Loading

மெல்லினம் 29:

சின்னாளப்பட்டியில் சித்திரை திருவிழா ஆரம்பித்திருந்தது. நேற்று தான் கொடி ஏற்றியிருந்தனர்.மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கும் இத்திருவிழா.

முதல் நாள்‌ மீனாட்சி சுந்தரர் திருக்கல்யாணம் தொடங்கி, அடுத்து அழகாய் ஆற்றில் இறங்குதல்,சாமி ஊர்வலம், வள்ளி திருமணம் என ஐந்து நாட்களும் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் கலைகட்டும்.

மதுரைக்கு அடுத்து, சின்னாளப்பட்டியில் கொண்டாடும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது.

தந்தை கோபாலசுவாமியின் நச்சரிப்பு தாங்காது, கதிரழகன் நேற்றே வந்து விட்டிருந்தான். கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும் அரும்பு மீசை.

மற்ற அனைவரும் இன்னும் இரண்டு நாட்கள் சென்று வருவதாக தகவல். கோபலசுவாமியின்‌ தாய், தந்தை, அதாவது கதிரின்‌ தாத்தா, பாட்டி இவ்வூரில் தான் இருக்கின்றனர்.

“அப்பத்தா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்??” என கதிரின் குரல் கடுப்பாக வந்தது.

பின்னே கோவிலில் நண்பர்களுடன் பைங்கிளிகளை, பார்வையிட்டு கொண்டிருந்தவனை, வம்படியாக கடைதெருவிற்கு அழைத்து வந்திருந்தார் கோதை.

“அடேய் இருடா! அவசரத்துக்கு பொறந்தவனே, சாமிக்கு அரைக்கிற மஞ்சள் சொத்தை இல்லாமா வாங்க வேண்டாமா”?? என கோதை அவனை கடிய,

“ம்ம்ம்ம் நீ மட்டும் வர வேண்டியது தானா, நான்‌ எதுக்கு உனக்கு துணைக்கு? நீ என்ன பதின்வயது பருவ மங்கையா??பல்லு போன கிழவி தானா??” என கதிர் நமட்டு சிரிப்புடன் கூற,

“யாராப் பாத்துடா பல்லு போன கிழவின்னு சொன்ன? இப்பவும் என் பல்லு எல்லாம் தேக்கு மரம் மாதிரி இருக்கும், உங்க அப்புச்சிக்கு தான் பால்கோவா திங்க கூட பல்லு இல்லை” என பதிலுக்கு பேசியவாறே வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி முடித்து வீட்டிற்கு திரும்பினர்.

“எதுக்கு அப்பத்தா இவ்வளவு மஞ்சள் கிழங்கு எல்லாத்தையும் அரைச்சிடுவியா நீ??”

“அட மடப்பயலே, சாமிக்கு கொடுக்கிற மஞ்சள் கணக்கு பாக்கலாமா? ஒவ்வொரு ஏரியாவுல இருந்தும் இவ்வளவு மஞ்சள்னு அரைச்சி கொடுப்பாங்க. அதை தான் இந்த அஞ்சு நாளும் சாமிக்கு சாத்துவாங்க. நம்ம ஏரியாவேக்கு உங்க அப்புச்சி தான பூசாரி, அதுவும் இல்லாம இதை நான் அரைக்கப்போறது இல்லை”

“நீ இல்லையா அப்போ யாரு அரைப்பா??”

“அது எதுக்குடா உனக்கு? போ, போய் இந்த பொருளை எல்லாம் வச்சிட்டு நீ கோவிலுக்கு கெளம்பு” என அவர் விரட்ட, முணங்கியவாறே சென்றான் கதிர்.

ஊரின் மத்தியில் இருந்த காலி இடத்தில் தான் சாமியை வைத்திருந்தனர்.‌நேற்று தான் மீனாட்சி சுந்தரர் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

நாளை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.வெள்ளி ரதத்தில் அழகரை அழங்கரித்து வைத்திருந்தனர்.

