
சலனம்-29
நான் முழுதுமாய் சொல்லி முடித்ததும், இறுகிய முகத்துடன்,அங்கிருந்து நகர முயன்றாள் சமுத்ரா. அவள் என்ன நினைக்கிறாள்? என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.
கடந்தக் காலத்திற்கு, காலப்பயணம் மேற்கொண்டதைப் போல, சம்யூவின் ஞாபகங்கள் என் மனம் முழுதும் நிரம்பிக் கிடந்தது. அவள் பதிலேதும் சொல்லாமல் நகர்ந்ததில் எனக்குள் குழப்பம் குடிகொண்டது.
“சமுத்ரா!”
என நான் தயக்கமாய் விளிக்க, அறையை நோக்கி நடந்தவள், தலையை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள்.
“எதுவும் சொல்லவே இல்லையே?”
“என்ன சொல்லணும்? நான் எதாவது சொல்றதால், சம்யூ திரும்பி வந்துடப் போறாளா? இது நீ சொல்ற கதை தானே.. உனக்கு சாதகமா நல்லா கதை சொல்ற விக்ரம்!”
என திரும்பி நின்று என்னைப் பார்த்து அவள் சொன்னதும், அதிர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தேன்.
“இது கதை இல்லை!”
கோபம் மேலோங்கியக் குரலில் சொன்னேன் நான்.
“ஓ.. அப்போ நீ சொன்னது உண்மை. நீ சொல்ல சொல்ல கேட்காமல், சம்யூ போனதால் தான் அவளுக்கு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு.. அப்படித்தானே நீ நிரூபிக்க முயற்சிக்கிறே?”
அபாண்டமாய் என் மீது பழி சொன்னாள் சமுத்ரா.
“இல்லை சமுத்ரா! நான் அப்படி சொல்ல வரலை..!” என என் பக்க நியாயத்தை உணர்த்த முயன்றேன்.
“வேற என்ன சொல்ல வர்ர? புருஷன் பேச்சைக் கேட்டு அவள் வீட்டில் இருந்திருந்தால், அவள் உயிரோடு இருந்திருப்பாள்ன்னு நான் நம்பணும். அதுக்குத்தானே இந்த கதையெல்லாம் சொல்ற? எனக்கென்னவோ, அந்த ஆக்ஸிடென்ட்டுக்கே நீ தான் காரணம்ன்னு சந்தேகம் இருந்துச்சு. ஆனால் உன் சுயநலத்திற்காக சம்யூ உயிரோட இருக்கணும்ன்னு தான் நீ நினைப்ப. ஆனால் ஒருவேளை, உன் பேச்சை அவள் கேட்காமல் போனதால், சின்ன ஆக்ஸிடென்ட்டா செட் பண்ணினது, எதிர்பாராமல், பெருசா மாறிடுச்சா? என்னால் உன்னை நம்ப முடியலை விக்ரம்!”
என அவள் சொன்ன அந்த நொடி, இப்படியே செத்துப் போனால் என்ன? எனத் தோன்ற ஆரம்பித்திருந்தது.
என் மனைவியை நான் தான் கொன்றிருப்பேன் என சந்தேகப்படுமளவிற்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்..என நினைக்கையில், என்னை நினைத்து எனக்கே அருவருப்பாய் இருந்தது. நான் வாழ்ந்ததெல்லாம் ஒரு வாழ்க்கையா? என் மனமே என்னைக் கேள்வி கேட்டது. தன்னலமான வாழ்க்கை வாழ்ந்து அதற்கு உயிரோடு ஒருத்தியை பலி கொடுத்துவிட்டேன் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் என் உயிரைத் தின்றுக் கொண்டிருந்தது.
“அப்படி செய்யணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை சமுத்ரா. ஒரு உயிரோடு விளையாடும் அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை.!”
“ஏற்கனவே சம்யூவோட உயிரோடு விளையாடிட்டியே! இனிமே விளையாடுறதுக்கு என்ன இருக்கு? அவந்தி பிறக்கும் நேரத்தில் நீ பண்ணினதெல்லாம் என்ன? நிறை மாதமாய் இருக்கிற மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, துணைக்குக் கூட ஆளில்லாமல் நீ பண்ணினதுக்கு பேர், உயிரோட விளையாடுறது இல்லையா?! அதுவும் ஒரு உயிர் இல்லை, அவந்தியையும் சேர்த்து ரெண்டு உயிர்..” முகத்தில் அடித்தார் போல் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அமைதியாய் நின்றேன்.
