
அத்தியாயம் 17
பெங்களூரின் மையப்பகுதியில் இருந்த அந்த புகழ்பெற்ற மருத்துவமனையில் அதிரன் சொன்ன நபரை பார்க்க வந்தனர் கனி மற்றும் கீதன்.
வரவேற்பறையில் இருந்த செவிலியரிடம் கேட்க “இப்போ தான் சார் அட்மிட் பண்ணினாங்க.. அவங்க ஐடி கார்ட் வச்சு கண்டுபிடிக்க முடிஞ்சுது.. பெயர் அருண்.. இங்க தான் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யுறார் போல” என்றாள்.
“நர்ஸ் அவர் கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு?” கீதன் கேட்க
“ஐசியூ-ல தான் இருக்கிறார் சார்.. நீங்க அங்க டாக்டர் கிட்ட கேட்டுக்கலாம்” என்று சொல்ல மருத்துவரிடம் சென்றனர்.
அங்கு அருணுக்கு தலையில் பயங்கர அடி பட்டு தீவிரசிகிட்சை நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே நாள் முழுதும் சுற்றிய களைப்பில் கனி அயர்ந்து விட அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவன் ஜூஸ் வாங்கி கொடுத்தான்.
கொஞ்சம் குடித்தவள் “இப்போ என்னங்க பண்ணுறது? அதிரனுக்கு எப்படி அவரை தெரியுமாம்?” என்று கேட்க அப்போது தான் அதிக்கு இன்னும் சொல்லவில்லை என்ற நினைவு வந்தது.
அதிரனுக்கு அழைத்தவன் தாங்கள் மருத்துவமனை வந்திருப்பதை தெரிவித்து விட்டு “ஐசியூ-ல இருக்கார்டா.. இன்னும் டாக்டர் எதுவும் சொல்லல.. அவங்க வீட்ல இருந்து யாராச்சும் வருவாங்களா?” என்று கேட்டான்.
“அவர் பிரண்ட் என் யூ.ஜி கிளாஸ்மேட் கனி.. அப்படி தான் தெரியும்.. இன்னைக்கு விஷ்வாவுக்கு கால் பண்ணவும் அவன் சொன்னான்.. அங்க தான் வந்துட்டு இருக்கான்.. அதுவரை மேனேஜ் பண்ண முடியுமாடா?” என்று கேட்க கீதன் கனியை பார்த்தான். மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். ஆனால் ஒரு உயிரை தனியே விட்டு செல்லவும் மனமில்லை.
“நாங்க பார்த்துக்குறோம்டா.. நீ விஷ்வாகிட்ட சொல்லிடு” என்று அழைப்பை துண்டிக்க கனி அவனை யோசனையாக பார்த்தாள்.
அவன் அதிரன் சொன்னதை சொல்லவும் “எனக்கு ஒரு மாதிரி மயக்கமா வருதுங்க.. நான் வீட்டுக்கு போகவா?” என்று கேட்க அவள் அப்படி இருப்பதை பார்த்தவன் பதறி விட்டான்.
“என்னமா ஆச்சு? இரு டாக்டர்கிட்ட காட்டிடலாம்” என்று அழைத்து செல்லும் முன் அருணின் அறையில் இருந்து மருத்துவர் வெளியே வந்தார்.
கீதன் “டாக்டர் அருணுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று அருகில் வந்தான்.
“நீங்க?” டாக்டர் அவனை கேட்க தங்களை அவனின் நண்பன் என அறிமுக படுத்தி கொண்டவன் அருணின் உடல்நிலை பற்றி கேட்டான்.
“கொஞ்சம் கிரிட்டிகல் தான்.. பின் தலையில் பலமா அடிப்பட்டதால் நரம்பு மண்டலம் பாதிக்க கூட சான்ஸ் இருக்கு.. இப்போதைக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் ஒரு பிளட் க்ளாட் இருக்கு.. அதற்கு ஆபரேஷன் பண்ணனும்.. நீங்க சைன் பண்ணினா ஸ்டார்ட் பண்ணிடலாம்.. ஹோப் பார் தி பெஸ்ட்” என்று கூற அறுவை சிகிட்சைக்கு ஏற்பாடு செய்ய சொன்னான்.
