Loading

தேசம் 19

 

தன் வாழ்க்கையில் தீ சூழ்ந்து விட்டதை அறியாது அலுவலக தீயை அணைத்து விட்டு சோர்வாக வீடு வந்தவனை வரவேற்றார்கள் மாமனாரும் மாமியாரும். உடல் வலுவிழந்து நின்றவன் கன்னத்தில் ஒன்று வைத்த சாமிநாதன்,

 

“அடபாவி! உன்ன போய் நல்லவன்னு நம்பி என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டனே.” என்றிட, வள்ளி பாவம் பார்க்காமல் அவன் மார்பில் அடித்து தகாத வார்த்தையில் திட்டினார்.

 

எப்போது மனைவியின் பெற்றோர்களை இங்கு பார்த்தானோ அப்போதே தெரிந்து கொண்டான் சாயம் வெளுத்து விட்டதை. ஒரே இடத்தில் கல்லாக மாறியவன் பார்வை தன்னை அடித்துக் கொண்டிருக்கும் இருவரையும் தாண்டி பின்னால் சென்றது. அவனை நேருக்கு நேராக குத்தி துளையிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா.

 

அப்பார்வை சொல்லியது அனைத்தையும். விழியால் அவளிடம் பேச முயன்றவன் எண்ணம் தவிடு பொடியானது அருகே கண்ணைக் காட்டியதும். அங்கு அவனால் உருவாக்கப்பட்ட அந்த கருப்பு உருவ ஆடை சிரித்துக் கொண்டிருந்தது. பெற்றோர்களைப் பார்த்த பின்பும் சிறு நம்பிக்கை கொண்டிருந்தவன் அந்த ஆடையை பார்த்து முற்றிலும் ஒடுங்கி விட்டான்.

 

 

இனி என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது என்பதை நூறு சதவீதம் உணர்ந்தவன் தலை குனிய, “ஏன்டா இப்படி பண்ண? நானும் என் பொண்ணும் உனக்கு என்ன பாவம் செஞ்சோம். எதுக்கு எங்க குடும்பத்துக்குள்ள நுழைஞ்சு இவ்ளோ வேலை பார்த்திருக்க. வாய திறந்து சொல்லுடா” விடாது தாக்கினார் சாமிநாதன். 

 

“இவன் கிட்ட என்னங்க கேட்டுட்டு இருக்கீங்க. கமிஷனருக்கு போன் பண்ணி கம்பிளைன்ட் கொடுங்க. அவர் உதைக்கிற உதையில எல்லாத்தையும் கக்கிடுவான்.” 

 

“அவர் வரைக்கும் எதுக்கு போகணும் வள்ளி. நான் அடிக்கிற அடியில இப்பவே இவன் எல்லாத்தையும் சொல்லுவான் பாரு.” 

 

சொன்னது போல் தன் மகளின் வாழ்க்கையை வீணாக்கியவனை அடித்து நொறுக்கினார். வாயில் ரத்தம் வர துவங்கியது. அனைத்தையும் வாங்கியவன் தலை குனிந்தே நிற்க, போதும் என்ற வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவள் வாய் திறந்தாள்,

 

“அடிக்கிறதை நிறுத்துங்க” என்று.

 

மனைவியின் குரலில் தலை நிமிர்ந்தவன் கண்ணீரோடு மன்னிப்பு வேண்டினான். அதைக் கண்டும் காணாமலும், “அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? அவர் செஞ்சது அயோக்கியத்தனம்னா நீங்க செஞ்சது துரோகம். உங்களுக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. இது என் வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன் நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க.” என்றதும் மூவருக்கும் அதிர்ச்சி. 

 

“என்னடி பேசுற? இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இவனுக்கு சப்போர்ட் பண்ற. நாங்க என்ன துரோகம் செஞ்சிட்டோம்” கேள்வி எழுப்பும் அன்னையை பார்த்து சிரித்தவள்,

 

“இருபத்தி ஆறு வருஷம் பெத்து வளர்த்த பொண்ணு சொன்ன வார்த்தையை நம்பாம எவனோ ஒருத்தன் சொன்ன வார்த்தையை நம்புனீங்க அது துரோகம் இல்லையா. எத்தனை தடவை கெஞ்சி இருப்பேன் எந்த தப்பும் செய்யலன்னு. மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு இவன் மேல வச்ச நம்பிக்கையை என் மேல வைக்கலையே. 

