Loading

சலனம்-28

ஆழிப்பேரைலையாய் என் மனம் எனக்குள் பேரலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

 

கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கம் போல், எனக்குள் மன நடுக்கம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இதோ கண்ணுக்கெதிரே என் மகள் இருக்கிறாள். அவளைத் தொட்டு தூக்குவதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லை.

 

என் உதிரத்தில் உருவான என் மகளைத் தொடக் கூட விடாது என்னைத் தள்ளி நிறுத்தியிருந்தாள் சம்யுக்தா.

 

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தாலும், ஏதோ தொடவே முடியாத தூரத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். அவள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. குழந்தையின் அழுகைச் சத்தம் என் வீட்டை நிறைத்திருந்தது.

 

ஆனால் என் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும் கொடுப்பினை தான் எனக்கு இல்லை.

 

குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு, மட்டும் யாரிடமோ சொல்லி, ஒரு நடுத்தர வயது பெண்மணியை அமர்த்தியிருந்தாள். அந்த பெண்மணி இருக்கும் போதே, குளிப்பதிலிருந்து அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு. குழந்தையுடனே அமர்ந்துவிடுகிறாள்.என்னைப் பக்கத்தில் விடவோ, என் முகம் பார்க்கவோ, என்னிடம் பேசவோ மறுத்தாள்.

 

என்னதான் அவள் பக்க நியாயங்கள் எனக்குப் புரிந்தாலும், என் குழந்தையைத் தூக்க விடாதது எனக்குள் கோபத்தை விதைத்தது.

 

 

“சம்யூ! ஐ அம் ரியலி ஸாரி.. எத்தனை தடவை நானும் ஸாரி சொல்றது? என்னைப் புரிஞ்சுக்கோயேன்.!”

 

“அவ்வளவு கஷ்டப்பட்டு நீ ஸாரி சொல்ல வேணாம் விக்ரம். உன் வேலையைப் போய் பாரு! பிரபலமான டைரக்டருக்கு நிறைய வேலை இருக்கும்.!”

 

“என்னை என்னதான்டி செய்ய சொல்ற?”

 

“நீ ஒண்ணும் செய்ய வேணாம் விக்ரம்! இங்கிருந்து போ!”

 

“சம்யூ! விளையாடாதே! என் கோபத்தைத் தூண்டாதே! அவள் என் குழந்தை! என் குழந்தையை என்னைப் பார்க்க விட மாட்டேங்கற? இது நியாயமே இல்லை!”

 

“நியாயத்தைப் பற்றி நீ பேசாதே விக்ரம்! அப்படி நியாயம் தர்மம்ன்னு பார்க்கிறவன், குழந்தை வயிற்றில் இருக்கும் போது பார்த்திருக்க வேண்டியது தானே? குழந்தை பிறக்கற வரை என்ன கோமாவில் இருந்தியா டா இடியட்?”

 

“என்னோட சூழ்நிலை அப்படி! உனக்காகவும் குழந்தைக்காகவும் தானே நான் சம்பாதிக்கிறதே.. நீயும் ஃபீல்டில் இருந்திருக்கே தானே? உனக்கு தெரியாதா சம்யூ, ஒரு டைரக்டரா அங்கே இருக்க வேண்டியது கட்டாயம். நான் போகலைன்னா நிறைய காஸிப்ஸ் கிளம்பும். கான்ட்ரவஷியல் டாக்ஸ் வரும். அது படத்தோட வெற்றியைப் பாதிக்கும்!”

 

“உன் சூழ்நிலை மண்ணாங்கட்டின்னு என்கிட்டே வந்து பேசாதே விக்ரம். உனக்கு உன்னோட தொழில் தான் முக்கியம். தனிப்பட்ட வாழ்க்கை தேவையில்லைன்னா என்னத்துக்கு டா என்னைக் கல்யாணம் பண்ணின? என்னை ஏன் இந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளே கொண்டு வந்த? எனக்காகவும் என் குழந்தைக்காகவும் நீ சம்பாதிக்க வேண்டாம். எங்களைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீ எங்களை விட்டு விலகி இரு! அது தான் உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.!”

 

“சம்யூ! நீ என்ன பண்ணினாலும் அவள் என் குழந்தைங்கிறதை உன்னால் மாத்தவே முடியாது.!”

