Loading

பிறை 7

 

சர்வஜனன் மற்றும் சஞ்சீவனி இருவரும் பதட்ட மனநிலையில் இருக்க, அவர்களை நோக்கி வந்த சத்தத்தை முதலில் கவனிக்கவில்லை.

 

அந்த சத்தம் அவர்களை நெருங்கி வரும் வேளையில் தான் அதை கவனித்தான் சர்வஜனன். அது ஒரு அழுத்தமான காலடி சத்தம். நெருங்கி வர வர சத்தம் அதிகமாக கேட்க, அதற்கு மறுமொழியாக சஞ்சீவனியின் இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

அவளை திரும்பிப் பார்த்தவன், கையை வாயின் மீது வைத்து, “உஷ்!” என்றவன், அவளை சுற்றி கையை போட்டு ஆசுவாசப்படுத்தினான்.

 

அவர்கள் இருவரும் பெரிய பாறைக்கு பின்னே இருக்க, அந்த பாறைக்கு முன் ஐந்தடிக்கு புதர் மண்டிக்கிடந்தது.

 

அந்த சத்தம் இப்போது வெகு அருகில் கேட்க, இருவரும் கண்கள் மட்டும் பாறைக்கு மேலே தெரியுமாறு எட்டிப் பார்த்தனர்.

 

முதலில் அவர்களின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த புதர் மறுபக்கத்தை மறைத்திருந்தது.

 

ஆனால், திடீரென்று ஒரு உறுமல் சத்தமும் அதை தொடர்ந்து ஒரு மனித தலையும் அந்த புதருக்கு மேலே தெரிய, இருவருமே அந்த நொடி அதிர்ந்து தான் போயினர்.

 

சஞ்சீவனியோ, உறுமல் சத்தத்திற்கே பயந்திருந்தவள், எங்கிருந்து முளைத்தது என்று தெரியாத வண்ணம் சட்டென்று தென்பட்ட மனித தலையைக் கண்டு கத்த வாயை திறக்க, அவளை சரியாக கணித்தவனாக, அவளின் வாயை மூடியிருந்தான் சர்வஜனன்.

 

அந்த மர்ம மனிதன் அங்கிருந்து சென்று இரண்டு நிமிடங்கள் கழித்து தான் இருவரும் சுயத்தை அடைந்திருந்தனர். அப்போது தான் அவளின் வாயிலிருந்தும் கையை எடுத்திருந்தான் அவன்.

 

உடனே, “அது… அவன்…” என்று சஞ்சீவனி பதட்டத்தில் திக்கியபடி பேச, “உஷ்! இங்க எதுவும் பேச வேண்டாம். முதல்ல இங்க இருந்து கிளம்புவோம்.” என்று அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

முக்கிய சாலை வரும் வரையிலும் இருவரும் வாய் திறந்து பேசிக் கொள்ளவில்லை. ஆனால், இருவரின் மனமும் பல்வேறு கேள்விகளால் நிரம்பியிருந்தன.

 

சஞ்சீவனி திக்பிரம்மை பிடித்ததை போலிருப்பதைக் கண்ட சர்வஜனன், அவளை உசுப்பி, “இந்த நேரத்துல நீ தனியா போக வேண்டாம். நானே டிராப் பண்றேன்.” என்றான்.

 

“இல்ல, நான் ஸ்கூட்டில போயிடுவேன்.” என்று சுற்றிலும் அவளின் வாகனத்தை தேட, அவள் கரத்தை பிடித்து தன்னைப் பார்க்கச் செய்தவன், “நீ இருக்க நிலைமைல உன்னை தனியா விட்டு, உனக்கு என்னாச்சுன்னு என்னால யோசிச்சுட்டு இருக்க முடியாது. இப்போ நீ என்கூட வர. புரியுதா?” என்று அவன் கூற, அவனின் கண்களிலேயே பார்வையை பதித்திருந்தவளின் தலை தன்னால் அசைந்தது.