 

சொத்தை எல்லாம் ஏன் எழுதி வச்சீங்க உங்க பொண்ணு எவன் கூடவோ ஓடிப் போனதால தான. சொத்தை கொடுத்து உங்க பொண்ண விலை பேசி இருக்கீங்க. நேத்து வந்தவன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள்ள வராதன்னு சொன்னீங்க. இதுக்கெல்லாம் என்ன பேரும்மா?” விரக்கியாக கேட்டாள். 

 

“அதுக்கெல்லாம் காரணமே இவன் தான். உன்னை அந்த அளவுக்கு கெட்டவளா காட்டி எங்க கிட்ட இருந்து பிரிச்சிருக்கான்.”

 

“அப்போ யார் வந்து என்ன சொன்னாலும் நம்பிடுவீங்க அப்படி தானப்பா. அன்னைக்கு என்ன சொன்னீங்க சாப்பாட்டுல விஷம் வச்சு கொல்ல கூட துணிய மாட்டா. உன்னை கட்டிக்கிட்டு என் மாப்பிள்ளை எவ்ளோ கஷ்டப்பட போறாருன்னு தெரியல. இன்னும் எவ்ளோ வார்த்தைங்க சொல்லி இருக்கீங்கன்னு நியாபகம் இருக்காப்பா. உங்க பொண்ண புரிஞ்சு வச்சிருக்க லட்சணம் அவ்ளோ தான்ல.” 

 

“எல்லாத்தையும் பண்ண இவன விட்டுட்டு எங்களை தப்பு சொல்ற.”

 

“நான் உங்களையோ இல்ல அவரையோ தப்பு சொல்லல. தப்பு பண்ணதெல்லாம் நான் மட்டும் தான். என்னோட முட்டாள் தனம் தான் இங்க வந்து நிக்கிறதுக்கான முதல் காரணம். இதுக்கான தண்டனைய நான் மட்டும்தான் அனுபவிக்கனுமே தவிர நீங்களோ இல்ல அவரோ இல்ல. அதனாலதான் சொல்றேன் இது என் வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன். நீங்க எப்பவும் போல உங்க பொண்ணு சந்தோஷமா வாழுறான்னு நம்பி நிம்மதியா இருங்க.” 

 

“என்னமா பேசுற… இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்புறம் இவன் கூட உன்னை எப்படி விட்டுட்டு போவோம்.”

 

“எனக்கு எதுவும் ஆகாது. உங்க பொண்ணு கண்ண முழிச்சு ரொம்ப நேரம் ஆகுது. எல்லா தப்பையும் செஞ்சது நானா இருந்தாலும் பெத்த பொண்ண நம்பாம போனதுக்கு உங்களுக்கு நான் கொடுக்குற தண்டனை இது. இனிமே என்னை பார்க்க இங்க வராதீங்க.” 

 

“நீ பேசுறது உனக்கே நல்லா இருக்கா? இவன இன்னுமா நம்புற”

 

“பெத்தவங்க பிள்ளைங்களை நம்பனும்னு சொல்றேன். தப்பே பண்ணினாலும் வீட்டுக்குள்ள அடிச்சுட்டு நாலு பேருக்கு முன்னாடி விட்டுக் கொடுக்காம இருக்கணும்னு சொல்றேன். நீங்க மட்டும் மாப்பிள்ளை பேச்சுக்கு தலையாட்டமா இருந்திருந்தா இந்த அளவுக்கு செய்ய தைரியம் வந்திருக்காதுப்பா. இதுக்கு மேல உங்க கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை. சொன்னது சொன்னதுதான் நானே தேடி வர வரைக்கும் என்னை தேடி வராதீங்க, கிளம்புங்க.”

 

எவ்வளவு சண்டையிட்டும் இடம் கொடுக்காதவள் தன் பெற்றோர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பேச வர, “கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்” என்று விட்டாள்.

 

 

தொந்தரவு செய்ய விரும்பாதவன் தனிமையை கொடுத்து விட்டு நகர, அழுது சோராமல் அவனது குடும்ப புகைப்படங்களை வீடு முழுவதும் மாட்டினாள். ஒரு மணி நேரத்தை கடக்கவே பெரும் பாடுபட்டான் சரவணப் பொய்கை. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மனைவியை தேடி வர, வீட்டைக் கண்டு குழம்பினான். 

