Loading

தேசம் 17

 

நள்ளிரவு சலசலக்கும் மழை பெய்ய ஆரம்பித்தது. இடது பக்க ஜன்னலோரம் திரும்பி அதை நோட்டம் விட்டவன் மறுபக்கம் திரும்பி மனைவியை பார்த்தான். அவளோ, எந்த சத்தத்தையும் அறியாது நல்ல தூக்கத்தில் இருந்தாள். இவனோ, தூக்கம் வந்தாலும் தூங்காது யோசித்துக் கொண்டிருக்கிறான். 

 

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, ‘இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு விடிய. ஏதாச்சும் பண்ணியே ஆகணும்.’ விடியலை எதிர்கொள்ள அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறான். 

 

பிரார்த்தனாவை இங்கு அழைத்து வரும் முன்னே தெளிவாக அனைத்தையும் செயல்படுத்தியவன் இவள் மனதில் இருக்கும் பெற்றோரின் எண்ணத்தை மட்டும் தடுக்க முடியவில்லை. அவர்களை மறக்கச் செய்து தன்னவள் உடனான வாழ்க்கையை இனிமையாக வாழலாம் என்ற கனவு பொய்யானது. பெற்றோர்களை பார்க்க நேரிட்டால் நடந்த விபரீத செயல் தெரிந்துவிடும் அதன் பின் பிரார்த்தனா தனக்கு இல்லை என்ற பயம் ஆட்கொல்லி மருந்தாய் ஊற ஆரம்பித்தது. 

 

இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் விடியற்காலை ஐந்து மணி வரை நகர்த்தி விட்டான். லேசாக அசைந்து படுக்கும் மனைவியை தட்டிக்கொடுத்து முடியும் வரை தூங்க வைக்க நினைத்தவன் தோற்றுப் போனான் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டதில்.

 

புன்னகை தவழ அவனை விட்டுப் பிரிந்தவள் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள குளியலறை நுழைந்து கொண்டாள். அவள் போகும் வரை சிரித்துக் கொண்டிருந்தவன் உச்சகட்ட பயத்தில் வேகமாக யோசிக்க ஆரம்பித்தான். தன் தேவைகளை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பிரார்த்தனா செவியில்,

 

“திருமணநாள் வாழ்த்துக்கள் மாமா.” என்ற வார்த்தை விழுந்தது.

 

கணவனிடம் இருந்த நியாபகத்தை பெற்றோர்கள் பக்கம் திருப்பியவள் ஆசையாக அவன் அருகில் வர, “நைட்டே கால் பண்ணனும்னு தனா ரொம்ப துடிச்சுட்டு இருந்தா. நான் தான் நீங்க தூங்கிட்டு இருப்பீங்கன்னு தடுத்து வைச்சிருந்தேன்.” என இவளை பார்த்து புன்னகைத்தான்.

 

“எங்கிட்ட கொடுங்க” என்றவளுக்கு சைகை செய்தவன், “மாமா உங்க பொண்ணு பேசணுமா கொடுக்கவா” என்றான். 

 

பிரார்த்தனா அவனையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க மெல்ல சரவணன் முகம் மாறியது. அதைக் கண்டு புருவம் சுருக்கி என்னவென்று கேட்க, “என்ன மாமா இப்படி ஒரு வார்த்தைய சொல்றீங்க. என்ன இருந்தாலும் அவ உங்க பொண்ணு இல்லையா. நீங்க இந்த மாதிரி பேசுறதை கேட்க எனக்கே கஷ்டமா இருக்கு உங்க பொண்ணுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க.” என்றான். 

 

 

ஆசை கொண்ட முகம் ஏமாந்து போனது. கணவன் பேசும் வார்த்தைகளை வைத்து தந்தை என்ன பேசி இருப்பார் என்பதை அறிந்து கொண்டாள். சத்தம் இல்லாமல் அவன் அருகில் அமர, இல்லாத அழைப்பை கண்டுபிடித்து விடுவாளோ என்று பயந்தவன் பேசிக்கொண்டு எழுவது போல் அவளை விட்டு விலகினான். 

 

“மாமா, நான் உங்ககிட்ட நிறைய விஷயம் பேசணும். கொஞ்சம் பொறுமையா சொல்ல வரத கேளுங்க.” 

 

….

 

“உண்மை என்னன்னு தெரியாம பேசாதீங்க மாமா”

 

…..

