Loading

அத்தியாயம் 15

மீசை குத்தும் உணர்வு மாலை தாண்டியும் நீங்கவில்லை அகமொழிக்கு.

வாயைத் துடைத்தபடியே இருந்தாள். இரவு அவன் வருவதற்கு முன்பே உறங்கி விட்டாள். மறுநாள் அவள் எழுவதற்கு முன்பே அவன் ரிஸார்ட்டிற்குக் கிளம்பி விட்டான்.

பின், அன்விதாவின் உதவியுடன் உடைகளை அவனது அறையில் செட் செய்தவள், கீழிறங்கி வந்தாள்.

“மோளே அன்வி, வெள்ளம் (தண்ணீர்) எடுத்திட்டு வா…” கல்யாணி அறையில் இருந்து குரல் கொடுக்க, அன்விதா அப்போது தான் அவளது அறைக்குச் சென்றிருந்ததில், அகமொழியே நீர்க்குவளையுடன் கல்யாணியின் அறைக்குச் சென்றாள்.

அவரோ இவளைக் கண்டு புருவம் சுருக்கிட, அவரை எப்படி அழைப்பது எனத் தெரியாதவளாய், “இந்தாங்க பாட்டி…” எனக் கொடுக்க, “சுஜாதா…” எனக் குரல் உயர்த்தினார்.

அப்போது தான் சுஜாதாவிற்கு மாமியாரின் குரல் கேட்க, வேகமாக வந்தார்.

“எந்தா அம்மே?”

“இனி வெள்ளம் சோதிச்சால் நீயோ அன்வியோ எடுத்து தந்தா மதி!” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட, சுஜாதா கையைப் பிசைந்தார்.

பொதுவாக கல்யாணி கோபப்படும் ரகம் அல்ல. அதே நேரம் பிடிக்காத விஷயத்தை அவரிடம் திணிப்பது தவறாக முடியும் என்று உணர்ந்தவர், “நீ போ…” என மருமகளுக்குக் கண்ணைக் காட்டி அனுப்பி விட்டுத் தானே நீர் கொணர்ந்து கொடுத்தார்.

அகமொழி தோளைக் குலுக்கிக் கொண்டாள். ‘குடிச்சா குடிங்க, குடிக்கலைனா போங்க…’ என்ற மனநிலை தான் அவளுக்கு.

தேயிலை எஸ்டேட்டோடு பலவித வியாபாரங்களைப் பரம்பரையாகக் கொண்டுள்ள குடும்பம். மகன்கள் வேறு தொழிலில் காலூன்றிய பிறகு, எஸ்டேட்டை மேற்பார்வையிட, கோபால கிருஷ்ணன் சென்று விடுவார். சில நேரம் கேசவ நாயரும் மகனுடன் சென்று வருவார்.

இதெல்லாம் அன்விதா மேலோட்டமாகக் கூறியது. அங்கு வீட்டைச் சுத்தம் செய்யவும், சமையலறையில் உதவவும் ஆள்கள் இருந்தனர். சமைப்பது மட்டுமே வேலை. அதிலும் சுஜாதா செய்தால் தான் வீட்டினர் விரும்பி உண்பர் எனவும் அன்விதா கூறி இருந்தாள்.

செய்ய வேறு வேலை இல்லாததால், மனத்தை மாற்ற வசந்திக்கு அழைத்தாள்.

“எப்படி இருக்க அகா?” மகளைப் பிரிந்த வேதனை அவர் குரலில் தெரிந்தது.

“ம்ம்… நீங்க எப்படி இருக்கீங்க? வேலைக்கு ஆள் வரச் சொல்லிருந்தேன் வந்தாங்களா?”

“அது… வந்து…” வசந்தி தயக்கத்துடன், “நீ அனுப்புன ஆளை உன் அப்பா வேணாம்னு சொல்லிட்டாரு…” என்றதில் அவள் கொந்தளித்தாள்.

“வேணாம்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாராம்? ரெண்டு பேரும் வேலை செஞ்சு பிரச்சினையை இழுத்துக்கப் போறிங்களா?”