நான் அன்று மட்டும் சம்யூவின் அழைப்பை ஏற்றிருந்தால், சம்யூ பட்ட வேதனைகள் இல்லாமல் செய்திருக்கலாம் தான். அவள் அன்று பட்ட வேதனை வலி எல்லாவற்றிற்கும் நான், நான் மட்டும் தான் காரணம். என்ன பதில் சொல்ல? பதில் சொல்லாமல் அமைதியாய் நிற்கத்தான் என்னால் முடிந்தது.
“உன்னால் பதில் பேச முடியாது விக்ரம்! ஏன்னா நீ பண்ணினது தப்புன்னு உன் மனசாட்சிக்கே தெரிஞ்சுருக்கு. இப்போ, அவந்தி அம்மா இல்லாமல் நிற்கிறதுக்கு நீ மட்டும் தான் காரணம் விக்ரம். உன் கூட வாழ்ந்த வாழ்க்கையில், சம்யூவிற்கு வாழணும்ங்கிற ஆசையே இல்லாமல் போய்டுச்சு. ஒரு அம்மாவா அவள் தன் குழந்தையை விட்டுட்டு போகணும்ன்னு நினைச்சிருக்க மாட்டா. அதையும் மீறி, அவளோட உயிர் போய்டுச்சுன்னா, அதுக்கு காரணம் நீ தான்.!”
என அவள் சொன்ன போதும் கூட, நான் பதில் ஏதும் பேசவே இல்லை. அவள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் தைரியம் என்னிடம் சுத்தமாய் இல்லை. அவள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களைத் தான் நான் எனக்குள் திரும்பத் திரும்ப கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை.
“போதும் சமுத்ரா! என்னால் முடியலை. நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும், விஷம் தோய்ந்த தேள் கொடுக்காய் என்னைப் பதம் பார்க்குது!”
“சம்யூவும் உன்கிட்டே கேட்டாளே.. போதும்ன்னு சொன்னாளே! நீ கேட்டியா? இப்போ நான் மட்டும் அமைதியாய் இருக்கணுமா? எனக்கும் தான் வலிக்குது விக்ரம். சம்யூவை நினைச்சு நினைச்சு, அவள் இனி திரும்பி வரப் போறதில்லைன்னு நினைச்சு நினைச்சு எனக்கு ரொம்ப வலிக்குது. உடல் வலிக்கு மருந்து போட்டுடலாம். மனவலிக்கு மருந்து போட முடியாது விக்ரம். நீ சம்யூவிற்கும் சரி, எனக்கும் சரி, வலியை மட்டும் தான் கொடுத்திருக்க! இப்படியொரு வாழ்க்கை அவந்திக்கு வேணவே வேணாம். ஸோ, அவள் என்னோட இருக்கிறது மட்டும் தான் நல்லது.!” அவள் குரலில் தெரிந்த தீர்க்கத்தில் நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் முடிவு தான் சரி என்பதைப் போல் உறுதியாய் நின்றாள்.
“நீ டெல்லி போகாமல் இங்கேயே இருக்கலாமே..?!”
கடைசியாய் ஒருமுறை கேட்டுப் பார்த்தேன். அவளிடம் கேட்பதற்கு என்னிடம் வேறு கேள்விகள் இல்லை. நான் கேட்ட கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அவள் முகம் எந்த உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கவில்லை.
சலனமில்லா நிதானமும், தெளிவும் அவள் முகத்தில் இருந்தது. அவள் ஏதோவொரு தெளிவான முடிவை எடுத்துவிட்டாள் என்பது, அவளின் நீலநிறக் கண்களின் தீர்க்கத்திலேயே எனக்கு தெளிவாய் புரிந்துவிட்டது.
“பாரஸைட்டாய்ட் வாஸ்ப் (parasitoid wasp) பத்தி கேள்விபட்டிருக்கியா விக்ரம்?” சம்மந்தமில்லாமல் அவள் pகேள்வி கேட்டதும், திருதிருவென விழித்தேன் நான்.
“பெண்கள் கூட்டுப்புழுவிலிருந்து வெளியே வந்து சிறகு விரிச்சு பறக்க நினைக்கிற வண்ணத்துப் பூச்சிகள். ஆனால், உன்னை மாதிரி ஆண்கள் எல்லாருமே பாரஸைட் வாஸ்ப் என்கிற அந்த குளவி மாதிரி.!”
“எனக்கு ஒண்ணுமே புரியலை சமுத்ரா! எதுக்காக சம்மந்தம் இல்லாமல் கேள்வி கேட்கிறே?”
