Loading

அன்றிரவு மாலதி அமராவதியிடம் அவர் ஊருக்கு சென்ற விஷயம் பற்றி விசாரிக்க அமராவதி அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்.

“விடுங்க அண்ணி. இன்னார்க்கு இன்னார்ங்கிறது கடவுள் போட்ட முடிச்சு‌. இது தான் நடக்கனும்னு இருந்தா நாம என்ன செய்யமுடியும்?” என்று கூற

“அவ ஆசைப்பட்டது இது ஒன்னு தான் மாலதி. அது கூட இப்படி ஆகிடுச்சேன்னு தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு‌.”என்று அமராவதி வருத்தமான குரலில் சொல்ல மாலதிக்கும் அவரின் வருத்தம் புரிந்துதானிருந்தது.

“சரி இனி இதை பத்தி பேசவேண்டாம். எதுக்கும் இருக்கட்டுமேனு சமுத்ராவோட ஜாதகத்தை தரகர்கிட்ட கொடுத்திருக்கேன். நல்ல வரனா வந்தா அவரு சொல்றேன்னு சொல்லியிருக்காரு. பார்ப்போம்.” என்று கூறியவர் அதன் பின் தன் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு…

 

காலையிலிருந்து களைகட்டியிருந்த வீடு இப்போது தான் ஓய்வெடுக்கத்தொடங்கியிருந்தது. பரசுராமர் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய பணத்தை பிரித்து கொடுத்துவிட்டு அப்போது தான் அயர்வாய் அமர அவரை தேடிக்கொண்டு வந்தார் அமராவதி.

தன் கையில் இருந்த காபியை நீட்டியவர்

“இந்தாங்கண்ணே.”என்று கூற அதனை வாங்கிக்கொண்ட பரசுராமர்

“இந்திரா எங்கம்மா?”என்று கேட்க 

“அண்ணியும் உங்க பொண்ணும் சமுத்ராவை ரெடி பண்ணிட்டு இருக்காங்க.”என்று அமராவதி கூற

“அமரா இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று காபியை அருந்தியபடியே பரசுராமர் கேட்க அமராவதி முகத்திலோ அத்தனை மலர்ச்சி.

எது நடக்காதென்று ஏங்கியிருந்தாரோ அது இன்று அவர் கண்முன்னே நடந்ததை அவரால் இந்த நொடி வரை நம்பமுடியவில்லை.

இதற்கிடையில் எத்தனையோ பிரச்சினைகள் நடந்தேறியபோதிலும் அமராவதியின் மனதிலோ சில மணித்தியாலங்களுக்கு முன் பல களோபரங்களுக்கிடையில் நடந்து முடிந்த சமுத்ரா-ஷாத்விக் திருமணமே முதன்மையாயிருந்தது.

“ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. இனிமே அவ வாழ்க்கையை நினைச்சு எனக்கு எந்தவித கவலையும் இல்லை.”என்று அமராவதி கூற பரசுராமருக்கும் நடந்து முடிந்த திருமணத்தை எண்ணி அத்தனை மகிழ்ச்சி.

அவரும் கூட ஷாத்விக்கின் விருப்பத்திற்காகவே அமைதியாக இருந்தார். ஆனால் இன்று நடந்து முடிந்த அனைத்தும் அவர் எதிர்பாராதது என்றபோதிலும் அவருக்கும் நிம்மதியாகவே இருந்தது.

“இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும் அமரா. நீ எதை நெனச்சும் கவலைப்படாத.”என்று அவரும் கூறவென்று இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் இந்திராணியும் வர

“அண்ணி ரூமுக்கு அனுப்பிட்டீங்களா?”என்று ஆர்வமாக கேட்க இந்திராணி அர்த்தமாக தலையாட்ட அமராவதிக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

இந்திராணியும் அவர்களருகே வந்து அமர்ந்து

“மாலதியும் பசங்க இரண்டு பேரும் எங்க?” என்று இந்திராணி கேட்க

“மாலதி அசதியாக இருக்குனு அப்பவே ரூமுக்கு போயிட்டா. சின்னவங்க இரண்டு பேரையும் சித்தி வீட்டுக்கு அனுப்பிட்டேன்.” என்று அமராவதி கூற மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் அவர்களும் உறங்கச்செல்ல முயல அப்போது சமுத்ராவின் அம்மா என்ற அழைப்பு அவ்விடத்தையே நிறைக்க அனைவரும் வெவ்வேறு பயத்துடன் உள்ளே ஓடிவந்தனர்.

