14-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 14 காலையில் எழுந்த வசந்தராவிற்கு இதுவரை இல்லாத அளவு மனம் நிம்மதியில் திளைத்தது. புது இடத்தில் உறங்குவது போல் இல்லாமல் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் தான். கண் விழித்தவள் தன் அருகில் பார்க்க, அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான் சஞ்சய். தன் வாழ்வில் இவன் வந்தது வரமாக இருக்குமா என்று யோசித்தவளுக்கு கட்டாயமாக வரமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலமாகவே இருந்தது. திருமணம் முடிந்த ஒரு நாளிலேயே  கணவனைப் பற்றி அனுமானித்ததில் அவன் சற்று அமைதியானவனாகத் தோன்றினாலும் தன்னிடம் அப்படி இல்லையோ என்று எண்ண வைத்தது. அது சற்று மகிழ்வையும் நிம்மதியையும் ஏற்படுத்தியது. அதுவே அவள் முகத்தில்  மென்நகையை ஏற்படுத்த, ஏற்கனவே இவளின் உடை பெட்டிகள் அறைக்கு வந்திருக்க. தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு நேற்று அத்தை அவளின் அவசரத்திற்கு தேவையானவைகளை கொடுத்திருந்ததில் அவற்றையும் எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். குளித்து முடித்து மயில் நிற போச்சம்பள்ளி புடவையை அணிந்தவள் தலைமுடியை தளர பின்னலிட்டுக் கீழே இறங்கி சென்றாள். உறங்கும் சஞ்சயை ஒரு பார்வை பார்த்துவிட்டு. இவள் கீழே இறங்கி வரும்போது சோபாவில் அமர்ந்து இருந்தார்கள் பிரபுவும், அனுபமாவும். இவளைப் பார்த்ததும் “வா, மா.” என்று அழைத்த அனுபமா. அவள் கைகளைப் பிடித்தபடியே டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த பிளாஸ்கில் ஏற்கனவே தயாராக இருந்த காபியை அவளுக்கு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தபடியே, “நல்ல தூங்கினியா.? வயிற்று வலி எப்படி இருக்கு.? மாத்திரை எதுவும் போடுறியா.?” எனக் கேட்டபடியே அவளிடம் காபி கப்பை கொடுக்க. “நல்லா தூங்கினேன் அத்தை. வலி இப்போ பரவால்ல. ரொம்ப வலி இருந்தா மாத்திரை போடுவேன். ஆனா இப்ப வேண்டாம். வலி அவ்வளவா இல்லை…” என்றாள் “அவ்வளவா இல்லன்னா. கொஞ்சம் இருக்கா என்ன.? மயில்டு டோசேஜ்ல ஒரு மாத்திரை தரவா.?” என்ற டாக்டரத்தையின் கேள்விக்கு, “இப்போ வேண்டாம் அத்தை. வேணும்னா வாங்கிக்கிறேன்.” என்றாள் இவளும். “சரி மா. நீ காபி குடிச்சிட்டு சஞ்சய்க்கும் எடுத்துட்டு போ. அவன் எழுந்துட்டானா.?” “இன்னும் இல்ல அத்தை.” “சரி, சரி இன்னைக்கு மறு வீட்டுக்குப் போகணும்.சீக்கிரம் கிளம்பி வாங்க.” என்றவருக்கு சம்மதமாகத் தலையசைத்தவள். அவர் கொடுத்த காபி பிளாஸ்கை எடுத்துக்கொண்டு தங்கள் அறையை நோக்கிச் சென்றாள் வசுந்தரா. கணவன்  எழுந்து இருப்பானா  என்ற கேள்வியுடனும் எப்படி அவனை எதிர்கொள்வது என்ற தயக்கத்துடனும். இவள் சென்றபோது அவன் குளித்து உடைமாற்றி கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தான். கண்ணாடியினூடே  இவளைப் பார்த்துவிட்டு, “ஹாய்.” என்று