
ஏதோ வென்ற களிப்பில் சட்டையின் காலரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாற்காலியில் அப்படியே சாய்ந்தவன், தனக்கு எதிரே முகத்தில் ஈ ஆட அமர்ந்திருந்த கந்தனைக் கண்டு ஏகபோக சந்தோஷம் அடைந்தான்.
ஆதியிலிருந்தே ஜனனிக்குக் குடைச்சல் கொடுக்கும் கந்தனுக்கு இப்படி ஒரு பதிலடி அவசியம் என்று நந்துவிற்குத் தோன்ற, அதைத் தன் பதிலால் நிறைவேற்றிக்கொண்டான்.
ஆனால் பாவம், பக்கத்திலிருக்கும் ஜனனிக்கும் அவனது பதில் பேரதிர்ச்சியைத் தந்தது. ‘அவனது பதிலால் சிறு சலனம் அவள் மனதில் தோன்றிடாதா?’ என்ற நப்பாசையில்தான் அவன் அப்படிச் சொன்னான். அவளது திகைப்பைக் கண்டு இவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
இருவரையும் அதிர்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டுவர இருமினான். அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்த கந்தன் ஜனனியிடம், “யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்க ஜனனி மேடம்? இப்போ என்ன உங்க முடிவுல மாற்றம்?” என்று கேட்டான்.
“என்னைப் பார்த்ததும் அவ முடிவை மாத்திட்டா! எப்பவும் மனசு ஒரே மாதிரியே இருக்கும்னு சொல்ல முடியாதுல்ல? காலநேரம் மாறது போலதான் மனசும் மாறிட்டே இருக்கும். இவ மனசும் மாறிடுச்சு, உங்க மனசையும் மாத்திக்கோங்க,” என்று நந்து ஜாடையாகப் பேசியது கந்தனுக்கும் ஜனனிக்கும் நன்றாகவே புரிந்தது.
“நாங்க வந்த விஷயத்தைப் பத்திப் பேசலாமா?” என மீண்டும் அவனே பேசினான்.
“ம்ம்… சொல்லுங்க, என்ன விஷயம்? என்ன உதவி வேணும் உங்களுக்கு?” என முக இறுக்கத்துடன் கேட்டவனைக் கண்டு அவனுக்குள் அப்படி ஒரு குதூகலம்.
ஜனனிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று யூகிக்க முடிந்தது. கந்தனைக் கடுப்பேற்றத்தான் நந்து இவ்வாறு சொல்லியிருக்கிறான் என்று அவளுக்குப் புரியாமல் இருக்குமா? ‘உதவி கேட்டு வந்த இடத்தில் இது தேவைதானா?’ என்று அவளுக்குத் தோன்றியது.
“எங்களுக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு! அதுல சமைக்க நிறைய ஆட்கள் தேவைப்படுறாங்க. உங்க கேட்டரிங் சர்வீஸ்ல இருந்து சமையல்காரங்களை அன்னைக்கு ஒரு நாள் சமைக்க அனுப்பி வைக்க முடியுமா? அந்த ஒரு நாளுக்கான வாடகையை நாங்க கொடுத்திடுறோம். ஆட்கள் தேவைப்படுறதால உங்ககிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்,” என்று தயக்கத்துடன் சொன்னாள் ஜனனி.
“முதல்ல பெரிய ஆர்டர் கிடைச்சதுக்கு என்னோட வாழ்த்துக்கள். பரவாயில்லை, அவ்வளவு நடந்தும் என்கிட்ட நீங்க உதவி கேட்க வந்திருக்கீங்க, உங்க பெருந்தன்மையை நான் பாராட்டுறேன். எப்போ எங்கே வரணும்னு சொல்லுங்க, நான் அவங்களை அனுப்பி வைக்கிறேன்,” என வெளியே சொன்னவனுக்கு உள்ளுக்குள் புகைச்சல் இருக்கத்தான் செய்தது.
‘நேற்று முளைத்த காளான் எல்லாம் வளர்ந்து கொண்டு போவதை’ அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; பொறாமையாகத்தான் இருந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாதபடி பேசினான்.
