Loading

எனது பார்வையில்

அரசியல் சதுரங்கம் எளிதில் புரிந்துகொள்ள சாத்தியமானது இல்லை. இந்தக்கதையின் பல வரிகளை எழுதும்பொழுது எனது கண்களில் அவை காட்சிகளாக மாறியது போல உண்டான மாயையில் கண்கள் தாமாக கண்ணீர் பொழிந்த அனுபவம் எனக்கு உண்டு.

27

அருணாச்சலம் அவருக்கு தன் பேத்தி அளவில் இருக்கும் பெண்ணை மருமகளாக ஏற்க வேண்டியதாயிற்று என்ற குற்றவுணர்ச்சி. இதில் அவனது வார்த்தைகள் வெறும் சாக்கடை.தனது மகன் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறானோ… அந்தப் பாவத்தை எல்லாம்  எப்படி கழிப்பது? இந்த பெண்களின் வாழ்வு என்ன ஆயிற்று என்றெல்லாம் அவருக்கு கலக்கம்.  யாராவது ஒருவர் இப்படி அறைந்தால் தான் இனி இதுபோன்ற தரம் தாழ்ந்து பேச மாட்டான் என்று அவர் நினைத்ததால் நடந்தது பற்றி மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருவரும் வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டார்கள். தான் இதுவரை பார்த்து இருந்த கணக்கு வழக்கு அவர்கள் புரிந்து கொண்ட விஷயங்கள் பற்றி சாதுர்யா பேச ‘தான்’ எடுத்த முடிவு சரிதான் என்ற எண்ணம் அவருக்குள் வலுப்பட்டது. ஸ்கந்தன் விஷயத்தில் சாதுர்யா நடந்து கொள்ளும் முறை அருணாசலத்திற்கு அவள் மீது மரியாதை வர செய்திருந்தது. குழந்தை மீது அவள் வைத்திருக்கும் பாசம் அது போலி இல்லை என்பது சிவனுக்கும் கூட புரிஞ்சு தான் இருக்கிறது. அதனாலேயே இருவரும் சாதுர்யா பற்றி வேறு வித வேறுபாடான எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவில்லை. 

அவள் வேலை செய்யும் பாணியில் அவளது நேர்கொண்ட பார்வையும் ஸ்திரத்தன்மையும் புத்தி கூர்மையும் முடிவெடுக்கும் சாமர்த்தியமும் அதிகமான தைரியமும் வெளிப்பட்டது. இன்று குருவுக்கு அவள் கொடுத்த வைத்தியமே சாட்சி.

ஒருநாள் உமாவின் அறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்த சாதுர்யா கையில் உமாவின் கைப்பட எழுதிய சில விஷயங்களும், அவளது குடும்ப புகைப்படமும், ரத்னாவின் கடிதமும் அவளது பீரோவில் யார் கண்ணுக்கும் அகப்படாத வகையில் மிகவும் மறைவாக வைக்கப்பட்டிருந்தவை கிடைக்க, அறையின் கதவை சாத்திக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்து நிதானமாக அவற்றையெல்லாம் படித்து முடித்தாள். அவளுக்குள் ஒரு தெளிவு. தான் அடுத்து அடுத்து செல்ல வேண்டிய பாதை மிகவும் கடினமாக இருந்தாலும் கூட அந்தப் பாதையில் கைவிளக்கை எடுத்துக் கொண்டு உமா வருவது போல ஒரு மாயத்தோற்றம் அவள் மனதில் வந்து மறைந்தது. உடம்பு எங்கும் புது இரத்தம் பாய்வது போல ஒரு உணர்வு. அவள் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றது.

உமாவின் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை படிக்கும்போது ஒரு பெண்ணாக  சாதுர்யாவின் கண்களிலிருந்து கூட கண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏதேனும் ஒரு வகையில் பெண்கள் தங்களை பலி கொடுத்தால்தான் இந்த சமூகம் உயருமோ? என்ற ஏளனம் கலந்த சந்தேகம் சட்டென அவள் இதயத்தில்.

இப்பொழுது ரத்னா எங்கிருக்கிறாள், அவளது நிலை என்ன? என்பது குறித்து கவலை கொண்டாள் சாதுர்யா. ரத்னாவின் புகைப்படத்தை தன்னுடைய அந்தரங்க பெட்டிக்குள் மறைத்து வைத்தவள் உமாவின் இதர விஷயங்களை தனியாக மற்றொரு இடத்தில் மறைத்து வைத்தாள். சமயம் கிடைக்கும்போது சிவனிடம் இவை பற்றி எல்லாம் நிச்சயமாக பேச வேண்டும். 

