Loading

தன் மேல் மொத்தமாக சரிந்து விழுந்தவனைக் கண்டு, இதயம் ஒரு முறை நின்று துடிப்பதை போல உணர்ந்தாள் மதுவர்ணிகா. பெண்ணவளால் அவனது உடல் கனத்தை வேறு தாங்கிப் பிடிக்க இயலாது போக, அவனை அணைத்துக் கொண்டே சுவற்றோரம் சாய்ந்து நின்றவள் பதட்டம் சிறிதும் விலகாமல் அவனது கன்னத்தை பிடித்து தட்ட, அவனோ மீண்டும் மீண்டும் அவள் தோள் வளைவில் தலைசாய்த்துக் கொண்டே இருந்தான்.

 

அந்நொடி தான் அவனிடமிருந்து வந்த மதுவாடையை கவனித்தாள் பெண். அவனை திருமணம் செய்வதாக பேசி முடித்தவுடன் ஆறு மாதம் கழித்தே திருமணமும் நடந்தது. இதுநாள்வரை அவன் மதுவை நாடியதே கிடையாது. அவனுக்கோ மது என்னும் பெண்ணவளை பிடிக்குமே தவிர போதையேற்றும் மது துளியும் பிடிக்காது. அப்படியிருக்க இன்று அவன் குடித்திருக்கிறான் என்பதை நினைக்கும் போதே அதற்கு காரணம், தான் என்பதை உணர்ந்தவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

 

“நந்து… நந்து கண்ணைத் திற.” என்றவள் அவனது கன்னத்தை தட்ட, அவனது கருமணிகளோ இமை மூடியபடி அசைந்தது.

 

“நந்து திறடா ப்ளீஸ்.” என்றவளின் கவலை தொய்ந்த குரல் அவன் செவியை அடைந்ததோ என்னவோ?

 

“நான் போறேன். என்னை விடுடி.” என்றவனது உதடுகள் வார்த்தைகளை உதிர்த்த கணமே நிம்மதி பெருமூச்சொன்றை விடுத்தாள் மதுவர்ணிகா.

 

உடனே வாட்ச்மேனை அழைத்தவள் அவரது உதவியுடன் அவனது கரம் பற்றிக்கொண்டு சத்தம் போடாது தன் அறை வரை அவனை அழைத்து வந்துவிட்டாள்.

 

“அவரு குடிச்ச விசயம் வீட்ல இருக்க யாருக்கும் தெரிய வேண்டாம். நீங்க கிளம்புங்க.” என்றவள் கூறவும் வாட்ச்மேனும், “சரிங்க அம்மா.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

 

அவளும் அவர் சென்றதும் கதவை அடைத்துவிட்டு திரும்ப, மெத்தையில் படுத்துக்கொண்டிருந்த நந்தா பொத்தென்று உருண்டு தரையில் விழ, அந்நொடி தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு.

 

“நந்து…” என்றவள் அடித்துப் பிடித்து சென்று அவன் முன் மண்டியிட்டு அமர்ந்துக் கொள்ள, விழுந்த வேகத்தில் கண்களை திறந்து அவளை பார்த்தவனோ, “ஹாப்பி பர்த்டே மது.” என்று முப்பத்திரண்டு பற்களும் தெரிய புன்னகைத்தப்படி கூறினான்.

 

“ரொம்ப முக்கியம்” என்றவளோ அவனை முறைத்து தள்ளினாள்.

அடுத்த நொடியே அவன் கண்கள் நொடியில் மாறிவிட, அவளை நோக்கி வெடுக்கென்று எழுந்தமர்ந்தவன் அவளது முகத்தை தன்னிரு கரங்களால் தாங்கிப் பிடித்தான்.

 

“ஏன்டி, உனக்கு என்ன பிடிக்கலை. ஏன்னு சொல்லு. ஆனால் உனக்கு தெரியுமா? நான் உன்னை ரொம்ப காதலிக்குறேன். இந்த உலகத்துல நான் நேசிக்குற ஒரே பொண்ணு நீ தான். ஐ லவ் யூ மது. ஐ லவ் யூ…” என்று இவன் கூற அவள் முகத்தில் எந்த ஒரு உணர்வும் வெளிப்படவில்லை. அவனிடமிருந்து அதை எதிர்பார்த்து தான் இருந்திருந்தாள் போல.

