Loading

14 – வலுசாறு இடையினில் 

 

“நா எதுவும் பண்ணல ப்பா.. அவன் தான் எப்பவும் போல வந்து வம்பு பேசினான்.. வேற ஒண்ணும் இல்ல”, என நங்கை அவருக்கு புரியவைக்க முயற்சி செய்தாள். 

 

“எப்பவும் போலவா? அப்ப எத்தன நாளா இது நடக்குது? ஏய் காமாட்சி என்னடி இது? இது தான் நீ பொண்ண வளத்துற லட்சணமா? என்ன கண்றாவி இவ பண்ணிக்கிட்டு இருக்கான்னு கூட தெரியாம நீ எதுக்கு இங்க இருக்க?”, என ஏகாம்பரம் மனைவியிடம் எகிற ஆரம்பித்தார். 

 

“இல்லைங்க .. அப்படி எல்லாம் அவ பண்ணமாட்டா.. அந்த பையன் சின்னதுல  இருந்தே அப்படி தான் இவகிட்ட வம்பு இழுப்பான். மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லைங்க”, என அவர் கணவரிடம் அதிர்ச்சியில் இருந்தபடியே பேசினார். 

 

“சின்ன வயசுல இருந்தா? அப்பா .. பாத்தீங்களா? இவ பண்ணற  தப்பு உங்களுக்கு தெரிய கூடாதுன்னு தான் எப்போ பாரு படிக்கறேன் படிக்கறேன்-ன்னு அந்த பிள்ளையார் கோவில் போறா போல.. அம்மாவ நல்லா ஏமாத்திட்டு இருக்கா பா அவ..”, என அவன் பங்கிற்கு தந்தையை ஏற்றினான். 

 

“ராஜா.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத..”, என நங்கை அவனிடம் கத்தியதும் ஏகாம்பரம், துணி காய போடுவதற்கு வாங்கிய வயர் கையில் சிக்கியதும் அவளை விளாசிவிட்டார். 

 

காமாட்சி எவ்வளவு முயன்றும் அவளை அடியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இவள் அடி வாங்குவது கண்டு ராஜன் முகத்தில் புன்னகை அரும்பி வழிந்தது. 

 

நங்கை எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. வயதிற்கு வரும் முன் தினம் ராஜனாலோ,  இல்லை அவருக்கு நாள் அன்று சரியாக செல்லவில்லை என்றால் இவளை அடித்து விட்டு தான் உறங்க செல்வார் ஏகாம்பரம். 

 

வயதிற்கு வந்த பெண்ணை அடிக்க கூடாது என்று அவரின் தாய் தடுத்த காரணத்தினால், சில வருடங்கள் அவள் இந்த அடிகளை வாங்காமல் உறங்கி இருந்தாள். 

 

இன்று மீண்டும் உடலில் காயமும், மனதில் வலியும் கொண்டு எதுவும் உண்ணாமல் உறங்க சென்றாள். 

 

“ஏய் .. நீ பொட்டச்சி தான். எனக்கு முன்ன பொறந்துட்டா நீ பேசறது எல்லாம் நான் கேக்கணுமா? நான் சிகரெட் பிடிப்பேன்.. தண்ணி அடிப்பேன்.. ஏன் அதுக்கு மேல என்ன வேணா பண்ணுவேன் .. உன் பேச்சு இனிமே எடுபடாது.. என் விஷயத்துல இனிமே நீ தலையிட்டா உன் நிலமை தான் மோசமாகும் “, என அவன் பேசி முடிக்கும் முன் நங்கை அவன் கன்னத்தில் இடியென ஒரு அடியை இறக்கி இருந்தாள். 

 

“என்ன சொன்ன பொட்டச்சியா.. ஆமா டா நான் பொட்டச்சி தான்.. அதுக்கு நீ எந்த தப்பு பண்ணாலும் நான் கம்முன்னு இருக்கணுமா? இப்ப பேசு டா .. ஒழுங்கா வயசுக்கு தகுந்தமாறி மட்டும் நடந்துக்க.. அந்த ஆளுக்கு தான் நானும் பொறந்து இருக்கேன்.. நான் நினைச்சா நீ அவ்வளவு தான்.. போ ..”, என அவனிடம் ரௌத்திர முகம் காட்டினாள். 