 

“டோன்ட் பீ சில்லி.. அப்பா நீ தான். ஆனால் நீ தான் அப்பான்னு என் பொண்ணுகிட்டே நான் தான் உன்னை அடையாளம் காட்டணும் விக்ரம். ஆனால் நான் உன்னை அவளுக்கு அப்பான்னு அடையாளம் காட்டப் போறதில்லை. அவளுக்கு நான் மட்டும் போதும். நீ எங்களுக்கு வேணாம் விக்ரம்.!”

 

 

“சம்யூ!” அவள் சொன்ன பதிலில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தேன்.

 

 

“சும்மா கத்தாதே விக்ரம்! இது நான் அவசரத்தில் எடுத்த முடிவு இல்லை. பொறுமையாய் யோசிச்சு எடுத்த முடிவு. ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்கிட்டு, வாழ்க்கை முழுசும் ஒரே வீட்டுக்குள்ளே வாழ முடியும்ன்னு எனக்குத் தோணலை. !” என அவள் துளி பதற்றமில்லாமல் சொன்ன விதத்தில் நான் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.

 

“எந்த வீட்டிலேயும் சண்டை வர்ரதே இல்லையா? உட்கார்ந்து பேசினால் எல்லாத்தையும் சால்வ் பண்ணலாம் சம்யூ! குழந்தைக்காக யோசி டி! அவசரமா முடிவெடுத்துட்டு, குழந்தையைக் கஷ்டப்படுத்தக் கூடாது டி!”

 

 

“நாம மேரேஜ் பண்ணி அல்மோஸ்ட் ஒன் இயர் ஆகப் போகுது விக்ரம்! எத்தனை நாள் என்கிட்டே உட்கார்ந்து பேசியிருக்க விக்ரம்? நாம லிவ்-இன்னில் இருக்கும் போது, எனக்கு இருந்த முக்கியத்துவம் இப்போ இல்லை. பொண்டாட்டி ஆனதும் நான் முக்கியமில்லாமல் போய்ட்டேனா டா? மூக்கணாங்கயிறு மாதிரி, தாலியைக் கட்டி கூட்டிட்டு வந்துட்டோம். இனி இவள் எங்கே போய்டுவாள்ங்கிற தைரியமா தானே? நான் அவ்வளவு சீப்பா போய்ட்டேனா டா? உன்னோட வாழ்க்கையில் எனக்கும் என் குழந்தைக்குமான வேல்யூ என்ன?!”

 

 

“ஏதோ ஒருநாள் வீட்டுக்கு வரலை.. நீ கால் பண்ணும் போது எடுக்கலை! அதுக்காகவா இவ்வளவு பிரச்சனை பண்ணுற சம்யூ? இது ஒண்ணும் சினிமா இல்லை சம்யூ! இது லைஃப். இங்கே கஷ்டம் துக்கம் எல்லாம் வரும். சினிமாவில் வர்ர மாதிரி உன்னை எப்போதும் கொஞ்சிட்டே இருக்க முடியாது! இட்ஸ் நாட் பாஸிபிள்!”

 

 

“எவ்வளவு சிம்ப்பிளா சொல்றே.? ஏதோவொரு நாள் இல்லை. தட் பர்ட்டிகுலர் டே, நான் டெலிவெரி பெயினில் துடிச்சுட்டு இருந்தேன். பக்கத்தில் உதவிக்கு ஆள் இல்லைன்னு தான் உன்னைக் கூப்பிட்டேன். நான் என் சிஸ்டரைக் கூப்பிடுறேன்னு சொன்னப்போ கூட நீ வேணாம்ன்னு சொல்லிட்ட! என்னோட பாதுகாப்புக்கும், என் குழந்தையோட பாதுகாப்புக்கும் நீ என்ன ஏற்பாடு செஞ்சிருந்த? நான் உன்னைக் கொஞ்சி, குலாவுவதற்கு தான் கூப்பிட்டேன்னு நினைச்சியா? ஒருவேளை நான் செத்துப் போயிருந்தால், நான் சொல்றது உனக்கு புரிஞ்சிருக்குமோ என்னவோ?! நீ எனக்கு இத்தனையும் பண்ணினாலும், நான் உன்னை எதுவும் சொல்லாமல் ஏத்துக்கணுமா டா? நான் ஒண்ணும் கல்லு இல்லை! எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு அசையாமல் இருக்கிறதுக்கு. நான் உயிருள்ள மனுஷி. எனக்கு உணர்ச்சிகள் இருக்கு. நீ என் ஹஸ்பண்ட்ங்கிற ஒரே காரணத்திற்காக நீ செய்றதையெல்லாம் பொறுத்துப் போக, நான் உன் அடிமை இல்லை.! ஆனால் ஒண்ணு நீ சரியா சொன்ன, இது சினிமா இல்லை. இது லைஃப்! சினிமாவில் ஒரு ஹீரோயின் என்ன செய்யணும்.? எப்படி நடிக்கணும்? கண்ணீர் எந்தக் கண்ணில் வரணும்ங்கிறது வரை, ஒரு டைரக்டர் முடிவு பண்ணலாம். ஆனால் இது என் லைஃப். இதில் முடிவு எடுக்க வேண்டியது நான் தான். நான் நடிச்ச படத்துக்கெல்லாம் டைரக்டரா இருந்த மாதிரி, என் வாழ்க்கைக்கும் இருக்க முயற்சிக்காதே!” 