 

“ப்ளீஸ் மாமா கொஞ்சம் கேளுங்க உங்க பொண்ணு மேல எந்த தப்பும் இல்லை எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.” என்றதும் அவனிடம் சொல்லாதே என சைகை செய்தாள். 

 

ஏன் என தலையை மட்டும் உயர்த்த, “அவன பத்தி தெரிஞ்சா அம்மா அப்பா ரொம்ப பயப்படுவாங்க வேண்டாம்.” என்றாள்.

 

 

அவளுக்காக அனைத்தையும் செய்வது போல் இன்று வரை நடித்துக் கொண்டிருந்தவன் உடனே கட்டை விரலை மட்டும் உயர்த்தி காட்டி, “அதெல்லாம் விடுங்க மாமா அவ விஷ் பண்றதை மட்டும் எனக்காக கேட்டுக்கோங்க.” என நடித்தான்.

 

 

தொடர்பில் இல்லாதவர் கடுமையாக பேசியது போல் கோபம் கொண்டவன், “நீங்க பேசுறது ஒன்னும் சரியில்ல மாமா. எல்லாத்தையும் மறந்துட்டு நானே என் மனைவி கூட வாழும் போது உங்களுக்கு என்ன. அவளை இந்த மாதிரி பேசுறதா இருந்தா இனிமே என்கிட்ட பேசாதீங்க. எப்போ அவ கிட்ட பேசுறீங்களோ அப்பதான் நான் உன்கிட்ட பேசுவேன்.” வைத்து விட்டான்.

 

பிரார்த்தனா ஏதாவது ஆரம்பிப்பதற்குள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஓரமாக அமர, அந்த நிலையிலும் தன்னைப் பற்றி யோசிக்காதவள் கணவனை சமாதானம் செய்ய, “அப்பா கோபத்துல பேசுறாரு. அவரால எங்கிட்ட பேசாம ரொம்ப நாள் இருக்க முடியாது. நீங்க அப்பா மேல கோபப்படாம எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க.” சமாதானம் செய்தாள்.

 

“இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல ஆனா எல்லா பழியும் உன் மேல. எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா எனக்கு. அப்படியே நீ தப்பு பண்ணிருந்தாலும் என்ன இப்போ. ஒரு பெத்தவரா பிள்ளையை மன்னிக்கக் கூடாதா. ஆசையா விஷ் பண்ணனும்னு நினைக்கிறது தப்பா.” 

 

“அப்பா எப்பவுமே அப்படித்தாங்க எல்லா விஷயத்துலையும் நேர்மையா இருக்கணும்னு நினைப்பாரு.”

 

‘அவனா…’ என உள்ளுக்குள் கருகி விட்டு, “என்னால இதை ஒத்துக்க முடியாது தனா. அவரா வந்து பேசுற வரைக்கும் இனிமே போன் பண்ற அதை பண்றேன்னு எதுவும் நீ பண்ண கூடாது. அப்படி பண்ண… கெட்ட கோவம் வந்துடும் எனக்கு.” என்றிட, வருத்தம் இருந்தாலும் அவனுக்காக தலையாட்டினாள்.

 

***

 

தொலைத்தொடர்பு செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிம்மதியில் அந்த நாளை அழகாக ஆரம்பித்தான் சரவணப் பொய்கை. ஆனால் அவனுக்கு எதிரான மனநிலையில் அன்றைய பொழுதை கழிக்க துவங்கினாள் கட்டியவள். வருந்துகிறாள் என்பதை அறிந்தும் கண்டு கொள்ளாமல் அவள் பின்னாலே சுற்றி வர ஆரம்பித்தான். 

 

 

சரவணன் செய்கையில் ஓரளவிற்கு பெற்றோர்களை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். வீட்டிலேயே இருந்தால் இதை பற்றி பேசுவாள் என்பதற்காக வெளியில் அழைத்து சென்றான். அவளே உடல் சோர்ந்து வீடு திரும்பலாம் எனும் வரை ஊர் சுற்றினான். 

 

ஒருவழியாக அந்த நாளை கடந்து வீடு வர, அழைப்பு ஒன்று வந்தது. எண்ணைக் கண்டதும் பதற்றம் நிலவியது உடலில். பாடல்களை ரசித்துக் கொண்டு வந்தவள் அழைப்பை எடுக்கும்படி கூற, “ஹலோ” என்றான்.

 

“சார், அவரு பார்க்க வர சொல்லி ரொம்ப கட்டாயப்படுத்துறாரு. நான் முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சிட்டேன். இனிமே நீங்கதான் பார்த்துக்கணும்.” 

