Loading

நிறம் 10

 

ரூபாவின் பேச்சு வர்ஷினியை அங்கு வெகு விரைவிலேயே பொருந்திப் போகச் செய்தது. புது இடம் என்ற உணர்வின்றி சந்தோஷமாகவே இருந்தாள். எனினும் மனதின் ஓரத்தில், தாயை விட்டு தன்னை பிரித்து சென்ற தந்தை, அவரின் மறுமணம், தாயைப் பற்றி இதுவரை சொல்லாதது என்று பல எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருந்தன. அவற்றிற்கான விடைகளை அறியும்போது அவளின் நிலை என்னவாகுமோ?

 

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், ரூபாவின் ஆடைகளை அணிந்து கொண்டாள். ரூபாவின் தற்போதைய அளவிற்கு ஏற்றவாறு தைக்கப்பட்ட ஆடை என்பதால் வர்ஷினிக்கு சற்று ‘தொலதொல’வென்று தான் இருந்தது.

 

இருவரும் பேசி சிரித்தபடியே கீழே இறங்கி வந்தனர். அதற்குள் பெரியவர்கள்  சாப்பிடும் இடத்தில் குழுமியிருக்க, வந்தவர்கள் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்.

 

வர்ஷினி பெரியநாயகியின் அருகே அமர, அவளின் மறுபுறத்தில் ரூபா அமர்ந்தாள். அகிலாவும் உஷாவும் பரிமாற, மற்றவர்கள் உண்ண துவங்கினர்.

 

ஆனால் வர்ஷினியோ சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையை வைத்தே அவள் யாரை தேடுகிறாள் என்பதை உணர்ந்த அகிலா, “உங்க அம்மா டேப்லெட் போட்டு தூங்குறாங்க டா. நீ சாப்பிடு. காலைல பேசலாம்.” என்று கூற வர்ஷினியும் உணவில் கவனம் செலுத்தினாள்.

 

தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை என்று குடும்பத்துடன் சாப்பிட்டதில் மனநிறைவாக இருந்தது வர்ஷினிக்கு. இதில் அவளின் அன்னையும் தந்தையும் இல்லை என்ற ஏக்கம் அவளின் மனதின் ஓரத்தில் எழத்தான் செய்தது.

 

அது அவளின் முகத்திலும் தெரிய, அவளின் தோளில் லேசாக தட்டிக்கொடுத்தார் அகிலா. அகிலாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு எதிரே பார்க்க, அங்கு அமர்ந்திருந்த ஸ்வரூபனோ வர்ஷினியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘எதுக்கு இந்த சுவரு நம்மளையே பார்த்துட்டு இருக்காங்க?’ என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டாள்.

 

சாப்பிட்டதும் அனைவரும் வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்திருக்க, வைத்தீஸ்வரன் தான் பேச ஆரம்பித்தார்.

 

“சந்திரா, நம்ம மையூவை எங்க பார்த்த? எப்படி கண்டுபிடிச்ச?” என்று வினவ, வர்ஷினி ஸ்வரூபன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

 

“சென்னைல வேந்தனை பார்க்க போனப்போ தான் வர்ஷினியை பார்த்தேன்.” என்று கூறி சிறு இடைவெளிவிட்டு, “இவ்ளோ நாள் மிஸ்டர். ராஜரத்தினத்தோட வீட்டுல இருந்துருக்கா.” என்று அவன் கூறியதும் அங்கிருந்த அனைவரின் முகமும் வெவ்வேறு பாவத்தை வெளிப்படுத்த, அதையெல்லாம் பார்த்திருந்தாள் வர்ஷினி.

 

ஸ்வரூபன் கூறிய ‘மிஸ்டர். ராஜரத்தினம்’ என்ற பதமே சற்று உறுத்தியது வர்ஷினிக்கு. ‘குடும்பமே அப்பா மேல கோபமா இருப்பாங்க போலயே! என்ன தான் ஆகிருக்கும்? அப்பா எதுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க?’ என்று அவள் சிந்தனையில் இருக்கும்போது, “இத்தனை வருஷமா ஒரு தகவல் கூட குடுக்காம இருந்துருக்கானே!” என்று புலம்ப ஆரம்பித்தார் பெரியநாயகி.

 

‘தகவல் குடுக்கலையா? அப்போ நான் அப்பா கூட இருக்குறது இவங்களுக்கு தெரியாதா?’ என்று யோசிக்க , அந்த யோசனையின் முடிவு என்னவோ, ‘எதற்காக தந்தை தாயிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு சென்றார்?’ என்பதிலேயே வந்து நின்றது.

