Loading

 

​மரம் தேடும் மழைத்துளி — 27

​தாலி கட்டியது தன்னுடைய தவறு என்று எண்ணிய சரவணனால், தன்னுடைய தாயிடம் எதுவும் பேச இயலவில்லை. அவனுக்கு வார்த்தைகளே எழவில்லை.

​லட்சுமி, “வாடா… நான் பெத்த வல்லாள கண்டா! எங்கடா இருக்கா இந்தச் சின்ன சிறுக்கி பெத்த மக? ‘அய்யய்யோ அப்பா… எனக்கு இந்தத் தாலி வேண்டாம், இந்தா கழட்டப் போறேன்’னு நாடகம் நடிச்சுக்கிட்டு நின்னாளே, கழட்டி எறிஞ்சுட்டாளா? இல்ல இன்னும் கழுத்துல தொங்க விட்டுட்டு அலையறாளா?” என்று கத்தினாள்.

​சுப்பு, “அய்யய்யோ மதினி! கட்டுன உடனே அறுக்கறதை பத்தி பேசுறீங்களே, அது பாவம் மதினி.”

​“உங்களையெல்லாம் இத்தனை நாளும் பாவம்னு நெனச்ச நான் தாண்டி பாவம். தாலியை அறுக்குறதைப் பேசுறது பெரிய பாவமாமா? இவ கண்டுபிடிச்சிட்டா… ஏற்கனவே உன் மகள் அறுத்துக் கட்டுனவ தானடி!”

​மாரியம்மாள், “மதினி… நீங்க என்ன நாலு அடி வேணாலும் அடிச்சுக்கோங்க. என் புள்ளையைச் சபிக்காதீங்க. அது இந்தச் சின்ன வயசுலயே தாலி அறுத்துட்டு நிராதரவா நின்னுகிட்டு இருந்துச்சு. ஏதோ உங்க மகன் கொஞ்சம் இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுத்திருக்காரு. அதை நீங்களே கொச்சைப்படுத்திடாதீங்க மதினி….”

​லட்சுமி, ரவியைச் சுட்டிக்காட்டி, “உன் மகளுக்கு என் மகன்தான் தாலி கட்டணும்னு எந்தப் பய சொன்னாண்டி? இவனை வச்சு கட்டச் சொல்லி இருக்க வேண்டியதுதானே?” என்றாள்.

​ரவிக்குச் சுள்ளென்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷி மாதிரியா பேசுற?” என்று அவன் ஆரம்பிக்க, அவசர அவசரமாகச் சரவணன் அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

​மாரியம்மாளும் சுப்புவும் ரவியைக் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடினார்கள். “நம்ம புள்ள தலையில நம்மளே மண்ணள்ளிப் போட்டுடக் கூடாது தம்பி” என்று சுப்பு சொல்ல, மாரியம்மாளோ, “உன் ஆத்திரம் தீர என்னை அடிச்சுக்கோ, அத்தைகிட்ட மன்னிப்பு கேளுப்பா” என்றார்.

​ரவி, “அவ பொம்பளையே இல்லைன்னு சொல்றேன், அவகிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்றீங்க! என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, அண்ணனைத் தங்கச்சிக்குத் தாலி கட்டச் சொல்லுவா?” என்று ஏகிறான்.

​சுந்தரி, “நீ நல்ல ஆம்பளையா இருந்தா வந்து அடிடா எங்க அம்மாவை!” என்று சவாலிட்டாள்.

​லட்சுமி, “அண்ணன் தங்கச்சியா? ஏற்கனவே உன் தங்கச்சி, அண்ணனுக்குக் கட்டி அறுத்துவிட்டு, இப்போ தம்பி கையால தாலி வாங்கணும்னு வந்தாளே… அவளை என்னடா செய்யப் போறே? என்கிட்ட வந்து ஏகுறே!”

​ரவியைக் கட்டிப்பிடித்து நின்ற சரவணன், “மாப்பிள்ளை, எங்க அம்மா பேசுன பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். கொஞ்சம் அமைதியா இரு” என்றான்.

​அதே நேரத்தில், வீட்டுக்குள் இருந்து குடம் உருளும் சத்தமும், குழந்தையின் அழுகைச் சத்தமும் கேட்டது. சுப்பு வீட்டுக்குள் சென்று பார்த்துவிட்டு, “ஐயையோ ஆத்தா… நாம மோசம் போயிட்டோமே…” என்று அலறினார்.

