
அரும்பு போல் மெல்ல துளிர்த்த பாசம், நட்பு என்னும் மொட்டை உருவாக்கியிருக்க, மொட்டின் இதழ்கள் முகைத்து இருவருக்குள்ளும் புது நேசம் என்னும் மலர்கள் பூக்கத் தொடங்கியிருந்தது.
இருவருமே தங்களுக்கு பிடித்ததும் பிடிக்காததும் நடிகர்கள் தொடங்கி, இனிப்பு வரை பகிர்ந்துக் கொண்டிருந்தனர். ரகுவின் அக்கறையும், அன்பும் அவளுக்கும் பிடித்திருந்தது.
அவனோடு பேசும் நேரங்களில் எல்லாம் அவளையும் அறியாது மனம் அமைதியாக இருப்பதை உணர்ந்திருந்தாள் மது. நாட்கள் செல்ல செல்ல கைப்பேசி எண்களை பகிர்ந்துக் கொள்ளும் அளவிற்கு இருவருக்குள்ளும் நம்பிக்கை வலுப்பெற்றிருந்தது. முகநூலில் தொடங்கிய குறுஞ்செய்திகள் தற்போது வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்துக் கொண்டிருந்தது. இருந்தும் அவனாக அவளுக்கு எந்த ஒரு அழைப்பும் அழைத்து பேசியது இல்லை.
அன்றொரு நாள் கல்லூரியில், பேராசிரியர் நடத்தும் பாடத்தை இவள் கவனித்துக் கொண்டிருக்க வைஷ்ணவியோ திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு வைஷு?” சத்தமின்றி கேட்டாள் மது.
“வருணி, அந்த வருண் பிரபோஸ் பண்ணிட்டான். இன்னைக்கு ஈவினிங் கிளாஸ் முடிஞ்சதும், வெயிட் பண்ணி என் பதிலை சொல்ல சொன்னான்.”
“அடிப்பாவி. இது எப்போ நடந்துச்சு?”
“நேத்து தான். நான் சொன்ன அதே வசனத்தை அச்சு பிசங்காமல் பேசுனான். எனக்கு என்னமோ பயமா இருக்கு.” என்று கிசுகிசுக்கும் குரலில் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அவர்களது பேராசிரியரோ முறைத்து பார்த்தது மட்டுமில்லாது இருவரையும் சேர்த்து திட்டினார். இருவருமே அவரது திட்டுக்களை பெரிதாகக் கண்டுக் கொள்ளாது, “சாரி சார்” என்று ஒரே ராகத்தில் மன்னிப்பை யாசிக்க,
‘உட்கார்ந்து தொலைங்கடா அப்ரசிண்டுகளா’ என்று பார்வையாலே கூறியிருந்தார் பேராசிரியர்.
கல்லூரி முடிந்ததும் தான் தாமதம் தன் தோழியின் கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டாள் வைஷ்ணவி.
“வரு, நீ எங்கையும் போகாத ப்ளீஸ்.”
“சரி போகலை. நீ என்ன சொல்ல போற?”
“தெரியலை வரு. ஆனால் படபடப்பா இருக்கு.” என்று தவித்தபடி நின்றாள் வைஷ்ணவி. அடுத்த நொடி வருணும் அவ்விடம் வர, இருவரும் பேசிக்கொள்வதற்கு வழிவிட்டு சென்று விட்டாள் வருணிகா.
கிட்டதட்ட அரைமணி நேரமாக இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க மதுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘அப்படி என்ன தான் பேசுறாங்கனு தெரியலையே. பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ ஏதோ ஒன்ன சொல்ல இத்தனை நேரமா ஆகும்?’ என்று அதிதீவிரமாக யோசித்தாள் மது.
‘என்னமோ போங்கடா. நம்ம இந்த புளிப்பு மிட்டாய் திண்போம்’ என்று நினைத்தவள் வாயில் போட்டு மிட்டாயை சுவைத்தபடி
கண்களை மூடித் திறக்க வருணின் கைகளில் வைஷ்ணவியின் கைகள் இருப்பதை பார்த்தவள், புளிப்பு சுவையை காட்டிலும் முகத்தை சுளித்தபடி அதிசயித்துப் போய் பார்த்தாள்.
“அடிப்பாவி..! பொசுக்குனு கை எல்லாம் பிடிச்சு பேசுறீங்க. வைஷு சிங்கிள் சிங்கம்னு ஸ்கூல் படிக்கும் போது சொல்வியேடி, இப்படி காதல் குழிக்குள்ள நீயே குதிச்சிட்டியேடி” என்றவள் அதிர்ச்சி மாறாமல் இருக்க, வெகு நேரம் கழித்தே அவனிடமிருந்து விடைபெற்று தோழியை நோக்கி வந்தாள் வைஷ்ணவி. அவளது முகத்திலிருந்த புன்னகையே அனைத்தையும் விளக்க, புருவம் உயர்த்தி பார்த்தாள் மது.
