Loading

மனதைச் சுட்ட சொற்களை மறக்கமுடியவில்லையெனினும் மன்னித்துவிடு..

 

மனம் மரித்துப் போகாமல் காக்க…

 

கீதனின் அதிர்ச்சியைக் கண்டு யோசனையாய் புருவம் சுழித்த நற்பவி என்னவென்று வினவினாள். அவன் ஒன்றுமில்லை என்று தலையசைத்து வைத்தான். பின் மொழியின் அன்னையிடம் இருந்து விடைபெற்றுச் சென்றனர். நற்பவிக்கு மொழியின் அன்னைக் கடைசியில் அழுதது நினைவுக்கு வந்தது. தன் பெண்ணின் முகத்தில் இறுதி நொடியில் முகம் முழுக்க புன்னகை உறைந்திருந்தது. அவள் விருப்பத்துடன் இறந்தாள் என்று‌ கூறினார். இது அவளை உறுத்திக் கொண்டே இருந்தது. 

 

“கீதன், என்ன விஷயம் சொல்லுங்க.”

 

“நிரண்யா தீபன்ங்கிற பேரை அடிக்கடி சொல்லிருக்கா மேம்..” என்று கூற யோசனையில் அவள் புருவம் சுருங்கியது. ஆனால் பதில்தான் அவளால் கூற இயலவில்லை. இது என்ன விதமான வழக்கு. இதுவரை இப்படி ஒரு வழக்கை இவள் செவி வழி கேட்டதுமில்லை. அவள் காணாமல் போன பெண்ணைத் தேட வேண்டும். ஆனால் எங்கெங்கோ செல்கிறாள். நிரண்யாவிற்கும் அந்த பெண் காணாமல் போனதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா என்று கேட்டால், அவளின் மனம் ஏதோ இருக்கிறது என்று கூறியது. ஆனால் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அப்படி இருக்க வாய்ப்பில்லை. 

 

அவளின் மேலதிகாரி அவளுக்கு அழைத்து வஞ்சகமின்றி திட்டியும் விட்டார். ஆனால் அவள் இந்த வழக்கை, அதன் போக்கிலே விசாரிக்க முடிவு செய்தாள்.

 

இப்பொழுது மீண்டும் அவரின் அழைப்பு. ஒருமுறை நிராகரிக்கவும் செய்தாள். ஆனால் அடுத்த முறையும் அதை செயல்படுத்த முடியவில்லை. சலிப்பு மேலிட, அழைப்பை ஏற்றாள்.

 

“சொல்லுங்க சார்..”

 

“மிஸ்.. நற்பவி.. உங்க மனசில் நீங்க என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க. அந்த பொண்ணோட கேஸை‌ இன்னும் எவ்ளோ நாள் இழுக்குறதா இருக்கீங்க. ரொம்பவே பொறுப்பில்லாம நடந்துக்குறீங்க” என்று‌ காய்ந்தார் அவர்.

 

“சார்.. கிவ் மீ எ சான்ஸ். நான் நிச்சயம் கண்டுபிடிப்பேன்.”

 

“ஐ அம் சாரி டு சே திஸ். யூ லாஸ்ட் யுவர் சான்ஸ் அண்ட் நௌ யூ ஹேவ் நோ சாய்ஸ்.”

 

“சார்.. இந்த கேஸில் பல மர்மங்கள் இருக்கு.”

 

“வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங். ஒரு பொண்ணு காணாம போயிட்டா. கடைசியா அவ பேசினது அவ காதலனோட. வீட்ல தெரியாது. இது நூறு சதம் ஓடிப்போன கேஸ்தான். அதை க்ளோஸ் பண்ணாம‌ காரணம் சொல்லிட்டே இருக்கீங்க. உங்களுக்கு இன்னும் ஒரு நாள் டைம் தரேன். அதுக்குள்ள அந்த கேஸ் ஃபைலை மூடி வச்சுட்டு அடுத்த கேஸ் பாருங்க” என்று கூறிவிட்டு ‌அழைப்பைத் துண்டித்தார்.

 

நற்பவிக்கு எரிச்சலாக வந்தது. தனது இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தாள். 