“அது… எங்களுக்கு வர்ற பென்சன் பணத்துல என்ன முடியுமோ, அதைப் பார்த்துக்கலாம்னு சொல்றாரு அகா… ஏன் இவ்ளோ வீம்பா இருக்காருன்னு எனக்கும் புரியல…” வசந்தி வருத்தம் கொள்ள, அழைப்பைத் துண்டித்தவளுக்கு ஆத்திரம் சூழ்ந்தது. வேறு யார் மீது, சாட்சாத் நாயகனின் மீதே தான்.

இரவு அவன் வருவதற்கும் தாமதமாக, உணவை உண்டு விட்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அன்று மதியத்திற்கு மேல் விஷ்ணுவும் வீட்டில் இருக்க, அன்விதாவிடம் பேச இயலவில்லை. அனகாவும், தேர்வு இருக்கும் பொருட்டு வேலையாக இருக்க, தானும் கிளாம்பிங்கிற்குச் சென்று வந்திருக்கலாம் என்ற சோர்வு தாக்கியது.

மறுநாளில் இருந்து அடுத்த பத்து நாள்களும் அவளுக்கு வரிசையாக புக்கிங் இருந்தது. எனவே, இன்று வயிற்று வலியில் எதற்கு அலைந்து கொண்டு என்றெண்ணி ஓய்வெடுத்துக் கொண்டாள்.

இது மாதிரி, செய்ய வேலையின்றிப் படுத்ததெல்லாம் நினைவிலேயே இல்லை. எப்போதும் மூளை பரபரப்பாகவே இருக்க வேண்டும் அவளுக்கு.

பின் மிகவும் தாகம் எடுக்க பாட்டிலை எடுத்துக்கொண்டு கீழே சென்றாள்.

அப்போது தான் வீட்டினுள் நுழைந்த அர்ஜித் அகன், அடுக்களையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்க, அங்குச் சென்று பார்த்தான்.

நினைத்தது போலவே, சுஜாதா தான் இரவு உணவிற்குச் சேர்ந்த பாத்திரங்களை சிங்கில் போட்டுக் கொண்டிருந்தார்.

அன்றும் இரவு வர வேண்டிய வேலையாள் வரவில்லை போலும்!

மடிக்கணினி பையை டேபிளின் மீது வைத்தவன், ஏப்ரானை எடுத்துக் கட்டிக்கொண்டு “நிங்கள் மாறிக்கோ (தள்ளிக்கோங்க)!” என்றான்.

அவரோ எதுவும் பேசாமல் அவன் மீதிருக்கும் கோபத்தையும் பாத்திரத்தில் காட்ட, “உங்களைத் தள்ளுங்கன்னு சொன்னேன்!” என அதிகாரமாகக் கூறினான்.

“யாரும் இவிடே வந்து பாசத்தைக் கொட்ட வேண்டாம்… எனிக்கு இதொக்கே நோக்கான் அறயாம்.(எனக்கு பார்த்துக்க தெரியும்)” என அவன் முகம் பாராது கழுவத் தொடங்க, அவனுக்குக் கொதிப்புக் கூடியது.

அவரின் மேல் அல்ல, இதற்குக் காரணமானவளின் மீது.

“இப்ப மாறி நிக்கான் போவுந்தோ இல்லியோ? (இப்ப தள்ளப் போறீங்களா இல்லையா)” எனப் பல்லைக் கடிக்கும்போதே, காதில் ஹெட் போனை மாட்டித் தலையை ஆட்டியபடி அங்கு வந்தாள் அகமொழி.

இருவரையும் அங்கு எதிர்பாராது விழித்தவள், ஹெட்போனைச் கழற்றியபடி சிங்கை எட்டிப் பார்த்தாள்.

ஆடவனின் பார்வை வேறு அனலாகச் சுட்டது.