“இந்த வைஷுக்கு ஏத்த வருண் அவன் தான் டி.” என்று வெட்க சிரிப்பினை உதிர்க்கும் தோழியை பார்த்து, “அய்யோடா போதும் வைஷு. அது எப்படி டி ஒரே நாள்ல விழுந்துட்ட?” என்றாள் அதே அதிர்ச்சி குறையாமல்.
“நான் வேண்டாம்னு தான் சொன்னேன். அவங்க என் உணர்வுகளை புரிஞ்சு பேசுனாங்க. ஒரு பொண்ணோட உணர்வுகளுக்கு மதிப்பு தர்ற ஒருத்தனை விட மனசு வரலை. அப்புறம் இரண்டு பேரும் படிப்பு பத்தி மாறிமாறி பேசுனோம். அவனும் என் படிப்பு தான் ஃபர்ஸ்ட், அதுல கவனத்தை செலுத்த சொல்லி சொன்னான். அப்புறம் என்ன அப்படி இப்படினு வெட்டிக்கதை பேசி முடிக்க இவ்ளோ நேரம் ஆகிடுச்சு.”
“என்ன வைஷு என்னென்னமோ சொல்ற. எனிவே நீ நல்லாயிருந்தா சரி” என்று புன்னகையுடன் கூறினாள் மது.
மதுவின் கல்லூரி பேருந்து சென்றுவிட்டதால், நகரப்பேருந்து நிலையத்திற்கு சென்றனர் மதுவும், வைஷுவும். ஒவ்வொரு பேருந்திலும் கூட்டம் அலைமோத, பேருந்தில் பயணப்படாத மதுவிற்கு பயமாகி போனது.
“வைஷு என்னடி, இவ்ளோ கூட்டம்?”
“கூட்டத்தை பார்த்துட்டு நின்னோம்னா இன்னைக்குள்ள வீட்டுக்கு போய் சேர முடியாது வரு. வா ஏறலாம்.” என்று வைஷ்ணவி அழைத்துச் செல்ல, இவள் தான் திணறிப் போனாள்.
“வைஷு, நெக்ஸ்ட் பஸ்ல போவோம்.” என்றவள் வைஷ்ணவியின் கரத்தை பற்றியபடி தயங்கி நிற்க,
“பஸ்ல ஏறலைனா அந்த பக்கம் போமா.” என்று நடத்துனர் இருவரையும் சேர்த்து திட்டியே விட்டார். மதுவின் முகமோ வாடி போனது.
“அந்த ஆளு கிடக்குறான். நம்ம அடுத்த பஸ்ல போலாம்.” என்றவள் தனது தோழியை சமாதானம் செய்தாள். இப்படியே அடுத்தடுத்த பேருந்துகளும் கூட்டமாக வர, கூட்ட நெரிசலைக் கண்டு மிரண்டு போனாள் மது.
“இப்படி இருந்தால் வேலைக்கு ஆகாது.வா என்கூட.” என்றபடி மதுவின் கரத்தை இறுக பற்றியபடி அடுத்து வந்த பேருந்தில் ஆண்கள் ஏறும் பகுதியில் அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டனர் இருவரும்.
பின் வைஷ்ணவி அங்கு நின்றிருந்தவர்களை வழி விடும்படி முன்னேறி நடுப்பகுதிக்கு செல்ல அவளுடன் சேர்ந்து சென்றாள் மது. அங்கு நின்றிருந்தவர்களை பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு. வேகவேகமாக அவள் பின்னே வந்தவளது வளையல் அங்கு நின்றிருந்தவனது கைகளை கீறி விட்டு செல்ல, எரிச்சல் மேலோங்க சடாரென்று திரும்பி பார்த்தவன், “யார்ரா அது எரும மாதிரி” என்று பற்களை கடித்தவன் தன்னைக் கடந்து சென்றவளின் அழகில் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றான்.
அவனது உதடுகளோ இம்முறை, “யாரிந்த பதுமை?” என்று அன்னிச்சையாக உதிர்த்தது.