அங்கே சமுத்ரா தன் அலங்காரம் மொத்தமும் கலைத்து சாதாரண உடைக்கு மாறியிருந்தவளின் கையில் அவள் ஊரிற்கு வரும் போது எடுத்துவந்திருந்த பயணப்பொதியிருக்க அனைவர் முகத்தில் பீதி படர்ந்தது.

என்ன நடந்ததொவென்று பதறி அமராவதி

“என்னாச்சு சமுத்ரா? எதுக்கு இப்போ பேக்கோட நிற்கிற?”என்று நெஞ்சு நிறைய பதைபதைப்புடன் கேட்க

“நாம இப்பவே கிளம்பலாம்.”என்றவளின் குரலில் சற்றும் இலகுத்தன்மையில்லை.

 

அங்கிருந்த அனைவருக்கும் சமுத்ராவின் இந்த எதிரொலி மனக்கசப்பை ஏற்படுத்தியபோதிலும் யாரும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“ஏய் என்னடி பேசுற? இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் ஆச்சு.”என்று அமராவதி அடுத்து பேசுவதற்கு முன்பே

“இப்போ நீ கிளம்புறியா இல்லை நான் மட்டும் கிளம்பி போகட்டுமா?”என்று சமுத்ராவோ கடுமையான குரலில் கேட்க இந்திராணி இடையில் புகுந்தார்.

“சமுத்ரா என்ன பிரச்சினைனாலும் காலையில பேசிக்கலாம்‌.”என்று இந்திராணி ஏதேதோ சமாதானம் சொல்ல சமுத்ராவோ அது எதையும் கேட்கும் நிலையிலில்லை.

“என்னை மன்னிச்சிருங்க அத்தை.” என்றவள்

“இப்போ நீ வரைலைனா நான் மட்டும் ஊருக்கு கிளம்புறேன்.” என்று பையோடு முன்னேற முயன்றவளை தடுத்த பரசுராமர்

“அமரா நீயும் கிளம்பு.”என்று கூற அமராவதியும் எதுவும் பேசமுடியாது தன் பையை எடுத்துக்கொண்டு சமுத்ராவை பின்தொடர்ந்தார்.

எடுத்து வந்திருந்த தன் காரினுள் பையை திணித்தவள் ஓட்டுனர் இருக்கையில் அமர அமராவதி ஏறியதும் காரை துரிதக்கதியில் கிளப்பியிருந்தாள் சமுத்ரா.

சமுத்ரா செய்த கலாட்டாவில் தன் பிள்ளையை மறந்திருந்த இந்திராணி ஷாத்விக்கை தேடிக்கொண்டு அவனின் அறைக்குள் செல்ல உள்ளே பவதாரணி தன் கையை பிடித்தபடி அமர்ந்திருந்த ஷாத்விக்கை கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தாள்.

அதை கண்டு

“என்னடி ஆச்சு இவனுக்கு?”என்றபடியே ஷாத்விக்கை ஆராய அவன் வலியில் முணங்குவது புரிய

“டேய் என்னடா ஆச்சு? ஏன்டா முணங்குற? “என்று இந்திராணி விசாரிக்க

“உன் மருமகனு ஒருத்தியை என் தலையில கட்டி வச்சியே அவ பண்ணிட்டு போன வேல தான் இது‌. ஆம்பிளைனு கூட பார்க்காம கைகாலை முறுக்கிவிட்டுட்டு போயிட்டா.” என்று வலியில் முணங்கியபடியே கூற அவனை ஆராய்ந்தபடி

“நீ என்னடா சொன்ன?” என்று இந்திராணி கேட்க

“என் வருத்தத்தை கொட்டிட்டேன். அதுக்கு இப்படி என்னை துவைச்சு போட்டுட்டு போயிட்டா.”என்று அவன் வலியில் முணங்கியபடியே சொல்ல இந்திராணிக்கு ஒருபுறம் கோபமும் மறுபுறம் சமுத்ரா மீது வருத்தமும் மேலோங்கியது.

அப்போது பரசுராமரும் இவர்கள் பேசியதை கேட்டபடி உள்ளே வர

“அப்பவே நெனச்சேன். இந்த பய தான் ஏதாவது செஞ்சிருப்பான்னு. சமுத்ரா அத்தனை கோபத்தோட இந்த இராத்திரியில கிளம்புறான்னா அவ மனசு காயப்படுற மாதிரி நீ என்னமோ பேசியிருக்க.” என்றபடி பரசுராமர் உள்ளே வர ஷாத்விக்கோ

“என்ன போயிட்டாளா?” என்று கேட்டபடி சமுத்ரா சற்று நேரத்திற்கு முன் சொன்ன விஷயங்களை ஓட்டிப் பார்த்தான் ஷாத்விக்.