புன்னகை முகத்துடன் அழைக்க. இவளும் “ஹாய். ”  என்றாள் மெதுவாக. “காபி.” என்று இவள் ஃப்ளாஸ்க்கை உயர்த்தி காண்பிக்க “வரேன், வரேன்.” என்றவன் இவளின் அருகில் வருவதற்குள்ளாகக் கப்பில்  ஊற்றி அவனிடம் நீட்டி இருந்தாள். “நீ குடிச்சிட்டியா.?” “குடிச்சிட்டேன்.” தனக்கான காபியை அருந்தி முடித்தவன் தன் அலமாரியிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு இவளின் அருகில் வந்தவன், அவள் வலது கையை இழுத்து அதில் அவளுக்காக அவன் முதல் முதலாக வாங்கி வந்த தங்க பிரேஸ்லெட்டை அனுபவித்தான். தன் கையை அலங்கரித்த நகையைப் பார்த்தவளுக்கு மகிழ்வும் சங்கடமும் சேர்ந்து எழுந்தது. இதைப் பற்றி என்ன விளக்கத்தை அவனுக்குக் கூற முடியும் என யோசித்தவளாகத் தவிப்புடன் அவனைப் பார்க்க அவள் நிலை புரிந்தவன், “இந்த நகையை உன் கையில பாக்கணும்னு அன்னைக்கு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, அன்னைக்கே இது உன் கையில இல்லைன்றத பின்னால புரிஞ்சிகிட்டேன். அத நான் எங்க தெரிஞ்சிக்க போறனோன்னு பயந்து தானே அன்னைக்கு அப்படி ஓடுன நீ.”எனக் கேட்டவனுக்கு எந்தப் பதிலும் கூறாமல் கவலையுடன் அவனைப் பார்க்க, “சரி, இது எப்படி யாரால உன் கைய விட்டுப் போச்சுன்னு நான் தெரிஞ்சுக்க விரும்பல. ஆனா இனி எப்பவுமே இது உன் கையில தான் இருக்கணும்.” என்று கூற, சந்தோஷமாகத் தலையசைத்துக் கொண்டாள் அவளும். “சரி வா, உனக்கு ஒரு இடத்தைக் காட்டுறேன்.”என்றபடி அவள் தோளில் கைப்போட்டு அழைத்துச் சென்றான் பால்கனிக்கு. சற்று சங்கோஜமாக இருந்தாலும் சொல்ல முடியா மகிழ்வில் மனம் தழும்ப அவனோடு சென்றவளுக்கு. “அங்க பாத்தியா.?” என அவன் காட்டிய இடத்தைப் பார்த்து, பெரும் வியப்பாக இருந்தது. அவள் நின்றிருந்த இடத்திலிருந்து எதிரில் பார்க்கும்போது, மதிய நேரத்தில் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டும் மழலையர் பள்ளியின், அவள் ஆஸ்தான இடம் பளிச்சென்று தெரிந்தது. “மூணு மாசம் முன்ன ஒரு சின்ன ஆக்சிடென்ட். வேலைக்குப் போக முடியல. வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிகிட்டேன். ஒரு நாள் செம்ம ஸ்ட்ரெஸ் வேலையில. அப்போ இந்த மரத்திலிருந்து ஒரு குயில் சத்தம். அது மனசுக்கு கொஞ்சம்  இதமளித்தது. கொஞ்ச நேரம் ஃப்ரெஷா காத்து வாங்கலாம்னு வெளியில வந்தா.? கூவுற குயிலுக்குப் போட்டியா, சாப்பிடணும் செல்லக்குட்டின்னு ஒரு குரல். என்னடா இது குயில் தமிழ்ல பேசுமான்னு நினைச்சுக்கிட்டே பார்த்தா. எதிர்ல ஒரு குழந்தையை இடுப்புல இடுக்கி கிட்டு கவிதை மாதிரி நீ நின்னுட்டு இருந்த. அப்ப விழுந்தவன் தான். தொடர்ந்து ஒரு வாரம் உன்னைப் பாத்துட்டு இருந்தேன். நான் மட்டும்தான் உன்னைப் பாத்துட்டு இருந்தேன். ஆனா நீ நிமிர்ந்து ஒரு முறை கூட என்னைப் பார்க்கல. என்னடா இது நாம நிக்கிறதே இந்தப் பொண்ணுக்கு தெரியலையான்னு  நெனச்சேன். அப்புறம்தான் தோணிச்சு ஒருவேளை இந்த மரம் தான் நம்மள மறைக்கிதோன்னு. தேவை இல்லாத கிளைகள் எல்லாத்தையும் வெட்டி, உன்ன பாக்குற மாதிரி செய்தேன். அப்புறமாவது நீ என்னைப் பாப்பேன்னு பார்த்தா. ம்ம்க்கும். நீ நிமிர்ந்து கூடப் பாக்கல. சரி, உன்னைப் பார்க்க வைக்கணும்னா  டெலிபதி மூலமா தான் முயற்சி பண்ணனும்னு என்னைப் பாரு, என்னைப் பாருன்னு  நான் மனசுல சொல்லிக்கிட்டே இருந்தேன்.