Loading

திமிர்-11

 

 

அந்தச் சூழ்நிலை மொத்தமும் அழுத்தமான நிசப்தத்தைச் சுமந்திருந்தது. நாச்சியப்பன் வீட்டின் கூடத்திலிருந்த மெத்திருக்கையில் அமர்ந்திருந்த அரசியின் விழிகள் அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

 

“இப்படி நடு வீட்டில் உட்கார்ந்து சுத்தி, சுத்தி வேடிக்கைப் பார்க்கதேன் இங்கண வந்தியா? அப்படியென்ன உன் தம்பி அரண்மனையா கட்டி வச்சிருக்கான்?!” என அரசியின் காதுக்குள் கடுகடுத்தார் கதிர்வேல்.

 

 

 

“இப்போ என்ன செய்யணும்ங்கிறீங்க? ஏன் நீங்க ஏதும் அரண்மனை என் தம்பிக்கு கட்டிக் கொடுக்கப் போறீங்களா?” வெடுக்கெனக் கேட்டார் அரசி.

 

 

 

“சொல்ல வேண்டியதை சொல்லிப்புட்டு வா! வெரசா கிளம்புவோம்.!”

 

 

 

“இராத்திரி ஆகிப் போச்சு! ஒரு நாள் இருந்துட்டு நாளைக்கு கிளம்புவோம்!”

 

 

 

“என்னது நாளைக்கா? உனக்கு எந்தச் சோலியும் கிடையாது. எனக்கு தலைக்கு மேலே சோலி கிடக்கு. சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லு. நாம புறப்படுவோம்.!”

 

 

 

“உங்களுக்கு நிறைய சோலி இருக்கும். நீங்க கிளம்புங்க! நான் என் தம்பி வீட்டில் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்.!”

 

 

 

“ரெண்டு நாளா? என்ன நினைச்சுட்டு இருக்கிற நீ? நீ இங்கண இருந்துக்கிட்டா என்னைய யார் பார்ப்பா?”

 

 

 

“நீங்க என்ன பச்சைப் புள்ளையா? இடுப்பில் தூக்கி வச்சு சோறு ஊட்ட? வேலை இருக்குன்னா கிளம்புங்க! இல்லைன்னா இங்கண இருங்க, நாளைக்கு காலையிலேயே போவோம்!” என அரசி தீர்க்கமாய் சொல்லிவிட, மனைவியை முறைத்தபடியே,

 

 

 

“இருந்து தொலைக்கிறேன்.!” என உறுமினார் கதிர்வேல்.

 

 

 

“அத்தே! காப்பி!” என மேகவர்ணா முன்னால் வந்து நிற்க, குழம்பியைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் தம்பியான நாச்சியப்பனைத்தான் பார்த்தார் அரசி.

 

 

 

“ஏன்டா இப்படி இருக்கே? ஆளே ஒருமாதிரி ஓஞ்சு போய் இருக்கே? எனக்கு இளையவன் தானே நீ? என்னை விட அதிகமா வயசான மாதிரி இருக்கே?” எனக் கேட்டார் அரசி.

 

 

 

நிஜமாகவே நாச்சியப்பன் அப்படித்தான் இருந்தார். அரசியை விட, மூன்று, நான்கு வயது இளையவர் தான். ஆனால், அரசியை விட மூப்பாக தெரிந்தார். ஆனால் அரசியோ, இன்னுமே இளமையான தோற்றத்துடன், வீரபத்ரனுக்கு அக்கா என மதிப்பிடும் அளவில் தான் இருந்தார்.

 

 

 

 

“பஞ்சவர்ணம் போன பிறகு, எல்லாம் போச்சு அரசி. நெசமா சொல்லுறேன் அரசி! பொண்டாட்டி இல்லாத மனுஷன் பொணம்தேன். பஞ்சவர்ணம் உசிரோட இருந்தப்போ, அவளை நான் ஒருநாளும் மதிச்சதில்லை. ஆதரவா ஒத்தை வார்த்தை பேசி, அவ ஆசை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டது இல்லை. மூணு ஆம்பிள்ளைப் பிள்ளை பெத்துக் கொடுத்த பிறகும்.. பொட்டப் புள்ளை வேணும்ன்னு அவளைக் கட்டாயப் படுத்தினது நான்தேன். மூத்தவன் போஸுக்கும், இந்தா நிக்கிறாளே மயிலு, இவளுக்கும் பதினாலு வயசு வித்தியாசம். பஞ்சவர்ணத்தோட வயசையும், உடம்பையும் பத்தி யோசிக்காமல், அவளை புள்ளைப் பெத்துப் போடுற எந்திரமா பார்த்துப்புட்டேன். ஆனால் அவள், என்னை ஒட்டுமொத்தமா விட்டுட்டு போய்ட்டா! இப்போ அவகிட்டே மனசார மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனால் அவள் உசுரோடவே இல்லை.!” 

