Loading

மறுபுறம் தன் வீட்டிலிருந்து வெளியேறிய ஷாத்விக் நேராக சென்றது நாதனின் தோப்பிற்கு தான்.

நாதனும் அவனின் மற்ற நண்பர்களும் அங்குதான் இருக்க அவர்களோ ஷாத்விக்கை அந்நேரத்தில் அங்கு சற்று எதிர்பார்க்கவில்லை.

“டேய் இவன் என்னடா இங்க வரான்?” என்று பாலு கேட்க சிவசங்கரனோ

“சண்டை போட்டுட்டு வாரானா இல்லை அடிவாங்கிட்டு வாரானானு தெரியலயே” என்று சொல்ல நாதனோ

“நிச்சயம் இரண்டுல ஒன்னு கண்டிப்பா நடந்திருக்கும்.” என்று அவனும் தன் யூகத்தை கூற மூவரும் தங்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தவனை நோக்கி சென்றனர்.

“டேய் என்னடா இந்த நேரத்துல?”என்று நாதன் விசாரிக்க ஷாத்விக் ஒரே மூச்சில் அனைத்தையும் கூறிமுடித்தான்.

“டேய் என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று பாலு தலையில் அடித்துக்கொள்ள

“நீ ரொம்ப அவசரப்படுறடா.”என்று சிவசங்கரனும் சொல்ல

“ஆளுக்கு முதல்ல பொட்டி படுக்கையை கட்டிக்கிட்டு கிளம்புன அவள விடவா நான் அவசரப்பட்டுட்டேன்?”என்று ஷாத்விக் நியாயமாக ஒரு கேள்வியை கேட்க

“நீ எதோ சொல்லப்போக தானே அந்த பொண்ணு ராத்திரி நேரம்னு கூட பார்க்காமல் கிளம்பிபோயிருக்கா.”என்று நாதன் உண்மையை கூற அமைதியாகிவிட்டான் ஷாத்விக்.

“சொல்லுடா. என்ன அமைதியா இருக்க? அப்போ நீயும் ஏதோ அந்த பொண்ணை கஷ்டப்படுத்துற மாதிரி பேசியிருக்க.” என்று பாலு கேட்க ஷாத்விக்கோ வாயை திறப்பதாயில்லை.

“நீ எதுக்கு இப்படி தயங்குறனு தான் புரியமாட்டேங்கிது. நீ விரும்புறன்னு சொன்ன ஒருத்தி தாலி கட்டப்போற நேரத்துல காணாமல் போனது அந்த பொண்ணோட குத்தமா? அந்த பொண்ணு உன் அப்பாவோட பேச்சுக்காக நீ கட்டுன தாலியை வாங்கனும்னு என்ன அவசியம்? உனக்கு தெரியும் உன் அப்பால இருந்து இந்த ஊரு மொத்தமுமே அந்த புள்ள பெயரை சொன்னாலே அவ்வளவு மரியாதை. அப்படிபட்ட பொண்ணு இவ்வளவு நடந்தும் அமைதியாக இருக்கிறதே பெரிய விஷயம். அந்த பொண்ணு மனசு ஏற்கனவே எத்தனையோ குழப்பத்துல இருந்திருக்கும். இப்போ நீயும் கிறுக்குதனமா பேசி அந்த பொண்ணு மனசை நோகடிச்சிட்டு வந்திருக்க.” என்று பாலு சொல்ல

“நானும் அவளை நோகடிக்கனும்னு நெனைக்கல‌. நானும் மனுஷன் தானே. எனக்கும் உணர்வுகள் இருக்காதா? என் மனசுல இருந்த வருத்தத்தை எங்க கொட்டுறதுனு தெரியாமல் அவ மேல காட்டிட்டேன். யாரே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு இன்னொருத்தரை பலியாக்குற அளவுக்கு மனசாட்சி இல்லாதவனில்லை நான்.”‌ என்றவனின் வார்த்தைகளில் அதிகமாகவே குற்றவுணர்ச்சியிருந்தது.