வைஷ்ணவியின் கரத்தை பற்றிக் கொண்டு யாரையும் கவனிக்காது உள்ளே சென்றவளோ ஒரு கம்பியினை பற்றிக் கொண்டு நிற்க, நடத்துனர் டிக்கெட் கொடுக்கும் நோக்கில் இங்கும் அங்கும் மாறிமாறி செல்ல, அவர் தன்னை இடித்துவிடக்கூடாது என்ற கவலையில் ஒதுங்கி ஒதுங்கி சென்றவள் அவளுக்கு அருகே மறுபுறமாக நின்றவனின் மீதே மோதியிருந்தாள்.
அந்நொடி அதிர்ந்தவள் மீண்டும் தள்ளி நின்றுக் கொண்டாள். அவள் இடித்ததும் திரும்பி பார்த்தவன் அவனது பதுமையை ரசித்துப் பார்த்தான். பெண்ணவளை அவன் கூர்மையாக கவனிக்க பாவம் அவள் தான் திரும்பவே இல்லை.
கூட்ட நெரிசலில் தவிப்பதும், நெற்றியிலிருந்து வழிந்து வரும் வியர்வை அவளது தாடை வரை சென்று கீழே விழுவதும். ஒரு நிமிடத்தில் எத்தனை முறை இமைகளை மூடி திறக்கிறாள் என்பது முதல் ரசித்துப் பார்த்தவனது இதழ்கள் மீண்டும் முறுவலித்துக் கொண்டது.
“எந்த கவிஞனும் அவளை சிலை வடிப்பான்…” கவிஞர் வாலியின் வரிகளை நிஜம் ஆக்குவது போல் நின்றிருந்த பதுமை பூ இவளை விட்டு அவனது கண்கள் இம்மியளவு கூட நகரவில்லை.
அவ்வப்போது பெண்ணவளின் துப்பட்டா அவன் முகத்தில் வந்து அடித்த வண்ணமே இருந்தது. அவனையும் மீறி அதை ரசித்தவனின் உதடுகள், “கிளாசிக்கல் பியூட்டி” என்று கூறி புன்னகையை உதிர்த்தது.
அதே சமயம் மீண்டும் நடத்துனர் வர, வழி விடும் வேகத்தில் அவன் புறமாக நகர்ந்தவள் அவன்மீதே பட்டும் படாமல் சாய்ந்து நிற்க, ஆணவனோ கண்களை மூடித் திறந்திருந்தான். அவளது வாசனை அவனது நாசிதனில் நிரம்பியது. பெண்ணவளின் கூந்தலோ அவன் முகத்தை தீண்டிக் கொண்டிருக்க, முதன் முறையாக அவளிடம் மயங்கிக் கொண்டிருந்தான் அவன்.
அதற்குள் அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருக்க, வைஷ்ணவியுடன் கீழே இறங்கியிருந்தாள் மது. அவள் இறங்கியது கூட தெரியாமல் கண்களை மூடி நின்றிருந்தவனை அவனுடன் வந்த ஒருவனின் அழைப்பு விழிக்கச் செய்தது.
“வாட்ரா நந்தா நின்னுட்டே தூங்குற. அடுத்த ஸ்டாப் இறங்கணும்.” என்று கூறும் நண்பனை அசடு வழிந்தபடி பார்த்தது சாட்சாத் நம் நந்தாவே.
உன்னை தீண்டிச்
செல்லும் என் கண்களுக்கு
பதில் சொல்லடி
கிளியே…
என்று உன் பார்வை
என் விழிகளுக்குள்
நிறையும் என்று…
அவனையும் மீறி உதடுகள் மொழிந்தது.
வீட்டிற்கு தாமதமாகவே வந்து சேர்ந்திருந்தாள் மதுவர்ணிகா. அன்னை கண்டிப்பாக கடிந்துக் கொள்ளப் போகிறார். தந்தையும் பரிதவித்து போயிருப்பார். என்றெல்லாம் அவள் சிந்தையில் எண்ணங்கள் தோன்ற, அவளது அன்னையோ எங்கோ வெளியே செல்வதற்காக தயாராகியபடி கீழே வந்தார்.
“மாம் சாரி…” என்றவள் கூற வரும் முன்னரே இடையில் புகுந்தார் பிரபாவதி.
“வருணி, மம்மி டிரஸ் எப்படி இருக்கு?” என்றவர் புன்னகையோடு கேட்க,
“நல்லாருக்கு மாம்.” என்றவள் தயக்கத்துடன் நின்றாள்.
“ஓகே கண்ணா. ஐ லீவ் நௌ. பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு வரேன்.” என்றவர் சென்றுவிட, “அவ்வளவு தானா” என்பது போல இருந்தது அவளுக்கு. வீட்டில் வேலை செய்யும் சமையல் அம்மா அடுத்து கூறியதும் தான் தந்தையும், உமாபதியும் வெளியே சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டாள்.