அவனின் மனசாட்சி குற்றம் சாட்டியபோதிலும் அவனுள் எப்போதும் குடியிருக்கும் வீம்புத்தனமோ

“அவ மனசாட்சிக்கு பயந்து இப்படி ராத்திரி நேரத்துல ஓடினதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று சப்பைகட்டு கட்ட அதனை தனக்கான சமாதானமாக வைத்துக்கொண்டான் ஷாத்விக்.

“இங்க பாரும்மா. நீ சொன்னங்கிறதுக்காக தான் இப்போ வரைக்கும் அமைதியா இருக்கேன். உன் புருஷனுக்கு அவ முக்கியம்னு இங்க என்னை போட்டு காய்ச்ச வேணாம்னு சொல்லு.” என்று ஷாத்விக் பேச யாருமே எதிர்பாராத நேரத்தில் ஷாத்விக்கின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் இந்திராணி.

ஷாத்விக்கால் கூட தன் அன்னை தன்னை அறைந்தாரென்பதை நம்பமுடியவில்லை.

“அம்மா இப்போ எதுக்கு அவனை அடிக்கிற?” என்று பவதாரணி தன் அன்னையை தடுக்க 

“எப்படி பேசுறான்னு பார்த்தியா? பெத்தவருங்கிற ஒரு மரியாதை இல்லை. மருமகளா வீட்டுக்கு வந்தவ இராத்திரி நேரம் தனியா கிளம்பி போயிருக்காளேங்கிற கவலை கொஞ்சம் கூட இல்லை. எனக்கென்னான்னு பேசிட்டு இருக்கான். இவனை அடிக்காமல் வேற என்ன செய்ய சொல்லுற? அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தா இந்த நேரத்துல நாம சொல்லுறதை கூட கேட்காம கிளம்பி போயிருப்பா. இவனை இத்தோட விட்டுருக்கக்கூடாது. மொத்தமா பொளந்திருக்கனும்.” என்று இந்திராணி மொத்தமாக சமுத்ரா பக்கம் பேச ஷாத்விக்கிற்கோ அவன் பக்கம் நின்று பேச யாரும் இல்லை.

“இங்க பாரு. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. அவ இந்த வீட்டுக்கு வந்தாகனும்.” என்று இந்திராணி கூற

“உனக்கு வேணும்னா நீ கூப்பிடு. என்னால அவகிட்ட போய் கெஞ்ச முடியாது.”என்று ஷாத்விக் முறுக்கிக்கொள்ள 

“அதே மாதிரி என்னாலயும் உன்கிட்ட கெஞ்ச முடியாது.‌ அவ இந்த வீட்டுக்கு எப்போ வராளோ அப்போ தான் நமக்குள்ள பேச்சு வார்த்தை இருக்கும். இல்லைனா இது தான் நான் உன்கிட்ட கடைசியாக பேசுற சந்தர்ப்பமாக இருக்கும்.” என்று இந்திராணி உறுதியாக சொல்ல ஷாத்விக்கிற்கு தான் உள்ளே சுருக்கென்றது.

யாரோ ஒருத்திக்காக தன்னை தூரம் தள்ளிய தன் அன்னையின் செயல் அவனை பெரிதும் காயப்படுத்தியது.

“இது தான் உன் முடிவுனா என் முடிவையும் கேட்டுக்கோ. இன்னும் இந்த கல்யாணம் சட்டப்படி செல்லுபடியாகல. இனியும் அது செல்லுபடியாகாது.” என்றவன் விருட்டென அறையிலிருந்து வெளியேற அங்கிருந்த அனைவருக்கும் அடுத்து என்ன செய்வதென்ற யோசனையே.

மறுபுறம் சமுத்ரா வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டிருக்க அமராவதியோ இரண்டு விதமான மனநிலையில் இருந்தார்.

இந்த திருமணம் எதிர்பாராதவகையில் நடந்த போதிலும் இது சமுத்ரா விரும்பியதென்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

வெளியில் அவள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தாலும் நடந்தேறிய திருமணம் நிச்சயம் உள்ளூர அவளுக்கு மகிழ்ச்சியளிக்குமென்று அவர் நன்கு அறிவார். ஆனால் சமுத்ரா இப்படி திடுதிடுமென அர்த்தராத்திரியில் கிளம்புவதற்கான காரணம் தான் அவருக்கு புரியவில்லை. 

 

நிச்சயம் அவர்களுக்கு இடையில் ஏதோ நடந்திருக்குமென்று அமராவதிக்கு தெரிந்திருந்தபோதிலும் அவளை அதட்டி விசாரிக்கும் வயதில் அவளில்லை.