 

“என்னய அடிச்சிட்டல்ல .. இரு டி .. இனிமே நீ நிம்மதியா இருக்கவே முடியாத மாதிரி பண்றேன்.. ரொம்ப நாள் நீ இங்க இருக்க மாட்ட .. எங்க போனாலும் நீ நிம்மதியா வாழ முடியாத மாதிரி பண்றேன் டி”, வன்மம் பொங்கும் விழிகளும் வார்த்தைகளும் மீண்டும் ராஜனிடம் இருந்து வெளி வந்தது. 

 

ராஜன் கோபமாக பேசிவிட்டு செல்வது பார்த்து காமாட்சி உள்ளே வந்தார். 

 

“ஏன்டி புள்ள கோவமா பேசிட்டு போறான்?”

 

“அவன நீ பெத்தது தான் பெரிய தப்பு .. ஒண்ணு என்னைய நீ கொண்ணு இருக்கணும் இல்லன்னா அவன பெக்காம இருந்து இருக்கணும்.. இந்த வயசுல என்ன என்ன பேசறான் தெரியுமா? நீங்க தலைல தூக்கி வைக்க வைக்க அவன் உங்கள மண்ணுல பொத்தைச்சிட்டு தான் அடங்குவான்”

 

“என்ன பேச்சு டி பேசற ? அப்பா காதுல விழுந்த மறுபடியும் நீ தான் அடி வாங்கணும்.. வாய மூடு”, என காமாட்சி அவள் வாயை தான் மீண்டும் அடைத்தார். 

 

“அடிக்கட்டும்.. அடிச்சே என்னை ஒரே அடியா கொன்னுடுங்க.. செத்தாலாவது எனக்கு நிம்மதி கெடைக்குமான்னு பாக்கறேன்..”, என கண்களில் கண்ணீர் வடிந்தபடி பேசினாள். 

 

“இப்போ என்ன நடந்துச்சி-ன்னு இப்படி பேசற.. வெளக்கு வச்ச அப்பறம் பொம்பள புள்ளைங்க அழுதா வீட்டு ஆம்பலைங்களுக்கு ஆகாது.. கண்ண தொட.. வந்து படு”, என காமாட்சி கூறிவிட்டு அவள் அருகில் படுக்கையில் படுத்து விட்டார். 

 

நங்கை அவரை வெறித்து பார்த்தவள், விடிய விடிய அமர்ந்தே இருந்து கல்லூரி கிளம்பி சென்றாள். 

 

நங்கை அனைத்தும் கூறி முடித்ததும் வினிதா கண்கள் கலங்கி அவளை அணைத்து கொண்டாள். 

 

“உங்கப்பனுக்கு அறிவே இல்ல நங்க.. அந்த ஆளுக்கு நீ பொறந்து இருக்கவே வேணாம்.. “

 

“இத்தன வருஷம் போயிரிச்சி வினி.. இனிமே கொஞ்ச நாள் தானே”, நங்கை விரக்தியாக கூறினாள். 

 

“என்ன நூத்து கெழவி மாதிரி பேசற? இனிமே தான் டி வாழ்க்கையே ஆரம்பிக்கும்”

 

“எனக்கு நம்பிக்கை இல்ல வினி.. எங்கப்பா ஒரு பக்கம், என்கூட பொறந்தவன் ஒரு பக்கம் அந்த மொரடன் ஒரு பக்கம்.. ஏன் உயிரோட வாழறோம்ன்னு இருக்கு”

 

“புள்ள”, வினி அதிர்ந்தாள். 

 

“கவல படாத வினி .. நானா போய் சாகமாட்டேன்.. தற்கொலை பண்றது முட்டாள் தனம்.. அது நான் பண்ணமாட்டேன்.. எனக்கு ஒரே ஆசை தான் வினி.. என் சொந்த கால்ல நான் சாகறத்துக்குள்ள  நிக்கணும்.. ஒரு நாளா இருந்தா கூட போதும்.. எனக்கு அதுவே பெரிய சந்தோஷம் தான்”, நங்கையின் பேச்சு வினிதாவை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. 

