Loading

 

 

அன்றைய நாள் யாருக்குமே நல்லதாக இல்லை. எல்லோரும் துக்கத்தில் இருக்க, வருணிகா மட்டும், நேரத்திற்கு சாப்பிட்டாள். எதுவும் நடக்காதது போல், தன் வேலையை பார்த்தாள். இரவு ஹரிஹரன் வீட்டுக்கு வந்த பின்பும், யாரும் அவனிடம் எதுவும் பேசவில்லை. எதுவும் கேட்கவும் இல்லை.

அடுத்த நாள் ஹரிஹரன் கிளம்பும் முன், அவன் முன்பே சந்திராவுக்கு அழைப்பு விடுத்தாள் வருணிகா.

“வீட்டுல தான இருக்க? வர்ரேன் வெயிட் பண்ணு” என்று கூறி விட்டு கிளம்பினாள்.

“அத்த நான் வெளிய போயிட்டு வர்ரேன். சித்தியும் சித்தப்பாவும் வந்தா சொல்லிடுங்க” என்று கிளம்ப, “எங்கம்மா தனியா போற? இரு நானும் வர்ரேன்” என்றார்.

“சந்திராவ பார்க்கப்போறேன் அத்த”

“அவள ஏன் நீ பார்க்கனும்?”

அனுராதாவின் முகம் செந்தணலாக மாறி விட, “மொத்தமா பேசி முடிச்சுக்கனும் அத்த. அதான்” என்றாள்.

“அப்போ நானும் வர்ரேன்”

“நீங்க உணர்ச்சி வசப்பட்டு பேசிடுவீங்க. இதை வேற மாதிரி பண்ணனும் அத்தை ப்ளீஸ்”

“இல்ல. நான் வர்ரேன். கிளம்பு” என்று அவளோடு கிளம்பி விட்டார்.

ஹரிஹரன், சந்திராவை எதாவது பேசி விடுவார்கள் என்று பயந்து, வேகமாக பின்னால் சென்றான்.

சந்திராவின் வீட்டுக்கு வந்து விட்டு, “நீங்க வெளிய நில்லுங்க. நான் பிரச்சனைனா கூப்பிடுறேன். அது வரை வராதீங்க” என்று வருணிகா அனுராதாவை நிறுத்தினாள்.

“வருணி..”

“இது என் வாழ்க்கை பிரச்சனை. இத நானே முடிஞ்ச வரை பார்த்துக்குறேன். முடியலனா உங்கள நிச்சயமா கூப்பிடுவேன்” என்றவள், அவரை விட்டு விட்டு வேகமாக லிஃப்டில் நுழைந்தாள்.

அடுக்குமாடி குடியிருப்பு அது. நேராக சென்று, அவளது வீட்டின் அழைப்பு மணியை அடித்தாள்.

கதவை திறந்த சந்திரா, தெனாவெட்டாகப் பார்த்தாள்.

“எப்பவோ வருவனு நினைச்சேன். டூ லேட் நீ”

“வந்துட்டேன் தான? தள்ளு” என்று கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“ஆறாவது மாசமா? என்ன குழந்தைனு எதாவது தெரியுமா?” என்று சந்திரா கேட்க, “தெரிஞ்சு என்ன செய்யப்போற?” என்று கேட்டாள்.

சந்திரா தோளை குலுக்கிக் கொள்ள, கதவு தட்டப்பட்டது.

“உன் புருஷன் தான்” என்று விட்டு கதவை திறந்து, “வாங்க” என்று அழைத்தாள்.

இது வரை அந்த வீட்டில் அவன் நுழைந்தது இல்லை. அவள் தனியாக இருக்கும் பெண் என்று அவனை விட மாட்டாள். அவனும் அதை புரிந்து கொண்டு, அவளை ரசிக்கவே செய்தான்.

இன்று உள்ளே வருணிகா இருந்ததால் அழைத்தாள்.

“வந்தாச்சா.. ஓகே பேசனும்னு முடிவு பண்ணிட்டேன். ரெண்டு பேரும் இருக்கது நல்லது”

“என்ன பேசனும்?” என்று அப்பாவியாக கேட்டாள் சந்திரா.