 

 

 

நெகிழ்வுடன் நாச்சியப்பன் சொன்னது, சுருக்கென கதிர்வேலின் நெஞ்சைத் தைத்தது.

 

 

 

 

‘அரசி இல்லாமல், ஒரு பொழுதாவது வாழ்ந்துவிட முடியுமா?’ என யோசித்துப் பார்த்தார். மனம் முடியவே முடியாதென திண்ணமாய் பதில் சொன்னது. தன் மனம் சொன்ன பதிலில் அதிர்ந்து போய், மனைவியைப் பார்த்தார் கதிர்வேல்.

 

 

 

 

“நல்லா பார்த்துக்கிடுங்க! நீங்களும் நான் போய்ச் சேர்ந்த பிறகுதேன் என்னைப் புரிஞ்சுக்கிடப் போறீங்க! எந்த உறவும், நம்ம கூட இருக்கிற வரைக்கும், அதோட அருமை தெரியாது!” சலிப்பாய் அரசி சொல்ல,

 

 

 

 

“கிறுக்கத்தனமா பேசித் தொலைக்காமல் அமைதியாய் இருடி!” பதற்றமாய் மனைவியை அடக்கினார் கதிர்வேல்.

 

 

 

 

“இந்தாரு தம்பி! உன் பொண்டாட்டி இல்லைதேன். ஆனால் ஒண்ணுக்கு நாலு ஃபுள்ளைங்க இருக்கு. அதுங்க வாழ்க்கையைப் பார்க்க வேணாமா? எம் மயன் அழகரு வயசுதேன் போஸ்பாண்டிக்கும், அவனுக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு கூட உனக்குத் தோணலையா? மூணு மயனுங்களில் ஒருத்தனுக்கு கூட, கல்யாணம் கட்டாமல், கட்ட பிரம்மச்சாரியாய் திரிய விட்டுருக்க? வசதி வாய்ப்பு இருந்து என்ன செய்ய? புள்ளைங்க வாழ்க்கையையும் பார்க்கணுமே?!”

 

 

 

“நீ சொல்றது அம்புட்டும் சரிதேன் அரசி.! ஆனால், உன் மருமயனுங்க மூணு பேரும், எங்கே என் பேச்சை கேட்குறானுங்க? மூத்தவன் என்ன சொல்றானோ, அதேன் இந்த வீட்டில் நடக்கும். தங்கச்சிக்கு கல்யாணம் முடியாமல் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட மாட்டோம்ன்னு சொல்றானுங்க! அதுவும் வீட்டோட மாப்பிள்ளையாய் வேணுமாம். இந்த தடிப் பசங்களைப் பார்த்துட்டு எல்லாரும் தலை தெறிச்சு ஓடுறானுங்க! தங்கச்சிக்கு மாப்பிள்ளையைத் தேடணும். அடியாளைத் தேடினால் எப்படி கிடைப்பான்.? அத்தைக்காரின்னு நீதேன் இருக்கியே.. உன் மருமயன்களை ஒட்டுக்கா உட்கார வச்சு சொல்லித்தான் பாரேன்.!” மகன்களின் மனம் அறிந்தவராய்ப் பேசினார் நாச்சியப்பன்.

 

 

 

 

“உன் தம்பி புள்ளைங்களை வளர்க்கச் சொன்னால், தடிமாடுகளை வளர்த்து வச்சிருக்கான். அப்பறம் வாரவிங்க ஓடாமல் என்ன செய்வாய்ங்க” நக்கலாய் கதிர்வேல் மனைவியின் காதுக்குள் முணுமுணுக்க,

 

 

 

 

“என் தம்பியையும் அவன் குடும்பத்தையும் எதாவது பேசுனீங்கன்னா, பிறகு நானும் உங்கக் குடும்பப் பெருமையெல்லாம் பேச வேண்டியிருக்கும்! குடும்பம்ன்னு இருந்தால், குறை நிறை இருக்கத்தேன் செய்யும். அவனாவது, பொண்டாட்டி இல்லாமல், நாலு புள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கான். நீங்களெல்லாம், அரைநொடி கூட என் மயனுங்களை வச்சு சமாளிச்சுருக்க மாட்டீங்க!” என அரசி சொல்ல,

 

 

 

“எம்மா! வந்ததிலிருந்து ரெண்டு பேரும், ஏடாகூடமா பேசிட்டே இருக்கீங்க? வந்தது கருகருவோட வளைகாப்புக்கு அழைக்க தானே? அதை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டே இருக்கீங்க?” என அழகர் இடையிட,

 

 

 

“என்கிட்டே சொல்றதை உன்னைப் பெத்தவருகிட்டே சொல்லுடா மகனே.. நான் என் தம்பி கிட்டே என்னமோ பேசிட்டு போறேன். இவருக்கு என்ன?” எனச் சொல்லி மகனான் வாயையும் அடக்கினார் அரசி.