 

 

அவள் கேட்கும் கேள்விகளெல்லாம் எனக்குப் புரிந்தது. அவளின் கேள்விகள் நியாயமானது தான். ஆனால் எனக்குத்தான் பதில் தெரியவில்லை. ஆனாலும் என் குழந்தையை விட்டுக்கொடுக்கவும் எனக்கு மனமில்லை.

 

 

“சம்யூ! ப்ளீஸ்..! நான் தான் ஸாரி சொல்லிட்டேனே? இதுக்கு மேலே நான் என்ன செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறே? காலில் விழணுமா?”

 

 

“ஜஸ்ட் ஸாரின்னு ஒருவார்த்தை நீ சொன்னதும், நீ செஞ்ச எல்லாத்தையும் நான் மறந்துடணுமா? நீ மன்னிப்பு கேட்டதும், நான் மறந்துடணும்ன்னு எப்படி எதிர்பார்க்கிறே? நீ கேட்கிற ஒற்றை வார்த்தையில், நான் அனுபவிச்ச வலியையும் வேதனையும் மறந்துடுமா? இல்லை, அந்த ஒரு வார்த்தையால், இதுக்கு முன்னால் நடந்த ஒரேயொரு விஷயத்தையாவது மாற்ற முடியுமா? எதுவுமே முடியாத போது, எதுக்கு இந்த ஸாரி? பேசாமல் போய்டு விக்ரம்!” 

 

 

என் குழந்தைக்காக நான் மன்னிப்பு கேட்க விழைந்தாலும் கூட, அவள் அதை ஏற்பதாய் இல்லை. ஆனால் நான் செய்த செயல்களை உணர்ந்து மன்னிப்பு வேண்டினேனா எனக் கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், மனம் வருந்தி கேட்காத மன்னிப்பு, மன்னிப்பு கணக்கிலேயே சேராது தான்.

 

 

ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் கேட்ட மன்னிப்பை அவள் ஏற்க மறுத்ததும், எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. எனக்கு சம்யூவும் வேண்டும், குழந்தையும் வேண்டும். யோசிக்க அவகாசம் கூடத் தராது, அவள் என்னைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்க, அவள் கரம் பற்றி இழுத்து இறுக அணைத்திருந்தேன் நான்.

 

 

“விடுடா! இடியட்!”

 

 

“விக்ரம்! விடுன்னு சொல்றேன்ல்ல?!”

 

 

“தள்ளிப் போ, விக்ரம்! என் அனுமதி இல்லாமல் என்னைத் தொடாதே!” என அவள் என்னைத் தள்ளி விட முயற்சி செய்தாலும் கூட, அவள் உடல் இளகுவதை என்னால் உணர முடிந்தது.

 

 

“எனக்கு ஒரேயொரு வாய்ப்பு கொடு சம்யூ! இனிமே இந்த மாதிரி நடக்காது! ஐ பிராமிஸ்ட் யூ! நீயும் குழந்தையும் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் சொல்லு? கொஞ்சமாவது நம்ம குழந்தைக்காக யோசி சம்யூ!”

 

 

“நான் இப்போ யோசிச்சதே குழந்தைக்காக தான் டா! அவள் வளர்வதற்கு நல்ல சூழ்நிலையை அமைச்சு கொடுக்கிறது பெத்தவங்களா, நம்ம கடமை. ஆனால் ஒரு நல்ல அப்பாவா, நீ அதை செய்ய மாட்டே! ஸோ, என் குழந்தைக்கு நானே செஞ்சுக்கிறேன்.!”

