Loading

மாயோன் 1

மழைசாரல் ஜன்னல் கதவுகளை நனைக்க… அந்த கண்ணாடி சன்னலின் வழியே வெளிஉலகத்தை பார்த்தான்,உலகத்தை அடியோடு வெறுப்பவன்.

சன்னலின் வழியே தெரிந்த நீர் துளிகளை மெல்ல தன் விரல் கொண்டு நீக்கியவன், மீட்டினான் தன் மனதில் உறைந்து போன அவள் உருவத்தை..

கொடியவன் தான்!

அரக்கன் தான்!

அசுரன் தான்!

ஆனால் அவனையே மெல்ல கொல்லும் விஷமாக அல்லவா அவள் இருக்கின்றாள். வியந்தான்! தன் மன விந்தையை எண்ணி

அவள் உருவத்தை நீர் துளி கொண்டு இணைத்தவனின் விரல் பிளவுபட்டிருந்த அந்த கண்ணாடியில் பதிய,விரல் காயம்பட்டு உதிரம் சொட்டியது. அதனை பார்த்து இதழ்வளைத்து சிரித்தவன், அவள் உருவத்தை பார்த்தவாரே.. காயம்பட்ட விரலை அருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சுடரில் காட்டினான்.

வலியை பொறுத்துக்கொண்டு கண்களை மூடியவனின் சிந்தையை, சிதைத்து கொண்டிருந்தாள் அவள். தன் சிந்தையை  மயக்கி, தன்னை கட்டுப்படுத்தும் அவளது நினைப்பை முழுவதுமாக வெறுத்தவன்… அடுத்த நொடியே! அவள் உருவம் பொதிந்த அந்த கண்ணாடியை ஓங்கி குத்தினான்.

கண்ணாடியில் இருந்த அவள் உருவம் சிதைய! அதை மனநிறைவுடன் பார்த்தவன், தன் கையில் வடிந்த ரத்தத்தை அருகில் இருந்த டிஷு பேப்பர் கொண்டு துடைத்தபடி சாய்ந்தமர்ந்தான். அவன் விக்ரமன்.

******

அந்திநேரம்! தென்றல் காற்று இதமாக இதயம் நனைக்க… தன்னவனை கனவில் சுமந்து, கண்களில் ஏக்கம் பொங்க… அவன் வருகைக்கு காத்திருந்தாள் வஞ்சியவள் தேவநந்தினி.

தூரத்தில் அவளை கண்டதும் தன் வண்டியினை நிறுத்தியவன், அவள் அருகில் வந்தான்.

“ஹே தேவா? இந்த நேரத்தில எதுக்கு வர சொன்ன?” என்று கேட்டவன் அவளது தோளோடு தோள் உரசி நின்றான்.

மெதுவாக அவன் தோளில் அழுத்தம் கொடுத்து சாய்ந்தவள், தாடியடர்ந்த அவனது கன்னத்தை ஒரு கையால் பற்றி தன்னை நோக்கி திருப்பினாள்.

அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் “என்னடி” என்று இதமாக புன்னகைத்தபடி கேட்க… 

அவளோ அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள்… இதழ்கள் காதுமடல் உரச ரகசியமாக தன்நிலமையை அவனுக்கு கூறினாள். 

அதனை கேட்டு கண்கள் விரிய “உண்மையாவா?” என்றவன் சற்று தடுமாறினான். அவள் ‘ஆம்’ என்று அழுதமிட்டு தலையசைக்க, அந்த மோகனநிலையை அவனால் அமைதியாக அனுபவிக்க முடியவில்லை… மனதில் பெரும் நெருடல்?

மௌனம் கலைத்து “நம்ம கல்யாணம் எப்போ?” என்று நந்தினி எதிர்பார்ப்புடன் அவனிடம் கேட்க..  

அப்போது தான் தன்னுடைய நிதர்சனநிலை உணர்ந்தவன், அவளது முகம் பார்க்க தயங்கியபடி அவளை விட்டு விலகி நின்றான். அவனது விலகலை உணர்ந்து தவித்தவள் அவனை இன்னும் நெருங்கினாள். 

“என்ன ஆச்சு சத்யா?” 

” ஒன்னும் இல்லை நந்தினி கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? அந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எங்க?” 

“என்ன அவசரமா? நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன் சத்யன்”

“ஓகே பேபி கூல்.. எனக்கு புரியுது…  முதலில் இந்த ப்ரோபசனல் ஒர்க்கை முடிச்சிடுவோம் டாக்குமெண்ட்ஸ் எங்க?”

“நீ எதுக்கு இப்போ அந்த டாக்குமெண்ட்சிலயே குறியா இருக்க?” 

“அப்படி இல்லடி, அது உன்கிட்ட இருக்குறது உனக்கும் உன் குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை, அதுக்கு தான்! சொன்னால் புரிஞ்சிக்கடி… இப்போ என்ன உனக்கு நம்ம கல்யாணம் நடக்கணும் அவ்ளோ தானே கண்டிப்பா நடக்கும்… நாளைக்கே நடக்கும்…” 

“நாளைக்கேவா? அது எப்படி முடியும்? வீட்டுல சொல்ல வேண்டாமா?” 

“முதலில் கல்யாணம் பண்ணிப்போம் அப்புறம் மெதுவா வீட்டுல சொல்லிப்போம் ” என்று ஏதோ கூறி அவளை சமாளித்தான் சத்யன்.

“அப்புறம் மறக்காமல் நாளைக்கு அந்த ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடு… டேக் கேர் பேபி” என்றவன் அவளது தோள்களில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றான். 

நந்தினியோ பல்வேறு குழப்பத்தில் மீண்டும் வீடு வந்து சேர்ந்திருந்தாள். வரும்வழியில் மழை நீர் தன்மீது விழுவதை கூட உணராத பேதையாய் அவள் வீடுவந்து சேர்ந்தாள்.

“கண்ணம்மா எங்க போயிருந்த? வேலை முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சே” என்று கேட்டான்… அவளது மாமன் மகன் மகிழன்.

“நான் எங்க போறேன், என்ன பண்ணுறன்னு உங்களுக்கு  எதுக்கு கவலை? என் விஷயத்தில் ரொம்ப உரிமை எடுத்துக்காதிங்க” வெடுகென்று நந்தினி பேச… 

“அவன் உன் மாமன்டி அவனுக்கு உன்மேல எல்லா உரிமையும் இருக்கு” என்று நந்தினியின் தாய் இடையில் வந்தார்.