 

அவனின் மகிழுந்தில் அவனருகே அமர்ந்திருந்தாலும், அவள் மனம் முழுவதும் சற்று முன்னர் பார்த்ததிலேயே நிலைத்திருந்தது. அவள் மட்டுமல்ல, அவனுமே அதையே நினைத்திருத்தான்.

 

அப்போது அவன் கவனத்தை ஈர்த்தது என்னவோ, சாலையின் மத்தியில் இருந்த உடல் தான்.

 

ஆம், அவன் மகிழுந்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அது ஒரு மனித உடல் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், என்ன நிலையில் இருக்கிறது என்பது தான் தெரியவில்லை.

 

அவன் மகிழுந்தை நிறுத்த, அப்போது தான் அவள் தன் நினைவிலிருந்து வெளிவந்தாள்.

 

‘என்னாச்சு’ என்பது போல் அவனை பார்த்து வைக்க, “உள்ளேயே இரு.” என்று கூறிவிட்டு அவன் இறங்கினான்.

 

அவன் கூறுவதை ஒரு முறை தான் கேட்பதாக எண்ணியிருந்தாள் போலும். இம்முறை அவன் பின்னிலேயே இறங்கியிருந்தாள்.

 

அவளை முறைத்துவிட்டு, கவிழ்ந்திருந்த உடல் அருகே சென்று திருப்பி பார்க்க, அது ஒரு பெண் என்பது தெரிந்தது. மேலும், உடலில் ஆங்காங்கு கீறல்களும், கையில் கடிபட்ட தடமும் இருப்பதைக் கண்டான்.

 

அத்தனை நேரம் சற்று விலகியே நின்றிருந்த சஞ்சீவனி, அந்த பெண்ணின் உடலை தழுவியிருந்த மேல் உடுப்பில் ‘சஷா கஃபே’ என்ற எழுத்துக்களை பார்த்ததும் பதட்டத்துடன் அருகே வந்தாள்.

 

அங்கு காயங்கள் பலவற்றை உடலில் தாங்கி மயங்கியிருந்த பெண்ணைக் கண்டு, “ஸ்டெஃபி…” என்று கத்தினாள்.

 

அவளின் கதறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த சர்வஜனன், பின் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, “வனி பிளீஸ், இப்போ உன் அழுகைக்கான நேரம் இல்ல. இவங்களை சீக்கிரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். எவ்ளோ சீக்கிரம் போறோமோ, அவ்ளோ சீக்கிரம் இவங்களை காப்பாத்தலாம். நாமளும் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது.” என்று பலவற்றை கூறி ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தினான்.

 

பின் நேரத்தை விரயமாக்காமல், உடனே ஸ்டெஃபியை அவளின் துணை கொண்டு மகிழுந்தில் ஏற்றியவன், வாகனத்தையும் கிளப்பியபடி, தனக்கு தெரிந்த மருத்துவருக்கு தொடர்பு கொண்டு பேசினான்.

 

“ஹலோ ஆலிஸ், ஒரு எமர்ஜென்சி… விக்டிம் ஒரு பொண்ணு. அவங்க பாடில நிறைய காயங்கள் இருக்கு. ஐ ஃபீல் லைக் இட் இஸ் ஆன் அனிமல் அட்டாக். மத்ததை நேர்ல பேசுவோம். நாங்க வரதுக்குள்ள ட்ரீட்மெண்டுக்கான அரேஞ்மெண்ட்ஸ் பண்ணிடுறீங்களா? அண்ட் இது சீக்ரெட்டா இருக்கட்டும். உங்களுக்கே தெரியும், இது வெளிய தெரிஞ்சா, மீடியாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு. சோ பிளீஸ்…” என்று சர்வஜனன் பேசியபடி தன்னருகே இருந்தவளை பார்க்க, அவளோ பின்னிருக்கையில் கிடத்தப்பட்டிருந்த ஸ்டெஃபியை தான் அழுகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “ஆமா, இதோ இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல ரீச்சாகிடுவோம்.” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

 

கூறியபடியே ஐந்து நிமிடங்களில் அவனின் மகிழுந்து அந்த மருத்துவமனையை அடைந்திருக்க, அங்கு ஸ்டெஃபிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையிலேயே இருந்தன.