 

 

“என் குழந்தைன்னு பிரிச்சு சொல்லாதே டி! நம்ம குழந்தைன்னு சொல்லு!” அவள் நெற்றியில் முத்தமிட்டபடியே சொன்னேன். இத்தனை நேரமாய் இறுகிக் கிடந்த அவள் முகம், லேசாய் மாறியது. அவள் யோசித்தபடியே என் அணைப்பிற்குள் நிற்பதே, எனக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. என்னை மீறி சென்றுவிட மாட்டாள் என்கிற தைரியமும் எனக்குள் முளைத்தது.

 

என்ன யோசித்தாள்? என்ன முடிவு செய்தாள்? எதையும் அவள் முகத்திலிருந்து என்னால் கணிக்க முடியவில்லை.

 

 

“இது தான் உனக்கு கடைசி! இதே மாதிரி இன்னொரு முறை நடக்கக் கூடாது!” என்னை விரல் நீட்டி மிரட்டினாள் சம்யுக்தா.

 

 

“கண்டிப்பா! எந்த பிரச்சனையும் வராது. நான் பார்த்துக்கிறேன். நீ என்னை நம்பறியே அதுவே எனக்குப் போதும்! இப்போ நான் குழந்தையைத் தூக்கலாமா?” எனக் கேட்டேன்.

 

 

“விக்ரம்! வெய்ட்! எனக்கு கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு. என அவள் சொல்லவும், அதிர்ந்து அவளைப் பார்த்தேன் நான்.

 

 

“இனிமேல் இது மாதிரி நடந்தால், நீ எவ்வளவு கெஞ்சினாலும் நான் இங்கே இருக்க மாட்டேன். அப்பறம் இன்னொன்னு.. குழந்தைக்காக நான் ப்ரேக் எடுத்திருந்தாலும், இனிமே நடிக்கவே மாட்டேன்னு அர்த்தம் இல்லை. குழந்தைக்கு ஒன் இயர் ஆனதும், நான் நடிப்பைத் தொடரத்தான் செய்வேன். நான் நடிகைன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே! ஸோ, நீ என்னை ரெஸ்ட்ரிக்ட் பண்ணக் கூடாது.!” அவள் சொன்னதும், இதுவரை இருந்த அதிர்வு பேரதிர்வாய் மாறியிருந்தது.

 

 

“இன்னும் ஒன் இயர் இருக்கே சம்யூ! பார்த்துக்கலாம் விடு!” அப்போதைக்கு சமாளிக்கத்தான் முயன்றேன்.

 

 

“அப்போ பார்த்துக்கலாம்ன்னு சொல்றதுக்கு இதில் ஒண்ணுமே இல்லை. ஆனால், நீ இப்போவே ஓகே சொல்லு! நாளை பின்னே உன் மனசு எப்படி வேணும்னாலும் மாறலாம். ஏன்னா, உனக்கு சாதகமா மட்டும் தான் உனக்கு சிந்திக்கத் தெரியும்.!” என அவள் அழுத்தமாய் சொல்ல, வேறு வழியில்லாமல், சரியென்று தலையை அசைத்திருந்தேன்.

 

நான் சரியென்று சொன்னதும் தான் அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

 

 

“குளிச்சுட்டு வந்து குழந்தையை தூக்கிக்கோ!”

 

என அவள் சொன்ன அந்த நொடியில், சிறகில்லாமல் வானத்தில் பறந்துக் கொண்டிருந்தேன் நான். அடுத்து வந்த நாட்கள், மெதுவாகவும், நிதானமாகவும் நகர்வதைப் போலத்தான் எனக்குத் தோன்றியது.

 

 

குழந்தையுடனே என் பொழுதுகள் கழிந்தது. என் மகளுக்காக அவளுக்கு பெயர் வைக்கும் உரிமையை சம்யூவிற்கு விட்டுக்கொடுத்தேன். அதுவும் உடனடியாக விட்டுத் தரவில்லை. சிறு சண்டைக்குப் பின் போனால் போகட்டுமென விட்டுவிட்டேன். குழந்தையின் அழுகை, சிரிப்பு, பால் வாசம், பால்கனியில் நிழலில் காயும், என் குழந்தையின் குட்டி குட்டி உடைகள் என என் வீடு நிறைந்தது.