“அத்தை விடுங்க… நான் உன்னை எதுவும் சொல்லல கண்ணம்மா… தலை ஈரமா இருக்குபாரு துவட்டிக்க…” என்றவன் டவலை எடுத்து அவள் அருகில் வைத்தபடி “சாப்பிட்டு தூங்கு… அப்புறம் யாரையும் அதிகம் நம்பாதடா கண்ணம்மா” என்றான் அவள் நலன் கருதி… 

“எனக்கு தெரியும்… முதலில் நீங்க என்னை கண்ணம்மான்னு சொல்லுறத விடுங்க… கொஞ்சம் பேசினா போதும் ரொம்ப தான் உரிமை எடுத்து பேசவேண்டியது ” என்றவள் விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டு கொண்டாள்.

“அவள் போகட்டும்…  நீ வா மகி மாமா நம்ம சாப்பிடுவோம்” என்று இதமாக கூறி புன்னகைத்தாள் சுருதகீர்த்தி. தேவநந்தினியும் தங்கை.

“இல்லைடா பாப்பா நீ சாப்பிடு… எனக்கு வேண்டாம்” என்று மகிழன் கூறவும்… 

“நான் வெளிய சாப்பிட்டுட்டேன், அவரை சாப்பிட்டு படுக்க சொல்லுங்க” என்று அறையில் இருந்து நந்தினியின் குரல் கேட்டது… மெலிதாக சிரித்துக்கொண்டான் மகிழன்.

“ஓ மறைமுக அக்கறையோ?” என்று சுருதி கேட்க… மகிழனோ அவளது தலையை இதமாக வருடிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சிறுவயதில் இருந்தே மகிழனுடன் தொட்டதற்கெல்லாம் முட்டிநிற்கும் குணம் கொண்டவள் தான் தேவநந்தினி. 
ஆனால் மகிழன் அப்படி அல்ல… அவள் என்னதான் நெருப்பை அள்ளி வீசினாலும்… ‘என்னை வதைத்தாலும் நீ என் உயிரடி’ என்று புன்னகைத்தபடி செல்பவன்.

நந்தினிக்கும், மகிழனுக்கும் சராசரியாக ஏழுவயது வித்யாசம் இருக்கும்.

சிறுவயதிலே கணவனை இழந்து தவித்த நந்தினியின் தாயை… மும்பை அழைத்து வந்தார், நந்தினியின் தாய்மாமாவும், மகிழனின் தந்தையுமான மாணிக்கம்.

மகிழன் பிறந்தபோதே அவன் தாய் இறந்துவிட… முதல் முறையாக தாய் அன்பை தன் அத்தையிடம் தான் உணர்ந்தான் மகிழன். மகிழனின் தந்தை நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்… இருப்பினும் அனைத்து சூழ்நிலையிலும்  நந்தினியின் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொண்டார்.
சிலநாட்களுக்கு பிறகு அவரும் இறந்துவிட… இருபது வயதிலேயே மொத்த குடும்ப பாரதையும் தன் மீது சுமக்க தொடங்கினான் மகிழன்… குடும்ப சூழ்நிலைக்காக தன்னுடைய படிப்பை விட்டவன்… நந்தினியை அவள் விரும்பிய அளவிற்க்கு நன்றாக படிக்கவைத்தன்… இப்போது அவள் ஒரு தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறாள். மருத்துவரும் கூட..

*******

“சத்யா” என்று விக்ரமனின் குரல் கேட்ட அடுத்த நொடி அவன் முன்பு வந்து நின்றான் அவன்.

“சொல்லுங்க சார்” என்ற சத்யா அவன் முகம் பார்க்காமல் தலை குனிய.  

“நான் பேசும்போது என் முகத்தை பார்க்கணும்… புரியுதா?” என்று விக்ரமன் கூறவும்… அவனை சற்றென்று நிமிர்ந்து பார்த்தான் சத்யன்.

“உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? நீ என்ன வேலை பார்த்து வச்சியிருக்க, அவள் கிட்ட உன்னை எதுக்காகடா அனுப்பினேன்” என்று அவன் அதிகாரமாக கேட்க… சத்யனின் முகம் பதட்டமடைய தொடங்கியது.

 “இல்லை சார் அது வந்து…” 

“என்ன காதலா?” என்று விக்ரமன் இதழில் குறும்பு தவழ கேட்டான். 

ஆழ்ந்த மூச்செடுத்து சத்யன் “தெரியல சார்” என்றான்.

“தெரியலைங்குற வார்த்தையில் நம்ம தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கும் சத்யன், தெரியலைன்னு தான் அவள் வயித்துல புள்ளையை கொடுத்தியோ?” 

“உங்களுக்கு எப்படி அது தெரியும்?” என்று பதட்டத்துடன் கேட்டான் சத்யா…

 “அப்போ எனக்கு தெரிஞ்சது தான் பிரச்சனையா? ஆனால் அந்த நந்தினி ரொம்ப புத்திசாலி ஆச்சேடா உன்னை எப்படி  இப்படி முட்டாள் தனமா நம்பினாள்…” 

“இல்லை சார், அது வந்து…” 

“வாட் எவர்… அது உன் பெர்சனல், ஆனால் இதுனால  என் பிளான்க்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது… புரியுதா?” என்றவன் சத்யன் மீண்டும் பேச வாய் எடுக்கும் முன் “அவ்ளோ தான்… முடிஞ்சிது…  டாக்குமெண்ட் எடுத்துட்டு வந்து சேரு… நீ போகலாம்…” என்றவனுக்கு காதல் என்ற வார்த்தையே அந்த நொடியில் கேலியாக தான் தோன்றியது.

அடுத்தநாள் காலையில் எழுந்த தேவநந்தினி, சத்யன் கேட்ட அனைத்து டாக்குமெண்டுகளையும் எடுத்துக்கொண்டு நேராக அவன் கூறிய கோவிலை நோக்கி செல்ல தயாரானாள்.

“எங்க போகிறதா இருந்தாலும் சாப்பிட்டு போக சொல்லுங்க அத்தை” என்று மகிழன் கூற…

“ம்ம்ம் அது எங்களுக்கு தெரியும்” 

“நந்தினி என்ன பழக்கம் இது? ஏன் எப்போ பாரு அவனை கண்டா இப்படி எறிஞ்சி விழுகிற?” என்று நந்தினியின் தாய் கேட்க… அழுத்தம் பெற்ற அவளின் உதடுகள் வார்த்தைகளை உதிர்க்க மறுத்தது. 

அப்போது தான் தன் அறையில் இருந்து எழுந்து வெளியே வந்தாள் சுருதகீர்த்தி… கண்களை கசக்கியவாறே நந்தினியின் அருகில் வந்தமர்ந்தவள் “அம்மா காபி” என்று கேட்க… 

 கரண்டியை கொண்டு அவள் தலையில் தட்டியவர் “எந்த ஊர் உலகத்திலயாவது உன்னை மாதிரி ஒரு சோம்பேறி இருக்குமா ஒன்பது மணிக்கு எழுந்து வர” 

“ஒன்பது மணிக்கு எழுந்துவரத பத்தி பேசுறியே, நான் தூங்க ரெண்டு மணி ஆச்சு அதை பத்தி உனக்கு எந்த கவலையாவது இருக்கா? ” என்றவள் தட்டை எடுத்து வைத்து அதில் இட்லியை நிறப்பினாள்..

