Loading

அன்றிரவு வீடு திரும்பிய ஷாத்விக் தன் அன்னையை தேடிச்செல்ல அவரோ அவனை கண்டுகொள்ளவில்லை.

தன் அன்னையின் மாற்றத்தை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட ஷாத்விக் 

“என்ன இந்திராணி என்ன பிரச்சினை?” என்றபடியே சுவரில் சாய்ந்துகொண்டு கேட்க அவனை திரும்பி பார்த்து முறைத்தாரே தவிர இந்திராணி வேறெதுவும் பேசவில்லை.

ஷாத்விக்கிற்கு வீட்டில் ஏதோ கலவரம் நடந்திருக்கிறதென்று புரிய 

“ஆமா அத்தை எங்க? உள்ள இருக்காங்களா?” என்று கேட்க

“அவங்க அப்போவே கிளம்பிட்டாங்க.”என்று அவனை பார்க்காமல் சலிப்புடன் ஒரு பதில் சொல்ல

“ஏது போய்ட்டாங்களா? ஒரு வார்த்தை கூட சொல்லல.”என்று ஷாத்விக் யோசனையுடன் கேட்க

“இந்த வீட்டு துரைமாரெல்லாம் எல்லாம் சொல்லிட்டா செய்றீங்க?”என்றவரின் வார்த்தைகளில் அனல் பறந்தது.

“என்னாச்சும்மா?” என்று ஷாத்விக் யோசனையுடனேயே கேட்க

“நீ தர்மதுரை அண்ணனோட பொண்ணை விரும்புறியா?”என்று இந்திராணி நேரடியாக கேட்க ஷாத்விக் சற்று அதிர்ந்துதான் போனான். அவனை தவிர வேறு யாரும் அறியாத விஷயம் இவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்தவன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு

“உனக்கு யாரும்மா சொன்னா?”என்று ஷாத்விக் கேட்க

“உன் அப்பரு தான் சொன்னாரு.”என்று கூற இப்போது நிஜமாகவே அதிர்ந்துதான் போனான் ஷாத்விக்.

“அவருக்கு எப்படி தெரியும்?”என்று குழப்பத்துடனேயே ஷாத்விக் கேட்க

“அது எனக்கு தெரியாது. நீ சொல்லு அது உண்மையா பொய்யானு.” என்று கேட்க ஷாத்விக்கோ தலையை சொறிந்தபடியே ஆமென்று தலையாட்டினான்.

“அந்த பொண்ணுக்கு?”என்று கேட்க அப்போதும் ஷாத்விக் தலையை டம் டம்மென்று வேகமாக ஆட்ட இந்திராணிக்கு தான் மனதினுள் ஏமாற்றம் படர்ந்தது. 

பரசுராமர் சொன்னப்போது கூட அவருக்கு சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது அது மொத்தமாக இல்லையென்றாகிவிட்டது.

“அந்த பொண்ணு எப்போ ஊருக்கு வருது?” என்று இந்திராணி கேட்க 

“எப்படியும் இன்னும் இரண்டு மாசத்துல அவ படிப்பு முடிஞ்சிடும். அது முடிஞ்சதுமே வந்திடுவா.” என்று ஷாத்விக் கூற இந்திராணிக்கு இது மேலும் ஏமாற்றமாகவே இருந்தது.

“மன்னிச்சிருமா. உன்கிட்ட சொல்லக்கூடாதுனு இல்லை. அவ ஊருக்கு வந்ததும் உங்ககிட்ட சொல்லி உங்க சம்மதத்தோட நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் நெனச்சோம்.” என்று ஷாத்விக் தான் எண்ணியிருந்ததை கூற இந்திராணிக்கோ அது எதுவும் மனதில் பதியவில்லை. இந்த திருமணம் வேண்டாமென்று சொல்லவந்த நாவை கூட கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார் இந்திராணி.

