Loading

திடீரென எங்கிருந்தோ வந்து தன்னை அணைத்துக் கொண்டவனைக் கண்டு துருவ் முதலில் அதிர்ந்தவன், எதிரில் இருந்தவனின் முகத்தைக் காணாமலே அவன் யார் என உணர, துருவ்வின் உதடுகளோ தானாகவே, “ஜெய்…” என முணுமுணுத்தன.

துருவ்வை அணைத்திருந்த ஜெய் அவனை விட்டு விலகி தன் முகத்தை மறைத்த துணியைக் கழட்டவும் துருவ்வின் விழிகள் கண்ணீரை சுரந்தன.

துருவ் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத இந்த அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்க, ஜெய்யும் அவனைத் தான் கண்களில் கண்ணீருடனும் முகத்தில் புன்னகையுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கு வந்த முத்துராசு துருவ்வின் தோளில் கரம் பதிக்க, அவனைத் திரும்பிப் பார்த்த துருவ், “அண்…ணா… ஜெ..ய்… என் ஜெய்…” என்றவனுக்கு வார்த்தைகள் எழ மறுத்தன.

முத்துராசுவும் புன்னகையுடன் ஆம் எனத் தலையசைக்க, தன் எதிரே நின்று இருந்தவனை கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதான் துருவ்.

ஜெய், “எலேய்… அழுவாதேலே…” எனக் கண்ணீருடன் கூற, துருவ்வோ தாயைக் கண்ட சேயைப் போல இறந்து விட்டான் என இரண்டு வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்த தன் சகோதரனைக் கண்ட மகிழ்ச்சியில் விடாமல் அழுதவன், “ஜெய்… நீ… நீ… உயிரோட தான் இருக்கியா?” என இன்னும் நம்பாமல் கேட்க, துருவ்வை தன்னை விட்டு விலக்கிய ஜெய், “நல்லா பாருலே… எனக்கு ஒன்னும் இல்ல… நான் நல்லா தான்லே இருக்கேன்…” எனப் புன்னகையுடன் கூறவும் தன் கன்னம் தாண்டி வழிந்த கண்ணீரைக் கூட துடைக்க மனமின்றி புன்னகையுடன் ஆம் எனத் தலையசைத்தான் துருவ்.

சற்று நேரம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்த துருவ் பின் தான் நினைவு வந்தவனாய், “அப்போ உங்களுக்கு ஜெய் உயிரோட இருக்குற விஷயம் முன்னாடியே தெரியுமா அண்ணா?” என முத்துராசுவிடம் கேட்க, சில நொடி அமைதி காத்த முத்துராசு ஆம் எனத் தலையசைத்தவன் நடந்த அனைத்தையும் கூற, துருவ் எதுவும் கூறாமல் மௌனம் காத்தான்.

“இவன் இல்லன்னு நானும் அம்மாவும் அவ்வளவு துடிச்சோமே… அம்மா ஹாஸ்பிடல்ல பெட்டோட இருக்காங்களே… அப்போ கூட உங்க ரெண்டு பேருக்கும் உண்மைய சொல்லணும்னு தோணலையாண்ணா?” என துருவ் வருத்தத்துடன் கேட்கவும் அவனின் தோளில் கரம் பதித்த ஜெய், “எலேய்… அப்படி இல்லலே… உனக்காக தான்…” என ஏதோ கூறவும் ஜெய்யின் பேச்சை செவிமடுக்காது அவனின் கரத்தை தட்டி விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் துருவ்.

ஜெய், “அண்ணே… என்னலே இவன்?” என கவலையாக கேட்க, “அவனுக்கு செத்த நேரம் குடுலே… பாவம் பயலு… ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் நீ இல்லாம…” என்றான் முத்துராசு.