 

அதே பாதையில் அவளின் சிந்தனை பயணிக்க, அந்த பாதையில் அவள் கண்ட நிகழ்வுகள் அனைத்தும் மீண்டும் அவள் சந்தித்த கொடுமையான நாட்களை நினைவுபடுத்தின.

 

‘ஏன் ப்பா என்னை இங்க இருந்து கூட்டிட்டு போனீங்க? உங்க ரெண்டாவது மனைவி என்னைப் போட்டு இந்த பாடுபடுத்துறதுக்கா என்னைக் கூட்டிட்டு போனீங்க?’ என்று அவளின் ஒரு மனம் தனக்கு வலித்ததை நினைத்து புலம்ப, அவளின் மறுமனமோ, ‘ச்சே, அப்படியெல்லாம் இருக்காது. அப்பா எத்தனையோ முறை சித்தி கிட்டயிருந்து காப்பாத்தி தான விட்டிருக்காரு. அப்பா கூட்டிட்டு போனதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்.’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

 

பெரியநாயகியோ இன்னும் புலம்பிக் கொண்டு தான் இருந்தார். “பரமேசு, உன்னோட சிநேகிதனை பாரு. என்ன பண்ணியிருக்கான்னு! ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அப்போவே என் பேத்தியை கூட்டிட்டு வந்து ராணி மாதிரி பார்த்திருந்துருப்பேனே.” என்று கூற, பரமேஸ்வரன் தான் அவரை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

 

‘அப்பா மாமாவோட பிரெண்டா? ஊர்ல சொந்தக்காரங்க இருக்குறதையே எதுக்கு அப்பா மறைக்கணும்?’ என்று மீண்டும் குழம்பித்தான் போனாள்.

 

நேரம் செல்ல செல்ல பெரியநாயகியின் புலம்பலும் கூடிக்கொண்டே சென்றது. ஸ்வரூபன் வைத்தீஸ்வரனிற்கு கண்களைக் காட்ட, அவரும் புரிந்து கொண்டவாறு, “போதும் நாயகி. எல்லாரும் அவங்கவங்க ரூமுக்கு போங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.” என்று கூற, அங்கிருந்தவர்கள்  யாருக்கும் அவரின் இந்த கண்டிப்பான பேச்சை மீறும் துணிவு வரவில்லை போலும், அனைவரும் தங்களின் அறைக்கு பயணப்பட்டனர்.

 

ஆனால், தாத்தாவின் பின்னே நின்று இவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருப்பவனை கண்ட வர்ஷினியோ, ‘பார்றா, இவரு சொன்னா அவரு கேட்குறாரு! ஹ்ம்ம், பெரிய சுவரு தான் போல!’ என்று தன் கவலைகளுக்கு மத்தியிலும் அவனைக் கிண்டலடிக்க மறக்கவில்லை.

 

அவளின் மனதின் குரலைக் கேட்டதைப் போல சட்டென்று வர்ஷினியை திரும்பிப் பார்க்க, அவன் இப்படி பார்ப்பான் என்று அறியாதவளாக நின்றிருந்தவள், அவனின் பார்வை தன்மேல் பட்டதும் விழுந்தடித்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தாள்.

 

இந்த நிகழ்வையும் ஒரு ஜோடி கண்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

 

*****

 

அங்கிருந்து தன் அறைக்கு வந்ததும் முதல் வேலையாக தாமஸ் தன் மகன் கிரீஷுக்கு, மணியை கூட கவனிக்காதவராக அழைப்பு விடுத்தார். அந்த பக்கம் கிரீஷ் அவசரமாக தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

அவனின் இந்த பரபரப்பான வேளையில் அலைபேசி அடிப்பதை ஒருவித எரிச்சலுடன் பார்த்தவன், அழைத்தது அவனின் தந்தை என்பதை அறிந்து சற்று நிதானித்தான். ஏனெனில் இத்தனை ஆண்டுகளில் அவர் இந்த நேரத்திற்கு அழைப்பது இதுவே முதல் முறை.

 

‘ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ?’ என்ற எண்ணத்திலேயே அலைபேசியை உயிர்ப்பித்தான்.

 

அவன் ‘ஹலோ’ சொல்வதற்கு கூட இடைவெளி கொடுக்காதவறாக, “கிரீஷ், இந்த தமயந்தியோட காணாம போன பொண்ணு திரும்ப வந்திருக்கா.” என்று கூறினார் தாமஸ்.