சிவனின் உதவி தனக்கு கிடைக்கும் என்று அவள் நம்பினாள். அருணாச்சலம் மீதும் அவளுக்கு ஒரு விதத்தில் அவளுக்கு கோவம் உண்டு. ஆனால் நேரடியான தாக்குதலை தொடுக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் தவறு செய்யவில்லை. உமாவின்  எழுத்துக்களில் ராக்காயி பற்றிய தகவல்கள் கூட இருந்தது. அந்தப் பெண்மணியை பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டு  கொண்டாள்.

சாதுர்யா மனதில் வெற்றிபெறுவதற்கான உத்திகளை  வகுக்க தொடங்கி விட்டாள்.

“உத்தி என்பதற்குப் பொருள் பலவீனத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும் பலம் என்று நினைக்கிறோம் .வெற்றிபெறுவதற்கான சிறந்த உத்தி என்பது பலத்தை மட்டும் நம்பி வகுக்கப்படும் வியூகம் அல்ல.

 வகுக்கப்படும் வியூகம் ஆனது நமது பலத்தையே நிர்ணயிக்கிறது.  எதிர்பாராமல் நகர்த்தும் காயை மையமாகக் கொண்டிருக்கும். தேவையில்லாத இடத்தில் பாய்வதும் தேவையான இடத்தில் பயந்து ஓடுவதும் போர்க்களத்தில் பிரயோஜனப்பட போவதில்லை.” சாதுர்யா இப்போது இருக்கும் நிலையானது கத்திமேல் நடப்பது போன்றதுதான். அவள் தன்னைப் பற்றியும் சிந்தித்தாக வேண்டும், தன்னை சார்ந்தவர்களை பற்றியும் யோசிக்க வேண்டும்.

அவள் மனதில் குரு மீதான பயம் இருக்கிறது. அந்த பயத்தை தனது காலுக்கடியில் போட்டு மிதித்து போர்க்களத்தில் போரிட தயாராகிக் கொண்டு இருக்கிறாள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தனக்கு எதிராக ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைமைகளையும் விளைவுகளையும்  துல்லியமாக கணக்கிட்டு வைத்தால் தான் அவளால் இந்த போரில் வெற்றி பெற முடியும். சிறிது சறுக்கினாலும் அதலபாதாளம் தான்.

‘புலி பதுங்குவது பாய்வதற்கு ‘என்று ஒரு வாசகம் உண்டு. இப்போது  சாதுர்யா பதுங்குகிறாள், பாய்வதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

உமாவின் கடிதங்கள் கொடுத்த தைரியத்தில் எப்படியாவது சிவனுடன் பேசிவிட வேண்டும் என்று மனதிற்குள் குறித்து வைத்துவிட்டாள். அருணாச்சலம் வீட்டில் இருக்கும் நேரத்திலோ அல்லது வீட்டிலிருந்து வெளியே செல்லும் நேரத்தில் எதுவாக இருந்தாலும் சரி…

 

அவள் யோசித்திருந்த அந்த சிறந்த நேரமும் வாகாய் கிடைத்தது. அருணாச்சலம் உடம்பு சரியில்லை என்று  மாத்திரைகள் எடுத்துக் கொண்டு தனது அறையில் படுத்திருக்க சிவன் தனியாக ஹாலில் உட்கார்ந்து கொண்டு கணக்கு வழக்குகள் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் எண்ணம் முழுவதும் சாதுர்யாவை எப்படித் தன் திட்டங்களுக்கு உடன்பட வைப்பது என்பதை சுற்றியே இருந்தது. அவ்வளவு யோசனைக்கு எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்பது போல் அவளே வந்து நின்றாள்.

அந்த நேரத்தில் அவளை அவர் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்கவில்லை. அவரை என்னவென்று சொல்லி அழைப்பது என்று ஒரு நொடி தயங்கினாள் பெண். அவளைப் பார்த்து உணர்ந்து கொண்டவர் ‘நீ  சிவம்னே என்னை கூப்பிடு மா ‘ என்று விட்டார். வயதில் மூத்த மனிதரை எப்படி பெயர் சொல்லி அழைக்க முடியும் என்று குழம்பியவள் அங்கிள் என்று அழைப்பதாக முடிவு செய்து கொண்டாள்.