அருணை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லவும் மனைவியை பரிசோதிக்க மருத்துவரிடம் சென்றான் கீதன். அவளை பரிசோதித்தவர் “கங்க்ராட்ஸ் மிசஸ் கீதன்.. நீங்க அம்மாவாக போறீங்க” என்று கூற இருவருக்கும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
கீதனின் உயிர் அவள் வயிற்றில் வளர்வதை உணரும் போதே அவளுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. “என்னங்க..” என்று அவனை பார்க்க கீதன் கண்கள் கலங்க அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
மருத்துவருக்கு சிறிது ஆச்சர்யம் தான். எப்போதும் அவரிடம் வருபவர்கள் விஷயம் சொன்னதும் சந்தோஷம் அடைவார்கள். முதன் முதலில் கண்ணீரை பார்க்கிறார் அவர்.
“மிஸ்டர் கீதன்.. எவ்ளோ பெரிய ஹேப்பி நியூஸ்.. பட் உங்க ரெண்டு பேர் கண்லேயும் அழுகை தான் இருக்கு” என்று கூற சிரித்தான் கீதன்.
“எஸ் டாக்டர்.. வி ஆர் ரெடி டு வெல்கம் அவர் பிரின்ஸ் ஆர் பிரின்சஸ்.. பட் அதை அனுபவிக்கும் ஆயுள் எனக்கு இல்லை” என்று கூறி கனியை பார்க்க அவளோ உதடுகளை கடித்து அழுகையை கட்டுபடுத்தி கொண்டிருந்தாள்.
மருத்துவர் கேள்வியாக பார்க்க அவரிடம் தன் உடல்நிலையை பகிர்ந்து கொள்ள அவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது. எந்தவொரு பெற்றோரும் ஆவலாக எதிர்நோக்கும் தருணம் இது. ஆனால் அவனின் நிலை அதுவல்லவே..
தன் பர்ஸில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தவர் “திஸ் இஸ் டாக்டர் கிரண்’ஸ் கார்ட்.. பெஸ்ட் நியூரோ சர்ஜன்.. அவரை போய் பார்த்தால் கண்டிப்பா உங்க பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்..” என்று கூறி கொடுக்க அதை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள் கனி. ஆனால் அதை உபயோகப்படுத்தும் நாள் வரவே வராது என்பதை சிறிது நேரம் கழித்து தான் அறிந்தார்கள்.
அவர்கள் வெளியில் வந்து காத்திருக்க அருணின் நண்பன் விஷ்வாவும் வந்து சேர்ந்தான். ஆபரேஷன் நடந்து கொண்டிருக்க கீதனின் அருகில் இருந்த கனியை பார்த்து அதிர்ந்தான் அவன்.
“கனி.. நீ இங்க தான் இருக்கியாம்மா? அருண் உன்னை எங்க எல்லாம் தேடினான் தெரியுமா?” என்று கூற கீதன் “வாட் நான்சன்ஸ்? யார் நீங்க?” என்று சீறினான்.
அதன் பிறகே சுற்றுப்புறம் நினைவு வர “அருண் ப்ரண்ட் விஷ்வா நான் தான்.. அவனுக்காக இவ்ளோ நேரம் காத்திருந்ததுக்கு தேங்க்ஸ்” என்றான்.
அவனையே கூர்ந்து பார்த்தான் கீதன். “கனியை உங்களுக்கு தெரியுமா?”
“எஸ்.. அருண் போட்டோ காட்டிருக்கான்.. அவன் உங்களை ரொம்ப டீப்பா லவ் பண்ணிட்டு இருக்கான்” என்று கூற “என்னது?” என்று அதிர்ந்து விழித்தாள் கனி.
அவளை விட அதிக கோபத்தில் இருந்தான் கீதன். “ஷி இஸ் மை வைப் விஷ்வா.. நீங்க வேற யாரோன்னு நினச்சு பேசிட்டு இருக்கீங்க..”
