Loading

அத்தியாயம் – 4

செவ்வந்தி என்ன கேட்டாலும் வெட்கப்பட்டுக் கொண்டே தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினால், சட்டென்று அவளால் எப்படி அது முடியும், வெட்கப்படுவதும் உணர்வுகளின் வெளிப்பாடல்லவா? அதனால் தான் எனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியாது என்று நித்யா கூற, ரிஷியோ அவள் எதிர்பார்க்கா விதமாய் கன்னத்தில் பளிச்சென்று முத்தம் வைத்து விட்டான்,,…

அவனது முத்தத்தினால் அவள் வெட்கமெல்லாம் கொள்ளவில்லை, அதிர்ந்து போய் தான் நின்றாள், பின்ன அவளே ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாள், இப்படியெல்லாம் சட்டென்று முத்தம் வைத்தால் அதிர்ந்து தானே விழிப்பாள், அதிர்ந்த விழிகளுடன் சில நிமிடங்கள் நின்றவளுக்கு அவன் முத்தம் தந்த இடத்தில் வேறு குறுகுறுத்துக் கொண்டே இருக்க, அவ்விடத்தை கரத்தினால் தடவி பார்த்தாள், மனம் ஒரு மாதிரி என்னவோ செய்தது, முதல் முறை ஒரு ஆடவனிடமிருந்து முத்தத்தை பெற்றிருக்கிறாள், உடம்பில் என்னவோ செய்தது, ஏதோ ஒரு விதமான மாற்றத்தை உணர்ந்தாள், ஆனால் என்ன மாதிரியான மாற்றம் என்பது தான் அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை….

நித்யாவை கண்ட செவ்வந்தி முதலில் கவனித்தது அவளது குழம்பிய முகத்தை தான், அதே சமயம் இவ்வளவு காலையில் நித்யாவை எதிர்பார்க்கவுமில்லை அவர், ஆனாலும் அதை பற்றி அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை, பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்து, அவள் மாமனார் மாமியாரை கும்பிட்டு கொள்ள சொன்னார், நேற்று முதல் முதலாக வீட்டிற்குள் நுழைந்த போதும் முதலில் விளக்கேற்றி விட்டு தான் மற்ற சடங்கை செய்ய வைத்தார், அப்போதே அவள் மாமனார் மாமியாரை போட்டோவில் கவனித்தாள், மாமியாரின் முகத்தில் வெகுளி தனத்தை காண முடிந்தது, மாமனார் அப்படியே அவள் கணவனை உரித்து வைத்திருந்தார்….

“ரிஷி எங்கடா கண்ணு எழுந்துட்டானா?” கனிவுடன் கேட்டபடியே நித்யாவையும் அழைத்து கொண்டு முற்றத்திற்கு வந்தார் செவ்வந்தி,…

“ஆமா பாட்டி, குளிக்க போயிருக்காரு போல” அவளது இந்த பதிலிலேயே இன்னும் இருவரும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை என்பதை சாமர்த்தியமாக புரிந்து கொண்டார், ஒரு நாள் தானே ஆகிருக்கு அவர்கள் புரிந்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்க நேரம் எடுக்கும் என்று மனதை சமாதானபடுத்திக் கொண்டார்,…

நித்யாவிற்கு தேநீர் எடுத்து வந்து கொடுத்தார் அவ்வீட்டில் வேலை செய்பவரான சாரதா, அவ்வீட்டில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர் வேலை செய்வதற்க்கு மட்டுமே,…

சாரதாவும் மல்லிகாவும் சமையலை கவனித்து கொள்வார்கள், தங்கமயிலும் முத்துராணியும் வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை செய்வார்கள், செந்தில் என்பவர் தோட்டத்தை கவனித்துக் கொண்டு கார் ஓட்டுனராகவும் பணிபுரிகிறார்,…..

செவ்வந்தியும் தர்மதுரையும் வயதானவர்கள் என்பதால் அவர்களை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை ரிஷிமித்ரன், அதனால் தான் இத்தனை வேலைகாரர்களை வைத்திருக்கிறான், செவ்வந்தி மட்டும் ஒரு நேரத்தில் பேரனுக்கு பிடித்தது போல் சமைத்து கொடுப்பார் அவ்வளவே அவர் செய்யும் வேலை,….

“என்ன? பாட்டியும் பேத்தியும் ஒன்னா இருக்க மாதிரி இருக்கு, அதுவும் இவ்வளவு காலையிலயே” கொஞ்சம் நடையில் தள்ளாடத்துடன் வந்தமர்ந்தார் தர்மதுரை….