கூடத்தில் அமர்ந்து அந்தரங்க விஷயங்களைப் பேச முடியாது என்பதால்  அலுவலக அறைக்கு சென்று விட்டார்கள். முதலில் கணக்கு வழக்குகள் பற்றி பேசியவள், யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்து  ஸ்கந்தனை முன்னெடுத்து பேச தொடங்கினாள்.

உமாவின் கடிதங்களும் குடும்ப படமும் கூட அவளிடம் இருந்தது. இவற்றையெல்லாம் கண்டு சற்றே திகைத் தாலும் தன்னை சுதாரித்துக் கொண்டு நேரடியாகவே கேட்டுவிட்டார் “அம்மாடி நீ எதிர்பார்ப்பது என்ன?” என்று.

அவளோ எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தவளாக “நீங்க என்ன நெனச்சி என்னுடைய இந்த கல்யாணத்தை நடத்தி வச்சீங்க, உங்க எண்ணம் என்னனு எனக்கு ஓரளவு புரியுது அங்கிள்.

உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு வகைன்னா, எனக்கு ஏற்பட்டது மரண காயம். பொண்ணு தொலைக்க கூடாத ஒன்னு… தேங்கி நிக்குறேன். எனக்கு அவனை சும்மா விட முடியாது. சின்ன பையன் உங்க பேரன் அவனுக்கு அவன் அம்மாவ இழந்து இப்படி மனசு பிரச்சனைல… தேவையா?”

அவள் கேள்வி சொல்லும் நியாயம் அவருக்கு புரியாது இல்லை. தன் தாடையை தடவி யோசித்தவர்,” எனக்கு தெரிஞ்ச ஒரே வழி அரசியல். உனக்கு தோது படுமான்னு யோசி. மிச்சம் நா பாத்துக்கறேன்’’என்று விட்டு எழுந்தார்.

அன்று முழுவதும் யோசித்தவளுக்கு வேறு வழியில் சென்றால் வெற்றி பெறுவது சுலபமல்ல என்று புரிந்தவளாக, சிவனுக்கு அவரது தனி இலக்கத்தில் ‘சரி’ என்று ஒற்றை வார்த்தையில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருந்தாள்.

அடுத்த நாள் ஏதோ சொல்லி வைத்தார் போல் தாமோதரன் அவளை பார்க்க வர மாடியில் தனது அறைக்கு அழைத்துச் சென்று அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். கிளம்புவதற்கு முன்னர் தாமோதரன் தனது பையில் வைத்திருந்த திருமாங்கால்யத்தையும், அவரது வங்கிக் கணக்கிற்கு ரங்கன் அனுப்பியிருந்த தொகையையும் அவளிடம் கொடுக்க, அவற்றை வாங்கிக் கொள்ளும் போது அவளது கைகள் நடுங்கியது.

பணத்தை திருப்பி தாமோதரனிடம் கொடுத்தவள் ‘’இத வாங்கிக்க எனக்கு உரிமை இல்லை தாத்தா’’ என்றாள்.

“ஆனா உன்ன தவிர வேற யாருக்கும் அந்த உரிமை இல்லைனு சொல்றாம்மா அவன்’ என பெருமூச்சுவிட, கேட்டவளுக்கோ கண்களிலிருந்து நீர் அருவியாய் பொழிந்தது.

 “அத்தானுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கிற வழிய பாருங்க தாத்தா. என்னோட ஞாபகங்கள் அவர் வாழ்க்கைக்கு நல்லதல்ல” என்று முடித்துக்கொண்டாள். 

ஆனால் பெரியவர் அந்த பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

இருவரின் நிலையையும் நினைத்து அவருக்கு மனதில் ரத்தம் வழிந்தது.

ரங்கனின் காதல் தீவிரம் அவருக்கு தெரியும். அவனுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது கடினமான காரியம் அல்ல…முடியாத விஷயம். இதை இந்த பெண்ணிடம் சொல்லி புரிய வைக்க முடியாது. இவ்வளவு விரும்பும் இவர்கள் இருவரையும் தெய்வம் ஏன் விலக்கி வைக்கிறது என்று ஆதங்கம் .கிளம்பி விட்டார் அவர். இவர் கிளம்பும் சமயம் ஹாலில் அருணாச்சலம் உட்கார்ந்திருக்க, அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார் தாமு.