ஹரிஹரனை பார்த்ததும், நிமிடத்தில் மாறிய அவள் முகத்தை பார்த்து, வருணிகாவுக்கு சிரிப்பும் ஆத்திரமும் ஒன்றாக எழுந்தது.

‘இப்படி பச்சையா நடிக்குறா.. இது கூட தெரியாத மனுசனா இவரு? ச்சே’ என்று கணவன் மீது கோபமும், ‘உன் நடிப்புக்கு நான் ஆப்பு வைக்கிறேன்டி’ என்று சந்திராவை பார்த்து சிரிப்பும் வந்தது.

“உன் கல்லூரி கால காதல் ஹரிஹரனுக்கு தெரிஞ்சு போச்சு.. அதை பத்தி பேசத்தான் வந்தேன்”

“ஏன் சொன்னீங்க?” என்று ஹரிஹரனை பார்த்து கோபமாகவும் கண்ணீருடனும் சந்திரா கேட்க, ஹரிஹரனுக்கு பாவமாக இருந்தது.

“சந்திரா..” என்று ஹரிஹரன் எதோ சொல்ல வர, வருணிகா சொடக்கிட்டாள்.

“உங்க கொஞ்சல்ல நான் கிளம்புனதும் வச்சுக்கோங்க. இப்ப நான் பேசிக்கிறேன்”

“வருணி.. சாரி.. நான் தான் தப்பு பண்ணிட்டேன். உன் ஹஸ்பண்ட் உனக்கு தான். எனக்கு வேணாம். நீ சந்தோசமா இருந்தாலே போதும். நான் வேணும்னா இந்த ஊர விட்டு போயிடுறேன்”

குரல் தழுதழுக்க, தொண்டை அடைக்க, அவள் பேசியதை கேட்டு ஹரிஹரனுக்கு நெஞ்சம் அடைத்தது. அவளது உண்மை முகம் தெரிந்த வருணிகாவிற்கு தான், ஆத்திரமாக வந்தது. ஆனாலும், அடக்கிக் கொண்டாள். இப்போது ஆத்திரப்பட்டால் மொத்தமும் கெட்டுப் போகும்.

“வேணாம் சந்திரா… உனக்கு நான் பண்ணது அநியாயம். எனக்கு ஹரிஹரன மாப்பிள்ளை பார்த்ததும், நான் வேணாம்னு சொல்லிட்டு, என் ஃப்ரண்ட் உங்கள வருசக்கணக்கா.. லவ்… பண்ணுறானு சொல்லி இருக்கனும். அவரும் உன்னை பார்த்து, தெரிஞ்சு, கல்யாணம் பண்ணி இருப்பாரு. சுயநலமா எனக்கு விட்டுக் கொடுத்துட்டுப்போனு சொல்லிட்டேன். நீயும் எனக்காக தியாகம் பண்ணிட்ட. ஆனா.. இனி அப்படிப்பண்ண வேணாம். உனக்கு அவர பிடிச்சு இருக்கு. அவருக்கு உன்னை பிடிச்சு இருக்கு. உங்களுக்கு நடுவுல இனியும் நான் வர நினைக்கல. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு, சந்தோசமா வாழுங்க. உன் தியாகத்துக்கு பரிசா, எனக்கு குழந்தை இருக்கு. நான் அதோட வாழ்ந்துடுவேன். நான் இவருக்கு டைவர்ஸ் தரப்போறேன். அப்புறம் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. கண்டிப்பா நான் வந்து, கல்யாணத்த கண் குளிர பார்ப்பேன்”

வருணிகா ஏற்ற இறக்கத்தோடு பேசி வைக்க, மற்ற இருவரும் அதிர்ந்தனர்.

ஹரிஹரன், வருணிகாவின் முடிவை கேட்டு அதிர்ந்து போய் அசையாமல் நின்று விட்டான்.

“ஏய்.. நோ நோ.. அப்படி எல்லாம் டைவர்ஸ் பண்ணிடாத..” என்று சந்திரா பதற, அது வருணிகாவின் மீது கொண்ட அக்கறையாக தான், ஹரிஹரனுக்குத் தெரிந்தது.