 

********

 

 

எழிலை உடுத்திய ஏரிக்கரை. அப்பொழுதுதான் கொட்டித் தீர்த்தது ககனம். சில்லென்ற காற்று சீறாமல் சிலிர்க்க வைத்தது உடலை. நீரின் அளவு உயர்ந்திருந்தது வான் மகனின் பொழிவால். இன்னும் சற்று மழைப் பொழிந்திருந்தால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும். எதன் பொருட்டோ அந்த ஏரியின் அருகில் வந்த ஒருவன், ஏரிக்கரையின் ஓரமாக நடந்து சென்றான். தூரத்தில் ஏதோ சில பொருட்கள் மிதந்து வந்தது. அது என்னவென்று உத்துப் பார்த்தான்.

 

ஒரு செருப்புபோல் இருக்க, சுற்றி சுற்றிப் பார்த்தான். யாரும் அங்கு இல்லை. செருப்பை எடுத்து கரையில் வீசியவன், தண்ணீரை அருந்தினான். பின் கைகால்களைக் கழுவினான். மீண்டும் நீரை கைகளில் அள்ள முற்பட, அவன் கைகள் ஏதோ ஒரு புதருக்குள் சிக்கியது. வேகமாக இழுத்தான் கைகளை. அங்கு கரையில் புதர்ச்செடிகள் மண்டிக்கிடந்தது. அதன் தண்டுகளில் கை சிக்கியிருக்கும் என்று எண்ணித்தான் இழுத்தான். ஆனால் அவ்வளவு எளிதாக கைகளை எடுக்க முடியவில்லை. ஏதோ கனமான பொருளின் பிடியில் கைகள் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தான்.

 

வேகமாக இழுக்க, கறுப்பான ஒரு பொருளில் கை சிக்கியிருப்பது புரிந்தது. தண்ணீருக்கு மேல் சேற்றுடன் அந்த பொருள் மேலே எட்டிப் பார்த்தது. அது என்ன வென்று அவனால் இனம் காண முடியவில்லை. ஆனால் அவனின் முகத்தில் பதற்றம். அங்கிருந்து எப்படியாவது ஓடி போய்விடலாம் என்று தோன்றியது அவனுக்கு. வேகமாக கையை இழுக்க, ஒரு மனித முகம் தண்ணீருக்கு வெளியில் வந்து மீண்டும் உள்ளே சென்றது‌. நீரில் ஊறி நீரை உறிஞ்சி பெருத்திருந்தது அந்த உடல். வெளிறிய முகம். அச்சுறுத்தும் வகையில் அதைத்துப் போயிருந்தது. விழிகள் வெளியில் பிதுங்கியிருந்தது. தாடையே பாதி காணாமல் போயிருந்தது. 

 

மொத்தத்தில் அவன் கற்பனையில் கூட எண்ணாத கோரம் தாங்கியிருந்தது அந்த முகம். பார்த்தது ஒரு நொடி தான் என்றாலும் மிக அருகில் பார்த்துவிட்டான். அவன் அலறிய அலறலில் அந்த பிணமே பிழைத்து வந்திருக்கும். பின் அங்கிருந்து ஓட ஆரம்பித்தவன். எங்கு சென்று ஓட்டத்தை நிறுத்தினான் என்று அவனுக்கு நினைவில்லை. ஏனெனில் மயங்கி விழுந்திருந்தான். 

 

பிணம் எழுந்து வரப்போவதில்லை. உயிருள்ள நம்மை பிணத்தால் ஒன்றும் செய்ய இயலாது. இது மூளை அறிந்த ஒன்றே. ஆனால் அதைப் பார்த்ததும் நாம் பயந்து ஓடுகிறோம். முதல் காரணம் பயம் மட்டுமே. இரண்டாவதுதான் நம் மேல் பழி வந்துவிடும் என்பதெல்லாம். 

 

சற்று நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு எதிரில் நற்பவி அமர்ந்திருந்தாள். விழித்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் மீண்டும் நினைவு பெற சற்று நேரம் பிடித்தது. அவன் முகம் அருவருப்பில் சுருங்க, உடல் நடுங்க, அவனின் நினைவு திரும்பிவிட்டது என்று புரிந்து கொண்டாள் நற்பவி.

 

“சொல்லுங்க மிஸ்டர் முருகன்.. நீங்க ஏரிக்கரையில் என்ன பார்த்தீங்க?” என்று நற்பவி வினவ, அவன் எச்சிலைக் கூட்டி விழுங்கினான். வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கி போர் புரிந்தது. தன் கைகள் இருக்கிறதா என்றே ஒருமுறை பரிசோதித்துப் பார்த்தான். ஓடி வரும் அவதியில் கைகளை விட்டுவிட்டு வந்துவிட்டேனோ என்ற ஐயம் இருந்திருக்க வேண்டும். 