தனது நண்பர்கள் இருக்கும் இடம் தேடி கதிர் செல்ல,

“இந்தா வந்துட்டான் பாரு கதிரு” என ரமேஷ் இவனை கண்டு கூற,

“எங்கடா போனா? அங்க தோப்புக்கு போய் தண்ணி பாய்ச்சனும், அழகர் இறங்கிறதுக்கு. உன்னையும் காணோம் இந்த சதீஷ் பயலையும் காணோம்” என விஷால் கேட்க,

“அப்பத்தா கூட கடைவீதி வரைக்கும் போய்ருந்தேன்டா. சதீஷ் இன்னும் வரலையா??”

“சதீஷ் கடைதெருவுக்கு போய்ருகான்டா, இன்னைக்கு நைட்டு மஞ்சள் அரைக்கணும்ல??”

“சதீஷ் தங்கச்சி தான், போனவருஷமே பெரிய மனுஷி ஆகிட்டாளேடா, அப்பறம் எதுக்கு இவன் மஞ்சள் வாங்க போய்ருக்கான்”?? என‌ ரமேஷ் இழுக்க,

“அது அவன் தங்கச்சிக்கு இல்லை. ஊருல இருந்து அவன் அத்தை பொண்ணு வந்துருக்கு அந்த புள்ளைக்கு தான்…”

“டேய், டேய் என்னங்கடா பேசுறீங்க? எனக்கு புரியவே இல்லை, அப்பத்தாவும் இப்போ மஞ்சள் தான் வாங்குனாங்க. யார் அரைப்பாங்கன்னு கேட்டதுக்கு உன் வேலையா பாருன்னு சொல்லிட்டாங்க!!?என்னடா மஞ்சள்? யாரு அரைப்பா விளங்குற மாதிரி சொல்லுங்கடா” என கதிர் விவரம் கேட்க,

“அதுவந்து மச்சி, சாமிக்கு சாத்துற‌ மஞ்சளை பெரிய பிள்ளை ஆகாம இருக்குறவங்களை வச்சு தான் அரைப்பாங்க. அப்புடி அரைக்கிறவங்க அடுத்த வருஷமே பெரிய பொண்ணாகிடுவாங்க. இதுக்கு போட்டி போட்டே எல்லா வயசுக்கு வராத பொம்பளை பிள்ளைகளையும் அவங்க அம்மாக்கள் அனுப்பி வைப்பாங்க.

நாளைக்கு விடியற்காலையில் நாலு மணிக்கெல்லாம், எல்லாரும் மஞ்சள் அரைக்க ஆரம்பிச்சுடுவாங்க??” என் விஷால் கூற,

“டேய் அவுங்க அப்புச்சி தான்டா பூசாரி, நம்ம ஏரியாவுக்கு நாளைக்கு அவுங்க வீட்டுல தான் பிள்ளைங்க போவாங்க மஞ்சள் அரைக்க” என ரவி எடுத்து கொடுக்க,

“ஆமால்ல, மறந்தே போய்ட்டேன் பாரு. நாளைக்கு உங்க வீட்டுக்கு தான்டா எல்லாரும் வருவாங்க, அது தெரியாம நானும் உனக்கு விளக்கம் கொடுக்குறேன் பாரு”

“அப்பறம் மச்சி நாளைக்கு எல்லாம்‌ நிறைய பைங்கிளிகள் வருவாங்க, ஒரே சைட்டு தான் ஜாலி தான்” என அவர்களின் வயதிற்கே உரிய பேச்சுடன் கதிரை அவர்கள் வம்பிழுக்க,

“டேய் ஏன்டா நீங்க வேற” என கதிர் சற்றே நெளிய,

“சரி, சரி வாங்கடா போகலாம், தோப்புக்கு.” என விஷால் அனைவரையும் அழைக்க கிளம்பி விட்டனர்.