தர்மதுரையின் வீட்டாருக்கு எவ்வளவுக்கெவ்வளவு பணமோ கொட்டிக்கிடக்கிறத அதேயளவு திமிரும் அதிகம். அதுவும் தர்மதுரையின் தர்மபத்தினியான மீனாட்சி தன் கணவரையே அவ்வளவாக மதிப்பதில்லை. அதோடு குடும்பத்தோடு அனுசரித்து வாழ்வதென்பது அவருக்கு பாகற்காய் சாப்பிடுவது போல. அதனாலேயே அவர்கள் வீட்டுக்கு உறவுக்காரர்கள் பெரிதாக வந்து போவதில்லை. மௌனிகா பற்றி பெரிதாக தெரியாத போதிலும் திருமணத்தின் பின் அவளின் அன்னையின் ஆட்டுவிப்பிற்கு அவளும் இசைந்தால் இவர்களின் திருமண வாழ்வு நரகமாகிவிடுமென்ற பயமே இந்திராணிக்கு அதிகமாக இருந்தது. அதனை எண்ணியே பெரிதாக பயந்தார் இந்திராணி.

“சரி உன் ஆசைப்படி எல்லாம் நல்லதா நடந்தா சரி தான்.”என்றவர் அதற்கு பின் எதுவும் பேசவில்லை. 

ஷாத்விக்கிற்கும் அவனின் அன்னையின் எண்ணங்கள் புரிய இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாமென்று எண்ணியவன் தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.

அறைக்கு சென்றதும் அமராவதியின் நினைவுவர மதியம் என்ன நடந்திருக்குமென்பதை ஓரளவு யூகித்திருந்தான். இனியும் அமைதியாக இருப்பது சரிப்படாது என்று எண்ணியவன் தன் மொபைலை எடுத்து பவனுக்கு அழைத்தான்.

இரண்டே ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட வழமையான நலவிசாரிப்பிற்கு பின் 

“நீ எப்போ சமுத்ரா வீட்டுல பேசப்போற?”என்று கேட்க மறுபுறம் அமைதியே நிலவியது.

“இப்படியே எத்தனை நாள்தான் அமைதியாக இருக்கப் போற?”என்று ஷாத்விக் ஆற்றாமையுடன் கேட்க

“எனக்கு எந்த சைடும் சப்போர்ட் இல்லையே ஷாத்விக்‌. அந்த பக்கம் சமுத்ரா கிட்ட எந்தவொரு ரெஸ்பான்சும் இல்லை. இந்தப்பக்கம் அவங்க குடும்பத்தை பத்தி ஏதாவது பேசுனாலே அம்மா சாமியாடுறாங்க. நானும் என்ன தான் செய்றது?” என்று பவன் இயலாமையுடன் கேட்க ஷாத்விக்கிற்கு எரிச்சலானது.

“இதை தான் ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்க. ஒன்னு நீ சீக்கிரம் பேசி இந்த பிரச்சினையை முடி. இல்லைனா நான் இதை பத்தி வேற முடிவு எடுக்கவேண்டி வரும்.”என்று ஷாத்விக்கின் குரலில் எச்சரிக்கையே இருந்தது.

“நான் பாரின் போறதுக்கு முன்னாடி இதுக்கு ஒரு முடிவு சொல்றேன்.”என்று பவன் சொல்ல

“பாரின் போறியா?”என்று ஷாத்விக் குழப்பத்துடன் கேட்க

“ஆமா. ஆஃபர் வந்திருக்கு. இன்னும் நான் எந்த முடிவும் சொல்லல.”என்று பவன் சொல்லி ஷாத்விக்கின் மனமோ வேறுவிதமாக கணக்கு போட்டது.

 

பவனும் சமுத்ராவும் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்றுவிட்டால் யாராலும் பிரச்சினை வராது என்று எண்ணியவன் தன் யோசனையை பவனிடமும் சொன்னான்.

“நானும் இதை யோசிச்சு தான் இன்னும் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கேன். சமுத்ரா சரின்னு சொன்னா மத்த எல்லா அரேன்ஜ்மெண்டையும் நான் பார்த்துப்பேன்.” என்று பவன் சொல்ல ஷாத்விக்கும் இதை தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை.

“நீ சமுத்ராகிட்ட பேசு‌. அடுத்து என்ன செய்யனும்னு நான் சொல்றேன்.”என்ற ஷாத்விக் இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டிக்க பவன் தான் திண்டாடிப்போனான்.

ஒரு நாள் சாதாரணமாக சொன்ன பொய்யால் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கிறான் பவன். அவன் இதுவரை தன் காதலை சமுத்ராவிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் ஷாத்விக்கிடமோ சமுத்ராவிடமிருந்து இன்னும் பதில் வரவில்லையென்றே சொல்லிவைத்திருந்தான். அப்படி அவன் சொல்லியிருக்காமல் விட்டிருந்தால் ஷாத்விக் மூலமாக இந்த விஷயம் சமுத்ராவிற்கு தெரியவந்து அனைத்தும் சொதப்பிவிடும் என்ற பயத்திலேயே ஷாத்விக்கிடம் மாற்றி சொல்லிவைத்திருந்தான்.