அவ்வளவு பெரிய வீட்டில் இருந்தும் தனிமையில் இருப்பதாக உணர்ந்தாள் மதுவர்ணிகா. “வீட்டுல இருக்கிறதுக்கு ஹாஸ்டல் எவ்வளவோ பரவாயில்லை போல.” என்று புலம்பியவள் அப்படியே வந்து மெத்தை மீது சாய்ந்துக் கொள்ள, தனிமை என்னும் ஆட்கொல்லி நோய் அவளை ஆட்டிவைப்பது போல உணர்ந்தாள் பெண். அவளையும் மீறி இடது கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
“சைத்து, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் மச்சி. நீ போன் பண்ணி ஒன் மன்த் மேல ஆகுது.” என்று கவலையாக உரைத்தவளது அருகே இருந்த கைப்பேசி சிணுங்கியது. உடனே எடுத்துப் பார்த்தவளது முகம் வலியிலும் புன்னகைத்துக் கொண்டது.
“ரகு.” என்று கூறியவள் அவனிடம் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தாள். அவனோ ஸ்மைலிகளை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்க,
“என்னாச்சு? ஏன் டைப் பண்ணல?” என்றவளின் கேள்விக்கு தனது வலது கையினை புகைப்படம் எடுத்து அனுப்பினான் ரகு. வலது கையில் அடிப்பட்டிருந்தது.
உடனே பதறியவள், “ஐயோ எப்படி?” என்று கேட்க, அவனால் பதில் அனுப்ப இயலவில்லை. உடனே சுதாரித்தவள் அவனுக்கு முதன் முறையாக அழைப்பை விடுத்திருந்தாள். கைப்பேசியை அவன் உயிர்ப்பித்ததும் இவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
“வாவ்! வர்ணிகா சர்பிரைஸா இருக்கு. கால் எல்லாம் பண்ணிருக்க?”
“ம்ம்… உங்களுக்கு எப்படி அடிப்பட்டுச்சு?”
“ஓ அதுவா… பைக்ல போறப்போ சின்ன ஆக்ஸிடென்ட்டா. ரொம்ப பெயினா இருக்கு. அதுனால தான் டெக்ஸ்ட் பண்ண முடியலை.”
“ரொம்பா வலிக்குதா? டாக்டர்கிட்ட போனீங்களா?” என்றவளின் கேள்விக்கு ஒரு சில நொடி மௌனமே நீடித்தது.
“என்னாச்சு பேசுங்க?”
“இல்லை கண்ணம்மா. இப்படி அன்பா கேட்க பக்கத்துல யாருமே இல்லை. இப்போ ரொம்ப லோன்லியா பீல் பண்ணேன். நீ கேட்கவும் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.”
“ஓ… சாரி. பசங்களும் அழுவீங்களா?”
“ஏன்டா, நாங்க என்ன ரோபோவா? உணர்ச்சிகள் இல்லாமல் இருக்க?”
“அதுவும் சரிதான். கவலைப்படாதீங்க.”
“ம்ம்ம்… சரிமா, சாப்டியா? ஆமா இன்னைக்கு காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வர லேட் ஆகிடுச்சாடா? எப்போதுமே சீக்கிரமே ரிப்ளை வரும். இன்னைக்கு ரொம்பவே தாமதமா வந்திருக்கு.” என்றவன் அக்கறையுடன் கேட்கவும் பெண்ணவளது கண்கள் கலங்கியிருந்தது.
“ஆமா. வைஷுனால லேட். இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” என்றவள் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விட, அவனும் அதை ஆவலாக கேட்டான்.
“நீங்க சொல்லுங்க ரகு. நான் இவ அக்செப்ட் பண்ணுவானு நினைக்கவேயில்லை.”
“ஹாஹா இதுல சொல்ல என்ன இருக்கு? காதல் இரு மனங்கள் சம்மந்தப்பட்டது. நம்பிக்கையின் அடையாளமும் கூட. காதலிக்குறது தப்பில்லையே.”
“இல்லை தான். இருந்தும் சிங்கிள் சிங்கம் கேங்ல ஒரு டிக்கெட் கமிட்டெட் சிங்கமா மாறிடுச்சு.” அவளது பதிலில் அவனிடமிருந்து புன்னகையே துளிர்த்தது.
பின் அவனிடம் பேசியதில் மனம் மீண்டும் லேசாக, உற்சாகத்துடன் சாப்பிட்டு உறங்கச் சென்றாள் மது. அடுத்த நாள் காலை, மதுவர்ணிகாவிற்கு கல்லூரியில் நடந்த கலைவிழாவில் சிகை அலங்கார போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்க, மிகுந்த உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்தவள் அன்னையை தேடினாள்.
