
சலனம்-3
சம்யூ மீதான நேசம் எனக்குப் புரிந்த பின் ஒருநொடி கூட நான் தாமதிக்கவே இல்லை. நீரில்லா தாவரமாய் என் மனம் அவளில்லாமல் வாடித் தவித்தது.
அரைமணி நேரப் பிரிவே அரை நூற்றாண்டு பிரிந்திருந்ததைப் போன்றதொரு பிரம்மையை எனக்குள் எற்படுத்தியிருந்தது. ஆக மொத்தம், அவள் விட்டுப் போன மிச்சமாய் தான் நான் நிற்கிறேன் எனப் புரிய, எனக்கு அரைமணி நேரமே போதுமானதாக இருந்தது. ஏன் என் மனம் அவளை இத்தனை தூரம் நாடுகிறது? காதலா? காமமா? இரண்டுமா? அது எதுவாக இருந்தாலும், அவள் முகம் பார்த்தே வாழ்ந்து முடித்துவிடலாம் என்ற எண்ணம் எனக்குள் அழுத்தமாய் விழுந்திருந்தது.
அவள் மீதான உணர்வை வகைப்படுத்தி, காதலா? நேசமா? காமமா? எனப் பெயர் வைக்கும் வித்தை தான் எனக்கு தெரியாமல் போனது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனப் புரியாமல் அல்லாடும் தாயின் நிலையைப் போலத்தான் என் மனமும் இருந்தது.
அவள் மீது எனக்கிருப்பது என்ன உணர்வாக வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு அவள் வேண்டும். அவ்வளவு தான்..!
ஊர் என்ன பேசும்? உலகம் என்ன பேசும்? என்ற எந்தக் கவலையும் எனக்கு இல்லை. எனக்கு அவள் வேண்டும். என் வாழ்வின் மிச்ச சொச்சங்களை மட்டுமல்லை, ஒட்டுமொத்த வாழ்வையுமே அவளோடு வாழ எனக்கு அவள் வேண்டும். உற்சாகம் என் உள்ளப்பரப்பில் கரைபுரண்டது.
எனது வாகனத்தைக் கிளப்பி, சாலையில் செலுத்தியபடியே, சம்யூவிற்கு அழைப்பதற்காக அலைபேசியை எடுத்தேன்.. மறு நொடியே துண்டித்துவிட்டு,
“அவளுக்கு இது சர்ப்ரைஸாக இருக்கட்டும்!” என நானே வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு, அலைபேசியை இருந்த இடத்தில் வைத்தேன்.
சத்தியமாய் நான் வருவேன் என எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் கண்களும், முகமும் சிரிப்பதை மனக்கண்ணில் கற்பனை செய்துக் கொண்டே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.
முதன் முறையாய் இரயில் பயணத்தை இரசிக்கும் சிறுவன் போல, என் மனம் உற்சாகமாய் துள்ளிக் குதித்தது. வாகனத்தை வேகமாய்ச் செலுத்தினாலும் கூட, ஏனோ அவள் இருப்பிடம் சீக்கிரம் வர மறுத்தது.
“வந்துட்டே இருக்கேன் சம்யூ! நீ எனக்குத்தான். நிலா இல்லாத வெறிச்சோடிய வானம் போல் இருக்கிற என் வீடு உன் வரவால் மறுபடியும் அழகாகப் போகுது.!” எனச் சொல்லிக் கொண்டேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு நானே எனக்கு அழகாகத் தெரிந்தேன். இடக்கையால் தலையைக் கோதி என்னை சரி செய்துக் கொண்டு, கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். அழகாகத்தான் இருந்தேன். சினிமா கதாநாயகர்களின் சாயல், என் முகத்திலும் தெரிந்தது.
“நீ ஃப்ரெஞ்ச் பியர்ட் வச்சுக்கிட்டா அழகா இருப்பே விக்ரம்!” என சம்யூ என்றோ சொன்னது என் செவிகளில், அசரீரீயாய் விழுந்தது.