 

 

காரை ஓரமாக விட்டவன், “சரியா கேக்கல ஒரு நிமிஷம் இருங்க” என்று காரை விட்டு இறங்கி,

 

“இனிமே பார்த்துக்கணுமா?” வினவினான்.

 

“ஆமா சார். அவரை என்னால ரொம்ப சமாளிக்க முடியல. உங்களை பத்தி கேள்வி கேட்டு குடைஞ்சு எடுக்கிறாரு. பேசுறது நானுன்னு தெரியாம என்னை பார்க்க ஏன் வரலன்னு உங்க மனைவி கிட்ட கேட்கிற மாதிரி கேட்கிறாரு. நாங்களாவது வரட்டுமான்னு ஒரு மணி நேரம் பேசி சாகடிச்சிட்டாரு. எங்கடா மாட்டிக்க போறோம்னு எனக்கே ரொம்ப பயம் வந்துருச்சு சார்.” 

 

 

“ஏய்! என்ன, காசு கறக்க பார்க்குறியா.”

 

“சத்தியமா இல்ல சார். என்னால உண்மையாவே சமாளிக்க முடியல.” 

 

“சரி, அடுத்த தடவை கால் வந்தா மட்டும் பேசு. அதுக்குள்ள பிரச்சனையை முடிக்க பார்க்கிறேன்.” என்றவன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

 

 

பிரார்த்தனா பேசுவது போல் சாமிநாதனிடம் பேச ஏற்பாடு செய்த ஆள் தான் இவ்வளவு நேரம் பேசியது. இந்த வேலையை உண்மை தெரிந்த நாளில் இருந்தே செய்து கொண்டிருக்கிறான். நானே அழைக்கும் வரை அழைக்க வேண்டாம் என அழைப்பை நிறுத்த பார்க்க, சாமிநாதன் விடவில்லை. 

 

நடந்ததை பற்றி பேச, அவர் காட்டும் ஆர்வத்தில் இப்படியே விட்டால் எதையாவது செய்து விடுவார் என பயந்தவன் தொடர்ந்து பேச ஏற்பாடு செய்து விட்டான். 

 

***

 

நாட்கள் ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு பறந்து ஓடியது. இருவரின் மனம் ஒத்து வாழ ஆரம்பித்து முப்பது நாட்கள் ஆகிவிட்டது. இந்த முப்பது நாளும் அவளை தனியே விடவில்லை சரவணப் பொய்கை. விட்டாள் பெற்றோர்கள் நியாபகம் வந்து விடும் என்ற பயம் தான் அதற்கு காரணம். ஓடும் நீரை எவ்வளவு நாள் நிறுத்தி வைக்க முடியும்! 

 

 

ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டதால் வேலையில் தொடர் பிரச்சனைகள் உருவாகியது. மனைவியை விட்டு செல்லவும் முடியாமல் அவற்றை தொடரவும் முடியாமல் தடுமாறியவன் வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான். 

 

இரண்டு நாளில் ஒரு ஆர்டரை முடிக்க வேண்டும். திட்டமிட்ட படி செய்திருந்தால் இந்நேரம் வேலை முடிந்திருக்கும். கடைசி நேரத்தில் வேலையாட்கள் செய்த தாமதம் தேவை இல்லாத நெருக்கடிக்கு தள்ளி விட்டது‌. மற்றவர்களை நம்பாமல் இவனே இறங்கினான். 

 

காலையில் இருந்தே பரபரப்பாக லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் கணவனை தொந்தரவு செய்யவில்லை பிரார்த்தனா. அவள் அறிந்தவரை இன்று தான் வேலையே செய்கிறான் சரவணப் பொய்கை. சமையலை முடித்தவள் சாப்பிட அழைக்க, நேரமில்லை என்று விட்டான்.

 

உணவை ஊட்டி அவன் மனதை திசை திருப்பியவள், “நான் வேணா ஹெல்ப் பண்ணவா.” கேட்டிட, 

 

“நீ பக்கத்துல இல்லாம இருக்கிறதே பெரிய ஹெல்ப் தான் தனா.” என்றவன் முகம் ரசனையானது. 

 

“சேட்டை ரொம்ப” என்று விட்டு வெளியேற, சிறிது நேரம் அவள் நினைப்பில் அமர்ந்திருந்தவன் மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினான். 

 

அந்நேரம் அவனை அழைத்த மேனேஜர், “சார், ஆர்டர் கொடுத்தவங்க இன்னிக்கு தான் கடைசி நாள்னு பிரச்சனை பண்றாங்க.” என்றார்.