அன்று காலையிலிருந்து நடந்த எதுவுமே அவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாயில்லை. கூரைப்புடவை மாற்றப்போன சமயத்தில் பெண்ணை காணவில்லையென்று மணப்பெண்ணை மாற்றியதுமட்டுமில்லாமல் அன்றே சாந்திமுகூர்த்தமென்று அவனது வீட்டார் செய்திருந்த ஏற்பாடு அவனை மேலும் கோபப்படுத்தியது.

இது போதென்று உள்ளே வந்த சமுத்ரா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஷாத்விக்கின் பொறுமை எல்லை தாண்டி மொத்தமாக வெடித்து அவளை காயப்படுத்தியிருந்தது.

தாலி கட்டி அழைத்து வந்தவளை பற்றி யோசிப்பதா காணாமல் போனவளை பற்றி வருந்துவதா என்று புரியாமல் இருவித மனநிலையில் பரிதவித்ததே ஷாத்விக்கின் இந்த எதிரொலிக்கு காரணம்.

“டேய் மௌனிகா எங்கடா போனா? நீ என்ன நடந்துச்சுனு விசாரிச்சு பார்த்தியா?” என்று அப்போது தான் மௌனிகா பற்றி நினைவு வந்தவனாக ஷாத்விக் விசாரிக்க நாதனோ

“தெரியல. போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துருக்காங்க. மண்டபத்துல இருந்த சி.சி.டிவியில பார்த்ததுல அவளா வெளியில போற மாதிரி தான் இருக்கு.” என்று நாதன் அலட்சியமாக கூற சிவசங்கரனோ

“ஏன்டா ஊருல இத்தன பொண்ணுங்க இருக்கும் போது உனக்கு ஏன்டா கண்ணு அவ மேல போனுச்சு? அவ அம்மா பேர ஊருக்குள்ள சொன்னாலே நாலு விதமாக கழுவி ஊத்துவாங்க.”என்று அவன் எரிச்சலுடன் கூற

“இது தெரிஞ்சு தானே சார் நம்மகிட்ட கூட கடைசி நிமிஷம் வரைக்கும் சொல்லல.”என்று பாலு முறைப்புடன் கூற

“அப்படி எதுவும் இல்லடா. அவ படிப்பு முடியும் வரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அவங்க அம்மா பிரச்சினை பண்ணுவாங்கனு தான் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைக்க நினைச்சேன். அதை கூட எப்படியோ என்னை பெத்தவரு தெரிஞ்சிக்கிட்டாரு.” என்று ஷாத்விக் கூற

“அதையெல்லாம் விடு. எதுக்கு அந்த பொண்ணு தாலி கட்டுற நிமிஷத்துல மண்டபத்துல இருந்து போகனும்? எனக்கென்னமோ குடும்பமா சேர்ந்து என்னத்தையோ மறைக்கிறாங்கனு தோனுது.” என்று பாலு கூற

“இல்லடா அப்படி எதுவும் இருக்காது. அப்படி இருந்திருந்தா நிச்சயம் மௌனிகா என்கிட்ட சொல்லியிருப்பா.” என்று ஷாத்விக் நம்பிக்கையாக சொல்ல

“என்னத்த சொல்லியிருப்பா? இன்னொருத்தனை காதலிச்சதையா?” என்று நாதன் சுள்ளென்று கேட்க மற்ற இருவரும்

“டேய் சும்மா இரு” என்று கூற

“இன்னும் என்னடா சும்மா இருக்கனும்? நல்லா கேட்டுக்கோடா. நீ உருகி உருகி காதலிச்சியே ஒருத்தி அவ பாரின்ல படிக்கும் போது வேறொருத்தனை காதலிச்சிருக்கா.” என்று கூற ஷாத்விக்கோ அதிர்ந்துபோனான்.