அவள் குரல் என் நினைவடுக்கிலிருந்து செவிக்குள் விழுந்த மாத்திரத்தில், என் கரம் அனிச்சையாய் வாகனத்தைச் செலுத்த, அடுத்தப் பத்து நிமிடத்தில், அவளுக்குப் பிடித்தது போன்ற சிகையலங்காரம், முக அலங்காரத்தோடு, என் எதிரே இருந்த ஆறரையடி கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
“டூ யூ லைக் இட் சார்? இட்ஸ் பெர்ஃபெக்ட்லி சூட்ஸ் யூ!”
கருப்பு நிற சீருடை அந்த அந்த அழகு நிலையப் பணியாள் பணிவாக சொல்ல,குறுஞ்சிரிப்புடன், தாடியைத் தடவியபடியே, பற்று அட்டை மூலம் அதற்கான தொகையைச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன்.
என் கண்களில் திடீர் ஒளி, என் மனதிற்குள் காதல் புகுந்ததை நான் முதன்முறையாய் உணர்கிறோனோ என்னவோ, கண்கள் பளிச்சிட்டு பிரகாசித்தது. இன்னும் இன்னும் அவளைக் காண வேண்டுமென்ற ஆசையும்,’ஆர்வமும் என்னை அறியாமலே அதிகமானது. இதயம் லப் டப் எனத் துடிக்க மறந்து சம்யூ! சம்யூ என சம்யூ புராணம் பாட ஆரம்பித்திருந்தது.
‘என்னை ரொம்பப் படுத்துற இராட்சசி? என்கிட்டே சண்டைப் போட்டாவது என்னோடு இருந்திருக்கனும்! என்னை விட்டு நீ யாரை கல்யாணம் பண்ணுவேன்னு என் கண்ணைப் பார்த்துக் கேட்டிருக்கணும்! சட்டையைப் பிடிச்சுக் கேட்டிருந்தாலும் சந்தோஷப்பட்டுருப்பேன் டி இராட்சசி!’ எனக்குள் தோன்றியபோது தான் என் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்பதே புரிந்தது. என் மனம் போகும் திசையும் எனக்குப் புரிந்தது.
அவளாக என்னிடம் வர வேண்டும் என நினைத்த நான், நானாக அவளைத் தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் நினைப்பதும், செய்வதும் முன்னுக்குப் பின் முரணாகத்தான் இருக்கிறது. காதல் என்றாலே முரண் தானே? நான் என்னிலிருந்தே வேறுபட்டு, எனக்கு நானே வேற்றாளாய் முரண்பட்டு நிற்கிறேன். ஆனால் அவள் அப்படியே தானே இருக்கிறாள்? அவளிடம் எந்த மாற்றமும் இல்லையே? இது எப்படி சாத்தியம்? ஏதோ முக்தியடைந்த ஞானியைப் போல் எனக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.
காதல், கையாலாகதவனையும் ஞானியாய் மாற்றுமோ.? என்னவோ? என என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த நொடியில், சம்யூவின் வீட்டு வாசலில், என் வாகனம் உறுமியபடியே நின்றது.
என் மகிழுந்தின் ஒலிப்பானை நான் விடாது அலறவிட்ட தொனியில், அவசரமாய் அந்தப் பெரிய கேட்டை திறந்துவிட்டு, சல்யூட் வைத்தார் காவலாளி.
அந்தக் காவலாளியைக் கடந்து, வாகன தரிப்பிடத்தில், என் மகிழுந்தை நிறுத்தினேன். வேகமாய்க் கதவைத் திறந்து, அவசரமாய் இறங்கினேன். என் நடையில் அவசரமும், வேகமும் தெரிந்தது. அதே அவசரகதியில், அவள் வீட்டுக் கதவின் முன்னே நின்று, அழைப்பு மணியை வேகமாய் அழுத்தினேன். திரும்பத் திரும்ப, என் சுட்டுவிரல் வலியை உணரும் வரை அழுத்தினேன்.
பொறுமை என்பது மருந்துக்குக் கூட இல்லாத கையறு நிலையில் அவள் கதவைத் திறப்பதற்காய் காத்திருந்தேன். என் கருமணிகள் அவள் வரவை படம் பிடித்து உள்வாங்கிக் கொள்ள, அசையாமல் காத்திருக்க, அந்தக் கதவு திறப்பதற்காய் காத்திருந்த அரை நொடி கூட, எனக்கு அரை நூற்றாண்டாய் தெரிந்தது.
