Loading

நிறம் 5

 

அந்த மருத்துவமனை வளாகமே பத்திரிக்கையாளர்களால் நிரம்பியிருக்க, ஷ்யாமிற்கு அங்கிருந்து கிளம்பினால் நன்று என்று தோன்றியது. ஆனால், அவன் ஏற்றுக்கொண்ட பொறுப்பு அவனை அங்கே கட்டிப்போட்டது.

 

இருப்பினும் அந்த நுழைவு வாயிலிலிருந்து சற்று தள்ளியிருந்த பெரிய மரத்திற்குப் பின் நின்று கொண்டான். அந்த அகலமான அடிமரம் அவனின் ‘சிக்ஸ் பேக்’ உடலை மறைத்திருந்தது. தற்சமயம் நிகழும் நிகழ்வுகள், பரபரப்பான சூழல் அனைத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான், கைகளில் இருக்கும் சிகரெட் துணை கொண்டு.

 

அப்போது அவனைக் கடந்து செல்லும் ‘அவளின்’ குரலில் தன்னிலை மீண்டவன், அவளைக் காண்பதற்காக கையிலிருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு, தன்னை மறைத்துக் கொண்டிருந்த மரத்திலிருந்து வெளி வந்தான்.

 

அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல், அவளுடன் பணியாற்றும்  நிழற்படக் கருவியாளருடன் (கேமரா மேன்) எதையோ விவாதித்துக் கொண்டிருந்தாள்.

 

ஷ்யாமோ அவளை மேலிருந்து கீழாக கண்களால் ‘ஸ்கேன்’ செய்து கொண்டிருந்தான், அவளின் மாற்றங்களை அவதானிக்க!

 

உள்ளுணர்வினால் உந்தப்பட்டவள் சுற்றிலும் பார்க்க, அந்த மரத்தில் சாய்ந்து தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனை, எவ்வித உணர்ச்சியும் இன்றி சில நொடிகள் பார்த்தவள், மீண்டும் தன் பணியை பார்க்க துவங்கினாள்.

 

‘இந்த சோடாபுட்டிக்கு எவ்ளோ திமிரு? தலையை சிலுப்பிக்கிட்டு போறா.’ என்று தோன்றினாலும் அவளையே ஆராய்ந்து கொண்டிருந்தன ஷ்யாமின் விழிகள்.

 

‘ஹ்ம்ம், கண்ணுல சோடாபுட்டி மிஸ்ஸிங். எப்பவும் சிரிச்சிட்டே இருக்க உதட்டுல அந்த சிரிப்பு மிஸ்ஸிங். முகத்துல இன்னொசென்ஸ் மிஸ்ஸிங். மொத்தத்துல ஆளே மாறியிருக்கா. என்ன காரணமா இருக்கும் இவளோட இந்த மாற்றத்துக்கு?’ என்று யோசித்தவன், சிறிதும் யோசியாமல் அவளை அழைத்திருந்தான்.

 

“ஓய் சோடாபுட்டி.” என்று அவன் அழைக்க, அவளோ கண்களை மூடி தன்னையே சமன்படுத்திக்கொள்ள முயன்றாள்.

 

அழைக்கப்பட்டவள் அப்படியே நின்றிருக்க, அவளருகே நின்றிருந்தவனோ ஆச்சரியமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் திரும்பாமல் நிற்க, “திமிரு.” என்று முணுமுணுத்த ஷ்யாம் அவள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.

 

“ஹலோ மிஸ்டர், முக்கியமான டிஸ்கஷனா?” என்று அருகில் நின்றிருந்தவனை வினவ, அவனோ ஷ்யாமைப் பற்றி தெரிந்திருந்ததால் வேகமாக இல்லை என்று தலையசைத்தான்.

 

“குட், அப்போ கொஞ்ச நேரம் நான் உங்க பிரெண்ட்டுக்காக வெளிய வெயிட் பண்ணுங்க.” என்றான்.

