விழி வழியே சரணடைந்தேன் -26

Loading

அத்தியாயம் 26

 

கைபேசியில் தன்னவள் அழைப்பு வந்ததும் எடுத்த சித்தார்த் அவளின் “சித்து…” என்ற அலறலை கேட்டு கைபேசியை தவறவிட்டவன் கடைசி நொடியில் அதை பற்றி காதில் வைத்து “கனி..ஆர் யூ ஆல்ரைட்?” என்று பதற்றத்துடன் கேட்க “ஹாஹா..ஹாஹா..” என்று கொடூரமாக சிரித்தான் வில்சன். 

 

“வில்சன்… அவளுக்கு ஏதாவது ஆச்சு..” என்று சித்தார்த் சீற “இப்போ அவ என்ன நிலமையில் இருக்குறான்னு பார்க்கணுமா? டு யூ வான்ட் டு சீ தட்?” என்றவன் அவளின் நிலையை படம் எடுத்து சித்தார்த்துக்கு அனுப்ப கனிஷ்காவின் நிலையை கண்டு அவன் மனம் பதறியது. மிகப்பெரிய அந்த குன்றின் நுனியில் அவள் தலைகீழாக தொங்க விடபட்டிருந்தாள். 

 

“வில்சன் உனக்கு என்ன பைத்தியமா? அவளை விட்டுடு” என்று சித்தார்த் கத்த “கண்டிப்பா விட்டுடுவேன்.. ஆனா ஆழத்தை பார்த்த தானே..” என்று சிரிக்க “வெயர் இஸ் தி ஹெல் பென்?” என்று சீறினான் சித்தார்த். 

 

பென் நிலைமை அவளை விட மோசமாக இருந்தது. ஏற்கனவே அதிகம் காயப்பட்டிருந்தான் அவன். எப்படி இது சாத்தியம்? என்று சித்தார்த் மனம் வேகமாக கணக்கிட்டது. அவளை வீட்டிற்குள் தானே இருக்க சொன்னான்.. எப்படி அவள் வெளியே வந்தாள்? 

 

அதே யோசனையுடன் வில்சனை வீடியோ காலில் பார்க்க “எல்லா இடத்தையும் பூட்டி வைக்க முடியாது சித்.. ஒரு ஜன்னல் துவாரம் கூட எனக்கு போதும்.. ஆனா இவ ஜன்னலையே ஓப்பன் பண்ணி வைக்கும் போது எனக்கு ஏது கஷ்டம்?” என்று சிரித்தான் வில்சன். 

 

“என்ன பண்ணி வச்சிருக்க வில்சன்? ஷி வாஸ் ப்ரெக்னன்ட்..” சித்தார்த் இயலாமையில் கத்த “டன் இட்..” என்று வில்சன் சொல்ல “வாட்?” என்று அதிர்ந்த சித்தார்த்துக்கு மறுபேச்சு வரவில்லை. மனைவிக்கே சொல்லாத விஷயம் அது. கடந்தவாரம் தான் அவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்தான். ஆனால் அந்த சிசு உலகம் பார்க்கும் முன்னே மரித்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

 

“வில்சன்.. நான் உன்னை உயிரோட விட போவது இல்லை..” அவனின் கத்தல் மற்றவனுக்கு சிரிப்பாக தான் இருந்தது. 

 

“என்னை தோற்கடிக்கும் எவனும் நிம்மதியாக இருக்ககூடாது.. உன் சந்தோஷம் இவள் தான்னா இவ செத்து போகட்டும்” என்று அந்த கயிற்றை அறுக்க “சித்து..” என்ற கதறலுடன் அவனின் கனிஷ்கா கீழே விழுந்தாள். 

 

“கனி…” சித்துவின் கண்ணீர் கடைசிவரை அவளை போய் சேரவே இல்லை.. அவள் சந்தோசமாக இருப்பதாக அவளின் தந்தைக்கு வாக்கு கொடுத்திருந்தவன் இன்று அவளை தொலைத்து விட்டான். 