“உனக்கு உன்னைத் தவிர எல்லாருமே சம்மந்தம் இல்லாமல் பேசற மாதிரி தான் இருக்கும் விக்ரம்.! நான் என்ன சொல்ல வர்ரேன்னு கூட, யோசிக்க மாட்டியா விக்ரம்?!” எனக் கேட்டவள்,
“பாரஸைட் வாஸ்ப் அப்படிங்கிற குளவி இருக்கே, அது தன் இனத்தைப் பெருக்கிகறதுக்காக, தன்னோட வயிற்றில் இருக்கிற முட்டைகளை, இலைகளை மட்டுமே சாப்பிட்டுட்டு, கூட்டுப்புழு பருவத்திற்கு முன்னேறிட்டு இருக்கிற கம்பளிப் பூச்சியோட உடலில் செலுத்திடும். அந்தக் குளவியோட முட்டைகள், கம்பளிப் பூச்சியோட வயிற்றுக்குள்ளே புழுவா உருமாற்றம் பெற்று, கம்பளிப் பூச்சியோட வயிற்றைக் கிழிச்சுட்டு வெளியே வரும். இப்போ இந்த முட்டையிலிருந்து வெளி வந்த லார்வாக்கள், கம்பளிப்புழுவோடு உடலில் செலுத்தின சில இரசாயனங்களால், தான் ஒரு பட்டாம்பூச்சியாய் பறக்கணும்ங்கிறதை மறந்து, அந்தப் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறுவதற்கு உதவி பண்ணிட்டு இருக்குமாம். கடைசியில், அந்தப் புழுக்கள் குளவியாய் மாறி பறந்துப் போகும் போது, இந்தக் கம்பளிப் புழு தன் உயிரை விட்டுருக்கும். இப்போ புரியுதா? நான் ஏன் ஆண்களை அந்தக் குளவிகள்ன்னு சொன்னேன்னு..?” என அவள் கேட்ட கேள்விக்கு என் தலை ஆமென அசைந்தது.
நிஜமாகவே ஆண்கள் அந்தக் கொடூரமானக் குளவியைப் போலத்தான். பெண்களுக்கு கூட்டுப்புழு பருவம் என்பது அவர்களின் கல்வி மற்றும் தொழில். ஆனால் திருமணம் தான் உனக்கான விடுதலை. அங்கேதான் உன்னால் சிறகை விரித்துப் பறக்க முடியும். என்ற மாய வித்தைகளைக் காட்டி, சிறகு விரித்துப் பறக்க வேண்டியப் பெண்களை அந்தக் கம்பளிப் புழு பட்டாம்பூச்சியாய் மாற மறந்ததைப் போல், கூட்டுப்புழுவாகவே தக்க வைத்துக்கொள்கிறோம். சிறகை விரித்துவிட்டால் பறந்துவிடுவாளே? என்ற பயமும் கூட அதற்குக் காரணம்.
சம்யூவின் வாழ்க்கைக் கூட அப்படித்தான். அவள் என்னைத் தாண்டி சென்றிருந்தால், சிறகை விரித்துப் பறந்திருப்பாளோ என்னவோ? ஆனால், என்னுடனான திருமணம் அவளின் இலட்சியங்களை மறக்க வைத்து மொத்தமாய் முடக்கிப் போட்டதென்னவோ நிஜம்.
சமுத்ரா சொன்ன உதாரணத்தில் இருந்தே அவள் என்ன முடிவெடுத்திருக்கிறாள்? என்பது தெள்ளத் தெளிவாகவே எனக்குப் புரிந்தது. இதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கக் கூடாதென முடிவு செய்துக்கொண்டேன்.
எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவந்தியின் எதிர்காலம் என் கண் முன்னே தோன்ற, என்னால் அவளிடம், எதுவும் கேட்கவோ பேசவோ முடியவில்லை. என் சுயநலத்தை விட, அவந்தியின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியமாகப்பட்டது.
********
அடுத்த சில நாட்களின் பின், நான் வரவே கூடாதென்று நினைத்துக் கொண்டிருந்தா அந்த நாளும் வந்தது.
சமுத்ரா பயணப் பொதிகளை தயாராய் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னதான் மனதளவில் என்னை நானே தயார்படுத்திக் கொண்டிருந்தாலும், மனம் நிரம்பவும் வலித்தது. கண்கள் கலங்கியது. ஆனாலும் என் கலக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளக் கூடாதென்பதில் நான் அத்தனை உறுதியாய் இருந்தேன். ‘அவள் எதிர்காலத்திற்காய் நான் இதை செய்தே தீரவேண்டும்!’ எனக்குள் நானே மந்திரம் போல் மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டேன்.