​லட்சுமி வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்க, மற்றவர்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள்.

​வீட்டுக்குள் ருக்மணி, தொட்டில் கட்டும் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள்!

​சரவணன் ஓடிப்போய் அவளது காலைத் தூக்கிப் பிடித்து, கழுத்தை இறுக்கும் கயிற்றின் இறுக்கத்தைக் குறைத்தான். ரவி சட்டென்று அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு போய் கயிற்றை அறுத்துவிட்டான்.

​கண்கள் நிலை குத்தி, வாய் பிளந்து, எச்சில் ஒழுகத் தரையில் விழுந்தாள் ருக்மணி.

​மாரியம்மாள் ருக்மணியின் கழுத்தில் விளக்கெண்ணெய் தடவியபடி, “பாதகத்தி, எம்புள்ளையைக் கொல்ல வந்திட்டாளே…” என்று புலம்பிக்கொண்டிருந்தார். சுப்பு ஒருபுறம் நெஞ்சில் அடித்து அழுதுகொண்டிருந்தார்.

​இந்தக் கலவரத்தில் லட்சுமியும் சுந்தரியும் வாயடைத்துப் போனார்கள்.

​விரைந்து சென்ற ரவி, ஆட்டோவோடு திரும்பி வந்தான். சரவணன் ருக்மணியை அள்ளித் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி அமர, மாரியம்மாளும் சுப்புலட்சுமியும் உடன் ஏறிக்கொண்டார்கள். அனைவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

​அரசு மருத்துவமனையில், முறைப்படி போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் சிகிச்சையை ஆரம்பித்தார்கள்.

​நல்வாய்ப்பாகச் சிகிச்சையில் ருக்மணி உயிர் பிழைத்தாள்.

​சரவணனோடு மாரியம்மாளும் சுப்புலட்சுமியும் ஒன்றாய் நின்று அழுதுகொண்டிருக்க, அவர்களைச் சந்தித்த மருத்துவர், “பயப்படுவதற்கு ஒன்னும் இல்லம்மா… மூச்சு அடைச்சு மயங்கிட்டாங்க. பொதுவா கயித்துல தொங்குன யாரும் பிழைக்கிறது கஷ்டம். நீங்க உடனே காப்பாத்துனதுனால பெருசா பாதிப்பு இல்லை. கயிறு இறுக்குனதுனால கழுத்தை கொஞ்ச நாளைக்கு நிமிர்த்த முடியாது. களிம்பு (ointment) கொடுக்கிறேன், தடவிக்கிட்டே வாங்க. கொஞ்ச நாள் படுக்கையிலயே இருந்து பாதுகாப்பா பாத்துக்கணும்” என்றார்.

​மாரியம்மாளும் சுப்புலட்சுமியும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்து மருத்துவர் காலில் விழுந்தார்கள்.

​மருத்துவர், “எம்மா எம்மா… எந்திரிங்க. நீங்க எனக்கு அம்மா மாதிரி, என்னைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீங்க” என்றார்.

​சுப்பு, “அப்படி இல்லீங்க தம்பி… ஒரு உயிரைக் காப்பாத்துன நீங்கதான்யா எங்களுக்குத் தெய்வம். இன்னைக்கு அந்தப் புள்ள இறந்து போயிருந்தா, அது பெத்துப்போட்ட புள்ள அனாதையா தெருவுல நின்னிருக்குமே” என்று அடக்க முடியாமல் அழுதார்.

​சரவணன் அத்தனை நிகழ்வுகளையும் இமைகொட்டாமல் பார்த்து கண்ணீர் வடித்தான். ருக்கு படுத்திருக்கும் படுக்கைக்குச் சென்று பார்த்தான். கழுத்தில் கருப்பாய்த் தைலம் தடவியிருந்தார்கள். மூச்சு விடுவதற்குச் சிரமப்படாமல் இருக்க ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தியிருந்தார்கள். இடது கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, கிழிந்த சருகாய்க் கிடந்தாள் அவள்.

​அங்கிருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வேக வேகமாகத் தன்னுடைய வீட்டுக்கு நடந்தே சென்றான் சரவணன். அங்கே பார்வதி முதலில் எதிர்ப்பட்டார். “சரவணா, ருக்குக்கு எப்படிய்யா இருக்கு?” என்றார் பதற்றமாய்.