 

 

நாங்கள் இருவர் மட்டுமே இருந்த அந்த வீட்டை எங்கள் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமிக்க துவங்கியிருந்தாள்.

 

அடுத்து வந்த எங்களின் முதல் திருமண நாள், சம்யூவின் பிறந்தநாள், குழந்தையின் பிறந்தநாள் என என் வீடு கொண்டாட்டங்களால் ஆர்ப்பரித்தது. அனைத்து விழாக்களும் பண்டிகைகளும், என் மகளின் வரவால், இன்னும் கொஞ்சம் அழகாய் மாறியது.. எனக்கும் சம்யூவிற்கும் இடையேயான நெருக்கம் கூட அதிகமாகியிருந்தது. என் மகள் அவந்திகாவின் வரவால், என் வாழ்க்கைக்கு மறு வாய்ப்பு கிடைத்ததைப் போலத்தான் இருந்தது.

 

 

சின்ன சின்ன சண்டைகள் எங்களுக்குள் வந்தாலும், குழந்தையால் மீண்டும் சண்டை சமாதானமானது. எந்த மேடு பள்ளமும் இல்லாத நேர்த்தியான சாலையில் பயணிப்பதைப் போல எங்கள் வாழ்க்கை நேர்க்கோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்த ஒரு வருட தற்காலிக சந்தோஷமும், நிம்மதியும், என் ஒட்டுமொத்த நிம்மதியையும் பறிக்கத்தான் என்பது எனக்கு அப்போதைக்குப் புரியவில்லை.

 

அவந்திகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே, சம்யுக்தாவிற்கு பட வாய்ப்பு வந்தது. இத்தனை நாள் விட்டுப் போயிருந்த வாக்குவாதங்கள் மீண்டும் துவங்கின.

 

 

“சம்யூ! கொஞ்சம் யோசிச்சு டிஸைட் பண்ணு!”

 

 

“அதெல்லாம் நல்லாவே யோசிச்சுட்டேன் விக்ரம்!”

 

 

“நீபாட்டுக்கு ஷூட்டிங் போய்ட்டால் குழந்தையை யார் பார்த்துப்பா?”

 

 

“நானே பார்த்துக்கிறேன் விக்ரம். கேர் டேக்கர் ஏற்பாடு பண்ணி நான் கூடவே கூட்டிட்டு போய்டுவேன்.!”

 

 

“என் குழந்தையை கேர் டேக்கர் பார்க்கணும்ன்னா, அம்மான்னு நீ எதுக்கு இருக்கே?!”

 

 

“விக்ரம்! குழந்தையை நான் பார்த்துக்கிறேன். ஒருவேளை கேர்டேக்கர் வைக்கறது உனக்கு பிடிக்கலைன்னா, நீ அவந்தியைப் பார்த்துக்கோ. நீ கவலைப் படாதே! ஏற்கனவே நாம பேசினது தானே? அவந்திக்கு ஒரு வயசு ஆனதும், நான் ஆக்டிங் கன்ட்டினியூ பண்ணுவேன்னு உன்கிட்டே சொன்னேன் தானே? இன்னும் சொல்லப் போனால், இந்த கேரக்டருக்கு நான் தான் சரியா இருப்பேன்னு என்கிட்டே கேட்டிருக்காங்க! நான் அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டேன் விக்ரம்! இனிமே எதுவும் பண்ண முடியாது.!” தெள்ளத் தெளிவாய் சொன்னாள்.

 

 

“இது சரி வரும்ன்னு எனக்கு தோணலை சம்யூ! இன்னும் ஒரு ஒன் இயர், குழந்தைக்காக, இதையெல்லாம் நீ ஒதுக்கி வைக்கக் கூடாதா?!”

 

 

“நோ வே, விக்ரம்! இது நான் ஏற்கனவே டிஸைட் பண்ணினது. எனக்கு என்னோட கெரியரும் முக்கியம்!”

 

 

“அப்போ நம்ம குழந்தையை விட, உனக்கு உன் கெரியர் தான் முக்கியம் அப்படித்தானே?!” 

 

 

“நான் எங்கேடா கெரியர் மட்டும் முக்கியம்ன்னு சொன்னேன்? எனக்கு ஃபேமிலியும் முக்கியம். கெரியரும் முக்கியம்.! ஆனால் நீ எனக்கு உறுதுணையாய் இருந்தால் மட்டும் தான், என்னால் எதையுமே தைரியமாய் பண்ண முடியும். நீயே எனக்கு தடையாய் நின்னா எப்படி டா?!”

