
1.அத்தியாயம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுநாயகமாக அமைந்திருந்தது வி.வி.எல் திருமண மஹால். மூன்று மணி நேரத்திற்கு முன்பு தான் வரவேற்பு நல்லமுறையில் நடந்து முடிந்திருந்தது. விடிந்தால் திருமணம் என்பதால் கலகலப்பான அரட்டை சத்தங்கள் அனைத்தும் ஓய்ந்திருக்க, நடுநிசி வேளையில் அனைவருமே உறக்கத்தினை தழுவியிருந்தனர்.
அவ்விடத்தின் நிசப்தமான சூழ்நிலையை உறுதி செய்தபடி, தூங்குவது போல் நடித்தவன், தன் கண்களைப் பட்டென்று திறந்தான். கட்டிலில் அவனருகே படுத்திருந்த ஒருவனோ, இவன் மீது காலினை தூக்கிப் போட்டிருக்க, அவனை கடுப்புடன் பார்த்தது எழுந்தவனது கண்கள்.
‘பாடிசோடா காலையா தூக்கிப் போடுற…?’ என்றவனோ அவனது கழுத்தினை நெறிப்பது போல் செய்கை செய்ய, அவனது கழுத்தில் இருந்த தங்க சங்கலி ஒன்று அறையின் சிறு வெளிச்சத்திலும் அழகாய் ஜொலித்தது. தனது இரு விழிகளிலும் தங்கத்தை உள்வாங்கிக் கொண்டவன் காதலியை பார்ப்பது போல ரசித்துப் பார்த்தான்.
‘என் அருமை மச்சான்… தூங்கும் போது தான்டா நீ ரொம்ப அழகா இருக்க?’ என்று மனதில் நினைத்தபடி உறக்கத்திலிருந்தவனை நெருங்கியவன், அவனது தாடையை தன் கைகளால் தொட்டு இதழில் ஒத்திக்கொண்டபடி விலகியிருக்க, அவனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலி இவனது கைகளில் இடம் மாறி இருந்தது. ஆம் இந்த கள்வனோ, அவனது கைவரிசையை அழகாய் காட்டியிருந்தான்.
பாவம் அதை அறிந்திடாதவனோ குட்டிக் குறட்டை விட்டபடி குப்புற கவிழ்ந்து படுத்திருந்தான். அவனது காலினைத் தன் மீதிருந்து பிரித்தவன், அதன் பின் மெல்ல எழுந்தவாறு, சுற்றும் முற்றும் பார்த்தபடி அவ்வறையை விட்டு வெளியேறினான்.
இடுப்பில் கட்டியிருந்த வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டவன், தனது கைவிரல்களை பார்த்தான். நான்கு விரல்களிலும் தங்க மோதிரம் அலங்கரித்திருக்க, அவன் இதழ்களிலோ குறும்பு புன்னகை படிந்திருந்தது.
“எப்படியும் பத்து பவுன் தேரும். மச்சான் செயினு ஐந்து பவுன்னு. பலே ஆளுடா நந்தா.” என்று தன்னைத்தானே பெருமையாக கூறிக் கொண்டவன், தனது கழுத்திலிருந்த தங்க சங்கிலியைத் தொட்டு பார்த்தான்.
“அடிச்சதுடா லக்கு.” என்றவன் அங்கிருந்து நழுவி வெளியே செல்ல, அவன் இருவிழிப்பார்வையில் திடீரென அவளது பிம்பம் வந்துச் சென்றது. அழகான மதி முகம் மனக்கண்ணில் தோன்றவும் அவன் கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தது.
“நந்தா கன்ட்ரோல் யுவர் செல்ஃப். அந்த மாயக்காரிகிட்ட சிக்கி தவிக்கணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?” தன்னைத்தானே கேள்விக் கேட்டான். ‘அவளை மாதிரி ஒரு பொண்ணு உன் லைஃப்லயே கிடைக்க மாட்டா. என்ன பொண்ணுடா அவ! நிஜமா அவ உனக்கு வேண்டாமா?’ அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.
“எமோஷன்ல விழுந்திடாதடா நந்தா. உன் ரேஞ்ச் என்ன? உன் கெத்து என்ன? உன்னையவே மிரட்டுறாடா அவ.” நிதர்சனம் உரைக்க, மாற்றி மாற்றி அனைத்தையும் சிந்தித்தவனுக்கு தலை சுற்றாதக் குறை தான்.