“இல்ல.. இனி உங்க வாழ்க்கைக்கு நடுவுல நான் வர மாட்டேன். நீ அவர கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழு. மனசார சொல்லுறேன் சந்திரா. உங்க காதல் கடைசியில ஜெயிச்சுடுச்சு. நல்லா இருங்க”

“மண்ணாங்கட்டி” என்று சந்திரா வெடிக்க, வருணிகாவின் முகத்தில் திருப்தியாக புன்னகை வந்தது.

“இங்க பார்.. அப்படியெல்லாம் நீ டைவர்ஸ் பண்ணக்கூடாது. கரன்.. இவளுக்கு டைவர்ஸ் கொடுக்காதீங்க”

“கரன்.. இப்படித்தான காலேஜ் டேய்ஸ்ல கூப்பிடுவ. நான் ஒரு மடச்சி.. இவ்வளவு நல்ல்ல்ல… காதல பிரிக்கப்போயிட்டேன். ஆனா, ஆண்டவன் உங்களுக்குனு முடிச்சு போட்டுருக்கான். நீங்க வாழனும்னா.. நான் பிரியனும் சந்திரா”

“நோ…” என்று அலறினாள்.

“எஸ்.. நான் பிரியனும். அப்ப தான உங்க காதல் கை கூடும். என்ன ஹரிஹரன்? என் முன்னாள் புருஷன்? ஆமா தான?”

ஹரிஹரன் வாயைத்திறக்காமல் நின்று இருந்தான்.

“நீங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க ஓகே?”

“ஏய்… சொல்லுறது காதுல விழல? டைவர்ஸ் பண்ணக்கூடாது”

“ஏன்? ஒரு முறை என் தப்ப திருத்திக்க வாய்ப்பு கொடுக்க மாட்டியா?”

“நீ ஒன்னையும் கிழிக்க வேணாம்”

“இல்ல சந்திரா.. இதுக்கு மேல, இந்த காதல பிரிச்ச பாவம் எனக்கு வேணாம். நீங்க சேர்ந்து வாழுங்க”

“வருணிகா…” என்று சந்திரா அலற, “இன்னும் நீ இவர மறக்கலனு எனக்குத் தெரியும் சந்திரா. கல்யாணம் பண்ணிக்கோ” என்று போலியாக கெஞ்சினாள்.

“ஏய்.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

சந்திராவின் முகம் எதனாலோ சிவந்து போய் இறுகி விட, அதற்கு மேல் அடக்க மாட்டாமல் வருணிகா வாய் விட்டு சிரித்தாள்.

அவளது சிரிப்பின் காரணம் சந்திராவிற்கு தான் புரிந்தது. ஹரிஹரன் எதுவும் புரியாமல் பார்த்தான்.

“தோத்துட்டல..? வழக்கம் போல இதுலையும் தோத்துட்டல?” என்று கேட்ட வருணி, கண்ணீர் வரும் வரை சிரித்தாள்.

“சிரிக்காதடி” என்று சந்திரா கத்தியதை, அவள் மதிக்கவே இல்லை.

“எப்பவும் என்னனே தெரியாம போட்டி நடக்கும். அதுல நான் ஜெயிச்சுட்டேங்குற விசயம் கூட எனக்குத் தெரியாது. ஆனா.. முதல் முறையா.. போட்டிய புரிஞ்சுக்கிட்டேன். விளையாட்ட நீ ஆரம்பிச்ச.. முடிவுரைய நான் தான எழுதனும்? எழுதிட்டேன். பிடிச்சுருக்கா?”

சந்திரா கோபம் தாங்காமல் பொருட்களை தட்டி விட, வருணிகா அசரவில்லை.