“டேய் நீ‌ நீ…”என்று ஷாத்விக்கின் நா அதிர்ச்சியில் தந்தியடிக்க

“எனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்னு பார்க்கிறீயா? நான் காலையில ஏதோ வாங்குறதுக்காக பஸ் ஸ்டேன்ட் வழியா போகும் போது அந்த பையன் என்கிட்ட தான் வழிகேட்டான். அப்போ தான் எனக்கும் விஷயம் தெரியும். நான் தான் அந்த பையனை மண்டபத்துக்கு அழைச்சிட்டு வந்தேன்.” என்று நாதன் கூற

“ஆமாடா நாதன் எங்ககிட்ட இந்த விஷயத்தை சொன்னப்போ எங்களுக்கும் என்ன செய்றதுனு தெரியல. அப்போ தான் அந்த பொண்ணை புடவை மாத்த அனுப்புனாங்க.” என்று கூறிய சிவசங்கரன் அதற்கு பின் நடந்த அனைத்தையும் விளக்கினான்.

நாதன்,பாலு,சிவசங்கரன் மூவரும் வசீகரனோடு மணப்பெண் அறையை தேடிச் செல்ல அங்கு கூட்டம் சற்று அதிகமாக இருக்க அங்கிருந்த தெரிந்த பெண்ணின் மூலம் மௌனிகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வசீகரோனோட பேச வைத்து அவள் தப்பித்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது அவர்கள் மூவருமே.

ஒருபுறம் ஷாத்விக்கின் திருமணம் தடைபடுகிறதேயென்ற கவலை இருந்த போதிலும் ஷாத்விக்கின் வாழ்க்கை நரகமாகாமல் காப்பாற்றிவிட்டோமென்ற ஆறுதலே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

“அந்த பொண்ணை அவங்க அம்மா தான் மிரட்டி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காங்க. இந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தா ஒன்னு உன் வாழ்க்கை சீரழிஞ்சு போயிருக்கும் இல்ல அந்த பொண்ணு செத்து போயிருக்கும்.” என்று பாலு கூற 

“என்னடா சொல்லுற?” என்று சிவசங்கரன் மற்றும் நாதன் கேட்க

“ஆமாடா. அந்த பொண்ணு கையில தூக்க மாத்திரை வச்சிருந்தா. நாம பாக்கலைனு நெனச்சு தூக்கி போட்டத நான் பார்த்தேன்.நாம கொஞ்சம் லேட்டா போயிருந்தா நிச்சயம் மணமேடையில ஏதாவது விபரீதம் நடந்திருக்கும்.” என்று பாலு சொல்ல இதை கேட்டிருந்த ஷாத்விக்கின் நிலைமை தான் மோசமானது.

அவன் மனதால் விரும்பிய ஒருத்தி வேறொருவனை விரும்பியது ஏமாற்றமென்பதோடு தன்னை மணந்தால் தற்கொலை செய்யும் முடிவோடு இருந்த அவளின் முடிவு அவன் மனதை பெரிதும் காயப்படுத்தியிருந்தது.

அவன் அவளுக்காகவென்று செய்த, செய்ய முனைந்த அனைத்து செயல்களும் அந்த ஒரு நொடியில் பயனில்லாததென்றாகி போனதால் சற்று உடைந்துதான் போனான் ஷாத்விக்.

சற்று நேரம் பேசாமலே பேயறைந்தது போல் நின்றிருந்தவனின் அமைதி மற்ற மூவரையும் பயமுறுத்த

“ஷாத்விக்.” என்றழைக்க

“நான் தப்பு பண்ணிட்டேனா?” என்று கேட்க மற்ற மூவருக்கும் அவன் என்ன சொல்கிறானென்று புரியவில்லை.

“ஊருக்கு வந்ததுல இருந்து அவ என்கிட்ட பேச பலமுறை பேச முயற்சி பண்ணா. ஆனா நான் தான் அதை பெருசா பொருட்படுத்தல. ஒரு வேளை நீங்க மூனுபேரும் அவளை மண்டபத்துல இருந்து அனுப்பாமலிருந்தா அவ அவ அவ என் கண்முன்னாடியே…”என்றவனின் குரலோ இப்போது நடுங்கியது.

தன்னை ஏமாற்றிய பெண் என்பதை தாண்டி அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால் என்ற எண்ணமே இப்போது அவனை ஆக்கிரமித்திருந்தது.

