
சலனம்-18
“According to Section 39 of the Guardians and Wards Act, 1890, if a mother/father fails to provide proper guidance, care, or support, and is determined to be unfit, drug abuser, or who emotionally and mentally abuses the child, will eventually lose custody of their child. Also, a parent who violates court orders relating to the divorce, or who engages in criminal activity will eventually lose the custody.”
“சட்டம் இதைத் தான் சொல்லுது மிஸ்டர்.விக்ரம். நீங்க குழந்தையோட பாதுகாப்பை உறுதிபடுத்த தவறியிருக்கீங்க! அன்றைக்கு பாத்ரூமில் மாட்டிக்கிட்ட குழந்தைக்கு எதாவது ஆகியிருந்தால் என்ன செஞ்சுருப்பீங்க? நிச்சயம் ஜெயிலுக்குள்ளே போயிருப்பீங்க! அதுவும் தாயில்லாத, பெண் குழந்தையாய் இருக்கும் போது, உங்களுக்கு எதிரான சாட்சிகளும் இருக்கிறதால், கஸ்டடி சமுத்ராவிற்கு கிடைக்க நிறையவே வாய்ப்பு இருக்கு.!”
“அதோட, உங்களுக்கு குடிப்பழக்கம் வேற இருக்கு. இப்படிப்பட்ட உங்களை நம்பி குழந்தையை ஒப்படைச்சா, குழந்தை உயிருக்கு தான் ஆபத்து. யூ ஆர் நாட் அ குட் ஃபாதர்.!” என் முன்னால் அமர்ந்திருந்த வழக்கறிஞர் சொல்வதை சிலையாய் அமர்ந்துக் கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.
உண்மை தான், எல்லாம் நான் செய்ததால் ஏற்பட்ட விளைவு தானே? சம்யூ இல்லாமல் போன சோகம் எனக்குள் இருந்தாலும், நான் குழந்தைக்காக நிதானமாய் யோசித்திருக்க வேண்டும். சமுத்ரா இருக்கும் தைரியத்தில் தானே மது அருந்திவிட்டு வந்திருக்கிறேன்.
நான் மட்டுமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், என்பதை உணர்ந்திருந்தால், இதையெல்லாம் செய்திருக்க மாட்டேனே.? ஆனால் எதையும் யோசிக்காமல், முக்கியமாய் என் குழந்தையைப் பற்றி துளியும் யோசிக்காமல், நடந்தவற்றிற்கு காரணமாகிவிட்டு, இப்போது குழந்தையை சமுத்ராவிடம் கொடுக்க யோசிப்பது தவறு தான்.
“எங்கே கையெழுத்துப் போடணும் மேடம்?!”
வேறு என்ன கேட்க வேண்டுமென எனக்குத் தெரியவில்லை. என் குழந்தையை நல்லபடியாய் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு என்னுடையது.
நான் என்னுடைய பொறுப்பிலிருந்து தவறியிருக்கிறேன். அதனால், எனக்கு இந்த தண்டனை தேவை தான். இதை நான் விரும்பி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தவறைச் செய்துவிட்டு, தண்டனையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனச் சொல்வது அபத்தம் தான் இல்லையா? வேறு வழியில்லாமல், வழக்கறிஞர் காட்டிய இடத்திலெல்லாம் கையொப்பமிட்டுவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினேன். சமுத்ரா குழந்தையுடன் வெளியே நின்றிருப்பது தெரிந்தது.
“கையெழுத்து போட்டேன் சமுத்ரா! டெல்லி போகாமல் சென்னையிலேயே இருக்கக் கூடாதா? எனக்காக ப்ளீஸ்..!