“என்னை என்னடி நினைச்ச? பைத்தியம்னா? இல்ல ஏமாளினா? பிரச்சனை என்ன? போட்டி என்னனு தெரியாதப்போவே நான் ஜெயிச்சவடி. இப்ப மட்டும் விட்டுருவனா? உன்னை பார்த்தா தான் பாவமா இருக்கு. நீ என் ஃப்ரண்டா இருந்து இருந்தா, விட்டுக் கொடுத்துருப்பனோ என்னவோ…? இப்போ எதிரி.. ம்ஹூம் துரோகி ஆகிட்டியே.. சோ உன்னை விடுறதா இல்ல”

“வருணிகா.. எனக்குத்தோக்க பிடிக்காது.. வேணாம்.. சோதிக்காத”

“என் கிட்ட காலம் காலமா தோத்துட்டு தான இருக்க. அதுல இதையும் வச்சுக்கோ. நாளைக்கு ஊருக்குப் போயிட்டு, டைவர்ஸ் அப்ளை பண்ணிடுவேன். எப்படியும் என் குழந்தை பிறந்ததும் டைவர்ஸ் கிடைச்சுடும். அப்புறம்? அப்புறம் என்னடி செய்வ? ஒன்னையும்…” என்றவள் தலைமுடியை இழுத்துக் காட்டினாள்.

“ஏய்.. ஏய்.. ஏய்.. ஆஆஆஆஆ” என்று சந்திரா கதற, வருணிகா மீண்டும் ஆனந்தமாக சிரித்தாள்.

ஹரிஹரனுக்கு, புரியாத மொழியில் படம் பார்ப்பது போல் இருந்தது.

“சந்திரா.. இப்போ ஏன் கத்துற? அமைதியா இரு” என்று சந்திராவை ஹரிஹரன் அதட்ட, “இங்க பாரு.. இவளுக்கு நீ டைவர்ஸ் கொடுக்கக் கூடாது” என்றாள்.

“அவன் என்ன கொடுக்குறது? நான் கொடுத்துட்டு போறேன்.”

“ஏய் இவன் உன் புருஷன்”

“வேணாங்குறேன். எனக்கு இவன் வேணாம். நீயே வச்சுக்கோ. நான் கேட்கவே மாட்டேன்”

“வருணிகா” என்று பல்லைக் கடித்தாள்.

“என்ன மேடம்? தோல்வி கசக்குதா? ஆனா முதல் வெற்றி.. எனக்கு இனிக்குது தெரியுமா?”

“ஏய்… உன்னை கொன்னுடுவேன்டி”

“கொல்லு. நீ தோத்தது தோத்தது தான்”

“என்ன தோற்குறது? ஜெயிக்கிறது? புரியுற மாதிரி பேசுறீங்களா?” என்று ஹரிஹரன் கத்தினான்.

“ஏன் என் கிட்ட கேட்குற? உன் அருமை காதலி.. சந்திரா கிட்ட கேளு” என்றாள் வருணிகா.

“இங்க பாரு வருணி.. காலம் முழுக்க நீ ஜெயிக்க முடியாது”

“ஏன்டி? ஜெயிக்கிற உரிமைய நீ காசு கொடுத்து வாங்கிட்டியா? இந்த ஃப்ளாட் உன் சொந்த ஃப்ளாட் தான? இத வாங்குனப்போ அதையும் அக்ரிமெண்ட் போட்டியா?” என்று கேட்டாள்.

ஹரிஹரன் அதிர்ந்தான். அவனிடம் வாடகைக்கு தங்கி இருப்பதாக தானே சந்திரா கூறி இருந்தாள்.

“இப்ப என்னடி வேணும் உனக்கு?”

“எனக்கு எதுவுமே வேணாம். என் கிட்ட தோக்கும் போதெல்லாம், நீ வீட்டுல பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துப்பியாமே.. அதை பார்க்கனும்னு ஆசை வந்துச்சு. அதுக்கு தான் வந்தேன். பார்த்துட்டேன். இப்போ திருப்தியா இருக்கு”

சந்திரா பல்லைக் கடிக்க, “கல்யாணத்துக்கு மறக்காம கூப்பிடனும்” என்று கூறி விட்டு திரும்பினாள்.

“வருணிகா.. உன்னை ஜெயிக்க விட மாட்டேன்” என்று சந்திரா கத்த, “ஆல் தி பெஸ்ட் மை பழைய ஃப்ரண்ட். முடிஞ்சா ஜெயிச்சுக்காட்டு” என்று கூறி விட்டு வெளியேறி விட்டாள்.