 

“ரொம்ப வலிக்குதுடி. எனக்கு வலிக்கும் தானே அந்த முத்தம் பொய்யா? ஆனால் அதுல லவ் இருந்துச்சே? எனக்கு தெரியும். நீ என்னை லவ் பண்ற? இல்லை பண்ணிடுவோமோனு பயப்படுற? சரியா?” என்றவனது சூடான மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டுக்கொண்டே இருக்க, 

 

“போதையில உளறாம தூங்குடா.” என்றவளோ அவனது கைகளை வெடுக்கென்று எடுக்கப் பார்க்க, அவனோ அவளை தன்னிடம் இழுக்க முயன்று, அந்த முயற்சியில் தோற்றுப் போன மறு நொடி அவள் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

 

அதில் அதிர்ந்தவள், “டேய், லூசா நீ? மலை மாடு மாதிரி வளர்ந்துட்டு இப்படி மடியில ஏறி உட்கார்ந்து இருக்க? எந்திரி நந்தா எந்திரி?” என்றவளோ அவனை தள்ள முயற்சிக்க அவனோ அவளது இடையை தன் கைகளால் வளைத்துக் கொள்ள, அவளுக்கு தான் மூச்சு முட்டியது.

 

அவன் குத்தும் தாடியும், அவனது நெருக்கமும் பெண்ணவளின் தேகத்தில் இரசாயன மாற்றங்களை உருவாக்க, “அய்யோ இம்சை பண்றானே” என்று வாய்விட்டே புலம்பியவள் அவனை முறைக்கவும் தவறவில்லை.

 

“உனக்கு என்னடா வேணும்?” உச்சக்கட்ட கடுப்பில் அவள் கேட்க, அந்நொடியே அவளது கன்னத்தை தன்னிரு கைகளில் ஏந்தியவன், “நீ தான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றவனோ படத்தின் வசனத்தைக் கூறிக்கொண்டு சிரிக்க, அவன் கன்னத்தில் பட்டென்று அடி வைத்தாள் மது.

 

அவனோ அதை எதிர்பாராதவன் கண்களை விரித்தபடி, “மம்மி இவ என்ன அடிச்சுட்டா. டாடி இவ என்னை அடிச்சுட்டா…” என்றான் உயர்குரலில்.

 

“ஏய், உன் மம்மி டாடி எல்லாம் இங்க எங்க இருக்காங்க. எதுக்கு இப்படி கத்துற?”

 

“அப்போ ஆன்ட்டி, அங்கிள் இங்க வாங்க.” என்றவன் கத்த, அவனது வாயை பொத்தினாள் மது.

 

“மூச்! இனி ஒரு வார்த்தை பேசுனாலும் அவ்வளவு தான். முதல்ல எந்திரிடா.” என்றவள் அவனை உறுத்து விழித்தபடி கைகளை எடுக்க, “ஏன் மது, உனக்கு என்ன பிடிக்கலை. எல்லாரையும் பார்த்து சிரிக்குற. ஆனால் என்ன பார்த்தா மட்டும் முறைக்கிற? ஏன்??”

 

“ஏன்னா எனக்கு உன்னை பிடிக்கலை.”

 

“அப்படி சொல்லாத ரொம்ப வலிக்குதுடி.” என்றவன் உதட்டை பிதுக்க, “எனக்கும் தான் வலிக்குது மலைமாடு முதல்ல என் மடியிலிருந்து எந்திரி.” என்றவளும் அவனை தள்ள முயற்சி செய்தாள்.

 

“நீ இவ்ளோ கஷ்டப்பட வேண்டாம். நானே போக போறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல. உஸ்…உஸ்…” என்றவன் ராக்கெட் பறப்பது போல செய்கை செய்ய அவள் தான் பதறினாள்.

 

“என்னடா, உளறிட்டு இருக்க? தண்ணீ மட்டும் தானே அடிச்ச? இல்லை விசத்தையும் சேர்த்து கலக்கிட்டியா?” 

 

“கரெக்ட் மது. எப்படி கண்டுபிடிச்ச? கொஞ்சமே கொஞ்சமா…” என்றவனோ ராகமாக இழுக்க, பெண்ணவளோ பதறியபடி, “என்ன குடிச்சுத் தொலைச்ச? இழுக்காமல் சொல்லுடா?” என்று பதட்டம் குறையாது கேட்க அவனோ மீண்டும் மயங்கி அவள் மீதே மொத்தமாக சரிந்தான்.

