
சுற்றி இருந்தவர்களின் கூச்சலுக்கு நடுவே தனது விசையுந்தை வைத்துக் சாகசம் செய்து கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
கே.டி.எம் என்று சொல்லக் கூடியப் பந்தய வண்டியை வைத்துக் கொண்டு, உறுமும் சத்தத்துடன் சுழற்றிச் சுழற்றிச் சாகசம் செய்தான் அவன்.
தரையோடு தரையாக ஒட்டியபடி வண்டியை ஓட்டினான். முன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்தியபடி வண்டியைச் சுற்றினான்.
எருமை மாடு போல் இருக்கும் வண்டியை வைத்து என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட்டு வண்டியை நிறுத்தினான்.
அவனைச் சுற்றியிருந்தவர்கள் வேகமாக அவனருகே ஓடிச்சென்று வாழ்த்துகளைச் சொன்னார்கள்.
அவன் முன்னே குவிந்த இளைஞர்கள் பட்டாளத்தைத் தலைக்கவசத்தைக் கழற்றாமலே, கண்ணாடியை மட்டும் உயர்த்திக் கண்கள் தெரியக் கண்டவன், அவர்கள் கூறும் வாழ்த்துகளைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.
“ண்ணா! செம்ம ண்ணா! பிச்சிட்ட! எப்படி ண்ணா உன்னால மட்டும் முடியுது? நானெல்லாம் செஞ்சா கீழ விழுந்து அடிபட்டதுதான் மிச்சம்… வரவே மாட்டேங்குது ண்ணா” எனச் சலித்துக் கொள்ள,
“இன்னும் பயிற்சி வேணும் தம்பி! உன் வயசுல எனக்கும் தான் வரல, இப்ப பண்ணலையா? பயிற்சி… பயிற்சி வேணும்டா” என்றான் அவன் தோளைத் தட்டி. மேற்கொண்டு அவர்கள் கேட்கும் சில சந்தேகங்களுக்குப் பதிலளித்தபடி இருந்தான்.
“மாறா! வீடியோ எடுத்துட்டேன். ஒருவாட்டிச் செக் பண்ணிட்டு அப்லோட் பண்ணிக்க” என்று தான் எடுத்த வீடியோவை தன் நண்பனுக்குக் காட்ட, அவனும் கொஞ்சம் ஓட விட்டுப் பார்த்தவன், “எனக்கு அனுப்பு, நான் அப்லோட் பண்ணிக்கிறேன்” என்றான்.
மீண்டும் சிற்றார்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தபடி இருந்தவனின் காதில் போலீஸின் சைரன் ஒலி கேட்டதும், “பாய்ஸ் அலர்ட்” என்று இவன் சொல்ல, மறு நொடியே அனைவரும் மறைந்தது போல அவ்விடமே காலியானது.
நடு இரவில் ஆள் அரவமற்ற, மக்கள் அதிகம் பயன்படுத்தாத சாலையில் தான் மாறனின் சாகசத்தைப் பார்க்க முடியும். அவன் செய்யும் சாகசத்தைப் பார்க்கவே பதினெட்டு, பத்தொன்பது வயதுடைய இளைஞர்கள் சிலர் தன்னுடைய கே.டி.எம் என்கிற விசையுந்துடன் ஆவலாக வந்து விடுவார்கள்.
யூடியூப்பிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ‘நைட்_ஹீரோ’ என்ற பெயரில் வண்டியுடன் அவன் செய்யும் சாகசத்தை வீடியோவாக அப்லோட் செய்வான். அதனைப் பலரும் பார்த்து அவனைப் பின் தொடர்கிறார்கள். மில்லியன் (M) கணக்கில் மக்கள் அவனைப் பின் தொடர்கிறார்கள். ஆனால், இன்னும் அவனது முகத்தை யாரும் பார்த்தது இல்லை.
அவனது நண்பன் விஷாலைத் தவிர யாருக்கும் அவனது முகம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
இன்ஸ்டாகிராமில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியை வைத்து அந்த இடத்தில் ஒன்று கூடுவார்கள். தினமும் எல்லாம் ஒன்று கூட மாட்டார்கள், வாரத்தில் மூன்று நாட்கள் கூடுவார்கள்.