என் கண்கள் காலை நீட்டி அமர்ந்து பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த என் மகள் மீது பதிந்தது. அவளைத் தூக்கி, இறுக அணைத்து அவளின் பட்டுக் கன்னங்களில் முத்தம் பதிக்க என் மனம் ஏக்கம் கொண்டது. ஆனால் நான் கொஞ்சப் போய், அப்பா என அழைத்து என்னோடு ஒட்டிக்கொண்டால்? பயமும் கூடவே முளைத்தது. அவளின் எதிர்காலத்தை வலியப் போய் நானே பாழ்படுத்தியதைப் போல் ஆகிவிடுமோ? என்ற பயத்தில், என் உதிரத்தில் உதித்த மகளை விட்டு விலகி நின்றேன். அவளை அணைக்கத் துடித்தக் கரங்களை முயன்றூ கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை உள்ளுக்குள் மறைத்த பொம்மையாய் அமர்ந்திருந்தேன்.
சமுத்ரா தன் பயணப்பொதிகளை எல்லாம் தயார் செய்துவிட்டு, அவந்திகாவின் அருகில் வந்தாள். குழந்தையைக் குளிப்பாட்டி உடை மாற்றினாள். முகம் மறைத்துக் கிடந்தக் கூந்தலை மொத்தமாய் அள்ளி போனிடெய்லில் அடக்கினாள். குதிரைவாலின் உச்சியில் இளஞ்சிவப்பு நிற செயற்கை ரோஜா பூத்திருக்க, முன் பற்கள் இரண்டையும் காட்டி என்னைப் பார்த்துச் சிரித்தாள் அவந்திகா. வெறுமனே அவளைப் பார்த்து புன்னகை சிந்தினேன். என் உதடுகள் வெளியே சிரித்துக்கொண்டிருக்க, உள்ளுக்குள் என் மனம் கதறி அழுதுக்கொண்டிருந்தது.
எட்ட நின்று என் மகளை வேடிக்கைப் பார்க்கும், நிலைக்கு விதி என்னைக் கொண்டு வந்து நிறுத்திய விதியை நினைத்து நொந்துக்கொண்டேன். துரிதமாய் கிளம்பி தன் பயணப் பொதிகளை ஒருகரத்திலும், குழந்தையை மறு கரத்திலும் துக்கிக்கொண்டவள்,
“விக்ரம்! கொஞ்சம் ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ண முடியுமா?”
எனக் கேட்டாள். நான் அவள் என்ன சொல்கிறாள்? எனப் புரியாமல், விழித்துக்கொண்டு நிற்க,
“கேப் புக் பண்ணியிருந்தேன். லாஸ்ட் மினிட்டில் கேன்சல் ஆகிடுச்சு!”
அவள் சொன்னதும், புரிந்தது என்பதைப் போல் தலையை அசைத்துவிட்டு, அவள் கரத்திலிருந்த பயணப்பொதியை வாங்கிக்கொண்டு, மின்தூக்கியை நோக்கிப் போனேன். என் மகளுடனான கடைசிப் பயணம்.. மனம் சொல்ல முடியாத அளவிற்கு வலித்தது. வெறும் ஒருவருடம் முன் பிறந்த என் மகளைப் பிரியும் போது எனக்கு இத்தனை வலிக்கிறதே.. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடமாய் வளர்த்து திருமணத்திற்காக பெண்ணைப் பிரியும் தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? திடீரென எனக்குள் கேள்வி எழுந்தது.என் தங்கை கவிதாவின் திருமணத்தின் போது, என் தந்தை கண்கலங்கி நின்றது என் மனக்கண்ணில் மின்னலாய் வந்து போனது. எப்போதுமே ஒரு அப்பா அப்பா தான். என் தந்தையே கண்கலங்கி நின்றிருக்கிறார் என்றால், அவள் என் தங்கையின் மீது வைத்திருந்த பாசம் எத்தகையது? என்பதை என்னால் உணர முடிந்தது.
மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும், யோசனைகளோடு நான் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருக்க, தாயும் மகளும் பின்னால் அமர்ந்தபடி, புரியாத பாஷையில் தங்களுக்குள் ஏதோ கதைத்தபடி வந்தனர். குழந்தையின் புரியாத மழலை மொழியும், எனக்கு இதமாக இருந்தது. என் செவிக்குள் விழும், ஒவ்வொரு வார்த்தையையும் சிணுங்கலையும் என் மனப்பெட்டகத்தில் பொக்கிஷமாய் சேர்த்து வைத்துக்கொண்டேன். இனி என் காலத்தை தள்ள, நினைவுகள் தானே உந்து சக்தி.
எப்படி சம்யூவின் நினைவுகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனோ, அதே போல், அவந்தியின் நினைவுகளோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். வெறும் நினைவுகளோடு வாழ்வதென்பது நரகத்தை விடக் கொடியது தான். ஆனால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. இந்தப் பிறவியில் எனக்கு விதித்தது இது தான் என மனதைத் தேற்றிக்கொண்டேன். கையில் கிடைத்த சொர்க்கத்தை கால் எட்டி உதைத்த எனக்கு, தனிமையில் காலம் தள்ளுவதை விட, ஆகப்பெரும் தண்டனை வேறெதுவும் இருந்துவிடப் போவதில்லை. காலத்தின் முன் குற்றவாளியாய் கைக்கட்டி நின்று, எனக்கான தண்டனையை புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராகிக்கொண்டிருந்தேன்.