ஆனால் அந்த பொய்யால் இப்போது இப்படி இரண்டுங்கெட்டான் நிலையில் தத்தளிப்போமென்று அவனும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இதுவும் கூட ஒரு விதத்தில் நல்லதென்றே தோன்றியது‌. இல்லையேல் பவன் தன் காதலை சமுத்ராவிற்கு தெரியப்படுத்த உந்துதலே இல்லாமல் போயிருக்கும்.

இனியும் தாமதிப்பது எந்த விதத்திலும் சரிப்படாது என்று எண்ணியவன் நாளை சந்திக்கலாமா என்று சமுத்ராவிற்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டு உறங்கச் சென்றுவிட்டான்.

மறுநாள் காலை அனைவருக்கும் வெவ்வேறு சம்பவங்களை செய்திட அமைதியாக விடிந்தது‌.

அன்று காலை சமுத்ரா மாலதி மற்றும் வினயாஸ்ரீயுடன் நீதிமன்றத்துக்கு கிளம்பினாள். அமராவதி முதல் நாள் இரவே வந்துவிட்டதால் வழக்கு தமக்கு சாதகமாக முடியவேண்டுமென்று வேண்டிட காலையிலேயே மஹதியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டார்.

நீதிமன்ற வாசலில் அமர் அவர்களுக்காக காத்திருக்க அவனிடம் வழக்கு நிலவரம் பற்றி விசாரித்துவிட்டு தன் கைப்பையில் வைத்திருந்த சில டாக்குமென்ட்ஸை கொடுத்தவள் 

“இதுல நீங்க கேட்டதெல்லாம் இருக்கு. இந்த எவிடென்சே போதும்னு நினைக்கிறேன்.”என்று சமுத்ரா கூற அவள் கொடுத்ததை வாங்கி பார்த்த அமர்

“எல்லாம் கரெக்டா இருக்கு. நான் உள்ள போறேன். நீங்களும் வாங்க.” என்றுவிட்டு அமர் உள்ளே சென்றிட மாலதியோ

“அது என்னது சமுத்ரா?” என்று கேட்க

“வினியோட டி.என்.ஏ சேம்பளும் மாமாவோட பவர் ஆஃப் அதோரிடியும். ” என்று கூற வினயாஸ்ரீயும் மாலதியும் சமுத்ராவை புரியாது பார்க்க சமுத்ராவோ அர்த்தமாக சிரித்தபடி எதுவும் கூறாது அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.

ஹியரிங் முடிந்து வெளியே வந்த மாலதியின் முகத்தில் ஏதோ பொக்கிஷத்தை மீளப்பெற்ற உணர்வு. தன்னுடைய உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரம் அடைந்ததை போல் உணர்ந்தார் மாலதி.

வெளியே வந்ததும் சமுத்ராவை கட்டியணைத்துக்கொண்ட மாலதி

“ரொம்ப நன்றி சமுத்ரா. நிச்சயம் உன்னை தவிர வேற யாராலும் இதை செய்திருக்கமுடியாது.”என்று மாலதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரை தன்னிடமிருந்த விலக்கியவள்

“இனி நீங்க யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. இனி இந்த சொத்து அத்தனையும் வினிக்கு தான் சொந்தம்.” என்று கூறி அர்த்தமாக சிரிக்க

அவர்கள் பின்னாலேயே வந்த மாலதியின் புகுந்தவீட்டார்

“ரொம்ப சந்தோஷப்படாதீங்க. இந்த சொத்தை எந்த காலத்துலயும் நீங்க சொந்தம் கொண்டாட முடியாது. “என்று ஒருவன் சொல்ல சமுத்ராவோ

“ஏன் அத்தை இங்க நல்ல ENT எங்க வராரு?” என்று சமுத்ரா சத்தமாக தன் அத்தையிடம் கேட்க

“ஏன்மா கேட்குற?” என்று மாலதி புரியாமல் கேட்க

“அங்க ஜட்ஜூ தெளிவாக தீர்ப்பை சொல்லியும் கெடைக்காது,கொடுக்க முடியாதுனு சில பேர் பேசிட்டு இருக்காங்களே. அதான் அவங்களுக்கு ஒரு அப்பாயிண்மெண்ட் போட்டுடலாம்னு.” என்ற சமுத்ராவின் வார்த்தைகளில் அப்பட்டமான கேலி இருந்தது.