_______________________________________________

“என்னலே சொல்ற?” என ராஜதுரை ஆவேசமாகக் கேட்கவும், “ஆமாங்க ஐயா… உங்க மயேன ரெண்டு‌ மூணு நாளா யாரோ ரொம்ப சித்திரவதை பண்ணி இருக்காய்ங்க… அது மட்டுமல்லாம அவரோட ஆணுறுப்பையே‌ ஏதோ ஒரு ஆயுதத்தால பலாத்காரமா அறுத்து இருக்காய்ங்க…” என மருத்துவர் கூற, ராஜதுரையின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, முகமோ கோபத்தில் இறுகி இருந்தது.

‘என் மயேன இப்படி பண்ணது யாருன்னு எனக்கு நல்லா தெரியும்லே… அவியல நான் சும்மா விட மாட்டேன்…’ என மனதில் மேலும் வன்மத்தை வளர்த்துக் கொண்டார் ராஜதுரை.

மாரியின் உடலை பிரேத பரிசோதனைகள் முடிந்து ராஜதுரையிடம் ஒப்படைக்க, அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

ராஜதுரையை கட்சியை விட்டு தூக்கியதுமே அவரின் தொண்டர்களின் ஆதரவை ராஜதுரை இழந்திருக்க, ராஜதுரை இது வரை செய்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பின் இனியும் அவருடன் இருந்தால் தமக்கு ஏதும் பயன் இல்லை என அவரின் அடியாட்களும் ராஜதுரையை விட்டு சென்றிருந்தனர்.

எப்போதும்‌ தனக்கு துணையாக இருக்கும் மகனையும் இழந்து தனக்கு உதவியாக இருந்த அடியாட்களை எல்லாம் இழந்த பின்னும் ராஜதுரையின் சாதி வெறியோ அவரின் குணமோ எதுவும் மாறவில்லை.

அதே கோபத்தில் தனி ஆள் ஆக வீட்டிற்கு வண்டியில் சென்று கொண்டிருந்தவரின் பார்வையில் தூரத்தில் வண்டியில் வந்து கொண்டிருந்த துருவ் படவும் வேகமாக தன் வண்டியை ஓட்டிச் சென்று அவனை வழி மறித்தார்.

ராஜதுரை திடீரென தன் முன்னே வண்டியை நிறுத்தவும்‌ பெருமூச்சு விட்டபடி தன் வண்டியை விட்டு கீழே இறங்கினான் துருவ்.

ஆவேசத்துடன் வண்டியை விட்டு இறங்கிய ராஜதுரை, “எலேய்…. **** சாதிக்கார நாயே… நீயும் உன் அண்ணனும் சேர்ந்துக்கிட்டு என் புள்ளய அநியாயத்துக்கு கொன்னுட்டியேலே சண்டாளா…” எனப் பேசவும் அதிர்ந்தான் துருவ்.

முத்துராசு இதில் சம்பந்தப்பட்டு உள்ளான் என்பது துருவ்விற்கு அதிர்ச்சியாக இருந்தது.

“உங்கள நான் கொல்லாம விட மாட்டேன்லே…” என்ற ராஜதுரை தன் வண்டியில் இருந்த அருவாளை கையில் எடுக்கவும் முத்துராசுவும் ஜெய்யும் அங்கு வரவும் சரியாக இருந்தது.

துருவ் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பியதுமே அவனைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர் இருவரும்.

முதலில் ஜெய்யைக் கண்டு அதிர்ந்த ராஜதுரை சில நொடிகளில் அவ் இடமே அதிர பைத்தியம் போல் சத்தமாக சிரித்தவர், “எலேய்… நீயும் உசுரோட தான் இருக்கியாலே? அப்போ அண்ணன் தம்பிங்க அம்புட்டு பேரும் சேர்ந்து தானா என் மயேன சித்திரவதை பண்ணி கொன்னது?” எனக் கேட்டார் கோபமாக.

