Loading

“சுமதி பூ, பழம், வெத்தலை, பாக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டல்ல” என தன் இல்லாள் சுமதியிடம் இதோடு பத்தாவது முறையாக கேட்டுவிட்டார் ஆனந்த்.

“எடுத்து வச்சுட்டேன்ங்க” என சுமதி பதில் கூற “ஸ்வீட் காரம்லாம்..” என ஆனந்த் கூறிக் கொண்டிருக்கும் போதே “எல்லாமே தயாரா இருக்குடா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரது தான் பாக்கி”  என தன் தம்பிக்கு பதில் அளித்தார் கமலா.

“பொண்ணு ரெடி ஆகிட்டாளா அக்கா ?” எனக் கேட்டவருக்கு  “அதெல்லாம் நம்ம ஐசுவும், மதுவும் பாத்துப்பாங்க.நீ டென்ஷன் ஆகாம இரு” என ஆனந்திடம் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து நீட்டினார் கமலா.

“அப்படி சொல்லுங்க அண்ணி.நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன். உங்க தம்பி கேட்டா தானே” என்ற சுமதியிடம் “இது நம்ம பொண்ணுக்கு பாக்குற பத்தாவது இடம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு புடிச்சு இந்த சம்பந்தமாவது கல்யாணம் வரைக்கும் போகனும்ல்ல சுமதி”  என ஆனந்தும் தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

   “டேய் அதெல்லாம் போட்டோ பார்த்தே புடிச்சி போய் ஜாதகம் எல்லாம் பொருந்தி வெத்தலை பாக்கு மாத்திக்க தானே வராங்க.அப்புறம் ஏன்டா உனக்கு இவ்வளவு டென்ஷன்,கவலை எல்லாம்?”  என தமக்கை கமலா ஆனந்தை சாந்தப் படுத்தினார்.

“அது இல்ல அக்கா..”  என ஆனந்த் கூறிக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்க  “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கனு நினைக்கிறேன்.வா போய் வரவேற்கலாம்” என சோபாவில் இருந்து எழுந்து முன்னே நடந்தார் கமலா.

       நிறைய உறவினர்கள் இல்லாமல் ஆத்விக், அவன் தங்கை தர்ஷினி, பானுமதி அவனின் தந்தை குணசேகரன் என நால்வர் மட்டும் காரிலிருந்து இறங்கி வரக் கண்டு கமலா ஆனந்திடம்  “என்னடா தம்பி மாப்பிள்ளை வீட்டுக்காரங்கலாம் கம்மியா இருக்காங்க?” வினவ ஆனந்த்  “அது வந்து அக்கா..”  என ஏதோ கூறிக் கொண்டிருக்கும் போதே, பானுமதி தர்ஷினியிடம் ஒரு தட்டில் அவர்கள் கொண்டு வந்த கட்ட பையிலிருந்து பூ, பழம்,வெற்றிலை,பாக்கு,ஸ்வீட்,குங்கும சிமிழ்  எல்லாவற்றையும் எடுத்து வைக்குமாறு கூறிவிட்டு,ஆனந்தின் முன் வந்து நின்றார்.

              பானுமதி அருகில் வரவும், கமலாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டு ஆனந்த்,  “வாங்க உள்ள வாங்க..” என இன்முகத்துடன் வரவேற்க,கமலா பின்னால் வந்து கொண்டிருந்த தர்ஷினியையும் ஆத்விக்கையும் வரவேற்று அழைத்து வந்தார்.

“சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே

சிரிக்கலாம் பறக்கலாம் இறக்கைகள் முளைத்ததே மிதக்கலாம் குதிக்கலாம் கவலைகள் மறக்குமே

நேரங்கள் காலங்கள்

ஜில் பண்ண தேவையில்லை

சியர்ஸ் என்று கூவிப்பார்

சொர்க்கமும் தூரமில்லை

சாடர்டே நைட் மட்டும் பார்ட்டிகள் போதவில்லை

அன்றாடம் சன் பர்ண் தான் வேறிங்கு தேவையில்லை

சிரிக்கலாம் பறக்கலாம்..”

என பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,தாரா அவளது அறையில் முடி உலர்த்தியை (ஹேர் ட்ரையர்) மைக் போல் வைத்துக் கொண்டு  “சிரிக்கலாம் பறக்கலாம்..”  என  தலைக்கு குளித்த முடியை கூட உலர்த்தாமல் ஆட்டி ஆட்டி பெரிய பாடகிப் போல் பாடிக் கொண்டிருக்க,அவளது அத்தை மகள்கள் மதுவும்,ஐசுவும் அவளை அலங்காரம் செய்ய பெரும்பாடுபட்டு கொண்டிருந்தனர்.

        “ஹே தாரா. இப்போ உட்காருடி..உனக்கு இப்போ அலங்காரம் செஞ்சிறோம்.அதுக்கு அப்புறமா நீ சிரி,பற என வேணாலும் பண்ணிக்கோ.இங்க முதல வந்து உட்காரு” என ஐசு தாரா செய்த  வேலைகளால் கடுப்பாகி ஹேர் ட்ரையரை அவளிடம் இருந்து பிடுங்கி வைத்துவிட்டு கத்த,தாரா “ஹா ஆகலாம்,ஆகலாம்.பொறுமையா ஆகிக்கலாம்.என்ன அவசரம் இப்போ?” எனக் கூறி விட்டு மறுபடியும்  “சிரிக்கலாம் பறக்கலாம்..”  என பாடலை மறுபடியும் ஐசுவிடம் இருந்து அவள் பிடுங்கிய முடி உலர்த்தியை வாங்கி பாடினாள்.

                மது, “எம்மா தாயே!ஒரு அஞ்சு நிமிஷம் ஆடாம அசையாம வந்து உட்காரு.உனக்கு கொஞ்சம் பெயின்ட் அடிச்சி டிங்கரிங் வேலை எல்லாம்  முடிச்சிறோம், அதுக்கப்புறமா நீ சிரி பற இல்லனா அங்கிருந்தே கீழே விழுந்து சாவு என்ன வேணாலும் பண்ணிக்கோ.இப்போ எங்களுக்குனு இருக்கற கடமைய முடிச்சிறோம்” என அவளை இழுத்து அமர வைத்து, தாராவுக்கு பட்டி அடித்துவிட்டு மது நிமிர,தாராவும் கட்டி வைக்கப்பட்ட  மாட்டை அவிழ்த்துவிட்டதைப் போல் முரண்டுப்பிடித்து எழுந்தாள்.அதுவரை அவளை பிடித்திருந்த ஐசுவை கண்டு முறையோ முறை என மது முறைக்க,

              “ஹே நா என்னடி பண்ணேன்?” என அப்பாவிப் போல் ஐசு முகத்தை வைத்துக் கொண்டு வினவ,அவளை மேலும் முறைத்துக் கொண்டே  மது, “ஏன்டி இந்த மதம் கொண்ட யானையை பிடிக்காம விட்ட ? இப்போ இவ காட்டாறு வெள்ளம் அணை திறந்துவிட்ட மாதிரி நா கஷ்டப்பட்டு போட்ட பட்டி எல்லாத்தையும் கலச்சிவிட்டுறுமே”  என்றாள்.

                  தாராவை மது மதம் கொண்ட யானை,காட்டாறு வெள்ளம் என்று எல்லாம் கலாய்த்ததலில் சிரிப்பை கட்டுப்படுத்த முயன்று அது முடியாமல் சிரித்தே விட்டாள் ஐசு. ஐசு மதுவும் சிரித்துக் கொண்டிருக்க, இப்போது முறைப்பது தாராவின் முறையானது.

      மது செய்த சிகை அலங்காரத்தை எல்லாம் தாரா கடுப்பில் கலைத்துவிட, மதுவும் ஐசுவும் கோபத்தில், “ஹே தாரா என்னடி பண்ற?” என இருவரும் ஒரு சேர கத்த அதே சமயம் கமலா  “மது ஐசு தாராவ ரெடி பண்ணிட்டீங்களா?” என அவரும் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தார்.