 

அடுத்த விமானத்தில் அமெரிக்கா கிளம்பியவனுக்கு அவளை தவிர மனதில் வேறு எதுவும் இல்லை. அவனின் கியூட்டி மரித்து விட்டாள் என்பதே அவனின் மொத்த சக்தியையும் வடித்தது. அவன் அமெரிக்கா போய்சேரும் நேரம் அனைத்து சேனல்களிலும் கனிஷ்காவின் மரணம் பற்றிதான் பேசி கொண்டிருந்தனர். புகழ்பெற்ற சித்தார்த்துடன் அவள் கைகோர்த்து சென்ற நொடிகளை எவராலும் மறக்க முடியாது. அவளின் மரணத்தை பற்றி பத்திரிகைக்கு அறிவித்ததும் வில்சன் தான். மலைக்கு சென்றவள் தவறி விழுந்து விட்டதாகவே செய்தி வந்தது. அதில் வில்சன் எவ்வாறு சம்மந்த பட்டிருப்பான் என்று எவரும் யோசிக்கவேயில்லை. ஆனால் அவளின் உடல் கிடைக்கவில்லை. ஆழமான குன்று என்பதால் சிதறியிருக்கலாம் என்று முடித்து விட்டனர். 

 

சித்தார்த்துக்கு அவளை தவிர யாரும் தேவை இல்லை. ஆனால் இத்தனை கொடூரமாக அவள் மரித்து போவாள் என்று அவனும் நினைக்கவில்லை. பென் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்க அவனை சென்று பார்த்தான். 

 

“சாரி சார்.. நான் அங்க போகும் போது தான் மேடமை கடத்திட்டு போனாங்க.. என்னால் எதுவும் பண்ண முடியல” என்று வருத்தப்பட முடிந்து போனதை நினைவு படுத்த சித்தார்த்துக்கு விருப்பம் இல்லை..

 

“டேக் கேர்..” என்று வெளியே வர வீடியோ காலில் அழைத்த தந்தையை பார்த்து கதறி விட்டான். 

 

“டேட் ஷி டைட் வித் அவர் சைல்டு.. எவ்ளோ ஆசையா எதிர்நோக்கின விசயம் தெரியுமா? நான் தப்பு பண்ணிட்டேன்.. அவளை விட்டு எங்கேயும் போயிருக்க கூடாது” என்று கதறியவனை அவராலும் தேற்ற முடியாமல் போனது.

 

“அவனை சும்மா விட போறியா சித்து? அவனின் சாம்ராஜ்யம் மொத்தமும் உன்கையில் இருக்கணும்.. இதுதான் நீ கனிக்கு செய்ய போகும் மதிப்பு.. அவளை கொன்றவன் உயிரோடவே இருக்க கூடாது.. உனக்கே தெரியும் எங்க தட்டினா எங்க வலிக்கும்னு.. உன் உயிரை பறிச்சவன்கிட்ட இருந்து அவனோட உயிரை பறிக்குறது உன் சாமர்த்தியம்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட வீட்டிற்கு வந்தவனை அவனின் அறை வெறுமையாக வரவேற்றது. எப்போதும் இருக்கும் அவளின் வாசனை இன்று அவனை உயிரோடு கொன்றது. 

 

“கனி.. ஐ மிஸ் யூ லாட் பேபி..” அவனின் கண்ணீர் அந்த படுக்கையை நனைக்க வில்சன் அவனின் வெற்றியை பெரிதாக கொண்டாடினான். 

 

கெவினுக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது. ஒரு கொலையை செய்துவிட்டு அதை கொண்டாடுபவன் அருகில் நிற்கவே அவனுக்கு நடுங்கியது. மதுகோப்பையை கையில் எடுத்த வில்சன் “உனக்கு வேற தனியா சொல்லனுமா கெவின்? இனி இங்கே கொஞ்ச வருஷத்துக்கு வந்துடாத.. உன் சேலரி உன்னை தேடி வரும்” என்று கூற கெவின் எதுவும் பேச முடியாமல் சென்று விட்டான். அன்று முழுவதும் கைது செய்து வைத்திருந்த கேதி என்றவளை புரட்டி போட்டவனுக்கு அவளின் வலியும் புரியவில்லை. சித்தார்த்தின் வெறியும் தெரியவில்லை. 