 

முதலில் ஸ்டெஃபியின் காயங்களை ஆராய்ந்த மருத்துவர் ஆலிஸ், செவிலியர்களிடம் தேவையானவற்றை செய்ய சொல்லி கட்டளையிட்டுவிட்டு, வெளியே வந்தார்.

 

அதுவரை ஒரு இடத்தில் நில்லாமல் தவிப்புடன் இருந்த சஞ்சீவனி அவரிடம் சென்று, “டாக்டர், ஸ்டெஃபி… ஸ்டெஃபி இப்போ எப்படி இருக்கா?” என்று பதட்டத்துடன் வினவ, அவர் என்ன நினைத்தாரோ, சர்வஜனனையும் அருகில் அழைத்து, “இப்போ இப்படி சொல்றது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா, தேவையில்லாம ஹோப்ஸ் கொடுத்து உங்களை ஏமாத்த விரும்பல. சர்வா, இது நீங்க நினைச்ச மாதிரியே அனிமல் அட்டாக் தான். அதுவும் பிரிவியஸா நமக்கு கிடைச்ச டெட் பாடில இருக்க சிமிலர் ஊண்ட்ஸ் தான் இவங்களுக்கும் இருக்கு. நீங்க சீக்கிரம் பார்த்தால, இவங்க உயிரோட இருக்காங்க. ஆனா, இங்க சிக்கல் என்னன்னா, இது எந்த வகை அனிமல்னு தெரியாம ஆன்ட்டிடோட் கொடுக்க முடியாது. நம்மகிட்ட ரொம்ப நேரமும் இல்ல. சீக்கிரம் ஏதாவது டெசிஷன் எடுத்தாகணும்.” என்றார்.

 

அவர் கூறியதைக் கேட்ட சஞ்சீவனியோ, “வேர்உல்ஃப்… வேர்உல்ஃப் தான் அவளை அட்டாக் பண்ணது.” என்று கூற, ஆலிஸோ அவளை ஒரு மாதிரி பார்த்தார்.

 

உடனே அவளின் கரம் பற்றி அமைதியடையச் செய்தவன், “ஆலிஸ், உல்ஃப் அட்டாக்குக்கான ஆன்ட்டிடோட் இருந்தா, அதை கொடுத்து சீக்கிரம் ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுங்க.” என்று கூற, அந்த மருத்துவரும் சரியென்று மீண்டும் ஸ்டெஃபியிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

“சர்வா, அது சாதாரண உல்ஃப் இல்ல வேர்உல்ஃப், ஓநாய் மனிதன். அதுக்கு வேற மருந்து இருக்கப் போகுது. இப்போ மாத்தி கொடுத்து, அவளுக்கு ஏதாவது ஆகிட்டா?” என்று பதற, “காம் டவுன் வனி. நீ சொல்றது உனக்கே நம்புற மாதிரி இருக்கா? வேர்உல்ஃப் எல்லாம் மித். அதையா நம்புற?” என்றான்.

 

உடனே சஞ்சீவனிக்கு கோபம் வந்துவிட, “நீங்களும் தான் பார்த்தீங்க, அங்க… அந்த இடத்துல… உறுமல் சத்தம், அதை தொடர்ந்து திடீர்னு தோன்றுன மனுஷன்… அதைப் பார்த்தும் எப்படி மித்னு சொல்றீங்க?” என்று கிட்டத்தட்ட கத்தினாள்.