“ஒரு நிமிஷம்..” என்ற விஷ்வா கனிஷ்காவின் புகைப்படத்தை தன் கைபேசியில் காட்ட “ஹே இவங்க என்ன மாதிரியே இருக்காங்க” என்று வியந்தாள் கனிமொழி.
“எஸ்.. இவங்களை தான் அவனும் நானும் தேடிட்டு இருக்கோம்.. பட் உங்களை பார்த்ததும் கனின்னு நினைச்சிட்டேன்” என்று மன்னிப்பு கேட்க “அவங்க பேரும் கனியா? என் பெயர் கனிமொழி..” என்றாள்.
இதில் பார்த்து கொண்டிருந்த கீதனுக்கு தான் கடுப்பு தாங்கவில்லை. ஏற்கனவே காதலித்து திருமணம் செய்தவளை சரியாக கவனிக்க முடியாமல் ஒரு நோயை ஆண்டவன் கொடுத்ததிற்கு வருந்தி கொண்டிருக்கிறான். இப்போது இன்னொரு கனியா எனும் போது தன்னிடம் இருந்து அவளை யாரோ பிரித்து செல்வதாகவே தோன்றியது. தலையை பிடித்து கொண்டு இருக்க அவனின் செயலில் கனி தான் பதறி விட்டாள்.
“என்னங்க ஆச்சு? தலை வலிக்குதா? இன்னும் மாத்திரை போடலயே” என்று தான் கைப்பையில் இருந்து மாத்திரையையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுக்க வாங்கி மாத்திரையை விழுங்கியவன் “வீட்டுக்கு போகலாமா கனி?” என்று கேட்டான்.
அவனின் மனநிலை அவளுக்கும் புரிந்தது. அவள் செல்லலாம் என்று நினைக்கும் நேரம் மருத்துவர் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தார்.
“ஆபரேஷன் சக்ஸஸ்.. பட் இனிமேல் அவருக்கு எதுவும் அதிர்ச்சியாகுற மாதிரியோ டென்சன் ஆகுற மாதிரியோ சூழ்நிலை இல்லாமல் இருந்தால் நல்லது.. ரொம்ப யோசிச்சு டென்ஷன் ஆகுறது அவரோட உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று கூறி விட்டு செல்ல விஷ்வா தான் பேச்சிழந்து நின்றான். கனிஷ்கா மீதான அவனின் காதலும் தேடலும் அவன் அறிந்த ஒன்றே. அவளை எப்படி தேடாமல் இருப்பான்? அவள் கிடைக்கவில்லை என்றால் அவனே உயிரை விட்டு விடுவான் என்று நினைத்து கொண்டான்.
கனி விஷ்வாவிடம் சொல்லி விட்டு கணவனுடன் வீடு வந்தாள். கீதனுக்கு எதுவோ கெட்டது நடக்க போவது போன்றே மனதில் உறுத்தி கொண்டு இருந்தது. கனி அவனுக்கு தோசை வார்த்து கொண்டு வர அவளையும் அமர்த்தி உண்ண வைத்தான் அவன்.
“என்னை விட நீ தான் நிறைய சாப்பிடணும் கனி.. எப்பவும் சந்தோசமா இருக்கணும்.. உன் நிம்மதி தான் நம்ம குழந்தையோட வளர்ச்சி நல்லா இருக்க உதவும்”
“அப்படியே இருந்துட்டாலும்.. பாருங்க இப்பவே அவ சேட்டைய ஆரம்பிப்பா..” அவள் அலுத்து கொள்ள சிரித்தான் கீதன்.
“பொண்ணுன்னு முடிவே பண்ணிட்டியா?”
“உங்களுக்கு பொண்ணு தானே பிடிக்கும்.. சோ பொண்ணு தான்”
“அதுவரைக்கும் நான் உயிரோட இருப்பேனா கனி? என் குழந்தையை என் கையில் தான் முதன் முதலில் வாங்கணும்.. அவளோட ஒவ்வொரு அசைவிலும் நான் பூரிப்படையணும்.. கடவுள் அவ்ளோ ஆயுளை எனக்கு கொடுப்பாரா?” என்று கேட்க அவனை தன்னோடு அணைத்து கொண்டாள் கனி.