 

கனிஷ்காவுக்கு சிறு அடிபட்டாலே தாங்காதவன் இன்று அவளை ஒருவன் கொன்றுவிட்டான் என்று அறிந்தால் சும்மாவா விடுவான்? அவனின் வாரிசையும் சேர்த்து அழித்தவனை கொல்லும் அளவிற்கு வெறி ஏற மீண்டும் பழைய சித்துவாய் உருமாறியிருந்தான். கனிஷ்காவுக்காக இளகியிருந்த அவன் மனம் மீண்டும் கற்பாறையாய் இறுகி கொண்டது. வில்சனை துவம்சம் செய்யும் அளவிற்கு கோபம் வர அவனின் வீட்டிற்கு சென்றவனை பூட்டிய கதவே வரவேற்றது. 

 

அவனும் இதை எதிர்பார்த்தான் தான். வில்சன் எவ்வளவு வேண்டுமானாலும் தவறு செய்வான். ஆனால் அடுத்தநொடி காணாமல் போய் விடுவான். தன்மீது தவறு சொல்ல முடியாத அளவுக்கான உத்தியா இல்லை பயமா என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று. சித்தார்த் நினைவுகளில் மனைவி சுற்றி கொண்டிருந்தாலும் அவன் வேலைகள் ஒவ்வொன்றும் வில்சனை குறிபார்த்து கொண்டிருந்தன. 

 

கனிஷ்காவுக்காக தூங்கியவன் இப்போது தூக்கத்தை தொலைத்து இரவில் அவளை பிம்பமாய் தேடி கொண்டிருந்தான். உன்மேல் காதல் இல்லை என்று வார்த்தைகளால் வதைத்தவன் இப்போது முழுக்காதலோடு அவளை நினைத்து கொண்டிருந்தான். 

 

தேடும்போது கிடைக்காத பொக்கிஷம் தான் அவளின் அன்பு. அவள் கொடுக்கும் போது தவற விட்டவன் இப்போது அதற்காக ஏங்கி கொண்டிருந்தான். மாதங்களும் அவனுக்காக காத்திராமல் நகர இப்போது பென் உடன் இணைந்து மீண்டும் தன் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தான். கூடவே வில்சனுக்கான பள்ளமும் தோண்ட ஆரம்பித்திருந்தான். 

 

************

 

கீதன் தன் மனைவி கனிமொழியின் வளைகாப்பை ஊரே மெச்சும் அளவிற்கு நடத்தி கொண்டிருந்தான். பல மாதங்களுக்கு பிறகு சென்னை வீட்டிற்கு வந்திருந்தனர். அனு அவர்களை சந்தேகமாக பார்க்க அதை இருவரும் பொருட்படுத்தவில்லை. அவ்வளவு சண்டை போட்டவர்களா இவர்கள் என்று கேட்டால் யாரும் நம்ப மாட்டார்கள். அவர்களின் அன்னோன்யம் அத்தனை பேரையும் வியக்க வைத்தது. 

 

வீட்டு ஹாலில் இருக்கை போட்டிருக்க கீதன் எடுத்து கொடுத்த பச்சைபட்டில் அவன் வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து கொண்டு வந்தவளை அழைத்து சென்று இருக்கையில் அமர்த்தினான் கீதன். பெரியவர்கள் குங்குமம் வைத்து வளையல் அடுக்க அவளின் அருகில் வந்த பார்வதி “இப்போ எதுக்கு இந்த நாடகம்?” என்று கேட்க சட்டென கனியின் முகம் வாடிவிட்டது. அவளும் விரும்பி ஒன்றும் அந்த பிரிவை ஏற்கவில்லையே.

 

“இது எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை.. அவ இருக்குறது இங்க எல்லாருக்கும் தெரியணும்.. அதான் இந்த நாடகம்” என்று முகத்தை திருப்பி கொள்ள பார்வதி நகர்ந்து கொண்டார். 