 

அவர் அவசரமாக பேசியதில் எதுவும் புரியாமல் நின்றவன், மீண்டும் அவரை சொல்லக்கேட்டு வர்ஷினியின் வரவை தெரிந்து கொண்டான்.

 

“எப்படி ப்பா திடீர்னு? யாரு கூட்டிட்டு வந்தா?” என்று அவன் சற்று அதிர்ச்சியுடன் வினவியதும், “வேற யாரு, ஸ்வரூபன் தான் கூட்டிட்டு வந்தான். அதுவுமில்லாம, இத்தனை நாளா அந்த ராஜரத்தினம் வீட்டுல தான் அவ இருந்ததா வேற கதை சொல்றான்.” என்று நம்பாத பாவனையுடன் கூறினார் தாமஸ்.

 

“ராஜரத்தினம்… தமயந்தி சித்தி…” என்று அவன் கூற வருவதற்குள், “கிரீஷ், டைம்மாச்சு. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று விஷாகாவின் குரல் கேட்க, “ப்ச், இவ வேற கத்த ஆரம்பிச்சுடுவா!” என்று முணுமுணுத்தபடி, “ப்பா, இப்போ அர்ஜெண்ட்டா கிளம்பனும். வேலைக்கு போயிட்டு வந்து ஈவினிங் ஆற அமர பேசலாம்.” என்று கூறியவன் அவரின் மறுமொழிக்கு கூட காத்திருக்காமல் அழைப்பை துண்டித்துவிட்டான்.

 

“எவ்ளோ முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன். அசால்ட்டா ஈவினிங் பேசிக்கலாம்னு சொல்லிட்டு வச்சுட்டானே.” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்ப, அங்கு உஷா இவரைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

 

தாமஸின் கவனம் தன் மேல் விழுந்ததும் எதுவும் கூறாமல், எப்போதும் போல கசந்த முறுவலுடன் அவரைக் கடந்து சென்றார். அவரின் இந்த செயல் மனதை உறுத்த தான் செய்தது தாமஸிற்கு. பின்னே, பல வருடங்களாக அவர் சந்தித்து வரும் முறுவல் அல்லவா!

 

*****

 

வைத்தீஸ்வரன் அனைவரையும் கலைந்து செல்ல கூறியதும், பெரியவர்கள் அவரவர்களின் அறைக்கு செல்ல, சிறியவர்களோ மீண்டும் ஒரு ‘ஜாலி’யான கலந்துரையாடலுக்கு தயாராகினர்.

 

மேல் மாடியில் அவர்களின் ஆஸ்தான இடமான அந்த நீள்சாய்விருகைக்கு இடம் பெயர்ந்தவர்களை கண்ட அகிலா, “பிள்ளைங்களா, ரொம்ப நேரம் முழிச்சு இருக்கக்கூடாது.” என்றவர், ரூபாவைக் கண்டு, “ரூபாமா, நீயும் சீக்கிரம் தூங்க போகணும்.” என்று கூறிவிட்டு சென்றார். அவரின் பின்னே சென்ற பரமேஸ்வரனோ, “என்ஜாய்!” என்று கூறிவிட்டு சென்றார்.

 

அந்த நீள்சாய்விருக்கையின் ஒரு முனையில் வர்ஷினி அமர்ந்திருக்க, அவளின் அருகே ரூபா அமர்ந்திருந்தாள். ஸ்வரூபனிற்கு அலைபேசி அழைப்பு வந்திருக்க, எதிரே இருந்த பால்கனிக்கு சென்று பேசிக் கொண்டிருந்தான்.

 

அவனை புருவம் சுருங்க பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினி ரூபாவிடம், “உங்க அண்ணா என்ன வேலை பார்க்குறாங்க?” என்று வினவினாள். அவளின் கேள்வி ரூபாவிடம் இருந்தாலும், பார்வையோ ஸ்வரூபனை விட்டு அகலவில்லை.

 

வர்ஷினியின் பார்வையைக் கண்ட ரூபா  நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

 

“க்கும், ஸ்வரூ அண்ணா பக்கத்துல இருக்க காலேஜ்ல ப்ரொஃபெசரா இருக்காங்க.” என்று ரூபா கூறியதைக் கேட்ட வர்ஷினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

“என்னாது ப்ரொஃபெசரா?” என்று கேட்டுக் கொண்டே தன் பார்வையை ரூபாவிடம் திருப்ப, அவள் குறுகுறுப்பாக பார்ப்பதை உணர்ந்து, “என்ன?” என்றாள்.