 

அவளும் முதலில் வேம்பயர், வேர்உல்ஃப் எல்லாம் கட்டுக்கதை என்று நம்பியவள் தானே. ஆனால், பொன்னம்மாவிடம் பேசியது, அந்த வாள், மிக முக்கியமாக சர்வஜனனுடன் அவள் கண்ட காட்சி என அனைத்தும் அவள் மனதை மாற்றியிருந்தன.

 

“எஸ், நானும் பார்த்தேன். ஆனா, ஓநாய் மனுஷனா மாறுறதை நாம கண்ணால பார்க்கலையே. நான் ஒத்துக்குறேன், அங்க ஏதோ தப்பா நடக்குது தான். அதுக்காக அதை செய்யுறது வேர்உல்ஃப்புன்னு நான் நம்ப மாட்டேன், கண்ணால பார்க்குற வரை.” என்றான் சர்வஜனன்.

 

தான் கூறுவதை நம்பாமல் பேசும் அவனை, சோர்வான பார்வையுடன் நோக்கியவள், தலையை இருபுறமும் ஏமாற்றமாக அசைத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

 

அவனும் இப்போது அவளிடம் எந்த வாக்குவாதமும் வேண்டாம் என்று நினைத்தபடி அவளருகே அமைதியாக அமர்ந்து விட்டான்.

 

நேரம் அப்படியே செல்ல, இருவருமே அந்த இருக்கையில் அமர்ந்தபடியே ஒருவர் மேல் மற்றவர் சாய்ந்து உறங்கியிருக்க, சஞ்சீவனியின் அலைபேசி ஒலியெழுப்பி இருவரையும் எழுப்பி விட்டது.

 

மணி ஐந்தை தொட்டிருக்க, சஞ்சீவனிக்கு அவளை சுற்றியிருக்கும் சூழல் புரியவே சில நிமிடங்களானது. அதற்குள் சுதாரித்திருந்த சர்வஜனன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை சுட்டிக்காட்டிவிட்டு, தானும் தன் அலைபேசியில் யாரிடமோ பேசினான்.

 

சஞ்சீவனிக்கு அழைத்தது பிரத்யூஷா தான். அவளிடம் என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளை உசுப்பிய செவிலி, “ஏன் மா, ரொம்ப நேரமா போன் அடிச்சுட்டே இருக்கு. அதை கையில வச்சு உத்து பார்த்துட்டு இருந்தா போதுமா? ஒன்னு ஆன் பண்ணி பேசு, இல்ல ஆஃப் பண்ணி போடு. ஹாஸ்பிடல்னு கூட பார்க்காம, காலைலேயே இவ்ளோ சத்தமா?” என்று திட்டிவிட்டு செல்ல, அவளும் அழைப்பை ஏற்றுவிட்டாள்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும் மறுமுனையிலிருந்து கேள்விகள் சரமாரியாக வந்த வண்ணம் இருந்தன.

 

“ஹே சஞ்சு, நீ எங்க இருக்க? இவ்ளோ காலைல எங்க போயிருக்க? வண்டியை வேற காணோம்! என்னடி நினைச்சுட்டு இருக்க நீ? என்கிட்ட சொல்லிட்டு போகணும்னு அறிவில்லயா?” என்று பிரத்யூஷா பொரிய ஆரம்பிக்க, அவளை எவ்விதம் சமாதானப்படுத்த என்று தெரியாமல் பாவமாக அமர்ந்திருந்தாள் சஞ்சீவனி.

 

அதே சமயம், “இங்க ஸ்டெஃபியோட அட்டெண்டர் யாரு?” என்று செவிலி சற்று சத்தமாக வினவ, தன் அழைப்பை பேசி முடித்து வந்த சர்வஜனன், சஞ்சீவனியிடம் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணசைத்தபடி அந்த செவிலியிடம் சென்றான்.