அன்றைய நாள் தன்னை உற்சாகப்படுத்துபவர்களுக்குத் தனது வித்தைகளை விருந்தளித்துவிட்டு, அவர்களது வாழ்த்து மழையில் நனைவான்.
போலீஸ் சைரன் சத்தம் தான் அவர்களுக்கு எச்சரிக்கை மணி. அந்தச் சத்தத்தைக் கேட்டதுமே கூட்டத்தைக் கலைத்துவிட்டு வண்டியில் பறந்து விடுவார்கள்.
விஷால் வண்டியை ஓட்ட, பின்னே அமர்ந்த மாறன் தனது தலைக்கவசத்தைக் கழற்றிக் கலைந்த முடியைச் சரி செய்தான். உடையின் மேல் அணிந்திருந்த ஜாக்கெட்டையும் கை உறையையும் கழற்றினான்.
மாறனின் வீட்டுத் தெரு முக்கு வந்ததும் வண்டியை நிறுத்தினான் விஷால். “இந்தாடா, இதைப் பத்திரமா வச்சுக்க! பார்த்துப் பத்திரமா வீட்டுக்கு போ!” என்றான்.
“ம்…” அவனது பொருட்களை வாங்கி முன்னே வைத்தவன், “அடுத்த மீட்டிங் எப்போன்னு பசங்க கேக்குறானுங்கடா! நீ வேற வீடு காலி பண்ணப் போறதால ஒரு வாரத்துக்கு மீட்டிங் இல்லைனு சொல்லிட்டு வந்துட்ட! என்னைப் பிடிச்சு நச்செடுக்குறானுங்க! தேதியைச் சொன்னா நான் நிம்மதியா தூங்குவேன்டா.”
“மச்சி! நான் போற ஏரியாவ பத்தி எனக்கே முழுசா தெரியாதுடா! ஒரு வாரம் ஆகும்டா அந்த ஏரியாவுக்கு நான் பழக! சந்து பொந்து எல்லாம் வாட்ச் பண்ணி எப்படி நைட் ஈஸியா வெளிய வர்றது, போலீஸ் கையில சிக்காம எப்படி வீட்டுக்குப் போறதுன்னு எல்லாத்தையும் பார்த்து வச்சுக்கிட்ட அப்புறம் தான் மச்சி மீட்டிங் போட முடியும்! எடுத்தோம் கவிழ்த்தோம்னு செஞ்சா கம்பி எண்ண வேண்டியதுதான். இது வரைக்கும் எந்தச் சிக்கலும் இல்லாம தப்பிச்சுட்டு இருக்கோம். இனியும் கவனமா இருக்கணும்… என் அம்மாவப் பத்தி தான் தெரியுமே உனக்கு? இன்ன வரைக்கும் அவங்களுக்குத் தெரியாம தான் பண்ணிட்டு இருந்தேன். இனியும் தெரியாம பார்த்துக்கணும், அதுல நான் ரொம்ப கவனமா இருக்கேன். மீட்டிங் போடலாம்டா, கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லு…” என்றான்.
“ம்ம்…” என்றவன், “சரி நேரமாச்சு, நான் கிளம்புறேன். நீ பார்த்துப் போ” என்றான்.
விஷாலும் தலை அசைத்து விடைபெற, இவனும் வழக்கம் போல ‘யாரும் பார்க்கிறார்களா?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி வீட்டிற்கு வந்தவன், சத்தம் எழுப்பாமல் வீட்டைத் திறந்து உள்ளே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு அறைக்குள் சென்று நல்ல பிள்ளை போலப் படுத்துக் கொண்டான்.
இரண்டு மணிக்குத் தூங்கியவன், ஐந்து மணிக்குத் தாயின் அழைப்பில் எழுந்தான். அவ்வளவு தான் அவனது தூக்கம்.
இன்று புது வீட்டில் பால் காய்ச்சப் போகிறார்கள். பல வருடங்களாக இருந்த வீட்டிலிருந்து வேறு இடம், வேறு தெரு என மாறிச் செல்கிறார்கள்.