 

“முருகன்.. என்ன நடந்துச்சோ அதை அப்படியே சொல்லுங்க. இந்த கேஸை இதுக்கு மேல எப்படி கொண்டு போகணும்னு நீங்க சொல்லப் போற பதில்தான் முடிவு செய்யும். பயப்புடாம சொல்லுங்க” என்று அவனை ஊக்குவித்தாள்.

 

“மேடம்.. நான் தண்ணீ குடிக்கலாம்னு ஏரிக்கரைப் பக்கம் போனேன். அப்போ அங்கே ஒரு செருப்பு மிதந்து வந்துச்சு. யாரோ விட்டுட்டு போயிருபப்பாங்கன்னு தண்ணீரைக் குடிச்சேன். திடீர்னு என்னோட கை ஒரு புதருக்குள் சிக்குன மாதிரி இருந்துச்சு. வேகமா இழுத்தேன். ஒரு பொண்ணு பொணமா இருந்துச்சு மேம். அதோட தலையை மட்டும்தான் பார்த்தேன். அப்புறம் அப்படியே ஓடி வந்துட்டேன்” என்று விளக்கினான் முருகன்.

 

“நீங்க பார்த்த செருப்பு அந்த பெண்ணோட செருப்பா?”

 

சற்று நேரம் சிந்தித்தான். நினைவடுக்குகளில் தேங்கியிருக்கும் அந்த கோர நிகழ்வினை அவன் நினைத்துப் பார்க்கவும் விழையவில்லை. ஆனால் பதில் கூற வேண்டுமே. அவன் நினைவில் இருப்பது அந்த கோர முகம் மட்டுமே. நெற்றிப் பொட்டில் ஆணி அடித்ததுபோல் பதிந்திருந்தது. நினைவுகளைப் பிரட்டிப் போட்டாலும் மீண்டும் மீண்டும் அதே முகம். 

 

“என்ன ஆச்சு? இது ரொம்ப முக்கியமான பதில். கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லுங்க. அது அந்த பெண்ணோட செருப்பா இருக்க வாய்ப்பு இருக்கா? அதை எங்க தூக்கி எரிஞ்சீங்க. ஏனா அது இந்த வழக்கில் ஒரு முக்கியமான ஆதாரம்.”

 

மீண்டும் விழிகளை சுருக்கி சிந்தித்தான், இல்லை என்று தலையசைத்தான். “அது ஒரு ஆணோட செருப்பு மேம்” என்றான் திடமாக. 

 

காணாமல் போன பெண் கொலையுண்ட காரணம் என்னவாக இருக்கும். முருகன் தூக்கி எரிந்ததாக கூறிய செருப்பு அங்கு இல்லை. ஏதேனும் புதருக்குள் சிக்கியிருக்கும் என்று அவளே அனுமானம் செய்தாள். அதையும் தேடும் பணி நடந்தேறியது அவளின் கட்டளையில். பிணம் இருந்த நிலையைக் கண்டால் இறந்து பல நாட்கள் இருக்க வேண்டும். அவளுடைய காதலனைத் தேடினால் ஏதாவது துப்பு கிடைக்கும் என்று எண்ணி அவனைத் தேடும் பணியில் ஈடுபட்டால் அங்கும் தேக்கம். அவனும் காணவில்லை என்று வழக்கு பதிவாகியிருந்தது. எதற்கும் காரணம் தெரியவில்லை. 

 

அந்த வீட்டில் என்ன நிகழ்ந்ததென்று நிச்சயம் தெரிய வேண்டும். அது தெரிந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தீவிரமாக நம்பினாள். ஆனால் அந்த வீட்டில் நடந்தவைகளை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தெரிந்த ஒரே ஆள் நிரண்யாவாக இருக்கக்கூடும். ஆனால் அவள்தான் வாய் திறக்க முடியாது நிலையில் இருக்கிறாளே. இன்னொருவனும்  இருக்கிறான். ஆனால் அவனைக் கண்டறிந்தால் வழக்கு முடிந்துவிடும்.

 

 

கண்டறிவாளா நற்பவி?

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்