“ரொம்ப நன்றி! எனக்கு அவங்க டீடெயில்ஸ் வேணும், கிடைக்குமா?”
“ஆபீஸ்ல கேளுங்க சொல்லுவாங்க,” என்றான் கந்தன்.
“அந்த ஒரு நாளுக்குரிய வாடகை…?” என அவள் இழுக்க,
“எனக்குத் தர வேண்டாம்… அவங்களுக்குக் கொடுங்க போதும்,” என்றான்.
ஜனனிக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி அவனால் இவ்வளவு அடக்கமாகவும் பொறுமையாகவும் பேச முடிகிறது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. எப்போதும் அடாவடியாகப் பேசும் அவன், இன்று அடக்கமாகப் பேசியது ஆச்சரியத்தைத் தந்தது. நந்து அவனைச் சீண்டியும் கோபம் கொள்ளாமல், கேட்ட உதவிக்குச் சம்மதித்ததை அவளால் நம்ப முடியவில்லை.
“அப்போ நாங்க வர்றோம்,” என்று எழுந்திருக்க முனைந்தாள்.
“உங்களுக்கு என்ன உதவினாலும் என்கிட்ட கேளுங்க, பண்றேன். பண உதவியா இருந்தாலும் சரி,” என்று நல்லவனைப் போலப் பேசினான் கந்தன்.
“தேங்க்ஸ்,” என்றாள் ஜனனி. நந்துவும் நன்றி கூறிவிட்டு அவளுடன் வெளியேறினான்.
அவர்கள் சென்றதும் கோபத்தில் மேசையை ‘நங்’கென்று குத்தினான் கந்தன். தன்னை மறுத்து இன்னொருவனைக் கல்யாணம் செய்யப் போகிறாள் என்ற கோபம், தனது கேட்டரிங் வீழ்ச்சிக்கும் இவள்தான் காரணம் என்ற ஆத்திரம் என அனைத்தும் ஒன்றிணைந்து, ஜனனிக்கு எதிராகப் பெரியதொரு திட்டத்தைப் போட்டு வைத்திருந்தான் அவன். அவளோடு சேர்ந்து அந்த கேட்டரிங் சர்வீஸையும் மொத்தமாகக் கைப்பற்ற நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது இந்த வலைக்குள் சிக்குவாளா ஜனனி? கடவுளுக்குத்தான் வெளிச்சம். அலுவலகத்தில் சமையல்காரர்களின் விவரங்களை வாங்கிக்கொண்டு அவர்கள் புறப்படுவதை சிசிடிவி (CCTV) வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கந்தன்.
வெளியே வந்ததும் நந்துவின் முதுகில் ஒன்று வைத்தாள் ஜனனி. அந்த வேகத்தில் அடி தாங்காமல் துள்ளியவன், “ஏண்டி?” என்று வலியில் முதுகைப் பிடித்துக்கொண்டு நெளிந்தான்.
“எதுக்கு அப்படிச் சொன்ன நீ?”
“நான் உண்மையைத் தானே சொன்னேன்,” என அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.
“எதுடா உண்மை?”
“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறது!” என்றான் சன்னமாக.
“நந்து…” என இவள் ஆரம்பிக்கும் முன்னே கை நீட்டித் தடுத்தவன், “நான் சொன்னதுதான் நடக்கும்! அறிவுரை சொல்லி அறுக்காத, வா போலாம்,” என்று வண்டியில் அமர, மீண்டும் முதுகில் ஒரு அடியைப் போட்டுவிட்டு அவள் பின்னே அமர்ந்தாள். இருவரும் கிளம்பிச் செல்வதை கேமரா வழியே பார்த்தவன், பல்லைக் கடித்தான்.
நந்து கூறியதை மீண்டும் மீண்டும் அசைப்போட்டவன், ஜனனியின் திகைப்பு மின்னலாய் வந்து போக, ‘பொய் சொல்லி இருப்பானோ?’ என யோசித்துச் சதாசிவத்திற்கு அழைத்தான். அவரும் கந்தனின் எண்ணைக் கண்டு எடுத்து, சினேகத்தோடு நலம் விசாரித்தார்.