 

“நந்து… நந்து எழுந்திரி ப்ளீஸ்” என்றவளுக்கு அவளையும் மீறி பயம் சூழ்ந்துக் கொண்டது.

 

‘நிஜமாவே விசத்தை குடிச்சுட்டானா?’ என்று சிந்தித்தவளின் மனம் அடுத்த நொடியே அவனை காப்பாற்ற நினைத்தது. தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள். சிறிதளவு நீரையும் அருந்த வைத்தாள். அதில் அவனது மயக்கம் மீண்டும் தெளிய, 

 

“நந்து என்னடா சாப்பிட்ட? சொல்லுடா… நிஜமாவே விசம் சாப்டியா?” என்றவளின் குரல் வற்றிப் போனது.

 

அவனோ அவளை கண்கள் சுருக்கி பார்த்தவன், “மது மது… மது.” என்றே அவன் முணங்க,

 

“என்னடா சாப்பிட்ட நந்து. தப்பான முடிவு மட்டும் எடுத்திடாதடா?” என்றாள் தவிப்பாக.

 

“உலகத்தில மிக மோசமான விசத்தை குடிச்சிருக்கேன். அதுவும் ஃபர்ஸ்ட் டைம்.” என்றவன் மீண்டும் கண்ணை சொருக, இது விட்டால் சரிபட்டு வராது என்றவள் வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறிவிடலாம். என்று நினைத்து எழுந்த நொடி, அவன் வாந்தி எடுக்கும் சப்தம் அவளது காதுகளை அடைந்தது. 

உடனே அவனது முதுகை நீவியவள், அந்த நாத்தத்தை தாங்க இயலாது அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

 

“நந்து ஆர் யூ ஓகே.” என்றவள் மடமடவென தண்ணீரால் அவனது முகத்தை கழுவி எடுக்க, வாந்தியால் நனைந்த அவன் ஆடையையும் கழற்றி அவ்விடமே போட்டாள். அவனிடம் அந்நொடி அவளுக்கு எவ்வித தயக்கமும் கூச்சமும் இல்லை. அவனை காக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

 

“மது, அந்த விசம் வெளிய வந்திருச்சு.” என்றவன் கண்கள் சொருகக் கூற,

 

“விசமா? அந்த விசத்தோட பேர் என்ன?” கேள்வியாக முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்டாள்.

 

“ஆளை காலி பண்ற விசம். அதுக்கு தமிழ்ல உன் பேரு தான் மது. மதுபானம்” என்றவன் சிரித்துக் கொண்டே கூற, அப்போது தான் பெண்ணவள் நிம்மதி பெருமூச்சினை விட்டாள்.

 

“அடப்பாவி ஒரு நிமிசம் பதற வெச்சுட்டியே.” என்று கூறிக்கொண்டே அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தவள் மெத்தையின் மீது சரித்தாள். அதுவரை பதட்டத்தில் இருந்தவள் அவன் ஆடையின்றி இருப்பதைக் கூட பெரிதாக எண்ணவில்லை. தற்போது பதட்டம் சற்று தீர்ந்திருக்க, வெற்று மார்போடு ஆடையின்றி படுத்திருந்த அவனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

 

“இவனை இப்படியே விட முடியாது. முதல்ல டிரஸ் போட்டு விடுவோம்.” என்று தனக்குத்தானே கூறியபடி உடையெடுத்து வந்தவள் மிக சிரமப்பட்டே அவனுக்கு அணிவித்தாள்.

 

“மது, இந்த மதுபானத்து மேல எனக்கு இதுவரை ஈடுபாடு வந்ததே இல்லை. அதை பார்த்தாலே குமட்டும். உவ்வே…” என்று முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்தவன், “ஆனால் ஒரே ஒரு மது மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மது மேல தீராத போதை! தீராத காதல்! தீராத மயக்கம்!” என்றவன் முகத்தில் தெரிந்தது அந்நொடி அவள் மீது அவன் கொண்டிருக்கும் அன்பு. 