 

அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் அவளைப் பார்க்க, அவள் இவர்கள் புறம் திரும்பக் கூட இல்லை. அவனின் செயலை பார்த்து கடுப்பான ஷ்யாம், “உங்க பிரெண்டை கடிச்சு முழுங்கிட மாட்டேன்.” என்று கடுமையான குரலில் கூற, அடுத்த நொடி அங்கிருந்து அகன்றிருந்தான் அவன்.

 

“அப்பறம் சோடாபுட்டி, எப்படி இருக்க?” என்று கிண்டலாக ஷ்யாம் வினவ, “ஐ’ம்  ஷர்மிளா.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள் அவள்.

 

“அட ஆமா அது தான உன் பேரு. ரொம்ப வருஷம் ஆச்சுல அதான் மறந்துடுச்சு.” என்று அவளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவே ‘மறந்து’ என்பதில் அழுத்தம் கொடுத்தான்.

 

ஆனால், அவன் எதிர்பார்த்த எதிர்வினை தான் அங்கில்லை. அவளின் முகம் நிர்மலமாகவே இருந்தது.

 

“ஆமா மிஸ்டர். ஷ்யாம், பார்த்து ரொம்ப நாளாச்சுல? பார்க்காதது எல்லாம் மனசுல ரொம்ப நாள் பதிஞ்சுருக்காது.” என்றவளின் குரலிலிருந்த உணர்வை ஷ்யாமினால் பிரித்தறிய முடியவில்லை.

 

அவன் மனமோ, ‘சீனியர்’ என்று பின்னால் சுற்றிக் கொண்டிருந்த ஷர்மியை நினைத்துப் பார்த்தது.

 

அவன் ஏதோ கூற வருகையில் அங்கு வந்த காவலர் அவனை குணசேகரன் அழைப்பதாக கூற, ஷர்மியோ, “கடமை உங்களை அழைக்குது ஷ்யாம். போய் குற்றவாளியை பிடிங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

அவள் கூறியதில் ஏதோவொன்று மனதிற்கு நெருடலாக இருக்க, அதை யோசிக்கும் முன் அவள் கூறியது போலவே கடமை அவனை அழைத்து தான் இருந்தது.

 

*****

 

சிறிது தூரம் வரை தனக்குள் முணுமுணுத்தபடி சாலையை வெறித்துக் கொண்டிருந்த வர்ஷினியின் செவிகளில் அந்த சத்தம் விழ திரும்பிப் பார்த்தவளிற்கு, அவள் கண்கள் படம்பிடித்த காட்சியை நம்ப முடியவில்லை.

 

தன்னருகில் அமர்ந்திருந்தவனையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவளை கலைக்கவென்றே ஹாரனை அழுத்தியிருந்தான் அவன்.

 

அதில் சிந்தை கலைந்தவள், “ஹே யாரு நீ? அந்த ரவுடி எங்க? நீ எப்போ கார்ல ஏறுன?” என்று பரபரப்பாக வினவ, அவனோ அதையெல்லாம் மதிக்காமல் வாகனத்தை செலுத்துவதிலேயே கவனம் கொண்டிருந்தான்.

 

“ஹலோ உன்னைத் தான் கேட்குறேன். யாரு நீ?” என்று இம்முறை சற்று சத்தமாக கேட்க, சட்டென்று திரும்பியவனின் தோற்றத்தில் உள்ளுக்குள் பயம் எழுந்தாலும் அதை மறைத்தவளாக காட்டிக் கொண்டாள்.

 

‘என்ன இப்படி டக்குன்னு திரும்பிட்டான். அடிச்சுடுவானோ?’ என்று அவளின் மனம் ஒருபுறம் அவளுடன் மைண்ட்வாயிஸில் மல்லுகட்டிக் கொண்டிருந்தது.

 

அப்போது தான் கண்டுகொண்டால், அந்த தாடி கேடி தான் இவன் என்பதை!

 

“மரியாதைன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்ட அவனை ‘ஏலியனை’ போல பார்த்தவள், “கிட்னாப்பருக்கு எதுக்கு மரியாதை?” என்று மெதுவாக முணுமுணுக்க அதுவும் அவனின் காதில் விழுந்துவிட, சாலையிலிருந்து பார்வையை திருப்பி அவனை முறைத்தான்.