​சரவணன், “போதுங்க பெரியம்மா, உங்க கரிசனத்தைக் குறைச்சுக்கோங்க. அண்ணனுக்கு அவ பொண்டாட்டியா வந்து இந்த வீட்ல என்ன சந்தோஷத்தை அனுபவிச்சா? இனிமேலாவது நல்லா இருக்கட்டுமே? ஏன் அவ சந்தோஷமா இருந்திடக் கூடாதுன்னு நினைக்கிறீங்க?” என்றான் கோபமாய்.

​பார்வதி, “இல்ல சரவணா, அவ நல்லா இருக்கட்டும்னுதான் அவளை இந்த வீட்டை விட்டுப் போகச் சொன்னேன். இந்தக் கூட்டுக்குள்ள அவ எங்க திரும்பிப் பார்த்தாலும் முருகன் நினைப்பாவே இருக்குமே, அவனை மறக்க முடியாமல் தவிப்பாளேன்னுதான் வீட்டுக்குப் போகச் சொன்னேன்” என்றார்.

​“நல்ல எண்ணத்தோட அனுப்பி வச்சவங்க, ‘என் மூஞ்சில முழிக்காதே, என் வாசலுக்கு வராதே’ன்னு வாழ்த்தியா அனுப்பி வச்சீங்களா? இனிமேலாவது நாடகத்தனமா இல்லாம இயல்பா வாழப் பாருங்க” என்று சொல்லிவிட்டு, அவரது பதிலைக்கூடக் கேட்காமல் விரைந்து வீட்டுக்குள் சென்றான்.

​கிருஷ்ணன், “வாடா சரவணா… எப்படிடா இருக்கா அவ?” என்றார் ஆர்வத்தோடு. லட்சுமியும் விரைந்து வந்து ஒதுங்கி நின்றுகொண்டாள்.

​சரவணன், “உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க. தாலி கட்டிய தப்பு பண்ணது நானு. எதுக்காக அவளை அம்மா தரங்கெட்டத்தனமா பேசுறாங்க? அவளும் இந்த வீட்டுல நமக்குத் தெரிஞ்சு ஒரு வருஷம் இருந்துட்டா. ஏதாவது தவறா, தப்பா என்னைக்காவது ஒரு நாள் நடந்திருப்பாளா? அவளைப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும், அவளை அசிங்கப்படுத்தணும்னு எதுக்காக அம்மா நினைக்கிறாங்க? இன்னைக்கு அவ செத்துப் போயிருந்தா, அந்தப் பிள்ளைக்கு இவங்க என்ன பதில் சொல்லுவாங்க? இனிமே நான் உங்க மூஞ்சியிலயே முழிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்ப்பா. தயவுசெஞ்சு எந்த உறவுமுறையும் சொல்லி என்னை யாரும் கூப்பிடாதீங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

​சரவணன் வாசல் தாண்டியிருக்க மாட்டான், கிருஷ்ணனின் அருகில் வந்த லட்சுமி, “கயித்துல தொங்குனவங்க உயிர் பிழைக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க, இவ நல்லா இருக்கான்னு சொல்லிட்டுப் போறான்… அதுவும் நாடகம்தானா?” என்று விவரம் கேட்க, அவளை ஓங்கி அறைந்தார் கிருஷ்ணன்! வாசலில் நின்றபடி அதைக் கேட்டுவிட்டு வேகமாகச் சென்றான் சரவணன்.

​மருத்துவமனையில் ருக்மணி மெல்லக் கண் திறந்தாள். குரல்வளையைக் கயிறு கொண்டு அழுத்தியதால் அவளால் பேச முடியவில்லை. தூக்கில் தொங்க எண்ணிக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டாள் தான்; ஆனால் கயிறு இறுக்கத் தொடங்கியதும் மரண பயத்தில் தன் கையாலேயே கயிற்றைப் பிடித்துத் தொங்கிவிட்டாள். அந்த உயிர் போராட்டத்தில், அவள் நின்றிருந்த குடத்தை உதைத்துத் தள்ளியதால்தான் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து கயிற்றைத் தளர்த்தினார்கள். அதனால்தான் இன்று உயிர் தப்பியிருக்கிறாள்.