 

“கம்முன்னு வீட்ட விட்டு ஓடிறலாமா நங்க ?”

 

“யார் கூட?”

 

“யேன் .. அந்த வர்மாண்ணே கூட ஓடு.. நம்ம கூட எவன்  ஓடி  வருவான்.. நானும் நீயும் தான் ஓடி போலாம்னு சொல்றேன்.. உனக்கு தான் வேலை இருக்கே.. நீ  எனக்கு ஒரு வேல சோறு போடமாட்டியா? நானும் சீக்கிரம் ஒரு வேலைய தேடிக்கறேன்.. என்ன சொல்ற?”, என வினி தீவிர முக பாவத்துடன் கேட்டாள். 

 

“ஹாஹாஹாஹா .. நடக்கறத பேசு வினி.. எனக்கு வீட்ல எல்லாம் இருந்தும் யாரும் இல்ல.. உனக்கு அப்படி இல்ல.. அண்ணன் படிக்கல தான் ஆனா உன்மேல உயிரே வச்சி இருக்காரு. நீ அவர கல்யாணம் செஞ்சிட்டு  சந்தோஷமா வாழணும்..”

 

“நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?”

 

“தெரியல வினி.. விதி என்னவோ அப்டி நடக்கட்டும்.. என்கூட பொறந்தவன் தான் நான் எங்க போனாலும் நிம்மதியா வாழவிடமாட்டேன்-ன்னு சபதம் போட்டு இருக்கான்ல … என்ன பண்றான்னு பாக்கலாம்”, என பேசியபடி பஸ் ஏறி அமர்ந்தனர். 

 

“ஆனாலும் அவன் பண்றது ஓவரா தான் இருக்கு.. பேசாம அவன ஆள் வச்சி அடிச்சிடலாமா?”

 

“லூசு மாறி பேசாம இரு வினி.. மொத நாம செமெஸ்டெர் ஒழுங்கா முடிக்கலாம்”, என அது இது என பேசியபடி இல்லம் சென்று சேர்ந்தனர். 

நங்கை உள்ளே நுழைந்ததும் ஏகாம்பரம் அவளை முறைத்தபடி வந்து காமாட்சியை அழைத்தார். 

 

“காமாட்சி.. நாளைக்கு உன் பொண்ணுக்கு நிச்சயம் .. அடுத்த வாரம் கல்யாணம்.. அதுக்கு வேண்டியது பாரு கடைக்கு போயிட்டு வரலாம்”, என கூறிவிட்டு அறைக்குள் சென்றார். 

 

நங்கை இடிந்து போய் நின்றாள். காமாட்சி ஏகாம்பரம் பின்னே விவரம் கேக்க சென்றார். அரை மணி நேரம் கழித்து வந்த காமாட்சி நங்கையை அழைத்து அறையில் விட்டு பேச ஆரம்பித்தார். 

 

“அப்பா சிநேகிதன் வீட்டு பையனாம்.. பக்கத்து ஊரு தான்.. உனக்கு என்ன என்ன கலர்-ல சீலை வேணும் சொல்லு எடுத்துட்டு வரேன்”, காமாட்சி புன்னகையுடன் கேட்டார். 

 

“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம் மா”, நங்கை நடுங்கிய குரலில் கூறினாள். 

 

“அப்டி எல்லாம் சொல்ல கூடாது டி.. கல்யாணம் பண்ண தாணு உனக்கு அவளோ நகை எடுத்தாரு அப்பா.. உன்மேல அவளோ பாசம் இருக்க தான் எழுவது பவுனு போடறாரு”

 

“அவர் போடறது என்மேல இருக்க பாசத்துனால  இல்ல..  அவரோட கௌரவத்த ஊருக்கு காட்ட தான் போடறாரு.. “

 

“ஆமா .. என் கௌரவத்துக்காக தான் அவ்வளவு போடறேன் .. ஒழுங்கா நாளைக்கு பொடவை  கட்டிக்கிட்டு வந்து நில்லு.. நீ படிச்சது போதும்.. மாப்ள பத்தாவது கூட தாண்டல அதனால நீ இனிமே படிக்காத”, என ஏகாம்பரம் கூறினார். 