 

பேச நா எழாமல் வெகு நேரம் சங்கடப்பட்டவன், “தனா…” என மெல்லிய குரலில் அழைக்க, 

 

“வந்துட்டீங்களா, உங்களுக்காக தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” புன்னகைத்தாள்.

 

 

புரியாத மனநிலையில் அவன் நிற்க, ” அந்த டிரஸ மட்டும் கொஞ்சம் ஆணில மாட்டி விடுறீங்களா.” என அந்த கருப்பு உருவத்தின் ஆடையை கையில் கொடுக்க, வாங்க கைகள் நடுங்கியது.

 

“எதுக்கு இப்படி உங்க கை நடுங்குது?” எதுவும் நடக்காது போல் கேட்க, “சாரி, நான் பண்ண…” ஆரம்பித்தான். 

 

“மச மசன்னு நிக்காம ஆணில மாட்டி விடுங்க. எப்போ உங்களுக்கு என்ன நடக்கும்னு பயந்துட்டே இருந்தேன். இப்பதான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இதை தினமும் பார்த்துட்டு இருந்தா தான் அந்த நிம்மதி நிலைச்சு இருக்கும்.” 

 

 

“தனா”

 

“சீக்கிரம் மாட்டிட்டு வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு.” என அதை கையில் கொடுத்து விட்டு அவனுக்காக வாங்கி வந்த கேக்கை மேஜையில் வைத்தாள். 

 

 

எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில் அவள் சொன்னதை செய்ய சென்றான். பலமுறை அணிந்த ஆடையைத் தொட இன்று கைகள் நடுங்கியது. எந்நிலையிலும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக பல மெனக்கிடல் செய்து தயாரித்த ஆடை இது. அப்படிப்பட்ட ஆடையின் கணத்தை தாங்க முடியாமல் தடுமாறியவன் மாட்டிவிட்டு திரும்ப,

 

“வந்து கேக் கட் பண்ணுங்க.” என்றாள். 

 

 

இடத்தை விட்டு நகராமல் சரவணன் நிற்க, அவன் கைப்பிடித்து அழைத்து வந்தவள், “இந்த நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். உங்களுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்பெஷல் ஆகிடும். வந்து வெட்டுங்க…வாங்க.” அதன் முன்பு நிற்க வைத்து கத்தியை கையில் கொடுத்தாள். 

 

 

அவன் கைகள் நடுக்கம் கொள்ள, “ஒரிஜினல் கத்திய பிடிக்கும்போது கூட உங்க கை இப்படி நடுங்கலையே இப்ப ஏன் இப்படி நடுங்குது” பேசிக்கொண்டே அவன் நெற்றி, கழுத்து, கன்னத்தில் கை வைத்து,

 

“உடம்பு எதுவும் சரியில்லையா” எனக் கேட்டாள். 

 

 

தன்னவள் குத்திய வார்த்தையில் துவண்டவன் எதுவும் பேசாமல் இனிப்பு கட்டிகையை வெட்ட, கை தட்டி ஆரவாரம் செய்தாள். 

 

“ஊட்டி விடுங்க” என்றவளிடம் கை செல்ல மறுக்க, அவளே பிடித்து ஊட்டிக் கொண்டாள். சிறு துண்டை எடுத்து அவன் வாயில் திணித்தவள்,

 

“அப்பா ஆக போறீங்க.” என்றிட, இனிப்பு கசப்பானது. 

 

 

பலமுறை அவளை மிரட்டிய அந்த குரோத கண்ணில் ரத்தத்திற்கு பதிலாக கண்ணீர் சுரக்க, “உங்களை விட்டு பிரிந்த ரெண்டு உயிர்ல ஒரு உயிர் என்னால திரும்ப கிடைக்கப் போகுதுன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.” என அவன் கையை வயிற்றில் வைத்து,

 

“வர போறது உங்க அம்மா அன்னலஷ்மியா இல்ல தம்பி நித்ய வேலனான்னு தெரியல. யார இருந்தாலும் இன்னும் பத்து மாசம் தான் சரவணா காத்திருங்க.” தோளில் சாய்ந்து கொண்டாள். 