 

 

 

“இந்தாரு தம்பி! வர்ணாவுக்கு கல்யாணம் பண்ணிட்டுதேன், நாங்க கல்யாணம் பண்ணுவோம்ன்னு சொன்னாய்ங்கன்னா, நீ வர்ணாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தானே?”

 

 

 

“ம்க்கும்! இந்தா நிக்கிறாளே.. உம் மருமவ கிட்டேயே கேளு!”

 

 

 

“என்ன வர்ணாமா? என்ன ஆச்சு டா?”

 

 

 

“அது வந்து அத்தே! அண்ணேங்களுக்கு கல்யாணம் முடிச்ச பிறகு நான் பண்ணிக்கிறேன். மூணு அண்ணேங்களும், அண்ணியோட நின்னு என் கல்யாணத்தை நடத்தி வைக்கணும்ன்னு ஆசைப்படுறேன். எல்லா விஷயத்திலும், என் பேச்சை கேட்கிற போஸ் அண்ணே, இந்த விஷயத்தில் மட்டும் கேட்கவே மாட்டேங்குது!” என அரசியிடம், மேகவர்ணா சொல்லிக் கொண்டிருக்க,

 

 

 

“அடேய்! அரசி மயனே.. நீ ஆம்பிள்ளை ஔவையார்தேன். உன் மயிலம்மா, அவ அண்ணேங்க கல்யாணம் முடிச்ச பிறகுதேன் கல்யாணம் கட்டிக்குமாம். இந்த மூணு அணகோண்டாகளுக்கும் கல்யாணம் முடிச்சு, நீ மயிலம்மாவைக் கட்டுறதுக்குள்ளே, அரை கிழவனாகிடுவே! உனக்குப் பொறந்த புள்ளைகளே, உன்னை தாத்தான்னு கூப்பிடப் போவுது பார்த்துக்கோ!” வெடித்துக் கிளம்பிய சிரிப்பை, வாய்க்குள்ளேயே கடினப்பட்டு அடக்கியபடி கேட்டான் காத்தவராயன்.

 

 

 

“கடுப்புகளைக் கிளப்பாமல், பேசாமல் போயிரு காக்காவிரட்டி! என் மயிலம்மாவை நான் கடத்திட்டு போய் கூட கல்யாணம் பண்ணுவேன்!”

 

 

 

 

“யாரு நீயி! பொண்ணைக் கடத்திட்டுப் போய் நீ கல்யாணம் பண்ணுவ? அம்புட்டு தைரியமான ஆளா நீ? முதலில் அந்தப் புள்ளையோட அண்ணேங்களை நிமிர்ந்து பார்த்து பேசு.! உனக்குள்ளே எம்புட்டு தைரியம் இருக்குன்னு பார்த்துடுவோம்.!”

 

 

 

“சிங்கம் என்ன நான் தைரியமானவன்னு வெளியே சொல்லிக்கிட்டா திரியுது? அப்படித்தான் நாங்களும்! சொல்லாமலே செய்வோம்ல்ல?”

 

 

 

 

“ஆம்பளை சிங்கமே, பொம்பளை சிங்கம் வேட்டையாடி கொண்டு வாரதைத்தேன் திங்குமாம். ஹி..ஹி..ஹி.. இது தெரியாமல், பேசுறியே பேச்சு.!” என காத்தவராயன் சிரிக்க, 

 

 

 

“இந்தாரு காக்காவிரட்டி! வயசில் பெரியவன்னு கூட பார்க்க மாட்டேன். அசிங்கமா பேசிப்புடுவேன்.!” என எரிச்சலுடன் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

“ம்கும்! நீயும் உன் குடும்பமும், மரியாதை கொடுத்தாதேன் அதிசயம்.! எல்லா சங்கதியிலும், நேர்ந்து விட்ட ஆடு மாதிரிதேன் என்னை வச்சிருக்கீங்க! உனக்கு முன்னாடி பொறாந்தவன், அந்த அழகரு கல்யாணத்தப்போவும் இதே சங்கதிதேன். உன் அய்த்த மவ அந்த கருவிழி இருக்காளே, நெய் தோசையா தின்னுட்டு பொய் பேசிட்டு அலையும். உங்க தாத்தன் ஒவ்வொரு வட்டம் பஞ்சாயத்தைக் கூட்டும் போதும், உசிரு போய் உசிரு வரும். உன் தாத்தேன் போன பிறகு, இப்போ உங்க அப்பத்தா அந்த முழியாங்கண்ணிதேன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கு.”

 

 

 

 

“அப்பத்தாதேன் இப்போ பஞ்சாயத்தெல்லாம் கூட்டுறதே இல்லையே?”

