Loading

அலமேலுவைப் பார்த்து விட்டு மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட துருவ் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி இரவுணவை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

 

துருவ் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள் நுழையவும் ஓடி வந்து அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அருணிமா.

 

துருவ், “நிரு…” என அழைக்கவும் அவன் கழுத்தில் முகம் புதைத்த அருணிமா, “ஏன் மாமா இம்புட்டு நேரமா வரல நீயி… எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சுலே…” என மூக்கு இழுத்து இழுத்து பேசவும், “சாரிடா… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… இனிமே இப்படி நடக்காதுடா…” என்றான் துருவ்.

 

அருணிமா, “மாமா… எனக்கு இன்னைக்கு சாக்கி கொண்டு வந்தியாலே…” ஆர்வமாகக் கேட்க, அவள் முன் ஒரு இன்னட்டை எடுத்து நீட்டினான் துருவ்.

 

“ஹை… சாக்கி…” என அவனை விட்டு இறங்கிய அருணிமா அதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவளைக் கலங்கிய கண்களுடன் நோக்கிய துருவ்வின் செவியில், “அவங்க தலைல பலமா அடிபட்டதால அவங்களோட மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு… ஒரு சின்ன குழந்தையோட மனநிலைல தான் அவங்க இருக்காங்க இப்போ… நீங்க அவங்கள பார்த்துக்குற விதத்துல தான் அவங்க குணமடைய வாய்ப்பு இருக்கு… அவங்க கண் முழிச்சதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு உங்களை நினைவு இருக்கான்னு தெரியும்…” என்ற மருத்துவரின் குரல் ஒலித்தது.

 

அருணிமாவுக்கு தெரியாமல் தன் கண்களைத் துடைத்துக் கொண்ட துருவ், “நீ போய் சாக்லேட்ட சாப்பிட்டுட்டு இரு நிரு… நான் போய் சீக்கிரம் ஃப்ரெஷ்ஷாகிட்டு வரேன்… ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடலாம்…” எனப் புன்னகையுடன் கூறவும் அவனுக்கு சரி எனத் தலையை எல்லா பக்கமும் ஆட்டி விட்டுச் சென்றாள் அருணிமா.

 

சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி வந்த துருவ் மேசையில் உணவை எடுத்து வைத்து அருணிமாவை சாப்பிட அழைக்க, அவளோ நீள் சாய்விருக்கையில் படுத்தவாறு வாயில் இன்னட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் சின்சான் பார்ப்பதில் மும்முரமாக இருந்தாள்.

 

துருவ், “நிரு… லேட் ஆகிடுச்சு… நீ டேப்லட்ஸ் போட்டுட்டு தூங்கணும்… வந்து சாப்பிடு…” என மீண்டும் அழைக்க, அருணிமாவிடமிருந்து பதில் வராது போகவும் பெருமூச்சு விட்டவன் இருவருக்குமான உணவைத் தட்டில் போட்டுக் கொண்டு சென்று நீள் சாய்விருக்கையில் அமரவும் அவசரமாக எழுந்து துருவ்வைப் பார்த்து புன்னகைத்தாள் அருணிமா.

 

துருவ் ஒரு வாய் எடுத்து ஊட்டவும் சிரித்தவாறு அதனைப் பெற்றுக் கொண்ட அருணிமா மீண்டும் தொலைக்காட்சியிலேயே பார்வையை செலுத்த, உணவு முழுவதையும் அவளுக்கே ஊட்டி விட்டான் துருவ்.

 

தட்டிலிருந்த உணவு முடிந்தது கூட தெரியாது தொலைக்காட்சியைப் பார்த்தவாறே அருணிமா மீண்டும் வாயைத் திறக்க, துருவ் அவள் வாயில் மருந்தைத் திணிக்கவும் அருணிமாவின் முகம் போன போக்கைப் பார்த்து துருவ்வின் முகத்தில் புன்னகை அரும்பியது‌.

 

அருணிமா வாயிலிருந்த மருந்தை வெளியே துப்பப் பார்க்க, “ஷ்ஷ்ஷ்..‌ ஒழுங்கா சாப்பிடணும்… இல்லன்னா எப்பவும் போல வீட்டுலே தான் இருக்கணும்… எங்கயும் வெளியே கூட்டி போக மாட்டேன்..‌. டேப்லெட்ஸ் போட்டா தான் சீக்கிரம் குணமாகும்… சீக்கிரம் குணமானா தான் வெளிய போக முடியும்…” என்ற துருவ் அருணிமாவிற்கு நீரைப் பருக்க, வேகமாக வாயிலிருந்த மருந்தை விழுங்கியவள், “ஆனா எனக்கு தான் ஒன்னும் இல்லயே மாமா… நீயி ரொம்ப மோசம்லே… போ… நான் உன் கூட டூ விட்டுட்டுட்டேன்…” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அருணிமா.

