Loading

மெல்லினம் 28:

அதில் ஒன்று அன்றைய திருவிழாவில், அவள் ஆசையாக அவள் பேர் எழுதி வாங்கிய இதயம்.

இரண்டாக உடைந்த அமைப்பில் இருந்த கீ செயின் ஒரு துண்டு இதயத்தில் “தேன்” என்றும் மறு துண்டில் “முல்லை” எனவும் பொறிக்கப்பட்டு உடைந்த இரு துண்டுகளையும் இணைக்கும் வண்ணமாக, ஜோடி புறாக்கள் இருக்கும் அந்த கீ செயினை அதன் அமைப்பில் கவரப்பட்டு வாங்கியிருந்தாள்.

உற்று பார்த்தவள் அந்த பெயர்களின் கீழே “கதிர்” எனவும் “அழகன்” எனவும் தனித்தனியாக, அவளின் பெயரை போலவே, ஏதோ ஊசி போன்ற பொருளை வைத்து எழுதியிருந்தது.

இரண்டு பொருட்களை பார்த்தவளிற்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தோட, வெறித்து பார்த்தவாறு அவள் அமர்ந்திருக்க,

“முல்லை சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்” என குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்த கதிர், அவளையும் அவள் கடை பரப்பி வைத்திருந்த பொருட்களை எல்லாம் கண்டவன் அதிர்ந்து எல்லாம் போகவில்லை.

“ஓ, பாத்துட்டியா சரி வா, போய் சாப்பிட்டு வந்து, மிச்ச இருக்குற பொருளை எல்லாம் பாக்கலாம்” என அசட்டையாக அவன் தோள் குலுக்க,

அவனிடம் சிறு அதிர்வு கூட இல்லாது, அசிரத்தையாக நடந்து கொண்டவனை கண்டவளிற்கு, கோபமும் அழுகையும் போட்டி போட்டு கொண்டு வர,

“இது எல்லாம் என்ன??” என் அவள் கேள்வி எழுப்ப,

“ஏன்? னக்கு பாத்தா தெரியலையா?? இல்லை என் வாயால கேட்க ஆசைப்படுறியா??” என,

அவள் பதில் பேசாது அவனையே நோக்க,

“அன்னைக்கு நைட்டு, நானும் அந்த சுரபியும் பேசனதே கேட்டியே! அப்புடி இருந்துமா இது என்னன்னு தெரியலை” என அவன் நக்கலாக கேட்க,

அதில் அதிர்ந்து விட்டாள் முல்லை..!!

“நான், நான் கேட்டது எப்புடி தெரியும்??”

“நீ என்னை தேடி வந்து நாங்க பேசுனத கேட்டதும் தெரியும், அதுக்கப்பறம் என்கிட்ட இருந்து விலக நீ செஞ்ச கிறுக்குதனமான வேலையும் தெரியும்” என அழுத்தமாக அவன் உரைத்திட,

“அதான் எப்புடி? நான் வந்தத நீங்க பாக்கலையே??”

“உன்னை பாக்கலைன்றது உண்மை தான். ஆனா ரூம் வெக்கட் பண்ணும் போது அந்த ரிஷப்னிஸ்ட் “இவுங்க தான் உங்க வொய்ப்பா சார், நேத்து நைட்டு உங்களை தான் தேடி வந்தாங்க. நான் தான் தோட்டத்துல இருக்காங்கன்னு சொல்லி அனுப்பி வச்சேன்னு சொல்லும் போதே,

எனக்கு, நாங்க பேசுனது நீ கேட்டு இருப்பியோன்னு சந்தேகமா தான் இருந்துச்சு. ஆனா அடுத்தடுத்து நீ ஊருக்கு வந்தப்பறமும் செஞ்ச வேலையில நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு.

அதுக்கப்பறம் தான், அன்னைக்கு நைட்டு அத்வி அழுதது, பூச்சி கடிச்சதுனால இல்லைன்னும் புரிஞ்சது” என இறுகிய குரலில் கூற,

ஆக, இத்தனை நாள் என்னை தெரிந்தே அலைய விட்டிருக்கிறான்.

நான் இவனிடம் இருந்து விலக நினைத்து செய்த, செயல்களை எல்லாம் தெரிந்தே முறியடித்தது மட்டுமல்லாமல், நான் நிம்மதியில்லாமல் தவிப்பது தெரிந்தும் அமைதியாய் இருந்திருக்கிறான்.’ என்ற எண்ணம் தோன்றி அவளின் கோபத்தை கிளறிட,

“அப்போ, ஏன்? ஏன்? நீங்க முன்னாடியே சொல்லலை. முட்டாள் மாதிரி நான், உங்க கிட்ட இருந்து தள்ளியிருக்க செஞ்ச வேலையெல்லாம் பார்த்துட்டு ஏன் அமைதியா இருந்தீங்க??”