 

 

 

“பஞ்சாயத்தைக் கூட்டுறது இல்லைதேன். ஆனால் எல்லாத்துக்கும், ஒட்டுமொத்தமா சேர்த்து வச்சு செஞ்சு விட்டுருச்சே! போயும் போயும் உன் கூட என்னைக் கோர்த்து விட்டுருச்சே! இங்கே வந்து மூணு அண்ணேங்க, ஒரு மாடு, ஒரு தங்கச்சி இத்தனைக்கும் மத்தியில் சிக்கி சின்னாபின்னமாகிறேன்.!”

 

 

 

“நான்தேன்.. ஊருக்கு கிளம்புங்குறேன். நான் ஒத்தையா சாமாளிச்சுக்கிடுவேன். நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ! ஊரிலிருந்து அம்மாவும், அழகரும், வந்துருக்காய்ங்களே.. அவங்களோடயே போயிரு!” சாதாரணமாய் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

“ம்க்கும்! நீ சொன்னா மட்டும் போதுமா? உங்க ஆத்தா என் மண்டையில் இருக்கிற மொத்த முடியையும் கீரை கணக்கா ஆய்ஞ்சுப்புடும். ஆனால் அரசி மயனே.. என் சோலியை முடிக்கவே ப்ளான் பண்ணுறீங்கடா!”

 

 

 

 

“வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் காக்காவிரட்டி! நாம அப்பறம் பேசிக்கிடுவோம். இப்போ அங்கே என்ன பேசுறாய்ங்கன்னு கவனிக்க விடு!” என்றவன் மீண்டும் அரசியின் பேச்சில் கவனமானான்.

 

 

 

“இந்தாருடி! என்ன விளையாடுறியா? யாரைக் கேட்டு இதெல்லாம் முடிவு பண்ணுற?” எனக் கதிர்வேல் கத்திக் கொண்டிருக்க,

 

 

 

“யாரைக் கேட்கணும்?!” அமர்த்தலாகவே கேட்டார் அரசி.

 

 

 

“அரசி! எனக்காக நீ என்னத்துக்கு மாப்பிள்ளை கிட்டே சண்டை போட்டுட்டு கிடக்க? மாப்பிள்ளை, அரசிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க தப்பா எடுத்துக்கிடாதீங்க!” என நாச்சியப்பன் சொல்ல,

 

 

 

“சும்மா இரு தம்பி நீயி! எம் மயன்தேன் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை! வர்ணாவைக் கட்டப் போறவன் அவன்தேன்.!” என உறுதியாய் அரசி சொல்ல, இன்பமாய் அதிர்ந்து திகைத்து, தாயைப் பார்த்தான் வீரபத்ரன்.

 

 

 

“ஆத்தி! உங்க ஆத்தா வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு பேசிப்புடுச்சு! என்ன பேசுனாய்ங்கன்னு தெரியலையே? சப் டைட்டில் இல்லாத இங்லீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கே? அடேய்! பேசாமல் வா, என்ன பேசினாய்ங்கன்னு நேரிலேயே போய் கேட்டுருவோம்.!”

 

 

 

“ம்க்கும்! வேற வினையே வேணாம்! தானே அந்த மூணு காண்டா மிருகங்கள் கிட்டே வலிய போய் தலையைக் குடுத்த மாதிரிதேன். இரு, எப்படியும் என்ன பேசினாய்ங்கன்னு புரிஞ்சுரும்.!” எனச் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

“உங்க ஆத்தா பொசுக்குன்னு எப்படி இப்படி பேசிச்சுன்னு எனக்கு தெரிஞ்சாகணும். இல்லைன்னா என் தலையே வெடிச்சுரும்.!”

 

 

 

“நீ என்ன விக்ரமாதித்தனா? வேதாளம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலைன்னா உன் தலை வெடிக்கிறதுக்கு.?”

 

 

 

“எப்பா ராசா! கொஞ்ச நேரம் அனத்தாமல் இரு! என்ன பேசுறாய்ங்கன்னு கேட்போம்.!” என காத்தவராயன் சடைத்துக் கொள்ள, அமைதியாகிப் போனான் வீரபத்ரன்.

 

 

 

“இந்தாரு அரசி! உன் தம்பி மயனுங்க கல்யாணம் கட்ட மாட்டேங்கிறாய்ங்க! அதனால் உன் தம்பி மவளுக்கு கல்யாணம் பேசச் சொல்றதெல்லாம் சரித்தேன். நாமளே ஒரு நல்ல மாப்பிள்ளையாய் பர்த்து கல்யாணம் முடிச்சு வைக்கலாம். அதை விட்டுட்டு நம்ம வீராவை என்னத்துக்கு இதில் இழுக்கிறே? இதெல்லாம் சரியில்லை சொல்லிப்புட்டேன்.!” எனக் கதிர்வேல் அரசியைக் கண்டிக்கும் குரலில் பேசினார்.