“நயிட் ரெண்டு மணிவரை என்ன களை பிடுங்கிட்டு இருந்தியா?” என்று நந்தினி கேட்க… அவளை முறைத்து பார்த்தாள் கீர்த்தி…

“பல் துலக்கிட்டு வந்து சாப்பிடு போ…” என்று கீர்த்தியின் கையில் இருந்த தட்டை பிடுங்கி வைத்தாள் நந்தினி… 

“அம்மா முதலில் இவளுக்கும் மகிழன் மாமாவுக்கும் கல்யாணம் பண்ணிவைமா எப்போ பாரு என்னை தொல்லை பண்ணுறாள்” என்று கீர்த்தி கூற… சாப்பிட்டுக் கொண்டிருந்த மகிழனின் கைகள் அப்படியே நின்றது, கண்களோ ஏக்கத்துடன் நந்தினியின் முகம் பார்த்தது.

“ஆமா நந்தினிமா நானும் உன்கிட்ட கேட்கணும்ன்னு இருந்தேன்… கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம் ” என்று அவள் தாய் கேட்க… நந்தினியின் கரம் அவளது மணிவயிற்றை மெதுவாக வருடிக்கொண்டது… 

“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை” என்று சற்றென்று நந்தினி கூற… மகிழனின் முகம் வாடியது… 

அதை கண்ட நந்தினியின் தாய் “எதுக்கு விருப்பம் இல்லை? அவனுக்கு என்னடி குறை”

” குறை யாருமேலங்குறது பத்தி இல்லமா… எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அவ்ளோ தான்… வேணும்னா கீர்த்திக்கும் அவருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணுங்க ” என்று கூற கீர்த்திக்கு புரையேறியது. 

நந்தினி கூறியதை கேட்டு அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த மகிழன் கைகளை கழுவியபடி மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாசலை நோக்கி சென்றான்.

செல்லும் அவனை தடுக்கும் பொருட்டு நந்தினியின் தாய் அவன் பின்னே செல்ல… “எனக்கு ஒன்னும் இல்லை அத்தை, அவளை கட்டாய படுத்தாதீங்க… இனிமேல் இந்த பேச்சை வீட்டுல யாரும் எடுக்க வேண்டாம் விட்டுடுங்க” என்றவன் வேலைக்கு கிளம்பி சென்றான்.

அனைத்தையும் பேசிவிட்டு எதுவும் அறியாதவள்,  போல இட்லியை சாப்பிட்டு கொண்டிருந்தாள் நந்தினி… 

“எதுக்காகடி இப்படி அவனை கஷ்டபடுத்திற? அதுவுமில்லாமல் கீர்த்தி சின்ன பொண்ணுடி… இன்னும் படிச்சி கூட முடிக்கல…” என்று தாய் சொல்ல…

“அப்போ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாசலை நோக்கி செல்ல… 

“என்ன அக்கா மேக்கப் எல்லாம் அதிகமா இருக்கு… எங்க போற?” என்று கேட்டாள் கீர்த்தி… 

முதலில் தடுமாறியவள் பின்னர் ” லேபுக்கு தான் ” என்றாள்.

“உன் சாரியை பார்த்தால் நீ லேப்க்கு போற மாதிரி தெரியலையே” என்றவள் நந்தினியை சந்தேகமாக பார்த்தாள்.

“உன்கிட்ட பேச எனக்கு நேரமில்லை…” என்ற நந்தினி அங்கிருந்து விறுவிறுவென சென்றாள்.

****

சத்யனின் வருகைக்காக கோவிலில் காத்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

சத்யனோ ஏதோ முடிவெடுத்தவனாக காரில் இருந்து இறங்கி அவள் அருகில் வந்தவன் நந்தினியை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தான்.

“கோவிலில் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் சத்யன்… வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்ற நந்தினி அவனது கையை பிடிக்க .. மெதுவாக அவளது கரத்தில் இருந்து தன் கரத்தை பிரித்தெடுத்தவன்… “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் தேவா” என்றான்.

“இப்போ என்ன பேச போற? கல்யாணம் முடிஞ்சி எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்…” 

“அந்த டாக்குமெண்ட் எங்க தேவா முதலில் அதை என்கிட்ட கொடு. அது உன்கிட்ட இருக்குறது உனக்கு சேப்  இல்லை அந்த விக்ரமன் கண்டிப்பா உன்னை ஏதாவது பண்ணிடுவான்” 

” எனக்கு எந்த பயமும் இல்லை சத்யா… தப்பு பண்ணின அவனே பயப்படாமல் இருக்கும் போது… நான் எதுக்காக பயப்படனும்… சரி அதெல்லாம் விடு வா  கல்யாணத்துக்கு நேரம் ஆச்சு” என்று அவள் அவசரப்படுத்தினாள்.

“தேவா ப்ளீஸ் அந்த பைல் எங்க?” என்று அவன் மீண்டும் கேட்க கோவமடைந்தவள்… 

“இப்போ என்ன உனக்கு அந்த பைல் தானே வேணும்” என்றவள் தன் காரில் இருந்து விக்ரமன் சம்மந்த பட்ட பையில்களையும், பெண்ட்ரைவ்களையும் சத்யனிடம் கொடுத்தாள். அதனை வாங்கியவனோ… தூரத்தில் நின்று கொண்டிருந்த விக்ரமனின் ஆட்கள் ஒருவனை அழைத்து நந்தினி கொடுத்த பைலை அவனிடம் கொடுத்தவன், மீண்டும் நந்தினியை நோக்கி வந்தான்… 

“சரி இப்போவாது வா கல்யாணம் பண்ணிக்கலாம்…” 

ஆழ்ந்த மூச்செடுத்தபடி “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை தேவா” என்று அவன் கூற… நந்தினியின் முகம் நொடியில் வாடியது.

“விளையாடாதா  சத்யா… ப்ளீஸ்” நந்தினி கண்களில் நீர் திரள கூற… 

“ஏதோ லவ் பண்ணேன், அவ்ளோ தான்.. ஆனால் கல்யாணம் எல்லாம்!!! என்னால முடியாது தேவா?”

“முடியாதா? என்னடா சொல்லுற?” என்றவள் அவனது சட்டையை ஆக்ரோஷமாக பற்றியபடி “உன் குழந்தை என் வயித்துல வளருது.. அதுக்கு என்ன பதில்?” என்றவளின் முன்னே பணக்கட்டை நீட்டியவன் “அதுக்கு இது தான் பதில்” என்று கூறிய நொடி… அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் தன்னிசையாக வழிந்தது.