சென்னையின் பளபளப்பான தார்ச்சாலையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தேன். தான் என்னதான் வாகனத்தை மெதுவாகச் செலுத்தினாலும், மீனம்பாக்கம் விமானநிலையம் சீக்கிரமே வந்திருந்தது. விமானநிலையத்தில், உரிய இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே செல்வதற்கான அனுமதிச் சீட்டையும் பெற்றுக்கொண்டேன்.
“எனக்குப் போகத் தெரியும் விக்ரம்! நீ உள்ளே வர வேண்டிய அவசியம் இல்லை!” அவள் வார்த்தைகள் என் செவிக்குள் விழுந்தாலும், நான் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.
என்னைப் பொருத்தவரை என் மகளுடன் நான் செலவழிக்கும் கடைசி மணித்துளிகள் எனக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவளின் முகம்பார்த்து முத்தமிட்டு விடைபெறுவதற்குத் தான் எனக்குக் கொடுப்பினை இல்லை. ஆனால் எட்ட நின்றாவது அவளைப் பார்த்துக்கொண்டு நின்றுவிடலாம். என்ற எண்ணம் தான் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
சமுத்ரா சொன்னதையும் காதில் வாங்காது, டொமஸ்ட்டிக் டெர்மினல் பக்கமாக அவளை அழைத்துச் சென்றேன். சரியாக இன்னும் விமானம் புறப்பட ஒருமணி நேரங்கள் இருந்தது. அவள் தன் பயணப் பொதிகளை சோதனைகளை முடித்துவிட்டு, அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கைப்பையை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, குழந்தையோடு என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
இன்னும் சில நிமிடங்களில், விமானத்தில் போர்ட் செய்வதற்கான அழைப்பு வந்துவிடும். என் மகள் என் கண்ணை விட்டு மறைந்துப் போகப் போகிறாள். என நினைக்கையிலே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
ஆனாலும் வெளியே காட்டாமல், உணர்ச்சித் துடைத்த புன்னகையுடன் என் மகளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். நான் ஏற்கனவே எதிர்பார்த்த அந்த நொடியும் வந்தது.
அறிவிப்பு வந்ததும், குழந்தையைத் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றாள் சமுத்ரா. என் மனதிற்குள் அடுத்தடுத்த பூகம்பங்கள் நிகழ, கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தபடியே நின்றேன்.
“அப்போ நாங்க கிளம்பறோம் விக்ரம்.! டேக் கேர்.. எங்களுக்காக உள்ளே வந்ததுக்கு தேங்க்ஸ்..!” என சமுத்ரா சொல்ல பதில் பேசாது நின்றேன்.
“தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் சமுத்ரா! என் குழந்தைக்காக நீ இத்தனையும் பண்ணுறதைப் பார்க்கும் போது, என் பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு தெரியுது. எல்லாவற்றிற்கும் மேலே உன் மேல் எனக்கு நம்பிக்கையும் இருக்கு. நான் சம்யூகிட்டே கூட, மனதார மன்னிப்பு கேட்டதில்லை. இப்போ உன்கிட்டே கேட்கிறேன். என்னை மன்னிச்சுடு சமுத்ரா! நான் பண்ணினதுக்கெல்லாம் உன் காலில் விழுந்தால் கூட பத்தாதுதான். உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன். முக்கியமா, என் சுயநலத்திற்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டு, ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன்.! சம்யூவிற்கும், உனக்கும் சேர்த்தே என்னை மன்னிச்சுடு சமுத்ரா! அடுத்தமுறை சென்னை வரும் போது, அவந்திக்கு அப்பா மட்டுமில்லை, உனக்கு ஒரு நண்பனும் இங்கே இருக்கான்னு மறந்துடாதே..! ஹேப்பி போன் வாயஜ்..!” எனச் சொல்லிவிட்டு அவள் கரம் பிடித்துக்கொண்டேன்.
என்னதான் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அழுகையை நான் மறைத்தாலும்,என் தொண்டைக்கமறல் என் நிலையை தெள்ளத்தெளிவாய் படம் பிடித்துக் காட்டியிருந்தது.
இதற்குமேல் இங்கே நின்றால், அழுதுவிடுவேன் என்ற அச்சத்தில், கையை ஆட்டி விடைபெற்றுவிட்டு, நான்கே நான்கு அடிகள் தான் முன்னால் நடந்தேன். அதற்குள்ளாகவே
“ப்பா!”
