியாயம் இருப்பதாக தோன்றியதால், கரிகாலனும் அரைமனதாக அதற்கு சம்மதித்தார்.

 

ஆனால், மாப்பிள்ளை சம்மதிக்க வேண்டுமே!

 

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே, தனியே சந்திக்க மாப்பிள்ளை ஒப்புக்கொண்டதாக அன்னையிடமிருந்து தகவல் கிடைக்க, ‘பொண்ணு நானே மீட் பண்ண கூப்பிடுறேன், இவருக்கு என்னவாம்? ஒருவேளை ஈகோவா இருக்குமோ? ஹ்ம்ம், இருக்கும் இருக்கும். வாத்தியாச்சே, கொஞ்சம் ஸ்டிர்க்ட்டா தான் இருப்பாரு போல. ஆனா, என்கிட்ட நடக்குமா?’ என்று நினைத்துக் கொண்டே அவர்களின் முதல் சந்திப்பிற்கு தயாரானாள் உதயராகா.

 

இருவரின் முதல் சந்திப்பு இனிமையானதாக இருக்குமா?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்