“அதான் நீயே சொல்லிட்டியே முட்டாள்தனம்னு! உன் முட்டாள்தனம் எது வரைக்கும் போகுதுன்னு பாக்க தான் அமைதியா இருந்தேன்” என அவன் நக்கலாக கூற, அதில் காயமடைந்தவளிற்கு ஆத்திரம் தலைக்கேற நிதானமின்றி வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்.

“நோ, நீங்க எனக்கு உண்மையா இல்லை.‌என்னை ஏமாத்தியிருக்க, பொய் சொல்லி கல்யாணம் பண்ணிருக்க. உன்னை மனசார நம்புன எனக்கு துரோகம் பண்ணீருக்கீங்க!

இல்லை, இல்லை, இப்போ நீ சொல்றது தான் பொய். நீங்க என்னை விரும்பல.‌ நான் ஊருக்கு வந்திருந்தபோ உங்களை பாத்ததா நினைவு இல்லை. ஒரே ஊருல இருந்துட்டு எப்புடி பாக்காம இருந்திருப்பேன். இல்லை இது எல்லாம் கற்பனை என்னோட கற்பனை.

எதுவுமே நிஜம் இல்லை. அன்னைக்கு நீங்களும் சுரபியும் பேசுனது கூட என்னோட கற்பனை தான், அந்த மாதிரி ஒண்ணு நடக்கவே இல்லை. நீங்க என்னை முன்னாடி பார்த்தது கூட கிடையாது. என்கிட்ட சும்மா விளையாடுறீங்க” என அவள் நடந்து கொண்டிருப்பதை ஏற்று கொள்ள முடியாத மன அழுத்தத்தில் தன்னை மீறி வெடிக்க,

“முல்லை!!!!” என அதட்டி அவளை வெளியே இழுத்து வந்திருந்தான் கதிர்.

“என்ன? முல்லை, என்ன..? என்ன? இது எல்லாமே பொய் தானே, சும்மா என்னை ஃப்ராங் தான பண்ணுறீங்க.

அன்னைக்கு நான் கேட்டது எல்லாமே பொய்தான. என்னோட கற்பனை தான, ப்ளீஸ் சொல்லுங்க கதிர், இது எதுவுமே உண்மை இல்லையின்னு சொல்லுங்களேன். எல்லாமே பொய்யின்னு சொல்லுங்களேன். ப்ளீஸ்ங்க சொல்லுங்க! நான் கேட்டது பார்த்தது எல்லாமே பொய்தான சொல்லுங்க” என அவனை போட்டு உலுக்கியவள் அழுகையில் கரைந்து அவனிடம் கேட்க,

அவளின் இந்த வித்தியாசமான நடவடிக்கையில் திகைத்தவனிற்கு அவளின் கண்ணீர் அவனை பலவீனப்படுத்த,

“இல்லை…டி…எதுவுமே பொய்யில்லை, எல்லாமே உண்மை டி! நான் உன்னை உயிருக்குயிரா காதலிச்சது உண்மை. அந்த காதலை உன்கிட்ட சரியான நேரத்துல சொல்லாம விட்டது உண்மை. என்னோட தவறால நீ ஹரிஷை கல்யாணம் பண்ணிகிட்டதும் உண்மை. இதோ இப்போ என்‌ கையில நீ இருக்குறதும் உண்மை. எல்லாமே உண்மை தான் டி! எதுவுமே உன் கற்பனை இல்லை எல்லாமே நிஜம்” என கூறியவனின் குரலும் கண்களும் கலங்கி விட்டன முல்லையின் நிலையை நினைத்து.

“இல்லை!!!!இல்லை!!!!எல்லாமே பொய்” என காதை மூடி கத்தியவள் அடுத்த நிமிடம் மயங்கி சரிந்திருந்தாள்.

********************************

ஒரே நாளில் சோர்ந்து போய் வதங்கி படுத்திருந்தவளை, காண காண கதிருக்கு கண்கள் கலங்கின.

அவள் கண்விழித்துப் பார்க்கும் நொடிக்காக தவித்து கொண்டிருக்கிறான்.

அவள் மயங்கிய அடுத்த நொடி “முல்ல!!!முல்லை” என அவன் கன்னத்தினை தட்டியவன், அவள் விழிக்காமல் போகவே, அங்கிருந்த மற்றொரு அறையில் அவளை கிடத்தி விட்டு, சமையலறை சென்று தண்ணீர் எடுத்து வந்து தெளிக்க அப்போதும் அவளிடம் விழிப்பு இல்லாத போகவே பயந்தவன், மருத்துவரை அழைக்க எண்ணிய நொடி சீதாவும் ராகேஷீம் வந்து விட,

“ராகேஷ்..” என அவனை தாவி அணைத்தவன் “முல்லை…முல்லை” என தவிக்க,

கதிரின் கலங்கிய முகம் அண்ணனையும் கலங்க செய்ய‌ “கதிர் என்னடா என்ன முல்லைக்கு என்ன??”