 

அவனின் முறைப்பில் ‘கப்சிப்’பான வர்ஷினி தலையை சிலுப்பிக் கொண்டாள்.

 

அப்போது அவனின் அலைபேசி ஒலியெழுப்ப, அதை ஊடலை (ப்ளூ டூத்) வழியாக ஏற்றவன், எதிரிலிருந்தவரிடம் பேச ஆரம்பித்தான்.

 

“ம்ம்ம், இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல அங்க எப்படி இருக்குது?”

 

“…”

 

“ஓகே, இனி நானா கூப்பிடுறேன்.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

 

அவனின் அலைபேசி உரையாடலில் இருந்து, தனக்கு சாதகமாக ஏதாவது செய்தி கிடைக்குமா என்று எதிர்பார்த்த வர்ஷினிக்கு தான் சப்பென்று ஆனது.

 

‘யோவ் எல்லாருக்கிட்டயும் இப்படி வார்த்தையை அளந்து தான் பேசுவியா?’ என்று சலித்துக் கொண்டவள், சிறிது நேரத்திலேயே பொறுமையற்றவளாக ஒரு முடிவுடன் அவனின் புறம் திரும்பினாள்.

 

“க்கும், மிஸ்டர். கிட்னாப்பர்” (எங்கு மறுபடியும் ‘மரியாதை’ பற்றிய லெக்க்ஷர் எடுத்து விடுவானோ என்ற பயத்தில் வந்தது தான் இந்த மரியாதை) என்று அவள் அழைக்க, அவன் முகமோ எந்தவித பாவனையையும் வெளிப்படுத்தவில்லை.

 

‘என்னன்னு கேட்குறானா பாரு! சரியான இறுகிப் போன பாறையா கிடக்கான்.’ என்று மனதிற்குள் அவனை கன்னாபின்னாவென திட்டியவள், “அது… நான் முன்னாடி சொன்னது பொய். அந்த விக்ரம் என்னோட அப்பா இல்ல.” என்று தயங்கிக் கொண்டே கூறியவளை திரும்பிப் பார்த்தவன், “அப்படியா?” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு திரும்பிவிட்டான்.

 

‘என்னது இது? அப்படியான்னு கேட்டுட்டு திரும்பிட்டான். அடேய் உன்னையெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா!’’ என்று நினைத்தவாறே அவனை வெளியே முறைத்தவள், ‘வேதாளத்தை பிடிக்கப் போகும் விக்ரமாதித்தனாய்’ மீண்டும் அவனை உருக்கும் முயற்சியில் இறங்கினாள்.

 

“நான் எல்லாம் இவ்ளோ செலவு பண்ணி கிட்னாப் பண்ற அளவுக்கு ஒர்த் இல்ல பாஸ்.” என்று பாவமாக கூற, அவனோ வழக்கம் போல ஒரே ஒரு ‘ஆஹான்’னில் முடித்துக் கொண்டான்.

 

“அட போடா உன் கூட எல்லாம் மனுஷன் பேசுவானா?” என்று விரக்தியில் சற்று சத்தமாகவே கூறிவிட, பின்னர் தான் அதை உணர்ந்தவளாக, விழித்திருந்தால் அதற்கும் ஏதாவது சொல்வான் என்று கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அவள் கண்களை மூடிய நேரம், அவன் உதட்டின் ஓரம் சிரிப்பில் துடிக்க, அதைக் காண தவறவிட்டு விட்டாள் பெண்ணவள்!

 

****

 

குணசேகரன் அழைத்ததாக கூறிய காவலனை தொடர்ந்து சென்றான் ஷ்யாம். அவன் மனதிலோ, ‘இப்போ தான கிளம்புனாரு. அதுக்குள்ள எதுக்கு திரும்ப வரணும்?’ என்ற எண்ணம் தோன்ற, தன் வேகநடையில் ஷீதலின் அறைக்கு சென்றான்.

 

உள்ளே சென்றவன், அந்த அறை இருந்த கோலத்தில் அந்த நாளின் அடுத்த அதிர்ச்சியை அடைய நேர்ந்தது.