அவனின் எண்ணவோட்டத்தை புரிந்துகொண்ட மூவரும்

“டேய் அதான் ஏதும் தப்பா நடக்கலயே. நீ தேவையில்லாததை யோசிச்சு மனசை குழப்பிக்காத”என்று பாலு கூற

“இல்லடா நான் தப்பு பண்ணிட்டேன். என்ன தான் என் காதல் மேல நம்பிக்கை இருந்தாலும் நானே நேரடியாக அவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு இந்த ஏற்பாட்டுக்கு சரினு சொல்லியிருக்கனும். ஒரு வேளை நான் முன்னாடியே அவகிட்ட பேசியிருந்தா இது இவ்வளவு தூரத்துக்கு போயிருக்காது.” என்று புலம்ப மற்ற மூவருக்கும் சலிப்பாக இருந்தது.

இது இன்று நேற்று இல்லை. சிறுவயதிலிருந்தே எந்த தப்பு நடந்தாலும் அதன் பழியை மொத்தமாக தன் மேல் போட்டுக்கொள்வது ஷாத்விக்கின் பழக்கம். குறிப்பாக அவனுடன் நெருக்கமானவர்களுடன் ஏதாவது விரிசலோ பிரச்சினையோ வரும்போது இது நடக்கும்.

இன்றும் அவ்வாறு ஏமாற்றம் தனக்கென்ற போதிலும் தன் பக்கம் தவறென்று அவன் புலம்ப இது சரிப்படாது என்று எண்ணியவர்கள் தாங்கள் குடிப்பதற்கென்று எடுத்து வைத்திருந்த மதுவை ஷாத்விற்கு கொடுக்க அவன் ஒரே மிடறில் போதையாகி உறங்கிவிட்டான்.

“என்னடா மோந்து பாத்தாலே மட்டையாகியிருப்பான் போலயே” என்று பாலு கூற

“அவனை பத்தி தான் தெரியுமே. இவனை உள்ளே படுக்கவச்சிட்டு வரேன்.” என்று அவனை அந்த தோப்புவீட்டில் படுக்கவைத்துவிட்டு நாதன் வர சிவசங்கரன் பேசினான்.

“என்னடா இவன் இப்படி இருக்கான்? ஏமாந்துட்டேனு புலம்புவான்னு பார்த்தா தப்பு செஞ்சுட்டேனு புலம்பிட்டு இருக்கான்.”

“அதான் டா எரிச்சலா இருக்கு. இவன் இப்படியிருந்தா எப்படிடா அந்த பொண்ணு கூட சேர்ந்து வாழமுடியும்?” பாலுவும் சொல்ல

“அதைவிட பெரிய பிரச்சினை அந்த பொண்ணு ஊருக்கு கிளம்பிட்டா. இவனே இப்படி பிடிவாதமா இருக்கும் போது அந்த பொண்ணு என்ன செய்வானு தான் பயமா இருக்கு.” என்று நாதன் சொல்ல

“நாம அப்பாகிட்ட பேசிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம். அங்க நெலவரம் என்னன்னு தெரியாமல் நாம ஏதாவது செய்யப்போய் அது இன்னும் சிக்கலாகிடுச்சுனா கஷ்டமாகிடும்.” பாலு சொல்ல

“இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி தண்ணி தெளிச்சு விட்டுடலாம்னு பார்த்தா முடியமாட்டேங்குதே.” என்று சிவசங்கரன் சொல்ல

“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க. இவனுக்கு ஆயிரம் பஞ்சாயத்தை தீர்த்து வச்சு தான் வாழ்க்கையை ஆரம்பிக்கவைக்கனும் போல.”என்று பாலுவும் ஆமோதிக்க

“அதெல்லாம் சரி. அந்த வசீகரன் பேசுனானா?” என்று நாதன் கேட்க

“ஆமா. விடிய இரண்டு மணிக்கு ஃப்ளைட்டாம். இப்போ இரண்டு பேரும் ஏர்போர்ட் பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தங்கியிருக்கதா சொன்னாங்க” என்று பாலு சொல்ல