என்ற என் மகளின் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.
“அப்பா!” என்ற ஒற்றை விளிப்பு, என்னை உலகம் மறந்து ஸ்தம்பித்து நிற்க வைத்தது. கண்களில் நீர் குளம் கட்டியது.
அழக்கூடாதென்ற என் மன உறுதியையும் மீறி கண்ணீர் வரப்பார்த்தது. ஆனாலும் முயன்று சமாளித்து கண்ணீரை மறைத்துப் புன்னகையுடன் என் மகளை நோக்கித் திரும்பினேன்.
“ப்பா! வா!” என்ற அடுத்த விளிப்பில் மொத்தமாய் உடைந்து, ஓடிச்சென்று என் குழந்தையைக் கரத்தினில் தூக்கியிருந்தேன். அவளின் பட்டுக் கன்னங்களில் முத்தமிட்டு, “அப்பாதான்டா! நான் உனக்கு அப்பா தான்!” என்றபடி என் மகளை இறுக அணைத்துக் கொண்டேன்.
அவளை அப்படியே என்னோடு அழைத்துப் போய்விடலாமா? என பரபத்த மனதைக் கடினப்பட்டு அடக்கினேன். என் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு, என் தோள்வளைவில் முகம் புதைத்திருந்த மகளை, என்னிடமிருந்து பிரித்தெடுத்து, சமுத்ராவின் கரத்தினில் ஒப்படைத்தேன்.
மனம் ஆயிரம் அம்புகளால் ஒருசேர தாக்குவது போல் வலித்தது. ஆனாலும் வலியைத் தாங்கிக் கொண்டு, நின்றேன். என் மகளின் வளமான எதிர்காலத்தை விட, இந்த வலிகள் எனக்கொன்றும் பெரிதல்ல.
“அவிம்மா! நீங்க அம்மாவோட போங்க! அப்பா நாளைக்கு வர்ரேன்!”
என் குழந்தைத்தைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவளோ, புரிந்தும் புரியாமலும், தலையை இடவலமாய் அசைத்து, என்னை நோக்கிக் கரம் நீட்டினாள். அவள் என்னை நோக்கி கரம் நீட்டிய அந்த நொடியில், என் ஜென்ம சாபங்கள் என்னை விட்டு விலகியதைப் போன்றொரு உணர்வு எனக்குள். எனக்கென்று யார் இருக்கிறார்கள்? நான் யாருக்காக வாழ வேண்டும்? குழந்தை மட்டும் இல்லையென்றால், சம்யூவோடு போய்ச் சேர்ந்திருக்கலாமே? என நான் யோசித்த பொழுதுகளை, பொய்யாக்கி, ‘உனக்காக நான் இருக்கிறேன்.’ எனச் சொல்லும் விதமாய், என்னை நோக்கிக் கரம் நீட்டினாள் அவந்திகா.
என்னதான் மூச்சுக்கு முந்நூறூ முறைகள், நான் தான் அவந்தியின் அப்பா எனச் சொல்லிக்கொண்டாலும், முதன்முறையாய் அதை நான் உணர்ந்தத் தருணம் இன்று தான். நான் இந்த உலகில் வாழ்வதற்கான காரணம் என் மகள். இனிமேல் நான் வாழப்போகும் வாழ்க்கைக்குக் காரணமும் என் மகள் மட்டும் தான்.
அவளுக்காக, அவளின் எதிர்காலத்திற்காக நான் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். இப்போது அவளை சமுத்ராவோடு அனுப்புவது மட்டும் தான்.
“அப்பா சாக்கி வாங்கிட்டு வர்ரேன். நீங்க அம்மா கூடப் போங்க! அப்பா நிறைய சாக்கி, பொம்மை எல்லாம் வாங்கிட்டு சீக்கிரம் வந்துடுவேன்.!” என நான் சொன்னதும், குழந்தையும் கையை அகல விரித்து நிறைய வாங்கி வரும்படி சொன்னாள்.
வெறுமனே தலையை அசைத்து சம்மதம் சொல்லிவிட்டு,
“சமி! குழந்தையைப் பார்த்துக்கோ!” எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்திருந்தேன். குழந்தை என்னை நோக்கிக் கையை நீட்டிய காட்சியே எனக்குள் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.
‘நீ வருவாய் என எதிர்பார்த்துக் கொண்டே இருப்பாளே? குழந்தையை இப்படி ஏமாற்றிவிட்டாயே..?’ என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்டது.