 

 

“நம்ம குழந்தைக்காக தான் சொல்றேன்! கொஞ்சம் யோசி சம்யூ!”

 

 

“விக்ரம்! போதும்! திரும்ப திரும்ப இதைப் பத்தி பேசினால் சண்டை மட்டும் தான் மிஞ்சும். ப்ராஜெக்ட் சைன் பண்ணின பிறகு, அதிலிருந்து பின்வாங்குறது எனக்கு பழக்கமில்லை விக்ரம். இதற்கு மேல் என் முடிவை மாற்ற முயற்சிக்காதே!” எனச் சொல்லிவிட்டு, அவள் சென்றுவிட்டாள்.

 

 

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்போதைக்கு குழந்தை தானே மிகவும் முக்கியம்! ஆனால் இவள் நடிக்கப் போகிறேன் என்கிறாள்! நடிப்பு நடிப்பு என குழந்தையை விட்டுவிடுவாளோ? பயம் எனக்குள் முளைத்தது. ஏனோ என் மனதிற்குள் ஒருவித படபடப்பு. என்னை அறியாமலே எனக்குள் ஒருவித பயமும் பதற்றமும் குடிகொண்டிருந்தது. அவள் நடிக்கப் போவதில் எனக்கு கோபம் ஒன்றும் இல்லை.

 

ஆனால், சின்னஞ்சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு, படப்பிடிப்பில் வெயிலில் குழந்தையைக் கஷ்டப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. அவள் அதோடு நிற்கவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பிற்காய் குழந்தையோடு கிளம்பினாள். 

 

 

“சம்யூ நில்லு!” நான் விளித்ததை அவள் பொருட்படுத்தவே இல்லை.

 

 

“சம்யூ! இன்னும் ஒரேயொரு வருஷம்! குழந்தைக்காக இரு! நெக்ஸ்ட் இயர், நானே உன்னை வச்சு படம் பண்ணுறேன். புரிஞ்சுக்கோ டி!”

 

 

“நீ தான் என்னைப் புரிஞ்சுக்கணும் விக்ரம். என்னால் என் பொண்ணை நல்லா பார்த்துக்க முடியும். என் திறமைக்கு கிடைக்கிற வாய்ப்பே போதும். இந்த கணவன் மனைவிங்கிற உறவிற்காக நீ என்னை வச்சு படம் எடுக்கிறதெல்லாம் வேணாம்.!”

 

 

“வேணாம்ன்னு சொன்னால் கேட்க மாட்டியா சம்யூ?”

 

“எனக்குப் பிடிச்சதைத் தான் நான் செய்ய முடியும் விக்ரம்! நான் மட்டும் தான் செய்ய முடியும்!”

 

“இப்போ மட்டும், நான் சொல்றதைக் கேட்காமல் நீ போனால், திரும்ப நீ இங்கே வரக் கூடாது சம்யூ!” நடக்கப் போகும் விபரீதங்கள் அறியாமல், என்னை மீறி ஒரு கோபத்தில் சொல்லிவிட்டேன்.

 

ஆனால் அவள் திரும்ப வரப் போவதே இல்லை. எனத் தெரிந்திருந்தால், சொல்லியிருக்க மாட்டேனோ என்னவோ?

 

 

“நான் திரும்பி வரக் கூடாது அவ்வளவு தானே? வர மாட்டேன் போதுமா? குழந்தையைப் பார்த்துக்க கேர் டேக்கர் வைக்கிறது தானே உனக்கு பிரச்சனை? இன்னைக்கு ஒருநாள் நீயே குழந்தையைப் பார்த்துக்கோ!” என்ன நினைத்தாளோ, கடைசி நொடியில் அவந்திகாவை என் கரத்தில் தந்துவிட்டு, 

 

 

“ஏன்டா இப்படி மூஞ்சியை வச்சிக்கிற? நான் எல்லாத்தையும் சமாளிச்சுடுவேன் விக்ரம். நீ அவந்தியை நல்லா பார்த்துக்கோ! கொஞ்சமாவது சிரியேன் டா! நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்குப் புரியுது விக்ரம். நீ குழந்தைக்காக யோசிக்கிற! குழந்தையை நாம ரெண்டுபேரும் பார்த்துப்போம். என்னால் வீட்டிலேயே உட்கார்ந்து இருக்க முடியாது டா!” அவள் சொன்னது எனக்குப் புரிந்தது. சம்மதமாய் தலையை ஆட்டினேன்.

