Loading

காதல் மனசிலாயோ! 06

“அசோக்! சாயங்காலம் பத்திரிகை தயாராகிடும், அதைப் போய் வாங்கிட்டு வந்துடு. அப்புறம் மொத நாள் நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு கோட், சூட் எடுக்கனும், அளவு கேட்டு வச்சுக்கோ…” என நிறுத்தாமல் வரிசையாக வேலையை வழங்கிக் கொண்டு இருந்தார் வீரனார்.

“சரி மாமா!” என்று அவனும் தலையை அசைத்துக் கொண்டே ஒவ்வொன்றையும் நோட் பண்ணிக் கொண்டான்.

வீரனார் புறப்பட்டதும் கணவன் அருகில் வந்த ஜனனி, “ஏங்க! மாப்புள்ள தம்பி ஃபோன் நம்பர் இருக்கா..?” எனக் கேட்டாள்.

“ஆமா! சம்பத் கிட்ட வாங்கினேன், இனி தேவைப்படுமில”

“ம்ம்ம்! சரி அந்த நம்பரை தாங்க”

“ஏன்…?”

“ம்ம்ம்! நான் ஃபோன் பண்ணி, சாப்புட்டீங்களானு கேக்க தான், இது எல்லாம் உங்களுக்கு எப்டி புரியும்…? நம்ம தான் வேற ரகம் ஆச்சே” என கிண்டலடித்து முறைத்த மனைவியை அப்போதும் புரியாமல் பார்த்தான் அசோக்.

“அய்யோ கடவுளே! நேரா சொன்னாலே புரியாத களிமண்ணுக் கிட்ட போய் சுத்தி வளைச்சு சொன்னது தப்பு தான், அந்த நம்பரை குடுங்க, மீரா கிட்ட குடுத்து பேச சொல்லலாம், இந்தக் காலத்தில் ஃபியான்ஸி கூட அவுட்டிங்கே போறாங்க, இவளை உங்க மாமா ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சு இருக்கார். அட்லீஸ்ட் பேசவாச்சும் சொல்லலாம்” என முகத்தைச் சுளித்தாள்.

“ஓ! இப்டி சொன்னா தானே புரியும்..” என சௌந்தர் நம்பரை அவள் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்தான்.

“என்னத்த புரியுதோ…”

“அடியேய்! புரியாமயா நமக்கு ஒரு பையன் இருக்கான், நெக்ஸ்ட் நான் ரெடி தான், நீ ஓகே சொல்ல மாட்டேங்குற” எனச் சிரித்த கணவன் கையில் அடித்தவள்,

“ஒழுங்கா போய் சித்தப்பா சொன்ன வேலையைச் செய்யுங்க அசோக்” என முறைத்துவிட்டு, மீராவைக் காண நகர்ந்தாள் ஜனனி.

“மீரா!” என அழைத்துக் கொண்டே வந்த மாமியை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“சொல்லுங்க மாமி!” என்றாள்.

“உனக்கு ஒரு நம்பர் அனுப்பி இருக்கேன் பாரு, அது தான் மாப்புள்ள நம்பர். ஃபோன் பண்ணி பேசு”

“எதுக்குப் பேசனும்..?” எனச் சாதரணமாக கேட்டாள்.

“நீ எல்லாம் இந்தக் காலத்துப் பொண்ணு தானா…? புத்தகத்தை மட்டுமே பாத்தா இப்டி தான்டி தோணும். அப்பப்ப டிவி, ஃபோன், பாட்டுனு கேளு.”

“அது எல்லாம் பாக்காம இருக்க முடியுமா மாமி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“நீ அப்படியே உன் மாமா மாதிரி தத்திடி. இந்த நம்பரை சேவ் பண்ணி, அந்தத் தம்பிக்கு மெசேஜ் பண்ணு மீரா, ரெண்டுப் பேரும் பேசினா தானே புரிதல் வரும். கல்யாணம் உடனே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க, நீங்க பேசிக்கவே வாய்ப்பில்லை, அதான் ஃபோனுல பேசு.”

“அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு மாமி”

“அது எல்லாம் திட்ட மாட்டாரு, நான் நம்பர் வாங்கினது சித்தப்பாக்கு தெரியாது, நீ பேசுறது அவருக்கு எப்டி தெரியபோது, இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு மீரா, சும்மா எப்டி இருக்கீங்க, சாப்புட்டீங்களானு கேளு போதும்.” என்றாள் ஜனனி.

“ம்ம்ம்!” என தலையை ஆட்டினாள் மீரா, இல்லை என்றால் ஜனனி அடுத்தடுத்துப் பேசக் கூடும் என்று எண்ணி.

ஜனனி சென்றதும், மீரா தன் ஃபோனை எடுத்து மாமி அனுப்பிய நம்பரை முதலில் சேவ் செய்யப் போனாள்.

‘அவரு முழுப்பேரு என்ன…? எல்லாரும் சௌந்தருனு தானே கூப்புடுறாங்க’ எனத் தாடையில் கைவைத்து யோசித்தாள்.

‘சரி! சௌந்தர்னே போட்டு வைப்போம்’ என சேவ் செய்ய போனவள், முன்னால் ஆங்கில எழுத்து ‘A’ வை சேர்த்து சேவ் செய்தாள்.

‘A Soundhar’ என முதலில் சேவ் ஆனது.

பிறகு அந்த நம்பரின் வாட்ஸ் ஆப் பேஜிற்கு சென்றாள்.

ப்ரோஃபைல் பார்த்தவள், ‘இது என்ன பிக்சர்?’ என முகத்தைச் சுளித்தாள்.

கத்தியின் முனையில் இருந்து ரத்தம் சொட்டும் போட்டோவை வைத்திருந்தான்.

“ச்சே! இது என்ன இவ்ளோ வயலெண்டா போட்டோ வச்சு இருக்கார்” என வெளிப்படையாகவே புலம்பினாள்.

அவள் மனமோ’அதான் சொன்னானே லவ் பெயிலியர்னு, அதோட அடையாளம் போல’ என்றது.

‘அதுக்காக இப்டியா..? என்ன லவ்வோ? ஒருத்தி என் படிப்பைக் கெடுத்துட்டு ஓடிப்போயிட்டா, அவரோட அக்கா அவரு காதலுக்கு ஆப்பு அடிச்சுட்டுப் போயிட்டாங்க, சோ! அவருக்கு ஒரு பெயிலியர், எனக்கு தான் பெயிலியர் ஆனா ஒன்னும் புரியல, ‘

‘உனக்கு லவ் இன்னும் வரலை, ஒரு வேளை வந்தா புரியும் போல’ என மனம் கேலிச் செய்தது.

‘எனக்கு இதுவரை வரல, இனிமேலும் வர வாய்ப்பில்லை, அதான் சொல்லிட்டாரே நோ லவ்னு…’

‘அவருக்கு தான் நோ லவ். உனக்கு நீ தான்டி முடிவுப் பண்ணனும். ‘ என்றது மனம்.

‘ஆமா! நான் முடிவுப் பண்ற இடத்தில் இல்லை, நீ ஓடிப்போ’ என மனதை அதட்டி அடக்கினாள்.

பிறகு சௌந்தர் எண்ணிற்கு ஒரு மெசேஜைப் போட்டு விட்டாள், தன் நம்பர் இது என அறிய, “ஹாய்! ஐ ஆம் மீரா, திஸ் இஸ் மை நம்பர்” என்று மட்டுமே அனுப்பினாள்.

மெசேஜ் டெலிவெர் ஆனாலும், அது சிங்கிள் டிக்கில் இருந்தது.

மாலைப்பொழுது…..

“அக்கா! பத்திரிகை வாங்கிட்டு வந்தாச்சு, சாமி ரூமில் வாங்கி வை” என்றான் அசோக்.

“இதோ வரேன்பா!” எனக் கூறியப்படி பைரவி வர, ஜனனியும் கூடவே வந்தாள்.