ஒரு வழியா ஒரு நாள் நிமிர்ந்து என்னை ஒரு முறை பார்த்தவ தான். அதோட அடிச்சு, புடிச்சு ஓடிப்போயிட்ட. அதுக்கப்புறம் உன்ன பாக்கவே முடியல. எனக்கும் கால் நல்லா ஆயிடுச்சு. ஆஃபீஸ்க்கு போக வேண்டிய கட்டாயம். ஆனா உன்னுடைய நினைப்பு மனச பிராண்டிகிட்டே இருந்தது. உன்கிட்ட வந்து லவ் சொல்லி, அதுக்கு நீயும் சம்மதிச்சு அதுக்கப்புறம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்பவே கஷ்டம் என்று நினைத்தேன். அதான் நேரடியா அம்மா கிட்ட சொன்னேன். அவங்க அப்பா கிட்ட பேசி, அழகா கல்யாணத்தை முடிச்சு. உன்னை இப்படி என் பக்கத்துல நிக்க வச்சுட்டாங்க.”  என்றவனை. அதிர்வோடு விழிகளை விரித்துப் பார்த்தபடி நின்றிருந்த மனையாளின் நெற்றி முட்டி அவளை மணம் முடித்த கதையை மகிழ்வோடு கூறியவனை விழிகளில் நிறைந்து விட்ட கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பெண் அவள். “என்னை உங்களுக்குப் பிடிக்குமா.?” என்ற அவளின் கேள்விக்கு “ரொம்ம்ம்ப.” என்றான் இழுத்து. “ஏன்.? என்கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல்.?”என்றவளின் கேள்விக்குப் பதில் கொடுக்க முயன்றவனை தடுத்தது அனுபமாவின் “சஞ்சய்.” என்று அழைக்கும் குரல். “மறு வீட்டுக்குப் போகணும் பா. நேரம் ஆயிடுச்சு.” என்றவர் குரல் கொடுக்க. “இதோ மா. டூ மினிட்ஸ் வந்துடுறோம்.” என்றவன் மனைவியைப் பார்த்து “போலாமா.” எனக் கேட்க, தன்னை திருமணம்  முடித்ததற்கு காரணமான நிகழ்வுகளை அவன் கூற கேட்டதிலிருந்தே மனம் தழும்ப நின்றிருந்தவள் சம்மதமாகத் தலையசைத்து அவனோடு இறங்கி சென்றாள். தன் தந்தை வீட்டிற்கு. இவர்களுடன் பிரபுவும் அனுபமாவும் சேர்ந்தே கிளம்பினார்கள். ரகுபதியின் வற்புறுத்தலால். பெண் மாப்பிள்ளையுடன் இவர்களும் கட்டாயம் வர வேண்டும் என அவரின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை பிரபுவினால். மகனும் இவர்கள் வந்தே ஆக வேண்டும் எனக் கூறி இருக்க. அனைவருமே கிளம்பி சென்றார்கள் வசுந்தராவின் வீட்டிற்கு. தன் புத்தம் புது  கணவன், மாமனார், மாமியாருடன் தன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த வசுந்தராவிற்கு ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. முதலில் சற்று அதிர்ந்தாலும் பின்பு தன்னை சமாளித்தபடி உள்ளே நுழைந்தாள். அவளை லேசாக அணைத்து வரவேற்ற ரகுபதி, “எப்படி மா இருக்க.”