ஒன்றும் புரியாதவள், “என்ன பண்றீங்க? ஆள் வருவாங்கன்னு சொன்னீங்க அத்தை” என வினவ, “இல்ல மோளே, திடீர்னு வந்தில்லா. நிங்கள் போங்க…” என்றதில் அர்ஜித் அகன், “இப்ப நிங்கள் மாறியில்லா, இவிடே நடக்கனதே வேற… (இப்ப நீங்க தள்ளலைன்னா இங்க நடக்கிறதே வேற)” என்று கர்ஜித்தான்.

அவனது ஏப்ரானை அப்போது தான் கவனித்தவள், ‘இவன் பாத்திரம் கழுவிக் கொடுக்கப் போறானா என்ன?’ எனக் குழப்பமாகப் பார்த்து விட்டு, “ரெண்டு பேருமே போறீங்களா… அத்தை ஆள் வரலைன்னா சொல்லிருக்கலாம்ல, நீங்க நகருங்க…” என்று அவரை நகர்த்தினாள்.

அவரோ பதறி, “இல்ல அகா… வேண்டா. இதெல்லாம் ஒரு வேலையானோ? ஞான் நோக்கிக் கொள்ளாம். நினக்கு ஏற்கெனவே தேகத்தினு சுகமில்லாலோ.” என மறுக்க,

“அதுலாம் ஒன்னும் பிரச்சினை இல்ல… என் வீட்ல நான் தினமும் பார்க்குற வேலை தான்.” என்றாள்.

“பரஞ்சால் கேள்க்கு அகா… அவிடே ஒரு நாளைக்கு மொத்தமே இத்தர பாத்திரம் தன்னே இரிக்கும். இவிடே ஒரு வேளைக்கே குவிஞ்சுடும். நினக்கு செய்யான் பற்றில்ல (செய்ய முடியாது). கஷ்டப்படண்டா.”

“அட, இதுல என்ன கஷ்டம்?” எனும்போதே ஆடவனின் பார்வை அவளை மொய்க்க,

“ஹாங்… உங்களை இம்ப்ரெஸ் பண்றதுக்குலாம் நான் பண்ணல.” என அவனுக்கும் சேர்த்தே விளக்கம் கொடுத்து அவனிடம் முறைப்பைப் பரிசாக வாங்கிக் கொண்டாள்.

“நிஜமாவே நான் பார்த்துப்பேன் அத்தை… ஒழுங்கா போங்க. புதுப்பொண்ணு, பழைய பொண்ணுன்னு மொக்கை போடாதீங்க.” என்றதில், சுஜாதா தான் செய்வதறியாது நின்றார்.

அவளோ வேலையில் கவனமாகி விடப் பெருமூச்சு விட்டவர், “டைனிங் டேபிளில் பட்சணம் (சாப்பாடு) இண்டு.” என்றார்.

“நான் தான் சாப்பிட்டேனே” அவள் கூறியதில் சுஜாதா முறைக்க, “ஓ… பார்வை இங்க, ஸ்பீச் அங்கயா! எதுக்கு இந்த வீண் வெட்டி பந்தா… என் அப்பாவும் இப்படித் தான் பண்றாரு.” என நொடித்தாள்.

“பெற்றவங்களுக்குச் சில விஷயங்களை அக்செப்ட் செய்யனது கஷ்டம் மோளே!” என இறுக்கத்துடன் கூறியவர் அங்கிருந்து சென்று விட,

‘நீங்க ஒழுங்கா வளர்த்திருக்கணும்.’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

சத்தமாகப் பேசி அவனிடம் வாதம் செய்யும் அளவில் எல்லாம் உடம்பில் தெம்பு இல்லை. ஏற்கெனவே, எப்போதும் விட உதிரப்போக்கு அதிகம் இருந்தது அவளுக்கு.

அவளைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்தவன், அவள் கையைப் பிடித்து ஓரமாக நிற்க வைத்து விட்டுத் தானே வேலையைச் செய்ய அகமொழி தடுமாறினாள்.

“நீ விடு அகன், போய் ப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடு…”

“ஞான் சாப்பிட்டு தன்னே வந்தது. நினக்குத் தன்னே நிக்கானே முடியலைல. (உனக்கு தான் நிக்கவே முடியலைல)” என முறைத்தான்.