 

 

“தேங்க்ஸ் டா விக்ரம்!” அவசரமாய் தன் ஈர இதழ்களால், என் கன்னத்தில் முத்தம் வைத்தவள், குழந்தையின் கன்னத்திலும் முத்தமிட்டுவிட்டு கிளம்பினாள். அவள் தந்துவிட்டுப் போன கன்னத்து முத்தம் தான் கடைசி முத்தம் என நான் அறிந்திருந்தால், அவளை நான் போகவிட்டிருக்க மாட்டேனே?

 

எதிர்காலத்தை கணிக்கும் வித்தையை இந்தக் கடவுள், மனிதனுக்கும் கொஞ்சமாவது கற்றுக்கொடுத்திருக்கலாம். அவள் திரும்பி இந்த வீட்டிற்குள் வரப் போவதே இல்லை என்பதை அறியாமல், நான் குழந்தையோடு ஐக்கியமாகியிருந்தேன். நேரம் போகப் போக, குழந்தை தாயை எதிர்பார்த்து சிணுங்கத் துவங்கியிருந்தாள்.

 

 

வேறு வழியில்லாமல், அவளை அலைபேசியில் அழைக்க முயன்றேன். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கணிணி குரல் தகவல் சொன்னது.

 

ஒருவேளை படப்பிடிப்பில் இருப்பாள் என என் மூளை உணர்த்தினாலும், என் மனம் படபடப்பை உணர்ந்தது.

 

ஏனென்றால், உதவியாளரிடம் சொல்லியாவது தகவல் சொல்விடுவாள். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததே எனக்குப் புதிதாக இருந்தது.

 

 

பத்துப் பதினைந்து முறைகள் அழைத்துப்பார்த்துவிட்டு, அவளின் உதவியாளர் பெண்ணுக்கு அழைக்க முயன்றபோது, சித்தார்த்திடமிருந்து அழைப்பு வந்தது. சித்தார்த் அழைத்ததுமே ஏதோ சரியில்லை என்பதை என் மனம் உணர்ந்தது. பதற்றமும் பயமும் எனக்குள் துளிதுளியாய் நிரம்பியது.

 

 

“என்னடா சித்தார்த்! இந்நேரத்தில் நீ கூப்பிட்டுருக்க?”

 

 

“ஒண்ணுமில்லை விக்ரம்! கொஞ்சம் கே.கே ஹாஸ்பிட்டல் வா டா!”

 

 

“ஹாஸ்பிட்டலா.? எதுக்கு டா? யாருக்கு என்ன ஆச்சு?”

 

 

“நீ வா டா!” எனச் சொன்ன சித்தார்த்தின் குரலில் பதற்றமும் அவசரமும் இருந்தது.

 

 

“சித்தார்த்! என்ன ஆச்சுன்னு சொல்றியா? இல்லையா டா? ஏற்கனவே சம்யூ ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது. நீ வேற ஹாஸ்பிட்டல் வரச் சொல்ற? என்னதான் டா நடக்குது?” என்னை மீறி கத்தியிருந்தேன் நான்.

 

 

“சம்யூ.. சம்யூவிற்கு ஆக்ஸிடென்ட் டா! ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதிடுச்சுன்னு சொல்றாங்க! நீ முதலில் கிளம்பி வா டா!” அவன் சொன்ன நொடி, என் கரத்திலிருந்த அலைபேசியை தவறவிட்டேன் நான்.

 

கண்கள் கலங்கியது. என் கன்னத்தில் கடைசியாய் முத்தமிட்டுப் போனவள் இப்போது இல்லாமல் போய்விடுவாளோ? என யோசிக்க முடியாமல் என் மனம் தவித்தது.

 

கால்நீட்டி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தக் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டேன். 

 

 

‘இவள் அம்மா எங்கே எனக் கேட்டால், நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்?’

 

 

‘சம்யூவிற்கு எதுவும் நிகழாது! அவள் மீண்டு வந்துவிடுவாள். நான் மீட்டுக் கொண்டு வந்துவிடுவேன். எனக்காக இல்லாவிட்டாலும், குழந்தைக்காக அவள் மீண்டு வர வேண்டும்!’