என முகம் நிறைந்த புன்னகையுடன் கேட்க அதே புன்னகையுடன் “நல்லா இருக்கேன் பா.” என்று பதிலளித்தாள் இவளும். அதே புன்னகையுடன் மருமகனையும், சம்மந்திகளையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்குக் குறையாத வரவேற்பை கொடுத்தார்கள் வீட்டிலிருந்து மற்றவர்களும். தந்தை தன்னை பார்த்து மகிழ்வதில் எந்த அதிசயமும் இல்லை. ஆனால் மற்றவர்களைப் பார்த்தவளுக்கு தான் ‘என்ன இது.? எதற்கு இந்த  நடிப்பு.?’ என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் இனி தன் வீட்டாராக இருக்கும் சொந்தங்களை மதித்து அன்போடு பேசியதிலும் வரவேற்றதிலும் மகிழ்வே பெண் அவளுக்கு. இதற்குப் பின் நிச்சயமாகத் தந்தையின் கண்டிப்பு இருந்திருக்கும் என்று எண்ணம் இருந்தது அவளுக்கு. மதிய உணவிற்கு அனைத்தையும் வெளியில் ஆர்டர் செய்து இருந்தார்  ரகுபதி. மாப்பிள்ளைையையும், பெண்ணையும் ஒன்றாக அமர வைத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடச் சொல்லிக் கேலி செய்து கலகலப்பாக மாற்றி இருந்தார்கள் வசுமதியும் அவள் கணவனும். அவ்வப்போது இவர்களின் கேலியில் கலந்து கொண்டாள் வசந்தி. வெட்கமும், சிரிப்பும் போட்டி போட இனிதாகவே முடிந்தது உணவு நேரம். மருமகனை  சிறிது நேரம் ஓய்வெடுக்க அழைத்துச் செல்லுமாறு மகளிடம் கூறிய ரகுபதி. மற்றவர்களை எங்கு ஓய்வெடுக்க அழைத்துச் செல்வது என யோசித்துக் கொண்டிருக்க, தங்களுக்கு எந்த வித ஓய்வும் தேவையில்லை என்பது போலச் சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள் பிரபுவும், அனுபமாவும். அறைக்குள் வந்த சஞ்சய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு விழிகளைச் சுழற்றி அறையைப் பார்த்தவன் “இந்த அறை உனக்கு மட்டும் தானா.?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்க “இல்லை, இல்லை எனக்கும் வசந்திக்கும் சேர்த்து.”  என்றாள் மெதுவான குரலில். “ஹ்ம்ம்…’ என்று கேட்டுக் கொண்டவன் பின், ஞாபகம் வந்தவனாக, “உன்னுடைய திங்ஸ் வேற எதுவும் இருந்தா எல்லாத்தையுமே எடுத்துக்கோ. நாம் அடிக்கடி இங்க வந்துட்டு இருக்க மாட்டோம்.”என்றான் நிலைமையை முதலிலேயே கூறிவிடும் நோக்கத்தில். அவளுக்குமே அங்கு அடிக்கடி வரும் எண்ணம் இல்லாததால். “திங்ஸ் பெருசா எதுவும் இல்ல. என்னோட ஸ்கூல், காலேஜ் சர்டிபிகேட்ஸ் மட்டும் இருக்கும். அதை எடுத்துக்கணும்னு நினைச்சுகிட்டு தான் நானும் வந்தேன்.” என்றவள் அங்கிருந்த ஒரு சிறு ஷோல்டர் பேகில், மர அலமாரியில் இருந்தவைகளை எடுத்து வைத்துக் கொண்டாள். இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது வெளியில் பிரபுவும் ரகுபதியிடம், “அப்புறம் ரகு, நாங்க ஈவினிங் காபி குடிச்சிட்டு கிளம்புறோம்.” “என்ன பிரபு இப்படி சொல்றீங்க.? பொண்ணு மாப்பிள்ளை இன்னைக்கு நம்ம வீட்ல தானே தங்கணும். நான் எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கேனே. உங்களுக்கு ஏதாவது மரியாதை குறைவா நடந்திருச்சா…?”  