Loading

விட்டுக்கொடுப்பவன் இளைத்தவனல்ல!

மனவுறுதியில் சளைத்தவனுமல்ல!

 

சுய அமைதி பேணுபவன்

மனதின் மகத்துவம் அறிந்தவன்!

 

காணாமல் போன பெண், நிரண்யா, அந்த ஒருவன் மூவருக்கும் ஏதோ ஒரு இணைப்பு வரி இருக்கிறது என்று மட்டும் நற்பவியால் உணர முடிந்தது. 

 

முருகனிடம் விடைபெற்று தன் மேலதிகாரியைப் பார்க்கச் சென்றாள். இப்பொழுது அவளுக்கு திடமாக இரு ஆதாரம் இருந்தது அந்த காணாமல் போன பெண்ணின் வழக்கில். கிடைத்த ஆதாரமே அந்த பெண்ணின் உடல்தான். நேற்றுவரை அவளின் மேல் காய்ந்தவர், இன்று அமைதியாக அவளை அமர வைத்து உரையாடினார்.

 

“சாரி மிஸ் நற்பவி.. உங்களோட கருத்து சரியா இருக்கு. இறந்து போனது அந்த பெண். யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று அவர் வினவ, “நோ ஐடியா” என்றாள் நற்பவி.

 

“செத்துப்போன பொண்ணோட காதலன் தலைமறைவுன்னு சொன்னீங்களே. அவன் இதை செஞ்சிருப்பானோ?”

 

“இல்லை சார்.. அவன் செஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.”

 

“ஏன் அப்படி சொல்றீங்க?”

 

“நிச்சயம் அவனும் செத்துப் போயிருக்கணும். என்னோட கெஸ் கரெக்ட்னா அவன் தண்ணிக்குள்ள முழுகியிருக்கணும்.”

 

“எதை வச்சு அப்படி சொல்றீங்க?”

 

“கிடைச்ச டெட் பாடில இடுப்பில் கயிறு கட்டின மார்க் இருக்கு. அதனால கல்லைக் கட்டி ஏரியில் போட்டிருக்கணும். ஆனா ஏதோ சில காரணங்களால் கட்டு அவிழ்ந்து அந்த பெண்ணோட பிணம் மட்டும் கரை ஒதுங்கியிருக்கலாம். கரையில் உள்ள புதரில் சிக்கி நம்ம கண்களுக்குப் புலப்படாமல் இருந்திருக்கலாம்” என்று‌ அவள்‌ கூற, “ம்ம்ம்.. சரி.. அப்போ அந்த பையன்?” என்றார் அவர்.

 

“தண்ணீரில் ஒரு ஆண் செருப்பு மிதந்து வந்திருக்கு. அதை எடுத்து கரையில் தூரமா வீசி எரிஞ்சிருக்காரு முருகன். ஸ்பாட்ல எனக்கு அந்த செருப்பு கிடைக்கல. ஆனா தேட சொல்லிருக்கேன். அந்த செருப்பு ஏன் அந்த பையனோட செருப்பா இருக்கக்கூடாது” என்று அவள் வினவ, அவர் சற்று சிந்தனை வயப்பட்டார். 

 

“சரி.. அந்த ஏரியை அலசி ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கச் சொல்லுங்க” என்று அவளுக்குக் கட்டளையிட்டார். 

 

“வேற ஏதாவது அனுமானங்கள் இருக்கா நற்பவி. உங்களுக்கு உதவிக்கு யாராவது வேணுமா? கேஸ் ரொம்ப சீரியசா போகுது. சோ நீங்களும் கேர்ஃபுல்லா இருக்கணும்” என்று கூற அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

 

“இப்போதைக்கு யாரும் வேண்டாம் சார்” என்று‌ நற்பவி கூறி முடிக்க, அவரும் அதற்கு சம்மதித்தார். அவளிடம் அனுமானங்களுக்கா பஞ்சம். ஆனால் தனக்கே‌ புரியாத ஒன்றை அவள் எப்படி அவருக்கு விளக்குவாள். அவள் மனம் தீவிரமாக நம்புவதை சட்டம் நம்பாதே. ஆதாரம் வேண்டும் அனைத்திற்கும். குற்றம் சுமத்த, குற்றம் நிருபிக்கப்பட, தண்டனை வழங்க என்று ஒவ்வொன்றும் காட்சிகளின் வாயிலாகவே நிகழும்.