நித்யா தர்மதுரையிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, செவ்வந்தியிடம் கூட நேற்று தான் பேசி பழக ஆரம்பித்திருந்தாள், அதனால் அவள் அவர் வந்ததும் அமைதியாகிவிட,… “என்ன கண்ணு, ஏன் உன் பாட்டி கிட்ட மட்டும் தான் பேசுவியா? இந்த தாத்தா கிட்ட பேசமாட்டியா?” என்று புன்னகையுடன் அவர் கேட்க….

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல தா.. தாத்தா” அவரது இயல்பான உரையாடலும் அவர்  முகத்தில் தெரிந்த புன்னகையும் அவளது தயக்கத்தை கொஞ்சம் போக்கிருந்தது…

“உன் பாட்டி சொன்னா, நானும் என் பேத்தியும் ராசியாகிட்டோம்னு, நேத்து உன்கிட்ட பேச எனக்கு நேரம் கிடைகலடா கண்ணு, ஒன்னும் பிரட்சனை இல்ல, இன்னைக்கு நாம பேசி ராசியாகிக்கலாம், என்ன சொல்ற” அவர் புன்னகை மாறாமல் கேட்க,… அவரின் புன்னகை அவளையும் தொற்றிக் கொள்ள,… “சரிங்க தாத்தா”  என்றாள் சந்தோஷமாக,…

அடுத்த வந்த சில நிமிடங்கள் தர்மதுரையுடன் தான் நித்யாவிற்கு நேரம் கழிந்தது, அவருடைய கலகலப்பான பேச்சில் கவரப்பட்டு செவ்வந்தியை விடவும் இவரிடம் நன்கு ஒன்றி போனாள், அந்நேரம் ரிஷியும் வந்து விட, ரிஷியை கண்ட நித்யா, கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டாள்,….

அவள் தாத்தாவுடன் சிரித்து பேசி உரையாடிய உரையாடல்கள் எல்லாம் மேல் அறை வரை கேட்டது, இப்போது, தான் வந்ததும் உதட்டை கம் போட்டது போல் மூடிக் கொண்ட அவளது செயலை கண்டவன், அவளை உறுத்து விழித்தான், அவன் தன்னை தான் பார்க்கிறான் என்பதை அறிந்ததுமே அவள் ஒரு மாதிரி நெளிய ஆரம்பித்தாள், பேச்சும் முற்றிலுமாய் தடைபட்டு போயிருந்தது,…

“என்ன கண்ணு, புருஷனை பார்த்ததும் வாயை மூடிக்கிட்ட, பயத்திலயா? இல்ல மரியாதையிலையா?” நகைத்தபடி கேட்டார் தர்மதுரை,…..

அவளால் பதில் சொல்ல இயலவில்லை, அலைபாயும் விழிகளுடன் பார்வையை தாழ்த்தியபடி அமர்ந்திருந்தாள்,..

“என்னடா,… என் பேத்தியை ஏதாவது சொல்லி பயமுறுத்தி வச்சிருக்கியா என்ன? இவ்வளவு நேரம் அழகா தாத்தா தாத்தானு பேசிக்கிட்டு இருந்த பொண்ணு, நீ வந்தவுடனையே கப்சிப்னு ஆகிட்டா” பேரனை செல்லமாக மிரட்டினார் தர்மதுரை,….

“இதை ஏன் தாத்தா என்கிட்ட கேட்கிறீங்க, உங்க பேத்தி கிட்டயே நேரடியா கேட்டுடுங்க, நான் மிரட்டியா வச்சிருக்கேன்னு” அவளை கூர்மையாய் நோக்கி வினவவும்,… இருவரையும் மாறி மாறி பார்த்த தர்மதுரை.. “நீ எதுவா இருந்தாலும் இந்த தாத்தா கிட்ட சொல்லு கண்ணு, நான் எப்போவும் உனக்கு தான் சப்போர்ட்” என்றார்…

“வந்த ஒரே நாளிலேயே என் தாத்தாவை உன் பக்கம் இழுத்துகிட்ட ம்ம்ம்” மிரட்டல் பார்வையில் அவன் வினவ,… “இல்ல இல்ல” என்று அவசரமாய் மறுத்தவள்.. “என்னை அவர் பயமுறுத்தலாம் இல்ல தாத்தா” என்றாள் தர்மதுரையை நோக்கி….

“சரி சரி உங்க பேச்செல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க, டிபன் ரெடியாருக்கு, வாங்க சாப்பிடலாம்” என்று கூறிய செவ்வந்தி,… “நித்யா கண்ணு வாடா” என்று அவளை தன் கூடவே அழைத்து சென்றார்,….