“இங்க பாரு தேவா ஏதோ வயசு கோளாறு தப்பாகிடுச்சு… இப்போவும் ஒன்னும் பிரச்சனை இல்லை கருவை கலைச்சிடு… நான் வேணும்னா ஹாஸ்பிட்டலுக்கு உன் கூட வரேன்” என்று கூறியவனை அனல் தெறிக்க பார்த்தவள் 

“என்னை பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது பணத்துக்கு போறவள் மாதிரி தெரியுதா? எனக்கு ஒரு புள்ளையை கொடுத்துட்டு கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் பேசுற?” 

“சோ வாட்…  இது என் தப்பில்லை அது உனக்கே நல்லா தெரியும்” 

“அப்போ என்னோட தப்புன்னு சொல்லுறியா?” 

“ஆமா!!!  பொண்ணு நீ தான் கவனமா இருந்திருக்கணும்… ஆசையில் நானே பக்கத்துல வந்தாலும்… நீ பத்தினியா இருந்திருந்தால் தள்ளி தானடி விட்டிருக்கணும்… அன்னைக்கு நடந்ததை யோசிச்சி பாரு… நான் உன் பக்கத்தில வந்த அப்போ நீ ஏன் என்னை தடுக்கல? நான் தான் நிதானத்தில இல்லை.. ஆனால் நீ நல்லா நிதானமா தானே இருந்த… சோ என்னை  வில்லன் லெவலுக்கு பேசுறதை நிறுத்திட்டு… அடுத்து ஆகபோற வேலையை பாரு… பேசாமல் இந்த கருவை கலைச்சிடு… உன் பின்னாடியே உன் மாமன் ஒருத்தன் சுத்துவானே… அந்த இழிச்சவாயனை கட்டிக்கோ அது தான் உனக்கு நல்லது” என்று கூறியவனின் கன்னத்தை பதம் பார்த்தது நந்தினியின் கரம்… 

அவனோ அதிர்ச்சியில் விழிவிரிய நிற்க… “அவரை பத்தி  பேச உனக்கு எந்த தகுதியும் இல்லைடா… இதுக்கு மேல நீயே என் காலில் விழுந்து கெஞ்சினாலும் உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் தயாரா இல்லை… ஆனால் நீ சொன்னது உண்மை தான் தப்பு என் மேல தான்… உன்னை நம்பி என்னையே கொடுத்தது நான் பண்ண பெரிய தப்பு தான். அதுக்கான தண்டனையையும் நானே அனுபவிச்சிக்கிறேன்…” 

“வெல் குட்…” என்ற சத்யா அவளை நிதானமாக பார்க்க… 

“துரோகி” என்றாள் நந்தினி உச்சகட்ட கோவத்தில்… 

” யாரடி துரோகி… நானா இல்லை நீயா?  உன் வீட்டுக்கு தெரியாமல் தானே என்னை விரும்பி… இப்போ கர்ப்பமாகி… என்னை திருட்டு தனமா கல்யாணம் பண்ணிக்க இங்க வந்திருக்க… இது எல்லாம்  உன் மேல நம்பிக்கை வச்சி வளர்த்தவங்களுக்கு நீ பண்ணின துரோகம் தானே? நானாவது எனக்கு சம்மந்தமில்லாத ஒருத்தரை தான் ஏமாத்தினேன்… ஆனால் நீ உன்னை உயிரா நெனச்சி வளர்த்தவங்களையே ஏமாத்தியிருக்க… சொல்லபோனால் நீ தான் துரோகி… அதுவும் நம்பிக்கை துரோகி… வந்திட்டாள் பெருசா பேசுறதுக்கு”  என்ற சத்யன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டு சென்றான்.

அவன் கூறிய அனைத்தையும் கேட்டு கண்களில் கண்ணீருடன் உடல் மரத்துப்போய்  நின்றாள் தேவநந்தினி… 
அவன் பேசிய முறை தவறேயானாலும் அவன் பேசியவை எல்லாம் உண்மை அல்லவா… 

அவன் துரோகி என்றால்  இவளும் ஒருவகையில் துரோகி தானே… 

தன்னை மலைபோல நம்பி இருக்கும் குடும்பத்தை பற்றி அவள் ஒரு நிமிடம் நினைத்திருந்தால்… இப்படி சத்யனிடன் மயங்கி இருப்பாளா? இருக்கவும் முடியுமா? 

ஆசைக்கும், ஆர்வத்திற்கும், காதலுக்கும், காமத்திற்கும் வித்தியாசங்கள் அதிகம் உண்டு… ஆரம்பத்தில் அனைத்துமே ஒன்று போல தான் இருக்கும்… காலம் போக போக தான். எது ஆர்வம்? எது ஆசை? எது காதல்? எது காமம்?  என்று புரியவரும்… 

ஒரு பெண்ணையோ! ஆணையோ! நாம் முதல் முறையாக சந்திக்கும் போது நமக்கு ஒரு வித ஆர்வம் உருவாகலாம் அந்த ஆர்வமே… அவர்களிடம் பேசவேண்டும்  பழக வேண்டும் என்ற ஆசையை உருவாக்கும்… ஆனால் அதை காதல் என்று நினைத்தால், இந்த ஆர்வம்  எல்லாம்,  இல்லாமல் போன பிறகு .. அங்கு காதல் என்று நினைத்த ஒன்று!  கானல் நீராக மட்டுமே இருக்கும்… 

இங்கு நந்தினியிடம் இருந்து வாங்கி வந்த பைல்களை விக்ரமனின் முன்பு வைத்த சத்யன் அமைதியாக நின்றான்… 

“குட் நீ போகலாம் ” என்று அவன் கூறவே… வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி வெளியே சென்றான் சத்யன்… 

டேபிளில் இருந்த பைல்களை பார்த்த விக்ரமன் “யூ பினிஷ் நந்தினி.  ஆஹான் தேவநந்தினி” என்றவன் குரூரமாக புன்னகைத்து கொண்டான்.

கண்மூடி சாய்ந்தமர்ந்தவனின்… எண்ணங்களில் மீண்டும் அவள் நினைவுகள் சுழல ஆரம்பித்தது… 

“சாரி அங்கிள்” என்று மழலை மொழியில், கண்கள் மின்ன கருவிழி சுழல,  மலராய் அவனை தீண்டி சென்ற அவளின் ஸ்பரிசம், இப்போதும் அழுத்தமாய் அவன்  நெஞ்சில் பதிந்திருந்தது… அந்த நினைவுகளை மீட்டவனின்… கண்கள் சிவந்து துடிங்க… சட்டென்று கண்களை திறந்தான்… 

“நோ…  ஐ ஹேட் யூ… உன் நினைவுகளை நான் முழுசா வெறுக்கிறேன்… உன்னையும் தான் ” என்ற விக்ரமன்… அருகில் இருந்த பைலை தூக்கி எறிந்துவிட்டு தலையை பிடித்து கொண்டு அமர… மீண்டும் அவன் நினைவில் அவள்… சுருதகீர்த்தி.