இறுதியாக அவளை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் என்று நினைத்து, மணமகள் அறையை நோக்கி நகர்ந்தான் இந்த மணமகன். ஆம் நாயகியின் மணவாளனாக வேண்டியவனோ, நகைகளை திருடியபடி செல்லவிருக்கும் காரணம் தான் என்ன?
மணமகள் அறைக்கு பதுங்கியபடி உள்ளே நுழைந்தவன், கீழே படுத்திருந்த மணமகளின் உறவினர்களைத் எழுப்பாமல் அமைதியாக கட்டிலின் அருகே சென்றிருந்தான். சாளரத்தின் வழியாக வந்த நிலவின் வெளிச்சம், பெண்ணவளின் வதனத்தின் மீது அழகாக விழுந்திருக்க, சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தவளின் மீது அவன் பார்வை பதிந்தது.
அவன் நந்தா… அவன் சிரிக்கும் போது அவன் கூர் பார்வையும் சேர்ந்து சிரிக்கும். அடர்ந்த தாடி அவனது கன்னக்குழியினை மறைத்தாலும், அவன் மென் புன்னகையில் தாடியும் சேர்ந்து கன்னத்தில் குழியும். அதுவும் அவளை காணும் போது? சொல்லவா வேண்டும்…? கன்னக்குழி மேலும் குழிந்தது அவளது மெல்லிய மலர்ந்த முகத்தினைக் கண்ட நொடி.
உறங்கும் போது எத்தனை அழகாக இருக்கிறாள் இவள்? பிரம்மித்து போய் மனதிற்குள் பிதற்றினான் கள்வன். மூன்று மணி நேரம் முன்பு அவனது தோள்பட்டையில் உரசியபடி மாலையுடன் நின்றவளின் வதனத்தை நினைத்துப் பார்த்தான். அவ்வப்போது அவனை முறைத்த பெண்ணவளின் கண்களை நினைக்கும் போதே கள்வனின் மனதில் கவிதை குவியலாக வந்தது.
“மது…” உச்சரித்தான் மென்மையாக அவளது பெயரை.
அவள் மதுவர்ணிகா… பிரபாவதி, தாமோதரன் தம்பதியினரின் தவப்புதல்வி. மது ஆசைப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றும் பெற்றோர்கள், அவள் நந்தாவின் மீதிருந்த விருப்பத்தை தெரிவித்த நொடி அதையும் நிறைவேற்றியிருந்தனர். ஆனால் அவர்களும் அறிந்திராத ஒன்றை அவர்களது மகள் செய்திருக்கிறாள் என்பதை அறிந்தால் அவர்கள் நிலை என்னவோ?
“மதுவர்ணிகா உன் பெயர் ஒன்று போதுமடி கவிதைகள் பணிந்திடுமே உன் காலடியில்…” கவிதை என்று நினைத்து அவன் எதையோ பிதற்ற அவன் கூறும் சமயம் கீழே படுத்திருந்த யாரோ அசைவது போல தோன்றியது. அதிர்ந்தவன் அடுத்தநொடி மதுவர்ணிகாவின் மறுபுறம் மெதுவாக தாவியப்படி கட்டிலின் மீது படுத்துக்கொண்டான்.
படபடத்த இதயத்துடன் அவன் எட்டிப் பார்க்க, கீழே இருந்த மதுவின் அத்தையோ மீண்டும் திரும்பிப் படுத்துக் கொள்ள, ‘அப்பாடா’ என்றிருந்தது நந்தாவிற்கு.
‘டேய் நந்தா, சொதப்பிட்டு இருக்கடா நீ? மொதல்ல இங்க இருந்து ஓடிரு.’ மனம் எச்சரித்தது. உடனே எழுந்துக் கொள்ள அவன் நினைக்க, அவன் புறமாக திரும்பி படுத்தாள் மது. அவளது அசைவில், இவன் அசையாது படுத்திருக்க, பெண்ணவளோ அவன் மீதே கைகளைத் தூக்கிப் போட்டிருந்தாள்.
அவனுக்கோ மூச்சு முட்டாத குறைதான். “தம்பியும், அக்காவும் என்னை வெச்சு செய்றீங்கடா. அவன் என்னடானா கால் போடுறான். இவ என்னடானா கைபோடுறாள்? இப்படி எல்லாம் பண்ணா நான் எப்படி போவேன்?” சத்தமின்றி புலம்பியவன், அவளது முகத்தைப் பார்த்தான். மீண்டும் அவளது முகம் அவனை மயங்கிடச் செய்தது.