முற்றிலும் அவர்களுக்குப் பழகாத இடத்திற்குச் செல்கிறார்கள். மகன் வைத்திருக்கும் மெக்கானிக் கடைக்கு அருகே வீடு பார்த்து அங்குச் செல்கிறார்கள்.
தாய், மகன் என இருவருக்கு ஏற்றது போல வீடு பார்த்து குடியேறப் போகிறார்கள். அங்கே அவனுக்குக் காத்திருக்கும் விதியின் விளையாட்டை அறியாது, புது வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறான்.
ஐந்தரை மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, புது உடை அணிந்து பால் காய்ச்சத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்து அவனது தாய் கோமதியை முன்னே அனுப்பி வைத்து, பின்னே இவன் தனது ஸ்ப்ளெண்டர் பைக்கில் பின் தொடர்ந்தான். வீடு வர, இருவரும் இறங்கிக் கொண்டனர்.
அவர் உள்ளே பால் காய்ச்சத் தேவையானவற்றை எடுத்து வைக்க, பூஜை அறையில் கடவுள் புகைப்படத்தை வைத்துப் பூ போட்டு இதரப் பொருட்களை எடுத்து வைக்க, மாறனோ வாசலில் நீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.
முருகனின் கந்த சஷ்டி கவசத்தில் தொடங்கியது அன்றைய அதிகாலை வேளை. ஐந்து புள்ளி ஐந்து வரிசையில் கம்பி கோலத்தில் மிக பொறுமையாக வளைத்து நெளித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
சுற்றுவட்டாரத்தைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாது, சிரத்தை எடுத்து மிக கவனமாகப் புள்ளிகளைக் கடந்து கம்பிகளை இழுத்துக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தபடி அங்கு வந்து நின்றார் வைத்தியநாதன்.
தன் முன்னே வெள்ளை வேஷ்டியின் நிழலாட நிமிர்ந்து பார்த்தான். கைகளைக் கட்டிக் கொண்டு அவனையும் கோலத்தையும் மாறி மாறி அதிசயத்தைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘இவர் யாருனு தெரியலையே! ஒருவேளை இவரும் இதெல்லாம் ஆம்பளைங்க பார்க்கிற வேலை இல்லை, நீ ஏன்ப்பா பார்க்கிற? உன்னால வீட்ல இருக்க பெண்களும் அடுத்து இந்த வேலையையும் எங்களையும் பார்க்க வைக்கப் போறாங்களானு ஆரம்பிச்சிடுவாரோ?! அப்படி மட்டும் பேசட்டும், நானும் நாக்கைப் புடுங்குற மாதிரி கேட்டிடனும்’ என்ற நோக்கியிலே எழுந்து நின்று அவரைப் பார்த்தான் பதிலடி கொடுக்க.
ஆனால் மாறாக அவரோ, “தம்பி! இது அஞ்சு புள்ளி அஞ்சு வரிசை தானே?” என்றவரைக் கண்டு வியப்பில் விழிகளை அகல விரித்தான்.
“நானும் அதைத் தான் போடலாம்னு வந்தேன் தம்பி, நீங்க போட்டீங்க! நான் வேற போடுறேன்…” என்றவர், பின்னால் மறைத்து வைத்திருந்த கோலப் பொடி டப்பாவை அவனிடம் காட்டிவிட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலம் போட அமர்ந்தவரை, இப்போது அவன் அதிசயத்தைக் காண்பது போலப் பார்த்தான்.
அவரும் சின்ன கோலமாக ஐந்திலிருந்து மூன்று புள்ளிகளை வைத்துக் கம்பி இழுக்கத் தொடங்கினார்.
“அங்கிள்! உங்க வீட்ல நீங்க தான் எல்லாமேவா?”
“ஆமாப்பா! நீயும் அப்படித் தானா?”
“ஆமா அங்கிள்! நான் தான் எங்க வீட்ல எல்லாமே.”
“லேடீஸ் வீட்ல இல்லையாப்பா?!”