 

வாயில் திணித்த இனிப்பு கசப்பானது போல் இவன் வாழ்வும் இனி மாறுமோ? 

கசப்பான உண்மையில் தனக்கான இனிப்பை தேடிவானோ? இனிப்பானவள் கசப்பானால் கசப்பானவன் இனிப்பாவானோ? 

எதுவென்று அறியாதவன் ஒன்றை மட்டும் இனி அறிவான் இனிப்பான காதல் கசந்து விட்டதென.  

 

தேசம் 20

 

வீட்டில் நிலவிய அமைதி அதிர்வை ஏற்படுத்தியது. நடந்தவை எல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என்ற எண்ணம் தான் அங்கிருந்தவனுக்கு. எந்த இடத்தில் தவறு செய்தோம் என்ற சிந்தனையில் தன்னை ஆழ்த்திக் கொண்டவன் செய்தது தவறு என்றும் உணரத்தான் செய்தான். இருந்தும் அவளுக்காக தான் அனைத்தையும் செய்தேன் என்று மீண்டும் தவறிழைத்தவன் எப்படி இந்த சிக்கலை தீர்ப்பது என்று யோசித்தான். 

 

அவள் ஊட்டிய இனிப்பு கட்டி இன்னும் வாயில் அப்படியேதான் இருக்கிறது. கரைய வேண்டிய இனிப்பு கல்லாகி விட்டது போல் இவன் நிலைமையும் ஆகிவிட்டது. நான்கு அடி அடித்து இருந்தால் கூட இந்த அளவிற்கு பயந்து இருக்க மாட்டான். எதுவும் பேசாமல் இனிப்பை ஊட்டிய மனைவியின் செயல் பெரும் பயத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

 

தன்னவளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என கணிக்க முடியாமல் திண்டாடியவன் அவளைத் தேடிச் சென்றான். உபயோகிக்கும் அறை வரை வந்தவன் உள்ளே நுழைய துணிவின்றி தடுமாறி நின்றான். ஆனால், மெத்தையில் படுத்திருந்தவள் இவனைக் கண்டதும் எழுந்தமர, தலை தானாக தரையை நோக்கிக் கொண்டது.

 

“என்ன சரவணா அங்கயே நிக்கிறீங்க உள்ள வாங்க.” என்றவள் குரலுக்கு தலை நிமிராதவன் அந்நிலையிலேயே உள்ளே நுழைந்தான். 

 

“என்னாச்சு? நான் கொடுத்த அதிர்ச்சியில பேச்சு வரலையா.” 

 

….

 

“உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீங்க என்னென்னமோ சொல்லுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இப்படி என்னை ஏமாத்திட்டீங்களே.” 

 

எதுவும் நடக்காதது போல் பேசும் மனைவியின் பேச்சில் உள்ளம் தடுமாறியவன் அங்கிருந்து சென்று விட்டான். ஒரு துளி சலனம் கொள்ளாத பிரார்த்தனா மீண்டும் மெத்தையில் படுத்துக்கொண்டாள். வெளியில் வந்தவன் சுவற்றில் சாய்ந்து கொண்டு இருநொடி கண் மூடி தன்னை அமைதி படுத்தினான். 

 

‘இதுக்கு மேல உன்னால ஒன்னும் பண்ண முடியாது. தனா எதையோ முடிவு பண்ணிட்டு தான் இவ்ளோ சாதாரணமா இருக்கா. முதல்ல அது என்னன்னு தெரிஞ்சுக்க. அதுதான் உனக்கு இப்ப தேவை. என்னன்னு தெரிஞ்சா தான் எதையாது பண்ண முடியும். போடா… போய் தைரியமா பேசு.’ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு தன்னை தைரியப்படுத்திக் கொண்டான். 