சந்திரா, கோபமாக மேலும் பொருட்களை தட்டி விட்டு விட்டு, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

ஹரிஹரன் ஒரு நொடி அவளைப் பார்த்தான். நடந்த பேச்சில் எதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.

வருணிகா கீழே சென்று இருக்க, ஹரிஹரனும் கீழே வந்து விட்டான். அனுராதாவுடன் வருணிகா கிளம்பி விட, தனிமையைத்தேடி ஹரிஹரன் கடற்கரை பக்கம் சென்று விட்டான்.

“என்னமா சொன்னா அவ? அவள பார்த்து நாலு வார்த்தை கேட்கனும்னு நினைச்சேன். நீ தான் வரவேணாம்னு சொல்லிட்ட” என்று அனுராதா பல்லைக் கடிக்க, “நான் கேட்ட வார்த்தைக்கே அவளால நாலு நாள் நிம்மதியா தூங்க முடியாது அத்த. நாம போகலாம்” என்றாள்.

அங்கு வந்த ஆட்டோவை பிடித்து கிளம்பினர். வீட்டுக்குச் செல்லாமல், அந்த மனநல மருத்துவரை பார்க்கச் சென்றனர். அனுராதா மருத்துவமனையின் பெயரைப் படித்ததுமே பதறி விட்டார்.

“நீங்க வெளியவே இருங்க.‌ நான் வந்துடுறேன்” என்று கூறி விட்டுச் சென்று விட்டாள்.

உள்ளே சென்று மருத்துவரிடம் பேசி, மனதில் இருந்ததை கொட்டி ஆறுதல் தேடி விட்டு, கடைசியாக அழுது முடித்து, தெளிவான மனதுடன் வெளியே வந்தாள்.

இனி, அவர் சொன்ன சில விசயங்களை தொடர்ந்து செய்தால் போதும். மற்ற எல்லாம் அவளுக்குத் தேவை இல்லை. நலமாகி விட்டாள்.

அனுராதா வேகமாக வந்து, அவள் கையைப்பிடித்துக் கொண்டார்.

“என்ன வருணி இதெல்லாம்?” என்றவர் கண்கள் கலங்கி விட்டது.

உளவியல் பிரச்சனை, மனநலம் பாதிக்கப்படுவது எல்லாமே பைத்தியம் என்று நினைக்கும் ரகம் அல்ல அவர். ஆனால், மருமகள் இப்படி சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். அதுவும் குழந்தையை சுமப்பவள். மனமெல்லாம் துடித்தது.

அவரும் சாதாரண மாமியார் தான். மருமகளின் சமையலை குறை சொல்வது.. மகனின் உரிமைக்கு போட்டி போடுவது எல்லாம், அவர் குணத்திலும் உண்டு. ஆனால், இந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்த விசயம், அவரை மாற்றி விட்டது. அவர் பெற்ற மகன், தவறான பாதையில் செல்கிறான்.

எந்த தவறும் செய்யாத மருமகள், குழந்தையோடு மனவேதனையையும் சுமந்து கொண்டிருக்கிறாள். இப்படி ஒன்று சாரதாவிற்கு நடந்து இருந்தால், அவரால் எப்படித்தாங்கிக் கொள்ள முடியாதோ, அதே போல் வருணிகாவிற்கு நடப்பதையும், தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“சித்திக்கிட்ட சொல்லாதீங்க அத்த. வருத்தப்படுவாங்க. பயந்துடுவாங்க” என்று வருணிகா கூற, “ஏன் இதெல்லாம்?” என்று வினவினார்.

“நாம எங்கயாவது போய் பேசலாம். இப்போ போகலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

கடற்கரை வந்து சேரந்தனர். மதிய நேரமாக இருந்த போதும், வெயில் உக்கிரமாக இல்லை. சூரியனின் வெளிச்சம் மட்டும் இருக்க, காற்று ஈரப்பதத்தோடு இருந்தது. அனேகமாக இரவு மழை வர வாய்ப்பு உண்டு.