தாராவை கண்ட கமலா “இன்னும் இவள ரெடி பண்ணலையா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. சீக்கிரம் இவள  ரெடி பண்ணுங்க. நான் போய் வந்தவங்கள கவனிக்கிறேன். அவங்க பொண்ண கூப்பிட்டு வர சொல்றதுக்குள்ள ரெடி பண்ணிடுங்க” என அவரும் சேர்ந்து கத்திவிட்டு செல்ல கோபத்தில் இருந்த ஐசும் மதுவும் இன்னும் கோபமாகி “மேடம் வந்து உட்காறிங்களா,இல்ல நாங்க புடிச்சுட்டு வந்து உட்கார வைக்கட்டா?” என மது தன் எத்தனை மணி  நேர உழைப்பு வீண் ஆனதை எண்ணி கத்தியே விட்டாள்.

“அம்மாவும் பொண்ணும் எதுல ஒன்னு இருக்கிங்களோ  இல்லையோ காது கிழிய கத்தறதுல மட்டும் ஒன்ன இருக்கீங்க. நீங்க பண்ண அலப்பறைக்கு முதல நான் என் காத கொண்டு போய் ஒரு நல்ல இ.என்.டி டாக்டர்கிட்ட காமிக்கனும்” என காதில் கை வைத்தபடி தாரா கூறினாள். உண்மையில் அவளுக்கு காதல் கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. ஆகையால் தான் இவ்வளவு அலப்பறை அழிச்சாட்டியம் எல்லாம்.

 

பானுமதி ஆனந்திடம் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருக்க தர்ஷினி, ஆத்விக், அவர்களின் தந்தை அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆத்விக்கோ எப்போது தான் இங்க இருந்து செல்வோம் என்று இருந்தது. தர்ஷினிக்கு தாரா தான் தன் அண்ணியாக வருவாள் என உள்ளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க தாராவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். ஆத்விக்கின் தந்தையோ எப்படியும் தன் மகன் இத்திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டான் அல்லது தன் மனைவியை இத் திருமணத்தை நிறுத்தி விடுவாள் என அறிந்து அவரும் ஏதோ சுற்றுலாவிற்கு வந்ததுபோல் வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

              பானுமதி, “அண்ணா பொண்ண ஒருமுறை பார்த்துட்டோம்ன தட்ட மாத்திக்கலாம். நல்ல நேரம் போய்கிட்டே இருக்கு” என்று சிரிப்பு மாறாமல் கூற ஆனந்த் சுமதியை காண அவர் சென்று தாராவை அழைத்து வந்தார்.தாரா சரியாக அவளது அறையில் இருந்து நடு கூடத்திற்கு வரும் போது ஆத்விக்கு ஏதோ முக்கியமான அழைப்பு வந்துவிட அவன் அதை ஏற்று வெளியே சென்று விட்டான்.

          நன்றாக கொலு பொம்மை போல் அலங்கரிக்கப்பட்ட பெண்ணவள் மாப்பிள்ளை வீட்டாருக்கு முன் வந்து வணக்கம் வைக்க அனைவருக்கும் அவளைப் பிடித்து போய் விட்டது.

“எங்களுக்கு பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கு”  என மாப்பிள்ளையின் தாயார் பானுமதி கூறவும் அப்போது தான் ஆனந்திற்கு நிம்மதியாக இருந்தது.