 

ஒருபுறம் அகிலின் காயத்திற்கு மருந்திடும் பணி நடந்து கொண்டிருக்க, மறுபுறம் குணசேகரன் மற்றும் அவரின் உதவியாளர் அந்த அறை இருந்த நிலையை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

 

அவரருகே சென்றவன், “சார்…” என்றழைக்க, “ஷ்யாம், என்னது இது? இப்படி தான் கேர்லெஸ்ஸா இருப்பீங்களா? உங்களை நம்பி தான விட்டுட்டு போனேன். இப்படி போலீசையே அடிச்சுப்போட்டு தப்பிச்சுருகாங்கன்னு வெளிய தெரிஞ்சா மானம் தான் போகும்.” என்றார்.

 

அருகிலிருந்த அகிலோ, ‘அடப்பாவி, விசாரிக்கிறேன்னு சொன்னவரை கையை பிடிச்சு இழுத்துட்டு போகாத குறையா கூட்டிட்டு போயிட்டு, இப்போ வந்து நம்பி போனேன் நம்பாம போனேன்னு சீனை போடுறாரு. நம்ம ஆளுக்கு இந்நேரம் கோபம் வந்துருக்கணுமே?’ என்று நினைத்தவாறே ஷ்யாமைக் கண்டான்.

 

ஷ்யாமோ குணசேகரை தீவிரமாக முறைத்துக் கொண்டிருந்தான். தற்போதைய நிலையில் அதை மட்டுமே அவனால் செய்ய முடியும் என்பதால் முறைப்புடன் நிறுத்திக் கொண்டான்.

 

‘விட்டா முறைச்சே போட்டு தள்ளிடுவாறு போல!’ என்று லைவ் கம்மெண்டரி செய்து கொண்டிருந்தான் அகில் மனதிற்குள்ளே.

 

அகில் நினைத்ததை குணசேகரும் நினைத்திருப்பார் போல, ஷ்யாமின் முறைப்பை தவிர்க்க வேண்டி பார்வையை திருப்பியவரின் கவனத்தைக் கவர்ந்தது ஷாக்ஷாத் அகில் தான்.

 

“மிஸ்டர். அகில் எப்படி இது நடந்துச்சு?” என்று கடுமையான குரலில் வினவினார் குணசேகர்.

 

‘அங்க காட்ட முடியாத கடுப்பையெல்லாம் என்கிட்ட காட்ட வேண்டியது!’ என்று சலித்துக் கொண்டே அவரின் கேள்விக்கான பதிலை கூற ஆரம்பித்தான்.

 

“சார், நீங்க போனதும் அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கணும்னு நானும் வெளிய வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சுன்னு உள்ள வந்து பார்த்தப்போ தான் ரெண்டு பேரும் தப்பிச்சு போக முயற்சி பண்ணிட்டு இருந்தங்கன்னு தெரிஞ்சுது. நான் அவங்களை தடுக்குறதுக்குள்ள என்னை அடிச்சுட்டு ரெண்டு பேரும் தப்பிச்சுட்டாங்க.” என்றான்.

 

“அப்போவே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்க வேண்டியது தான?’ என்று குணசேகர் வினவ, “சார்,  அவன் அடிச்சுட்டு போனதுல மயக்கமே வந்துடுச்சு. நீங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் நினைவு வந்துச்சு.” என்றான் அகில்.

 

“ஒரு அடிக்கே மயங்கி விழுந்துடுவீங்களா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, அவரிடம் எதுவும் கூற முடியாதவன் மனதிற்குள், ‘இவ்ளோ பேசுறவன் அவன்கிட்ட அடி வாங்கி பாருய்யா. அப்போ தெரியும். என்னா அடி!’ என்று திட்டினான்.

 

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஷ்யாமோ, “சார், அப்போ உங்களுக்கு எப்படி அவங்க தப்பிச்ச விஷயம் தெரியும்?” என்று குணசேகரிடம் கேட்க, மனிதருக்கோ மாட்டிக் கொண்ட உணர்வில் வாயில் வார்த்தைகளே வரவில்லை.

 

‘அதானே கஞ்சி சட்டையா கொக்கா? கரெக்ட்டா பாயிண்டை பிடிச்சுட்டாரே!’ – அகிலின் மனசாட்சி.