“அம்மா மட்டும் தான் அங்கிள்! ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்ல இருந்து அவங்களை அதிகமா வேலைப் பார்க்கக் கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க… அதனாலே இங்க எல்லா வேலையும் நான் தான் அங்கிள் பார்க்கிறேன்” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவருக்குள்ளும் கண்களில் சிறு வலி தென்பட்டது. அதை மறைத்து லேசாகப் புன்னகை செய்தவர், “எங்க வீட்டையும் விடிஞ்சதுல இருந்து அடையற வரைக்கும் எல்லா வேலையும் நான் தான்பா!” என்றார் பாவமாக.
“ஆன்ட்டி…??” எனத் தயக்கமாக இழுத்தான்.
“இல்லப்பா, நானும் என் பொண்ணும் மட்டும் தான். பொண்ணு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல டாக்டரா இருக்கா! வேலை அதிகமா இருக்கும், அதனாலே வீட்டுல எல்லா வேலையும் நானே பார்ப்பேன்” என்றார்.
அவனும் சிரித்துக் கொண்டே, “உங்களைப் பார்த்ததுல மீ ரொம்ப ஹாப்பி அங்கிள்! நான் வெற்றிமாறன், மெக்கானிக் ஷாப் வச்சிருக்கேன்…” என அறிமுகப் படலத்தை ஆரம்பித்தான்.
“நான் வைத்தியநாதன்! ரிட்டயர்ட் கவர்மென்ட் டீச்சர்பா! இப்போ ஹவுஸ் ஃபாதர்பா நானும்” என்றார்.
அதில் பற்கள் தெரிய சிரித்தவன், “என் இனம் அங்கிள் நீங்க!”
“ஹா ஹா! உன்னைப் போல ஒரு பையனை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன் வெற்றி! இந்தத் தெருவுல பொண்டாட்டியோட வாக்கிங் போற ஆம்பிளைங்க எல்லாரும் என்னை இனத் துரோகியா பார்ப்பாங்க… அவங்க வீட்டுப் பெண்கள் என்னச் சொல்லித் திட்டுவாங்களோ இல்லையோ, என்னைச் சொல்லித் திட்டுவாங்க! அந்தக் கோபத்துல என்னை வடிகால் ஆக்கிட்டு போவாங்க… இப்போ என் இனத்துல உன்னைப் பார்க்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்பா” என்றார்.
“யூ டூ அங்கிள்! நீங்களும் அதை அனுபவிச்சிருக்கீங்களா?!”
“ஆமாப்பா! இதுக்காகவே அலாரம் வச்சுக் கோலம் போட்டு, மறுபடியும் தூங்க வேண்டியதா இருக்கு.”
“இனி அப்படிப் பயந்து கோலம் போடணும்னு அவசியம் இல்லை அங்கிள், நாளையிலிருந்து நான் உங்களுக்குத் துணையா இருக்கேன். இனி நீங்க என்னோட பிரெண்ட், கிரைம் பார்ட்னர் ஓகேவா?” என்றான்.
“ஓகேப்பா” என்றார் புன்னகையுடன்.
“நீங்க சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவீங்க தானே?!” என அவருக்கு மட்டும் கேட்கும் தொனியில் கேட்டான்.
“சாப்பிடுவேன்ப்பா! ஆனா என் பொண்ணுக்குத் தெரியாம!” என்றவரை கண்கள் சுருங்கப் பார்த்தான்.
அசடு வழியும் சிரிப்புடன், “கொஞ்சமா சுகர் இருக்கு… அதைப் பெரிய அளவில் சொல்லிச் சொல்லி, கண்ணுல இனிப்புன்ற வார்த்தையைக் கூடக் காட்ட மாட்டேங்கிறா என் பொண்ணு! சர்க்கரை டப்பாவை ஒளிச்சு வைக்கிறாப்பா! அவளுக்குத் தெரியாம சாப்பிட்டாலும், பேச்சு வாக்குல உளறி வச்சு திட்டும் வாங்கிப்பேன்…” என்றார் வெள்ளந்தியாக.
“அப்போ கொண்டு வர வேணாமா பார்ட்னர்?” எனக் கேலியாகக் கேட்டான் உதட்டின் சிரிப்பை மறைத்து.
“என் பொண்ணு தூங்கிட்டு இருக்கா! அவ இப்போதைக்கு எழுந்துக்க மாட்டா! நீ கொண்டு வா!”