 

முன்பு இருந்ததை விட அவன் முகத்தில் தெளிவு தெரிந்தது. அதே சமயம் படுத்திருந்தவனது பார்வை அவள் மீதே இருந்தது. “என் மது ரொம்ப அழகு. அவ மூக்கு மேல இருக்க குட்டி மச்சம் அதுகூட ரொம்ப அழகு. அவ அழுகையும் அழகு. சிரிப்பும் அழகு.” என்றவன் வருணித்துக் கொண்டே செல்ல,

 

“போதும் போதும் தூங்கு. மீதி நாளைக்கு பேசிக்கலாம்.” என்றவள் அவன் மீது போர்வையை போற்றிவிட, மதுவின் தாக்கத்தில் இருந்தவன் அவனையும் அறியாது உறங்கிப் போனான். 

 

அதன்பின் மதுவோ அவனது வாந்தியை சுத்தப்படுத்தி தரையை துடைத்தவள், அவனது உடையை ஊற வைத்துவிட்டு வெளியே வர, அவனோ குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான். அவளையும் மீறி அவனது தலையை அவள் வருடி விட, அனலாய் கொதித்துக் கொண்டிருந்த அவன் தேகத்தின் சூடு தாங்காது கைகளை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.

 

“அய்யோ ஜூரம் அடிக்குது. ஒருவேளை முதல் தடவை குடிச்சதுனாலயா?” என்று சிந்தித்தவளது காதில் அவனது, “மது” என்ற முனகல் சத்தம் தெளிவாக விழுந்தது. 

 

உடனே பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வந்தவள், அவனது உடம்பை துடைத்து விட்டாள். அவனை எழுப்பி மாத்திரையும் கொடுத்தாள். இருந்தும் அவனது அனத்தல் நிற்கவே இல்லை. அவனோ அவளது கைகளை கெட்டியாக பற்றிக் கொள்ள, அவளுக்கோ அவனை விட்டு விலகவே மனம் வரவில்லை.

 

“எனக்கு என்னாச்சுனு தெரியலை நந்து. என்னால தான் நீ இப்படி இருக்க. ஏன் என் வாழ்க்கைக்குள்ள வந்த?” என்றவளது கண்கள் அவளையும் மீறி கலங்கி விட, அவளது கண்ணீர் அவன் மீதே பட்டுத் தெறித்தது.

 

அவனை கவனித்தபடி பெண்ணவளோ அவனருகில் படுத்துக் கொண்டாள். அவனது முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று சைத்ரா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

“இல்லை. நான் ஒண்ணும் இவனை காதலிக்கலை.” என்று காதுகளை பொத்திக் கொண்டு இவள் கூற, அவனது கரமோ இவளை அணைத்துக் கொண்டது.

 

முதலில் அவனது அணைப்பை விலக்கப் பார்த்தவள் அது முடியாமல் போன நொடி, தன் முயற்சியை கைவிட்டபடி அவனையே காண, அவனோ குளிருக்கு இதமாக அவளை மேலும் தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள, அவனது தொடுகை அவளது உடல் வரை தீண்டி சென்றது.

 

தன் கண்களை மூடி திறந்தவள் அவனையே இமை மூடாமல் பார்த்தாள். அவளையும் மீறி கண்கள் கலங்கி விட, அவளாகவே அவனை அணைத்துக் கொண்டு, தன்னையும் மீறி உறங்கியிருந்தாள் மதுவர்ணிகா.

அடுத்தநாள் காலை அவனுக்கு முன்பாக எழுந்தவளுக்கு, உடல் மிகவும் அசதியாக இருந்தது. அவன் உடல் சூடு அவளையும் சற்று தாக்கியிருந்தது. அவனோ பெண்ணவளின் கழுத்து வளைவுக்குள் முகம் புதைத்தபடி தூங்க, அவனது சூடான மூச்சுக்காற்று அவளை இம்சித்தது. 

 

“கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப மிஞ்சுறான்.” என்று முணுமுணுத்தவளோ அவனை தன்னிடமிருந்து பிரிக்க, அவனோ மேலும் வாகாக அவளது மார்பின் மீதே தலை புதைக்க, தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள் பெண்.