 

இதை அலைபேசி வழியாக கேட்ட பிரத்யூஷாவோ, “சஞ்சு, நீ ஹாஸ்பிடல்ல இருக்கியா? ஸ்டெஃபின்னா சொன்னாங்க? அவளுக்கு என்ன?” என்று பதற, “ஷ், ரிலாக்ஸ் பிரத்யூ. ஸ்டெஃபிக்கு சின்ன ஆக்சிடெண்ட். அதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கோம். நீ ரொம்ப டென்ஷனாகாத.” என்று ஆறுதல் கூறினாள் சஞ்சீவனி.

 

பிரத்யூஷாவின் பதட்டத்தினால் ஸ்டெஃபிக்கு நடந்ததை முழுதாக தோழியிடம் கூறவில்லை சஞ்சீவனி. ஸ்டெஃபியின் விபத்தை கேள்விப்பட்டதால், மேலும் கேள்விகளை கேட்கவில்லை பிரத்யூஷா. அதனால், தன் வாளை தேடும் முயற்சியை தோழியிடம் எளிதாகவே மறைத்து விட்டாள் சஞ்சீவனி.

 

ஆனால், சர்வஜனன் அதை சரியாக கேட்டுவிட்டான்.

 

செவிலி கேட்ட மருந்துகளை வாங்கி கொடுத்துவிட்டு வந்தவன், சஞ்சீவனியிடம், “ஆமா, நேத்து நைட் அங்க எதுக்கு வந்த?” என்று கேட்க, அவனிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தாள்.

 

ஏற்கனவே, ஓநாய் மனிதனை கட்டுக்கதை என நம்புபவனிடம், தான் அதை வேட்டையாடுபவள் என்றும் அதற்கான வாளை தேடி வந்ததாகவும் கூறினால், தன்னை பைத்தியக்காரி என்றே முடிவு செய்து விடுவான் என்று யோசித்தவள் அமைதியாக இருக்க, அவளைக் காக்கவே சர்வஜனனிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

 

உடனே அவளிடம், “எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இனி, நீ இங்க பார்த்துப்பியா?” என்று கேட்க, அவளும் சரியென தலையை மட்டும் அசைத்தாள்.

 

ஆனால், அவள் முகம் என்ன பாவனையை காட்டியதோ, அவளை ஆறுதலாக அணைத்து, “டேக் கேர்.” என்று சொல்லிவிட்டு, அவள் முகம் பார்க்காமல் சென்று விட்டான்.

 

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தாள்.

 

*****

 

“சரவணன், நேத்து நாம பார்த்த பாழடைஞ்ச பங்களா சுத்தி இருக்க இடத்துல, நான் இப்போ உங்களுக்கு அனுப்பியிருக்க ஃபூட் பிரின்ட்ஸ் மாதிரி டிஃப்ரெண்ட்டா ஏதாவது இருக்கான்னு செக் பண்ணுங்க. நான் வந்ததும் அந்த பங்களாக்குள்ள போய் செக் பண்ணிடலாம். நமக்கு அங்க கண்டிப்பா ஏதாவது க்ளூ கிடைக்கும்.” என்று தன் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே பேசியிருந்தான் சர்வஜனன்.

 

*****

 

மருத்துவமனையில் ஸ்டெஃபியைக் காண பிரத்யூஷாவும் நஸ்ரினும் வந்திருந்தனர்.

 

ஸ்டெஃபி இன்னமும் மயக்கத்தில் இருக்க, மற்ற இருவரும் சஞ்சீவனியை கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டனர்.

 

“சஞ்சுக்கா, ரெண்டு நாள் முன்னாடி ஆன மாதிரி நம்ம ஸ்டெஃபியையும் ஏதோ அனிமல் தான் தாக்கியிருக்கா?”

 

“ஸ்டெஃபிக்கு இப்படி ஆச்சுன்னு உனக்கு எப்படி தெரியும் சஞ்சு?” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்க, இருவரையும் சோர்வாக பார்த்தாள்.