போகும் வழியில் ரமேஷ்,” சதீஷோட அத்தை பொண்ணு, யாருடா அது புதுசா? நம்ம துரை, அவன் மாமா பொண்ணு மல்லிகாக்கு தான ரூட் போட்டுட்டு இருக்கான்” என,

“ஆமா, ஆமா இப்பவும் மல்லிகா தான் அதுல மாற்றம் இல்லை. இந்த பிள்ளை அவுங்க அம்மாச்சி வழி சொந்தம் போல, பேரு கூட ஏதோ சொன்னானே ஹாங் ஞாபகம் வந்துடுச்சு “தேன்முல்லை” ” என விஷால் கூற,

“ஓ…ஓஹோ….சரி விடு, அது எதுக்கு நமக்கு. அப்பறம் ரமேஷீ, அந்த மூக்குறிஞ்சி சந்தியாவ இன்னமும் நீ பாலோ பண்ணுறியாடா பாடி சோடா” என ரவி அவனை வார,

“அந்த மூக்குறிஞ்சி போன வாரமா டீக்கடை மணிக்கு ஓகே சொல்லாட்டாளாம்டா, பாவி பய வடையை கொடுத்தே கரக்ட் பண்ணிட்டான்.

இப்போ அந்த ஓட்ட வாய், வித்யாவ தான் சீரியஸ்ஸா பாலோவ் பண்ணிட்டு இருக்கேன்” என ரமேஷ் தன் ஆதங்கத்தை கூற என அவர்களுக்குள் பதின்வயது ரகசிய பேச்சுக்கள் ஓடி கொண்டிருக்க,

‘பாருடா, இப்புடி எல்லாம் பேரு வைக்கிறாங்களா அழகா இருக்கே’ என நினைத்த கதிரின் மனம் மட்டும் ‘தேன்முல்லை’ என்ற பெயரிலேயே சிக்கி தவித்தது.

விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில், துயில் கொண்டிருந்தவனின் துக்கம்‌ மெல்ல மெல்ல பேச்சு குரல்களால் கலைய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் ஏதோ மெல்லிய முனகலாக கேட்ட பேச்சுகள், போக போக அதிகமாக அதனுடன் சிட்டுகளின் சிரிப்பு சத்தமும் கேட்க, பட்டென தூக்கம் பறந்தோடியது கதிருக்கு.

மெல்லியதாக கேட்ட பேச்சுகள், இப்போது தெள்ள தெளிவாக கேட்க ஆரம்பித்தது. கதிர் படுத்திருந்த அறையில் இருந்த ஜன்னலின் பின்னே இருந்து தான், இந்த பேச்சுகள் எல்லாம் வந்து கொண்டிருந்தன.

பின்கட்டில் தான் திண்ணை அமைத்து அதில் அம்மிகளை வைத்திருந்தனர். திண்னையில் அமைந்திருந்த ஜன்னல் தான் கதிரின் அறை.

“ஹேய், தேன்முல்லை அடுத்து நீ தான்” என்ற பேச்சு குரல் வெளியே கேட்க,

“தேன்முல்லை” என்ற பெயரில் கதிரின் மனம் சட்டென பரபரப்பானது. அந்த பெயருக்கு சொந்தகாரியை காண வேண்டும் என அவன் மனம் ஆவல் கொள்ள, விடிவிளக்கை எறிய விட்டு மெல்ல கட்டிலில் தவழ்ந்து ஜன்னலை அடைந்தவன் நேற்று அவனின் அப்பத்தா,

“கதிரு நாளைக்கு எல்லாம் பிள்ளைங்க வருவாளுங்க, நீ ஏதும் இந்த ஜன்னல்ல தொறந்துடாத” கூறிய எச்சரிக்கையையும் மீறி, சத்தம் எழுப்பாமல் மெதுவாக அவன் கதவினை திறக்க, அவன் கண்டது..!

மஞ்சளில் கரும்பச்சை பார்டர் வைத்த பட்டு பாவாடை அணிந்து, தலைக்கு குளித்த முடியை இருபுறமும் எடுத்து பின்னி மீதமிருந்த கூந்தல்கள் தோள்களின் இருபுறமும் வழிய, மஞ்சள் பூசிய அழகிய வட்ட முகத்தில் சந்தானமும் குங்குமம் இடம்பெற்றிருக்க முழுமதிக்கு நிகராக ஜொலித்த தேன்முல்லையின் முகத்தை தான்.

பார்த்தது பார்த்த வண்ணம் அவன் இருக்க, பக்கத்தில் யாரோ பேசியதற்கு சிரித்தவளின் சிரிப்பில் அவன் இதயம் தடுக்கி அவள் காலடியில் விழுந்தது.

பார்த்த முதல் பார்வையிலே கதிரின் மனதை மொத்தமாக அள்ளி தனக்குள் சுருட்டி கொண்டாள் அவள்.