“ஏன்டி, இவ்ளோ அழகா இருக்க?” புலம்பினான். ‘கண்டிப்பா இவளை விட்டு போகணுமா?’ இம்முறை நேரம் பார்த்து மனசாட்சி கேள்வி தொடுக்க, “நான் ஏன் போகணும்?” என்றானே வெடுக்கென்று. அந்த நொடி தப்பித்து ஓடும் திட்டம் அனைத்தும் தவிடு பொடியானது.
அடுத்த நொடியே அவளது கைகளை எடுத்து விட்டவன், பிரிந்திட மனமின்றி அவளைப் பார்த்துக் கொண்டே எழுந்துச் செல்ல, கீழே படுத்திருந்த அத்தையின் காலின் மீதே மிதித்திருந்தான் நந்தா. அவர் அலறி எழும்முன் ஒரே ஓட்டமாக இவன் ஓடியிருக்க, அத்தையின் அலறலில் மதுவும், வேறு சில உறவினர்களும் எழுந்துக் கொண்டனர். ஒருவர் அறையில் மின்சாரத்தை உயிர்ப்பிக்க, ஒரு வித பதட்டத்துடன் காட்சியளித்தார் அத்தை.
“யாரோ என் காலை மிதிச்ச மாதிரி இருக்கு. அய்யோ வலிக்குதே.” என்று அத்தை கத்தினார்.
மற்றவர்கள் அவரை சமாதானம் செய்துக் கொண்டிருக்க, மதுவின் முகமோ யோசனையில் விரிந்தது. எதேச்சையாக திரும்பியவள் கண்களில் எதுவோ பட, அனைத்தும் ஓரளவு யூகித்தவள்,
“அத்தை ஒண்ணும் பயப்படாதீங்க. திருட்டு எலி ஒன்னு சுத்திகிட்டு இருக்கு. அதோட சேட்டையாதான் இருக்கும்.” என்றவளுக்கோ நந்தாவின் முகம் தான் மனக்கண் முன் வந்து சென்றது. ‘திருட்டு பையன்? இவன் அடங்கவே மாட்டான் போல’ மனதில் திட்டினாள்.
“என்ன வருணிமா சொல்ற?”
“ஒண்ணும் இல்லை அத்தை, எலி தான். குண்டு எலி. நீங்க தூங்குங்க.” என்றவளுக்கு அதன்பின் உறக்கமே வரவில்லை. இவ்வளவு தூரம் வந்தபிறகு, திருமணம் நடந்தால் சரி என்று விருப்பமின்றியும் வேண்டிக் கொண்டாள் மதுவர்ணிகா.
அதிகாலை ஐந்து மணி. மீண்டும் பரபரப்புடன் காட்சியளித்தது திருமண மண்டபம். மணமகன் முதல் ஆளாக தயார் நிலையில் காத்திருக்க, அவனது மச்சானோ இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தான்.
“என்னடா, மச்சான்? குட்டி போட்ட பூனை மாதிரி உலாவிக்கிட்டு இருக்க?” என்றான் கிண்டலாக.
“மாம்ஸ், ஒரு விசயம் சொல்றேன். எங்க அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க?” என்று கவலையுடன் உரைத்தான் உமாபதி. மதுவர்ணிகாவின் சொந்த தம்பி. இருபத்தி இரண்டு வயது நிரம்பிய இளைஞன்.
“என்னை பத்தி உனக்கு தெரியாதா செல்லம்? சொல்லு என்னாச்சு?”
“மாம்ஸ், அது வந்து கழுத்துல இருந்த செயினை காணோம்.” என்று தவிப்புடன் கூற,
“அடப்பாவமே” என்று அதிர்ச்சியில் உறைந்து போனவன், ” டேய், என்னடா சொல்ற?”
“ஆமா மாம்ஸ் நேத்து வரை கழுத்துல தான் இருந்துச்சு. ஆனால் இன்னைக்கு இல்லை. அம்மாக்கு தெரிஞ்சுது நான் காலி.”
“டேய் மச்சான், நல்லா தேடுடா. இங்க தான் இருக்கும்.” என்று கவலையாக கூறியவன், அடுத்த நொடியே முகத்தை திருப்பியபடி சத்தமின்றி சிரித்தான்.