ஒரு தாயாக தன் மகளின் மனதை அறியவேண்டுமென்று எண்ணியவர் 

“சமுத்ரா”என்று அழைக்க அவளோ காதில் விழாதது போல் காரை ஓட்டிக்கொண்டிருக்க இருமுறை அழைத்தும் அவளிடமிருந்து பதில் வராமல் போக அவளின் தோளை உலுக்க சட்டென்று சடன் ப்ரேக் போட்டாள் சமுத்ரா‌.

சீட் பெல்ட் போட்டிருந்ததால் இருவரும் சுதாகரித்துக்கொள்ள பதறிய அமராவதி

“என்னாச்சு சமுத்ரா?” என்று விசாரித்தபடியே வண்டியிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து சமுத்ராவிற்கு கொடுக்க அவளோ ஒரே மூச்சில் அந்த ஒரு லீற்றர் போத்தலையும் காலி செய்ய அமராவதிக்கோ உள்ளுக்குள் பதறியது.

 

ஏதோ சரியில்லையென்று உணர்ந்தவர்

“சமுத்ரா”என்று மெல்லிய குரலில் அழைக்க அவளோ தன் சீட் பெல்ட்டினை அகற்றிவிட்டு தன் அன்னையின் மடியில் படுத்து விசுப்பத்தொடங்கினாள்.

 

எந்த சந்தர்ப்பத்திலும் நிமிர்வுடனும் ஆண்களுகளையே மிரளவைக்கும் ஆளுமையுடனும் கம்பீரமாக வலம் வருபவள் இன்று இப்படி குழந்தையாய் தாய்மடி தேடி அழுவது ஒரு தாயாய் அமராவதியை பெரிதும் பாதித்தது.

“ஏன்மா அழுற? என்னாச்சு?” என்று பதட்டத்துடன் விசாரிக்க சமுத்ராவோ எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.

அவளிடமிருந்து பதில் வராதென்று உணர்ந்த அமராவதி தானே பேசத்தொடங்கினார்.

“என் பொண்ணுக்கு அழத்தெரியாதோனு பலநாள் கவலைப்பட்டிருக்கேன். அப்படி கவலைப்படும் போதெல்லாம் மாலதி சொல்லுவா. அவ அழுத்தக்காரி. தன் கஷ்டம் யாருக்கும் தெரியக் கூடாதுனு தான் அழமாட்டேங்கிறா. அப்படியே அவ அவளை மீறி அழுதா கூட அவ கஷ்டம் மத்தவங்களை பாதிக்கக்கூடாதுனு தான் நெனைப்பா. ஆனா எனக்கு நீ என் மடியில இப்படி படுத்து உன் மனசை கஷ்டப்படுத்துற விஷயத்தையெல்லாம் சொல்லி அழமாட்டியானு ஏக்கமாக இருக்கும்.” என்று அமராவதி கூற சமுத்ராவின் அழுகையோ இன்னும் அதிகமானது.

அமராவதியோ அவளை இறுக்கியணைத்து சமுத்ராவிற்கு தேவையான ஆதரவான அந்த அரவணைப்பினை கொடுக்க இப்போது சமுத்ராவின் விசும்பல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது.

அவள் எழும்வரை அவளின் தலையை தடவிக்கொடுத்தபடியே இருந்த அமராவதியின் பிடியிலிருந்து மெதுவாக எழுந்தாள் சமுத்ரா.

“அம்மா நீ என்னை நம்புறதானே?” என்று கேட்க அமராவதியோ எதற்காக கேட்கின்றாளென்று புரியாதபோதிலும் ஆமென்று பதில் சொல்ல

“இங்க நடந்த எதுவும் இப்போதைக்கு அங்க யாருக்கும் தெரியவேணாம்” என்று சமுத்ரா கூற அமராவதியோ

“எது தெரியவேணாம்னு சொல்ற சமுத்ரா?”என்று கேட்க

“இங்க நடந்த அவசர கல்யாணம்.” என்ற சமுத்ராவின் குரலில் உறுதியிருந்தது.

“என்ன சொல்ற சமுத்ரா?”என்று சிறு பதட்டத்துடன் அமராவதி கேட்க

“இந்த கல்யாணம் எப்படி சட்டப்படி செல்லாதோ அதே மாதிரியே இருக்கட்டும்.” என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தார் அமராவதி.

“சமுத்ரா நீ அவசரப்படுற”என்று அமராவதி எச்சரிக்க சமுத்ராவோ நிதானமாக

“இவ்வளவு நாள் அவசரப்பட்டதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேன். இனியும் அந்த தப்பை செய்யமாட்டேன்.” என்றவள் மீண்டும் சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டு காரை கிளப்பினாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்