அசோக் தந்தவற்றை வாங்கி சாமி அறையில் வைத்து, விளக்கேற்றியவர்,
“ஜனனி! நாளைக்கு காலையில நீயும், அசோக் வீட்டுல இருங்க, நானும், சித்தப்பாவும் வந்து பத்திரிகை வச்சுட்டு வரோம், அதுக்கு பின்ன தான் மத்தவங்களுக்கு குடுக்கனும்” என்றார்.

“இந்த ஃபார்மாலிடிக்ஸ் எல்லாம் எதுக்குக்கா?”

“டேய்! என்ன இருந்தாலும் நீ தானே தாய் மாமன், உனக்கு தான் முதலில் வைக்கனும்” எனக் கூறியப்படி சாமி அறை அருகே வந்தார் வீரனார்.

“மாமா! எனக்குனு இருக்குறது நீங்களும், அக்காவும் தான், இந்த முறை, கிறை எல்லாம் வேணாம், இருக்குறதே நாலு நாள், சீக்கிரம் பத்திரிகை குடுக்கனும், காலையிலே கிளம்பிடுவோம் மாமா, எனக்கு இங்கயே குடுங்க போதும் ஜனனி இங்க வா” என மனைவியை அழைத்தான்.

ஜனனி அருகில் வரவும், “வாங்க மாமா, அக்கா வா, சேந்து குடுங்க”

“சரி வா! அவனே சொல்றான், பின்ன என்ன போய் தாம்பளத்தில் பழங்கள் வச்சு எடுத்துட்டு வா” என்றார் வீரனார்.

பைரவி தாம்பாளத்தை நிரப்பி எடுத்துக் கொண்டு, மீரா, மகன் சேராவை அழைத்தார்.

“என்னம்மா..?” எனக் கேட்டவாறு இருவரும் வந்துச் சேர்ந்தனர்.

“மாமாக்கு பத்திரிகை வச்சுக் குடுப்போம்” என்றார்.

நான்குப் பேரும் நிற்க, பெரியவர்கள் தாம்பாளத்தை நீட்ட அசோக், ஜனனிப் பெற்றுக் கொண்டனர்.

“ரெண்டுப்பேரும் எங்கப் பொண்ணுக்கு வந்து எல்லாத்தையும் முறைப்படி செய்யனும்” என்றார் வீரனார்.

“கண்டிப்பா மாமா” என்றான் அசோக்.

“மாமா! பத்திரிகை குடுங்க பாப்போம்” என வாங்கிய சேரா, அதைப் பிரித்துப் பார்த்தான்.

“வாவ்! சூப்பரா இருக்கு” எனக் கூறிவிட்டு யார், யார் பெயர் போட்டு இருக்கு என பார்க்கத் தொடங்கினான்.

மீரா அவள் அறைக்குள் சென்றுவிட, ஜனனி ஒரு பத்திரிகை எடுத்துச் சென்று அவளிடம் நீட்டினாள், “நீயும் பாரு!” என்று.

“பரவாயில்ல மாமி! மெதுவா பாக்குறேன்”

“பாரு மீரா! உன் ப்ரண்ட்ஸ் அட்ரெஸ் வாங்கி எழுதி வை, மாமாவைப் போய் குடுக்க சொல்லிடுறேன்”

“நானே கூப்புட்டுக்கிறேன் மாமி, ஏன் மாமாவை அழையவிடுறீங்க மாமி”

“அப்படியில்ல, நீ ஃபோனில் கூப்புடு, மாமாவைப் பத்திரிகை குடுக்க சொல்லலாம், அப்ப தானே அவங்கவங்க வீட்டிலும் விடுவாங்க, பத்திரிகையை பாரு நான் வரேன்” என ஜனனி வெளியேறினாள்.

மீரா பத்திரிகை விரித்துப் பார்த்தாள், அதில் மணமகன் இடத்தில் எழுதி இருந்த “சௌந்தராஜன்” என்ற பெயரை நோக்கினாள்.