‘தேடுடா. நல்லா தேடு. என்னையவா டார்ச்சர் பண்ணுன?’ என்று மனதிற்குள் குதித்தவன், அவனும் தேடுவது போல நடித்தான்.
“முகூர்த்தத்துக்கு நாழியாகிறது மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ.” அதற்குள் ஐயர் அழைத்திருக்க, மணமகனை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர் உறவினர்கள் சிலர்.
“வந்து தேடுவோம்டா உமா.” என்று உமாபதியை சமாதானம் செய்தவன், நக்கல் புன்னகை உதிர்த்தபடி மச்சானை அழைத்துக் கொண்டு மணவறையை நோக்கிச் சென்றான்.
அவ்விடம் மணமகனுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் ஒவ்வொன்றும் செய்யப்பட்டது. நந்தாவிற்கு பெற்றோர் இல்லை என்பதால் மணமகன் சார்பாக மதுவர்ணிகாவின் ஒன்றுவிட்ட அத்தையும், மாமாவும் முன்னிருந்து சடங்குகளைச் செய்தனர்.
“மணமகளை அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் கூறவும், நந்தாவின் முகத்தில் புது மலர்ச்சி தோன்றியது. ஆவலுடன் அவளை எதிர்பார்க்க, சிவப்பு நிற பட்டுப்புடவையில் தேவதைப் போல் மிளிர்ந்த வண்ணம், உச்சியில் நெத்திச்சுட்டி தொடங்கி, இடுப்பில் ஒட்டியாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களுடன் மேடை நோக்கி நடந்து வந்தாள் மதுவர்ணிகா.
அழகு மங்கையவளை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவனையும் மீறி ஒரு வித சிலிர்ப்பு தோன்றி மறைந்தது. இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரும்பாடுபட்டான் நந்தா.
அங்கே நடந்துவரும் தனது மகளை மகிழ்ச்சியும், பூரிப்பும் கலந்தபடி பார்த்தனர் தாமோதரனும், பிரபாவதியும். தனது பெற்றோர்களின் மகிழ்ச்சியைக் கண்டு மனம் நெகிழ்ந்துப் போனாள் மதுவர்ணிகா.
அவர்களைக் கண்டு வெளியே புன்னகைத்தாலும், மனதில் ஆயிரம் மன்னிப்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். தோழிகள் புடைசூழ நடந்து வந்தவளை, மணமேடையில் அமர வைக்க, வந்திருக்கும் உறவுகளுக்கு வணக்கம் தெரிவித்தபடி, நந்தாவின் அருகில் வந்தமர்ந்தாள் மதுவர்ணிகா.
அவள் அருகில் அமர்ந்ததும் முகத்தை பட்டென்று திருப்பிக் கொண்டான் நந்தா. ‘அய்யோ கொல்றாளே. இப்படி என்னை மயக்கிட்டியேடி மது.’ என்று மனம் படபடக்க அமர்ந்திருந்தவன், அவளை மறந்தும் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் முகம் முழுவதும் குப்பென்று வியர்த்திருக்க,
“மாம்ஸ் ஸ்மைல் ப்ளீஸ்.” என்று கீழிருந்தபடியே கண்ணடித்தான் உமாபதி.
அவனைக் கண்டு, “ஹீஹீ…” என்று முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவன், ‘நகை காணாமல் போயும் இவன் அடங்க மாட்டான் போலயே?’ என்று உள்ளுக்குள் கோபம் கொண்டான்.
“என்ன அண்ணி, மாப்பிள்ளை நம்ம மதுவை பார்க்கவே மாட்றாரு. உண்மையாவே இவங்க காதலிச்சு தான் கல்யாணம் பண்றாங்களா?” என்று பிரபாவதியின் தம்பி மனைவி ஜானகி உரைக்க, பிரபாவதியின் முகமோ நொடியில் வாடியது.
“என்ன பேசுற ஜானகி? கல்யாண படபடப்புல மாப்பிள்ளை அப்படி இருக்காரு.” என்று அவர் சமாளித்தாலும், அன்னை முகம் வாடியதை கவனித்துக் கொண்டாள் மதுவர்ணிகா.
அடுத்த நொடியே யாரும் பார்க்காத நேரம் நந்தாவின் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள். அவனோ, ஆவென்று கத்த பார்க்க, “டேய், வாயை மூடு. நான் தான் கிள்ளுனேன். ஆமா எதுக்கு இப்போ சீரியஸா இருக்க?” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“என்னது டேய் ஆ..? என்ன மேடம் மரியாதை குறையுது?”