பிரபாவதி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருக்க, “மாம்… மாம்” என்று அழைத்தவளை அமைதியாக இருக்கும்படி கூறினார் பிரபாவதி.
“மாம், நான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வின் பண்ணிட்டேன் மாம்.” ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் கூற, அவரோ மும்முரமாக கைப்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தார். அவரது செயலே அவளை பாதிக்க, அமைதியாக நின்றுக் கொண்டாள் மது.
சில நேரம் கழித்து போனை வைத்தவர் மதுவை பார்த்து, “என்ன வரு, இது எல்லாம், முக்கியமான கால் பேசுறப்போ இப்படி கத்துற? ஆள் வளர்ந்தும் இன்னும் சின்ன குழந்தைனு நினைப்பா? கொஞ்சமாவது மெச்சுர்டா நடந்துக்கோ.” என்றார் முறைத்தபடி.
அவரது பாராமுகமும், திட்டும் அவளது மனதை கலங்கடித்திருக்க, “மாம் ப்ரைஸ்.” என்றவள் தயங்கியபடி காட்ட,
“இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? போ போய் உன் ரூம்ல வை.” என்று கூறிவிட்டு பிரபாவதி நகர்ந்துவிட, அவரது உதாசீனம் அவளை வலிக்க செய்தது.
கலங்கிய கண்களுடன் அறைக்கு சென்றவள் கதவை அடைத்தபடி தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். என்ன தான் கல்லூரி முதலாம் ஆண்டு படிப்பவளாக இருந்தாலும் குழந்தை தனம் மாறாமல் தான் இருந்தாள் மதுவர்ணிகா.
“ஏன் கடவுளே! எனக்கு மட்டும் இப்படி ஒரு குடும்பம். என்னை அவங்களுக்கு பிடிக்கலையா? ஒருநாள் கூட என்னோட அவங்க டைம் ஸ்பெண்ட் பண்ணதே இல்லை. எனக்கு வசதி எதுவுமே வேண்டாம். எனக்கு அவங்க அன்பு தான் வேணும்.” என்று தேம்பியவளது உதடுகள் துடித்து அடங்கியது.
அந்நேரம் அவளாகவே ரகுவிற்கு அழைப்பை விடுத்தவள், அவனது, “கண்ணம்மா…” என்ற அழைப்பில் வெடித்து அழத் தொடங்கினாள்.
“என்னாச்சுடா கண்ணம்மா. ஏன்டா, இப்படி அழுற?” என்று அவன் பரிதவித்து போய் கேட்க, அவள் மேலும் அழுதாள்.
“எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கு ரகு. அப்பா அம்மா இருந்தும் அனாதை மாதிரி பீலாகுது.”
“ஏன்டா, இப்படி எல்லாம் பேசுற. அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா. நம்ம அப்பா அம்மாடா. வேற எங்க போக போறாங்க. அடிச்சாலும், திட்டினாலும் அவங்க பாசத்துக்கு நிகர் எதுவுமே இருக்காது.”
“இல்லை ரகு. உரிமையான அடி அவங்ககிட்ட வாங்கணும்னு ஏக்கமா இருக்கு. திட்டு விழ வேண்டிய இடத்துல அவங்க திட்றதே இல்லை. பாராட்ட வேண்டிய இடத்துல திட்டுறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. ஏன் ரகு அவங்களுக்கு என்ன பிடிக்கலை.”
“கண்ணம்மா, இப்படி விரக்தியா பேசாதடா. உன்னை எல்லாருக்குமே பிடிக்கும் டா.
“இல்லை ரகு. எனக்கு யாருமே இல்லை. சைத்து இருந்தா அவளும் கடல் தாண்டி போயிட்டா. இப்போ நீங்க போன்ல பேசுறீங்க? ஆனால் அதுவும் எத்தனை நாளுக்குனு தெரியாது. இது தான் என் வாழ்க்கை போல. நான் ஆசைப்படுறவங்க ஒன்னு என்ன வெறுப்பாங்க. இல்லை தள்ளி போயிடுவாங்க. வைஷு கூட இப்போ சரியா பேசுறது இல்லை.”
“வருணி, நான் எப்போதும் உன்கூட தான் இருப்பேன். உனக்கு யாரும் இல்லைனு பேசாத. நான் இருக்கேன், வாழ்க்கை முழுக்க உனக்காக இருப்பேன்.” என்றவனின் சொல்லில் அவளது அழுகையும் மட்டுப்பட, அதிர்ச்சியோடு கைப்பேசியை இறுக பற்றிக் கொண்டாள்.