“கதவைத் திறந்து தொலையேன்டி இராட்சசி.! ஒவ்வொரு முறையும் என்னைக் காத்திருக்க வைப்பதில், அப்படியென்ன உனக்கு அலாதி இன்பம்? உனக்காக நானும் என் காதலும், உன் வீட்டின் கதவுக்கு வெளியே காத்திருக்கிறோம்.!” எனப் பைத்தியக்காரனாய் புலம்பியபடியே, மீண்டும் அழைப்புமணியை அழுத்தினேன்.
“வர்ரேன்.. வர்ரேன்..!” என்ற சத்தத்துடன் கதவு திறக்கப்பட, என்னவளைக் காண ஆசையாய்க் காத்திருந்த என் விழிகளுக்குள் ஏமாற்றம் சூழ்ந்தது. அந்த வீட்டின் பணிப்பெண் தான் கதவைத் திறந்திருந்தாள்.
“மேடம்! டைரக்டர் சார் வந்திருக்காரு!” என் எதிரே நின்றிருந்த பணிப்பெண் உள் நோக்கிக் குரல் கொடுக்க, படிகளில் இறங்கி வரும், மெல்லிய சத்தத்துடன் அவசரமாய் இறங்கி வந்தாள் சம்யூ.
“வி.. விக்ரம்.. நீ ஏன் இங்கே வந்த?” அவசரமாய் அவள் கேட்க, தாமரையைக் கண்ட ஆதவனாய் மலர்ந்த என் முகம் சட்டென கூம்பியது.
“என்னடி விளையாடுறியா? நான் உனக்காக உன்னைத் தேடி வந்திருக்கேன். ஏன் வந்தேன்னு கேட்கிறே? அப்போ இத்தனை நாள், என்கிட்டே வழிஞ்சு, குழைஞ்சு கொஞ்சிக் குலாவினதெல்லாம், எதுக்காக? பணத்துக்காகவா? இல்லை..!” இடைநிறுத்தி அவள் முகம் பார்த்தேன்.
“இல்லை பட வாய்ப்புக்காகவா? முழுசா முடிச்சுடு விக்ரம்! ஏன் இடையில் நிறுத்துறே? உன்னைப் பொருத்தவரை நான் அவ்வளவு தான் இல்லை? உனக்கு நீ மட்டும் தான் முக்கியம். நீ நினைச்சது நடந்துடனும்! ஆனால் என் மனசில் என்ன இருக்குன்னு கேட்க மாட்ட! உன் இஷ்டத்திற்கு ஆட, நான் ஒண்ணும் சாவி வச்ச பொம்மை இல்லை.!” எப்போதும் போல் அவளின் ஊசிக் குத்தும் பேச்சு, என் அகம்பாவத்தைத் தூண்டியது.
“சம்யூ!” அழுத்தமாய் அவளை இடை நிறுத்தியது என் குரல். என் குரலின் அதிர்வில் அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள் தான். ஆனால் அவள் விழிகள் மௌனமாய் என்னிடம் பேசியது. அவள் விழிகளைப் பார்த்த மாத்திரத்தில், உச்சிக்கு ஏறியிருந்த என் கோபம், சட சடவென, இறங்க, பனிமழைப் பொழிந்த பாலைவனமாய் மனம் குளிரவாரம்பித்தது.
“இப்போ என்ன தான், உன் பிரச்சனை சம்யூ? வீட்டுக்குள்ளே கூட விடாமல், வந்தவனை வாசலோட விரட்டுற? கோபம் வருமா? வராதா?!” என மென்குரலில் அவளிடம் சமாதானம் பேச முயன்றபடியே, அவள் உயரத்திற்கு குனிந்து அவள் இதழ்களில் மென்முத்தம் பதித்தேன். அவள் கோபமாய் இருக்கும் தருணங்களில், அவளிடம் நான் போடும் முதல் சமாதான உடன்படிக்கை இது தான்.