 

கண் திறந்து மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே எழுந்தமர்ந்தாள். பிரார்த்தனா காலடியில் அமர்ந்தவன் பாதத்தை பிடித்துக் கொண்டு,

 

“மன்னிப்பு கேட்க வரல. அதைக் கேட்கிற தகுதி எனக்கு இல்லைன்னு நல்லா தெரியும். ஒன்னு மட்டும் தான் சொல்லணும்னு ஆசைப்படுறேன். என்னை பத்தின உண்மை எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உன் மேல நான் வெச்சிருக்க காதலும் உண்மை. என்னைக்கு எனக்கு நடந்த துரோகத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிந்ததோ அதுக்கு அப்புறம் நான் பண்ண எல்லாத்துக்கும் காரணம் நீ என்னை விட்டு விலகிட கூடாதுன்னு மட்டும் தான்.” என்றவன் அவள் முகத்தை நேராக பார்த்து,

 

“என் மேல ரொம்ப கோபமா இருக்கன்னு தெரியும். உன் கோபம் போக எவ்ளோ தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். எந்த சூழ்நிலைக்காகவும் என்னை விட்டுட்டு போய்டாத.” ஒரே மூச்சாக பேசி முடித்தான். 

 

பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தவன் அதில் தெரிந்த புன்னகையை கண்டு தலை கவிழ்ந்து கொள்ள, தலைக்கோதி விட்டவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு நடு உச்சியில் முத்தமிட்டாள். இச்செயலை செய்த பின் முற்றிலும் உடைந்தவன் அவள் மடியில் படுத்துக்கொள்ள, புன்னகையோடு தலைக்கோதி விடும் வேலையை தொடங்கினாள்.

 

“எந்த ஆம்பளைக்கும் தான் அப்பா ஆக போற அந்த நொடி வாழ்க்கைல மறக்க முடியாத பொக்கிஷமா இருக்கும். ஆனா எனக்கு…” சிறு நொடி இடைவெளி விட்டு,

 

“உன் சிரிப்பு தான் எனக்கு நீ கொடுத்த தண்டனை.” என்றான்.

 

 

“எந்திரிங்க” என்றது மறுத்து தலையசைத்து,

 

“நீ ஏதாச்சும் சொல்லிடுவ. என்னால் அதைக் கேட்க முடியாது.” என்றதும் முடியை கொத்தாக பிடித்து தூக்கினாள். 

 

“உங்க மேல எனக்கு என்ன கோபம் தெரியுமா? பழி வாங்க பாசமா இருக்கிற மாதிரி நடிச்சது தான்.” 

 

உடனே பதறி எழுந்தவன் அவள் வாயை மூடி, “இந்த வார்த்தையை மட்டும் சொல்லாத தனா. நான் பழி வாங்க வந்தது உண்மைதான். ஆனா, உன் காதல் அது எல்லாத்தையும் மாத்திடுச்சு. ஒவ்வொரு தடவையும் உன் காதலுக்கும் என் பழிவாங்குற எண்ணத்துக்கும் நடுவுல சிக்கி தவிச்சிருக்கேன். கடைசில உன் காதல் தான் ஜெயிச்சது.” அணைத்துக் கொண்டான்.

 

“அப்புறம் எதுக்காக இவ்ளோ பண்ணீங்க”

 

“உனக்காக”

 

“எனக்காக என்னையவே கஷ்டப்படுத்துவீங்களா”

 

“நீ என்கூட சாகுற வரைக்கும் இருக்கனுன்னா கண்டிப்பா அதை செய்வேன்” என்றதும் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். 

 

தன் பதற்றத்தை குறைக்க அவளை மருந்தாக்கி கொண்டவன் முடிந்தவரை இடைவெளி இல்லாமல் அணைத்தான். மனம் நிதானம் அடைந்ததும் விலகி முகம் முழுவதும் முத்தமிட்டு,

 

“எங்கடா என்னை விட்டு போயிடுவியோன்னு பயந்துட்டேன். இப்பதான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு.” என்று இட்டுக் கொண்டிருந்த முத்தத்தை தொடர்ந்தான்.

 

அனைத்தையும் வாங்கிக் கொண்டவள் அவன் முகத்தைப் பற்றி, “உண்மை தெரிஞ்சதும் நம்ப முடியாம ரொம்ப அழுதேன். அப்பா அம்மா சொன்னதை கேட்டு வாழ்க்கையில பெரிய தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சேன். அதுக்கப்புறம் பொறுமையா உட்கார்ந்து யோசிக்கும் போது தான் எல்லாம் புரிஞ்சது. உங்க எண்ணம் என்னை பழி வாங்குறதா இருந்திருந்தா இந்நேரம் கொன்னு இருக்கணும். அப்படி நீங்க செய்யலையே.