துறுதுறு என இருந்த அவளின் கண்கள் இரண்டும், பலகதைகள் பேச அதில் ஆழ்ந்து முத்தமிட தோன்றிய உணர்வை கண்டு திடுக்கிட்டு கதிர், சட்டென கதவினை மூடிவிட, அவனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

‘டேய், என்னடா பண்ணுற அவ கொழுந்தை இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல’ என அவன் மனதினை திட்டி அடக்க நினைத்தவனுக்கு அது முடியாமல் போக திண்டாடி போனான்.

அவன் மூளை கூறிய அறிவுரையையும் மீறி, ஆசை கொண்ட மனம் அவள் மதிமுகத்தை மீண்டும் ஒரு முறை காண துடிக்க, அதன் துடிப்பை தாங்காது மெல்ல ஜன்னலை திறக்க மீண்டும் அவனின் கண்களுக்கு காட்சியானாள்.

முதல் சந்திப்பிலேயே இவ்வளவு பிடித்தம் ஏற்படுமா???

“ஆம்” என்றது கதிரின் மனம்.நேற்றைய பொழுது அவளின் பெயரில் சிக்க தவித்த அவன்  உள்ளம், இன்று முழுவதுமாக அவளில் சிக்கி கொள்ள, அதிலிருந்து மீள முடியாது விரும்பியே தொலைந்து போனான் கதிர்.

பார்த்த உடனே பஜக் என கதிரின் மனதில் வந்து ஒட்டி கொண்டவளை, அவனின் இதயத்தில் பூட்டி வைத்து கொண்டவனின் கண்கள், அவளை ஆசையாக ரசனையுடன் அளவிட,

மனதின் ஒரு மூலையில் அவள் சிறுமி என்ற எண்ணம் தோன்றி கொண்டே இருந்தது.

எத்தனை நேரம் பார்த்தானோ, அவள் அரைத்து முடித்து எழுந்த நிமிடம், இவனும் மாயவலையில் இருந்து விடுபட்டு கொண்டான்.

இவளிற்காக வெளியே சதீஷ் காத்து கொண்டிருக்க சீக்கிரமே கிளம்பியும் விட்டிருந்தாள்.

அவள் சென்றதும், ஜன்னலை அடைத்தவனிற்கு தனக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதனை‌ கையாள தெரியாது, தலையை அழுத்தி கோதியவனின் இதழ்கள் லேசாக பிரிந்து வெட்கப்புன்னகையை சிந்தின.

வெளியே கோதையின் குரல் கேட்க சட்டென விளக்கணைத்து, படுத்து கொண்டவனுக்கு உறக்கம் தூரம் போய்விட , சற்று முன் அவன் கண்ட அழகிய மதிமுகமே அவன் கண்களில் கண்ணாமூச்சி ஆட அழகாய் புன்னகைத்து கொண்டான்.

“ம்ம்ம் உனக்கு தேன்முல்லையின்னு வச்சதுக்கு பதிலா, தேன்நிலான்னு வச்சிருக்கலாம். அப்படியே தேன்ல மூழ்குன நிலா மாதிரி இருக்கா, தேன்முல்லைய எப்புடி செல்லமா கூப்பிடுறது ஆங் ஹனிப்ளார் வைக்கலாமா???

ச்சீ, ச்சீ வோண்டாம். ம்ம் ஹனிடால்னு வைப்போம். அவளும் பாக்க பொம்மை மாதிரி தான் இருக்கா, ஹனிடால்…! என்னோட ஹனிடால்!’ என சற்று முன் கண்டவளை செல்ல பெயர் வைக்குமளவிற்கு அவள் கதிரின் மனதில் புகுந்து அவனை கொள்ளையிட்டிருந்தாள்.

தேன்முல்லையின் எண்ணங்களுடன் துயில் கொண்டவனின் கனவிலும் அவனின் ஹனிஃடாலே நிறைத்தாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
49
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஹையோ கதிரு உன் பேரை மாதிரியே உன்னை மாதிரியே உன் காதலும் ரொம்ப அழகா இருக்கு ❤️❤️❤️❤️❤️ஹனி டாலா 🥰🥰🥰