 

அடுத்து வந்த அனுவும் கேள்வியாக பார்க்க அதை கீதன் மற்றும் கனி கண்டு கொள்ளவில்லை. விழா நல்லபடியாக முடியவும் அருண் விஷ்வாவுக்கு அழைத்திருந்தான். விஷ்வாவும் வளைகாப்பிற்கு வந்திருக்க “சொல்லு அருண்.. ஹைதராபாத் ரீச் ஆகிட்டியா?” என்று கேட்டான். 

 

“வந்துட்டேன்டா.. இன்னும் ஒரு மாசத்துக்கு வேலை இருக்கும் போல.. சீக்கிரம் அங்க வரணும்னு வேலைய முடிக்க வேண்டியது தான்.. கனி பிரசவத்துக்கு பெங்களூரில் இருக்கணும்” என்று கூற விஷ்வா பல்லை கடித்தான். 

 

‘இவன் வேற’ என்று நினைத்தவன் “ஒழுங்கா வேலைய முடிச்சிட்டு வா போதும்.. கனியை பார்த்துக்க நாங்க இருக்கோம்” என்று துண்டித்துவிட கீதன் அவன் அருகில் வந்தான். 

 

“என்னாச்சு விஷ்வா? எதுக்கு இவ்ளோ கோபம்?” கீதன் கேட்க “உங்களுக்கு ஏன் அப்படி தோணுச்சு கீதன்? அருண் மனசுல கனிமொழி தான் கனிஷ்கான்னு பதிஞ்சு போயிருக்கு.. இப்போ அவனை எப்படி உண்மைய புரிய வைக்கிறது?” என்று அங்கலாய்த்தான். 

 

“எல்லாத்தையும் புரிய வைக்க ஒருநேரம் வரும் விஷ்வா.. என் மனசுல அப்போ தோணுன ஒரே விஷயம் அருண் மனதளவில் பாதிக்கபட கூடாதுன்னு தான்.. நானும் காதலிச்சு கல்யாணம் பண்ணுனவன் தான்.. ஆனால் அவ மனசுல என்ன இருக்குன்னு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது.. அவ என்னை காதலிக்குறா பட் அதையும் மீறி அவகிட்ட ஒருவலி..” என்றவனை ஆச்சர்யமாக பார்த்தான் விஷ்வா. 

 

அவர்களை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே.. ஆதர்ஷ தம்பதிகளாக தான் தெரிகின்றனர். 

 

விஷ்வா அதை சொல்ல “எங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒரே ஒற்றுமை நாங்க மாறி மாறி எங்க ரெண்டு பேருக்காகவும் வாழுறோம்” என்று கீதன் சொல்ல விஷ்வாவுக்கு உண்மையாகவே சந்தோசமாக இருந்தது. 

 

இந்த காலத்தில் கணவன் மனைவி பலருக்கு தங்களின் விருப்பம், தங்களின் கொள்கை என்று இருக்கும். ஆனால் கனி- கீதன் தம்பதியர் தன் இணைக்காக தன்னை மாற்றி வாழ்வதை பார்க்கும் போது உண்மையான சந்தோஷம் தான். 

 

வளைகாப்பு முடியவும் கீதன் அவளை இரண்டு நாளில் பெங்களூர் போக வேண்டும் என்றான். அவனின் பதிலில் அனு கோபப்பட்டு முன்னே வந்தாள். 

 

“அண்ணா உங்களுக்கு இது விளையாட்டா இருக்கா? அவங்க உங்களை விட்டு பிரிஞ்சு போனாங்க.. இப்போ திடீர்னு வந்துட்டு மறுபடியும் நீங்களே அனுப்புறீங்க” 

 

“எனக்கு இங்க யாரையும் பிடிக்கல” சட்டென கனி பதில் கூற அனு முறைத்தாள். 

 

“நான் என் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கேன்..” 

 

“நீ என்னை பத்தி பேசிட்டு இருக்க..” கனி கூற அனு “அண்ணா அவங்க என்னை திட்டுறாங்க” என்றாள். 

 

“நீ என்ன பர்ஸ்ட் கிளாஸ் பாப்பாவா? உன் அண்ணன்கிட்ட கம்பளைன்ட் பண்ணிட்டு இருக்க.. உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல.. இனி என்னனாலும் உன் புருஷன்கிட்ட பேசிக்கோ.. இது எங்க குடும்ப விஷயம்” என்று கனி கூற “கனி…” என்று அதட்டினான் கீதன். 