 

அதன்பிறகு அவரிடம் விடைபெற்றுக் சென்றாள் நற்பவி.

 

அவள் சென்றபின் அவரின் முகத்தில் தீவிர சிந்தனையின் சாயல். நெற்றியில் புருவம் சுருங்க, தன்னுடைய அலைபேசியை எடுத்தவர், யாருக்கோ அழைத்து, “அவ கண்டுபிடிச்சுடுவா” என்று கூறினார். பிறகு சில ஆலோசனைகள் வழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். 

 

அதேபோல் ஏரியை அலசி ஆராய உபகரணங்கள் அனைத்தும் எரிக்குச் சென்றது. அதற்கு முன் மீடியாவும் அங்கு இருந்தது. 

 

அந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்திருந்தாள் நற்பவி. ஒரு நாள் தீவிர தேடலின் பலனாக அவர்கள் தேடிய அந்த நபரின் உடல் அவர்களுக்குக் கிடைத்தது. 

 

நற்பவி சந்தேகப்பட்டது அனைத்தும் சரி. அவளின் கணிப்பைப் பொய்யாக்காமல் நிகழ்ந்த நிகழ்வில் கூடுதல் திருப்பமாக இன்னொரு பிணமும் கிடைத்தது. இந்த வழக்கு திகைப்புகள் நிறைந்த வழக்குபோல. திருப்பங்கள் இருக்கலாம். ஆனால் இப்படியும் திருப்பங்களா என்று அவள் மனத்திகைப்புக் கொண்டாள். ஏனெனில் மூன்றாவதாக கிடைத்தது நிரண்யாவின் குடியிருப்பின் வாட்ச்மேனுடையது.

 

இவளின் விசாரணை வட்டத்திற்குள் அடுத்து எடுத்து வர நினைத்த ஆள். அவன் யாரென்று கண்டறிய அவளுக்கு போதிய நேரம் இல்லை. அதற்குள் பல சிக்கல்களும் சச்சரவுகளும். எதிரியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாளோ என்று வருந்தினாள். கொத்தாக மூன்று கொலைகள். ஏன் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் காரணம் மிகப் பெரியதாக இருக்குமோ என்று தோன்றியது அவளுக்கு.

 

இவளின் அடுத்த நகர்வை எதிரி சரியாய் கணித்திருக்கிறான். அப்படியென்றால் அவளின் ஒவ்வொரு நகர்வையும் அவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறான். 

 

அவனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். மனதில் பொறி தட்டியது.‌ அடுத்து அவள் சேகரித்து வைத்திருந்தது நிரண்யாவின் எதிர்வீட்டின் உரிமையாளர். அவரைப் காப்பாற்ற வேண்டும் என்று தன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்தினாள்.

 

ஒன்று தான் தேடும் குற்றவாளி அவராக இருக்கக்கூடும். இல்லை அவரின் உயிர் பறிக்கப்படும். 

 

*********

குளிரூட்டியின் தயவால் சில்லென்று இருந்த அறையில் ஒருவன் சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தான். தலைமுடி அதிகமாக வளர்த்திருந்தான். அதை ஒரு‌ ரப்பர் பேண்டில் அடக்கிக் கட்டியிருந்தான். தீவிர சிந்தனையில் இருக்கும் ரேகை அவன் முகத்தில். 

 

பக்கத்தில் இருந்த அலைபேசியில் அலாரம் அடித்து அடித்து அடங்கியது. அவன் எடுப்பது போல் இல்லை.

 

“மிஸ்டர் மைத்ரேயன்.. யு ஹேவ் டு டேக் ரெஸ்ட் நௌ. ஆல் ரிமைண்டர்ஸ் ஆர் ஓவர். ப்ளீஸ் கோவாப்பரேட்” என்று இனிமையான கம்ப்யூட்டர் பெண்ணின் குரல் ஒலித்தது. அவன் அதனையும் பொருட்படுத்தாது சிந்திக்க, அலைபேசியில் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

 

“மிஸ்டர் மைத்ரேயன்.. திஸ் ஈஸ் யுவர் லிமிட். நீங்க எப்படி எங்க ரிமைண்டர்ஸை நிராகரிக்கலாம். நம்மளோட அக்ரிமெண்ட்க்கு இன்னும் வேல்யூ இருக்குன்னு நினைக்கிறேன்” என்று கூற, “ஓகே கூல்..” என்றான் மைத்ரேயன்.