முத்துராசு, “ஆமாலே… உன் மயேன நாங்க தான்லே சித்திரவதை பண்ணி கொன்னது… எஙகளுக்கும் உங்க ரெண்டு பேரையும் கொல்லணும்ங்குற ஆசையே இல்ல… நீயி எங்க குடும்பத்தையும் எங்க சனத்தையும் அழிச்சதுக்காக நாம திரும்ப அதையே உனக்கு பண்ணி இருந்தா உனக்கும் எங்களுக்கும் என்னலே வித்தியாசம்?” என்கவும், “எலேய்… நீயி தானே அன்னைக்கு ஃபோன போட்டு மாரிய கடத்தி வெச்சி இருக்குறதா சொன்னியேலே… இப்போ என் மயேன கொன்னுட்டு நல்லவன் போல பேசுறியா?” என ராஜதுரை ஆத்திரத்துடன் கேட்க,

“ஏய் ச்சீ… வாய மூடுலே சாதி வெறி பிடிச்ச மிருகமே…‌ என்னமோ இவரு உத்தமர்… இவரு பெத்து வெச்சதும் மகா உத்தமன் போல பேசுறியேலே… அசிங்கமா இல்லயா உனக்கு? எங்க அண்ணே சொன்னது நெசம் தான்… நீயி எங்க சனத்த கொன்னதுக்காக உங்கள பழி வாங்கணும்னா நாம எப்பயோ உன்னையும் உன் திமிர் பிடிச்ச மயேனையும் உனக்கு சொம்பு தூக்குற உன் அடியாளுங்களையும் போட்டுத் தள்ளி இருப்போம்லே… அம்புட்டு கோழையா எங்க ஆத்தா எங்கள வளர்க்கல… ஒரு சின்ன குழந்தைன்னு பார்க்காம வெறும் உடம்பு பசிக்கு அந்த பச்ச மண்ண சிதைச்சி அதோட ஆசை கனவு அம்புட்டையும் அழிச்சி அந்த வெற்றிப் பயலுக்குன்னு இருந்த ஒரே சொந்தத்தையும் கொன்னான்லே உன் உத்தம புத்திரன்… அதுக்கு நீயும் துணை… வெக்கமே இல்லாம அந்த புள்ளயோட அண்ணன் மேலயே பழிய தூக்கி போட்டியேலே *******… இதை விட அந்த தறுதலைய சித்திரவதை படுத்தி இருக்கணும்… ஆனா அவனே போய் சேர்ந்துட்டான்…” என்றான் ஜெய் ஆவேசமாக.

ஜெய் கூறியவற்றில் இருந்து அவர்கள் செய்த காரியத்தில் நியாயம் உள்ளது எனப் புரிந்து கொண்ட துருவ், “டேய் ஜெய்… இதெல்லாம் எதுக்குடா நீ போய் இவர் கிட்ட சொல்லிட்டு இருக்க? இதெல்லாம் திருந்தாத ஜென்மம்டா… சாதிக்காக சொந்த பொண்ணையே கொலை பண்ண பார்த்தவர் தானேடா இந்த ஆளு… இவன் இப்போ வெறும் பல்லு கழட்டின பாம்பு தான்… இனிமே இவனுக்குன்னு சொல்லி எதுவும் இல்ல…‌ யாருமே இல்ல… இந்த ஆளு கூட இதுக்கு மேல பேசுறதே அசிங்கம்டா… அண்ணா… வாண்ணா நாம அம்மாவ பார்க்க போலாம்… இந்த ஆள இன்னும் கொஞ்சம் நேரத்துல போலீஸ் வந்து தூக்கிட்டு போக போறாங்க… ஆயுசுக்கும் ஜெயில்ல களி திண்ணட்டும்…” என்கவும் முத்துராசுவும் ஜெய்யும் ராஜதுரையைப் பார்த்து கேலியாக நகைத்தனர்.

அதில் மேலும் ஆத்திரம் அடைந்த ராஜதுரை அங்கிருந்து செல்லப் போன மூவரையும் நோக்கி சென்றவர் துருவ்வை வெட்ட அருவாளை ஓங்க, அதற்குள் அருணிமாவின், “மாமா…” என்ற கத்தலும் கூடவே ஒரு துப்பாக்கி வெடிச் சத்தமும் கேட்கவும் சகோதர்கள் மூவரும் அதிர்ந்து திரும்பினர்.