 

 

 

“ஏன் அழகருக்கு உங்க தங்கச்சி மவளைத் தானே கட்டியிருக்கு. நம்ம வீராவுக்கு என் தம்பி மவளைத்தேன் கட்டணும்! அப்பத்தேன் உறவு விட்டுப் போகாமல் இருக்கும்.!”

 

 

 

“அதை நீ சொல்லக் கூடாது! என் மயன்தேன் சொல்லணும்? அவனுக்கு பிடிச்சிருக்கணுமே? அவனைக் கேட்காமல் இதெல்லாம் செய்றது தப்பு!” 

 

 

 

 

“ஓ! இதெல்லாம் இப்போதேன் தப்புன்னு விளங்குதா? உங்க மயன் விருப்பத்தை விடுங்க! என்னைக் கட்டும் போது, என் சம்மதத்தைக் கேட்டுத்தேன் கட்டுனீகளா? அழகருக்கு விழியைக் கல்யாணம் பண்ணும் போது, அவன் விருப்பம் இதுதேன்னு தெரிஞ்சும், என்னென்ன ஆட்டமெல்லாம் ஆடுனீங்க? சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி உங்க நியாமும் மாறுமோ? இப்போ வீரா விஷயத்தில் மட்டும், அவன் விருப்பத்தைக் கேட்டு பண்ணணுமா? என் தம்பியைப் பிடிக்காததால், தட்டிக் கழிக்க காரணம் தேடுறீகளாக்கும்? நம்ம பிள்ளைங்க யாரோட விருப்பத்தையும், நீங்க ஒரு பொருட்டா கூட மதிச்சதில்லைன்னு எனக்குத் தெரியும்.!” என அரசி பேச,

 

 

 

“அத்தே! இதெல்லாம் எதுவும் வேண்டாம். நீங்க அப்பப்போ வந்து போய் இருந்தாலே போதும். கல்யாணம் பண்ணிட்டு வந்துதேன் உங்க மருமகளாகணும்ன்னு அவசியம் இல்லை. நான் எப்போவுமே உங்க மருமவதேன்.!” தன் மனதிற்குள் லேசாய் துளிர் விட்டிருந்த வீரபத்ரன் மீதான நேசத்தை மனதிற்குள்ளே புதைத்தபடியே பேசினாள் மேகவர்ணா.

 

 

 

 

“அரசி! மயிலு சொல்றதுதேன் சரி! கல்யாணத்தால் மட்டுந்தேன் இந்த உறவு நிலைக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை!” என நாச்சியப்பன் சொல்ல, 

 

 

 

“அதெல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கும் தம்பி! ஆனால் நிதர்சனம் அது இல்லை. இந்த உறவு, என்னோடவும், உன்னோடவும் முடிஞ்சு போய்டாமல் காலத்துக்கும் தொடரணும்ன்னா, இந்தக் கல்யாணம் அவசியம்.!” அழுத்தம் நிறைந்தக் குரலில் தீர்க்கமாய் சொன்னார் அரசி.

 

 

 

“இப்போ நீ என்ன சொல்ல வர்ர? வீராவுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்ன்னு சொல்றியா?!”

 

 

 

“ஆமா! அவனுக்காகத்தானே நான் இங்கண வந்ததே?”

 

 

 

“என்ன சொன்ன?”

 

 

 

“என் மயன் என்னைப் புரிஞ்சுக்குவான்னு சொல்றேன்.!”

 

 

 

“இதில் எனக்கு துளியும் விருப்பமில்லை அரசி! உன் தொம்பி வீட்டோட மாப்பிள்ளைதேன் வேணும்ங்கிறான். நம்ம மயனை தண்ணீ தெளிச்சு தலை முழுகிடலாம்ன்னு சொல்லுறியா? நம்ம நெடுமாறன், பொண்டாட்டி பின்னாடி போறேன்னு மெட்ராஸ்க்கு போனான். நினைச்ச நேரம், அவனைப் பார்க்க முடியுதா?!”

 

 

 

“அம்மாப்பட்டி என்ன அமெரிக்காவிலா இருக்கு.? இங்கண இருக்கிற அம்மாபட்டிக்கு இம்புட்டு யோசிக்கிறீக? வீரா வரட்டும்! அவன் கிட்டே என்ன ஏதுன்னு விவரம் கேட்டு பிறகு பேசிக்கிடுவோம்!” எனச் சொன்ன அரசி, அந்தப் பேச்சை முடித்து வைத்தார்.

 

 

 

“பேசிக்கிட்டே இருந்துட்டு வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாரேன்.. நம்ம அழகர் பொண்டாட்டி கருவிழிக்கு வளைகாப்பு நடத்தலாம்ன்னு இருக்கோம். வார புதன் கிழமை வளைகாப்பு. குடும்பத்தோடு வந்துடணும்!” பித்தளை தாம்பூலத்தில், பூவோடு பழங்களும், பணமும், பாக்கும் வெற்றிலையும் அடுக்கப்பட்டிருக்க, அதை எடுத்து நாச்சியப்பனின் கரத்தில் கணவனோடு கொடுத்தார் அரசி.