****

பகுதி 2

சத்யன் விட்டு சென்ற இடத்திலேயே சிலையென நின்றிருந்தாள் நந்தினி… அப்போது மேகம் இணைந்து, மழைத்துளி அவள் தேகம் நனைக்க…  அந்த நொடியில் தன்னிலை அடைந்தவள்… ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு… பொங்கி வந்த கண்ணீரை மெல்ல உதடு கடித்து  கட்டுப்படுத்தியபடி, தனது காரில் ஏறிக்கொண்டாள்

எப்படி வீட்டிற்கு வந்தாள்! என்பது கூட அவளுக்கு தெரியவில்லை… வீட்டிற்கு வந்தவள் காரினை நிறுத்திவிட்டு… நேராக வீட்டிற்குள் நுழைந்தாள்.

இழஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி, தலை நிறைய மல்லிகை மலர் சூடு சென்றவள்… தேகம் நனைந்து, சூடிய மலர் வாடி, கண்கள் சிவந்திருந்த போதும், அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர்  வரவில்லை… உடல் மரத்து,மனம் கணத்து போய் வீட்டிற்குள் வந்தவளை பார்த்த அவளது தாய் அம்பிகா “நந்தினி என்னமா இன்னிக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்ட முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு ” என்று அவர்  கேட்டது கூட  அவள் செவியை அடையாமல் போகவே, தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள் தேவநந்தினி… 

நந்தினி எப்போதும் இப்படி தான் என்றறிந்த அம்பிகா அவளை தொல்லை செய்ய விரும்பாமல் தனது வேலையை பார்க்க தொடங்கினார்… 

குளியலறைக்குள் புகுந்த நந்தினி அவனுக்காக அழகு பார்த்து உடுத்திய ஆடையை களைந்தபடி தன் மனக்குமுறல் தீர நீருக்கடியில் நின்றவளின் கண்களில் இருந்தது வலியா? வேதனையா? ஏமாற்றமா? என்று பிரித்தறிய முடியாத ஒரு உணர்வு…  

குளியலறையில் இருந்து வேறு ஆடை உடுத்தி வெளியே வந்தவள் அப்படியே மெத்தையில் சரிந்தாள்… எந்த உணர்வுமின்றி விழிகள் திறந்த நிலையில், விட்டதை வெறிந்து பார்த்தபடி படுத்திருந்தாள் நந்தினி… 

நேரம் சென்றுகொண்டே இருந்தது… கல்லூரி முடிந்ததும், சுருதகீர்த்தியை அழைத்துக் கொண்டு மகிழன்  வீட்டிற்கு வந்தான்… 

வீட்டிற்கு வந்தவர்கள் வாசலில் நந்தினியின் காரை பார்த்துவிட்டு… “அக்கா அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டாளா?” என்ற கீர்த்தி நேராக சென்று நந்தினியின் அறைக்கதவை தட்டினாள்… 

“அக்கா” என்று கீர்த்தி கதவை தட்ட… நந்தினியோ அறைக்கதவை திறக்கவே இல்லை… 

நந்தினியின் அறையோடு ஒட்டியபடியே ஆய்வுகள் மேற்கொள்ளும் அறை ஒன்று இருக்கும்… நந்தினி பொதுவாக எப்போதும் அங்கு தான் இருப்பாள்… அதனால் அவள் அறை கதவை திறக்கவில்லை என்றாலும், அவள் ஏதாவது வேலையாக இருப்பாள் என்று எண்ணிகொள்பவர்கள் யாரும் அவளை தொல்லை செய்ய மாட்டார்கள்… 

“அவள் எதுவும் வேலையாக இருப்பாள் பாப்பா நீ விடு” என்ற  மகிழன், கீர்த்தியை அழைத்து வந்து இருக்கையில் அமரவைத்தான்… 

“ஆமா மாமா நீ ஏன் இன்னிக்கு வேலைக்கு போகல” என்று கீர்த்தி கேட்க…

“சும்மா தான் சரி ஒரு நிமிஷம் இரு”  என்று கீர்த்தியிடம் கூறிவிட்டு வெளியே வந்த மகிழன், தன் இருசக்கரவாகனத்தில்  வைத்திருந்த கோப்புகள் அடங்கிய ஒரு பையினை எடுத்து வந்து அதனை தன் பீரோவில் வைத்து பூட்டினான்… 

பின்னர் திரும்பி கீர்த்தியிடம் வந்த மகிழனின் கைகளை பிடித்து, அவனை நாற்காலியில் அமரவைத்த கீர்த்தி

“மகி மாமா என்னை வெளிய அழைச்சிட்டு போறியா?” என்று கேட்டாள்.

“எதுக்காக?” என்று அம்பிகா இடையில் கேட்க

“எதுக்காகவா?  நாளைக்கு என்ன நாள் தெரியுமா? , அக்காவுடைய பர்த்டே அதுக்கு எனக்கு புது ட்ரெஸ் எடுக்க வேண்டாமா?” 

“அவள் பிறந்த நாளுக்கு உனக்கு எதுக்குடி புது ட்ரெஸ்…” 

“அதெல்லாம் உனக்கு புரியாதுமா… எனக்கு மகி மாமா எடுத்து கொடுப்பார் .  இல்லயா மாமா” என்ற கீர்த்தி அவனது கையை இறுக்கி பிடித்தவள், குழந்தையாக அவன் முகம் பார்க்க… அவனோ புன்னகைத்தபடி அவளது தலையை வருடியவன்… “என் பாப்பாக்கு இல்லாமயா… வாங்க இப்போவே போய் வாங்கிட்டு வருவோம்” என்ற மகிழன் அவளை அழைத்து கொண்டு ஆடைகள் வாங்க வெளியே சென்றான்.

*****
சுருதியின் நினைவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்த விக்ரமனின் கண்கள், சிதறி கிடந்த நந்தினியின் பைல்களின் மீது படிந்தது…  அதனை பார்த்து அதிர்ந்தவன் புருவம் சுருக்கி… அதனை கையில் எடுத்து பார்த்த அடுத்த நொடி “சத்யா” என்று உரக்க கத்தினான்… 

சத்தம் கேட்டு சத்யன் அறைக்குள் வர, தன் கையில் இருந்த பைல்களை அவன் முகம் நோக்கி வீசினான் விக்ரமன்… சத்யனோ அவனை புரியாமல் பார்க்க…

“முட்டாளாடா நீ? உன்னால ஒரு பைலை ஒழுக்கமா வாங்கிட்டு வர முடியாதா? என்னடா இது?” என்று அவன் போட்ட சத்ததில் சத்யாவின் கைகள் தானாக அந்த பைல்களை எடுத்து பார்க்க தொடங்கியது… 

அந்த பைல் முழுவதும் வெள்ளை காகிதமும், நியூஸ் பேப்பருமாக தான் இருந்தது… அவர்களுக்கு தேவையான ஒன்றுமே அதில் இல்லை… நந்தினியிடம் அவன் கேட்ட பைல் இது இல்லை அல்லவா? 