“ஐ லவ் யூ டா கண்ணம்மா. நீ அழுத வரை போதும் இனி உன்னை அழாம நான் பார்த்துப்பேன். உனக்காக நான் இருப்பேன்” என்றவனின் குரலில் தெரிந்த பரிதவிப்பும், காதலையும் கண்டவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் கைப்பேசியை தவறவிட்டிருந்தாள்.
அதன் பின் அவன் அழைத்த அழைப்பு எல்லாம் காற்றோடு காற்றாகி போக, அப்படியே குழப்பத்துடன் படுத்துக் கொண்டாள் மதுவர்ணிகா.
‘இவர் ஏன் அப்படி சொன்னாரு? அப்போ இவ்ளோ நாளா என்னை காதலிச்சுட்டு இருந்தாரா? அப்போ ஏன் முன்னாடியே சொல்லலை.’ பல்வேறு கேள்விகள் அவளது மனதை போட்டு குடைய, செய்வதறியாது தவித்தவள் எப்போது தூங்கினாள் என்பதையே அறியவில்லை.
அவன் காதலை தெரிவித்த பின்னர் அவளும் சரி அவனும் சரி அழைப்பை விடுக்கவே இல்லை. ஒரு வாரம் கழித்து அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
“சாரி வர்ணிகா. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. மனசுல இருந்து வந்திடுச்சு. நான் எப்போதுமே உனக்கு நல்லா பிரெண்டா இருப்பேன். ப்ளீஸ் மன்னிச்சிடு.” என்று வந்திருக்க,
“பிரெண்டா இருப்பானாமே பிரெண்டா.” என்று வாய்க்கு வந்தது எல்லாம் கொண்டு திட்டினாள் மதுவர்ணிகா. அதன் பின்னர் அவளால் அவனிடம் பேசாமல் இருக்க இயலாமல் போக, அவனிடம் பேசத் தொடங்கியிருந்தாள். இம்முறை அவனை அதிகமாக திட்டிக்கொண்டே இருந்தாள்.
“எனக்கு பர்த்டே வருது. நேர்ல வர முடியுமா? ப்ளீஸ்” என்றவனைத் தவிர்க்கவே முடியவில்லை அவளுக்கு. சரி என்று சம்மதித்தவள் அவனைக் காண முதன்முறையாக சென்றாள்.
“நீங்க எப்படி இருப்பீங்கனு எனக்கு தெரியாதே?” என்றவள் கேட்கவும் தனது புகைப்படத்தை முதன்முதலாக அனுப்பியிருந்தான் ரகுவரன். அவள் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு அழகாகவே இருந்தான் அவன்.
‘இவ்ளோ ஹேண்ட்சமா இருக்காரு. எப்படி என்னை பார்க்காமலே பிடிச்சிருக்குனு சொன்னாரு?’ என்ற யோசனையோடு தன் கண்கள் மட்டும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தாள் மது.
“இந்த கண்ணு வெச்சு நான் யாருனு கண்டுபிடிங்க.” என்று மட்டும் கூறியவள் போனை வைத்துவிட, அவனும் ஆவலோடு சரி என்று அனுப்பியிருந்தான்.
இளஞ்சிவப்பு நிற சல்வாரும், அதற்கு ஏற்றார் போல வெள்ளை நிற துப்பட்டாவும், காற்சட்டையும் அணிந்து வந்தவளை தூரத்தில் வந்த பொழுதே கண்டு கொண்டான் ரகுவரன்.
தனது பைக்கை பார்க்கிங்கில் நிறுத்தியபடி அவளை நோக்கி அவன் நடந்து வர, நேரில் அவனை கண்ட அதிர்ச்சியில் படபடத்து போய் நடந்து வந்தாள் மது.
“இவரு என்ன பாடிபில்டர் மாதிரி இருக்காரு. ஆண்டவா தைரியத்தை கொடு.” என்று தனக்கு தானே தைரியத்தை வரவழைத்து முன்னேறி சென்றவளது கைப்பேசி சிணுங்கியது. கைப்பேசியில் வெகு நாட்களுக்கு பின் சைத்ரா தொடர்பு கொண்டிருக்க, வாகனங்களின் சத்தத்தால் அதனை கவனிக்கத் தவறினாள் மதுவர்ணிகா.
அதற்குள் அவளை நெருங்கியவன், “ஹாய் வர்ணிகா” என்று கைகளை நீட்ட,
“ஹாய் எப்படி கண்டு பிடிச்சீங்க.” என்று படபடப்புடன் கூறியவள் அவனிடம் கைக்கொடுக்க மறந்திருந்தாள்.