 

“அது எப்படி சொல்ல முடியும். அக்ரீமெண்ட்ல இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு. நீங்க கால எனக்கு கனெக்ட் பண்ணுங்க நான் பேசுறேன்.” 

 

ஆர்டர் கொடுத்தவர்கள் இன்று தான் கடைசி நாள் இன்றே கொடுத்த ஆர்டர் வர வேண்டும் என்று பிரச்சனை செய்தார்கள். எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியவில்லை இவனால். இன்று ஆர்டர் வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்று விட்டார்கள். 

 

“அக்ரீமெண்ட் மெயில் பண்ணி வைக்கிறேன். நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.” என்றவனுக்கு போதிய நேரத்தை கொடுக்கவில்லை அவர்கள். 

 

அப்படியே அழைப்பில் வைத்திருந்தவன், “தனா!” என்றழைக்க, வந்தாள். 

 

“கீழ் ரூம்ல இருக்க பீரோல ரெட் கலர் பைல் ஒன்னு இருக்கு எடுத்துட்டு வா” 

 

எடுத்து வர சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி, “ரூம் பூட்டி இருக்குங்க.” என்றிட, க்ளையன்டிடம் தீவிரமாக வாதம் செய்து கொண்டிருந்தவன் தன் சுயநினைவு இல்லாமல்,

 

“என்னோட பேக்ல இருக்கு” என அதை நோக்கி கை காட்டினான். 

 

தேடி எடுத்து அறை நோக்கி சென்றாள். இங்கு சரவணன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் விடாமல். அவர்களோ பிடிவாதமாக மறுக்க, “தனா….என்ன பண்ற? சீக்கிரம் வா” உச்ச குரலில் கத்தினான்.

 

“வரங்க” என்றவள் குரலை கூட சரியாக காதில் வாங்காமல் வாதம் செய்ய, தீடிரென பேச்சு நின்றது. கண்கள் இரண்டும் விரிந்து உடல் விரைக்க ஆரம்பித்தது. மூளை மயங்கி தலை சுற்ற வைக்க, “தனா” என புலம்பியவன் காதில் இருந்த கைபேசியை அப்படியே போட்டு விட்டு ஓடினான்.

 

கீழே அவள் அறையை திறக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்க, கால்கள் பாய்ந்தது வேகமாக. அவள் கதைவை திறக்கவும் இவன் அவளிடம் நெருங்கவும் சரியாக இருந்தது. கதவை திறந்த அதிர்ச்சியில் மதி மயங்கி நின்றதெல்லாம் ஒரு நொடி தான். தன்னை சுதாரித்து முழுதாக கதவு திறக்கும் முன், “தனா!” என்றான் உலகம் குலுங்க. 

 

அவன் குரலில் பாதி திறந்த கதவோடு அதிர்ந்து திரும்ப, ஓடி சென்று அந்த அறையை தாழ்ப்பாள் போட்டான். 

 

“எதுக்கு கதவை திறந்த?” 

 

“நீங்க தான பைல் எடுத்துட்டு வர சொன்னீங்க.”

 

“ஆ…ஆமா” என தடுமாறியவன், “நா… நான் சொன்னது அந்த கதவை” என வேறொரு அறையை காட்டினான்.

 

“அது பூஜை ரூம்” 

 

அவசரம் கண்ணை மறைக்க, “அய்யோ! டென்ஷன் பண்ணதுல எதையோ உளறிட்டு இருக்கேன் பாரு.” என தலையில் அடித்து, “மேல இருக்க பக்கத்து ரூம சொன்ன.” என சமாளித்தான். 

 

“இல்லையே தெளிவா இந்த ரூம்னு தான சொன்னீங்க.” என்றவளை எப்படியோ திசை திருப்பியவன் தன் அறைக்கு அழைத்து செல்ல, திறக்கப்பட்ட அறையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார் சரவணப் பொய்கையின் தாயார். 

 

தேசம் 18

 

அன்று நடந்த சம்பவத்திற்கு பின் இன்னும் கவனமாக தன் செயல்களை வைத்துக் கொள்ள ஆரம்பித்தான் சரவணப் பொய்கை. அவனுக்குள் இருக்கும் பயம் அறியாது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவன் மனைவி பிரார்த்தனா.

