Loading

தன்னுடைய தோழியைத் தன் மனைவித் தன்னிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுமே,‘என்னது காரிகாவா! என்னடா நடக்குது இங்கே?’என்று அவளைத் திகிலுடன் பார்த்தான் அபூர்வன்.

 

“ஹாய் அண்ணா! ஆரா உங்களைப் பத்தி நிறையச் சொல்லி இருக்கா! நீங்க நல்லா இருக்கீங்களா?”என்று தன்னிடம் விசாரித்தப் பெண்ணவளை நோக்கித் தன் இதழ்களில் வலுக்கட்டாயமாகப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, 

 

“நான் பிரமாதமாக இருக்கேன்மா” என அந்த வார்த்தைகளோடு தன் பேச்சை முடித்துக் கொண்டான்.

 

அந்தச் சமயத்தில் அங்கு வந்து சேர்ந்து,”அடடே ! யாரிந்தப் பொண்ணு?”என்று விசாரித்தார் நீலவேணி. 

 

“என்னோட ஃப்ரண்ட் அத்தை. இவ பேர் காரிகா”என அவருக்குப் பதிலளித்தாள் ஆராத்ரிகா. 

 

“ஓஹ்! உன்னோட ஃப்ரண்ட்டா?”என்று கேட்டு விட்டுக் கையிலிருந்த ஜூஸை ஆராவிடம் கொடுத்தார்.

 

“ஆமாத்தை” எனக் கூறி அவரிடமிருந்து பழச்சாற்றுத் தம்ளரை வாங்கிக் கொண்டு, 

 

“ ரிகா! இவங்க தான் என்னோட அத்தை நீலவேணி”என்று தோழிக்குத் தன் மாமியாரை மகிழ்ச்சியாக அறிமுகம் செய்து வைத்தாள் ஆராத்ரிகா.

 

“வணக்கம்மா”என்று நாச்சிமுத்து காலிலும் , நீலவேணியின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் காரிகா.

 

அதில் மனம் குளிர,”நல்லா இரும்மா”என்று அவர்கள் இருவரும் அவளை ஆசீர்வதித்தனர்.

 

“உட்காரும்மா. உனக்கும் ஜூஸ் கொண்டு வர்றேன்”என அவளை இருக்கையில் அமருமாறு கூறி விட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டார் நீலவேணி.

 

“ஆராவோட ஃப்ரண்டுன்னு சொல்ற! ஆனால் எனக்கு உன்னை இவங்க கல்யாணத்தில் பார்த்ததாகவே ஞாபகம் இல்லையேம்மா?” 

 

இந்தக் கேள்வித் தனக்குத் தோன்றாமல் போயிற்றே! 

 

நல்லவேளை தந்தை சரியாக கேட்டார்!

 

இப்போது இவள் என்னப் பதில் கூறப் போகிறாள் என்பதைக் கூர்மையாக கவனித்தான் அபூர்வன்.

 

ஆனால் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, 

 

“நாங்க காலேஜ் முடிச்சதும் கான்டேக்ட்ல இல்லப்பா. எங்க ஃப்ரண்ட் ஒருத்தவங்க இப்போ தான் ஆராவோட மேரேஜ் பத்தி சொல்லி அட்ரஸ் கொடுத்தாங்க. அதைக் கேட்டதும் தாமதிக்காமல் இவளைப் பார்க்கிறதுக்குக் கிளம்பி வந்துட்டேன்”

 

அதைக் கேட்ட அபூர்வனின் முகம் நொடியில் வாடி விட்டது.

 

இவள் எப்படி எளிதாக இவ்வாறு பொய்யைக் கூறுகிறாள்?

 

இது முழுக்க, முழுக்க இவளுக்கு ஆரா கொடுத்தப் பயிற்சியாகத் தான் இருக்க வேண்டும்! என்றெண்ணித் தன் மனைவியை முறைத்தான் அபூர்வன்.

 

அதைக் கண்டு கொண்டு யாரும் அறியாமல் அவனைப் பார்த்துக் கண்ணடித்துக் கேலியாகப் புன்னகைத்தாள் ஆராத்ரிகா.