“மயங்கிட்டாடா, எழுந்துக்கவே மாட்டுறா பயமா இருக்கு” என அதற்குள் சீதா முல்லையை காண விரைந்திருந்தவள், அவள் மயங்கியிருப்பதை உணர்ந்து அவளிற்கு அவ்வூரில் தெரிந்த செவிலியர் ஒருவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியவள் வீட்டிற்கு வருமாறு வேண்ட,

அவரும் மறுக்காது வந்தவர் முல்லையை பரிசோதித்து விட்டு

“எல்லாமே நார்மல் தான். ஏதோ டிப்ரஷன் இருந்திருக்கனும் ரொம்ப நாளா, எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருந்துருப்பாங்க போல. அதோட அழுத்தம் தாங்காம கூட மயங்கிருக்கலாம். முடிஞ்சளவு அதை என்னன்னு தெரிஞ்சு தெளிவு படுத்தி விடுங்க, மத்தபடி பயப்படத் தேவையில்லை கொஞ்ச நேரம் காத்தாட விடுங்க அவுங்களே எழுந்திடுவாங்க.

அப்பறம் ஈவ்னிங் எதுக்கும் ஒரு தடவை க்ளீனிங் வந்து டாக்டர கன்சல் பண்ணிக்கோங்க” என்றவர் கிளம்பி விட சற்றே நிம்மதியடைந்தனர் மற்ற மூவரும்.

“என்ன ஆச்சு கதிர் அவ மயங்குற அளவுக்கு என்ன நடந்தது? சீக்கிரம் சொல்லு, அப்பறம் கொஞ்ச நேரத்துல ஆளுங்க வந்திடுவாங்க. கோவில்ல சுரபிய பார்த்ததுல இருந்தே அவ சரி இல்லை என்ன நடந்தது??” என சீதா கேட்க,

அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்திருந்தான்‌ கதிர்.

“லூசாடா நீ முல்லை கிட்ட பொறுமையா சொன்னா ஆகாதா??முன்னாடியே சொல்லாம அவளை போட்டு டென்ஷன் படுத்தியிருக்க” என ராகேஷ் அவனை கடிய தலை குனிந்தான் கதிர்.

“எப்பவுமே கொஞ்சம் நிதானமா நடந்துக்கோ கதிர், எல்லா விஷயத்தையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய கூடாது” என சீதா கூறி கொண்டிருக்கையிலேயே வெளியே ஆட்கள் வரும் அரவம் கேட்க,

“சரி, சரி நீ போய் முல்லைய உன் ரூம்ல படுக்க வை. நாங்க பிள்ளைங்கள தூக்கிகிறோம்.அவ பக்கத்துலயே இரு, நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். அவ கண் முழிச்சதும் அவசரபடாம அவளுக்கு புரிய வை” என்ற சீதா குழந்தைகளை தூக்கி கொள்ள இதோ முல்லை கண் விழிப்பதற்காக காத்து கொண்டிருக்கிறான் கதிர்.

இறைந்து கிடந்த பொருட்களை எல்லாம் எடுத்து பத்திரப்படுத்தியவன், மீண்டும் அவளருகே வர அவளிடம் அசைவு தெரிந்தது.

“முல்லை!!!!முல்லை!!!” என‌ பரபரப்பானவன் அவளை அழைக்க கண்விழித்தவள் கண்டது கதிரின் கலங்கிய முகத்தையே,

அமைதியாக எழுந்து அமர்ந்தவளுக்கு, தன் ஞாபகத்தை மீட்ட சில நொடிகள் தேவைப்பட்டது.

கதிரின் கலங்கிய முகம் அவளிற்கு குற்றவுணர்வை ஏற்படுத்த “நான்….நான்….ஏதோ அவசரப்பட்டு….ப்ச்ச் இப்போதைக்கு அந்த பேச்சு வேண்டாம் நான் கொஞ்ச நேரம் வெளியே போறேன்” என்றவள் வெளியே கிளம்ப,

“முல்லை!!!!” என்றவாறு அவளை நிறுத்தியவன் அவளை இறுக அணைத்து கொண்டு ஒரு நிமிடம் முழுதாக தன்னை ஆசுவாசப்படுத்தியவன் “நைட்டு ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் அத்விய சீக்கிரம் தூங்க வச்சிடு” என்க,

தலையாட்டியவள் வெளியே சென்று விட, தளர்ந்து போய் அமர்ந்து விட்டவனுக்கு மருத்துவர் கூறியது சிந்தனையில் ஓடி கொண்டிருக்க, முகத்தை இரு கைகளால் அழுந்த தேய்த்தவன் முடிவு எடுத்து விட்டான் முல்லையிடம் அனைத்தையும் கூறி விடுவது என்று.