“உங்க பேத்தியை பெரிய நிலையில் கொண்டு போய் உட்கார வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு பயப்படாதீங்க, கவலையும் படாதீங்க…” என்று அருணாச்சலம் அவருக்கு ஆறுதல் சொல்ல சற்றே நிம்மதி அடைந்தவராக கிளம்பினார்.

தாமுவுக்கும் அருணாசலதிற்கும் ஏறக்குறைய இரண்டு வயதுதான் வித்தியாசம் இருக்க கூடும். அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் இனி நீயும் தாத்தானு என்னை கூப்பிடு… என்று விட்டு நகர்ந்து விட்டார்.

 உண்மையில் பார்த்தால் குருவுக்கும் வெங்கடேசனனுக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். வெங்கடேசன் குருவை விட ஐந்து வயது பெரியவர். பெண் உடல் மீதான ஆசை எதையும் சிந்திக்க விடாது போலும்!

அருணாச்சலம் தீவிர சிந்தனை வயப்பட்டவராகவே காணப்பட்டார். அவரின் சிந்தனையையும் உமா ஆக்ரமிப்பு செய்து இருந்தாள்.போதாக்குறைக்கு நாடாளுமன்றத் தேர்தல் வெகு சமீபத்தில் நடக்க இருக்கிறது.

அந்த நேரம் அவர் அருகில் வந்த சிவன்,  ‘சாதுர்யா ஆட்சிப் பணித் தேர்வு எழுத இருந்தது’ பற்றி எல்லாம் சொல்லி, “அந்த பிள்ளையை  இப்போஎம். பி எலக்ஷன்ல நிக்க வெச்சா என்ன” என்ற கேள்வி எழுப்ப, ‘அதுக்கு அவ ஒத்துக்கணுமே’ தன் மனதில் உள்ளதை மறைக்காமல் ஒத்துக் கொண்டார் அருணாச்சலம்.

சிவன் சாதுர்யாவிடம் இது பற்றி பேச  அவள் இதுபற்றி ஸ்கந்தன்   கருத்தை தெரிந்து கொள்ள விரும்பினாள். சிறுவன் தானே அவனுக்கு என்ன தெரியும் என்று அவள் நினைக்கவில்லை. இன்று அவளுக்கு இருக்கும் ஒரே நெருங்கிய தோழன், அவளுக்காகவே அவளை விரும்பும்  மகனும் அவன்தான். அவளிடம் அவனுக்குள் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு அன்பு மட்டும்தான்!

ஸ்கந்தனுக்கு கேட்டவுடன் மிகுந்த சந்தோஷம். பெரிதாக ஆர்ப்பரிப்பு செய்தான்.. “என் அம்மா உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை இந்த சமயம் அவளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம்’ என்று அவன் மனம் சொன்னது.

உணர்ச்சிவசப்பட்டவனாக அவளைக் கட்டித் தழுவிக் கொண்டு, அவள் இடது தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவள் அணிந்திருந்த ஆடை மீறி அவள் உடல் இந்த சிறுவனின் கண்ணீரை உணர்ந்தது.

நேராகவே தனது மாமனாரிடம் சென்று, ‘’எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை மாமா… ஆனா நீங்க எதுக்கும் ஒரு முறை உங்க பையன் கிட்டேயும் கேட்டுக்கோங்க’’ என்று வெகு சாதுவாய் சாதுர்யா சொல்ல, அதுவே அருணாச்சலத்தை தூண்டிவிட போதுமானதாக இருந்தது.

“அவனுக்கும் கட்சிக்கும்  என்ன சம்பந்தம்… இது என்னோட முடிவு உன்னோட சம்மதம். அவ்வளவுதான்!

தேவையில்லாம இதெல்லாம்  அவன் தலையிடத் தேவையில்லை” என்ற விட்டு கட்சி அலுவலகம் சென்று விட்டார். அவருடன் சிவனும் கூடவே.தேர்தல் கமிஷனுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லுமுன் சாதுர்யா, தாமு தாத்தா கொண்டுவந்து கொடுத்திருந்த திருமாங்கல்யத்தை தனது அறையிலிருந்த சுவாமி படத்திற்கு முன் வைத்து, ரங்கனை மனதில்  நினைத்து தன் கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்றி அதில் திருமாங்கல்யத்தை கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டாள். அவள் மனதிற்கு மட்டுமே தெரியும் ஒரு உச்சி வகிட்டில் இட்டிருக்கும் குங்குமத்திற்கும், இப்போது கழுத்தில்  அணிந்திருக்கும்   இந்த சரடுக்கும் சொந்தக்காரன் ரங்கன் மட்டும் தான் என்று.