“அவ்ளோ அழகான கண்ணு உன்னை தவிர, இங்க இருக்க யாருக்குமே இல்லைடா கண்ணம்மா.” என்றவன் இதழ்ப்பிரித்து அழகாய் கூற, அன்னிச்சையாக முகம் சிவந்து போனாள் மது.
தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள பெரும்பாடு பட்டவள், “வாங்க நடந்துகிட்டே பேசலாம்.” என்று சமாளித்த வண்ணம் முன்னேறி சென்றாள்.
தன்னிடமிருந்து பத்து மீட்டர் தூரம் தள்ளி நடந்து வந்தவளை பார்த்தவனுக்கு தலையை எங்கு கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் என்றே தெரியவில்லை. இருந்தும் அவனது இதழ்கள் முறுவலித்தன.
“வர்ணிகா போதுமா? இல்லை நான் கொஞ்சம் நகர்ந்துக்கட்டுமா?” என்றவனின் கிண்டலில் அவளது இதழ்களில் துளிர் புன்னகை அரும்பியது.
அவனோ புன்னகைத்துக் கொண்டே திரும்பிக் கொள்ள, அப்போது தான் அவனை முழுவதுமாக கவனித்தாள் மது.
கருப்பு நிற பிளைன் சட்டை, அடர் பிரவுன் நிற கால்சட்டை. கையில் பாஸ்ட் ட்ராக் கடிகாரம் அணிந்திருந்தவன் பார்க்க நன்றாக தான் இருக்கிறான். முதல் முறையாக நேரில் பார்ப்பதால் என்னவோ அவளுக்கு தயக்கம் இருந்துக் கொண்டே இருந்தது.
“வர்ணிகா, விஷ் பண்ண மாட்டியா?” என்றவன் கூறியதும் தான் நினைவு வந்தவள், “சாரி” என்று தன்னைத் தானே கடிந்துக் கொண்டாள்.
“ஹாப்பி பர்த்டே ரகு.” என்று அவனிடம் கைகளை நீட்ட, முதன் முறையாக பெண்ணவளின் கைகளை பற்றி குலுக்கினான் ரகுவரன்.
“இது என்னோட கிப்ட்.” என்றவள் அவளே பிரேத்யேகமாக வடிவமைத்த கைக்குட்டை ஒன்றைக் கொடுக்க அதனை ஆவலுடன் பெற்றுக் கொண்டான் ரகுவரன். பூங்காவை சுற்றி பார்த்தவர்கள் சிறிது நேரத்திலேயே வெளியே வந்திருந்தனர்.
பின் இருவரும் வ.உ.சி பூங்காவிற்கு வெளியே இருக்கும் சாலையில் நடக்க, அவர்கள் நடந்து சென்ற பாதையில் கிளி ஜோசியக்காரர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
“வாம்மா ஜோசியம் பாரும்மா.” என்றவர் அழைக்க,
“இல்லை வேண்டாம்.” என்றவள் தயங்கியபடி மறுத்தது மட்டுமல்லாது இவனருகே வந்து நின்றுக் கொண்டாள்.
“ஜோசியம் பார்க்கிறியா வர்ணி?” என்றவன் சாதாரணமாக கேட்க,
“இல்லை” என்றும் “ஆமாம்” என்றும் மாற்றி மாற்றி தலையாட்டியவள் பின், “வேண்டாம் வாங்க ரகு.” என்று படபடப்புடன் முன்னோக்கி சென்றவளை பின் தொடர்ந்தான் ரகு.
முன்னேறி நடந்தாலும் அவள் மனம் அந்த கிளியின் மீதே இருந்தது.
“வர்ணிகா.” என்றவனின் அழைப்பில் திரும்பியவள், கண்களாலே என்னவென்று கேட்டாள்.
“உண்மைய சொல்லு. உனக்கு கிளி ஜோசியம் பார்க்கணும் தானே. வா பார்க்கலாம்.”
“இல்லைங்க ரகு வேண்டாம். எங்க அம்மாக்கு இது எல்லாம் பிடிக்காது. அவங்க இது எல்லாம் நம்ப மாட்டாங்க.”
“ஜோசியம்ல நம்பிக்கை இருக்கு இல்லை. இது எல்லாம் இரண்டாம் பட்சம். உனக்கு அது ட்ரை பண்ணனும்னு ஆசை இருக்கா? இல்லையா?”
“கண்டிப்பா இருக்கு. ஆனால் ரோட்ல.” என்றவள் தயங்கிக்கொண்டே நிற்க, பெண்ணவளின் கைகளை பற்றியபடி அழைத்துச் சென்றான் ரகு.