 

அந்த நிம்மதி தான் இவனுக்கு இல்லாமல் போனது. வேலையில் இருந்து தொடர் பிரச்சினைகள் வேறு இம்சை செய்ய, அன்று நடந்த சம்பவத்தில் கொடுத்த ஆர்டரை சரியாக முடிக்க முடியாமல் சிக்கல் மேல் சிக்கல் உண்டாகிவிட்டது. அலுவலகம் சென்றாக வேண்டும் என்ற சூழ்நிலை கண் முன்னால் உருவாகியது.

 

இவளை விட்டு சென்றால் விபரீதமாக கூடும் என்பதால் அதை முடிந்த வரை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறான். தந்தை தன் மீது கோபமாக உள்ளார் தொந்தரவு செய்யக்கூடாது என முற்றிலும் விலகி விட்டாள் அவர்களிடமிருந்து. இரண்டு முறைக்கு மேலாக தனக்கொரு கைபேசி வேண்டும் என்று மட்டும் கணவனிடம் கேட்க,

 

“உன் கைல போன் இருந்தா சும்மா இருக்க மாட்ட. ஒரு ரெண்டு மாசம் போகட்டும் வாங்கி தரேன்.” என சமாளித்து வைத்திருக்கிறான். கூடவே பத்து நாட்களுக்கு தேன்நிலவு அழைத்துச் சென்று அந்த நினைப்பை ஒதுக்கி வைத்தான்.

 

வேலைக்காவது செல்லட்டுமா என்ற அடுத்த கோரிக்கைக்கும் நிராகரிப்பை பதிலாக கொடுத்தான். மொத்தத்தில் கட்டியவன் நினைப்பைத் தவிர வேறு எந்த நினைப்பும் அவளை அண்டாதவாறு பார்த்துக் கொண்டான். அதையும் மீறி ஏதாவது தோன்றினால் உடல்நிலை சரியில்லாதவாறு நடித்து அவள் பாசத்தை பாசக்கயிறாக மாற்றுவான். 

 

அப்படியே ஓடி நூறு நாட்களை நிறைவு செய்தாள் பிரார்த்தனா. இப்போது அவள் உலகம் சரவணப் பொய்கை மட்டுமே. மனமும் மூளையும் அதில் அழகாக ஊறிவிட்டது. அவனைத் தாண்டி வேறு எதன் மீதும் நாட்டம் செல்லவில்லை. நூறு நாட்களாக அவன் செய்த கடும் போராட்டத்திற்கு முழு பலனாக மாறி இருந்தாள் பிரார்த்தனா. 

 

காலை எழுந்ததிலிருந்து அவளுக்குள் பல உணர்வுகள். பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை ரசித்துக் கொண்டிருந்தாள். என்றும் இருக்கும் ரசனையோடு இன்று வெட்கமும் சேர்ந்து கொண்டது. அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் புது மாற்றத்தை எப்படி உறுதி செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

 

 

மெல்ல கண் விழித்து சோம்பல் முறித்தவன் பக்கத்தில் இருக்கும் மனைவியை அணைக்க, “காலைலயே” என தள்ளி விட்டாள்.

 

“கட்டிப் பிடிக்க கால நேரமெல்லாம் பார்க்கக்கூடாது தனா.” 

 

“இனிமே பார்க்கணும்”

 

“ஏன்?” 

 

“ஏன்னு அப்புறம் சொல்றேன் முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க.”

 

“ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம் வா” என பிரார்த்தனாவை தூக்க முயல, “ப்ச்! இனிமே இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ண கூடாது.” சின்ன கோபம் கொண்டாள்.

 

“என்னாச்சு?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.”

 

“என் மேல கோபமா இருக்க மாதிரி இருக்கு.”

 

“நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க சரவணா. உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லணும். அதை கோவில்ல வச்சு சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். குளிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரலாம்.” என்றதும் பயம் கொண்டது உள்ளம்.

 

என்னவாக இருக்கும் என்ற ஆழ்ந்த சிந்தனையில் அப்படியே படுத்திருந்தான். தன்னை அறியாமல் ஏதாவது செய்து விட்டோமா என்ற பயம் நொடிக்கு நொடி அதிகரித்தது. நாசுக்காக பல முறை கேட்டு பார்த்து விட்டான். வீட்டை விட்டு கிளம்பும் போது கூட என்னவென்று கேட்டு நச்சரித்தான். எதற்கும் வாய் திறக்காமல் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். 