கொஞ்சம் குறுகி நின்று தான் பாத்திரம் கழுவினாள். அதனை எப்போது கவனித்தான் என்று புரியாது, “எனக்குப் பழக்கம் தான். இந்த டைம்ல ரெஸ்ட் எடுத்திட்டு இருந்தா வீட்டையும், கிளாம்பிங்கையும் யார் பார்க்குறது…” என்றவள் அடுப்பில் பாலை வைக்க, அவளைத் திரும்பி ஒரு கணம் பார்த்தவன் பதிலேதும் சொல்லவில்லை.

கூடவே அடுப்பு மேடையையும் துடைத்துச் சுத்தம் செய்திட, “நின்னே போகான் பரஞ்சு மொழி” என்றான் அதட்டலாக.

“பரவாயில்ல. ஆளுக்கொரு வேலையா பார்த்தா சீக்கிரம் முடியும்ல” என்றவள், அவன் கழுவிக் கொடுத்த பாத்திரத்தைத் துடைத்து அதனதன் இடத்தில் வைத்து விட்டுத் தனக்குப் பாலையும் ஊற்றினாள்.

“உனக்கு வேணுமா?” அக்கறையாகக் கேட்டுக் கொண்டாள்.

மறுப்பாகத் தலையசைத்தவன், அவளது பின்னழகை ஆராய்ந்தான்.

வியாபார ரீதியாகத் தன்னுடன் மல்லுக்கு நின்றவளுக்கும், வீட்டில் அவளது இயல்பு குணத்திற்கும் பல வித்தியாசம்.

ஒரே பிரச்சினையைப் பிடித்துத் தொங்குபவளைப் போலவும் தெரியவில்லை. அப்படி என்றால், அவ்வப்பொழுது தன்னிடம் இயல்பு பேச்சினைப் பேசிட இயலாதே.

“உனக்குப் பாத்திரம் கழுவத் தெரியுமா?” அவள் வினவலாகக் கேட்க,

“இல்லா… லண்டன்ல போய் கோர்ஸ் முடிச்சுட்டு வந்தேன்!” சிரியாமல் கூறியபடி ஏப்ரானைக் கழற்றியதில், “இதுக்கு கோர்ஸ் இருக்கா?” என ஒரு நொடி குழம்பிப் பின் முறைத்தாள்.

அவளது பாவனை கண்டு முறுவல் தோன்ற, “நிஜமாடி! மூணு மாசம் படிக்கணம். பர்ஸ்ட் எங்கனே ஸ்க்ரப்பை பிடிக்கனதெந்து ஒரு மாசம் பரஞ்சு தருவாங்க…” என ஆரம்பிக்க,

“ஆமா, அப்புறம் சோப்பும் விம் லிக்விடும் எப்படிச் சம அளவுல எடுக்குறதுன்னு ஒரு மாசம், அதை எப்படிப் பாத்திரத்துல அப்ளை பண்றதுன்னு ஒரு மாசம்னு பெரிய கோர்ஸ் தான்… கடைசியா எக்ஸாம் வைப்பாங்களோ?” என நக்கலாகக் கேட்டதில்,

“அதே வைக்கணல்லோ…” என்றவனின் கூற்றில் அவளுக்கும் சிரிப்புப் பீறிட்டது.

“உங்கிட்டப் போய் கேட்டேன் பாரு…” நாக்கைத் துருத்தி விட்டு அறைக்குச் செல்ல, அதில் ஈர்க்கப்பட்டவன் அவள் பின்னேயே சென்றான்.

சோபாவில் காலை நீட்டி அமர்ந்தவளுக்குக் கால் வலி வேறு. எப்போதும் இந்த அளவு படுத்தியதில்லை.

ரிஷானுடன் நிச்சயம், பின் அது முடிவுக்கு வந்து அகனுடன் திருமணம்… எனப் பல அழுத்தங்களைக் கண்டதாலோ என்னவோ, இம்முறை கொஞ்சம் அதிகமாகவே வாட்டியது.

பாதத்தை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டாள்.