“அப்புறம் வரதட்சனைய பத்தி முன்னமே பேசிட்டா கரெக்டா இருக்கும். உங்களோட இன்னொரு பொண்ணு ஓடிப் போனது பத்தி எல்லாம் எங்களுக்கு கவலை இல்ல. ஏதோ கெட்டகாலம் அவ போய்ட்டா. இன்னொரு பொண்ண நீங்க தங்கமா வளர்த்து இருக்கீங்கனு பாத்தலே தெரியுது.எங்களுக்கு பெரிசாலாம் எதுவும் வேணாம்.எங்க பையன் பெரிய டாக்டர இருக்கறதால ஒரு 150 சவரன் நகையும் ஒரு காரும் ஒரு டபுள் பெட்ரூம் வீடும் போதும் எங்களுக்கு”  என வாய் கூசாமல் பானுமதி கேட்க  ஓடிப்போன தனது மகளைப் பற்றி கூறியதும் வாடிய போன ஆனந்தின் முகம் அதைப் பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை என கூறியதும் “அதுக்கு என்ன சம்பந்தி என் பொண்ணுக்கு போட்டுட்டா போச்சு”  என ஆனந்தும் வாய் நிறைய பல்லாக சந்தோஷமாக கூறினார்.

    

“சரிங்க ஆண்ட்டி  நீங்க சொன்ன எல்லாமே எங்க அப்பா போடுவாரு. உங்க பையன் அவர் போட்டுக்க வேண்டிய ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துதுவாரா, இல்ல அதையும் நாங்க தான் வாங்கி வைக்கனுமா? அப்படி நாங்க தான் வாங்கனும்ன அவரோட டிரஸ் சைஸ் அவர் என்ன சோப்பு பேஸ்ட் எல்லாம் யூஸ் பண்ணுவருனுலாம் லிஸ்ட் தந்துறுங்க” என அதுவரை குனிந்து தரையை நோக்கியவாறு இருந்த அவளது தலை நிமிர்ந்து அனைவரையும் நோக்கி கணீர் குரலோடு ஒலிக்க, மாப்பிள்ளை வீட்டார் அதிர்ந்து பானுமதி “கல்யாணத்துக்கு டிரஸ் ஒகேமா. சோப்பு பேஸ்ட் எல்லாம் எதுக்கு?” என புரியாமல் கேட்டார்.

“உங்க பையன 150 சவரன் நகை, ஒரு காரும் ஒரு டபுள் பெட்ரூம் வீடு கொடுத்து வாங்குறோம்ல ஆன்ட்டி. அப்படி காஸ்ட்லியா வாங்குற பொருள, ஓ சாரி சாரி உங்க பையன”  என நக்கலாக கூறிவிட்டு  “எங்க வீட்டில தங்க வைக்கும் போது எந்தக் குறையும் இல்லாம பாத்துக்கனுல. அதான்”  என அழகாக மென் புன்னகையுடன்  மங்கையவள் கூற  “இது என்னம்மா புது  வழக்கமா இருக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு தானே  மாப்பிள்ளை வீட்டுக்கு வரனும்.நீ என்ன தலைகீழா சொல்லிட்டு இருக்க” என பானுமதி  கேட்டார். 

“ஏன் ஆன்ட்டி நாங்க உங்க பையனா 150 சவரன் நகை,ஒரு காரு,ஒரு டபுள் பெட்ரூம் வீடு கொடுத்து வாங்குறோம். யாராவது பொருளை வாங்கிட்டு கடைக்காரர்கிட்டே கொடுத்திட்டு வருவாங்களா?அப்போ எங்க வீட்ல வெச்சு பார்த்துக்கறது தானே முறை” என பானுமதி வரதட்சணையாக கேட்ட ஒவ்வொரு பொருளுக்கும் அழுத்தம் கொடுத்து அவள் கேட்க , “நமக்கு இந்த சம்பந்தம் செட்டாகாது.கெளம்புங்க”  எனக் கோபமாக கூறி பானுமதி எழ மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் எழுந்து சென்று விட்டனர்.

சாரா ஜலாலிற்க்கு பரிமாறி விட்டு ஐராவிற்கு ஊட்டிக் கொண்டிருக்க, ஜலால் “ஐராவே சாப்பிட்டுப்பா. நீ சாப்பாட கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் மட்டும் போட்டு அவ கிட்ட குடு” எனக் கூற ஐரா உதட்டைப் பிதுக்கி ஜலாலை பாவமாக கண்டாள்.