என் மகள் என்னை ஏமாற்றுக்காரனாய் நினைத்துவிட்டுப் போகட்டும். அப்பா என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லாமலே போகட்டும். அப்பா என்கிற உறவே இல்லை என்கிற நிலை வந்தாலும் கூட, அவள் என் மகள் தானே? அதை யாராலும் மாற்ற முடியாது தானே? அப்படியிருக்கையில், இந்தப் பிரிவாலும், ஏமாற்றத்தாலும், எங்கள் உறவு இல்லாமல் போகப் போவதில்லை. சம்யூவிற்கு நல்ல கணவனாய் இருக்க முடியாத என்னால், அவந்திக்கு நல்ல தகப்பனாய் இருக்க முடியுமா? என்றால் என் பதில் முடியாது தான். சமுத்ரா வருவதற்கும், வந்த பின்பும், என் மகளிடம் ஏற்பட்ட மாறுதல்களை நான் பார்த்துக்கொண்டு தானே இருந்தேன். தாயாய், தந்தையாய் என் மகளை சமுத்ரா பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதோடு கூட, ஒரு பெண்குழந்தை தாயிடம் வளர்வது தான் நல்லது. எந்த ஜென்மத்து கர்ம பலனோ, என் மகளுக்கு இரண்டாம் தாயாய் சமுத்ரா கிடைத்திருக்கிறாள். பெறாத மகளாகவே இருந்தாலும், சமுத்ராவிடமிருந்து அவந்தியைப் பிரித்துவிடக் கூடாதென்பதில் மட்டும் உறுதியாய் இருந்தேன்.
நீங்கள் கேட்கலாம், திடீரென எனக்கெப்படி இப்படியொரு ஞானோதயம் வந்ததென்று? ஒரு குழந்தையின் தகப்பனாய் யோசிக்கையில் எல்லா அப்பாக்களும் சுயநலவாதிகள் தான். நானும் அப்படித்தான். என் மகள் குளவியின் முட்டையைச் சுமக்கும் கம்பளிப்பூச்சியாய் ஓரிடத்தில் தேங்கி நின்றுவிடக் கூடாது. என் மகள் வண்ணச்சிறகை விரித்துப் பறந்து வானம் தொடவேண்டும். என்னுடன் என் மகள் இருந்தால், கண்டிப்பாய் குளவியின் முட்டைகளைச் சுமக்கும் கம்பளிப்பூச்சியின் நிலையில் தான் இருப்பாள். அவள் தொடாத எல்லைகளைத் தொட்டு, என்னைப் பார்க்கத் திரும்பி வரும் வரை, அதே நேசத்தோடு அவளின் அப்பாவாய் அவளுக்காய் நான் காத்திருப்பேன்.
தீர்க்கமான முடிவெடுத்து திரும்பிப் பார்க்காமல் நடந்தவன், அவள் கண்ணுக்கு நான் தெரியமாட்டேன் என்ற அளவிற்கு நகர்ந்து வந்தப் பின் திரும்பிப் பார்த்தேன். மங்கலான உருவமாய், என் மகளின் உருவமும், சமுத்ராவின் உருவமும் தெரிந்தது. அந்த தெளிவில்லாத காட்சியைக் கண்களில் நிரப்பிக்கொண்டு, நிதானமாய் நடந்த என் கண்களில் ஈரம் துளிர்த்தது. இனி என் மகளைப் பார்க்கவே முடியாதென்ற துயரத்தில் கனத்த மனதுடன், வீடு வந்து சேர்ந்தேன்.
வீடு வெறுமையாய் காட்சியளித்தது. என் மகள் வைத்து விளையாடும் பொம்மைகள் என்னைப் பார்த்துக் கேலியாய் சிரித்தது.
மீண்டும் இந்த நிசப்தம் என்னை உயிரோடு விழுங்கத் துவங்கியது. தோள் சாய்வதற்குக் கூட ஆளில்லாமல், தனிமையில் வாழும் வாழ்வு எத்தனை பெரிய சாபம் என கடிகார முள்ளில் நகரும், ஒவ்வொரு நொடியும் எனக்கு உணர்த்தியது. காதலெனும் பேரன்பைக் கொண்டு என் வாழ்க்கைக்குள் வந்த மனைவியை, சுயநலம் என்ற சலனத்தால், இழந்துவிட்டு தன்னந்தனியாய் நிற்கிறேன். தயவு செய்து நீங்கள் என்னைப் போன்றதொரு தவறை தவறியும் செய்துவிடாதீர்கள்.. நம் வாழ்க்கைக்குள் வரும் ஒவ்வொருவரும் வரம் என்பதை உணருங்கள். அவர்களுக்கு மதிப்பளியுங்கள். வாழ்வில் வலியக் கிடைக்கும் வரங்களைக் கொண்டாடத் தவறிவிட்டு என்னைப் போல், தனித்து நின்றுவிடாதீர்கள். தனிமை நரகத்தை விடக் கொடுமையானது.