அங்கு அவர்களுக்கு பின்னே ராஜதுரை தலையில் குண்டடி பட்டு கீழே இரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்க, அவருக்கு பின்னே முகத்தில் எதையோ சாதித்த களிப்பிலும் கண்களில் திமிருடனும் கூடவே கண்ணீருடன் கையில் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தார் விஜயா.

விஜயாவின் அருகில் அருணிமா மயங்கிக் கிடக்க, “நிரு…” என கத்தியவாறு துருவ் அவளிடம் ஓடவும் முத்துராசுவும் ஜெய்யும் துருவ்வைப் பின் தொடர்ந்து அங்கு ஓடினர்.

வாழும் வரை சாதியை தன் உயிர் மூச்சாக கருதிக் கொண்டு, அதற்காக வேண்டி பல உயிர்களைக் கொன்று கடைசி நிமிடத்தில் கூட அந்த சாதி வெறியை விடாது தன் மனைவியின் கரத்தாலே யாருமே இன்றி அநாதையாய் உயிரை விட்டார் ராஜதுரை எனும் சாதி வெறி பிடித்த மிருகம்.

_______________________________________________

துருவ் சென்றதும் அருணிமாவுடன் சமையலறையினுள் நுழைந்த விஜயா அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்து கொடுக்க, “ஹை… இதெல்லாம் எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு எப்படிலே தெரியும்?” என கண்கள் ஆச்சர்யத்தில் விரிய கேட்டாள் அருணிமா.

‘உனக்கு வேணா ஆத்தாவ மறந்து இருக்கலாம் அருணி… ஆனா ஆத்தாவுக்கு நீயி தான்லே எல்லாமே…’ என மனதில் நினைத்த விஜயா, “துருவ் தம்பி தான் சொல்லிச்சு… சரிலே… ஆறிடப் போகுது… வெறசா திங்குலே…” எனப் பேச்சை மாற்றினார்.

தனக்கு பிடித்த உணவு வகைகள் என்பதால் அருணிமா குழந்தை போல சப்புக் கொட்டியபடி உண்ண, அதனைக் கண்டு மனம் மகிழ்ந்த விஜயா, “அருணி கண்ணு… ஆத்தா உனக்கு ஊட்டி விடவாலே?” எனக் கேட்க, ஒரு நொடி யோசித்தவள் அடுத்த நொடியே புன்னகையுடன் தட்டை விஜயாவிடம் நீட்டவும் மகிழ்ச்சியுடன் அருணிமாவுக்கு ஊட்டி விட்டார் விஜயா.

இழந்து விட்டதாய் எண்ணிய மகள் மீண்டும் கிடைத்து விட்டதில் விஜயா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க, ராஜதுரை, மாரி யாரைப் பற்றியுமே அவருக்கு கவலை வரவில்லை.

அருணிமா தன் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவள் அருகில் அமர்ந்து அருணிமாவின் தலையை விஜயா வருடிக் கொண்டிருக்க, சரியாக தொலைகாட்சியில் மாரியின் இறப்புச் செய்தியைக் காட்டினர்.

விஜயாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்ன இருந்தாலும் தன் வயிற்றில் முதலில் உதித்த தனக்கு தாய் எனும் அந்தஸ்தை அளித்தவன் அல்லவா?

ஆனால் பின் நாட்களில் மாரியின் நடவடிக்கைகளில் இருந்த மாற்றத்தில் அவனை மொத்தமாகவே வெறுத்திருந்த விஜயா தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டவர் தன்னை மீறி வடிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்டு திரும்ப, அவரின் பார்வையில் பட்டது தொலைக்காட்சி திரையையே வெறித்துக் கொண்டிருந்த அருணிமா தான்.

விஜயா அதிர்ந்து, “அருணி… என்னாச்சுலே…” எனக் கேட்க, அருணிமாவோ, “மா…மாமா… மாமா… நான்… நான் மாமா கிட்ட போகணும்லே… அவிய மாமாவ கொன்னுடுவாய்ங்க… என…எனக்கு பயமா இருக்கு… மாமா… மாமா…” என திடீரென பயத்தில் அழுது கொண்டே உளறியவள், “நான் மாமா கிட்ட போறேன்…” என்று விஜயா எதிர்ப்பாராத நேரம் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

விஜயாவும் வேகமாக அருணிமாவின் பின்னே ஓடினார்.