 

 

 

“வர்ரதுக்கு முயற்சி பண்ணுறேன் அரசி. உன் மருமயனுங்க எப்படியும் விட மாட்டானுங்க! பார்ப்போம்!” எனச் சொன்னார் நாச்சியப்பன்.

 

 

 

“இம்புட்டு வருஷஞ்செண்டு, என் வீட்டு விஷேஷத்திற்கு நான் அழைச்சிருக்கேன். உன் மயனுங்க வரலைன்னா கிடக்குறானுங்க! நீயும் வர்ணாவும் கண்டிப்பா வரணும்!” எனப் புன்னகையுடன் அரசி சொல்ல, தலையாட்டிச் சிரித்தார் நாச்சியப்பன்.

 

 

 

“ஆத்தா மயிலு! அத்தையும், மாமனும் ஓய்வெடுக்கட்டும், அறையை தயார் செஞ்சு கொடு ராசாத்தி. வெளியில் கொஞ்சம் சோலி கெடக்கு முடிச்சுப்புட்டு வாரேன்.!” என விடைபெற்றுக் கிளம்பியிருந்தார் நாச்சியப்பன்.

 

 

 

****

 

 

இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்கியிருக்க, தன் அருகே உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தார் அரசி. அம்மாப்பட்டிக்கு வந்ததிலிருந்து, தன் மகனைப் பார்க்கவே இல்லை என்பது அரசியின் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.

 

 

 

 கணவனை வைத்துக் கொண்டு வீரபத்ரனிடம், எதுவும் வெளிப்படையாய் பேச முடியாது. அதிலும் அவன் இங்கிருக்கிறான் எனத் தெரிந்தால், ஆடித் தீர்த்துவிடுவார், என்ற காரணத்தினால், யாரும் அறியாமல், இரவில் சென்று பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டுத்தான் படுத்தார். கணவன் உறங்கும் நேரமும், அவர் உறக்கத்தின் ஆழமும் அரசிக்கு நன்றாகவே தெரியும். கணவன் உறங்குகிறாரா? என அவரின் முகத்தைப் பார்த்து உறுதி செய்துக் கொண்டு, மெதுவாய் கட்டிலிலிருந்து இறங்கி, சத்தமில்லாமல் கதவைத் திறந்து, கதவை வெளிப்புறமாய் தாழ் போட்டுவிட்டு, வீரபத்ரன் தங்கியிருந்த அறையை நோக்கி நடந்தார்.

 

 

 

அந்த நள்ளிரவின் நிசப்தத்தில் யார் செவிகளிலும் கேட்டுவிடக் கூடாதென பொறுமையாகவே கதைவைத் தட்டினார்.

 

 

 

“அடேய்! அரசி மயனே! யாரோ கதவைத் தட்டுறாய்ங்க டா!”

 

 

 

“அதெல்லாம் உன்னோட கற்பனையாய் இருக்கும் காக்காவிரட்டி, பேசாமல் தூங்கு!”

 

 

 

“இந்தாரு மறுபடியும் கதவைத் தட்டுறாய்ங்க பாரு!”

 

 

 

“எனக்கெல்லாம் கேட்கவே இல்லை!”

 

 

 

“ஆத்தி! அப்போ எனக்கு மட்டுந்தேன் கேட்குதா? மோகினிப் பிசாசா? பேயான்னு தெரியலையே? ஆத்தி! பயந்து வருதே!” பயந்துக் கொண்டே காத்தவராயன் போர்வைக்குள் ஒளிய,

 

 

 

“அடேய்! பக்கிப் பயலுங்களா! கதவைத் திறங்க டா!” என்ற அரசியின் குரல் வெளியிலிருந்து கேட்டது.

 

 

 

“அடேய்! பேய் உங்க ஆத்தா குரலில் பேசுது டா!” காத்தவராயன் பயத்துடன் முணுமுணுக்க, வீரபத்ரன் வேகமாய் எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறந்தான்.

 

 

 

“அடேய்! என்னத்துக்குடா கதவைத் திறந்த? பேய் உங்க அம்மா குரலில் பேசி உன்னைக் கூப்பிடும் டா! ஏமாந்துடாதே!” என காத்தவராயன் புலம்பிக் கொண்டிருக்கும் போதே, திறந்தக் கதவின் வழியாய் உள்ளே வந்தார் அரசி.

 

 

 

“அடேய்! வீரபத்ரா, பேய் உங்க அம்மா உருவத்திலேயே வந்துருச்சுடா!” என சத்தமாய் கத்த,

 

 

 

“கத்தித் தொலையாதே டா காக்காவிரட்டி! எட்டு ஊருக்கும் மைக் போட்டு சொல்லிப்புடு! நான் இங்கணதேன் இருக்கேன்னு..!” எனக் கிசுகிசுப்பாய் சொன்னார் அரசி.