 

ஆனால் துருவ் எவ்வாறு அவளின் நிலையை விளக்குவான்? அதனை புரிந்து கொள்ளும் மனநிலை அருணிமாவுக்கு உள்ளதா?

 

கையிலிருந்த தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை சென்ற துருவ் அதனைக் கழுவி வைத்து விட்டு அருணிமாவிடம் வந்தவன், “சரி நீ போய் தூங்கு நிரு…” என்றவன் நீள் சாய்விருக்கையில் அமர்ந்து அருணிமாவின் கையிலிருந்த ரிமோட்டைப் பறித்து சேனலை மாற்றினான்.

 

அருணிமாவோ துருவ்வையும் தொலைக்காட்சியையும் மாறி மாறிப் பார்த்தவள் துருவ்வே எதிர்ப்பார்க்காத நேரம் அவன் மடியில் தலை வைத்துப் படுக்கவும் அதிர்ந்த துருவ், “ஹேய் நிரு… என்ன பண்ற நீ… உன்ன நான் ரூமுக்கு போய் தானே தூங்க சொன்னேன்…” என்று கூறவும் மறுப்பாக தலையசைத்த அருணிமா, “முடியாதுலே… நீயி தினமும் என் கூடவே தூங்குவேன்னு சொல்லிட்டு நான் தூங்கினதும் என்னைத் தனியா விட்டுட்டு போயிருவீய… அதனால இன்னைக்கு உன்ன விட மாட்டேன் மாமா…” என சிணுங்கலுடன் கூற, “இல்ல நிரு நான்…” என துருவ் ஏதோ கூற வரவும் அவசரமாக துருவ்வின் வயிற்றில் முகம் புதைத்து கண்களை மூடிக் கொண்டாள் அருணிமா.

 

தன் நெற்றியை அழுத்தத் தேய்த்த துருவ் என்ன செய்வது எனப் புரியாது இருக்கையில் சாய்ந்து கண்ணை மூட, அவனின் கரமோ தானாக அருணிமாவின் தலையை வருடி விட்டது.

 

_______________________________________________

 

மறுநாள் துருவ் தன் அலுவலகத்தில் அமர்ந்திருக்க, திடீரென அவனின் அறைக்குள்‌ நுழைந்தார் ஒருவர்.

 

தன்னை முழுதாக போர்வையொன்றால் போர்த்தியபடி‌ முகம் தெரியாதவாறு வந்தவரை துருவ் கேள்வியாகப் பார்க்க, அவரின் பின்னே ஓடி வந்த செக்கியூரிட்டி, “சாரி சார்… நான் எம்புட்டு சொல்லியும் கேக்காம இவிய பாட்டுக்கு உள்ள வந்துட்டாய்ங்க…” என்க, “சரி நீங்க போங்க… நான் பார்த்துக்குறேன்…” என அவரை அனுப்பி வைத்தான் துருவ்.

 

பின் தன் முன் முகத்தை மூடியபடி நின்றிருந்தவரைப் பார்த்து துருவ், “யாரு நீங்க… எதுக்காக என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க… ஏதாவது மனு கொடுக்கனுமா?” எனக் கேட்கவும் தன் முகத்திரையை விலக்கியவரைப் பார்த்து அதிர்ந்தான் துருவ்.

 

துருவ், “அம்மா நீங்க…” என எழுந்து நிற்க, யாருக்கும் தெரியாதவாறு தன்னைப் போர்வையால் மூடிக் கொண்டு அங்கு வந்திருந்த விஜயா துருவ்வைப் பார்த்து கை கூப்பியவர், “என் புருஷனோட அக்கிரமத்துக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டுலே…” எனக் கண்ணீர் வடிக்க, “ஐயோ அம்மா… முதல்ல கைய கீழ போடுங்க… பெரியவங்க நீங்க… முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க…” எனக் கேட்டான் துருவ்.