 

இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டிங்க. நான் ரொம்ப சந்தோஷமா தான் வாழ்ந்தேன். ஆனா, நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு இப்ப புரியுது. தெரியாம ஒன்ன செஞ்சிட்டு எங்கடா அது எனக்கு தெரிஞ்சா விட்டு போயிடுவேன்னு பயந்து எல்லாத்தையும் பண்ணி இருக்கீங்க. இந்த அளவுக்கு நீங்க என்னை காதலிப்பீங்கன்னு நினைக்கல.” அவனைப் போல் அவசரமாக இல்லாமல் நிதானமாக நெற்றியில் மட்டும் ஒரு முத்தம் வைத்தாள். 

 

 

எரிமலை வெடிக்க போகிறது என்ற பயத்தில் நின்றிருந்தவனுக்கு பனிக்கட்டி மழை பொழிய மனம் குளிர்ந்தது. தனக்குள் ஏற்பட்ட பயத்தை எல்லாம் தூக்கி தூரம் எரிந்தவன் அவள் மடியில் படுத்துக்கொண்டு, 

 

“உண்மையாவே என் மேல கோபம் இல்லையா” வினவிட,

 

“இருக்கு” என்றாள். 

 

குளிர்ந்த மனம் பற்றிக் கொண்டது பிரார்த்தனா பதிலில். பதற்றமாக எழுந்தவன் என்னவென்று கேட்க, “உண்மை தெரிஞ்சதும் எங்கிட்ட வந்து நான் பண்ணது தப்பு இனிமே பண்ண மாட்டேன்னு சொல்றத விட்டுட்டு… இவ்ளோ வேலை பண்ணி இருக்கீங்களே அதுக்கு.” என சொல்லி முடிக்கும் முன் அவளை அணைத்தான்.

 

“உங்களை விட்டுப் போயிடுவன்னு எப்படி நினைச்சீங்க? அந்த அளவுக்கா என் காதல் இருக்கு. இப்ப வரைக்கும் உண்மை தெரியாம என்னை பழி வாங்கிட்டு இருந்திருந்தாலும் காலம் முழுக்க உங்க காலடியில இருந்திருப்பேனே தவிர வேணான்னு போயிருக்க மாட்டேன். ஏன்னா… என் சரவணா என்னோட உயிர்.” 

 

“வாழ்க்கைல யாருமே இல்லையேன்னு ரொம்ப தவிச்சிருக்கேன் தனா. எதுக்குடா இந்த உயிர்னு பல நாள் சாக நினைச்சிருக்கேன். இன்னைக்கு தான் புரியுது கடவுள் உனக்காக இந்த உயிரை விட்டு வச்சிருக்கான்னு.” 

 

“உங்களோட இந்த நிலைமைக்கு நான் காரணம் இல்லனாலும் என் வீட்டு ஆளுங்களால தான் இந்த நிலைமை. உங்க கஷ்டம் எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. சும்மாவே உங்க அழுகைய சிரிப்பா மாத்தணும்னு லட்சியத்தோடு இருந்தேன். இப்போ வாழ்க்கை முழுக்க அழுகை’ன்னா என்னன்னே தெரியாத அளவுக்கு உங்களை பார்த்துக்கணும்னு ஆசைப்படுறேன்.”

 

“லவ் யூ தனா”

 

“லவ் யூ சோ மச்” 

 

இருவரும் அணைத்துக் கொண்டனர். ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அந்நிலையில் இருந்தவள் கொஞ்சம் விலகி, “இப்பவாது குழந்தையை பத்தி பேசலாமா” என்றிட, சரவணன் முகத்தில் வெட்கம் சிரிப்பாக தென்பட்டது.

 

 

“பாருடா! இப்பதான் அப்பா ஆன குஷி உங்க முகத்துல தெரியுது.” 

 

“திரும்ப ஒரு தடவ சொல்லேன்.” 

 

“எத்தனை தடவை சொன்னாலும் ஒன்னு தான்.”

 

“அது இல்ல தனாமா… அந்த நேரத்துல அதை ஃபீல் பண்ண முடியல.” 

 

சிறிதாக புன்னகைத்து, “கண்ண மூடுங்க” என்றாள். 