“இன்னைக்கு உங்க பொண்ணு இங்கே வந்திருந்தாங்க சார்!” என்றதும் பதறியவர், “என்னப்பா, பண உதவி எதுவும் கேட்டு வந்தாளா? ‘அப்பா நான் இருக்கேன்’ என்ற நினைப்பே அந்தப் பொண்ணுக்கு இல்லைப்பா. சுயமாக நிற்கணும்னு யாரோட உதவியும் இல்லாம அவளே பார்க்கிறா. நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டா! எவ்வளவுப்பா பணம் வாங்கினா? நான் கொடுக்கிறேன்,” என்று எதையும் விசாரிக்காமல் பதறிப் போய் புலம்பினார்.
“ஐயோ சார்! இங்கே வந்தாங்கன்னு தானே சொன்னேன். பணம் கேட்டு வந்தாங்கன்னு சொன்னேனா? வட்டிக்காரன்கிட்ட எப்பவும் பணம் கேட்டுதான் வருவாங்கன்னு அர்த்தமா சார்?” என்றான் கந்தன்.
“அப்போ எதுக்குப்பா வந்தா?”
கந்தன் அவள் வந்த விஷயத்தைச் சொல்ல, “ஓ…” என்றவர் நிதானமடைந்தார்.
“சார், கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பொண்ணுக்கு நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலையா?” என மெல்லத் தூண்டில் போட்டான்.
அவரோ பெருமூச்சுடன், “இல்லைப்பா! அவ வாழ்க்கையை அவ இஷ்டப்படி வாழட்டும்னு விட்டுட்டோம். ஏற்கனவே ஒருத்தனைக் கட்டி வச்சு அவ அனுபவிச்ச கொடுமையெல்லாம் போதும். அவளுக்கே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணம் வந்தா கண்டிப்பா ஏத்துக்கிட்டு நல்ல மாப்பிள்ளையா பார்த்துப் பண்ணி வைப்பேன். ஆனா என் பொண்ணு அவ முடிவுல உறுதியா இருக்கா,” என்று உண்மை தெரியாமல் புலம்ப, கந்தன் உதட்டில் விஷமச் சிரிப்பு தோன்றியது.
“உங்க பொண்ணு கூட ஒருத்தர் வந்தாரே, அவர் யாரு?”
“அவனாப்பா? ஜனனியோட படிச்ச பையன், சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ். துபாயிலிருந்து வந்திருக்கான். ஜனனிக்குத் துணையா இருக்கான்,” என்றார்.
“ஓ… நான் கூட அவர்தான் உங்க பொண்ணைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளையோன்னு நினைச்சேன்,” என நலம் விசாரிப்பது போலப் பேசி, ஜனனி பற்றிய உண்மையை அவரிடமிருந்து கறந்துவிட்டான்.
சதாசிவம் சொன்னதை வைத்து, நந்து அவளது தோழன் மட்டுமே என்பதை உறுதி செய்துகொண்டான் கந்தன். ‘நந்து தன்னை வெறுப்பேற்றவே அப்படிச் சொல்லியிருக்கிறான்; ஜனனியைத் தனது வாழ்க்கையில் இணைக்கத் தடைகள் எதுவுமில்லை, திட்டப்படி எளிதில் அவளை மடக்கிவிடலாம்’ என்று எண்ணினான் அவன். நந்துவின் உண்மையான காதலைப் பற்றித் தெரியாமல்!
மருத்துவக் கல்லூரியில் சமைக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்க, முன்பணம் கொடுத்துத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்தனர். கந்தன் கேட்டரிங்கில் வேலை செய்யும் ஆட்கள் அனைவரும் ஜனனியின் அழைப்பின் பேரில் வந்துவிட்டனர்.
அவர்களிடம் சமைக்கும் முறையைக் கேட்டறிந்த ஜனனி, தன் பங்கிற்குச் செய்ய வேண்டிய பணிகளை விளக்கினாள். எங்கே, எப்போது வர வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தாள்.
மளிகை, காய்கறி, இறைச்சி எனப் பொருட்கள் வாங்க அடுத்த இரண்டு நாட்களும் அவளோடு அலைந்தான் நந்து. சோர்வு இருந்தாலும், அவளோடு பயணிக்கும் இந்த வாய்ப்பு அவனுக்கு உற்சாகத்தையும் தெம்பையும் கொடுத்தது.