 

“ஐ காண்ட் பீ கூல் மிஸ்டர் மைத்ரேயன். ஹவ் குட் யூ டூ திஸ் டூ அஸ்” என்று பொறிந்து தள்ளினான் அவன்.

 

“லிஸன் மிஸ்டர்.. ஐ அம் நாட் யுவர் ஸ்லேவ். நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் மில்லியன் கணக்கில் பணத்தை வாரி வழங்கியிருக்கேன். மனசுல அதை பதிய வச்சுட்டு அப்புறம் பேசுங்க” என்றான் திமிருடன்.

 

“பணம் கொடுத்தா என்ன வேணா செய்யலாமா? நீங்க எத்திக்ஸ் பாலோ பண்ணியே ஆகணும்” என்றான் அழுத்தமாக.

 

“வாட் எத்திக்ஸ்? நீங்க செய்ற வேலை மனித உரிமை மீறலில் சேர்க்கலாம். தெரியுமா?”

 

“அது உங்களுக்கும் தெரிஞ்சுதான் நீங்க எத்துக்கிட்டீங்க..”

 

“ஓகே.. நோ ஆர்கியூமெண்ட்ஸ். நீங்க போனை வைங்க. நான் ரெஸ்ட் எடுக்கச் போறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான், எதிரில் இருப்பவனின் பதிலுக்குப் காத்திராமல்.

 

அங்கிருந்த கட்டிலில் சென்று படுத்தான். மசாஜரை ஆன் செய்தான். அது நன்றாக மசாஜ் செய்ய விழிகள் தானாக மூடிக்கொண்டது. ஆழ்ந்த உறக்கம். 

 

மூளையில் உள்ள நியூரான்கள் ஒவ்வொன்றும் கதவடைத்து உறங்கியது. இனி எட்டு மணி நேரம் அவனை யாராலும் எழுப்ப முடியாது. எழுப்பவும் கூடாது. அது அவன் உடல் நிலைக்கு நல்லதும் அல்ல.

 

****

 

நிரண்யாவின் நிலை நாளுக்கு நாள் மேசமானது. காலில் செருப்புக்கூட இல்லாமல் வெகு தூரம் நடந்து சென்றுவிட்டாள். மீண்டும் அவளைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தான் கீதன். வீட்டைப் பூட்டி வைக்க, வீட்டிற்குள்ளே நடந்தாள். தனியே பேசினாள். எதிரில் யாரோ இருப்பதுபோல் பாவித்துக் கொண்டு உரையாடுவாள். கீதனும் அவளின் அன்னையும் கண்டும் காணாமல் இருக்க வேண்டிய சூழல்.

 

கீதன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளின் மனதை சமநிலைப் படுத்த முடியவில்லை. அவளின் அன்னையால் உண்மையில் பொறுக்க முடியவில்லை. 

 

“மாப்பிள்ளை.. ஊர்லேந்து சாமிய வர சொல்லிருக்கேன். இனி இவளை இப்படியே விட முடியாது. பைத்தியமா ஆயிட்டா. அந்த எதிர் வீட்டுக்காரி மாதிரி தற்கொலை செஞ்சு செத்துருவாளோன்னு வேற பயமா இருக்கு” என்று புலம்ப ஆரம்பித்தார்.

 

அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல் தலையை ஆட்டி வைத்தான். எதிலாவது அவளுக்கு குணமாகிவிடாதா என்ற ஏக்கம்தான். அடுத்த சில நாட்களில், நிரண்யாவின் அன்னைக் கூறிய சாமி வீட்டிற்கு வந்து இறங்கினார். பேய் ஓட்டுவதில் பெரும் புகழ் பெற்றவர் அவர். நிரண்யாவைப் பார்த்தவர், அவளிற்கு பேய் பிடித்திருக்கிறது என்று உறுதியாகக் கூறினார். அதன்பிறகு சில நாட்கள் ஏதோ பூஜை செய்ய வேண்டும் என்றும் அதற்கு கீதனும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறினார். கீதனிற்கு மனதில் பயம். எங்கே நிரண்யாவை அடித்துக் கொடுமைப் படுத்தி விடுவாரோ என்று. ஆனால் வெளியில் சொல்ல முடியவில்லை.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்