 

 

 

“ஆத்தி! நீங்களா? நான் நடு ராத்திரியில் கதவைத் தட்டவும், பேயோன்னு நினைச்சுட்டேன்.!” என காத்தவராயன் சொல்ல,

 

 

 

“அதையெல்லாம் விடுங்க டா! எப்படி இருக்கீங்க? நேரத்துக்கு சாப்பிடுறீகளா? ஏன்டா வீரா, உன்னைப் பெத்தவ வந்திருக்கேன். ஒரெட்டு வந்து பார்க்கணும்ன்னு உனக்கு தோணவே இல்லையா?” அவசரமாய் கேட்டார் அவர்.

 

 

 

“எம்மா! எப்படிம்மா? நான்தேன் அரசி மயன்னு மயிலம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது. எப்படி பார்க்க வரச் சொல்றீங்க? எந்நேரமும் மீசையை முறுக்கிட்டு அவ அண்ணேய்ங்க வேற அலப்பறை பண்ணுறானுங்க! முடியலைம்மா!”

 

 

 

“இல்லைன்னா மட்டும், அப்படியே பாசத்தில் ஓடி வந்திருப்பியாக்கும்? போடா! நம்ம கையில் இருக்கிற அஞ்சு விரலும், ஒரே மாதிரியா இருக்கு? அதே மாதிரிதேன்.. ஒவ்வொருத்தர் குணமும் ஒவ்வொரு மாதிரிதேன் இருக்கும்.!”

 

 

 

“உன் தம்பி மயனுங்களை நீ விட்டுக் கொடுப்பியாக்கும்?”

 

 

 

 

“அரசிமா! உங்க பஞ்சாயத்தையெல்லாம் பிறகு வச்சிக்கிடுங்க! உங்க மயன் சாப்பாடு ஆக்கிப் போடுறேங்கிற பேரில், என்னை கொலையா கொல்லுறான். வாயில் வைக்க முடியலை! பெரிய மனசு பண்ணி, என் பொண்டாட்டியை இந்தப் பக்கமா அனுப்பி விடுங்க!” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் காத்தவராயன்.

 

 

 

 

“ஏன்டா அம்மா சமையல் செய்யும் போதெல்லாம் பார்த்திருக்கே தானே? நல்லா சமைச்சு சாப்பிட வேண்டியது தானே?”

 

 

 

“போம்மா! மூணு நேரமும் சமைக்கணும். அதெல்லாம் கஷ்டம். ஆனால் நீயெல்லாம் தெய்வம்மா! மூணு நேரமும் வகை வகையா ஆக்கிப் போடுற!”

 

 

 

“இப்போதேன் தெரியுதாக்கும் நான் தெய்வம்ன்னு.. கருவிழிக்கு புள்ளை பொறக்கட்டும், அதுவரை பொறுத்துக்கிடுங்க! காத்தவராயா! மூஞ்சியை இப்படி வச்சிக்காதே! நம்ம கருவிழி வளைகாப்பு முடியட்டும். உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கிறேன். நான் ஊருக்கு போய்ட்டு அத்தைக் கிட்டே பேசறேன்.!” என அரசி சொல்ல, சின்ன நாணம் கலந்த சிரிப்புடன் தலையசைத்தான் காத்தவராயன்.

 

 

 

“ஏம்மா! இந்தை மைடப்பி எப்போ மயிலுக்கிட்டே பேசினாள்? அவள் கூப்பிடுற மாதிரியே டென் ருப்பீஸீன்னு சொல்லி வச்சிருக்கா! யாரைக் கேட்டு இதெல்லாம் செய்றா?”

 

 

 

 

“நீ ஃபோட்டோ அனுப்பின மறுநாளே, அந்தப் புள்ளையை ஃபேஸ்புக்கில் பிடிச்சு பேசிட்டா எம் மருமவ! கொஞ்ச நாளிலேயே ரொம்ப நெருக்கமா மாறிப் போய்ட்டாக! அவங்க ஃப்ரெண்டா இருந்தால் உனக்கு ஏன்டா வலிக்குது? எம் மருமகளுங்க பேசி வாங்கி இருந்துட்டு போவட்டும்!”

 

 

 

 

“ஐயோ! இந்த அஞ்சு பைசா மைடப்பி என்னத்தை எல்லாம் உளறி வச்சிருக்காளோ?” என வீரபத்ரன் முணுமுணுப்பாய் புலம்பினான்.

 

 

 

 

“ஏன்டா வீரா! உனக்கு வர்ணாவைப் பிடிச்சிருக்கு தானே? இல்லை இன்னும் அந்தப் பொண்ணையே நினைச்சுட்டே இருக்கியா?”