 

ரூபாவோ இதழோரத்தில் அடக்கிய சிரிப்புடன், “அண்ணா ப்ரொஃபெசரா இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஏன் இவ்ளோ ஷாக் மையூ?” என்று கேட்டாள்.

 

‘என்னை கிட்டத்தட்ட கிட்னாப் பண்ணிட்டு வந்தவன் ப்ரொஃபெசரா இருப்பான்னு நான் எப்படி நினைப்பேன்!’ என்று மனதிற்குள் நினைத்தாலும், வெளியே அதை சொல்லாமல், “இல்ல அவரைப் பார்த்ததும் போலீஸ்னு நினைச்சேன்.” என்று கூறி சமாளித்தாள்.

 

“ஹான், நிறைய பேரு இப்படி தான் சொல்லிருக்காங்க மையூ. நானே அண்ணா கிட்ட, ‘நீங்க ஏன் போலீஸ் ஆகல?’ன்னு கேட்டுருக்கேன்.” என்று அவள் கூற, வர்ஷினியோ கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து கொண்டாள்.

 

“ஏன் போலீஸ் ஆகலையாம்?” என்று வர்ஷினி எடுத்துக் கொடுக்க, “அம்மா தான், ‘போலீஸ் வேலையெல்லாம் வேணாம். எங்க கூடவே தான் இருக்கணும்’ன்னு சொல்லிட்டாங்களாம். அவங்க தம்பி, என்னோட இன்னொரு மாமா, போலீஸா இருந்தப்போ, ஒரு கேஸ் விசாரணையப்போ இறந்துட்டாங்க. அதனால தான் ஸ்வரூ அண்ணாவை போலீஸ் வேலை வேண்டாம்னு தடுத்துட்டாங்க.” என்று கூறிய ரூபா உபரித் தகவலாக, “ஆனாலும் இந்த ஊருல மட்டுமில்லை, இதுக்கு சுத்தி இருக்க ஊருலயும் எங்க ஸ்வரூ அண்ணா தான் ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்’ தெரியுமா? இப்போ கூட காலேஜ்ல அண்ணாக்கு கேர்ள்ஸ் மத்தில பெரிய க்ரேஸ். ‘எஸ்.சி ஃபேன்ஸ் கிளப்’பெல்லாம் இருக்கு தெரியுமா?” என்றாள் பெருமையாக.

 

‘ஹுஹும், இந்த சிடுமூஞ்சி கிட்னாப்பருக்கு  ஃபேன்ஸ் கிளப் ஒண்ணு தான் கேடு!’ என்று ஒரு மனம் நினைத்தாலும், அவளின் மறுமனமோ, ‘என்ன தான் சிடுமூஞ்சியா இருந்தாலும், கொஞ்சம் ஹேண்ட்ஸமா தான் இருக்கான்.’ என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத் தான் செய்தது.

 

தன் எண்ணம் போகும் திக்கை உணர்ந்து அதிர்ந்து, பேச்சை மாற்ற வேண்டி, “ஆமா, உங்க கல்யாணம் லவ் மேரேஜா அரேஞ்ட் மேரேஜா?” என்று வர்ஷினி வினவ, “லவ் கம் அரேஞ்ட் மையூ.” என்று வெட்கத்துடன் கூறினாள் ரூபா.

 

வர்ஷினியும், “அட அழகா வெட்கப்படுறீங்களே! சரி, உங்க காதல் அண்ட் கல்யாண கதையை சொல்லுங்க கேட்போம்.” என்று கூற, “ரெண்டு பேருக்குமே சின்ன வயசுல இருந்தே ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும். ஆனா, வெளிய சொல்லிக்கிட்டது இல்ல. அவருக்கு ஜாதகத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு போட்டுருந்ததுன்னு மாமா பேச்சுவாக்குல சொல்ல, எனக்கு ரொம்ப பதட்டமாகிடுச்சு. அப்பறம் அண்ணா தான் பெரியவங்க கிட்ட பேசி எங்க கல்யாணத்தை நடத்தி வச்சாங்க.” என்று கூற, “இப்போ எதுக்கு என் தலையை உருட்டிட்டு இருக்கீங்க?” என்றவாறே வந்தான் ஸ்வரூபன்.

 

வர்ஷினியோ அவன் புறம் திரும்பவே இல்லை. ‘எதுக்கு பார்க்கணும்? அவன் எதுக்கு என்னை தான் உத்து பார்த்துட்டு இருக்கான்னு குழம்பனும்! நான் அவன் பக்கமே திரும்பல சாமி.’ என்று நினைத்துக் கொண்டாள் வர்ஷினி.