 

“எனக்கு அடுத்த மாசம் செமெஸ்டெர் ப்பா.. முழுசா இத மட்டும் படிச்சிக்கறேன்.. “, என கெஞ்சினாள். 

 

“நீ படிச்சி ஒண்ணும் கிழிக்க வேணாம்.. இன்னியோட எல்லாத்தையும் மூட்டை கட்டி தூக்கி போடு.. நாளைக்கு காலைல தயாரா இருக்கணும்.. பத்து மணிக்கு எல்லாம் வந்துடுவாங்க”, என கூறிவிட்டு மனைவியை வரசொல்லி விட்டு வெளியே சென்று விட்டார். 

 

“அம்மா”, என நங்கை தாயிடம் ஆதரவு எதிர்பார்த்தாள். 

 

“அப்பா உன் நல்லத்துக்கு தான் சொல்வாங்க தமிழு.. நான் அப்பறம் பொறுமையா பேசி நீ பரீட்சை எழுத ஏற்பாடு பண்றேன்.. அதுவரைக்கும் பொறுமையா இரு “, என கூறிவிட்டு கணவனின் பின் சென்றார். 

நங்கை தன் வாழ்வை நினைத்து நொந்து கொண்டு அமர்ந்து இருந்தாள். 

 

“என்ன டி சந்தோஷமா இருக்கியா? நாளைக்கு இன்னும் பெரிய சந்தோஷம் உனக்காக ரெடியா இருக்கு.. இந்த புக் எல்லாம் இனிமே உனக்கு எதுக்கு? எல்லாம் எடுத்து எடைக்கு போட்டா பத்து பீர் வாங்கலாம்.. அப்பறம் இன்னிக்கி உன் காலேஜ் ல இருந்து ஒரு லெட்டர் வந்துச்சி.. உனக்கு வேலை கெடைச்சி இருக்காமே ? வேலை கெடைச்சி ரெண்டு மாசம் ஆகுது வீட்ல சொல்லவே இல்ல நீ.. நானே இதயும் நேரம் பாத்து சொல்லிடறேன் .. “, ராஜன் நக்கலாக பேசிவிட்டு சென்றான். 

 

நங்கை தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள். இன்னும் என்ன என்ன இடி அவள் தலையில் இறங்க காத்து இருக்கிறதோ? 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Janu Croos

      இவனையெல்லாம் பொறந்ததும் கள்ளிப்பால் குடுத்து கொண்ணிருக்கனும். இவன் எல்லாம் பொறந்ததே சாபக்கேடு. கூடப்பொறந்தவ மேல எவ்வளவு வஞ்சம் வச்சிருக்கான். நங்கை அப்பனுக்கு எப்போ தான் புத்தி வருமோ.
      நங்கை நீ கவலைப்படாத…வர்மனும் ஆம்பள பொம்பள அப்படி பேசுறவன் தான். ஆனா உன் மேல கொள்ளப்பிரியம்…நீ சொன்னா புரிஞ்சுக்குவான். கண்டிப்பா உங்கப்பா நினைக்குற மாதிரி உன் கல்யாணம் நடக்காது. வர்மன் நடக்க விடவும் மாட்டான். கவலைப்படாத.

    2. Archana

      ராமாஆஆஆ😖😖😖😖😖😖 இந்த வெஷத்தை எங்கையாவது புதைங்கடா ரொம்ப டார்ச்சர் பண்ணுறான், இந்த மாறி ஒரு கேரக்டர் நிஜமாலே ஒன்னு சுத்திட்டு இருக்கிறதா கேள்வி பட்டேன் எப்படி தான் இதுங்களாம் இந்த வயசுலே இப்படி பேசுதுங்களோ😒😒😒