துருவ் தன் வீட்டை நெருங்கிய வழியிலேயே ராஜதுரை அவனை வழி மறித்து பிடித்துக் கொண்டிருக்க, எவ்வாறோ அவ் இடத்தை அடைந்த அருணிமா கண்டது ராஜதுரை துருவ்வை வெட்ட அருவாளை ஓங்கிக் கொண்டிருப்பதைத் தான்.

அதில் உடனே அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மங்கலாக நினைவு வர, அதிர்ந்த அருணிமா, “மாமா…” எனக் கத்திக் கொண்டு மயங்கிச் சரிந்தாள்.

ஆனால் அங்கு வந்த விஜயாவோ ராஜதுரை துருவ்வைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு ஒரு நொடி கூட யோசிக்காது அங்கு ராஜதுரையின் வண்டியில் இருந்த துப்பாக்கியை எடுத்து நேராக ராஜதுரையின் தலையில் சுட்டார்.

தன் கணவனைத் தன் கையாலேயே கொன்றது விஜயாவைக் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை.

மாறாக பல வருடங்கள் கழித்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாகவே உணர்ந்தார்.

_______________________________________________

மயங்கிக் கிடந்த அருணிமாவிடம் ஓடிய துருவ், “நிரு… நிரு… என்னாச்சு நிரு…” எனப் பதற, அங்கு சிலை போல் நின்றிருந்த விஜயாவிடம் முத்துராசு, “அம்மா… என்னலே இப்படி பண்ணிட்டீய…” என்றான் வருத்தமாக.

“அண்ணா… நிரு… நிரு கண்ணு தெறக்க மாட்டேங்குறாண்ணா… எனக்குப் பயமா இருக்குண்ணா…” என துருவ் பதற, அவனைப் பார்த்து புன்னகைத்த விஜயா, “தம்பி… நீயி பயப்படாதேலே… என் புள்ளக்கி ஒன்னும் ஆகாது… அவ உனக்காக அந்த எமனையே எதிர்த்து போராடுவா… அம்புட்டு பாசம் வெச்சி இருக்குதுலே உன் மேல… இம்புட்டு நாளும் என் புள்ளய பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு நன்றி தம்பி… இனிமேலும் நீயி தான்லே என் அருணிய பார்த்துக்கணும்… அவளுக்கு நீயி மட்டும் தான் எல்லாமே…” எனக் கண்கள் கலங்கக் கூற,

விஜயாவின் பேச்சைக் கேட்டு துருவ்வும் முத்துராசுவும் புரியாது விளிக்க, ஜெய் ஏதோ புரிந்தவனாக அதிர்ந்தவன், “அம்மா… அந்த துப்பாக்கிய என் கிட்ட குடுலே முதல்ல…” என்கவும் அவசரமாக அதனைத் தனக்குப் பின்னே மறைத்தவாறு இரண்டடி பின்னால் நகர்ந்த விஜயா, “என்னை மன்னிச்சிருலே பசங்களா… என் புள்ள இனிமே உங்க பொறுப்பு… துருவ் தம்பி… என் அருணிய உன்னை நம்பி தான்லே விட்டுட்டு போறேன்… இப்படி ஒரு சாதி வெறி பிடிச்ச மனுஷனுக்கு கழுத்த நீட்டினதுக்கும் பச்ச மண்ணுன்னு கூட பார்க்காம ஒரு குழந்தைய சிதைச்ச தறுதலைய பெத்த பாவத்துக்கும் நான் இனிமே உசுரோட இருக்குறதே அர்த்தம் இல்லலே…” எனக் கண்ணீருடன் கூறியவர், சகோதர்கள் மூவரும் சுதாகரித்து அவரை நோக்கி எழுந்து வர முன்னே தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்