முல்லையை இன்னொரு முறை வாடிய கொடியாய் காண அவனிடம் தெம்பு இல்லை. பல இன்னல்களை கடந்து அவளை அடைந்திருக்கிறான் மீண்டும் அவளை இழந்திட அவனால் இயலாது.

ஆக அவளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளிடம் அவனின் கடந்த கால காதலை கூற மனதளவில் தன்னை தயார் படுத்தி கொண்டான்.

இரவு உணவினை முடித்து விட்டு அனைவரும் உறங்க சென்றிருக்க முல்லையும் அத்வியை சீக்கிரமே உறங்க வைத்து சீதாவிடம் விட்டிருந்தாள்.

ஸ்ருதியின் பிறந்த வீடு கோவிலில் இருந்தே அப்படியே ஊர் திரும்பியிருக்க, சுரபி மட்டும் பிடிவாதம் பிடித்து ஸ்ருதியுடன் அன்று தங்க வேண்டும் என கூற, கூடவே அரவிந்தனும் அவளிற்கு ஒத்து ஊதியதில் வேறுவழியின்றி ஸ்ருதி அவளை அழைத்து கொண்டு வந்திருந்தாள்.

அவளின் வருகை அங்கிருந்தவர்களுக்கு துளி கூட பிடித்தம் இல்லாததில், அவளின் முகத்தை பார்க்க விருப்பமின்றி சீக்கிரமே உண்டு விட்டு உறங்க சென்றிருந்தனர்.

ஸ்ருதியும் சுரபியை தன்னுடன் வைத்து கொண்டதில் சுரபியால் கதிர் முல்லையை கண்காணிக்க இயலாமல் போய் விட்டது.

கதிருக்காக முல்லை காத்திருக்க வெளியே சென்றிருந்தவன் சீக்கிரம் வீடு திரும்ப உணவினை பரிமாறினாள் முல்லை.

அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் உண்டு முடித்தவன் ராகேஷீடம் மட்டும் சொல்லி கொண்டு அவளை அழைத்து கொண்டு புறப்பட்டு விட்டான்.

வண்டி எதுவும் எடுக்காமல் நடந்து சென்றவனை அவள் கேள்வியாக பார்க்க,

“இங்க பக்கத்துல தான் நடந்தே போயிடலாம்” என்று விட்டு அவன் நடக்க யாரோ ஒருவரிடம் பேசுவது போல் அவன் பேசியதை தாங்காது அவள் முகம் சுருக்க,

ஏதோச்சையாக நடந்தவாறே அவள் கைவிரல்களை தன்னுடன் பிணைத்து கொண்டான் கதிர்.

சில நிமிடங்கள் நடையிலயே அவர்கள் ஒரு வீட்டை அடைந்து விட்டனர்.

அந்த வீடு பழைமையான அமைப்பில் இருக்க அதனை புதுப்பித்து கொண்டிருப்பனர் போலும்.

கதவினை திறந்து உள்ளே கதிர் நுழைய பின்னோடு முல்லை.

நேராக பின்கட்டுக்கு சென்றவன் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு “இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா முல்லை”?? என்க,

அதன் பின்புற அமைப்பை கண்டவளிற்கு எங்கோ பார்த்திருப்பதாக உள்ளம் கூற, சரியான நிகழ்வினை எடுத்து கூறாது மூளை தடுமாறி கொண்டிருந்ததில்,

“ஞாபகம் இல்லை, ஆனா பாத்த மாதிரியும் இருக்கு” என்க,

லேசாக இதழ் பிரித்து சிரித்து அந்த திண்ணையில் போட்டிருந்த அம்மி கல்லையும் அதன் நேரே இருந்த ஜன்னலையும் பார்த்தவன் “இங்க தான் உன்னை முதன் முதல பாத்தேன். அதோ அந்த ஜன்னல்ல இருந்து தான் பாத்தேன். முழுமதிக்கு போட்டியா, நீ இந்த இடத்தில உட்கார்ந்து அம்மிய பிடிக்க தெரியாம பிடிச்சு சாமிக்கு மஞ்சள் அறைச்சுட்டு இருந்த” என அவன் கூற கேட்டதும்,

முல்லையின் மூளை வேகமாக அந்த நிகழ்வுகளை மீட்டு எடுக்க திகைத்தவள் அவனை பார்க்க,

மோனநிலையில் லயித்திருத்தவன், அவனின் கடந்த காலத்தினை காட்சிப்படுத்த ஆரம்பித்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
52
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இவனோட காதல் இம்சை தாங்க முடியலையே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️