 

உள்ளுக்குள் இருக்கும் படபடப்பை காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாக நடிக்க பெரும் பாடுபட்டான் சரவணப் பொய்கை. அவன் நடுக்கம் அறியாது தனக்கான நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுது சொல்வாள் என்று காத்துக் கிடந்தவனுக்கு அழைப்பு வந்தது. இருக்கும் மனநிலைக்கு எடுக்க விரும்பாதவன் மூன்றாவது முறையாக வர எடுத்தான். “ஹலோ” என்றது மட்டும்தான் அதன் பின் எந்த பேச்சும் இல்லை.

 

 

பக்கத்தில் இருந்தவள் தன்னவன் முக மாறுதல்களை கண்டு உசுப்ப, “ஆபீஸ்ல திடீர்னு ஃபயர் ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம் தனா.” என்று அவசரமாக ஒரு ஆட்டோவை விலை பேசி அவளை ஏற்றி விட்டு அலுவலகம் நோக்கி பறந்தான்.

 

கெட்ட செய்தியில் வருத்தம் கொண்டவள் அதில் நடந்த நல்லதை நினைத்து மகிழ்ந்தாள். போகும் வழியில் ஆட்டோவை நிறுத்தி தனக்கானதை வாங்கிக் கொண்டவள் அவனுக்காக ஆசையாக இனிப்பு கட்டிகை ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

 

இந்நாளை மறக்க முடியாத நாளாக்க நினைத்தவளுக்கு தான் மறக்க முடியாத நாளாக போகிறது என்பதை அறியாது சில நொடி சிந்தித்தாள். அவன் கண்டு பிடிக்காதவாறு தன்னுடைய இன்ப அதிர்ச்சி இருக்க கீழ் இருக்கும் அறையை தேர்வு செய்தாள். பூட்டியிருக்கும் அறையின் சாவியை அன்று அவன் சொன்னது போல் எடுத்து வந்தவள் திறந்ததும் பேரதிர்ச்சிக்கு உள்ளானாள். 

 

கதவுக்கு நேராக ஆள் அடி உயரத்திற்கு சரவணப் பொய்கையின் தாயார் புகைப்படம் இருந்தது. வாழ்வில் மறக்க முடியாத முகங்களில் ஒருவர் முகம் அவர் முகம். அவர் புகைப்படம் இங்கு எப்படி என்ற அதிர்ச்சியில் அவ்வறைக்குள் கால் வைத்தவள் அடுத்து கண்டதெல்லாம் பூகம்பங்கள் மட்டுமே. 

 

குடும்பத்தோடும் அன்னையோடும் சிரித்த முகமாக புகைப்படங்களில் நின்று கொண்டிருந்தான் இவளை கட்டியவன். முக்கியமாக ஒரு புகைப்படத்தில் கணவனோடு இருக்கும் ஒருவனைக் கண்டு கண்கள் கலங்கியது. அதன் அருகில் சென்றவள் அந்தப் புகைப்படத்தில் இருப்பவனை தொட, “நீதான் அவன கொன்ன.” என்ற வார்த்தை கண் முன் வந்தது. 

 

கலங்கிய கண்கள் தாரைதாரையாக கண்ணீரை ஊற்றியது. ஒரு புகைப்படத்தில் சரவணப் பொய்கையின் அன்னையோடு இன்னொருவர் சேர்ந்து நின்றிருந்தார். அவரைப் பார்க்க அப்படியே தன் கணவனை பார்ப்பது போல் இருந்தது பிரார்த்தனாவிற்கு. வெகு யோசனைகளுக்குப் பிறகு இது அவனுடைய குடும்பம் என்பது விளங்கியது. 

 

பூவாக இருந்தவள் உள்ளத்தில் ஏற்பட்ட பூகம்பம் ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்க்க தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த சிந்தனைகள் தொடர் முடிச்சாகி கடைசியில் தன்னவன் இடத்தில் நின்றது. இன்னும் அந்த அறையை சோதித்துப் பார்க்க விரும்பியவள் புரட்டி போட்டாள். புகைப்படங்களைத் தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. 

 

அதில் தன் சிந்தனையை சுழல விட்டவள் எதார்த்தமாக அங்கிருக்கும் பீரோவை பார்த்தாள். எண்ணமும் செயலும் தனக்கானதை தேடி ஓடியது. பல ஆடைகளுக்கு மத்தியில் ஒளிந்திருந்த பத்திரம் ஒன்று உருண்டு அவள் காலடியில் விழுந்தது. எடுத்து ஆராய்ந்தவள் அதிர்ந்தாள் தந்தையின் அனைத்து சொத்துக்களும் இடம் மாறி இருப்பதை அறிந்து. 