 

“உனக்கு தான் தெரியும்லே தம்பி… அந்தப் பாவி மனுஷங்க என பொண்ணையே கொன்னுட்டாய்ங்க… அம்புட்டு சாதி வெறி அவியலுக்கு… அவிய பண்ணுற அம்புட்டையும் நான் பொறுத்து போனதே என் புள்ளைக்காக தான்… இப்போ அவளே இல்லாம போய்ட்டா… இதுக்கு மேல நான் எதுக்குலே சும்மா இருக்கணும்… அந்தாளுங்க என்னைக் கொன்னு போட்டாலும் பரவாயில்ல… அதுக்கு முன்னால அவிய பண்ற பாவத்தை உன் கிட்ட சொல்லணும்லே… உன்னால தான் தம்பி அவியல எதிர்க்க முடியும்…” என்ற விஜயா அதன் பின் கூறிய செய்தியைக் கேட்டு முதலில் அதிர்ந்தவன் கோபத்தில் கண்கள் சிவக்க நின்றான்.

 

துருவ், “நீங்க பயப்படாதீங்கமா… நான் எல்லாம் பார்த்துக்குறேன்… அவங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது… அதுக்கு நான் பொறுப்பு…” என்றான்.

 

_______________________________________________

 

“என்னலே சொல்ற? நெசமா? அவனுக்கு எம்புட்டு தில்லிருந்தா இந்தக் காரியத்தை பண்ணியிருப்பான்லே?” எனக் கோபமாக கைப்பேசியில் பேசிய ராஜதுரை, “எலேய் மாரி… எடுலே அந்த வண்டிய… இன்னைக்கு அந்த ****சாதிக்கார நாய சும்மா விட மாட்டேன்…” என்றார் ஆவேசமாக.

 

மாரி உடனே வண்டியை இயக்கியதும் அதில் ஏறிய ராஜதுரை, “வண்டிய நம்ம ஃபேக்டரிக்கு விடுலே…” எனக் கட்டளையிடவும் வண்டி ராஜதுரையின் தொழிற்சாலையை நோக்கி புறப்பட்டது.

 

ராஜதுரையின் ஃபேக்டரி முழுவதும் அரச அதிகாரிகளால் சோதனை இடப்பட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த ராஜதுரை, “என்ன நடக்குதுலே இங்குட்டு? யாரை கேட்டு என் ஃபேக்டரிய சோதனை பண்ணிட்டு இருக்கீய… நான் யாருன்னு தெரியுமாலே?” எனக் கேட்டார் கோபமாக.

 

“சாரி சார்… உங்க சுகர் ஃபேக்டரியில ட்ரக் இஷூ பண்றதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு… அதனால தான் உங்க ஃபேக்டரிய சர்ச் பண்ணிட்டு இருக்கோம்… எங்க வேலைய இடையூறு செய்யாம இருக்குறது உங்களுக்கு நல்லது…” என ஒரு அதிகாரி கூறவும் அதிர்ந்த ராஜதுரை மாரியைக் கேள்வியாக நோக்க, அவனோ தெரியாது என்பது போல இடவலமாக தலையசைத்தான்.

 

ராஜதுரை, “எலேய் மாரி… உடனே நம்ம பழனிக்கு ஃபோன போடுலே…” என்கவும் மாரி தன் கைப்பேசியில் பழனிக்கு அழைத்து காதில் வைக்கவும் அவன் கையிலிருந்த கைப்பேசி பறிக்கப்பட்டது.

 

மாரி கோபமாக யாரெனத் திரும்பிப் பார்க்க, மாரியின் கைப்பேசியைக் கையில் வைத்து ஆட்டியபடி நின்று துருவ், “உங்க ஃபேக்டரிய சர்ச் பண்ணி முடிக்கும் வரை உங்களால யாருக்கும் கால் பண்ண முடியாது…” எனப் புன்னகையுடன் கூறவும், “ஏய்…” என ராஜதுரை கத்த, “சார்… கண்டுபிடிச்சிட்டோம் சார்… எங்களுக்கு கிடைச்ச தகவல் உண்மை தான்…” என ஒரு அரச அதிகாரி துருவ்விடம் வந்து கூறினார்.

 

ராஜதுரையை ஒரு பார்வை பார்த்து விட்டு துருவ் அவர்களுடன் செல்ல, அங்கு சீனி உற்பத்தி செய்யப்பட்டு இறுதியாக பொதி செய்யும் இடத்திற்கு இரண்டாக பிரிந்து சென்று அதில் ஒரு பக்கம் சாதாரணமாக சீனி பொதி செய்யப்பட, இன்னொரு பக்கம் சீனியுடன் சேர்த்து போதைப்பொருள் கலக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

 

துருவ், “இந்த ஃபேக்டரி மொத்தமா சீல் வைங்க… ஃபேக்டரிக்கு பொறுப்பானவங்களை உடனடியா விசாரணை பண்ணுங்க…” எனக் கோபமாகக் கட்டளையிட்டான்.