ஐராவின் முகத்தைக் கண்ட சாரா, ஜலாலை பார்த்து “நானே என் செல்லத்துக்கு ஊட்டிவிட்டுக்குறேன்” என உதட்டை சுளித்துக் கொண்டு கூறிவிட்டு, ஐராவிற்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள். குழந்தையும் மகிழ்ந்து அவளிடம் விளையாடிக் கொண்டே உண்டு கொண்டிருக்க, ஜலால் “நீயும் சாப்பிடனும் தான் ஐராவயே சாப்பிட்டுக்க சொன்னேன். அதுக்கு அம்மாவும் பொண்ணும் நான் தப்பு பண்ண மாதிரி முறையோ முறையக்குறீங்க” என தாய் சேய் மீது குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தான்.

“நான் உங்கள பார்த்து முறைக்கலீயே. நம்ம முறைச்சும்மா ? இல்ல தானே செல்லம்” என சாரா ஜலாலிடம் கூறிவிட்டு ஐராவிடம் கேட்க, “இல்ல்ல” எனக் குழந்தை தன் மழலை மொழியில் தன் பால் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே கூறினாள்.

“கூட்டணி சேர்ந்து என்ன எதிர்க்கிறீங்க” என ஜலால் உண்டு முடித்து கை கழுவி கொண்டே கூற, சாராவும் ஐராவும் தங்கள் கைகளால் ஹை-பை அடித்துக் கொண்டார்கள். குழந்தைக்கு இவர்களது சம்பாஷணைகள் புரியவில்லை என்றாலும் தனது தாயின் புறம் தனது ஆதரவை காட்ட சாரா கூறுவதை கூறி சாரா செய்வது போலவே செய்து கொண்டிருந்தாள்.

சரியாக அந்நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே, ஜலால் சென்று கதவை திறக்க அவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகா “சாரா இல்லையா?”  எனக் கேட்டாள்.

உள்ள தான் இருக்கா.உள்ள வாங்க”  என அழைத்து அவளை அமர வைத்துவிட்டு, உள்ளே சென்று சாராவிடம் இருந்து கிண்ணத்தை வாங்கி கொண்டு ஐராவிற்கு தான் ஊட்டி விடுவதாக கூறி விட்டு மகாவை காண செல்லுமாறு கூறினான்.

சாரா வந்தவுடன் மகா எழுந்து “இன்னிக்கு செக்கப் போறோம் சாரா. எங்க அம்மா வரேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்க வாரத்துக்குள்ள வந்துருவோம்னு தான் நினைக்கிறேன். சப்போஸ் லேட்டாயிடுச்சுனா என்ன பண்றது? அதான் உன்கிட்ட வீட்டு சாவி கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்”  என வயிற்றில் கை வைத்து கொண்டு கூறினாள் ஐந்து மாத கர்ப்பிணி பெண் மகா.

ஹா சரி மகா. மார்னிங் சாப்பாடு சாப்பிட்டியா?” என சாரா அக்கறையாக வினவ, “நான் ஒருத்தியா இருந்த போதே என்ன சாப்பிட வைக்காம விட மாட்டாரு. இப்ப நாங்க மூணு பேரும் வேற இருக்குமா, கேட்கவா வேணும்,போதும் போதும்னு சொல்லிக் கூட விடல”  என தன் கணவரைப் பற்றி பெருமையாக கூறி விட்டு குறையும் கூறினாள் மகா.

சாதாரணமா ப்ரக்ன்ட்டா இருந்தாவே நல்லா சாப்பிடனும்.இதுல உன் வயித்துல ட்வின்ஸ் வேற இருக்காங்க. நல்லா சாப்பிடு மகா.அண்ணன குறை சொல்லாதே”  என சாரா அறிவுரை கூற மகா சிரித்துக் கொண்டே “சரிடி.வெளிய அவரு வெயிட் பண்ணிட்டு இருப்பாரு. நான் கெளம்புறேன்” எனக் கூறிவிட்டு சென்றாள்.