ஸ்பெயினில் இருந்தாலும், இவளது  ஒவ்வொரு அடியையும் நோக்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.

சாதுர்யா எலக்சனில் நிற்க போகிறாள் என்று கேட்டதும் அவனுக்குள்  மெல்லிய சிரிப்பு வந்து மறைந்தது.

மனதுக்குள்ளேயே அவள் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவனது தொழிலும் இப்போது பிரான்ஸ், இத்தாலி போர்ச்சுகீஸ் போன்ற நாடுகளில் ஊன்ற ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் அவன் அப்பா அவர்களது தொழிலை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் பொருத்தவரை தொழிலதிபர்களின் ஆதிக்கம் அதிகம். அப்பேர்ப்பட்ட வல்லமைமிக்க ஒரு தொழிலதிபர் பட்டியலில்  இவர்கள் குடும்பமும் ஒன்று.

சாதுர்யா தேர்தலில் ஜெயிப்பதற்காக தன் அப்பா மூலம் தேர்தல் நிதி என்ற பெயரில் அருணாசலத்தின் கட்சிக்கு தாராளமாக நிதி கிடைக்க தனது மருமகளை ஜெயிக்க வைத்து விடுவது என்று அருணாச்சலம் கங்கணம் கட்டிக்கொண்டு செலவு செய்தார்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குருவுக்கு கோபம் தலைக்கேற, தனது ஆட்களின் மூலம் சாதுர்யா தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, அவள் வயிற்றில் கத்தியால் குத்த செய்தான்.

பிறகு…!

மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் சாதுர்யா.  அவள் உயிர் பிழைப்பது சற்று கடினம் தான் என்று விட்டார் மருத்துவர். நாற்பத்தி எட்டு மணி நேரம் கழித்துதான் எதையுமே சொல்ல முடியும்  என்றவரை ஏக்கம் நிறைந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தது அந்த குடும்பம். ஸ்கந்தனால் மீண்டும் தனது அம்மா நிலையில் இருப்பவளுக்கு இதேபோன்று ஒரு துன்பம் வருவதை சகிக்க முடியவில்லை.  நான் ஆண் பிள்ளை என்றோ இது மருத்துவமனை என்றோ அவனை நினைத்து பார்க்க முடியவில்லை. வாய் விட்டு அழ ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று சிவனுக்கும் அருணாச்சலதற்கும் தெரியவில்லை.சாதுர்யாவின் மொத்த குடும்பமும் அங்கு குழுமி விட்டது. போர்த்துக்கீசிலிருந்து சமீபத்தில் மாற்றல் கிடைத்து இந்தியா வந்து விட்ட வெங்கடேசன் மாலதி இருவருக்கும் பெண்ணின் இந்த நிலை உயிர் வரை அறுத்தது. உத்தரபிரதேசத்தில் அமைச்சருடன் முகாமிட்டிருந்த வெங்கடேசன் உடனடியாக தில்லி வந்து அங்கிருந்து மாலதியையும் கூட்டிக்கொண்டு சென்னை வந்துவிட்டார். தாமோதரன் லக்ஷ்மி இருவரும் முதலிலேயே திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து விட்டார்கள். ஆனால் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் அவளது உயிர் மட்டும் வர முடியாமல் அங்கு தவித்தது. தான் தான் கணவன்… இருந்தும்கூட இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தன் மனையாளின்  அருகில் கூட செல்ல முடியாது என்ற நிலைமை அவனை தன்னை இழக்க செய்தது. எதற்காக அவள்

இப்பேர்பட்ட ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாள்?  ஒழுங்காக என்னுடன் நடந்த திருமணத்தை ஒப்புக் கொண்டு இங்கே வந்திருக்கலாமே…என்று அவன் மனதில் போராட்டம்.  ஒரு வேளை அவள் பிழைத்து வந்து விட்டால் ஊர் உலகத்திற்கு இவர்களுக்குள் இருக்கும் திருமணபந்தம் பற்றி தெரிவித்து விடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் சற்று நிதான படுத்தி கொண்டு அவனுக்கு அவள் ஏதோ ஒரு காரணம் காரியத்திற்காக இவ்வளவு பெரிய துன்பத்திற்குள் தன்னை நுழைத்து கொண்டுவிட்டாள்.அதை கெடுத்து விடக்கூடாது என்று சமாதானம் செய்து கொண்டான். 

