
மரம் தேடும் மழைத்துளி — 21
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகனை, அங்கிருந்து திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, மூளைக்குச் செல்லும் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், உடலின் வலது புறம் செயலிழந்துவிட்டது என்று தெரிவித்தார்கள்.
மருத்துவர்கள் எதிரில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சரவணனும் கிருஷ்ணனும் அதிர்ந்து போனார்கள்.
சரவணன், “சார், எதனால இந்த இரத்த அடைப்பு ஏற்பட்டிருக்கும்?” என்று கேட்டான்.
“தலையில பலமான அடிபட்டதால் இருக்கலாம். அதிகமா போதை வஸ்துக்களை உபயோகப்படுத்துறவங்களுக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படும், அதனாலும் இருக்கலாம். பரம்பரையா சிலருக்கு இரத்த அணுக்கள் கட்டி கட்டியா உறையும் வியாதி வரும், அந்த வகையிலும் வரலாம்” என்று மருத்துவர் விளக்கம் தந்தார்.
கிருஷ்ணன், “ஐயா, குணமாயிருங்களா?” (குணமாகிவிடுவாரா?) என்று கேட்டார்.
“குணமாகிடும். சிலருக்குக் குணமாகாமலே போகலாம். இவருக்குச் சின்ன வயசுங்கறதால குணமாகிடும்னு நம்புவோம்.”
கிருஷ்ணனுக்கு மனதெல்லாம் வருத்தம். குணமாகாது என்று புரிந்தாலும், ஆற்றாமையால், “எப்ப குணமாகும்னு சொல்ல முடியுமா ஐயா?” என்று கேட்டார்.
“இன்னைக்குத்தான் குணமாகும்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது சார்… அவரோட லக்கைப் பொறுத்தது.”
திருநெல்வேலி மருத்துவமனையில் ஒரு வார காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று, பிறகு அனைவரும் ஒன்றாக வீடு திரும்பினார்கள்.
முருகனுக்குப் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால், சுயமாகப் படுக்கையில் இருந்து கூட எழுந்து கொள்ள முடியாது. சிறுநீர், மலம் போன்ற உபாதைகளுக்கும் ஒருவர் துணையை நாட வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் தனக்கு இது தேவை, இது தேவையில்லை, உடலில் இந்த உணர்வு இருக்கிறது, இங்கே வலிக்கிறது என்று எடுத்துச் சொல்ல வாயும் வரவில்லை.
முருகனுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று, “விரைவில் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” எனக் கூறி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். இனி முருகனைப் பக்குவமாய்ப் பார்ப்பதற்கும், அவனால் வந்துகொண்டிருந்த வருமானத்தை ஈடுகட்டுவதற்கும் யாது வழி என்று அறியாமல் முடங்கிவிட்டார்கள்.
ருக்மணியின் தாயார் மாரியம்மாள், தனக்குச் சொந்தமான வீட்டை விற்றுவிட்டு, அதில் வரும் பணத்தை மகளின் குடும்பச் செலவிற்கும் பாதுகாப்பிற்குமாக கொடுத்துவிடத் திட்டமிட்டிருப்பதாகப் பார்வதியிடம் தெரிவித்தார்.
பார்வதி, “வீட்டை வித்துட்டு தெருவுல நிக்கப் போறியா? ஒன்னும் வேண்டாம். முன்னாடி பொட்டப் புள்ள இருந்துச்சு, அதைக்கரையோத்தணும்னு கஷ்டப்பட்டோம். இப்ப அந்தச் சுமை இல்லை. நானும் என் மருமகளும் பாடுபட்டுப் பார்த்துக்கிடுவோம்” என்று தைரியமாகச் சொல்லிவிட்டார்.