மகா கிளம்பியவுடன் சாரா உள்ளே வந்து பார்க்க ஐராவிற்கு ஊட்டி முடித்திருந்த ஜலால்  அவளது வாயை  துடைத்துக் கொண்டிருந்தான். “ஒரு சாவியை தான குடுக்க வந்தாங்க.அது என் கிட்டே குடுத்து இருந்தா என்ன?உன்ன பார்த்து தான் கொடுக்கனுமா? உன் பொண்ணுக்கு ஊட்டுனனா, இல்ல இந்த டேபிள் ஊட்டிவிட்டனானு தெரியல. எல்லாத்தையும் இரைச்சுத்தா.”  என தன் மகள் மேல் புகார் கூறி கொண்டிருக்க, தன்னைப் பற்றி ஏதோ புகார் கூறுகிறான் என தெரிந்து கொண்ட ஐரா அவனை கண்கள் சுரங்க முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் இதை எதையும் கவனிக்காத சாரா சோர்வாக கவலையுடன் நெற்றியில் கை வைத்து கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். ‘இந்நேரத்திற்கு ஐராவிற்கு உறுதுணையாக தன்னிடம் சண்டைக்கு வந்திருப்பாளே. ஏதோ சரியில்லை’  என யோசித்துக் கொண்டே சாராவின் அருகில் வந்து அமர்ந்தான் ஜலால்.

அவளது நாடியை பிடித்து முகத்தை நிமிர்த்தி தன்னை காணுமாறு செய்த ஜலால் சாராவிடம் சிறு குழந்தையிடம் வினவுவது போல் “என்னாச்சும்மா?”  என வினவ அவளிடம் இருந்து பதில் வராமல் கண்கள் மட்டும் கலங்கிவிட்டது.

“சாரா  திடீர்னு என்ன ஆச்சு?”  என கேட்டுக் கொண்டே அவன் போக அவளிடம் இருந்து பதில் வராமல் விசும்பி கொண்டிருந்தாள். ஜலால் என்னவெல்லாம் நடந்தது என யோசித்து அவள் எதற்காக அழுகிறாள் என ஒரு வழியாக கண்டறிந்து விட்டு “சாரா என்ன பாரு” எனக் கூறி அவளது கன்னத்தில் தனது இரு கைகளையும் வைத்துக்கொண்டு  “மகாக்கிட்ட ட்வின்ஸ் பத்தி பேசுனதுனால தானே உனக்கு பழைய ஞாபகம் வந்து இப்ப நீ அழுதுட்டு இருக்க?” என வினவ அவள் தலை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

தான் பலமுறை கூறிவிட்ட பிறகும் சாரா பழைய நினைவுகள்  ஞாபகம் வரும் போது எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு அழுது கொண்டிருப்பது ஜலாலுக்கு பிடிக்கவில்லை. அவன்

ஆழமாக மூச்சை இழுத்து விட்டு “இதோ பாரு சாரா. பாஸ்ட் இஸ் பாஸ்ட். நான் எல்லாத்தையும் மறந்திடுன்னு சொல்லல. அதப்பத்தி ஞாபகம் வச்சிட்டு பீல் பண்ணாதனு தான் சொல்றேன். நீ,நானு,ஐரா நம்ப 3 பேர் மட்டும் தான் நம்ம குடும்பம்.இத ஞாபகம் வச்சுக்கோ. எனக்காக இல்லனாலும் ஐராக்காக இத பண்ணு” எனக் கூறிவிட்டு அவன் அமைதியாக அமர்ந்து கொள்ள தன் தாய் அழுகிறாள் என தனது பிஞ்சு விரல்களால் ஐரா அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டாள். தான் வருந்தி அழுவதால் அது குழந்தையையும் பாதிக்கும் என யோசித்து சாரா தன் கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வரவழைத்த சிரிப்புடன் ஐராவுடன் விளையாட ஆரம்பித்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்