ஏறத்தாழ மூன்று வருடங்கள் கழித்து ரங்கன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கராஜனை மனமுருகி பிரார்த்தனை செய்தான். எப்படியாவது  அவளை மீட்டு என்னிடம் கொடுத்துவிடு… என் உயிருக்கு மேலாக அவளை பார்த்துக்கொள்கிறேன் என்று அவன் உதடுகள் ஓயாமல் உச்சரித்தது.

சென்னை மருத்துவமனையில் வாயிலில் அருணாச்சலத்தின் கட்சியை சேர்ந்த தொண்டர் கூட்டம் நெட்டித் தள்ளியது. அங்கே ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று அருணாசலத்திற்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், இவள்  நல்லபடியாக பிழைத்து வரவேண்டும் என்று மனதிற்குள் உரு போட்டுக்கொண்டிருந்தார். அநியாயமாக இந்தப் பெண்ணையும் இழப்பதற்கு அவர் தயாராக இல்லை.

இதையெல்லாம் செய்தது குருதான் என்பது அவருக்கு நிச்சயம். அந்தப் பெண்ணையும் தன்னையும் ஒருசேர பழி வாங்குவதற்கு அவன் எடுத்திருக்கும் ஆயுதம் அந்த பெண்ணை மரணத்தின் வாயிலில் தள்ளுவது. அவன் கையில் கிடைத்தால் கொலை செய்ய வேண்டும் போன்ற வெறி வந்தது அவருக்கு. ஆனால் வெளியே பிள்ளையை காட்டிக் கொடுப்பதற்கு அவர் தயாராக இல்லை.

சாதுர்யாவுக்கு இருக்கும் ஆதரவிற்கு அவர் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவாள்.அதுமட்டுமல்ல அவளுக்கு அரசியலில் பெரிய வாயில் கதவுகளைத் திறந்து கொண்டு இருக்கிறது என்பது அருணாசலத்திற்கு புரிந்தது.  ஆனால் இந்தப்பெண் நல்லபடியாக வந்து சேர வேண்டுமே! என்ற கவலையும் அவருக்கு உண்டு. ஒரு அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் குடும்ப தலைவனாகவும் யோசித்துக் கொண்டிருக்கிறார் அருணாச்சலம்.

இந்த நிலைமையிலும் மாலதியால் ஸ்கந்தன் அம்மா…அம்மா… என்று தன் மகளைப் பற்றி புலம்புவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாருக்குடா யாரு அம்மா என்று கடிந்துகொண்டார். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ஸ்கந்தன் இல்லை. அவனது மனது முழுவதும் தன் அம்மா பிழைத்து விட வேண்டும் என்ற எண்ணமே நிலைபெற்றிருந்தது.

டீப் டிப்ரஷன் என்ற நிலையிலிருந்து அவன் இப்போதுதான் மீண்டு இருக்கிறான். ஏற்கனவே, உமா இறந்தபொழுது ஏற்பட்ட பாதிப்பை  சாதுர்யாதான் தன் அன்பை அவன் மீது முழுதாக கொடுத்து சரி செய்திருக்கிறாள். இப்போது மீண்டும் அவளுக்கே பிரச்சினை எனும்போது….

சிவனுக்கு தன் மகளை மாடிப்படியிலிருந்து உருட்டி ரத்தம் சிந்த சிந்த கீழே கிடந்த நிலையில் பார்த்த அந்த ஞாபகம். அவராலும் நடந்தவைகைகளில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

இதை எதிர்க்கட்சியினர் செய்த சதி தான் என்று அருணாச்சலத்தின் கட்சியினர் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படி சமாதானம் செய்வது என்பது அருணாசலத்திற்கு புரியவில்லை. அங்கங்கே பஸ்ஸை கொளுத்துவதும், பொது சொத்துக்களை சேதம் செய்வதுமாக  யுத்த பூமி போல காட்சியளித்தது. நடந்தவைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. அருணாசலத்திற்கு இவை எல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை. தொண்டர்களுக்கு ஊடகங்கள் மூலம் எத்தனையோ முறை அவர் வேண்டுகோள் விடுத்தும் அவர் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்