 

ரூபா பேசியதை கூறிவிட்டு,  “மையூ, அவரு இருந்தா இன்னும் கலகலன்னு இருக்கும்.” என்று வர்ஷினியிடம் கூறினாள்.

 

அப்போது ஸ்வரூபன் ரூபாவிடம், “அவன் எப்போ வரேன்னு சொன்னானா ரூபி?” என்று வினவ, “ஹும், அவருக்கு நம்மள பார்க்க வரதை விட, அவரு வேலை தான் முக்கியம் ண்ணா. இந்த வாரயிறுதில வரேன்னு சொல்லியிருக்காரு. பார்ப்போம் வரரான்னு.” என்று பதில் கூறினாள்.

 

பிறகு ரூபி, “அச்சோ இதை மறந்துட்டேனே!” என்று ஸ்வரூபனின் அறையிலிருந்த வைய்ட் போர்டை எடுத்து வந்தாள்.

 

மூவரும் அவளை புருவம் சுருக்கிப் பார்க்க அவளோ, “மையூ, வா நம்ம குடும்பத்து உறுப்பினர்களை ஃப்ளோசார்ட் போட்டு சொல்லிக் குடுக்கிறேன்.” என்று அழைத்தாள்.

 

‘க்கும், சொல்லிக் குடுக்குற நேரமா இது?’ என்று மைண்ட்வாய்ஸில் பேசினாலும் ஆர்வத்துடன் இருப்பவளை ஏமாற்ற விரும்பாமல் வர்ஷினியும் சென்றாள்.

 

அவள் ஸ்வரூபனை கடக்கும்போது, “மைண்ட்வாய்ஸை சத்தமா பேசுற ஆளு நீயா தான் இருப்ப.” என்று அவன் முணுமுணுத்தது வர்ஷினிக்கு மட்டும் கேட்க, ‘அச்சோ அவ்ளோ சத்தமாவா கேட்டுருக்கு?’ என்று புலம்பிக் கொண்டாள்.

 

இங்கு நடப்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் அங்கு ஒரு ஜீவன் மடமடவென்று குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை எழுதி விளக்க ஆரம்பிக்க, படிக்கும்போதே ‘லாஸ்ட்-பெஞ்ச்’ஸ்டுடெண்ட்டான வர்ஷினிக்கு தூக்கம் சொக்கியது.

 

பாதியிலேயே, “போதும் ரூபா. மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்.” என்று பாவமாக சொல்ல, “நோ நோ நோ நோ, இதுவே பாதி தான். இன்னும் எவ்வளவோ இருக்கு.” என்று ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக கூறினாள் ரூபா.

 

இவர்களின் சம்பாஷனைகளை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்திருந்தான் ஸ்வரூபன்.

 

வர்ஷினி பாவமாக ஸ்வரூபனை பார்க்க, முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தவன், “டைம் ஆகிடுச்சு. ரெண்டு பேரும் போய் படுங்க.” என்று கூறியதும் முதல் ஆளாக எழுந்தாள் வர்ஷினி.

 

அதில் ரூபா அவளைப் பார்க்க, லேசாக சிரித்து சமாளித்து வைத்தாள்.

 

பின்பு அவர்களிடம் விடைபெற்று, ரூபா ஒரு அறைக்குள் புகுந்து கொள்ள, அந்நேரம் ஸ்வரூபனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

 

அவள் மனதினுள், ‘இவன் ப்ரொஃபெசர்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு?’ என்று எண்ணிக்கொண்டே ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்க, அந்த ஆராய்ச்சி முடியும் முன்பே இவளை நோக்கி திரும்பியிருந்தான் ஸ்வரூபன்.

 

வாய் திறந்து பேசாமல், அவனின் வலதுபுற புருவத்தை மட்டும் உயர்த்தி ‘என்ன’வென்று வினவ, அவன் சட்டென்று திரும்புவான் என்று எண்ணியிராத வர்ஷினிக்கு அவன் புருவம் உயர்த்தியதும் படபடப்பாக இருக்க, “ஒண்ணுமில்ல. ஒண்ணுமே இல்ல.” என்று உளறியபடி அங்கிருந்து தன் அறைக்கு சென்று மறைந்தாள்.

 

அவள் செல்வதையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வரூபனோ, “கிரேஸி” என்று முணுமுணுத்தபடி தன் அறைக்கு சென்றான்.