 

 

 

“அந்தப் பொண்ணு என்னைப் புரிஞ்சுக்கலையேன்னு வருத்தம் மட்டுந்தேன் இருக்குமா! மத்தபடி ஒண்ணும் இல்லை.!”

 

 

 

“என்னோட முதல் கேள்விக்கு பதில் வரலையே? ஒருவேளை பிடிக்கலைன்னா சொல்லிடு. நான் அதையும் அவங்கக் கிட்டே சொல்லிடுறேன்.!”

 

 

 

“தெரியலையே மா!”

 

 

 

“என்னடா பதில் இது? ஆமான்னு சொல்லு, இல்லைன்னா பிடிக்கலைன்னு சொல்லு! அதை விட்டுட்டு தெரியாலைன்னா என்ன அர்த்தம்?”

 

 

 

“ம்ப்ச்! ம்மா! அதெல்லாம் பிடிச்சிருக்கு! ஆனால் சரியா வருமான்னு பயமாவும் இருக்கு. ஒருவேளை இவளுக்கும் என்னைப் பிடிக்கலைன்னா?!” குரல் தடுமாற வீரபத்ரன் சொல்ல, அவன் மனநிலையை அரசியால் நன்றாகவே புரிந்துக் கொள்ள முடிந்தது. மேடை வரை வந்து நின்று போன, அந்தத் திருமணத்தின் தாக்கத்திலிருந்து அவன் வெளியே வரவில்லை என்பது, அரசிக்கு நன்றாகவே புரிந்தது.

 

 

 

“அடேய்! இன்னும் நடந்ததையே நினைச்சுட்டு இருப்பியா? ஏதோ ஒரு விஷயம் நாம நினைச்ச மாதிரி நடக்கலைன்னா, அதைவிட நல்ல விஷயம் ஏதோ நடக்கப் போகுதுன்னு அர்த்தம். நீ கிறுக்குப் பையன் மாதிரி, எதையாவது நினைச்சுக்கிட்டு, மனசைக் குழப்பிக்கிட்டு கிடக்காதே! எல்லாமே நல்லதே நடக்கும். அப்பறம் சூதானமா இருங்கடா! யார் கிட்டேயாவது ஒரண்டை இழுத்து வாங்கிக் கட்டிக்காதீங்க! அப்பறம் வர்ணா கிட்டேயும் சொல்லியிருக்கேன்.!”

 

 

 

 

“அந்தப் புள்ளைக்கிட்டே என்னத்தைம்மா சொல்லி வச்ச? சும்மாவே அவ என்னை பேரில் மட்டுந்தேன் வீரத்தை வச்சிருக்கேன்னு சொல்லுறா! நீ அவகிட்டே போய் என்னத்தை சொல்லி வச்சே?”

 

 

 

“நீதேன் காளை மாட்டைப் பார்த்து பயப்டுறேன்னு கருவிழி சொன்னாள். அதேன் எம் மயன் விவரம் தெரியாத புள்ளை! மாட்டை வச்செல்லாம் என் புள்ளையை பயமுறுத்தாதேன்னு கண்டிஷனா சொல்லிப்புட்டேன்.!” என அரசி சொல்ல, திருதிருவென விழித்தபடி நின்றான் வீரபத்ரன்.

 

 

 

“சரித்தேன்! உங்க மயன், நேத்துதேன் பொறந்திருக்கான். பச்சைப் புள்ளைதேன் பாவம், வாயில் விரல் வச்சாக் கூட கடிக்கத் தெரியாது!” என நக்கலாய் காத்தவராயன் கேட்க,

 

 

 

“எம் மயன் எனக்கு சின்னப்புள்ளைதேன். அதுவும் குறை மாசத்தில் பொறந்தவன். இவன் எனக்கு இப்போவும் பச்சைப் புள்ளைதேன்.!” என அரசி பெருமையாய் சொன்னார் அரசி.

 

 

 

“சும்மாவே, இந்த மாட்டுக்கார மயிலம்மா, எகத்தாளமாதேன் பேசுவா! இதெல்லாம் தெரிஞ்சு என்னத்தைச் சொல்லப் போறாளோ? என்னை வச்சு செய்றதுக்கு வேற யாரும் வர வேணாம்! என்னைப் பெத்த என்  அம்மாவும், என் அண்ணே பொண்டாட்டி, அந்த மைடப்பி கருவிழியும் மட்டும் போதும்! இந்த மயிலம்மாவை கட்டுறதுக்குள்ளே என்னென்ன பஞ்சாயத்தெல்லாம் பார்க்கணுமோ?” என வீரபத்ரன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

 

 

 

ஆனால், மேகவர்ணாவின் அண்ணன்களை விட, இரு குடும்பங்களின் இடையே இருக்கும் பிரச்சனையை விட, மிகப் பெரிய பிரச்சனையொன்று அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறதென்று, அவன் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை.

 

 

தித்திக்கும் 🔥

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்