 

“உன்னைப் பார்த்தால் கல்யாணம் ஆனப் பொண்ணு மாதிரி தெரியுதே! உன் ஹஸ்பண்ட் என்னம்மா பண்றாரு?”எனக் காரிகாவின் நெற்றி வகுட்டில் இருந்த குங்குமத்தைக் கவனித்து விட்ட அபூர்வனுக்கு அவளது கணவனைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள சரியான வாய்ப்பு கிடைத்து விட்டது.

 

அதை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

 

அதில் முகம் வெளிறிப் போன காரிகாவோ, கையாலாகாத்தனமானப் பார்வையைத் தோழியை நோக்கிச் செலுத்தினாள் காரிகா.

 

அவளுமே இப்போது இந்தக் கேள்வி எதற்கு? என்பதைப் போல் அபூர்வனை முறைத்தாள்.

 

அவனோ அதை தூசி போல் தட்டி விட்டவன் காரிகாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

 

‘அபூ ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க? ‘ என்று கண்களால் அவனிடம் வேண்டினாள்.

 

ஆனால் உதட்டைப் பிதுக்கியவனோ,”நீ சொல்லும்மா?”என மற்றுமொரு முறை அழுத்திக் கேட்டான் அபூர்வன்.

 

அந்தச் சமயத்தில் பழச்சாறு தம்ளருடன் அங்கே பிரவேசித்த நீலவேணியோ அதைக் காரிகாவின் கையில் கொடுத்து விட்டு, 

 

“ஆராம்மா. உன் ஃப்ரண்டுக்காக என்ன சமையல் செய்யலாம்னு இருக்க?”என அவர்கள் பேசிக் கொண்டு இருந்த விஷயம் இன்னதென்று அறியாதவரோ சமையல் பற்றிய பேச்சை எடுத்தார்.

 

அதில் ஆராவின் முகம் வெற்றிக் களிப்பில் பிரகாசித்தது.

 

காரிகாவும் இப்போது ஐயம் கொள்ளாமல் பழச்சாற்றைப் பருகினாள்.

 

“அத்தை! இவளுக்கு நெய் சாதம் ரொம்ப பிடிக்கும். நானும் காலேஜில் படிக்கும் போது அம்மாகிட்ட கேட்டுச் செஞ்சுத் தரச் சொல்லி இவளுக்குச் சாப்பிடக் கொடுப்பேன்”என்று அவர்களது கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்த தோழிகள் இருவரின் கண்களுமே அனிச்சையாக கலங்கி விட்டிருந்தது. 

 

“அப்போ அதையே செஞ்சுடலாம்மா! வேற எதுவும் ஸ்வீட் கூடச் செய்யலாம். கேரட் அல்வா செஞ்சிடலாம்”எனச் சமையலுக்கானப் பெருட்களைத் தயார் செய்தார் நீலவேணி.

 

“ ம்ஹ்ம்… அப்பறம் காரிகா…”என்று அவளிடம் தன் கணவன் ஏதோ கேட்க வருவதற்குள் முந்திக் கொண்டு, 

 

“அபூ! அவளே ரொம்ப நாளைக்கு அப்பறம் என்னைப் பார்க்க வந்து இருக்கா! நாங்க ரெண்டு பேரும் தனியாக மனசு விட்டுப் பேசனும்னு நிரைக்கிறோம். அதுக்கப்புறம் உங்களோட விசாரணை வச்சுக்கோங்க”என அவனிடம் அழுத்திக் கூறினாள் ஆராத்ரிகா. 

 

“மருமக சொல்றதும் கரெக்ட் தானேடா? நீ வந்து என் பக்கத்தில் உட்காரு”எனக் கூறி மகனைத் தன்னருகே வருமாறு அழைத்தார் நாச்சிமுத்து.

 

தனது மனைவியின் செய்கையால் எழுந்த கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டே அவளை முறைத்து விட்டுத் தந்தையிடம் சென்றான் அபூர்வன்.