முருகனோடு யாராவது ஒருவர் இருந்து உணவு புகட்டவும், மருந்து மாத்திரை கொடுக்கவும் வேண்டும் என்பதால், இருவரில் ஒருவர் அவனோடு எப்போதும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இருவரும் ஒரே மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைப் பயன்படுத்தி, ஒருவருக்குப் பகல் நேர வேலையும், ஒருவருக்கு இரவு நேர வேலையுமாக மாற்றி மாற்றித் தருமாறு மில் நிர்வாகத்திடம் கேட்டார்கள். நிர்வாகமும் அதற்குச் சம்மதம் தெரிவித்தது. முதல் வாரம் ருக்மணி பகல் வேலை என்றால், இரண்டாம் வாரம் இரவு வேலை என்று மாற்றிக் கொடுத்தார்கள்.
சரவணன், தினமும் முருகனுக்குக் காலைக்கடனை முடிக்க உதவி செய்தான். அவனைத் தூக்கிக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது, உடை மாற்றுவது எனத் தினசரி கடமையாக அதை அவன் செய்து வந்தான்.
முருகன், சித்திரை மாதம் முழுவதும் குணமாகிவிடுவோம் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தான். வைகாசி மாதமும் பிறந்துவிட்டது. குணமாகுவதற்கு உண்டான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
பார்வதி, வார விடுமுறையில் ருக்மணியோடு வீட்டிலிருந்தார். சென்ற முறை திருநெல்வேலி மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது என்னென்ன நடந்தது என்பதைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது, முதல் முறையாகத் திருநெல்வேலி மருத்துவமனைக்குச் சென்று வந்தபோது, ருக்மணி கருவுற்றிருந்ததை நினைவுபடுத்தினார். அந்தக்கரு தானாகவே கலைந்துவிட்டதையும், அதன் பின் முருகன் மீண்டும் குணமாகி வீடு திரும்பியதையும் பற்றிச் சொன்னவர், திடீரென்று ஏதோ ஞானம் பெற்றவரைப் போல, “இப்போ நீ மசக்கையா இருக்கியா ருக்கு?” என்று கேட்டார்.
ருக்மணி, “ஆமாம்” என்று பதிலுரைத்தாள்.
பார்வதி ஆவேசம் கொண்டவராக, “நீ பிள்ளை பெத்துக்கணும்ங்கறதுக்காக என் பிள்ளையைப் பாடையில அனுப்பி வச்சிருவ போல இருக்கே… முதல்ல அதைக் கலைப்பதற்கு வழியப் பாரு” என்றார்.
படுக்கையில் படுத்திருந்த முருகனால் பதில் பேச முடியவில்லை. அதனால் ஆவேசம் கொண்டு, முனகல் சத்தமிட்டான். இயங்கிக் கொண்டிருக்கும் தன் இடது கையைக் கொண்டு, படுக்கையை ஓங்கி ஓங்கி அடித்து, தன் குழந்தையைக் கலைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தான்.
பார்வதி முருகனிடம், “இப்ப உங்க புள்ள பிறந்து நாட்டை ஆளப்போகுது பாரு! இதைக் கலைச்சிட்டு, இதுக்கு அடுத்து உடம்பு சௌகரியமாயிருச்சுன்னா… இதோட இவளைத் தலைமுழுகிட்டு வேறொரு பெண்ணைக் கட்டி வைக்கிறேன். அவளோட சேர்ந்து பிள்ளை பெத்துக்கப் பாரு” என்றார்.
முருகன், தன் தலையின் அருகில் வைத்திருந்த தலையணையைத் தூக்கி எறிந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தான். ருக்மணி எதுவும் பேச முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
முருகன் உடல்நிலை சரியில்லாமல் விழுந்து போனதில் இருந்தே, பக்கத்து வீட்டில் இருக்கும் அனைவரும் அவன் வீட்டில் ஒரு கண்ணை வைத்தபடியே இருக்கிறார்கள். பார்வதியின் பலமான குரல் பக்கத்து வீட்டில் கேட்கவே, விரைந்து ஓடி வந்தான் சரவணன்.
பார்வதியின் ஆவேசப் பேச்சைக் கேட்டு, “பெரியம்மா… என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்துறீங்க? கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவனே உடம்புக்கு முடியாதவன், அவன்கிட்ட எதுக்கு இப்படி வந்து பேசுறீங்க?” என்று பார்வதியை அடக்க முயற்சித்தான்.