 

“உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. இது என் விருப்பம்.. இங்க வந்தது என் குழந்தையோட உரிமையை நிலைநாட்ட தான் தவிர உங்ககூட சொந்தம் கொண்டாட இல்ல.. நான் பெங்களூர் போகதான் போறேன்” என்று தன் அறைக்கு சென்று விட முதல் முறையாக தவறிழைத்து விட்டோமோ என்று கீதனுக்கு தோன்றியது. 

 

அடுத்த இரண்டு நாளில் கனி கிளம்பிவிட கீதனும் பின்னாலேயே சென்றான். அவனுக்கு அவளை பாதுகாப்பது மட்டுமே நினைவில் இருந்தது. வழக்கம் போல் கனி கல்லூரி சென்றுவிட கீதன் தன் வேலையை பார்த்தான். அருண் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு செலவிட சிறிது நேரம் கிடைத்தது. 

 

அன்றும் அப்படி தான் கனிகீதனின் வீட்டிலிருந்து வெளியே வர அருண் தன் வீட்டுவாசலில் நின்றிருந்தான். 

 

“எங்க போயிட்டு வர கனி?” என்று அருண் கேட்க பதில் சொல்லாமல் உள்ளே சென்றவளுக்கு அடி வயிற்றில் சுளீரென வலித்தது. நேற்று தான் கீதனும் அவளும் பிரசவம் பற்றி பேசி கொண்டிருந்தனர். இப்போது வலியெடுக்கவும் சட்டென சோபாவில் அமர்ந்து விட்டாள். 

 

தான் கேள்வி கேட்டு பதில் வரவில்லை எனவும் அருணுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. வீட்டிற்குள் வந்தவன் அவளின் நிலை கண்டு “விஷ்வா..” என்று நண்பனை அழைக்க ஓடி வந்தவன் கனியின் நிலமையை ஊகித்து கொண்டான். 

 

“வெயிட் பண்ணு.. கார் எடுத்துட்டு வரேன்..” என்றவன் கீதனுக்கு சொல்ல அவசரமாக காரை கிளப்பினான் கீதன். அனைவரும் பக்கத்தில் இருந்ததால் அவளோடு செல்ல அவனால் முடிந்தது. 

 

“சார்.. சீக்கிரம் காரை எடுங்க..” என்ற குரலில் திரும்பி பார்த்தவன் மனைவியின் நிலை கண்டு கலங்கினான். யாரை இத்தனை மாதங்கள் தவிக்க விட்டானோ அவள் பிரசவவலியில் துடித்து கொண்டிருக்க அவளின் அருகில் அருண் அமர்ந்திருக்க அவனால் காரை எடுக்கவே முடியவில்லை. 

 

விஷ்வா அவனின் நிலை கண்டு அவசரமாக வண்டியை எடுக்க அந்நேரம் “வலிக்குதுங்க..” என்ற கனியின் கதறல் கீதனின் நெஞ்சிலும் இரத்தம் வழிய வைத்தது.

 

‘உன்னை என் பக்கத்துல கூட வர முடியாதபடி நானே பண்ணிட்டேனே’ என்று அவனின் மனம் துடிக்க அந்த நிலையிலும் முன்பக்க சீட்டில் இருந்த கீதனின் தோளை அழுத்தினாள் கனி. 

 

அவன் திரும்பி பார்க்க “வலிக்குது..” என்று கதறியவளை காண அவனால் முடியவில்லை. மருத்துவமனை வரவும் விஷ்வா அருணை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். முடியாது என்றவனை அவளுக்கான துணிகளை எடுத்து வர சொல்லியவன் பிரசவத்தில் கீதன் உடன் இருக்கும்படி பார்த்து கொண்டான். 

 

அவளின் ஒவ்வொரு கதறலும் கீதனுக்கு மனதில் வலித்தது. “சாரிடா.. சாரிடா..” என்று அவள் நெற்றியில் முத்தமிட அவனின் கண்ணீர் அவளை கன்னத்தை தாண்டி வழிந்தோடியது. 