அவளையே கவனித்தபடி உடையை மாற்றி விட்டு வந்தவன், “எப்ப இருந்து நீ கிளாம்பிங் போகணம்?” என வினவ, “நாளைல இருந்தே பிசி தான்…” என்றாள்.

“ம்ம்!”

அவள் இன்னும் காலை ஆட்டியபடியே இருந்ததில் அவளருகில் நெருங்கியவன், அவளது காலை எடுத்து விட்டு சோபாவில் அமர்ந்தான்.

அகமொழி சட்டெனக் காலைக் குறுக்கிப் பிடித்துக் கொண்டு, என்னவெனப் பார்க்க “கிட்சன்ல நிந்து சரியா கொடுக்கான் பற்றியில்லா… சோ (கிச்சன்ல நின்று குடுக்க முடியல)” என்றதில், “என்ன குடுக்க முடியல?” என்றாள் புரியாமல்.

“இது தன்னே…” என அவள் பின்னந்தலையைப் பற்றி இதழில் அழுந்த முத்தமிட்டான்.

“ம்ம்ம்!” இப்போதும் எதிர்பாராதவளுக்கு முத்தத்தால் சிலிர்க்க இயலவில்லை. அதில் தள்ளி விட முயல, அவனோ ஒரு கையால் மடக்கி இருந்த அவளின் கால்களைத் தன் மீது நீட்டினான்.

“ம்ம்ம்ம்ம்ம்” அவளிடம் மறுப்பு அதிகமாக வந்தது.

மாதவிடாய் அப்போதும் உறவு வைத்துக் கொள்ளச் சில ஆண்கள் விரும்புவதாக, என்றோ எப்போதோ படித்த நினைவு இப்போது ஆக்கிரமித்துப் பயத்தைக் கொடுத்தது. அப்படி ஒன்றும் அடாவடியாகத் தன்மீது அவன் உரிமையை நிலைநாட்டிட இயலாது என்று திமிறியவளை அவன் முரட்டு இதழ்கள் விட்டாலல்லவோ!

தன்மீது நீட்டப்பட்ட காலை ஒரு கையால் பிடித்து விட்டவன், மெல்ல விலகிட அவளது கோபத்தை உணர்ந்து, “மூச்! நிண்டெ கூடே உறவாட எல்லாம் இப்ப எனிக்கு மூட் இல்லா. நின்டெ கால்ல கிஸ் செய்யனம். செய்திட்டுப் போயிடுவேன். தேவையில்லாதே, தேவையில்லாததை ஆலோயிச்சு என்னே கோபப்படுத்தி சேதாரத்தை வாங்கிக்காத…” என உறுமலாகக் கூறியதில் அவள் மூச்சு வாங்க முறைத்தாள்.

அவனோ பார்வையை அவளது பாதத்திற்குத் திருப்பினான்.

நகப்பூச்சோ, பெடிகியூரோ செய்யப்படாத பாதம் தான். பெண்மைக்குரிய மென்மையில் பளபளவென எல்லாம் இல்லை.

தனக்கென அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளாத உரிமையாளரின் மீது கோபம் கொண்டு ஆங்காங்கே பாதம் சொரசொரப்பாகி இருந்தது.

அதனை மெல்லப் பிடித்த அர்ஜித், கட்டை விரலில் முத்தமிட அகமொழிக்குத் தவிப்புப் பெருகியது.

“காலை விடு அகன்…” அவள் விடுபட முயற்சிக்க அவன் விடவில்லை.

பாதத்தை அழுத்தமாகப் பிடித்தவன், தனது முத்தச் சேவையை முன்னங்கால் வரைக்கும் தொடர்ந்தான்.

அவனது கையோ வருடுவது போலக் காலை ஆங்காங்கே பிடித்து விட்டது.

கால்வலிக்கு அது இதமாகவும் இருக்க, ‘ஓவரா பண்றான்.’ எனக் கடுப்பானவள்,

“டேய், இதுக்கு மேல போகாத…” என மிரட்டி விட்டு, “சரி வந்தது வந்துட்ட… காலை நல்லா பிடிச்சு விட்டுட்டுப் போ! முத்தம் குடுத்ததுக்கு பனிஷ்மென்ட்!” என ஜம்பமாக அமர்ந்து கொண்டாள்.