“ஏய் என்ன கொழுப்பா?”என்று இன்னொருவன் முன்னே பாய

“ஆமாம்னு தான் வச்சிக்கோங்களேன். நான் சொன்னதை சொன்னபடியே செஞ்சிகாட்டிட்டேங்கிற கொழுப்பு.” என்று சமுத்ராவும் நிமிர்வுடன் பதில் சொல்ல மாலதியின் நாத்தனார் ஒருவர்

“பொம்பளபிள்ளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாதிடி அம்மா. குடும்பம் சீர்கெட்டு போயிடும்.” என்று கூற மாலதியின் ஓரகத்தி ஒருவர்

“இன்னுமுமா கெட்டு சீரழியனும்? இவ திமிருக்கு தா இன்னும் இவ இன்னும் ஒண்டிக்கட்டையா இருக்கா.”என்று அவரும் பேச மாலதிக்கோ பொறுமை பறந்தது.

“போதும் நிறுத்துங்க. வாழவேண்டிய பொண்ணை இப்படி கரிச்சிகொட்டுறீங்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? சொத்து சொத்துனு அடிச்சிக்கிறீங்கனு தான் எதுவும் வேணாம்னு உதறிட்டு வந்தேன். இப்போ கூட என்னை கட்டுன மகராசனோட விருப்பங்கிறதுக்காக தான் சமுத்ராகிட்ட சரின்னு சொன்னேன். உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சு தான் இவரு இப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சிருக்காருனு இப்போ புரியிது. இன்னையோட உங்க குடும்பத்துக்கும் எங்களுக்குமான மொத்த உறவும் முடிஞ்சிபோச்சு.” என்று மாலதி சொல்ல அவரின் நாத்தனாரோ

“எங்க வீட்டு பொண்ணு இன்னும் அங்க தான் இருக்கா. எங்க ரத்தம் அங்க இருக்கும் போது நீங்க சொல்றது எதுவும் எடுபடாது‌.” என்று அவரும் பேச தன்னருகே நடப்பதை புரியாது பார்த்துக்கொண்டிருந்த வினயாஸ்ரீயை மாலதி முன்னே இழுக்க சமுத்ராவோ அவரை தடுத்தார்.

“அத்தை வேணாம்.” என்று தடுக்க

“இல்லை சமுத்ரா. இப்போதாவது அவளுக்கு அவங்க அப்பா குடும்பம் எப்படிபட்டதுனு தெரியட்டும்.” என்றவர் வினயாஸ்ரீயை முன்னே இழுத்து நிறுத்தி

“வினி இது தான் உன் அப்பாவோட குடும்பம். அவரு இறந்ததும் எப்படிடா நம்மளை கைகழுவி விடலாம்னு சந்தர்ப்பம் பார்த்திட்டு இருந்த குடும்பம். நீ பிறந்ததுல இருந்து சொத்து பிரச்சினைனு ஒன்னு வரும்வரைக்கும் நீ இருக்கியா செத்தியானு கூட பார்க்காத பாசக்கார குடும்பம் இது. நீ இத்தனநாள் கேட்டியே நாமே ஏன் மாமா வீட்டுல இருக்கோம்னு அதுக்கு காரணமும் இவங்க தான். உங்க அப்பா இறந்ததும் கையில உன்னோட தனிமரமா இருந்தேன். அப்போ கூட அவங்க சொத்துக்கு பிரச்சினை வரக்கூடாதுனு என்னென்ன கொடுமையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செஞ்சு என்னை ரணப்படுத்தி அந்த வீட்டுல இருந்து துரத்திவிட்டுட்டாங்க. அன்னைக்கு உங்க மாமாவும் இன்னைக்கு சமுத்ராவும் இல்லைனா நாம இப்போ இந்த நிலைமையில இருந்திருக்க மாட்டோம். நீ கைக்குழந்தைனு கூட பார்க்காமல் உனக்கு விஷம் கொடுத்து கொல்ல துணிஞ்ச குடும்பம் இது.” என்று மாலதி புதிதாக ஒரு விஷயத்தை சொல்ல சமுத்ராவும் வினயாஸ்ரீயும் அதிர அங்கிருந்த சிலர் திருதிருத்தனர்.

அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்ட மாலதி

“இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீங்களா? நீங்க பேசுறதை கேட்டபிறகு தான் நான் என் அண்ணா வீட்டுக்கு கிளம்பி வந்தேன்.” என்று மாலதி தன் ஓரகத்திகளை பார்த்து கூற அங்கொரு அமைதி நிலவியது.

இதற்கு மேல் யாராவது பேசினால் இன்னும் நிலைமை மோசமாகும் என்றுணர்ந்த சமுத்ரா

“நாம போகலாம் அத்த. வினி வா போகலாம்.” என்று அவர்களை கிளப்பியவர் மற்றவர்களை பார்த்து

“இனியும் ஏதாவது பிரச்சினை செய்யனும்னு நினைச்சீங்கனா டிரெக்டா இனி போலீஸ் டீலிங் தான்.” என்று முகத்துக்கு நேராகவே ஒரு எச்சரிக்கையையும் கொடுத்த சமுத்ரா மாலதி மற்றும் வினயாஸ்ரீயை அழைத்துக்கொண்டு கிளம்பினாள் சமுத்ரா.

வீடு வந்து சேரும் வரை மூவரும் எதுவும் பேசவில்லை. சமுத்ரா ஏற்கனவே தன் அன்னைக்கு அழைத்து விஷயத்தை சொல்லியிருந்ததால் வந்தவர்களிடம் நடந்ததை விசாரிக்க மாலதி அனைத்தையும் கூற வினயாஸ்ரீயோ எதற்கும் பதில் சொல்லாது அறையில் சென்று அடைந்துகொண்டாள்.

இன்றொருநாளிலேயே பல விஷயங்கள் நடந்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள வினயாஸ்ரீக்கு அவகாசம் தேவையென்று எண்ணிய சமுத்ராவும் அப்போதைக்கு வினயாஸ்ரீயை விட்டுவிட்டாள்.

இரவு சமுத்ராவை தேடி வந்த வினயாஸ்ரீ

“மதினி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்று வினயாஸ்ரீ தயக்கத்துடன் கேட்க சமுத்ராவிற்கோ வினயாஸ்ரீயின் தயக்கம் விசித்திரமாக இருந்தது.

“சொல்லு வினி” என்று யோசனையோடு சொன்ன சமுத்ராவிடம்

“என்னை மன்னிச்சிருங்க”என்று மட்டும் சொன்னவளின் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்ட சமுத்ரா தான் பதறிப்போனாள்.

“ஹேய் வினி என்னாச்சு? ஏன் அழுற?” என்று பதட்டத்துடன் வினயாஸ்ரீயை நெருங்கி கேட்க

“மத்தவங்க சொன்னதை நம்பி உங்களை தப்பா நெனச்சிட்டேன் மதினி”என்று கூறிய வினயாஸ்ரீ இத்தனை நாளாய் தன் மனம் உண்மையென்று நம்பியிருந்த பொய்யை அழுகையினூடே சமுத்ராவிடம் சொன்னாள்.

ஆனால் சமுத்ராவுக்கு இது ஒரு விஷயமாகவே தெரியவில்லை.

வினயாஸ்ரீயின் கண்ணீரை துடைத்துவிட்டவள்

“இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்லையே வினி. சில விஷயங்கள் உனக்கு தெரியவேணாம்னு நான் தானே நெனச்சேன். அப்போ தப்பு என்மேல தானே?”என்று சமுத்ரா கேட்க இப்போது வினயாஸ்ரீ விழித்தாள்.

“உன்கிட்ட எந்த கள்ளம் கபடமும் இல்லை வினி. அதனால தான் இந்த விஷயத்தை என்கிட்ட நேரடியாகவே சொல்லுற. இங்கபாரு வினி. நீ இதைபத்தி யோசிக்க எதுவும் இல்லை. உன் மனசுல ஒரு சந்தேகம். அதுவும் கூட நாங்க சில விஷயங்களை மறைச்சதால வந்த சந்தேகம். இப்போ அது தீர்ந்திடுச்சு. அவ்வளவு தான் விஷயம். தாட்ஸ் ஆல். இதுல நீ வருத்தப்பட எதுவும் இல்லை.” என்று யதார்த்தத்தை சொல்லி அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் சமுத்ரா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்