 

“ரிகா! யாரு உனக்கு என் அட்ரஸ் கொடுத்தது? இன்னும் நம்ம ஃப்ரண்ட்ஸ் உங்கிட்ட பேசிட்டு இருக்காங்களா? ஏன்னா, இப்போ எல்லாம் எனக்கு யாருமே மெசேஜ் கூடப் பண்றது இல்லை. நானாக மெசேஜ், கால் பண்ணிப் பேசினால் தான் உண்டு”என்று அவளிடம் விசாரிக்க, 

 

“நானும் யார்கிட்டேயும் பேசலை டி. இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் கனெக்ட் ஆனோம்! நம்ம ப்ரண்ட் கனி தான் எனக்கு உன்னோட கல்யாணத்தைப் பத்திச் சொல்லி உன் மொபைல் நம்பரையும், அட்ரஸையும் கொடுத்தாள்!”என்று பதிலளித்தாள் காரிகா. 

 

இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து ஏதோ தாங்கள் ஒருவரையொருவர் இன்று தான் முதல் முறையாகப் பார்த்துக் கொள்வதாக காட்டிக் கொண்டு அனைவரின் முன்னிலையிலும் பேசிக் கொண்டு இருந்த தன் மனைவியைத் தான், அதிர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறைந்தக் கண்களால் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபூர்வன்.

 

அவன் கவனிக்கிறான் என்று தெரிந்தும் தோழியிடம் பேசுவதை நிறுத்தவில்லை ஆராத்ரிகா. 

 

சில மணி நேரங்கள் ஆராவும், காரிகாவும் தங்களுக்குள் ஆர்வமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

சில மணி நேரங்களில் சமையல் முடிந்து விடவே எல்லாரையும் உணவு அருந்த அழைத்தார் நீலவேணி. 

 

அவர் தயாரித்த உணவைப் பாராட்டிக் கொண்டே சாப்பிட்டாள் காரிகா.

 

தனது கணவனைப் பார்த்துப் புருவத்தை வேண்டுமென்றே ஏற்றி, இறக்கி வெறுப்பேற்றிக் கொண்டே சாப்பிட்டாள் ஆராத்ரிகா. 

 

அதில்,”கடுப்பேத்தாதடி!”என அவளது காதுகளில் மட்டும் கேட்கும் அளவிற்கு முணுமுணுத்து விட்டு எப்படியோ உணவுண்டு முடித்தான் அபூர்வன்.

 

இவை எதுவும் அறியாத நீலவேணியும், நாச்சிமுத்துவும் அவர்கள் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டுச் சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டனர்.

 

ஒரு வழியாய் உணவுண்ணும் படலம் முடிந்து விட்டது.

 

“ஆரா! உன் அட்ரஸ் கிடைச்சதுமே யோசிக்காமல் கிளம்பி உன்னைப் பார்க்கத் திடீர்னு வந்துட்டேன். எங்க வீட்டில் சொல்லவே இல்லை! கால் கூடப் பண்ணிட்டாங்க. நான் தான் சைலண்டில் போட்டு வச்சு இருந்தேன். இப்போ நான் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்”என்னு அவள் கிளம்ப எத்தனிக்கும் போது, அவளிடம் பேச முயன்றத் தன் கணவனுக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல் தோழியை வழி அனுப்பும் வகையில், 

 

“சரி ரிகா. நீ இங்கே இவ்ளோ நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணினதே சந்தோஷமாக இருக்கு! நீ வீட்டுக்குப் போய்ட்டு வா. அப்பறம் அவங்க உன்னைத் திட்டப் போறாங்க”என்றதுமே,

 

நீலவேணி மற்றும் நாச்சிமுத்துவிடமும்,”நான் கிளம்பறேன் ப்பா, பை, ம்மா”என்றவளோ, 

 

“டேக் கேர் ஆரா!”எனத் தோழியிடமும், 

 

“பை அபூர்வன் அண்ணா”என்று அவளது கணவனிடமும் விடைபெற்றுக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள் காரிகா. 

 

அவள் சென்றதும்,”ஆரா! நம்ம ரூமுக்கு வா. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”என்று மனைவியை அழைத்தான் அபூர்வன். 