 

“அது வந்து, ஹாஸ்பிடல் சுத்தி… மஃப்டில இருக்க போலீஸ் சொன்ன தகவல் மூலமா தெரிஞ்சுது.” என்று திக்கித்திணறி கூறி முடித்தார் அவர்.

 

இதை ஷ்யாம் நம்பவில்லை என்பது அவனின் முகத்திலிருந்தே தெரிந்தது. ஆனாலும் அவன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. காவல்துறையில் கருப்பு ஆடுகளுக்கா பஞ்சம் என்று நினைத்துக் கொண்டான்.

 

“ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அந்த பொண்ணு இங்க இருக்க விஷயம் பிரெஸுக்கு இன்னும் தெரியாது.” என்று அவர் கூறிக் கொண்டிருந்த சமயம், ஒரு காவலர் உள்ளே வந்து குணசேகரிடம் அந்த காணொளியை காட்டினார்.

 

“பிரபல நிழல் உலக தாதாவான விக்ரம் சிங்கின் மகளிற்கு நேற்றைய ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் ஏற்பட்டு, போலீசாரின் பாதுகாப்பில் அந்த ரவுடிகள் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்த சமயத்தில், தற்போது அவரை மருத்துவமனையில் காணவில்லை என்ற தகவலும் கசிந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் சற்று பரபரப்புடன் காணப்படுகிறது. அவரின் காயங்களுக்கான சிகிச்சை முடிந்ததும் விசாரிக்கலாம் என்று போலீசார் காத்திருந்த வேளையில், விக்ரமின் மகள் காணவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரின் விளக்கம் என்ன என்பதை விளம்பர இடைவேளைக்கு பிறகு காணலாம்.” என்று ஓடிக் கொண்டிருந்த காணொளியைக் கண்டவர்களோ, அதற்குள் இந்த தகவல் எப்படி வெளியே கசிந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

 

*****

 

அவனிடமிருந்து தப்பிக்க தூங்குவதை போல நடித்த வர்ஷினி சற்று நேரத்தில் நிஜமாகவே கண்ணயர்ந்து விட்டாள். அவள் திரும்பவும் சுயநினைவு அடையும் போது, அந்த வாகனம் எங்கோ நின்றிருந்தது.

 

வர்ஷினியோ முதலில் சூழ்நிலை புரியாமல், நெட்டி முறித்து தூக்கத்தை விரட்டியவள், தானிருக்கும் இடத்தைக் கண்டுகொள்ள முயன்றாள். அப்போது தான் மெல்ல அவளின் மூளை கடந்த ஒரு நாளின் நிகழ்வுகளை அவளின் கண்களுக்குள் விரிவடைய செய்ய, அந்த நிகழ்வுகளே அவளின் தூக்கத்தை ஒரு நொடியில் விரட்ட போதுமானதாக இருந்தன.

 

அருகில் அந்த ஆறடி மனிதனை தேட, அவனின் இருக்கையோ காலியாக இருந்தது.

 

‘ச்சே நல்ல சான்ஸ்.  இப்போ போய் தூங்கிட்டு இருந்துருக்கேன்.’ என்று நினைத்தவள், வாகனத்தின் கதவை திறக்க முற்பட, மறுபக்கமிருந்து வலிய கரமொன்று  வாகனத்தின் கதவை மூடியது.

 

‘அடச்சை, இவன் வரதுக்குள்ள தப்பிச்சுடலாம்னு பார்த்தா, மூக்கு வேர்த்த மாதிரி வந்துட்டான்!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

 

அவனோ வர்ஷினியை ஆராய்ச்சி பார்வை பார்க்க, ‘ஐயோ, இவனோட லுக்கே சரியில்லையே.’ என்று எண்ணியவள் இளித்துக்கொண்டே, “என்ன பாஸ், வண்டியை இங்க பார்க் பண்ணிட்டு எங்க போனீங்க?” என்றாள்.

 

அவனோ பார்வையை மாற்றாமலேயே, “டீ குடிக்க போனேன்.” என்றான்.