சமையலறைக்கு பக்கத்திலேயே இருந்த டைனிங் டேபிளில் ரிஷி, தர்மா கைகழுவிவிட்டு வந்தமர,… “கண்ணு நீ உன் புருஷனுக்கு என்ன வேணும்னு கேட்டு பரிமாறு, நான் என் புருஷனை கவனிச்சிக்கிறேன்” என்று அவளை ரிஷியின் பக்கம் தள்ளி விட்டு கணவனின் பக்கத்தில் வந்து அமர்ந்து விட்டார் செவ்வந்தி,….

ரிஷிக்கு தட்டை எடுத்து வைத்தவள்,… “என்ன பரிமாறட்டும்” என்றாள், அங்கிருந்த இட்லி, தோசை, பொங்கல், பூரி என்றிருந்த ஐட்டங்களை குறிப்பிட்டு,…

“புருஷனுக்கு என்ன பிடிக்கும்னு கூட தெரியலையா? நீ எல்லாம் என்னடி பொண்டாட்டி” அவன் மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் தான் வினவினான்,…

அவளும்.. “நீங்க எனக்கு எத்தனை வருஷமா புருஷனா இருக்கீங்க, நேத்து தானே வந்திருக்கேன், அப்புறம் என்ன?” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு,…

‘என்ன அதிசயமா எதிர்த்துலாம் பேசுரா’ என்று ஆச்சரியப்பட்டவன்,… “சரி இட்லி வை, சாம்பார் மட்டும் போதும்” என்றான், அவளும் அவன் கூறியதை பரிமாறிவிட்டு நிற்க,… “என்ன? நீ சாப்பிடுற ஐடியா இல்லயா? ஊட்டிவிடனுமா?” என்றான்,..

“ஐயோ இல்லைங்க, நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு சாப்பிடலாமேன்னு” அவள் இழுத்து கூற,… “இங்க அந்த மாதிரி ரூல்ஸ் எல்லாம் இல்லை, உட்காரு” என்றான்,…..

அவள் தயக்கமாய் பாட்டியையும் தாத்தாவையும் பார்க்க,… “அங்க என்ன பார்க்கிற, பாட்டி எப்போதும் எங்க கூட தான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க, புருஷன் சாப்பிட்ட பிறகு தான் பொண்டாட்டி சாப்பிடனுங்கிற கட்டுப்பாடுலாம் இந்த வீட்ல கிடையாது, நமக்கு பசிச்சா சாப்பிட்டுக்கலாம், அவங்க சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடணும், இவங்க வந்த பிறகு தான் சாப்பிடணும் என்ற ரூல்ஸ் எல்லாம் கிடையாது, புரியுதா?” அவன் கூற, அவளும் புரிந்ததாய் தலையசைத்தாள்….

அமர்ந்தவள்,… தட்டை எடுத்து வைத்தாளே தவிர, உணவை பரிமாறி சாப்பிடவில்லை, ஒரு வித தயக்கத்துடனே அமர்ந்திருக்க, அதை கண்டவனோ,… “என்ன உனக்கு நான் பரிமாறனுமா?” என்றான்,…

“இல்ல இல்ல ” என்று அவள் அவசரமாக தலையசைக்க,… “என்ன இல்ல, அப்போ நான் உனக்கு பரிமாறினா நீ சாப்பிட மாட்டியா?” என்றான்,..

அவள் பாவமாக மலங்க மலங்க விழிக்க, அவனோ அவளுக்கு பிடித்த பூரியை எடுத்து பரிமாறினான்,…”நீ எனக்கு பரிமாறும் போது, நானும் உனக்கு பரிமாறலாம் ஒன்னும் தப்பில்ல ம்ம்ம்” அவன் கூறியதை கேட்டு அவள் தலையும் தன்னிச்சையாய் அசைந்தது….

செவ்வந்தியும் தர்மாவும் சின்னவர்வளை கண்டுகொள்ளவில்லை, தாங்கள் ஒதுங்கி இருந்தால் தான் அவர்கள் பேசி பழகுவார்கள் என்று அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு உணவருந்தி கொண்டிருந்தனர்,…

நித்யாவிற்கு தான் ரிஷியின் ஒவ்வொரு செயலும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது, எந்த கணவன் மனைவிக்கு இவ்வாறு பரிமாறுவான்? எந்த கணவன் மனைவியை உடன் அமர வைத்துக் கொண்டு உணவுண்பான், அவளுக்கு உலகிலுள்ள கணவன்மார்களை பற்றி தெரியாமல் போனாலும், படம், நாடகத்தில் பார்த்த வரைக்கும் கூட கணவன் உண்ட பிறகு தான் மனைவி உணவுன்ன அமர்வாள், அவள் தோழிமார்கள் கூட கூறியிருக்கார்கள் ஒரு முறை இதை பற்றி, இப்படி இருக்கையில் இன்று கணவனே தனக்கு பரிமாறியது அவளுக்கு ஒரு மாதிரி பிடித்து தான் போனது, அத்தருணம் அவன் முத்தமிட்டதும் நினைவு வந்தது, அவன் முத்தமிட்ட போது சிவக்காத முகம் இப்போது சிவந்தது, அதை செவ்வந்தி கவனித்து விட்டார், மனம் நிறைந்து போனது அவருக்கு,…