“நல்ல வேளை பாஸ்போர்ட்டை அந்த பொண்ணு பத்திரப்படுத்தியிருந்துச்சு. இல்லைனா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்” சிவசங்கரன் சொல்ல

“ஆமாடா. அவங்க அம்மா சரியில்லைனாலும் இந்த பொண்ணு கொஞ்சம் அப்பாவி தான். அந்த பையன் கூட நல்லா வாழ்ந்தா சரிதான்” என்று நாதனும் சொல்லவென்று மூவரும் காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அலசி ஆராய்ந்து வாதிட்டுக்கொண்டே இரவை கழித்தனர்.

மறுநாள் காலை வீட்டை வந்தடைந்ததும் சமுத்ரா நேரே தன் ரூமிற்குள் சென்று அடைந்து கொள்ள அமராவதிக்கு தான் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

மனதில் பல கவலைகள் இருந்த போதிலும் அவரின் உடல் ஓய்வுக்கு ஏங்க அவரும் தன்னறைக்கு சென்றார்.

தன் அறைக்கு வந்த சமுத்ராவின் மனமோ அலைபாயத்தொடங்க அவளுக்கு அதனை அடக்கும் வழி தெரியவில்லை.

உணர்வுகளின் தாக்கம் அவளின் நிதானத்திற்கு சவால் விட அவளுள்ளே இனம்புரியாததொரு புழுக்கம்.

உள்ளூர புழுக்கமென்று அவள் முதலில் நினைத்திருக்க நிமிடத்திற்கு நிமிடம் புழுக்கம் அதிகரிக்க அப்போது தான் தன் உடல்வெப்பநிலை மாற்றத்தாலே இந்த மாற்றமென்று புரிந்திட சமுத்ராவிற்கு இப்போது கட்டிலில் இருந்து எழுவதற்கு கூட தெம்பில்லாமல் போக போர்வையை இழுத்துமூடியவளின் பற்கள் தந்தியடிக்க உடலோ தூக்கி போட்டது.

நொடிக்கு நொடி அவள் நிலைமை மோசமாகிக்கொண்டே போக தட்டுத்தடுமாறி தன் போனை எடுத்து உதய்க்கு அழைத்தாள்.

இன்னும் முற்றாக விடியாததால் உதயும் உறக்கத்திலேயே அழைப்பை ஏற்க

“உ…உ..உதய்…. என என…எனக்கு”என்றவளுக்கு அதற்கு மேல் பேசமுடியவில்லை.

சமுத்ராவின் குரல் கேட்டதுமே விழித்துக்கொண்ட உதய் என்னவென்று விசாரிக்க முயல அவள் தான் வீட்டில் இருப்பதை மட்டும் தெரிவித்துவிட்டு மயங்கிசரிந்துவிட்டாள்.

உதயிற்கு சமுத்ரா ஊரிற்கு சென்றிருப்பது தெரியுமென்பதால் எப்போது வீடு திரும்பினாளென்று எண்ணியபடியே உடைமாற்றி சமுத்ரா வீட்டிற்கு சென்றான்.

அவன் கதவை சில முறை தட்டியபின்பே அமராவதி உறக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறந்தார்.

“நீ என்னப்பா இந்த நேரத்துல?” என்று விசாரிக்க

“சமுத்ரா தான் கூப்பிட்டா. அவளுக்கு உடம்புக்கு முடியலனு நினைக்கிறேன். பேசிட்டு இருக்கும் போது லைன் கட்டாகிடுச்சு.” என்று சொல்ல இப்போது அமராவதியும் பதற சமுத்ரா அறைக்கதவை தட்ட அவளோ கதவை திறந்தபாடில்லை.

இப்போது இருவருக்கும் பயம் தொற்றிக்கொள்ள உதய் கதவை இடித்து தள்ளிக்கொண்டு செல்ல உள்ளே சமுத்ரா கட்டிலில் மயங்கிப் கிடந்தாள்.

அமராவதி அவளின் நிலையை கண்டு பதற உதய் தான் அவரை அமைதிப்படுத்தி சமுத்ராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்