அருகில் நின்று அழுது கொண்டிருந்த ருக்மணியைப் பார்த்து, “எதுக்கு ருக்கு நீங்க அழுகுறீங்க?” என்று கேட்க, அவள் வாய் திறக்கவில்லை.
மீண்டும் பார்வதியிடம், “பெரியம்மா, என்னதான் உங்க பிரச்சனை?” என்று கேட்டான்.
“எந்த நேரம் இவள் புள்ள உண்டானாளோ, இவன் சாகக் கிடக்கிறான். அந்தப் பிள்ளையைக் கலைக்கச் சொன்னால், கலைக்கக் கூடாதுன்னு என்கிட்ட சண்டை போடுறான். அவளும் ஒன்னும் தெரியாதவள் மாதிரி நின்னு அழுது காமிச்சுக்கிட்டு இருக்கா.”
சரவணன், “பெரியம்மா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. வாங்க அப்பாகிட்ட பேசலாம்” என்று அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
அவர்கள் சென்ற பிறகு ருக்மணி, முருகன் தலைக்குத் தலையணையை எடுத்து வைத்தாள். அவனது இடது கையைப் பிடித்துத் தன் நெஞ்சுக்கூட்டுக்குள் வைத்துக் கொண்டு, “கோபப்படாதீங்க மாமா… நீங்க குணமானா போதாதா? அத்தை சொல்றதும் உங்க நல்லதுக்குத்தானே” என்னும்போது, தன் கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டான் முருகன்.
அவன் கண்கள் அவளிடத்தில், கருவைக் கலைக்கக் கூடாது என்று கட்டளையிட்டது; கெஞ்சிப் பார்த்தது; மன்றாடியது; முறையிட்டு அழுதது; முடிவு தெரியாமல் விழித்தது.
ருக்மணி, “சரி மாமா… பிள்ளையை நல்லபடியா பெத்து உங்க கையில கொடுக்கிறேன், போதுமா?” என்றதும், கோணியிருந்த முருகனது வாய் லேசான புன்னகையை உதிர்த்தது.
பார்வதியை அழைத்துச் சென்ற சரவணன், அவனது தாய் தந்தையோடு சேர்ந்து பார்வதியிடம், “பெரியம்மா… அவனோட பொண்டாட்டி கூடவே இருந்து மலம், மூத்திரம் அள்ளிக்கிட்டு இருக்கா. இந்த நேரத்துல அவகிட்ட சண்டை இழுத்து விரட்டி விட்டுடாதீங்க. கோவிச்சுக்கிட்டுப் போயிடப் போறா” என்றான்.
பார்வதி, “போனால் போறா, நான் அள்ள மாட்டேனா?” என்றார்.
கிருஷ்ணன், “நீங்க அள்ளுவீங்க. அவளும் கூட இருந்தால் ஆளும் பேருமா சேர்ந்து பாத்துக்கலாம். அவ இல்லாம ஒத்தையில பாக்குறது எப்படி? அதையேன் நீங்க யோசிக்காமல் பேசுறீங்க? உங்ககிட்ட யாராவது அந்தப் புள்ளதான் இந்த நிலைமைக்குக் காரணம்னு சொன்னாங்களா?” என்று கேட்க, ‘இல்லை’ என்று தலையசைத்தார் பார்வதி.
“பிறகு எதுக்கு பிள்ளையைக் கலைக்கணும்னு சொல்லுவீங்க? என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும். அதை முன்னாடியே தீர்மானிச்சுட்டுத்தான் வந்திருக்கிறோம் எல்லாருமே. அதுக்கு பிள்ளைதான் காரணம், குட்டிதான் காரணம்னு காரணத்தைத் தேடி அலையாமல், காரியத்துல கண்ணா இருங்க” என்று சொல்ல, பார்வதி அமைதியானார்.
அதே மாதத்தில், சரவணனுக்கும் சுபத்ராவுக்கும் நிச்சயதார்த்தம் இனிமையாக நடைபெற்று முடிந்தது.