நீங்கள் உயிருக்கு உயிராய் விரும்பும் உங்கள் இணையை பறக்க அனுமதியுங்கள். அவர்கள் பறக்கட்டுமே.. பட்டாம்பூச்சியாய் வண்ணச் சிறகை விரித்து வானம் தொட்டு வரட்டுமே..! அவர்களின் எல்லை அவர்களுக்குத் தெரியும். மீண்டும் உங்களிடமே திரும்புவார்கள் சந்தேகப்படாமல் காத்திருங்கள். நீங்கள் அவர்கள் பறக்க அனுமதியளித்தால், உங்கள் சந்ததிகளும் வண்ணத்துப்பூச்சிகளாகவே சிறகை விரித்துப் பறப்பார்கள். உங்கள் சந்ததி வண்ணத்துப் பூச்சியாக இருக்க வேண்டுமா? இல்லை குளவியா? நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
“இதைச் சொல்ல நீ யார்?” கேள்வி கேட்கலாம் தான். அனுபவித்து உணர்ந்ததைத் தான் சொல்கிறேன். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பமே..
யாருமில்லாத நிசப்தமான சூழலில் தலையை வலிக்க, சுவற்றில் மாட்டியிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்.
“பிரபல இயக்குநரின் மனைவியும் நடிகையுமான சம்யுக்தா சமீபத்தில், விபத்தில் மரணமடைந்த நிலையில், சம்யுக்தாவின் உருவத்தில் வந்திருக்கும் நபர் யார்? இயக்குநரின் மனைவியின் இறப்பில் உள்ள மர்மம் என்ன? ஒருவேளை அவர் விபத்தில் மரணமடைந்ததாகச் சொன்ன தகவல் பொய்யா?.காத்திருங்கள் இடைவேளைக்குப் பிறகு..” என என் வாழ்க்கையை கன்டென்டாக மாற்றி, பிரபல செய்தித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இப்படித்தான். ஒரு தனிமனிதனின் வாழ்க்கை நிகழ்வுகள், அவனுக்கு நெருங்கியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு செய்தியோ தகவலோ மட்டும் தான்.
இதையெல்லாம் நான் கண்டுக்கொள்ளப் போவதில்லை. கண்கள் மூடி மெத்திருக்கையில் பின்னுக்கு சாய்ந்தேன். கண்களுக்குள் சம்யுக்தா வசீகரமாய்ச் சிரித்தாள். நிஜத்தில் அவளோடு வாழ முடியாத வாழ்க்கையைக் கனவில் அவளோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் கனவுலகில், அவந்தியையும் சேர்த்து எங்களுக்கு மூன்று குழந்தைகள். என்னை இப்படியே விட்டுவிடுங்கள், நான் கனவிலாவது அவளோடு வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இத்தனை நேரமாய் என் கதையைப் பொறுமையாய்க் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகளைச் சமர்ப்பித்துவிட்டு உங்கள் விக்ரமாகவே விடைபெறுகிறேன்.
“ஒரு பெண் என்றால் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று இந்த உலகம் வகுத்து வைத்த நியதிகளுக்குள் பொருந்தியே போகாத பெண் நீயடி..!
நிர்ணயித்த சட்டகங்களுக்குள் சிக்கிக்கொள்ள புகைப்படமா நீ? உலகுலவி நீ..! உன்னை நிறுத்துதல் ஆகாது.. சேர்ந்து உலாவர வேண்டுமானால் செய்யலாம்..!
இலக்கின்றி பறக்கும் பறவையா நீ? பறவையின் வானமே நீதானடி! அண்ணாந்து பார்த்தால் நீலமாகப் பரந்து விரிந்துக்கிடக்கும் பிரம்மாண்டம் உன்னை எது கட்டுப்படுத்தும்?
கட்டுப்படுத்த எதனால் தான் ஆகும்? உன் நீலத்தை கொஞ்சம் எடுத்து பூசிக்கொள்ள வேண்டுமானால் செய்யலாம்..!
காணும் இடங்களில் எல்லாம் தன் விஸ்தீரணத்தைப் பரப்பும் காட்டு மலர் உன்னை எந்தத் தொட்டியில் இட்டு வளர்க்க முடியும்? உன் மலர்க்காட்டுக்குள் தொலைந்து, உன் வாசனையில் லயித்துக் கிடக்க வேண்டுமானால் செய்யலாம்..!
வாழி நீ..!”
(யாத்திரி)
அடுத்த அத்தியாயத்துடன் கதை நிறைவுறும் மக்களே! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ரம் நல்ல முடிவு செய்தான். பொண்ணை நினைத்து.
உண்மை தான் கலை மா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