“தெரிஞ்சதும் எனக்கு எதுவும் ஊசி குத்திட மாட்டாங்களே?!” எனப் பயந்தது போல வினவியவனைக் கண்டு சிரித்தார்.
“வெற்றி” என உள்ளிருந்து குரல் வர, “எங்க அம்மா அங்கிள், பால் காய்ச்ச நேரமாகிடுச்சுன்னு நினைக்கிறேன். நீங்களும் உள்ள வாங்க அங்கிள்!” என்றழைத்தான்.
“இல்லப்பா.. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேன். குக்கர்ல பருப்பு வச்சுட்டு வந்திருக்கேன். நீங்க பால் காய்ச்சுங்க! இங்க வந்த நாள்ல இருந்து உங்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்” என்று வாழ்த்துச் சொல்லவும், அவரது வீட்டிலிருந்த குக்கர் விசில் அடிக்கவும் சரியாக இருந்தது.
“தேங்க்ஸ் அங்கிள், அப்புறம் பார்க்கலாம்” என வீட்டிற்குள் சென்று விட்டான். அவன் செல்வதைப் பார்த்தவருக்குப் பல நாள் நண்பர்களைப் பார்த்துச் சிரித்துப் பேசும் தருணத்தைத் தந்து விட்டுப் போயிருந்தான் மாறன். முகத்தில் சிரிப்புடன் நின்றவர், மீண்டும் விசில் சத்தம் கேட்கவும் வேகமாக உள்ளே சென்றார்.
“வெற்றி! யார் கிட்ட பேசிட்டு இருந்த?” என அலங்கரித்திருந்த பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்துப் பாலை ஊற்றியபடி கேட்டார் கோமதி, வெற்றிமாறனின் தாய்.
“என்னைப்போல ஒரு ஜீவனைப் பார்த்து நட்பு பாராட்டிட்டு வர்றேன் மதி!”
“உன்னைப்போல ஜீவனா? யாரு வெற்றி அது?”
“எதிர்த்த வீட்ல ஒருத்தர்மா! அப்பா வயசு இருக்கும்! அவர்தான் வீட்ல எல்லாமே போல. என்னைப்போல அவரும் கோலம் போட வந்தார். பேசிட்டு இருந்தோம்மா…”
வாயில் கை வைத்தவர், “அவரும் கோலம் போட வந்தாரா? ஏன் வீட்ல அவர் மனைவி இல்லையா?”
“இல்ல போலமா! ஒரு பொண்ணு தானாம். வேலைக்குப் போறாங்க போல! இவர்தான் வீட்ல எல்லாம்மா” என்றான்.
“என்னடா கூத்து இது?! வேலைக்குப்போனா எதுவும் பார்க்கக் கூடாதா என்ன? சமைச்சுட்டு, வச்சுட்டு வீட்டு வேலை பார்த்துட்டுப் போனா என்ன? ஆம்பள நீயே வீட்டு வேலை பார்த்து வச்சுட்டுத் தான் போற, அந்தப் பொண்ணுக்கு என்ன? சமைக்க, வீட்டு வேலை பார்க்கச் சொல்லித்தர வேணாமா? நாளைக்கு அந்தப் பொண்ணு இன்னொரு வீட்டுக்குப்போய் கஷ்டப்படும்… என்ன மனுஷர் பொண்ணை வேலை வாங்காம செல்லம் கொடுத்து வச்சிருக்கார்… அம்மா இருந்திருந்தா இடிச்சிருப்பாங்க” என அவர் பாட்டுக்கு ஓட விட்ட ரேடியோவைப் போலப் பேசிக்கொண்டே போனார்.
“மதி! மதி! உடனே பொண்ணுங்க வேலை செய்யணும், ஆம்பளைங்க நீட்டி நிமிரணும்னு ஆரம்பிக்காத! அவர்கிட்ட பேசின பத்து நிமிஷத்துல பேசினதை உன்கிட்ட சொன்னேன். உடனே பொண்ணு, ஆம்பளைன்னு ஆரம்பிக்கக் கூடாது. அவங்க வீட்டுச் சூழ்நிலைப்படி இருக்காங்க… நாம நம்ம வீட்டுச் சூழ்நிலைப்படி இருக்கோம். இன்னும் பழைய பஞ்சாங்கத்தைப் பேசாதே! பால் பொங்கப் போகுது பார்” என்று அவரது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கவனத்தைத் திசை திருப்பினான்.