 

கூச்சம் அவளை படாதபாடு படுத்தியது. படுக்கை விரிப்பை தன் கைகளால் இறுக்கமாக பற்றிக் கொண்டவள் தன் உணர்வுகளை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினாள். மெல்ல கண்களை திறந்தவள், அவனது தலையை மெதுவாக நகர்த்தி வைத்தபடி, கட்டிலை விட்டு இறங்கியவள் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

குளித்து முடித்து தலையை துவட்டியபடி பெண்ணவள் வெளியே வர, அவனோ அவ்விடம் இல்லை. “இவன் வேற எப்போ பார்த்தாலும் ஓடி போயிடுறான்.” என்றவளோ தலையை துவட்டியபடி சமயலறைக்கு வந்தாள்.

 

“கீதாக்கா அன்னைக்கு போட்ட சுக்கு காப்பி இரண்டு வேணும்.” என்று புன்னகையுடன் கூறியவளது முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டு கீதா புன்னகைத்துக் கொண்டார்.

 

“நந்தா தம்பி வந்துட்டாராம்மா.”

 

“நேத்தே வந்துட்டாரு.” என்றவளோ அவர் கலக்கி வைத்த காபியினை எடுத்துக் கொண்டு அறை நோக்கி செல்ல, வேறொரு அறையில் குளித்து முடித்தபடி, உடை மாற்றிவிட்டு வெளியே வந்தான் நந்தா.

 

“இப்போ காய்ச்சல் பராவாயில்லையா? இந்தா நீ சொன்ன அதே கசாயம்? குடிச்சா உனக்கு பெட்டரா இருக்கும்” என்றவள் அவனிடம் கொடுக்க, அவனோ புரியாத பார்வை பார்த்தானே தவிர காஃபியை பெற்றுக்கொள்ளவில்லை.

 

“பீவரா? யாருக்கு?” என்றவனைக் கண்டு, “சுத்தம் எதுவுமே ஞாபகத்துல இல்லையா உனக்கு” என்றவள் கேட்க, அவனோ அவளை குறுகுறுவென பார்த்தான்.

 

“நேத்து தப்பா எதுவும் நடக்கலையே?”

 

“இல்லையே சார், எல்லாம் ரொம்ப சரியா நடந்துச்சு?” என்றவள் முறைக்க, அவனோ எதுவும் பேசாது அங்கிருந்து சென்றான்.

 

“அப்போ அவனுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு இல்ல போல” என்றவளோ காஃபியை பருகியபடி அவனுக்காக கொண்டு வந்த காபியை மேசையின் மீது வைத்துவிட்டு வெளியே வரவும், சைத்ரா தூங்கி எழுந்து வரவும் சரியாக இருந்தது.

 

“ஏய் மது அதுக்குள்ள எழுந்து தயாரா இருக்க? ஆமா உன் புருசன் நந்தா வந்தாரா? இல்லையா? இல்லை எஸ்கேப் ஆகிட்டாரா?” என்றவள் ஆர்வமாக கேட்க,

 

“எக்ஸ்க்யூஸ்மீ” என்று சைத்ராவின் பின்னிருந்து ஒலித்த நந்தாவின் குரலில் திரும்பி பார்த்தவளோ, சட்டென்று இவள் புறம் திரும்பி, “இவர் தான் நந்தாவா?” என்று செய்கையில் கேட்க, அடக்கப்பட்ட புன்னகையுடன் ஆம் என்று தலையசைத்தாள் மது.

 

“ஹாய் நைஸ் டூ மீட் யூ.” என்றவள் கை நீட்ட, அவனோ அவளை முறைத்து விட்டு சென்றிருந்தான்.

 

“ரொம்ப கோபக்காரர் போலயே?” என்றவள் மனமோ, ‘நல்லவேளை திட்டாம போனாரே அது வரைக்கும் சந்தோஷம்.’ என்று பெருமூச்சினை விட்டாள்.

 

“பேசிக்கலி நந்தா ரொம்ப சாஃப்ட். நீ தான் கொஞ்சம் ஓவரா பேசிட்ட.” சைத்ராவின் அருகில் வந்து கூறினாள் மது.

 

“அப்படி தான் போல.” என்றவளோ வலுக்கட்டாயமாக புன்னகைக்க, அவளது தலையை மென்மையாக கலைத்து விட்டு நந்தாவைக் காண மீண்டும் அறைக்குள் சென்று விட்டாள் மது.

 

“நந்தா, ஷி இஸ் மை பிரெண்ட். அவகிட்ட ஒரு ஹாய் சொல்லியிருக்கலாம்.” என்றவளின் பேச்சை கவனிக்காது அவனது உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான் நந்தா.