என்று’ தங்கள் வீட்டில் வசதி குறைவாக இருப்பதால் கிளம்புகிறார்களோ.? அல்லது வேறு ஏதும் சங்கடம் நிகழ்ந்துவிட்டதோ.’ என நினைத்துப் பதைப்பதைப்புடன் ரகுபதி கேட்க. “ரகு பதட்டப்படாதீங்க. உங்களுக்கே தெரியும் எங்களுக்கு அதிக சொந்தக்காரங்க கிடையாது. எனக்குப் பிறந்ததிலிருந்து யாரும் இல்லை. ஆசிரமத்தில் வளர்ந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் படிக்க வச்சாரு. படிப்பு மட்டும் தான் சாஸ்வதம்னு அதைப் பிடிச்சு டாக்டருக்கும் படிச்சேன். அங்க தான் இவளைப் பார்த்தேன். மனசுக்கு பிடிச்சி இருந்தது. பேசினோம், பழகினோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவளுக்கும் பெருசா யாரும் இல்ல. கூடப் பிறந்த ஒரே ஒரு அக்கா மட்டும் தான். நீங்களே பார்த்திருப்பீங்களே கல்யாணத்துக்கு வந்தாங்க. கல்யாணம் முடிச்சதும் கிளம்பிட்டாங்க. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. அவங்க அவங்களுக்கு, அவங்க, அவங்க வாழ்க்கை.இப்போ உறவா எங்களுக்குக் கிடைத்திருக்கிறது நீங்க ஒருத்தர் தான். உறவுங்குறத விட உங்கள நான் என் பிரண்டா தான் பார்க்கிறேன். அதிக சொந்தம் இல்லாமல் சஞ்சய் தனியாவே வளர்ந்துட்டான், வாழ்ந்துட்டான்.புது இடத்துல தங்கறது அவனுக்குச் செட்டாகாது. கொஞ்சம் சங்கோஜமா ஃபீல் பண்ணுவான்.  கொஞ்ச நாள் போகட்டும். எங்கே போயிட போறாங்க.? கட்டாயமா இன்னொரு நாள் வந்து தங்குவாங்க. இப்ப நீங்க எதுவும் நினைச்சுக்காம  மாப்பிள்ளை, பெண்ணை எங்க கூட அனுப்பி வைக்கணும்.” என்ற பிரபுவின் தெளிவான பேச்சில் அவர் கூற வருவது புரிய அமைதியாக அமர்ந்திருந்த ரகுவை பார்த்தவர். “சரி நாங்க இரவு உணவையும்  சாப்பிட்டுட்டு கிளம்புறோம். போதுமா.” எனக் கேட்கச் சிறு சங்கடம் இருந்தாலும். மனைவியையும் மற்ற இரு மகள்களையும்  பற்றித் தெரிந்தவராக, இதுவும் நல்லதுக்கு தான். என நினைத்தவர் மகிழ்வுடனேயே சம்மதமாகத் தலையசைத்தார். சொன்னது போல இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பி சென்றார்கள். தாங்கள் இங்குத் தங்க வில்லை என்பது பிறகே தெரிந்தது வசுந்தராவிற்கு. அது அவளுக்கு மகிழ்வையே அளித்தது. அன்னையோ, சகோதரிகளோ கணவனுக்குச் சங்கடம் தரும் விதத்தில் ஏதேனும் பேசி விட்டால் பின்பு அவளுக்குத்தான் அது மன வலியைக் கொடுக்கும் என நினைத்தவள் இப்போதே கிளம்புவது  நல்லது என்றே நினைத்தாள். அவ்வளவுதான். இனி, இந்த வீட்டுக்கும் தனக்கும் ஆன உறவு. என்று நினைத்தவளுக்கு லேசான வருத்தம் இருந்தாலும் இதைவிட நிம்மதியான வாழ்வு தனக்கு கிட்டியதில் மகிழ்வுடன் தன் இல்லம் நோக்கிச் சென்றாள் கணவனுடன். அனைவரிடமும் விடை பெற்று கணவனுடன் அவர்களின் காரில் ஏறி அமர்ந்தவளுக்கு வீடு வரும் வரை தான் கணவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைத் தமக்கை மூலம் அறிந்து கொண்டதில் மனம் நிறைந்த மகிழ்வு தான்.

தொடரும்..

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்