 

ஏன் என்று கேட்காமல் உடனே கண் மூடியவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் என்ன சிந்தனையோ! அவன் கையை எடுத்து வாயிற்றில் வைக்க, உடல் சிலிர்த்தது. பூனை முடிகள் வான் அளவு எழுவதை கண்டு மகிழ்ந்தவள்,

 

“அப்பா ஆக போறது மட்டும் இல்ல சரவணா… வாழ்க்கையில இனி கிடைக்காதான்னு ஏங்கி அழுத ஒரு உறவ பார்க்க போறீங்க. அனேகமா அது உங்க அம்மாவா தான் இருக்கும்.” எனும் போது அவன் கண்ணில் இருந்து நீர் வெளியேற, குறித்து வைத்துக் கொண்டாள். 

 

“என் வீட்டு ஆளுங்களால இழந்ததை நான் திருப்பி தர போறேன். என் சரவணா அவன் அம்மாவ குழந்தையா வளர்க்க போறான். கொஞ்ச நாள் கழிச்சு தம்பியும் மகனா வர போறாரு. அப்புறம் என்ன…போன சொந்தமும் புதுசா வந்த நானும் ஒன்னா கூடவே இருக்க போறோம். என் புருஷன் மாதிரி சந்தோஷமா வாழ போற ஆள் இந்த உலகத்துலயே இல்ல.” 

 

“நிஜமா அம்மா வருவாங்களா” 

 

“இது என்ன கேள்வி! வருவாங்களா இல்ல வராங்க.” 

 

“எனக்கு என் அம்மானா உசுரு” சொல்லும் பொழுது கண்ணீர் அளவு அதிகரித்தது. 

 

அதை துடைத்து விட்டவள், “இது நீங்க அழுற நேரம் இல்ல சிரிக்க வேண்டிய நேரம். அம்மாவை குழந்தையா வாங்க போற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். இன்னும் பத்து மாசம் தான் இருக்கு அந்த பாக்கியத்தை நீங்க அனுபவிக்க. இன்னைல இருந்து அந்த நாளுக்காக காத்திருங்க சரவணா.” என்றதும் அவன் மனதில் நங்கூரமாக  பதிந்துவிட்டது.

 

இழந்த தாயை மார்பில் சுமக்க போகிறோம் என்ற சுகம் பாடாய்படுத்தியது. இரவெல்லாம் சாப்பிடாமல் அன்னையின் புராணத்தை பாடினான். அவன் கொடுக்கும் முகபாவனைகளை வைத்தே அதன் ஆழத்தை உணர்ந்தவள் சிரித்துக் கொண்டாள். 

 

 

வாய் ஓயும் வரை பேசியவன் சத்தம் கொடுக்காமல் இருக்கும் மனைவியை பார்க்க ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அதன் பின்னே மணி பார்த்தவன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு அவளுக்கு போர்வையை போர்த்தி விட, அவன் மார்போடு ஒட்டிக் கொண்டாள். 

 

தட்டி தூங்க வைத்தவனுக்கு தீடிரென ஒரு ஆசை முளைக்க கை வயிற்றை தொட்டது. அதன் சுமை நெஞ்சை தாக்க, 

 

“அம்மா!” என்றான். 

 

 

மனதுக்குள் என்னென்னவோ பேசினான். மனம் நிறைந்து கண் மூடியதும் பக்கத்தில் இருந்தவள் விழி திறந்தது. எத்தனை நாட்கள் தன்னை இப்படி பார்த்திருப்பானோ என்ற எண்ணம் எரிச்சலை கொடுத்தது‌‌. இது தான் அவன் வாழ்வில் நிம்மதியாக உறங்க போகும் கடைசி நாள் என்பதை இவள் மட்டுமே அறிவாள். 

 

வயிற்றில் கை வைத்து, ‘மன்னிச்சிடு பாப்பா நாளைக்கு நீ இருக்க மாட்ட. எவ்ளோ ஆசையா உன்ன வரவேற்றனோ

அதை விட ஆயிரம் மடங்கு கஷ்டத்தோடு அனுப்பி வைக்க போறேன். இவன மாதிரி ஒரு அப்பா உனக்கு வேணாம். என்னை மாதிரி ஒரு முட்டாள் அம்மாவும் வேணாம். நீ நல்ல அப்பா அம்மாக்கு பாப்பாவா போ.’ கண்ணீர் வடித்தாள்.

 

 

அம்மு இளையாள். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்