“பார்த்தியா?” என்று விக்ரமன் கண்கள் சிவக்க கேட்டான்.

“இது எப்படி ? பையில் மாறிச்சு”

“என்கிட்ட கேட்டால்! , முதலில் அவள் கிட்ட இருந்து பைலை வாங்கின உடனே நீ அதை செக் பண்ணியா?” 

“இல்லை சார் இருந்த பிரச்சனையில் நான் அதை சரியா கவனிக்கல” 

“ஒஹ் கவனிக்கலயா? இல்லை கவனிக்க வேண்டாம்னு விட்டுட்டியா?” 

“சார் அப்படி எல்லாம் இல்லை… அவள் இப்படி போலி பைல்களை கொடுப்பாள்னு நான் எதிர்பார்க்கல…”

“என்னடா எதிர் பார்க்கல?  இங்க பாரு உனக்கு இருபத்தி நாலு மணி நேரம் டைம் தரேன், நீ என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ? அது எனக்கு முக்கியமில்லை… ஆனால் அந்த பையில் எல்லாம் என்கிட்ட வரணும்… இதில ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது குழப்பம் பண்ணலாம்னு இருந்திங்க அப்ரோம் இந்த விக்ரமனை வேற மாதிரி பார்க்க வேண்டி இருக்கும் ” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்… 

பைலை மாத்தி கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டாளே அந்த நந்தினி  என்று  தவறாக எண்ணிய சத்யனின் கோவம் முழுவதும் இப்போது நந்தினியின் மீதிருந்தது… 

புது ஆடைகளை வாங்கி வந்த சுருதகீர்த்தி … ” அக்கா… அக்கா ” என்று கதவை தட்ட… இம்முறை கதவை திறந்த நந்தினி எதுவும் பேசாமல் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்… 

மகிழனோ அவளை வினோதமாக தான் பார்த்தான்… அவள் அமைதி இந்த வீட்டிற்க்கு ஒன்றும் புதிதல்ல…  ஆனால் அவளது இந்த இறுக்கம் அங்கிருந்த அனைவருக்கும் புதிது… 

கீர்த்தியோ தான் வாங்கி  வந்த ஆடைகளை அவளுக்கு ஆர்வமாக எடுத்து காட்ட… நந்தினியோ எந்த உணர்வுமின்றி அமர்ந்திருந்தாள்… 

“அக்கா நல்லா இருக்கா? சொல்லு ஏன் எதுவும் பேச மாட்டிங்குற?” என்ற கீர்த்தி அவள் கன்னம் தொட்டு தன் பக்கம் திருப்ப…  இயல்பாக புன்னகைக்க முயன்ற நந்தினி “ரொம்ப அழகா இருக்குடி” என்றாள் அந்த ஆடையை கூட பார்க்காமல்… 

“அப்படியா ? மாமா நான் தான் சொன்னேன் இல்லை இந்த கலர் அக்காவுக்கு ரொம்ப புடிக்கும்.. அக்கா இது உனக்கு தான். மாமா உனக்காக எடுத்தது…” என்ற கீர்த்தி  அந்த புடவையை நந்தினியின் மீது வைத்து காட்ட… நந்தினியோ வலியுடன் மகிழனின் முகம் பார்த்தாள்… 

அவளது கண்களை ஆழ்ந்து பார்த்த மகிழனுக்கு அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று மட்டும்  நன்றாக புரிந்தது… 

இரவு அனைவரும் உணவு உண்ட போதும் நந்தினிக்கு மருந்துக்கு கூட உணவு உள்ளே இறங்கவில்லை… 

 அனைவரும் உறங்கிய பின்னரும் உறங்காமல் இருந்தது… மகிழனும், நந்தினியும் தான்… 

நந்தினிக்கு தொடர்ந்து சத்யனிடமிருந்து  அழைப்பு வர… கோவத்தில்  போனை  ஆப் செய்தவள் ஏதோ யோசனையுடன் மாடிப்படி ஏறினாள்… அவளை பின் தொடர்ந்து மகிழனும் சென்றான்… 

நந்தினியோ நிலவினை பார்த்தபடியே இமை மூட… “க்கும்” என்று குரல் கொடுத்த படி அவள் அருகில் வந்தான் மகிழன்.

ஒரு கணம் அவனை திரும்பி பார்த்தவள், உடனே  அங்கிருந்து செல்ல முயன்றாள்.

தன்னை கடந்து செல்பவளின் முன் கைநீட்டி தடுத்து நிறுத்திய மகிழன்… “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கண்ணம்மா” என்று அனுமதி கேட்க…

“ஆனால் உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லை” என்று அவள் வெடுக்கென்று கோவத்தை காட்டினாள்.. 

விரக்தியாக சிரித்தவன் “உனக்கு என்கிட்ட பேச எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு உங்க கிட்ட பேச நிறையாவே இருக்கு கண்ணம்மா” 

“சொல்லுங்க  அப்படி என்கிட்ட என்ன பேச போறீங்க… சொல்லுங்க” என்று அவள் யார் மீதோ கொண்ட கோவத்தை இவன் மீது அமிலமாக வீசினாள்.

அவள் தன்னை வெறுக்கிறாள்… 

தன்னை ஒதுக்குகிறாள்… 

என்று அறிந்த மகிழனால் அவளை வெறுக்கவோ, ஒதுக்கவா முடியவில்லை… 

அவள் என்ன தான் அவனை தள்ளி வைத்தாலும்… அவளை தன் இதயத்தின் அருகில் வைத்து பார்பவனால் அவளது நினைவை நிராகரிக்க முடியாமல் போனது… அன்றிலிருந்து இன்று வரை அவளது நினைவுகள் அவனது இதயத்தில் சிக்கிய நெறுஞ்சி முள்ளாக அவனை குத்தி கொண்டு அல்லவா இருக்கிறது .. 