‘ஓ! இதான் ஃபுல் நேமா…’ என மனதில் ஏற்றினாள்.

சௌந்தர் தன் ஃபோனில் வந்த மெசேஜை ஓபன் செய்யாமல் அவுட் ஸ்கீரினிலே பார்க்க, ‘மீரா’ யார் என ரொம்ப எல்லாம் யோசிக்கவில்லை, தெரியாமல் மறக்க என்ன அவன் மறக்கும் வியாதியிலா இருக்கிறான், அந்த வியாதி இருந்தாலும் பரவாயில்லை. அதை ஓபன் செய்யாமலே விட்டான்.

மீராவும் இரண்டு முறை எடுத்துப் பார்த்தாள், ஆனால் மெசேஜ் டபுள் டிக் வராமல் இருக்கவும், இன்னும் பாக்கல போல என தன் வேலையைத் தொடர்ந்தாள்.

இரவு..

தூங்குவதற்கு செல்லும் முன் மீரா ஃபோன் பார்க்க, இன்னும் அவள் அனுப்பிய மெசேஜ் அது ஓபன் செய்யாமலே இருந்தது.

‘ஒரு வேளை வாட்ஸ் ஆப் அடிக்கடி பாக்குற பழக்கம் இல்லையோ, ஆனால் ரொம்ப நேரம் ஆச்சே’ என யோசித்தபபடியே தூங்கியும் போனாள்.

அடுத்த நாள் காலையில் பத்து மணியிருக்கும், மீரா ஃபோன் சிணுங்கியது, வீட்டில் யாருமே இல்லை, அனைவருமே பத்திரிகை குடுக்கச் சென்றிருந்தனர். மீராவும் ஏதோ படம் பார்த்துக் கொண்டு இருந்தாள். சார்ஜரில் இருந்த ஃபோன் சிணுங்க, எழுந்து சென்றாள்.

வீரனார் மீராவின் ஃபோனை மட்டும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார். கல்யாணத்தை முடிவுப் பண்ணியதால், அவளுக்கு தேவைப்படும் என்ற யோசனையில் அமைதியாகினார்.

மீராவின் தோழி தான் அழைத்தது…

“ஹலோ! சொல்லுடி”

“ஹேய் மீரா! ரிசல்ட் வந்துட்டுடி”

“ஏய்! எப்போடி, நீ பாத்துட்டீயா..? எனக்கும் பாத்தீயா?”

“மெசேஜை பாரு முதலில்” என ஃபோனை வைத்தாள் தோழி.

மீரா அவசரமாக மெசேஜை திறக்க, அவளின் வாட்ஸ் ஆப் தோழிகளின் வாழ்த்துகளால் நிறைந்திருந்தது, வகுப்பின் முதல் மாணவியாக அதிக சதவீதம் எடுத்திருக்க அனைவரின் பாராட்டுகளும் வந்துக் கொண்டு இருந்தன.

மனம் மகிழ்ந்தாலும், இது அனுபவிக்க முடியாத சூழலாக இருந்தது.

வீரனார் வெளியில் இருக்க, அவர் எண்ணிற்கு கல்லூரியில் இருந்து ஃபோன் வந்தது.

“சார்! நான் மீராவோட ஹெச் ஓடி பேசுறேன்.”

“ஆ! சொல்லுங்க”

“மீரா இந்த செமஸ்டரில் எங்க டிபார்ட்மென்ட் செகண்ட் இயரில் முதலில் வந்து இருக்காங்க, ஆனா அவங்க ப்ரண்ட்ஸ் மீரா காலேஜ் வரப்போறதில்லைனு சொன்னாங்க”

“ஆமா! கல்யாணம் முடிவுப் பண்ணியாச்சு, இனி என் பொண்ணு காலேஜ் வரமாட்டா”

“சாரி சார்! உங்க பெர்சனல் இது, மேரெஜ் பண்ணாலும் படிக்க அனுப்பலாமே, டேலண்ட் ஸ்டுடென்ட்…” என நிறுத்தினார்.