“என் தம்பி செயினை திருட பார்த்தவன் தானடா நீ?” என்றவள் கிசுகிசுத்த நொடி,
“அது எல்லாம் இல்லையே?” என்றான் திணறியபடி.
“நடிக்காதடா, நேத்து என் ரூம்குள்ள உனக்கென்ன வேலை. அதுவும் என் தம்பி செயினை திருடிட்டு என் பெட்ல போட்டுட்டு போயிருக்க?” மற்றவர் முன் புன்னகை புரிந்தபடி இவள் மெதுவாக கூற, அவனோ ‘ஙே’ வென விழித்தான்.
“வரு, மந்திரத்தை சொல்லுமா? கல்யாணம் முடிஞ்சதும் பொறுமையா பேசுவீங்களாம்.” என்ற பிரபாவதி புன்னகையோடு கூறியபடி ஜானகியை பார்க்க, ஜானகியோ “சாரிங்க அண்ணி.” என்று மன்னிப்பைக் கேட்டு நகர்ந்துக் கொண்டார். பிரபாவதியின் பார்வையிலேயே பெருமிதம் மிகுந்தது. அங்கிருந்த அனைவருமே இருவரும் காதலோடு பேசிக் கொள்கின்றனர் என்றே நினைத்திருந்தனர்.
மதுவும் அன்னையின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவள், “கல்யாணம் முடியட்டும்” என்று இவன் புறம் திரும்பி எச்சரித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
‘எல்லாம் என் நேரம்.’ என்று தலையில் அடிக்காத குறையாக பார்த்தவன், கடமைக்கென ஐயர் கூறியதை செய்திடத் தொடங்கியிருந்தான்.
“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று ஐயர் உரைத்த நொடி தாலியைப் பெற்றவன் அவளது சங்கு கழுத்தை நோக்கிச் செல்ல, அவளோ எச்சிலை கூட்டி விழுங்கினாள். பின் கனத்த இதயத்துடன் கண்களை அவள் இறுக மூடி அமர்ந்துக் கொள்ள, அவள் கண்கள் திறக்கும் வரை அமைதியாக தாலியை கட்டாமல் வேடிக்கை பார்த்தான் நந்தா.
“தாலி கட்டுங்க மாப்பிள்ளை” என்று பிரபாவதி உரைத்த நொடி, ‘இன்னுமா இவன் கட்டலை.’ என்று பட்டென்று கண்களைத் திறந்தவள் ஓரக்கண்ணால் அவனைக் காண, மென் புன்னகை உதிர்த்தவன், அடுத்த நொடி அவளது கழுத்தில் தாலியை மூன்று முடிச்சிட்டு கட்டியவன், உற்றார் உறவினர் அட்சதை தூவி ஆசிர்வதிக்க, பெண்ணவளை தன் சரிபாதியாக ஏற்றுயிருந்தான் நந்தா.
பின் குங்குமத்தை பெற்றவன், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி நெற்றி சுட்டியினை விலக்கி குங்குமத்தை வைக்க போக, அவளோ தன் கண்களை மூடித்திறந்தவள், அவனுக்கு கேட்கும் வண்ணம், “நம்மளை பொறுத்த வரைக்கும் இது கான்ட்ராக்ட் மேரேஜ். அதை மட்டும் மறந்திடாத” என்று எச்சரிக்கும் விதமாக எடுத்துரைக்க, அவனுக்கோ உள்ளுக்குள் சுள்லென்று கோபம் பெருக்கெடுத்தது. இருந்தும் நிதானமாக முகத்தை வைத்துக் கொண்டவன், அவளது காது மடலோடு தனது கன்னத்தை உரசியபடி, குங்குமத்தை அழுத்தமாக வைத்து விட்டான்.
அவனது அழுத்தம் எதனால் என்பது அவளுக்கு அந்நொடி புரியாமல் போனாலும், அவனுக்கு நன்கு தெரிந்தது இனி
நடக்கவிருக்கும் அதிரடி திருப்பங்களை. தெரிந்தே களத்தில் இறங்கியிருந்தவனின் இதழ்களில் அப்படியொரு புன்னகை வெளிப்பட்டது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நந்தா சூப்பர்
Thank u 😍