 “அது ஒன்னும் இல்லை கண்ணம்மா.நீ ஏதோ பிரச்சனையில் இருக்கன்னு எனக்கு புரியுது, ஆனால் அது என்னனு தான் எனக்கும் புரியல” என்று அவன் இதமாக கேட்டான்.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… அப்படியே ஏதாவது இருந்தாலும் எனக்கு என்னை பார்த்துக்க தெரியும், நீங்க எதுவும் எனக்காக யோசிக்க வேண்டாம்” 

“கோவப்படாத கண்ணம்மா… எதுவாயிருந்தாலும் மாமா கிட்ட சொல்லுடா… நான் இருக்கேன்டி” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கி போனது… அப்போது  சத்யன் கூறிய வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது “நீ ஒரு துரோகி… உன்னை நம்பினவங்களுக்கே துரோகம் பண்ணின நீ ஒரு நம்பிக்கை துரோகி” என்று அவன் கூறிய வார்த்தை அவள் காதில் கேட்க… 

“இல்லை… இல்லை … நான் அப்படி இல்லை… ” என்று தன் காதை பொத்தியபடி கத்தினாள் நந்தினி. 

அவள் செயல் கண்டு பதட்டம் அடைந்தவன் “கண்ணம்மா…” என்று அவள் அருகில் வர… அப்டியே கண்கள் இருள் சூழ  அவன் மீது சரிந்தவளின் உதடுகள் இன்னும் முணுமுணுத்து கொண்டிருந்தது. 

“இல்ல… நான்… அப்படி… இல்லை… மாமா… நீ …மட்டும் … என்னை… அப்படி…நினைக்காத மாமா… அப்ரோம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன் மா…மா….மா”  என்றவள் அப்படியே அவன் நெஞ்சின் மீது மயங்கி சரிந்தாள்.

ஏழு வருடங்களுக்கு பிறகு அவளது இதழ்கள் மகிழனை ” மாமா” என்று அழைத்துள்ளது… அதனை கேட்டவனின் கண்கள் கூட மகிழ்ச்சியில் சிரித்தது… 

எப்போது மகிழனுடன், தனக்கு திருமணம் என்ற பேச்சு வந்ததோ அப்போதில் இருந்து… நந்தினி, மகிழனை மாமா என்று அழைப்பதை தவிர்த்துவிட்டாள்.

அவளுக்கு மகிழனை  பிடிக்காது என்றெல்லாம் இல்லை… மிகவும் பிடிக்கும். ஆனால் அவனை கணவனாக  கற்பனை செய்து பார்க்க, அவள் மனதில்  ஒரு துளி கூட காதல் இல்லாமல் இருந்தது.

மயங்கியவளை கைகளில் ஏந்தியபடி அறைக்குள் வந்தவன் அவளை கட்டிலில் படுக்கவைத்து விட்டு அவளது தலையை வருடியவன், பின்னர் வெளியே வந்தான்.

காலையில் எழுந்த  நந்தினிக்கு எப்படி அறைக்குள் வந்தோம், என்று கூட யோசிக்க நேரமில்லாமல்… நேராக சத்யாவின் அலைபேசிக்கு அழைத்தாள்… பைலை திரும்ப வாங்கும் நோக்கத்தில்… 

அவனோ திரையில் அவளது என்னை பார்த்தவன் அதற்காக தான் காத்திருந்தது போல… “ஹாய் தேவா” என்றான்.

கண்களை மூடி திறந்தவள், “எதுக்காக நயிட் எனக்கு கால் பண்ணின?” என்று கேட்டாள்.

கோவபட்டால் காரியம் சிதறிவிடும் என்று யோசித்த சத்யன்… “நேத்து ஏதோ பேசிட்டேன், ஐயம் சாரி… உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நம்ம மீட் பண்ணலாமா?” என்றவன் ஒரு லாட்ஜ் விலாசத்தை கொடுக்க…  ஆரம்பத்தில் மறுத்தாள் நந்தினி… பின்னர் அவன் எப்போதும் போல சமாதானம் பேச.. காதல் கொண்ட மனம் அல்லவா… சுயநலமின்றி மீண்டும் அவனை தேடி சென்றது… 

அவன் வர சொன்ன இடத்திற்கு வந்தவள், முதலில் கேட்டது என்னவோ அந்த டாக்குமென்ட் பற்றி தான் “பைல் எங்க சத்யா… அதை என்கிட்ட கொடுத்திடு… என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்… இதுக்கு மேல உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” 

“வாட்… விளையாடுறியா? ஏதோ உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்… அதுக்காக போலி பைலை கொடுப்பியா? அது மட்டும் இல்லாமல் இப்போ என்கிட்டயே பைல் எங்கன்னு கேட்டு டிராமா பண்ணுற?” 

“என்னது போலியா? அது எல்லாம் ஒரிஜினல் டாக்குமெண்ட் என் வாழ்க்கையே அதுல தான் இருக்கு… அது விக்ரமன் கையில் கிடைச்சால் என்ன ஆகும் தெரியுமா?”  என்றவள் ஆக்ரோஷத்துடன் சத்யனின் சட்டையை பிடிக்க… 

“எடுடி கையை… கையை எடு” என்றவன் கோவத்தில் அவளை கீழே தள்ளிவிட… 

அதில் நந்தினியின் வயிற்றில் வேறு சிறு வலி ஏற்பட… “ம்மா” என்று பல்லை கடித்து வலியை பொறுத்து கொண்டவள் மீண்டும் எழுந்து நின்றாள்.

சத்யனோ ஆழ்ந்தமூச்செடுத்துபடி “இங்க பாரு தேவா… வேண்டாம் விளையாடாதா  பைல் எங்க?”

“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேக்குற! உனக்கு எதுக்கு அந்த பைல்? மரியாதையா அந்த பைலை என்கிட்ட கொடுத்திடு, நானே உனக்கு வேண்டாம்னு ஆனத்துக்கு  பின்னாடி அந்த பைல் உனக்கு எதுக்குடா? என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் மரியாதையா அதை என்கிட்ட கொடுத்திடு” 

“******* நீ எப்படி போனால் எனக்கு என்னடி… எனக்கு அந்த பைல் வேணும்…” என்று அவன் உச்ச கட்ட கோவத்தில் தகாத வார்த்தை பேசிவிட… நந்தினியோ அப்படியே உறைந்து நின்றாள்.

பிடறியை கோதி தன்னை நிலைப்படுத்தி கொண்டவன் “என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு  தேவா… என்னை பேச வைக்காதா…. அந்த பைலை என்கிட்ட கொடுத்திடு” 

சத்யனோ, நந்தினியிடம் தான் அந்த கோப்புகள் இருக்கின்றது என்றும், நந்தினியோ சத்யனிடம் தான் அந்த கோப்புகள் இருக்கின்றது என்றும், நினைத்து கொண்டு இருவரும் பேசுக்கொண்டிருந்தனர்… ஆனால் உண்மையில் அந்த கோப்பு என்னவோ வேறு ஒருவன் வசம் இருந்தது … 

ஏனோ சத்யனுக்கு நந்தினி கூறுவது உண்மை என்று பட்டது… மூன்று வருட பழக்கம் அல்லவா? நம்பாமல் இருக்க முடியுமா என்ன?  இருந்தும் விக்ரமனுக்காக… மீண்டும் மீண்டும் அவளிடம் கேட்டான்… இறுதியாக ஒரு முடிவெடுத்தவன்… வெளியே வந்து விக்ரமனுக்கு அழைப்பு விடுத்தான்… 

“சார் அவள் எவ்ளோ கேட்டாலும் பைல் என்கிட்ட இல்லைன்னு சொல்லுறாள்… என்ன பண்ணுறது?”