​மாரியம்மாள், “காபி தண்ணி குடிக்கிறியா?” எனக் கேட்க, ருக்மணிக்கு வாய் திறந்து பேச முடியாததால், ‘வேண்டாம்’ என்று தலையசைத்தாள். கழுத்து சுளீரென்று வலியை ஏற்படுத்தியதும், “ஸ்ஸ்…” என்று சத்தமிட்டபடி அப்படியே கண்ணை மூடிக்கொண்டாள்.

​மாரியம்மாள், “பார்த்துப் படு தாயி” என்று தலையைத் தடவிக்கொடுத்தார். “பெரியம்மா ஜூஸ் வாங்கிட்டு வரப் போயிருக்கா. கொஞ்சம் கொஞ்சமா உறிஞ்சுக் குடி. எதுக்கு எடுத்தாலும் இந்த முடிவை எடுத்துட்டுச் சீரழியிறது யாரு? நம்மதானே! எந்தச் சாமி புண்ணியமோ காப்பாத்திக் கொடுத்திருச்சு. கொஞ்சம் பலமா இறுக்கியிருந்தா நீ நிம்மதியா போய் சேர்ந்திருப்பே; நீ போன கவலையில நானும் போய்ச் சேர்ந்திருப்பேன். ஆனா நீ பெத்துப்போட்ட புள்ள, அனாதையா நிக்கும். இப்ப வந்து சதிராடிட்டுப் போனாளே… அவகிட்ட உன்னை ஒப்படைச்சுட்டுத் தெருவுல பிச்சை எடுத்துக்கிட்டு அலைய வேண்டியிருந்திருக்கும். அதெல்லாம் யோசிச்சுப் பார்க்க வேண்டாமா? அந்தப் பையன் நீ நல்லா இருக்கணும், உன் பிள்ளை நல்லா இருக்கணும்னு எடுத்த முடிவு ரொம்ப நல்ல முடிவு. அது மத்தவங்களுக்குப் பிடிக்கல. பிடிக்காதவங்க சில சில்லறை வேலைகளைப் பார்ப்பாங்க, அதுக்காக உயிரை மாய்க்க முடியுமா? எதிர்த்துத் தைரியமா நின்னு போராடி ஜெயிச்சுக் காட்டணும்.

​பொம்பளைதானேன்னு நம்மள நாமளே குறைச்சு நெனச்சுக்கிட்டோம்னா முடங்கிப் போயிருவோம். ஆம்பளையை விடப் பொம்பளைக்கு வீரம் அதிகம். ஆம்பளையையே பெத்துப்போடுறவ பொம்பளைதான். தான் திடமா இருந்தா மட்டும்தான் இந்த உலகத்துல வாழ முடியும். பேசுற நாய் ஆயிரம் பேசட்டும், ஒவ்வொரு நாய்க்காகவும் நம்மள நாமளே வருத்திக்க முடியுமா? நீ கயித்துல தொங்கிட்டு இருக்கப்போ, ஓடியாந்து உன்னைத் தூக்கிப் பிடிச்சு காப்பாத்துனது அந்தப் பையன் (சரவணன்). வாய் திறந்து பேசல, அழுகல, ஆனா அவன் மனசு பூரா அம்புட்டு வருத்தம் நிறைஞ்சு கிடந்துச்சு. அதைப்பார்த்த எனக்குத்தான் தெரியும். நீ அவன்கூட நல்லபடியா வாழணும்னு நானும் ஆசைப்படுறேன். நான் தான் தாலி அறுத்து எதுவும் வேண்டான்னு முண்டச்சியா வாழ்ந்து முடிச்சிட்டேன். உனக்கு ஒரு மகராசன் வாழ்க்கை கொடுக்கத் துணிஞ்சு வந்திருக்கான். அவனை நீ தாங்கிப் பிடிக்க வேண்டாம், கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே போதும். வெளியில நடக்குற பிரச்சனைக்காக உன்னை நீயே வதைச்சுக்காதே” என்று தேற்றிக்கொண்டிருந்தார்.

​ருக்மணிக்குச் சரவணன் மேல் பரிவு வந்ததோ இல்லையோ, சாவு என்பது எத்தனை வலி நிறைந்தது என்று இப்போதுதான் புரிந்தது. இனி எப்போதும் தற்கொலை முயற்சி செய்ய மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தாள்.

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்