 

என எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டு, குழந்தையையும், அவளுக்கான இருக்கையில் அமர்த்திவிட்டு, மகிழுந்தைக் கிளப்ப முயன்றேன். என் வாழ்நாளிலே முதன்முறையாய் என் கைகள் நடுங்கியது.

 

பின் சில விநாடிகள் யோசித்து சுதாரித்து, ஓட்டுநரை வாகனத்தைக் கிளப்பச் சொல்லிவிட்டு, பின்னிருக்கையில் குழந்தையோடு அமர்ந்துக் கொண்டேன். மனம் பதைபதைத்தது. உடலும் உள்ளமும் ஒருசேர நடுங்கியது.

 

அவளைத் தடுக்காமல் விட்டுவிட்டேனா? சண்டை போட்டாவது அவளைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமோ? குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைத் தின்றது.

 

 

நான் மருத்துவமனையை அடைந்த அந்த நொடி, சம்யூ அவளின் கடைசி நொடிகளில் இருந்தாள். அவளின் கண்கள் என்னையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்தது. மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருக்க, நிறைய வயர்களின் நடுவே, தலையில் கட்டுப்போட்ட நிலையில் படுத்திருந்தாள் சம்யுக்தா. முகம், நெற்றி, கன்னம் என எல்லா இடங்களிலும் காயம் வெளிப்படையாய் தெரிந்தது.

 

 

“சம்யூ!”

 

நான் உச்சரிக்கும் முன்னமே கண்ணீர் என் கன்னத்தை நனைத்தது. அவளின் வறண்டு காய்ந்து போன உதடுகள், வலியுடனான புன்னகையை உதிர்த்தது. குழந்தையை கண்களில் நீர்தேங்க, சில நொடிகள் பார்த்தவள், எதையோ கடினப்பட்டு சொல்ல முயன்றாள்.

 

“ஸாரி விக்ரம்!”

 

என அவள் உதடுகள் அசைவை வைத்து அவள் சொல்ல முயன்றதை உணர்ந்தேன் நான்.

 

 

“நான் தான் டி உன் கிட்டே மன்னிப்பு கேட்கணும்! எங்களை விட்டுப் போய்டாதே சம்யூ! ப்ளீஸ் டி! குழந்தைக்காக வந்துடு!”

 

என நான் சொன்ன அந்த நொடி, அவள் கண்கள் அசைவை நிறுத்தியிருந்தது. அவளின் பழுப்பு நிறக் கண்களுக்குள், கடைசியாய் விழுந்த பிம்பம் என்னுடையது தான்.

 

அவ்வளவு தான்.. முடிந்தது.. எல்லாம் முடிந்தது.! நான் இனி என்ன செய்யப் போகிறேன்? இவளில்லாமல் என் உலகம் எப்படி சுழலப் போகிறது? என யோசனைகள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்க,

 

 

“ம்மா! ம்மா!”

 

என்ற என் குழந்தையின் குரலில் ஒட்டுமொத்தமாய் உடைந்து அழத் துவங்கியிருந்தேன். நான் என்ற எனது அகங்காரமும் விழுந்து நொறுங்கியது அந்த தருணத்தில் தான். 

 

 

அன்று நடந்தவைகளை மொத்தமாய் சொல்லிவிட்டு, கண்ணீர் சுமந்த விழிகளுடன் நிமிர்ந்த போது, நான் கண்டது, சமுத்ராவின் இறுகிய முகத்தை தான்.

 

அவளின் உணர்ச்சி துடைத்த முகத்திலிருந்து, என்னால் எதையும் அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவள் என்ன நினைக்கிறாள்.? என்ன முடிவெடுக்கப் போகிறாள்? என எதுவும் தெரியாமல் அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தேன் நான். ஒரே உருவத்தில் இருக்கும், இரு பெண்களின் நடுவே என்னைப் போலவே, என் வாழ்க்கையும் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

 

 

“உன் இழப்பில்

அதிகம் மனங்குமைவேன்

என்று மருளாதே..

மகிழ்வாய்ச் செல்.!

நானென்பது,

நீ இருந்தால் வீடு,

இல்லாவிடில் நினைவிடம்.

இரண்டுமே என்வரையி ல்,

 காதல் தான்..!”

                           (யாத்திரி)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சம்யூ பாவம். விக்ரம்.

    1. Author

      அவன் பண்ணதுக்கு தான் அனுபவிக்கிறான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