 

“இதோ வர்றேன்ங்க” என அவன் அழைத்ததும் உடனே சம்மதித்து அவனுடன் தங்களது அறைக்குப் போனாள் ஆராத்ரிகா.

 

அவளைக் கட்டிலில் அமர்த்தி, மார்பின் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றுத் தன் மனைவியிடம், 

 

“சொல்லு ஆரா? எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க? எனக்கு இன்னைக்கு ரெண்டுல ஒன்னுத் தெரிஞ்சாகனும்?”என்று அவளிடம் தீர்க்கமாக வினவினான் அபூர்வன். 

 

அவனுடைய இந்த அதிரடி நடவடிக்கையால் சற்றுத் தயங்கி விட்டுப் பின்னர், அவனைப் போலவே, எழுந்து நின்றுக் கைகளைக் கட்டிக் கொண்டு, தனக்கும் கேள்விகள் கேட்க இருக்கிறது என்பதை அவனுக்குச் செய்கையில் தெரிவித்தாள்.

 

அதில்,“என்ன?”என்க, 

 

“நீங்க முதல்ல எனக்குப் பதில் சொல்லுங்க அபூர்வன்? எப்போ இருந்து எனக்குத் தெரியாமல் சில வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சீங்க?”எனத் தன்னிடம் பதில் கேள்வி கேட்டவளை முறைத்துப் பார்த்து, 

 

“ஆரா! எங்கிட்ட ஒழுங்காக உண்மையைச் சொல்லிடு”என்றவனுக்கு எந்த நேரமும் அவன் தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பொறுமைக் காணாமல் போய் விடும் என்பதை அவனின் குரலில் இருந்தே புரிந்து கொண்டவளோ, 

 

“அபூர்வன்! நான் கர்ப்பமாக ஆக இருக்கேன்னுத் தெரியும்ல? அப்பறம் ஏன் என்னை இப்படி ஸ்ட்ரெஸ் ஆக்குறீங்க? உங்கப் பொண்டாட்டியைப் பத்தியும், அவ வயித்துல வளர்றக் குழந்தையைப் பத்தியும் உங்களுக்குக் கொஞ்சம் கூடக் கவலையே இல்லையா? எனக்கு டயர்டா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கிறேன்”என்று தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது எனக் கூறிச் சமாளித்தாள் ஆரா.

 

“நீ எங்கிட்ட எதை மறைக்கிறன்றதை நான் தான் தெரிஞ்சுக்கிட்டேனே! நீ என்னை இவ்வளவு நாளாக நல்லா குழப்பி விட்டுட்டு இருந்த தானே? இப்போ நான் எதைக் கண்டுபிடிச்சேன்னு யோசிச்சு நீ குழப்பமாகிட்டு இரு!”என அவளிடம் நக்கலாகச் சொல்லி விட்டு, 

 

“இப்போ நீ ரெஸ்ட் எடு”என்று அவளிடம் ஏளனமாகச் சொல்லி விட்டு அறையிலிருந்து வெளியேறினான் அபூர்வன்.

 

அவன் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கே போய் விட்டாள் ஆராத்ரிகா!

 

தன் கணவன் அப்படி எதை தெரிந்து கொண்டார்? தான் அவனுக்குக் காரிகாவை அறிமுகப்படுத்தி வைக்கும் போது அவன் திடுக்கிட்டது இப்போது அவளது ஞாபகத்திற்கு வந்தது.

 

அப்படியானால், தனக்கும், காரிகாவிற்கும் என்னச் சம்பந்தம்? தாங்கள் இருவரும் எதற்காக இப்படி நடந்து கொள்கிறோம்? என்பது அவனுக்குத் தெரியாமல் இருக்கும் போது தனது வேறெந்த ரகசியத்தைக் கண்டு கொண்டேன் என்று இவ்வளவு உறுதியாக கூறுகிறார்? ஒருவேளை காரிகாவை இதற்கு முன்னரே பார்த்து இருக்கிறாரா? ஆனால் அவளிடம் தன் கணவனின் புகைப்படத்தைக் காட்டும் போது அவனை அவள் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்று எதுவும் சொல்லவில்லையே! 