“அது எல்லாம் வாய்ப்பில்லை, உங்களுக்கு பத்திரிகை அனுப்பி வைக்கிறேன், கண்டிப்பா கல்யாணத்திற்கு வந்து சேருங்க” என ஃபோனை வைத்துவிட்டார் வீரனார்.

“யாரு மாமா…?” என அசோக் கேட்டான்.

வீரனார் விசயத்தைக் கூறினார்.

உடனே மீராவிற்கு அழைத்த அசோக்,
“வாழ்த்துகள் மீரா!” என்றான்.

“தேங்க்ஸ் மாமா! எப்படி தெரியும்.?”

“அது எப்படியோ தெரியும், இரு ஜனனி பத்திரிகை குடுக்கப் போயிட்டா வந்துப் பேச சொல்றேன்”

“பரவாயில்ல மாமா! இந்த சந்தோஷம் நிரந்தரமானது இல்லை, மாமி வீட்டுக்கு வந்ததும் பேசிக்கிறேன்”

“மீரா! நீ வருத்தபடாத, ஏதாவது வழிப்பொறக்கும்”

“எப்டி மாமா? அதுக்கு எல்லாம் வழியே இல்லை, நான் வைக்கிறேன்” என ஃபோனை கட் பண்ணினாள்.

அசோக் தன் மாமாவை எதிர்த்துப் பேசியது இல்லை, இன்று மனம் கேளாமல்”மாமா! நீங்க மீராவுக்கு ரொம்ப பெரியத் தண்டனை குடுக்குறீங்க, தப்பு செஞ்சது ஒருத்தி, ஆனா தண்டனை ஒன்னும் பண்ணாத புள்ளைக்கு…” என வருந்திக் கூறினான்.

“அசோக்! எனக்கு இதுங்க மேல நம்பிக்கை இல்லை, உனக்கே தெரியும் புள்ளைங்கள எப்டி எல்லாம் வளர்த்தேனு, ஒருத்தி போயிட்டா, மறுபடியும் இன்னொரு பொண்ணை படிக்க அனுப்பி அதே மாதிரி ஓடவிட்டு வேடிக்கைப் பார்க்க முடியாது, நல்லதோ, கெட்டதோ இவளைக் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா மிஞ்சி இருக்க மானமாச்சும் நிலைக்கும்” என்றார்.