 

ராஜதுரையும் மாரியும் எவ்வாறு இதிலிருந்து தப்பிப்பது என சிந்தித்துக் கொண்டிருக்க, சற்று நேரத்திலே மீடியாவும் போலீஸும் அவ் இடத்திற்கு வருகை தந்தது.

 

அவ் இடமே பரபரப்பாகக் காணப்பட, அரச அதிகாரிகள் ராஜதுரையின் தொழிற்சாலையில் சீல் வைக்க, போதைப்பொருள் விற்பனை செய்ததால் போலீஸ் ராஜதுரையை கைது செய்ய முனைய, “யாரலே அரெஸ்ட் பண்ண பார்க்குறீய… இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… இந்த ஃபேக்டரியே என் பேருல இல்லலே…” என ராஜதுரை கூறவும் துருவ் அதிர்ந்து அவரைப் பார்க்க, துருவ்வைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்த ராஜதுரை, “என் பங்காளி பேர்ல தான்லே இந்த ஃபேக்டரி இருக்கு… அவியல கூப்பிட்டு விசாரிலே…” என்றார்.

 

பின் போலீஸ் விசாரித்துப் பார்த்ததில் அந்த ஃபேக்டரி வேறொருவரின் பெயரில் இருக்கவும் ராஜதுரையைக் கைது செய்யாது செல்ல, ஃபேக்டரிக்கு சீல் வைத்து விட்டு அனைவரும் சென்றதும் அங்கு நின்று துருவ்விடம் சென்ற ராஜதுரை, “பெரிய தப்பு பண்ணிட்டேலே… இதுக்கு நீயி இன்னும் அனுபவிப்ப… என்னலே நினைச்ச… இந்த ராஜதுரைய அம்புட்டு சீக்கிரமா கீழ தள்ள முடியும்னா… இம்புட்டு வருஷமா அரசியல் பண்ணுறோம்… இதை பத்தி எல்லாம் யோசிக்காமலா இருந்து இருப்போம்?” எனக் கூறிச் சிரித்தவர், “இனிமே தான்லே உனக்கு கெட்ட நேரம் ஆரம்பம்…” என துருவ்வின் முன் விரல் நீட்டி எச்சரித்து விட்டு செல்ல, துருவ்வை முறைத்து விட்டு அவரைத் தொடர்ந்து சென்றான் மாரி.

 

_______________________________________________

 

இரவு கோபமாக துருவ் தன் வீட்டிற்கு வர, அருணிமா ஹாலில் கார்டூன் பார்த்தவாறே உறங்கி இருந்தாள்.

 

அவளைப் பார்த்ததுமே துருவ்வின் கோபம் வந்த இடமே தெரியாமல் பறந்து விட, அவளின் அருகில் சென்று தலையை வருடி விடவும் பட்டென கண் விழித்த அருணிமா, “மாமா…” என்றவாறு அவனை அணைத்துக் கொண்டாள்.

 

தன்னை அணைத்து இருந்த அருணிமாவின் உடல் நடுங்குவதை உணர்ந்த துருவ், “என்னாச்சு நிரு… ஏன் ஷிவர் ஆகுற…” எனப் பதட்டமாகக் கேட்க, “மாமா… மாமா… பயமா இருக்கு மாமா… அவிய வராய்ங்க..” என அழுதாள் அருணிமா.

 

“ஒன்னும் இல்லடா… யாரு வராங்க… என்னாச்சு…” என துருவ் கேட்கவும், “அவிய வராய்ங்க மாமா… உங்கள கொல்ல வராய்ங்க மாமா… பயமா இருக்குலே… உங்கள அடிக்கிறாய்ங்க… உங்கள அவிய ஏதாவது பண்ணிருவாலே…” என அருணிமா பயத்தில் அழுதவாறு உளறியவள், “ஆஹ்… வலிக்கிது மாமா…. வலிக்கிது…” என தலையைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

 

துருவ், “ஒன்னும் இல்லடா… நிரு… இங்க பாரு… இங்க பாரு… நான் உன் கூட தான்டா இருக்கேன்… பாரு… உன் மாமா உன் கூட தான் இருக்கேன்… என்னைப் பாரு…” என அருணிமாவை சமாதானம் செய்ய முயல, “பயமா இருக்குலே மாமா… வேணாம்… மாமா… மாமா…” என அழுதவாறே துருவ்வின் கரத்தில் மயங்கிச் சரிந்தாள் அருணிமா.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்