 

‘அடப்பாவி கடத்திட்டு வந்தவன் ஏதாவது வாங்கித் தருவான்னு பார்த்தா, என்னை கழட்டிவிட்டுட்டு அவன் மட்டும் டீ குடிச்சுட்டு வந்துருக்கான். ‘ என்று நினைத்தவள் வெளியே அதே சிரிப்புடன், “அதுக்குள்ள வந்துட்டீங்களே?” –  அவளையும் மீறி வார்த்தைகள் வெளிப்பட்டுவிட்டன.

 

அவனோ புருவம் சுருக்கி, “டீ தான குடிக்க போனேன். ஆனா, நீ இவ்ளோ அக்கறையா விசாரிக்கிறதைப் பார்த்தா வேறெதோ பிளான் பண்ணியிருப்ப போலயே?” என்றான்.

 

“ச்சேச்சே, நான் என்ன பிளான் பண்ண போறேன்? ஆனா, பாஸ் இப்படி கடத்திட்டு வந்து பட்டினியா போட்டுருக்கீங்களே, உங்களுக்கே என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” என்று சோகமாக வினவினாள்.

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிடைச்சது சான்சுன்னு தப்பிச்சு போக பார்த்த உனக்கு நான் பாவம் பார்க்கணுமா? கொஞ்ச நேரத்துக்கு பட்டினியாவே கிட, அப்போயாச்சும் பேச்சு குறையுதான்னு பார்ப்போம்.” என்று கூறிக்கொண்டே வாகனத்தை உயிர்ப்பித்தான்.

 

“நானே பாவம்!” என்று சத்தமாக கூறிவிட்டு, எதையோ முணுமுணுத்தாள். சிறிது நேரம் தொடர்ந்த அவளின் முணுமுணுப்பை சகித்துக் கொள்ள முடியாதவன், “ப்ச் போதும் என்னை திட்டுனது.” என்றான் எரிச்சலாக.

 

“பாஸ், நான் ஏன் உங்களை திட்டப் போறேன். நானே என் சோக கதையை சொல்லி புலம்பிட்டு இருக்கேன்.” என்றதும், “அப்படி என்ன சோக கதை? சொல்லு கேட்போம்.” என்றான்.

 

“அட போங்க பாஸ். என் சோக கதை எதுக்கு உங்களுக்கு?” என்று சலித்துக் கொண்டாலும், அவளின் மனமோ அவனிடமிருந்து இதன் மூலம் தப்பிக்க ஏதாவது வழி கிடைக்குமா என்று தீவிரமாக சிந்தித்தது.

 

“சும்மா சொல்லு, நீ சொல்ற கதை டச்சிங்கா இருந்தா உன்னோட சாப்பாடு விஷயத்தைப் பத்தி யோசிக்கிறேன்.” என்றான் நக்கலாக.

 

“ஹ்ம்ம், கடவுளே என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே!” என்று முணுமுணுத்தாலும் கதை சொல்வதற்கு தயாரானாள், சாப்பாடு முக்கியமல்லவா!

 

தான் ஏன் கடத்தப்பட்டுள்ளோம் என்பதையே மறந்து கதையுடன் ஒன்றிவிட்டாள் வர்ஷினி. அதை மறக்கடித்தவனோ, அடுத்து என்ன என்பதை யோசித்துக் கொண்டிருந்தான்.

 

*****

 

“எவனோ ஒருத்தன் வந்து தூக்கிட்டு போயிருக்கான்னு சொல்றீங்க. அதுவரைக்கும் நீங்க என்ன **** இருந்தீங்களா? நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது, இன்னும் 24 மணி நேரத்துல, அவன் யாருன்னு கண்டுபிடிச்சு அவனை என் முன்னாடி நிறுத்துறீங்க.’ என்று கோபமாக பேசியபடி அலைபேசியை அணைத்தவர், மறுநொடியே முகத்தை சீராக்கிக் கொண்டு, சிரிப்புடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

 

“ஆவோ ஆவோ விக்ரம்ஜி.’ என்றழைத்து அவரின் கைகளைப் பற்றிக்கொண்டார் அவர், மத்தியில் தற்போதைய எதிர்க்கட்சியாக விளங்கும் ***** கட்சியின் தலைவர்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்