அசோக் பதில் பேசமுடியவில்லை.

~~~~

சௌந்தர் வேலையில் கவனமாக இருந்தான்.

சம்பத் ஃபோன் செய்ய எடுத்து, “ஹலோ! சொல்லுடா” என்றான்.

“சௌந்தர்! ஹோட்டலில் இருக்கேன், எப்ப வருவ….?”

“மதியம் மேல் ஆகும்.”

கார்மென்ட்ஸ், ரெசிடென்சியல் ஹோட்டல், விவசாயம் ஒரு பக்கம் என பல பிஸ்னஸ் விருமாவின் தலைமையில் ஓடுகிறது.

சௌந்தர் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறான், சுந்தர் அண்ணனிற்கு துணையாக இருந்தான்.

சௌந்தர் கல்யாணம் நிற்கும் முன் பொறுப்பான முதலாளி. ஆனால் இப்பொழுது இடையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவான்.

அதனால் சம்பத், சுந்தர் அடிக்கடி ஃபோன் செய்து விசாரித்துக் கொள்வர்.

“ஓகேடா! கேரி ஆன்” என ஃபோனை கட் செய்தான் சம்பத்.

“இவன் என்னதுக்கு கூப்புடுறானு தெரியாது பாரு, அடுத்து அவன் கூப்புடுவான்…” என யோசித்து முடிப்பதற்குள் சுந்தர் அழைத்தான்.

கோபமாக அவன் ஃபோனை அட்டென்ட் செய்து”டேய்! ஆபிஸில் தான் இருக்கேன், என்ன வேணும்…?” எனக் கேட்டான்.

“அண்ணா! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா…? அண்ணிக்கு ரிசல்ட் வந்துட்டு, காலேஜ்ல அவங்க தான் டிபார்ட்மென்ட் ஃபர்ஸ்ட், சூப்பர்ல” என மகிழ்ச்சியாக கூறினான் தம்பி.

“இப்ப என்ன அதுக்கு, உனக்கு எப்டி தெரியும்..?”

“அசோக் அண்ணா, வாட்ஸ் ஆப்ல ஸ்டேட்டஸா வச்சு விஷ் பண்ணி இருக்காங்க, இப்ப தான் பாத்தேன்”

“சரி! நான் என்ன செய்ய…? என் கிட்ட என்னதுக்கு இதைச் சொல்லிட்டு இருக்கடா”

“என்ன அண்ணா பேசுறீங்க? அண்ணிக்கு ஃபோன் பண்ணி விஷ் பண்ணுங்க”

“ம்ம்ம்! போய் அவ அப்பாக்கு விஷ் பண்ணவா…? ஏனா அவர் தான் இப்டிபட்ட பொண்ணைப் படிக்க வைக்காம கல்யாணம் பண்ணி வைக்கிறார்”
என்றான் நக்கலாக.

“அண்ணா! நம்ம வீட்டுக்கு வந்ததும் படிக்க வைக்கலாமுல”

“அப்பா கிட்ட நீயே பேசி படிக்க வையே”

“அண்ணா!”

“தெரியுதுல! போய் வேலையைப் பாரு, நம்ம வீட்டுக்கு அது செட் ஆகாது, அப்பா பத்தி தெரியுமுல, கல்யாணத்துக்கு முன்னாடி கூட அசெப்ட் பண்ணுவார், பின்னாடி வாய்ப்பே இல்ல” என ஃபோனை கட் பண்ணினான்.

விருமாண்டி பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு வீட்டில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், வேலைக்குச் செல்வதையே அனுமதிக்க மாட்டார், இதில் படிப்பா…?

இரவு…

மீரா ஃபோனில் நண்பர்களுக்கு நன்றியைக் கூறிவிட்டு, சௌந்தர் சாட் பக்கத்திற்குப் போனாள்.

அவன் ஆன்லைனில் இருப்பது தெரிந்தது, ‘ஏன் மெசேஜை ஓபன் பண்ணவே இல்ல, ஒரு வேளை செட்டிங்க்ஸ் மாத்தி இருக்காரோ, படிச்சுட்டு ப்ளூ வராத மாதிரி, இருக்கும்.’

‘சொல்லுவோமா, நம்ம ரிசல்டை…’ என எண்ணியவள், ‘வேணாம்! தொடராதப் படிப்பிற்கு எதுக்கு பெருமை எல்லாம்’ என அமைதியானாள்.

“கங்கிராட்ஸ்!” என பதில் வந்தது சௌந்தர் நம்பரில் இருந்து,

ஆச்சரியமாக அதை நோக்கியவள், இது உண்மையா..? என அதிசயத்துப் பார்த்தாள்.

அடுத்த மெசேஜே”நீ பேசாம இன்னொரு சாய்ஸ் போகலாமே, இந்தக் கல்யாணம் வேணானு சொன்னா, என்னைய புடிக்கலைனு சொன்னா, வேற மாப்பிள்ளை கிடைப்பார், மே பீ அவர் உன்னைய படிக்க வைக்க வாய்ப்பிருக்கு” என அனுப்பினான்.

அதைப் படித்த மீராவிற்கு சற்றுக் கோபம் வந்தது, “தேங்க்ஸ் ஃபார் ஆல்! அடுத்தக் கடையில் இதை விட கூடுதல் விலையாக இருந்தால், இந்தக் கடையே பரவாயில்லைனு தோணும்” எனப் பதில் அனுப்பினாள்.

அவனிடம் இருந்து பதில் இல்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் தூக்கத்தைத் தேடி அதில் தங்ஙளை தொலைத்தனர்.

காதல் மனசிலாயோ!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்