கிழக்குத் திசையை நோக்கிப் பால் பொங்கிட, கையெடுத்துக் கும்பிட்டார். பூஜை அறையில் பாலை வைத்துப் கடவுளை வணங்கினார்கள்.
இரண்டு டம்ளரில் பாலை ஊற்றி, “இந்தா, உன் புது பிரெண்டுக்குப்போய் கொடுத்துட்டு வா” என்று நீட்ட, மாறன் சிரித்துவிட்டான்.
இதுதான் அவனது தாய். இந்தக் காலத்திலும் ஆண், பெண் எனப் பிரித்து விவாதம் செய்பவர் ஆனாலும், கள்ளம்கபடம் இல்லாத உள்ளம் கொண்டவர்; இளகிய மனம் கொண்டவர். எதைக் கேட்டாலும் வாரி வழங்கும் வள்ளல்.
கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலோடு காய்ச்சின பாலை இரண்டு டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தவன், எதிர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
நடுக்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்தவளின் முகம் லேசாகச் சுணங்கியது. மீண்டும் மீண்டும் அழைப்பு மணி சத்தம் கேட்டு, “வைத்தி” எனக் கண் விழிக்காமல் கத்தினாள்.
“அச்சச்சோ!” என அவரும் பதறியபடி வேகமாகச் சென்று கதவைத் திறந்தார்.
வெளியே மாறன் நிற்பதைக் கண்டு அதிர்ந்தவர், மரியாதையின் பொருட்டு உள்ளே அழைத்தார்.
உள்ளே வந்தவன் கூடத்தில் இழுத்துப் போர்த்தி உறங்கும் அந்த ஜீவனைக் கண்டு, “உங்க பொண்ணா பார்ட்னர்?”
“ஆமாப்பா!” என்றார் அவன் நீட்டியதை வாங்கியபடி.
“உங்க பொண்ணு எந்திருக்குறதுக்குள்ள சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிடிருங்க பார்ட்னர்” என்றான். அவரோ வாயெல்லாம் பல்லாகக் காட்டினார்.
வேகமாக ஒரு வாய் வைக்கப் போகும் நேரத்தில், “வைத்தி…” என எழுந்து உட்கார்ந்திருந்ததைக் கண்டுகொள்ளாது வாயில் வைக்கப் போனார்.
“என் பொண்ணுக்குப் பாம்பு காது! நான் ஸ்வீட்னு நினைச்சாலே போதும், உடனே என் முன்ன வந்து நின்னுடுவா! அந்த அளவுக்கு ஷார்ப்” என அவனது காதைக் கடித்தவர்,
“இல்லம்மா, தம்பி மனசு கஷ்டப்படக் கூடாதுனு பேருக்கு ரெண்டு பருக்கை வாயில போடலாம்னு…” என்று வழிந்தவரை முறைத்தவள், பக்கத்தில் நின்றிருந்தவனைப் புதிதாகப் பார்த்தாள் சம்ருதி.
நெற்றியில் திருநீறிட்டு, அழகான நீல நிறச் சட்டையும் வேட்டியும் கட்டி அம்சமான பக்காவாகத் தொண்ணூறுகளில் வரும் ஹீரோக்களைப் போலவே இருந்தான். ஒரு கணம் அவனை அசந்து பார்த்தவள், மீண்டும் தந்தையின் மீது பார்வையைச் செலுத்தி, “ஸ்வீட்னு எழுதிக் கொடுத்தாலே முழுங்குற ஆளு நீ! நீ ரெண்டு பருக்கை வாயில போடப் போறியா? இந்தத் தம்பி ஒரு நாள் தான் கஷ்டப்படுவார், நான் தினமும் உன்னால கஷ்டப்படணும். அதுனால… சர்க்கரைப் பொங்கல் வேணாம் உனக்கு.”