தினமும் முருகன் காலைக்கடன் கழிப்பதற்கு, சரவணன் முருகனைப் படுக்கையில் இருந்து தூக்கிப் பிடித்துக் கொள்ள, ருக்மணி ஒருபுறம் தோள் கொடுத்துத் தூக்க, மெல்ல இருவருமாக இழுத்துச் சென்று கழிவறையில் நிறுத்துவார்கள். இருவரும் பிடித்துக்கொள்ள, ருக்மணி அவனது மனைவி என்பதால் முருகனது ஆடைகளைக் களைந்து அவனுக்கு உதவி புரிவாள். அதேபோல கடமை முடிந்தவுடன் அவனைத் தூய்மைப்படுத்துவதும் அவளது வேலை. மீண்டும் ஆடையை அணிவித்து, பிறகு இருவரும் கூடி இழுத்துக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்துவார்கள்.
முருகனுக்கு ஒவ்வொரு முறையும் காலைக்கடன் கழிப்பதற்கு இருவரும் பெருத்த சிரமத்தைச் சந்திக்கிறார்கள் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், தம்பியும் மனைவியும் ஒன்றாக நிற்கும் இடத்தில் தான் மட்டும் நிர்வாணமாக நின்றுகொண்டிருப்பது உயிர் போய் உயிர் வரும் நிலைக்கு நிகரானது. அந்தப் பெருந்துயரை அனுபவிக்கும் போது, கூச்சமும் அருவருப்பும் தன்னைத் தின்பது போல உணர்வான். அதனால் இருவரது முகத்தையும் அந்த சில நொடிகள் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்வான்.
ஆனால், ருக்மணியும் சரவணனும் முருகனைத் தாங்கள் பெற்ற பிள்ளையைக் கவனிப்பது போல, முகம் சுளிக்காமல் கவனித்துக் கொண்டார்கள்.
அந்த மாதத்தில் வந்த வைகாசி விசாகத் திருநாளில், கடவுள் முருகனிடம் தன் மகனை மீட்டுக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்ட பார்வதி, முருகன் சன்னிதானத்தில் கொடுத்த விபூதி பிரசாதத்தைக் கொண்டு வந்து மகன் முருகனின் நெற்றியில் இட்டுவிட்டார்.
முருகன் தன் இயலாமையால் எண்ணுவதைப் வெளியில் சொல்ல முடியாமல், மனதுக்குள்ளே கடவுளிடம் உரையாடினான்:
“அம்மா தாயே, நான் இப்படி கெடக்கிறது என் பொண்டாட்டிக்கு செஞ்ச கொடுமைக்காக எனக்குக் கிடைச்ச தண்டனையாத்தான் நினைக்கிறேன். உன்னை நாள் தவறாமல் நினைச்சு, உன் கோவிலுக்கு வந்து கும்பிட்டு வந்தாளே என் பொண்டாட்டி, அவளுக்கு நீ செஞ்ச கருணை இதுதானா? எனக்கு நீ கொடுத்த தண்டனையாலே கஷ்டப்படுறது அவதானே, அது உனக்குத் தெரியலையா அம்மா? அதுக்காக அவ மேல இரக்கப்பட்டு என்னை இந்த வியாதியில இருந்து காப்பாத்தி விடுன்னு கேட்க மாட்டேன். என்னை கக்கூஸ் வரைக்குமாவது நடக்க வச்சாப் போதும், நான் இந்த வியாதியோட ஆயுள் முழுக்க வாழ்ந்துட்டுப் போய்க்கிறேன். அந்த வரத்தைத் தயவுசெய்து கொடும்மா. ஆனா உனக்கு வரம் கொடுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீயும் என்னைப்போல சுயமா எழுந்து நடக்க முடியாத கல்லுதானே. உன்னையும் இன்னொருத்தர் குளிப்பாட்டி, புதுசா உடை மாத்தி, பாராட்டிச் சீராட்டிப் பாத்துக்க வேண்டியிருக்கு. ஆனாலும் நீ குத்துக்கல்லாத்தானே இருக்கிறே… குறைந்தபட்சம் அவங்களுக்காக நீயே உன்னைச் செம்மைப்படுத்திக்க முடியுதா? உன்கிட்ட போயி நானும் வரம் கேட்டுட்டேன்…” என்று நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