 

இன்று தன் கணவனும், காரிகாவும் நேரில் சந்தித்த போதும் கூட காரிகாவின் வதனத்தில் எந்த அதிர்ச்சியும் தோன்றவில்லையே! 

 

எனவே அவளும் இவரைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை! 

 

அபூர்வன் அறையில் இல்லாதது வசதியாகி விடத் தன் இன்னொரு தோழி கனிஷ்காவிற்கு அழைத்து, 

 

“கனி!”எனப் பதறிப் போய்ப் பேசினாள் ஆராத்ரிகா.

 

“என்ன ஆரா? எப்போ கால் பண்ணாலும் பதட்டமாகவே பேசுற! இதனால் உன் உடம்புக்குத் தான் பிரச்சினை வரும்”என அவளைக் கடிந்து கொண்டாள் கனிஷ்கா.

 

“இன்னைக்குக் காரிகா வீட்டுக்கே வந்துட்டாள் டி!”என அவளிடம் கலக்கத்துடன் உரைக்க, 

 

அவள் கூறியதைக் கேட்டவுடன் காரிகாவைத் தன் மாமனார் வீட்டிற்குள் அழைத்து வந்த போது ஆரா அடைந்த அதே அதிர்ச்சி இப்போது கனிஷ்காவிற்கும் ஏற்பட்டது.

 

“ஏய்! என்னடி சொல்ற? அவ ஏன் அங்கே வந்தா? ஏன் இப்படி பண்றா? அவளைத் தான் நீ இருக்கிற பக்கமே வரக் கூடாதுன்னுச் சொல்லி இருக்கோமே?” என்று காரிகாவைப் பொரிந்து தள்ள, 

 

“அவள் வந்தது மட்டும் இல்லாமல் இவரு வேற எதையோ கண்டுபிடிச்சுட்டேன்னு பீதியைக் கிளப்பி விட்டு இருக்காரு கனி”என்றிருந்தாள் ஆராத்ரிகா. 

 

இதைக் கேட்டு மேலும் பீதி அடைந்து,”ஆரா! நீ என்ன எனக்கு இவ்வளவு ஷாக் கொடுக்குற? என்னால் முடியலைடி! அபூர்வன் என்னக் கண்டுபிடிச்சாருன்னு ஏதாவது உங்கிட்ட சொன்னாரா?”எனப் பதட்டத்துடன் கேட்க, 

 

“இல்லடி. அவர் இன்னும் ஏன் வாயைக் கிளறப் பார்த்தாரு! உடனே நான் டயர்ட்டா இருக்கு, ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னதால் அவர் வெளியே போய்ட்டாரு. அதனால் தான் அவருக்குத் தெரியாமல் உனக்குக் கால் பண்ணிப் பேசிட்டு இருக்கேன்”என்ற ஆரா கூறியதைப் புரிந்து கொண்டவள் அபூர்வனைச் சமாளிக்க என்னத் திட்டம் வரையறுக்கலாம்? என அவளிடம் கேட்கத் தொடங்கினாள் கனிஷ்கா.

 

அதன் பின்னர்,

 

“நீ பயப்படாதே! அவருக்கு உன் பயம் தெரிஞ்சா நீயே சொல்லிடுவன்னுத் தைரியம் வந்துடும். அவரைச் சுத்தல்ல விடனும். நீ எப்பவும் போல இருக்கிற மாதிரி பிகேவ் பண்ணு. உங்க வீட்டுக்கு வந்தது காரிகா தான்னு அவருக்கு நூறு சதவீதமாகத் தெரியாது தானே? அதனால் அது அவ தானா? இல்லை, இல்லை வேற யாரோவான்னு? யோசிக்க வை. அப்பறம் அவரே குழப்பமாகி இதை இத்தோடு விட்ருவாரு”என்று நன்றாகத் திட்டம் வகுத்து விட்டு அதை வைத்து அபூர்வனைக் குழப்பி விடத் தீர்மானித்தனர் ஆராத்ரிகாவும், கனிஷ்காவும்.

 

– தொடரும்

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்