“பாப்பா…” எனச் சர்க்கரைப் பொங்கலைக் கண்டு கண் வழியே ஜொள்ளு வடித்தார் வைத்தி.
“ஒரு நாள் சாப்பிடுறதால ஒன்னும் ஆகிடாதுங்க! ரெண்டு வாய் அவர் சாப்பிடட்டும், மீதியை நீங்கச் சாப்பிடுங்க” என வைத்திக்காகப் பரிந்து பேச,
“ரெண்டு வாயென்ன, நாலு வாய் இனிப்பு கொடுக்க நான் ரெடி! சுகரைக் கண்ட்ரோல்ல வச்சுக்க ரெடியானு கேட்டுச் சொல்லுங்க!”
மாறனோ வைத்தியைப் பார்க்க, வைத்தியோ வழிந்து நின்றார்.
“என்ன பார்ட்னர்? நம்ம பக்கம் எல்லாம் சரியா இருந்திருந்தா உங்க பொண்ணோட வாயடைச்சிருக்கலாம். நீங்கச் சரியா இல்லாததால் வழிஞ்சுட்டு நிக்கிறீங்க! போங்க பார்ட்னர், என்னால உங்களுக்காகப் பேச முடியாது. யூ ஆர் ஹெல்ப்லெஸ்!” என்று உதட்டைப் பிதுக்க, அவரோ பாவமாகப் பொங்கலையும் மாறனையும் பார்த்தார்.
முதுகு வரை படர்ந்திருந்த நீண்ட கூந்தலை அள்ளி முடித்தபடி அவர்கள் அருகே எழுந்து வந்தவள் பொங்கலை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
“ரிட்டர்ன் அனுப்பக் கூடாதுல்ல வைத்தி, அதுக்குத் தான்” என்றவள் அவனிடம் நன்றி உரைத்து அறைக்குள் சென்று விட்டாள்.
‘வடை போச்சே’ என்பது போல ‘பொங்கல் போச்சே!’ என அவனைப் பாவமாகப் பார்த்து, “இதுதான்பா என் தலையெழுத்து” என்றவர், பாலை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவர், கழுவிய குவலையை அவனிடம் கொடுத்தார்.
“அங்கிள்” எனச் சத்தமில்லாமல் அழைத்தான்.
“சுகர் ஃப்ரீ பொங்கல் வேணும்னா செஞ்சு கொடுக்கவா?” என்றான்.
“அது எப்படிப்பா?” என ஆவலாகக் கேட்டார்.
“சர்க்கரை போடாம மிளகு போட்டு வெண்பொங்கல் அங்கிள், வேணுமா?” என இதழை மடக்கிச் சிரிப்பை அடக்கியபடி கேட்டவனைச் செல்லமாக முறைத்தார்.
“ஓகே அங்கிள், வேலை இருக்கு அப்புறம் பார்க்கலாம்” என்று அங்கிருந்து விடைபெற, தலை அசைத்து அனுப்பி வைத்தார். அவன் சென்றதும் சமையலறைக்குள் சென்றவர் சமைக்கும் வேலையைத் தொடர்ந்தார்.
சிரிப்புடன் வீட்டிற்கு வந்த மகனிடம் விசாரிக்க, அவனும் சொல்ல, அவரும் அவராக்காகப் பரிதாபப்பட்டார்.
அன்று வீட்டில் பொருட்களை ஒதுங்க வைக்க வேண்டும் என்பதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பார்க்க முடிவு செய்திருந்தான்.
முதலில் சமையலறையில் மட்டும் தேவையானதை எடுத்து வைத்து காலை, மதியம் என இரண்டு நேரத்துக்கான உணவைச் சமைக்க ஆரம்பித்தான்.
மருத்துவமனைக்குச் செல்ல தயாராகி வந்தவள் சாப்பிட அமர, அவளுடன் அமர்ந்தவர் இருவருக்கும் தோசை எடுத்து வைத்துச் சாம்பாரை ஊற்றினார்.
அவளோ வெற்றி கொடுத்த சர்க்கரைப் பொங்கலை ஒவ்வொரு விள்ளலாகத் தந்தை பார்க்கச் சாப்பிட்டாள்.