 

*****

 

பிரதீப் தன் ஆட்களை விட்டு வர்ஷினியை தேட சொல்லியிருக்க, அவர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களை தொடர்பு கொண்டு வர்ஷினியை பற்றிய தகவல்கள் கிடைத்ததா என்றும் கேட்டுக்கொண்டே இருக்க, அவனின் செயல்களை அவனிடம் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ஆச்சரியமாகவே பார்த்தனர்.

 

பிரதீப்பிற்கு அவர்களின் பாவனைகளையெல்லாம் கண்டுகொள்ள நேரமும் இல்லை, மனமும் இல்லை. அவனின் எண்ணம் முழுவதும் வர்ஷினியே நிரம்பியிருந்தாள்.

 

மேலும், விக்ரம் வர்ஷினியை தேடுவதற்கு வேறு ஆட்களை நியமித்திருப்பதாக தகவல்களும் கசிந்து கொண்டிருக்க, பிரதீப் தன் சந்தேகத்தை அப்போதே உறுதிபடுத்திவிட்டான். அதற்காகவே, அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் முன்னரே தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவனை உசுப்பிவிட்டுக் கொண்டிருந்தது.

 

அவனை எதிர்ப்பவர்களை நொடியில் போட்டுத்தள்ளும் விக்ரமிற்கு, தன்னைப் போட்டுத்தள்ள எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மறந்து போனானோ, இல்லை மோகம் என்னும் போதை மறக்கடித்ததோ?

 

தான் செய்ய நினைக்கும் செயல்களை எவ்வாறு செய்து முடிப்பது என்ற எண்ணத்தில் திளைத்திருந்தவனை கலைத்தது அந்த அலைபேசி ஒலி.

 

“பாஸ், அந்த பொண்ணு எங்க இருக்கான்னு தகவல் கிடைச்சுருச்சு.” என்று தான் கேட்க விரும்பிய செய்தி கிடைத்ததும், தான் வெற்றிக்கு அருகில் சென்று விட்டதாக இறுமாப்புடன் நினைத்தவனிற்கு தெரியவில்லை, வெற்றியின் விளிம்பில் இருந்து அவர்களின் தலைகனத்தாலும் அதீத நம்பிக்கையாலும் தோற்றவர்கள் அநேகம் பேர் என்பது.

 

“இந்த தகவல் உண்மையானதா?” என்று பிரதீப் வினவ, “பாஸ் நம்ம சார்ஜி தான் தகவல் சொன்னது.” என்று மேலும் தனக்கு கிடைத்த தகவல்களை கூறினான் அந்த அடியாள்.

 

அந்த அடியாளிடம் இடத்தை தெரிந்து கொண்ட பிரதீப்பிற்கு, அந்த இடத்தை இதற்கு முன்னரே கேள்விப்பட்டிருப்பதாக தோன்றியது.

 

“பாஸ் அனுப்பின ஆளுங்களுக்கு இந்த தகவல் தெரியுமா?” என்று வினவியதும், “இல்ல பாஸ்.” என்று பதிலளித்தான் அந்த அடியாள்.

 

“இனிமேலும் தெரியக்கூடாது. நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி அவனுங்களை திசை திருப்ப சொல்லு.” என்று கட்டளையிட்டுவிட்டு அழைப்பை துண்டித்தான் பிரதீப்.

 

“வர்ஷினி டார்லிங் உனக்காகவே நான் காத்திட்டு இருக்கேன்.” என்று கோணலாக சிரித்தான் பிரதீப்.

 

*****

 

அந்த நாளின் விடியலை ரசித்துக் கொண்டே எழுந்தவள், சுவரில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அவளின் ரசிப்புத்தன்மை நொடியினில் அகன்றிருந்தது.

 

“ச்சே, மணி பத்தாச்சு! முதல் நாளே இப்படி லேட்டா எழுந்துருக்கேன். என்ன நினைப்பாங்க?” என்று புலம்பிக் கொண்டே, அவசரமாக கிளம்பினாள்.

 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் தன் அறையை விட்டு வெளியே வந்தவள், கீழே கேட்ட பேச்சு சத்தத்தில், புதிதாக யாரோ வந்திருப்பதை உணர்ந்தாள்.

 

‘யாரா இருக்கும்?’ என்ற யோசனையுடன் கீழே சென்றவள், அங்கு நடுகூடத்தில் மையமாக அமர்ந்திருந்த நபரை கண்டதும் அடுத்த அதிர்ச்சிக்கு தயாரானாள்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்