 

“அனிமல் அட்டாக்னு தான் டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கான ஆன்ட்டிடோடும் போட்டுட்டாங்க. அந்த மருந்தால லேசா ஃபீவர் வரும்னும், அதுக்கு அப்பறம் தான் அவளுக்கு நினைவு திரும்பும்னும் சொல்லிருக்காங்க.” என்று நஸ்ரினுக்கு பதில் கூறியவள், பிரத்யூஷாவிடம் திரும்பி, “ஸ்டெஃபி நம்ம கஃபே கோட் போட்டிருந்ததை வச்சு, சர்வா… அன்னைக்கு பார்த்த போலீஸ் தான் எனக்கு கால் பண்ணாரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்ததால, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் மட்டும் வந்தேன்.” என்று கூறி முடித்தாள்.

 

உள்ளுக்குள் பயம் தான். இப்படி சரளமாக அவள் பொய் சொன்னதில்லை. அதுவும் பிரத்யூஷாவிடம் அவள் பொய் சொல்லி மாட்டாத நாளில்லை. ஆனால், ஸ்டெஃபியின் விஷயம் பிரத்யூஷாவை பாதித்திருந்ததால், அவள் தோழியின் பொய்யை கண்டுபிடிக்கவில்லை.

 

கஃபேயை திறக்க வேண்டி இருந்ததால், பிரத்யூஷா மருத்துவமனையில் இருப்பதாகவும் மற்ற இருவரும் கஃபேக்கு செல்வதாகவும் முடிவு செய்யப்பட்டு, சஞ்சீவனி அங்கு சென்றும் விட்டாள்.

 

கஃபேக்கு வந்து முதல் இரண்டு மணி நேரம் சற்று மந்தமாகவே சென்றது. சர்வஜனனிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனாள் பெண்ணவள். ஆனால், எதற்காக அழைப்பை எதிர்பார்க்கிறாள் என்பதற்கான விடை அவளுக்கும் அப்போது தெரியவில்லை.

 

எண்ணிலடங்காத முறையாக அலைபேசியில் பார்வையை பதித்து மீண்டவளின் பார்வை, கதவை திறந்து உள்ளே வந்த பொன்னம்மாவின் மீது பதிந்து விரிந்தது.

 

உள்ளே நுழைத்ததும் நேராக சஞ்சீவனியிடம் வந்தவர், “அந்த வாளை எடுத்தியா?” என்ற கேள்வியை தான் கேட்டார்.

 

*****

“சார், நீங்க அனுப்பின ஃபூட் பிரின்ட்ஸை செக் பண்ணியாச்சு. அதே மாதிரி ஃபூட் பிரின்ட்ஸ் இதோ இந்த இடத்துல இருக்கு.” என்று முன்தினம் சர்வஜனனும் சஞ்சீவனியும் ஒளிந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த பாதையைக் காட்டினான் சரவணன்.

 

அங்கு முன்னர் போலவே, சில தூரம் விலங்கின் காலடி தடமும், அதை தொடர்ந்து மனித காலடி தடமும் இருக்க, அது அந்த பங்களாவை நோக்கி செல்வதையும் கண்டு கொண்டான் சர்வஜனன்.

 

“சரவணன், போலீஸ் ஃபோர்ஸ் ரெடியா? நாம இப்போ அந்த பங்களாக்குள்ள போறோம்.” என்று அதிரடியாக கூறினான் சர்வஜனன்.

 

காவல்படை அந்த பங்களாவினுள் நுழைய, அங்கு அந்த பெரிய வரவேற்பறையில், மேலாடை எதுவுமின்றி, கால்சராயும் அங்கங்கே கிழிந்து தொங்கியபடி, உடலெங்கும் இரத்தக்காயங்களுடன் மயக்க நிலையில் இருந்தான் சேகர், இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகாரளித்த பெண்ணின் கணவன்!

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்