இரண்டு நாட்களும் இருவரும் வீட்டிற்கு வரத் தாமதமானாலும், வள்ளியோ நீலகண்டனோ எதுவும் சொல்லவில்லை. இரவு உணவு முடித்துத் தனது இல்லத்திற்குச் சென்று தனியாகத் தூங்கினான் நந்து. அவன் தனியாகச் செல்வதை எண்ணி ஜனனியின் மனம் கனத்தாலும், அவனிடம் முரண்டு பிடிப்பதைக் குறைக்கவில்லை.
மருத்துவக் கல்லூரியில் சமைக்க வேண்டிய நாளும் வந்தது. சொன்னது போலவே இருபதாயிரம் பேருக்குச் சமைத்தனர். ருசி பார்க்கவும், தேவையான பொருட்களைச் சேர்க்கவும் சமையல் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.
ஆள் உயரக் கரண்டியை வைத்துப் பெரிய அண்டாக்களில் கிண்டும் வேலையை நந்து பார்த்துக் கொண்டான். வேலை செய்யும் ஆண்களோடு அவனும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உழைத்தான்.
உடலெங்கும் வியர்வை மழையில் நனைந்தபடி சமைத்துக் கொண்டிருந்த அவனது முகத்தைச் சேலை முந்தானையால் துடைத்துவிட, அவளையும் அறியாமல் அவளது கைகள் துடித்தன. தன் மாற்றத்தைத் தானே சந்தேகமாகப் பார்த்துக் கொண்டாள் ஜனனி.
அடுப்பங்கரை அனலில் ஜனனி எனும் மலர் கருகிவிடக் கூடாதென்று, அவளைத் தள்ளி நிற்கச் சொன்னான் நந்து. அன்பு கட்டளையிட்டு, அவ்விடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு உணவுகளைச் செய்ய வைத்தான். ஜனனியின் விழிகள் அகலாதபடி அவளை ஈர்த்தான். தண்ணீர் அருந்த வந்த கொஞ்ச நேரத்திலும் அவளை வேலை செய்ய விடாமல், நிழல் தரும் மரத்தடியில் அமர வைத்தான்.
சமையல் வேலை நல்லபடியாக முடிந்தது. ஒவ்வொன்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டில் எடுத்து வந்து அவளிடம் ருசி பார்க்கத் தந்தான். சிக்கன் பிரியாணி, எலும்பு தால்சா, மட்டன் சுக்கா, சிக்கன் 65, ரைட்டா ஒரு பக்கமும்; வெஜ் பிரியாணி, கோபி மஞ்சூரியன், கூட்டு, பொரியல், ரைட்டா என அனைத்தும் அசத்தலாக இருந்தன.
சரியான நேரத்தில் கல்லூரிக்கு உணவைக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ருசி பார்த்தவர்கள் அனைவரும் அசந்து போனார்கள். வரிசையில் நின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவருக்கும் அவர்களே பரிமாறினார்கள். உணவு மிச்சமில்லாமல் தீர்ந்து போனது.
அவர்களது சேவையில் திருப்தியடைந்த தாளாளர், பேசிய தொகையை விட அதிகப் பணம் கொடுக்க, முதலில் மறுத்த ஜனனி பின் அவர் வற்புறுத்தியதால் வாங்கிக் கொண்டாள்.
பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அலுவலகம் திரும்பினர். பழைய ஆட்கள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்க, புதிதாக வந்தவர்களிடம் பேசிய சம்பளத்தைக் கொடுத்தாள் ஜனனி. அவர்கள் நன்றி கூறிவிட்டுப் போகாமல் தயங்கி நிற்க, ஜனனி புரியாமல் பார்த்தாள்.
“என்ன விஷயம்? ஏதாவது சொல்லணுமா? இல்லை இன்னும் பணம் வேணுமா?” எனக் கேட்டாள்.
அவர்கள் அடுத்துச் சொன்னதைக் கேட்டு ஜனனியோடு சேர்ந்து நந்துவும் அதிர்ந்து போனான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இளா 👌💛❤️
நன்றி மா