 

“இப்போ ஏன் இது எல்லாம் எடுத்துகிட்டு இருக்க?” அவள் கேள்விக்கு அவன் எந்த பதிலுமே உரைக்கவில்லை.

 

“நந்து, உன்னை தான் கேட்கிறேன்.” என்றவள் அவனது கைகளை பற்றிக்கொண்டு கேட்ட நொடி, அவளை திரும்பிப் பார்த்தவனது கண்கள் சிவந்திருந்தது.

 

“ஏய் என்னாச்சு நந்து? இன்னும் உனக்கு பீவர் இருக்கா?” என்றவள் அவனது நெற்றியைத் தொட்டுப் பார்க்க, அவளது கரத்தை பற்றி கீழ் இறக்கியவன், மீண்டும் அவனது வேலைகளைத் தொடர அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

 

“இங்க என்ன நடக்குது? சொல்லு நந்து” அவளோ விடாது அவனைக் கேட்டுக்கொண்டே இருக்க, அவனோ வேகமாக அவள்புறம் திரும்பியவன் பெண்ணவளின் தாடையை இறுக பற்றிக் கொள்ள, அவளோ அதிர்ந்து விழித்தாள்.

 

அவளது அதிர்ந்த முகத்தை பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடி, “போதும் மது. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நான் உன்னை அடையணும்னு தான வந்திருக்கேன். நீயும் பாவம் உன்னையவே என்கிட்ட கொடுக்க நினைச்ச. உனக்கு இனி எந்த கஷ்டமும் வேண்டாம். எல்லாரும் உனக்கு பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்திருப்பாங்க. நான் மட்டும் கொடுக்காமலே போயிட்டேன். அதான் இன்னைக்கு உங்கிட்ட கொடுக்கப் போறேன்.” என்று வார்த்தைக்கு வார்த்தை அழுத்தமிட்டு அவன் கூற, அவளது கருவிழியோ படபடத்தது.

 

“நந்து…” என்றவள் உதடுகள் துடித்தது. அந்நொடி அவளது தாடையை பற்றிய தன் கைகளை வெடுக்கென்று எடுத்தான்.

 

“சாரி ஐ அம் ரியலி சாரி. ரொம்ப வலிக்குதா?” என்றவன் பதட்டம் தொனிக்க அவளை நெருங்க, அவளோ பதட்டத்தில் இரண்டு அடி பின்னோக்கி வைத்தாள். அதை கண்டவன் மனமோ வலியில் துடித்தது.

தனதருகாமையை அறவே வெறுக்கிறாளே. அவளை ஏன் இன்னும் தொந்தரவு செய்ய வேண்டும் என்றே நினைத்தது.

 

“கிஃப்ட் என்னென்னு கேட்க மாட்டியா?” என்றவனின் வார்த்தைகளின் வலி அவள் செவிகளை அடைய, அவளோ அமைதி காத்தாள்.

 

“நீ கேட்காமல் இருந்தாலும் சொல்வேன். இனி உனக்கு கவலையே வேண்டாம்.” என்றவன் வலுக்கட்டாயமாக புன்னகைக்க, அவள் மனமோ படபடத்தது.

 

‘நான் நினைக்குறது மட்டும் சொல்லிடாதடா நந்து.’ அவளையும் மீறி அவள் மனம் நினைத்தது. ஆனால் அந்நொடி வார்த்தைகளாக வர மறுத்தது.

 

“எஸ் என்னோட கிஃப்ட் உனக்கு ரொம்ப பிடிக்கும். நீ நினைச்ச மாதிரி நடிக்க தானே உன் வாழ்க்கையில வந்தேன். இப்போ அதே மாதிரி நடிச்சுட்டே இங்க இருந்து போகப் போறேன். ஹேப்பியா?” என்றவன் முகத்தில் வலியையும் மீறி புன்னகை இருந்தது.

 

ஆனால் பெண்ணவளுக்கோ அவன் கூறிய வார்த்தைகள் அவளது காதுகள் ஏற்க மறுத்திருந்தது. சிலை போல நின்றவளின் முகத்தில் எந்த உணர்வுகளுமே இல்லை. அவளையும் மீறி சிரம் தாழ்த்திக் கொண்டவளது படபடத்த விழிகளிலிருந்து கண்ணீர் திரண்டு வந்து தரையை நனைத்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்