“இப்படியே முத்தம் கொடுத்து ஏமாத்திடு. ஸாரின்னு மறந்தும் கூடச் சொல்லிடாதே!” எனச் சலித்துக் கொண்டவள்,
“என் பேரண்ட்ஸ் வர்ராங்க விக்ரம். நீ இப்போ போ! நான் அவங்கக் கிட்டே பேசிட்டு உன்னைக் கூப்பிடுறேன்.!” என அவள் சொன்னதைக் கேட்டு, நிதானமாய் யோசிப்பது போல் தாடியைத் தடிவினேன்.
“இந்த ஃப்ரென்ச் பியர்டும், ஹேர் ஸ்டைலும் உனக்கு ரொம்ப அழகா இருக்கு! உன்னை வந்து கொஞ்சுறேன் டா! இப்போ கிளம்புறியா?” என அவள் சொன்ன வார்த்தைகளில், குழந்தையாய் என் மனம் அவள் காலடியில் மண்டியிட்டது. இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நின்று,
“அப்போ, என்னை உன் பேரண்ட்ஸ் கிட்டே இண்ட்ரோ கொடுக்க மாட்டியா?” என நான் கேட்க,
“நான் பேசிட்டு கூப்பிடுறேன் டா!” என அவள் சொன்ன பதில், எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவள் இப்போதே என்னுடன் வந்துவிட வேண்டும் என என் மனம் எதிர்பார்த்தது. ஊருக்குப் போக வேண்டிய நான், என் திருமணத்தை மறந்துவிட்டு, என் பெற்றோரிடம் கூட தகவல் தெரிவிக்காமல் அவளுக்காகவே ஓடி வந்திருக்கிறேன். ஆனால் இவளோ, பெற்றோரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்கிறாள். அவளின் ஓரவிழிப் பார்வையால், உறங்கும் எரிமலையாய் மாறியிருந்த என் மனம் மீண்டும் வெடிக்கத் தயாரானது.
நான் அவளிடம் ஏதோ பேச எத்தனித்த அதே நேரம்,
“நீ மதுரைக்குப் போகலையா விக்ரம்?” என்ற அவளின் குரலில் நான் பேச வந்ததை மறந்து,
“உனக்காகத்தான் டி இங்கே வந்தேன். அந்தக் கல்யாணம் வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டுத்தான் வந்தேன். பட், நீ என்னை விரட்டுறியே! நான் போறேன்” கோபம் மீதூறச் சொன்னபடியே திரும்பி நடந்தேன்.. முணுக் முணுக்கென எப்பொழுதும் எட்டிப் பார்க்கும் இந்தக் கோபத்தைக் குறைக்கத்தான் முயற்சிக்கிறேன். பிறக்கும் போதே, என்னுடன் பிறந்துவிட்டதோ? என்னவோ? ஆனால் முடியவில்லை. நான் திரும்பி நடந்த அடுத்த இரு விநாடிகளில்,
“விக்..ரம்!” அபூர்வ இராகமாய் செவிக்குள் நுழைந்த அவள் குரலில் என் உதடுகளில் புன்முறுவல் படர்ந்தது. வேண்டுமென்றே அவளுக்கு முகம் காட்டாமல், புறமுதுகிட்டு நின்றேன். வாள் விளையாடும் போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடுதல், கோழைத் தனமாக இருக்கலாம். ஆனால், இங்கே காதல் களத்தில் விதிமுறைகள் முற்றிலும் வேறானவை. போர்க்களத்திற்கு மாறானவை.
“ஜஸ்ட், கர்ட்டஸிக்காகவாவது அவங்கக் கிட்டே கேட்கணும் விக்ரம்! அவங்க வேணாம்ன்னு சொன்னாலும் நான் உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் போதுமா?”
என்னை பின்னிருந்து அணைத்தபடியே அவள் சொன்ன விதத்தில் எனக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் ஒட்டுமொத்தமாய் பறப்பதைப் போல் ஓருணர்வு. ஆனாலும் என் ஆண் மனம், அவளிடம் சமாதானமாக மறுத்தது.