“ம்ம்ம் விடு நான் பார்த்துகிறேன் ” என்ற விக்ரமன் அடுத்து அழைத்தது என்னவோ நந்தினிக்கு தான்.

திரையில் விக்ரமனின் எண்ணை பார்த்த நந்தினியின் முகம் நொடியில் பதட்டமாக தொடங்கியது… அப்போது மீண்டும் சத்யன் அறைக்குள் வர… “சத்யன், விக்ரமன்  தான் போன் பண்ணுறான்” என்று எதார்த்தமாக அவள் கூற… சத்யனோ சலிப்பாக தலையாட்டியபடி “எடுத்து பேசு” என்றான். 

அழைப்பை ஏற்றவள் “ஹெலோ” என்று நடுக்கத்துடன் கூற… 

“ஹாய் மிஸ்… ஆர் மிஸ்ஸஸ்… வாட் எவர்… வணக்கம் டாக்டர் தேவநந்தினி” என்றான் விக்ரமன் ஆழுமையான குரலில்.

“நீ … ??” 

“நானே தான் … ஆமாம் என் ஆளு பைல் கேட்டா இல்லைன்னு சொன்னியாமே?” என்றவுடன் அவளது விழிகள் எதிரில் நின்ற சத்யனின் மீது சந்தேகமாக பதிந்தது… 

“ரொம்ப யோசிக்காதமா நான் சத்யனை தான் சொன்னேன்… அவன் என் ஆளு… நான் சொல்லி தான் அவன் உன் வாழ்க்கையில் வந்தான்” என்று அவன் கூறிய நொடி வாழ்க்கையே முடிந்துவிட்ட உணர்வு  அவளுக்கு வந்தது… 

சத்யன் விக்ரமனுடைய ஆள் என்று அவளுக்கு இதுவரை தெரியாது அல்லவா? எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் இது… அவனை நம்பி காதலித்ததை தவிர அவள் வேறு எந்த பாவமும் செய்யவில்லையே? பின்னர் ஏன் இந்த நிலை அவளுக்கு?!

“நீ… விக்ரமன் ஆளா?” என்று நந்தினி சத்யனிடம் தழுதழுத்த குரலில் கேட்க… 

“ம்ம்ம்” என்றவன் அவளை ஏளனமாக பார்த்து சிரித்தான்… அவன் சிரிப்பில் முற்றிலுமாக நொறுங்கி போனாள் பெண்ணவள்… 

“நீ அப்புறமா வருத்தப்பட்டுக்கோ இப்போ மரியாதையா  அந்த பைலை அவன் கிட்ட கொடுத்திடு” 

“என்கிட்ட எந்த பைலும் இல்லை அப்படியே இருந்தாலும் இதுக்கு மேல அதை உங்க கிட்ட தருவேன்னு நினைச்சியா?” என்று ஆக்ரோஷமாக பேச… 

“ஒஹ் நீங்க சிங்க பெண் இல்லையா ? அதான்… ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க” என்ற விக்ரமன்… “உனக்கு ஐந்து நிமிஷம் டைம் தரேன்… அதுக்குள்ள அந்த பையில் எங்கன்னு அவன் கிட்ட சொல்லிடு… இல்லை ஆறாவது நிமிஷம்… உங்க ரூம்குள்ள போலீஸ் வரும்… உன்னை விபசாரம் பண்ணுறதாக சொல்லி போலீஸ் பிடிச்சிட்டு போகும்…  போலீஸ் என் ஆளுங்க  தான்..  வெளியே தான் வைட் பண்ணுறாங்க, இப்போ மட்டும் நீ பைல் எங்கன்னு சொல்லல… நாளைக்கு காலையில… பிரபல டாக்டரும், மருத்துவ ஆராய்ச்சியாளருமான தேவநந்தினி அவர்கள் விபச்சார வழக்கில் இன்று காலை *** லாட்ஜில் வைத்து… இளம்வாலிபனுடம் கைது செய்யபட்டார்ன்னு  தலைப்பு செய்தியில வரும், அந்த இளம் வாலிபன் வேற யாரும் இல்லை நம்ம சத்யன் தான். நல்லா யோசிச்சிக்கோ இப்படி ஒரு விஷயம் நடந்தால் உன் அம்மா நெஞ்சி வெடிச்சி செத்திடுவாங்க… உன் மாமன் அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிடுவான்… அப்ரோம் உன் அன்பு தங்கச்சி… எந்த கேசுல உன்னை புடிச்சிட்டு போவாங்களோ அதே தொழிலை…” என்றவனால் அதற்கு மேல் ஸ்ருதியை அந்த இடத்தில் வைத்து பேச்சிற்கு கூட… சொல்லமுடியாமல் போக… அழைப்பை துண்டித்தான்.

பின்னர்  சத்யனுக்கு அழைத்து  விஷயத்தை கூறினான் விக்ரமன். 

“ஓகே சார் நீங்க சொல்லுற மாதிரியே பண்ணிடுறேன்” என்ற சத்யன் அழைப்பை துண்டித்து விட்டு பின்னர் தன் அலைபேசியில் ஐந்து நிமிடம் டைமரை ஆன் செய்து வைத்தவன்… சட்டையில் உள்ள ஒவ்வொரு பட்டனையும் கழட்டியபடியே நந்தினியை நெருங்கினான்.

“சத்யன் ப்ளீஸ்… சத்தியமா என்கிட்ட எந்த பைலும் இல்லை… இப்படி பண்ணாத… அவன் சொல்ற மாதிரி ஒரு விஷயம் நடந்தால் என் வீட்டுல உள்ள யாரும் தாங்க மாட்டாங்க… என் தங்கச்சி பாவம் அவள் ஒரு குழந்தைடா அவள் வாழ்க்கை வீணாக போய்டும் ப்ளீஸ் ” என்றவள் அவன் முன் மண்டியிட்டு வணங்க…

 அவனோ சட்டையை கழற்றி கட்டிலின் மீது வீசியவன் “பைல் எங்க?” என்று கேட்க..  

“சத்தியமா என்கிட்ட இல்லை” 

“ம்ஹும்… நீ சொல்ல மாட்ட என்றவன் அழைப்பேசியை எடுத்து காட்டி “5 மின் ஓவர்” என்று கூற.  அவளோ அவனை அதிர்ந்து பார்க்க..  போலீஸ் லாட்ஜ்ஜிற்குள் கால் எடுத்து வைத்தனர்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்