“இதெல்லாம் நல்லா இல்லை சம்மு பாப்பா! அப்பாவைச் சாப்பிடக் கூடாதுனு சொல்லிட்டு, பார்க்க வச்சுத் திங்குற பார்த்தியா? போ பாப்பா” என முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“அச்சோ வைத்தி! உன்னைப் பார்க்க வச்சுத் தின்னல, உன்னைச் சுத்தி எத்தனை பேர் ஸ்வீட் சாப்பிட்டாலும் நீ கட்டுக்கோப்பா சாப்பிடக் கூடாதுனு ஸ்டெடியா நிக்கணும்னு உன்னை ட்ரெய்ன் பண்றேன் வைத்தி” என்று சிரிப்பை மறைத்துச் சொல்ல,
“அப்படித் தானே இத்தனை வருஷமா இருக்கேன். இப்ப என்ன புதுசா ட்ரெய்ன் பண்ற என்னை நீ?”
“நான் இருக்கும் போது தான் இருக்க, நான் இல்லைன்னா திருட்டுத்தனம் பண்ணிச் சுகரைக் கூட்டி வச்சிருக்க. இதோ இன்னைக்கு நான் எந்திருக்கலைனா சாப்பிட்டிருப்பேல்ல” என்க, அவரோ வழிந்தார்.
அவரை முறைத்துவிட்டு கடைசி வரை பொங்கலை வாய்க்குள் திணித்தவளுக்கு அமிர்தமாய் இருக்க,
“நல்லா இருக்கு பொங்கல், யார் பண்ணா? அவங்க அம்மாவா?”
“இல்லை பாப்பா! தம்பி தான் பண்ணுச்சு. அந்தத் தம்பி தான் அவங்க வீட்ல எல்லாம் போல” என்று அவர்கள் பேசிக் கொண்டதைச் சொல்லி, “அந்தத் தம்பியோட அம்மா கொடுத்து வச்ச மகராசி! நானும் தான் இருக்கேனே” எனச் சலித்துக் கொள்ள,
அவரை ஏறிட்டுப் பார்த்தவள், “சோ, என்னை பெத்துட்டு எதையும் கொடுத்து வைக்கலனு சொல்ல வர்ற, அதானே?” என்க,
“அப்படி நான் சொல்லுவேனா பாப்பா” என இளிக்க, “சொல்ல வேற செய்வியா நீ?” என எகிறிக் கொண்டு வர, வாயை ஜிப் போட்டது போலப் பூட்டிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
பழைய வீட்டிலிருந்து பொருட்களை டெம்போவில் ஏற்றி இங்கே கொண்டு வர வெற்றி வண்டியில் கிளம்பிட, அவனது தாயோ அவனிடம் ‘ஆயிரம் பத்திரம்’ சொல்லி அனுப்பி வைப்பதைக் கண்ட சம்ருதியோ தந்தையைப் பார்த்தாள்.
அவரோ ‘மகள் எப்போடா கிளம்புவாள்?’ என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
“யோவ் வைத்தி! ஆம்பள பிள்ளையைப் பெத்து அந்த அம்மாவே ஆயிரம் பத்திரம் சொல்லுது. பொண்ணைப் பெத்த நீ ஒரு பத்திரம் சொன்னியாயா? எப்படா போவான்னு காத்துட்டு இருக்கேல்ல நீ!” என்று அவர் எண்ணத்தை அப்படியே சொல்ல,
மீண்டும் வழிந்தவர், “அப்படி இல்லை பாப்பா! அவங்க பிள்ளைக்கு எதுவும் ஆகிடக் கூடாதுனு பத்திரம் சொல்றாங்க. ஆனா, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு! என்ன ஆனாலும் சேதாரம் ரோட்டுக்கும் எதிர்த்த வர்றவனுக்கும் தான், அதான் அப்பா பத்திரம் சொல்லலடா…” என்று அவளை வார, அதில் கடுப்பானவள்,
“நேரமாச்சு, உன்னை வந்து வச்சுக்கிறேன்யா யோவ்” என்று மிரட்டி விட்டுச் செல்ல, சிரித்துக் கொண்டே வழியனுப்பி வைத்தார் வைத்தி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1