“பாட்டி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” சாப்பிட்டு முடித்த கையோடு வெளியே போக முனைந்த பேரனை முறைத்தவர்… “எங்க போற? வேலைக்கு தான் லீவ் போட்டிருகல்ல, அப்புறம் எங்க போற” என்றார் கண்டிப்பான முகபாவனையுடன்…

“ஒரு சின்ன வேலை பாட்டி, முடிச்சிட்டு ஒன்னார்ல வந்துடுவேன்” என்றான்,

அவர் சம்மதிக்கவில்லை, “நீ வெளியே எங்கேயும் போக கூடாது, போ போயி என் பேத்திக்கு வீட்டை சுத்தி காட்டு, அப்போ தான் அவளுக்கும் இந்த வீட்ல உள்ள இடத்தை பற்றியெல்லாம் தெரிய வரும்” என்றார்….

‘இது கூட நல்லா தான் இருக்கு’ என நினைத்தவன்,… “சரி பாட்டி, உங்க பேச்சை நான் தட்டுவேனா, நித்து வா, நான் இந்த மாளிகையை உனக்கு சுத்தி காட்டுறேன்” என்று அவள் அனுமதி கேளாமல் அவள் கரம் பற்றி இழுத்துக் கொண்டு சென்று விட்டான்,…

“எவ்ளோ பெரிய அதிசயம் நடந்திருக்கு பார்த்தியா செவ்வந்தி, உன் பேரன் உன் சொல் கேட்டு தன்னோட வேலையை ஒதுக்கி வச்சுட்டு பொண்டாட்டி கையை பிடிச்சிட்டு போயிட்டான் வீட்டை சுத்தி காட்ட” என்று தர்மா நகைக்க,…. “எப்படியோ ரெண்டு பேரும் சந்தோஷமாக இருந்தா போதும்ங்க, என் கொள்ளு பேரனை பார்த்துட்டேன்னா மனசு நிறைஞ்சு போயிடும்” என்றார் பூரிப்பாக,….

இங்கு நித்யாவை அழைத்து வந்த ரிஷி, வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்கிற பெயரில் அவளை சுற்றிக் கொண்டிருந்தான், “அது என்ன ரூம், இந்த ரூம் கொஞ்சம் பெருசா இருக்குல, இந்த ஹால்ல இருக்க திங்ஸ் எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு, ஹயோ இங்கிருந்து பார்த்தா வெளியே உள்ள கார்டன் நல்லா தெரியுது” என்று அவ்வீட்டிலுள்ள ஒவ்வொரு இடத்தையும் பார்த்து அசந்து போய் அவள் வார்த்தையால் வெளிக்காட்டி கொண்டிருக்க, அவன் எங்கே அவளது வார்த்தைகளை கவனித்தான், அவளை தான் இன்ச் இன்ச்சாக அளந்து கொண்டிருந்தான், அவள் முகத்தில் தெரிந்த வியப்பு, ஆச்சரியம், சந்தோஷம் இவை அனைத்தும் அவள் விழிகளிலும் பிரதிபலிக்க, அதையும் ரசித்தான் இதழில் பூத்த புன்னகையுடன்,….

“இவ்ளோ பெரிய வீட்ல நீங்க, தாத்தா, பாட்டி மூணு பேரும் தான் இருக்கீங்களா, ரொம்ப போர் அடிக்கும்ல” என்று கேட்டவள், அவனிடமிருந்து பதில் வராமல் போனதில் அப்போது தான் அவன் முகம் பக்கம் திரும்பினாள், அவன் பார்வை மொத்தமும் தன் மீது நிலை குத்தி இருப்பதை பார்த்து கொஞ்சம் தடுமாறி போனவள்,… “என்ன? ஏன் அப்படி பார்க்கிறீங்க ” என்றாள் வெளிவராத குரலில்,…

“தெரியலையே, ஆனா உன்னை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு நித்து” அவனது குழைவான கவரும் குரலும், அவனது மயக்கும் பார்வையும் அவள் மனதை வெகுவாய் பாதிக்க, தலை தாழ்த்தியபடி நின்றாள் இதழில் சிறு புன்னகையுடன், அத்தருணம் அவள் மனதில் அவனிடம் கூற வேண்டிய விஷயங்கள் அனைத்தும் மறந்து போனது, கணவனின் ஈர்க்கும் பார்வையிலும் வார்த்தையிலும் மனம் பனியாய் உருகி போனது,…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்