 

 

தொடர் அதிர்வுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பதறியவள் தந்தையிடம் பேச துடித்தாள். எந்த வழியும் இல்லை என்பதை அந்நொடி தான் உணரவும் செய்தாள். மேலும் மூளை ஆராய கட்டளை இட, அனைத்தையும் கலைத்து போட்டாள். அந்த அறை அலங்கோலம் ஆனது. 

 

 

பீரோவில் இருக்கும் மற்ற அனைத்து துணிகளையும் மொத்தமாக கீழே தள்ளியவள் மனம் தளர்ந்து தரையில் அமர, துணிகள் அவள் மீதே விழ ஆரம்பித்தது. அதை எடுத்து தூரம் எறிந்தவள் தன்னவனை நினைத்து சேலாக கண் கலங்க…அதோ அந்த ஆடை அதை நிறுத்தியது. 

 

என்னவோ கருப்பாக இருக்கிறதே என்று அழுகையின் இடையில் பார்த்தவள் முற்றிலும் உடைந்து போனாள் அந்த கருப்பு உருவம் தன்னை காதலித்து தாலி கட்டியவன் என்றறிந்து.

 

 

“ஏன்?…ஏன்?…ஏன்?” என்ற கேள்வி தான் மண்டைக்குள்.

 

வாய் விட்டு கதறி அழுதவள் ஓடினாள் தன் பிறந்தகத்துக்கு. சாமிநாதன் மகளை கண்டு அணைத்துக் கொள்ள, வள்ளி அழுகவே ஆரம்பித்து விட்டார். இருவரிடமும் தெரிந்த வித்தியாசத்தை கண்டு என்னவென்று விசாரிக்க, 

 

“நீ எப்படி இருக்கன்னு தெரியாம ரொம்ப பயந்து போயிருந்தோம். என்ன தான் போன்ல பேசுனாலும் மாப்பிள்ளை மேல இருந்த சந்தேகம் முழுசா நம்ப விடல.” என்றனர்.

 

“போன்ல பேசுனனா?” என்ற கேள்வியில் எதிரில் இருந்தவர்கள் அதிர,

 

“அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு போனவ இப்ப தான் பார்க்கிறேன். இடையில ஒருநாள் கூட பேசல.” என்றாள். 

 

“என்னமா சொல்ற? ரெண்டு நாளுக்கு முன்னாடி கூட பேசுனோமே. மாமியார் வீட்டுக்கு போறேன் வர ஒரு மாசம் ஆகும் அதுவரைக்கும் போன் பண்ணாதீங்கன்னு சொன்னியே.” 

 

“நானா?”

 

“உன் போன்ல இருந்து நீ பேசாம வேற யாருமா பேசுவா”

 

“நான் போனே யூஸ் பண்ணலம்மா” என்ற மகளின் வார்த்தையை கேட்டு திடுக்கிட்டார்கள்.

 

“அப்போ இத்தனை நாளா உன் நம்பர்ல இருந்து பேசுனது யாரு?” 

 

“அதாம்மா எனக்கும் ஒன்னும் புரியல” என அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் தலைவலி தாங்காமல் தலையில் கை வைத்துக் கொண்டாள். 

 

அவளைப் பெற்றவர்கள் ஏதேதோ கூறிக் கொண்டிருக்க, “என் நம்பருக்கு போன் பண்ணுங்க அப்பா.” என்றாள். 

 

உடனே பிரார்த்தனா உபயோகித்துக் கொண்டிருந்த எண்ணை அழைத்தார்கள். அழைப்பை யாரும் ஏற்காமல் போக பத்து நிமிடங்கள் கழித்து அழைப்பு வந்தது. ஒலிபெருக்கிக்கு மாற்றிய சாமிநாதன் சாதாரணமாக மகளிடம் பேசுவது போல் பேச,

 

“நான் தான் சொன்னேன்லப்பா மாமியார் வீட்டுக்கு ஃபாரின் போறேன்னு. அவங்க நம்ம மேல ரொம்ப கோபமா இருக்காங்க. முதல்ல நான் போய் சமாதானப்படுத்திட்டு அதுக்கப்புறம் உங்க கிட்ட பேச சொல்றேன். தயவு செஞ்சு அதுவரைக்கும் எங்களை தொந்தரவு பண்ணாதீங்க.” என பிரார்த்தனா குரலில் யாரோ பேசினார்கள்.