 

பிரசவம் ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுபிறப்பு. எத்தனை டன் வலியை அந்த தாய் ஏற்று கொள்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அதை நேரில் இருந்து பார்த்த கீதனுக்கு அவளை இனி கண்ணில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியது. அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் உதிரத்தில் உதித்த மகளை கையில் ஏந்தினான் கீதன். அந்த ஒருநொடி அவனின் பிறவிபயனை அடைந்து விட்டது போல் உணர்ந்தான். 

 

கனி மயக்கம் அடையும் முன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் “சாரி கனிமா.. இன்னும் கொஞ்சநாள் நீ அருண் தோழியாவே இரு.. நம்ம பாப்பாவை நல்லா பார்த்துக்கணும்.. கண்டிப்பா சீக்கிரம் உன்னை தேடி நான் வருவேன்..” என்றவன் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு குழந்தையை கையில் ஏந்தியவன் “ஷாரவி செல்லம்.. அப்பா வரவரைக்கும் அம்மாவை நல்லா பார்த்துக்கணும்” என்று அந்த பிஞ்சு பாதங்களில் முத்தமிட்டு விட்டு வெளியே வந்தான். 

 

அவனை எதிர்கொண்ட விஷ்வாவிடம் “நான் இன்னைக்கு நைட் ஜெர்மன் போறேன் விஷ்வா.. வர எப்படியும் இரண்டு, மூன்று வருஷங்கள் ஆகும்.. அதுவரைக்கும் ஒரு தங்கச்சிக்கு செய்யுற மாதிரி கனியை நீங்க தான் பார்த்துக்கணும்” என்றவனை அதிர்வுடன் நோக்கினான் விஷ்வா. 

 

“கீதன் என்ன முட்டாள்தனமான முடிவு இது?” விஷ்வா கேட்க “அருணுக்காக..” என்றான். 

 

“அருண்.. அருண்.. இவனுக்காக உங்க வாழ்க்கை வீணா போயிட்டு இருக்கு தெரியுதா? கனி கூட இப்போ நீங்க தான் இருக்கணும் அருண் இல்ல.. அப்போ உங்க ஐடியாக்கு சம்மதம் சொன்னது எவ்ளோ பெரியதப்புன்னு இப்போ எனக்கு புரியுது.. அவன்கிட்ட இன்னைக்கு நான் பேசுறேன்” என்று சொல்ல அவனை தடுத்தான். 

 

“அருண் நிலைமை உங்களுக்கு புரியல விஷ்வா.. கனிஷ்கா மேல் அவர் வச்சிருக்குறது ஒன்சைட் லவ்.. அவ்ளோ சீக்கிரம் போகாது.. இப்போ நீங்க உண்மையை சொன்னா அது அவரை இன்னும் வெறியாக்கும்.. நானே உண்மைய சொல்லணும்னு நினச்சு டாக்டர் கன்சல்ட் பண்ணும் போது தான் அவங்க அவரோட மனநிலையை பத்தி சொன்னாங்க.. இப்போ நாம பண்றது அவருக்கு கனியை பிரிக்குற மாதிரி பீல் ஆகுது.. அதனால் தான் கோழி அடைக்காக்குற மாதிரி அவ பின்னாடியே வந்தார்.. கொஞ்சநாள் எந்த தொந்தரவும் இல்லன்னு ஆகும் போது அவர் மனசு பின்னாடி உண்மையை சொல்லும் போது புரிஞ்சிக்கும்” 

 

கீதன் சொல்ல “அதை கனி கிட்ட சொல்லிட்டே போகலாமே” என்று கேட்டான் விஷ்வா.

 

“அதை அவ புரிஞ்சிக்குற நிலமையில் இப்போ இல்ல.. நான் ஜெர்மன் போயிட்டு புரிய வைக்குறேன்..” என்று கிளம்ப அவனுடன் தர்க்கம் செய்ய தோன்றவில்லை விஷ்வாவிற்கு. அவனின் உடல்நிலையை பார்த்து கொள்ளும்படி சொன்னவன் அனுப்பி வைத்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்