“எப்பவும் பாசிட்டிவா திங்க் பண்ணினா அது தான் நடக்கும்.. நீங்க கண்டிப்பா எங்க கூட தான் இருப்பீங்க” என்றவளுக்கு இன்னும் சிறிது நேரத்திற்கு கூட அந்த வார்த்தை நிலைக்க போவது இல்லை என்பது தெரிந்திருக்கவில்லை.
தன் அறையில் சித்தார்த் எடுத்து கொடுத்த அனைத்து உடைகளையும் கீழே பரப்பி வைத்திருந்தாள் கனிஷ்கா. ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று சித்தார்த் ரெடியாக சொல்லியிருந்ததால் எந்த உடையை அணிவது என்ற குழப்பத்தில் பார்த்து கொண்டிருந்தவள் பின் வந்து நின்றான் சித்தார்த்.
“கியூட்டி என்ன பண்ணி வச்சிருக்க? ஏதாச்சும் ஷாப் ஆரம்பிக்க போறியா?”
“சித்து இதுல என்ன ட்ரெஸ் போடுறதுன்னே தெரியல..” என்று சிணுங்கினாள்.
“அது கொஞ்சம் பெரிய லெவல் பார்ட்டி கியூட்டி.. நீ ஓவர் குடும்ப பொண்ணை போல போய் நின்னா சிரிப்பாங்க.. அதனால்..” என்றவன் கண்களால் அவ்விடத்தை அலசி ஒரு துணியை கையில் எடுத்தான்.
“திஸ் இஸ் ஓகே.. போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று கூற அவன் கொடுத்த ஆடையை உயர்த்தி பார்த்தாள். ஆடை அழகு தான். ஆனால் முன்புறம் கொஞ்சம் கீழிறங்கி இருந்தது.
“சித்து..” அவள் தயங்க “நான் சொல்றத பண்ணு..” என்றான்.
அவனிடம் மறுத்து பேச முடியாமல் உடை மாற்றும் அறைக்கு சென்றாள் அவள். அந்த உடை அவளுக்கு இன்னும் அழகை தான் கூட்டியது. பின்னால் முதுகு பகுதிக்கும் கழுத்துக்கும் இடையில் வலை மாதிரி பின்னல் இருந்தது. அதை இழுத்து கட்ட முயற்சித்தவள் முடியாமல் போகவே “சித்து…” என்று அழைத்தாள்.
“இன்னுமா ரெடி ஆகலை” என்று உள்ளே வந்த சித்தார்த்துக்கு அவள் நின்ற நிலை புன்னகையை வரவைத்தது.
“கியூட்டி எப்பும் என்னை தூண்டிகிட்டே இருக்க” என்று அவளிடம் இருந்து வாங்கி பின்னால் கட்டி விட கை அவளின் கழுத்து பகுதியை விட்டு வரவே மாட்டேன் என்று அடம்பிடித்தது.
இங்கு வந்ததில் இருந்து அவள் எந்த மேக்கப் பொருட்களும் உபயோகித்தது இல்லை. இன்று பார்ட்டிக்காக என அவள் போட்டிருந்த சிறிது மேக்கப் மற்றும் சென்ட் வாசனை அவளை தன் புறமாக திருப்பியது. அவனின் செயலில் சிவந்து போயிருந்த கன்னங்களை பார்த்தவனுக்கு இப்போதே அதை கடித்து சாப்பிட்டு விட மாட்டோமா என்று தோன்றியது. உதட்டு சாயம் கொஞ்சம் அதிகமாக இருக்க அதை டிஸ்யூவால் துடைத்தவன் “உன்னை இப்படியே விட்டுட்டு போக மனசே இல்ல கியூட்டிபை.. பட் ராத்திரின்னு ஒன்னு இருக்கறதால இப்போ கிளம்பலாம்” என்றவன் பார்ட்டிக்கு சென்றான்.