அவனது தீண்டலில் அவளுக்குச் சிலிர்ப்போ வெறுப்போ தோன்றவில்லை. சிலிர்க்கும் தீண்டலுக்கு அவன் போகவே இல்லை எனப் புரியாதவளானாள்!

“நினக்குச் சேவை செய்யான் ஆனோ ஞான் வந்தது…” அவனது வாய் கேட்டாலும் கரங்கள் என்னவோ சேவையை நிறுத்தவில்லை.

“பின்ன, ரொமான்ஸ் மட்டும் இருக்கும்னு எதிர்பார்த்தியாக்கும்.” என உதட்டைச் சுளித்தவள், “அப்புறம் வந்தது வந்துட்ட, அந்தத் தைலத்தையும் தேய்ச்சு விட்டுடு!” என்றாள் திமிராக.

“தைலம் தேய்ச்சா முத்தம் கொடுக்கான் பற்றில்லடி… (முத்தம் கொடுக்க முடியாதுடி)” என முறைத்தபடி தைலமும் தேய்த்து விட்டான்.

“நல்லா மசாஜ் பண்ற மேன் நீ.”

“ஞான் நல்லாவே மசாஜ் பண்ணுவேன். முழு வித்தையும் காட்டும் போது அறயாம் காந்தாரி” குறும்பு நகை அவனிடம்.

“உன் 18+ க்கு ரியாக்ட் பண்ற நிலமைல நான் இல்ல மிஸ்டர் மலையாளி…” என சோபாவில் தலையைச் சாய்த்தவள் இன்னும் வாகாக அமர்ந்து கண்ணை மூடிக்கொள்ள, ஆடவனின் பார்வை அவளது முன்னழகை மொய்த்தது.

ஏதோ தோன்றக் கண் விழித்தவள் அவன் பார்வை கண்டு உள்ளம் கூசினாள்.

“என்..என்ன?”

“என்ன?” அவனும் தலையை உயர்த்திக் கேட்க,

“கண்ண நோண்டிடுவேன்!” எனத் தடுமாறினாள்.

“என்டெ ப்ராப்பர்டியை ஞான் நோக்கக் கூடாதா காந்தாரி!” என்றவனின் விரல்கள் தற்போது வருடலைத் தொடர்ந்திருக்க, அவனது மூச்சிலும் தாபம் நிறைந்திருந்தது.

வெடுக்கெனக் காலை மடக்கியவள், “உன் சேவைக்கு மிக்க நன்றி… போய் தூங்கு!” எனக் கையெடுத்துக் கும்பிட, பொங்கிய சிரிப்பை அடக்கினான்.

“நீயும் வாடி பொண்டாட்டி!” அவளைப் போலவே உருகலுடன் கொஞ்சினான்.

“நா..நானா?” திகைத்தவளின் நெஞ்சமெல்லாம் சொல்லொணா உணர்வு.

அவளை ரசித்த விழிகளுக்கு அணை போட விரும்பாதவன் கையில் அள்ளிக் கட்டிலில் படுக்க வைத்தான்.

அவளோ உடனடியாக அவனுக்கு முதுகு காட்டித் திரும்பிக் கொள்ள, அவனது பார்வை முதுகைத் துளைப்பதை உணர்ந்து போர்வையையும் போர்த்திக் கொண்டாள்.

‘பெரிய லோக சுந்தரி…’ அவன் முணுமுணுத்துச் சீண்டுவது புரிந்தாலும் அவன் புறம் திரும்பவே இல்லையே.

“பயந்துட்டா!” நமுட்டு நகை புரிந்த அர்ஜித் அகனுக்குச் சிரிப்புப் பொங்கியது.

அகன் வசமாவாள்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
41
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அகன் அவளை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லியே ரொமான்ஸ்ல பின்றான் 💖💖💖💖💖

  2. அகன் வர வர அதிகம் ரசிக்க வைக்கிறான்.