அந்த நிலையில், முடிகள் பறக்க நடப்பது, வருணிகாவிற்கு பிடித்து இருந்தது.

அங்கு சாலையில் விற்கும் உணவை பார்த்து வருணிகா ஆசைப்பட, “அதெல்லாம் நல்லது இல்ல வருணி” என்று அதட்டினார்.

“கொஞ்சம் மட்டும். வாயி கேட்குதே” என்று வருணிகா பாவமாக கேட்க, அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

குழந்தையோடு இருப்பவள், எதை விரும்பிக் கேட்டாலும் யாருமே மறுப்பது இல்லை. அவர் மட்டும் மறுப்பாரா?

வாங்கிக் கொண்டு சற்று தள்ளி, ஒரு நிழலில் வந்து அமர்ந்து கொண்டனர்.

“இன்னும் நீ என்னனு சொல்லல..”

“என்னத்த சொல்ல? நிறைய நடந்துடுச்சு”

“எல்லாத்தையும் சொல்லு”

வளைகாப்பு முடிந்து வந்து, ஹரிஹரன் சண்டையிட்டது. கார்த்திகை வந்தது. மருத்துவர் உதவியை அவள் நாடியது. மாதக்கணக்காக மனதில் இந்த வலியை சுமந்து கொண்டிருந்தது. கடைசியாக ஹரிஹரனிடம் கேட்டு சண்டை போட்டது. மயக்கம் வந்து மருத்துவமனையில் சேர்ந்தது. பிறகு இவர்களை அழைத்தது வரை எல்லாமே சொல்லி முடித்தாள்.

கேட்டவருக்குத் தான் ஜீரணிக்க முடியவில்லை. இப்படி இவள் துடித்துக் கொண்டிருக்க, அவர் பெற்ற மகன் சுயநலமாக சுற்றி இருக்கிறான்.

“என்ன பிள்ளை வளர்த்தேனோ ச்சே”

“விடுங்க அத்த. அவர் எடுப்பார் கைப்பிள்ளையா இருக்காரு. சந்திரா சொன்னத எல்லாம் நம்பிட்டு இருக்காரு. அதுல எவ்வளவு பொய் எவ்வளவு உண்மை இருக்குனு தெரிஞ்சா, தன்னால மாறிடுவாரு”

“என்ன தான்மா சொன்னா அவ? எனக்கு அவள நினைச்சா ஆத்திரமா வருது”

“தப்பு அவ மேல இல்ல அத்த. என் மேல தான். பாம்பா பழுதானு தெரியாம, கூடவே வச்சுக்கிட்டு சுத்தி இருக்கேன். அவள பத்தி தெரிஞ்சு முதல்லயே விலக்கி இருந்தா, இன்னைக்கு என் வாழ்க்கையில விளையாடி இருக்க மாட்டா”

“அவ யாரு? உனக்கு ஃப்ரண்ட் தான?”

“ம்ம்.. ” என்றவள், மேனகா சொன்னதை ஒன்று விடாமல் கூறி முடித்தாள். எல்லாவற்றையும் கேட்டவர், சில இடங்களில் அவரையும் மீறி, லேகாவை சபித்தார். சந்திராவை வாய் ஓயும் வரை திட்டித்தீர்த்தார்.

வருணிகா அதற்கு பதில் சொல்லாமல், சந்திராவின் வரலாற்றை கூறி முடித்தாள்.

“இவ்வளவும் எனக்குத் தெரியல அத்த. அவ்வளவு மக்கா இருந்துருக்கேன். அதான் எனக்கு ரொம்ப நல்ல வேலையைப் பார்த்துட்டா”

“அவன் கிட்ட என்ன சொன்னாளாம்?”

“தெரியல. நான் கேட்கல. ஆனா அவ எதைச் சொன்னாலும் இவர் நம்பிட்டாரே. எனக்கு வெறுத்திடுச்சு. அதான் டைவர்ஸ் கேட்டுட்டேன்”

“அப்போ சந்திரா தான் தப்புனு சொல்லுறியா?” என்று கேட்டபடி வந்து நின்றான் ஹரிஹரன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்