 

 

தன் குரலில் அதுவும் தன்னுடைய எண்ணில் இருந்து பேசுவதை கேட்டு உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளானாள். மீண்டும் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட, “என்னமா நடக்குது?” கேட்டார் வள்ளி. 

 

அவளிடமிருந்து வந்த பதில் எல்லாம், “தெரியலம்மா” மட்டும் தான். 

 

 

வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் பார்த்த அனைத்தையும் பெற்றோர்களிடம் கூறினாள். இதை எதிர்பார்க்காத பெரியவர்கள் அதிர்ந்தாலும் அவர்களுக்கு நடந்த மூன்று சம்பவத்தையும் கூறினார்கள். கூடவே சொத்துக்கள் அனைத்தையும் இடம் மாற்றியதையும் பகிர,

 

“எல்லாத்தையும் திட்டம் போட்டு பண்ணி இருக்கான்.” என அழுதாள். 

 

போலி பெற்றோர்களை சாமிநாதன் கண் முன் கொண்டு வந்து அவரை அலைய விட்டான். வீடு வரை வர வைத்து அழுக வைக்க வேண்டும் என்ற எண்ணமும் சரியாக செயல்பட்டது. அதன்பின் வீட்டை காலி செய்யும் செயலில் இறங்கியவனுக்கு நடந்த உண்மை அனைத்தும் தெரிய வந்தது. நடந்ததில் தன் மனைவி தவறு எதுவும் இல்லை என முழுதாக அறிந்தவன் அவள் மீது கொண்டுள்ள காதலாலும் தவறே செய்யாதவளை தண்டித்த குற்றத்திற்காகவும் அனைத்தையும் மறைக்க ஆரம்பித்தான். 

 

 

போலி பெற்றோர்களுக்கு பணம் கொடுத்து வேறொரு இடத்திற்கு இடம் மாற்றினான். அடியாட்களை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி தெரியாமல் நடந்து விட்டது என மன்னிப்பு கேட்க வைத்தான். அவர்களோ நம்பாமல் காவல்துறையிடம் செல்வதாக புறப்பட, வந்தவர்கள் மூலம் சாமிநாதனின் காலை அடித்து காயப்படுத்தி பத்து நாட்கள் படுக்க வைத்தான். 

 

தன் மனைவியை தொடர்பு கொள்வார்கள் என்றறிந்து ஒரு ஆளை அவள் குரலில் பேச ஏற்பாடு செய்தான். அவளது கைபேசி அவனிடம் இருந்ததால் இன்னும் வசதியாகி போனது. பெற்றோர்கள் நடந்ததை எல்லாம் வேறு ஒருவனிடம் சொல்கிறோம் என்பதை அறியாமல் மகளிடம் சொல்ல,

 

“அவர் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. தப்பு செஞ்ச என்னை மன்னிச்சு ராணி மாதிரி பார்த்துக்கிறாருப்பா‌. நீங்க யாரையோ பார்த்துட்டு அவரை தப்பா நினைக்கிறீங்க. கல்யாணம் ஆகி நம்ம வீட்டுக்கு வந்த அன்னைக்கே அந்த வீட்ல நம்ம இருக்க போறது இல்ல புது வீட உனக்காக பார்த்து இருக்கேன்னு ஏற்கனவே சொல்லிட்டாரு. அதனால அவரை சந்தேகப்படாதீங்க எனக்கு பிடிக்கல.” என ஏற்பாடு செய்த ஆள் மழுப்பினான்.

 

 

இருந்தும் நம்ப மனம் வராத பெற்றோர்கள் தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்க, நாளுக்கு நாள் பிரார்த்தனா குரலில் பேசி அவர்களை தடுத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு நம்ப வைக்க தினமும் அவள் புலனத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வைத்து மகிழ்வாக வாழ்வதாக காட்டினான். மகள் பேசுவதை வைத்தும் புலனத்தில் வரும் புகைப்படத்தை வைத்தும் சற்று ஓய்ந்தார்கள். 

 

தனக்கே தெரியாமல் தன்னை வைத்து விளையாடிய கணவனின் செயலை முழுவதும் தெரிந்து கொண்டவள் அழுக கூட தெம்பில்லாமல் அமர்ந்தாள். ஆறுதல் படுத்தி அவள் பக்கம் நடந்ததை தெரிந்து கொண்டவர்கள்,

 

“அந்த ராஸ்கல சும்மா விடக்கூடாது. இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் வாம்மா.” என மகளை அழைக்க, “வேணாம்பா” என்றவள் புறப்பட்டாள்.

 

தேசம் தொடரும்…

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்