சாலையில் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர கூச்சப்பட்டவள் அமர்ந்துக் கொள்ள, அவன் எவ்வித தயக்கமும் இன்றி அவளருகே அமர்ந்தான். அவன் நினைத்திருந்தால் நின்று கூட இருந்திருக்கலாம். தனக்கு துணையாக அவனும் சேர்ந்து அமரும் போதே பெண்ணவளின் மனதிற்கு இதம் சேர்த்தது.
கிளி அவளுக்கு சிவன் பார்வதி சீட்டினை எடுத்துப் போட, முதல்முறை கிடைக்கும் அனுபவத்தில் திளைத்து போய் பார்த்தாள்.
“படிப்பில கெட்டிகாரி, பாசத்துக்கு ஏங்குற உனக்கு வருங்காலம் நல்லா இருக்குமம்மா… அதிலும் உன் கை பிடிக்க போற மகராசன் உன் மேல உயிரா இருக்க போறான். இத்தனை நாள் ஏங்குன பாசத்தை காட்ட போறான். எது பண்ணாலும் பார்த்து பண்ற நீ, குடும்பத்துக்காக பெரிய தியாகத்தையும் பண்ணுவ. உன் நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கும்னாலும் எது நடந்தாலும் மனசை மட்டும் தளர விட்டிடாத தாயி.” என்றவர் கூற அவளுடன் அவனும் அதனை ஆவலாக கேட்டான்.
அவர் சொன்ன மகராசனாக ரகுவே அவள் கண்களுக்கு அப்பொழுது தெரிய, தட்சணை வழங்கியவன், “போலாமா?” என்று கேட்ட நொடி புன்னகையுடன் தலையசைத்தபடி எழுந்து அவனோடு சேர்ந்து நடந்தாள் மதுவர்ணிகா.
நடக்கும் போது அவளது பூவிரல்கள் அவனது கைகளோடு உரசி செல்ல அவளையும் மீறி உள்ளுக்குள் குறுகுறுப்பு தோன்றியிருந்தது. அவளுக்கும் அவனை பிடிக்குமல்லவா, அந்த பிடித்தம் அவன் மீது காதல் வரவும் காரணமாக இருக்க, தைரியத்தை வரவழைத்தபடி அவனிடம் காதலை கூறிவிடலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டாள் மது.
“ரகு, நீங்க ஏன் அப்படி சொன்னீங்க?”
“எப்படிமா?”
“அதுதான் லவ்…”
“அதுவா… மனசுல தோணுச்சு சொல்லிட்டேன். ஆனால் உனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாதப்போ நான் ஒதுங்கி போறது தான் நல்லது.” என்றவனின் பெருந்தன்மை கூட அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனை பார்த்துக் கொண்டே நடந்தவளை உரசிவிட்டு செல்லும்படி மகிழுந்து ஒன்று நெருங்கி வர, அவளது கைகளை பற்றி தன்னோடு சேர்த்து இழுத்திருந்தான் ரகு. அந்நொடி நூலிழையில் அவள் தப்பித்திருக்க, அவனது தோள்பட்டையில் சிறிது நேரம் கண்களை மூடியபடி நின்றவள் பதட்டத்துடன் காணப்பட்டாள்.
“ஆர் யூ ஓகே.” என்றவன் அவளை ஆசுவாசப்படுத்த, “ஐ லவ் யூ ரகு.” என்று படபடப்புடனே கூறி முடித்தாள் பெண். அவன் கேட்டது கனவா? இல்லை நினைவா? என்றெல்லாம் தோன்றியது அவனுக்கு.
“வருணி, இப்போ என்ன சொன்ன?” என்றவன் இன்ப அதிர்ச்சியுடன் கேட்க முகம் சிவந்தவள் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“வார்த்தையில சொல்லுடா கண்ணம்மா.”
“எஸ் ஐ டூ லவ் யூ ரகு” என்றவள் வெட்க புன்னகையை உதிர்க்க அந்நொடி அவளது அலைப்பேசி சிணுங்கியது.
“போன் அடிக்குது பாரு. எல்லாம் நன்மைக்கே” என்று துள்ளிக் குதிக்காத குறையாக அவன் கூற, கைகளில் போனை எடுத்தவளது முகம் அன்னிச்சையாக மலர்ந்தது.
“சைத்ரா.” என்று புன்னகையுடன் போனை எடுத்தவள் காதில் வைக்க, ஒரு நொடி ரகுவரனின் முகத்தில் மின்னல் வெட்டி சென்றது.