“நாட் பாஸிபிள் விக்ரம்! குழந்தை இங்கே இருந்தால் ஸேஃபா இருக்க மாட்டாள்ன்னு எனக்கு தோணுது.!” அவள் சொன்னது எனக்கு செருப்பால் அடித்த உணர்வை தந்தது. என் குழந்தை இங்கே பாதுகாப்பாய் இருக்க மாட்டாள், எனச் சொல்வதற்கும், நான் மட்டுமே காரணம். என் குழந்தை என் எதிரில் இருக்கும் போதே, என்னிலிருந்து தள்ளி நிற்பது போன்றதொரு உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. உணர்வு மிகுதியில் தொண்டை அடைத்தது எனக்கு.
“ம்ம்ம்!”
ஒற்றை எழுத்தை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். இன்னும் சில நாட்கள். எனக்கே எனக்கென்று இருக்கும், ஒற்றை உறவை நான் தொலைத்துவிட்டூ நிற்கப் போகிறேன் என நினைக்கையில், மனம் நிரம்பவும் வலித்தது. திரும்பிப் பார்க்கப் பிடிக்காமல், கால் போன போக்கில் நான் நடந்துக் கொண்டிருக்க,
“விக்ரம்!”
என்ற சமுத்ராவின் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது. அனிச்சையாய் அவள் குரலுக்கு கட்டுப்பட்ட பொம்மையைப் போல் திரும்பி நின்றேன்.
“வீட்டுக்கு தானே போற? நானும் வர்ரேன்!” குழந்தையைத் தூக்கிக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்துவிட்டாள். வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வீடு நோக்கிப் பயணித்தேன். மனம் முழுதும், அடர்த்தியான வெறுமை அழுத்தமாய்ப் படர்ந்திருந்தது. இப்படியே இந்தப் பயணம் ஆயுள் வரை நீண்டுவிடக் கூடாதா? ஒரு தோழியாய், என் குழந்தையின் தாயாய், இவள் என்னுடனே இருந்துவிடக் கூடாதா? எதிர்பார்ப்புகள் எனக்குள் இருந்தது. ஆனால் அவளிடம் கேட்கவே அசிங்கமாக இருந்தது.
“ப்பா.. பபா.. பா.. மா.. ம்மா மா..மா!” அப்பா அம்மா என மழலையில் மிழற்றியபடியே சமுத்ராவின் மடியில் அமர்ந்திருந்தாள் அவந்திகா. என் குழந்தைக்காக அவள் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை. அசிங்கப்படுத்தினாலும் பரவாயில்லை அவளிடமே கேட்டுவிடலாம். என முடிவெடுத்து அவள் முகம் பார்த்தேன். சாலையில் கவனத்தை செலுத்தியபடி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“எனக்காக யோசிக்க வேண்டாம்.! குழந்தைக்காக யோசிக்கக் கூடாதா சமுத்ரா?!”
“உனக்காக நான் ஏன் யோசிக்கணும்? நீ சம்யூவிற்காக யோசிச்சிருக்கலாமே? அதோட நான் இப்போ எடுத்திருக்கிற முடிவே குழந்தைக்காக தான்.!”
“குழந்தைக்கு அப்பாவும் வேணும் சமுத்ரா!”
“உன்னை மாதிரி ஒரு அப்பா குழந்தைக்கு தேவையே இல்லை.!”
“சமுத்ரா ப்ளீஸ்.. எனக்குன்னு வாழ்க்கையில் இருக்கிற ஒரே பிடிப்பு அவந்தி மட்டும் தான். அவளும் இல்லாமல், நான் என்ன பண்ணுவேன்? என்னதான் குழந்தையை நீ என்கிட்டே இருந்து பிரிச்சாலும், நான் அவளோட அப்பாங்கிறதை யாராலும் மாத்த முடியாது. அவள் அவந்திகா விக்ரம் தானே? அதை உன்னால் மாற்ற முடியுமா?”
“சம்யூ செத்துப் போனதும், நீ செத்துப் போய்ட்டியா என்ன? உயிரோட தானே இருக்கே? அதே மாதிரி, குழந்தை இல்லாததும் கொஞ்ச நாளில் பழகிடும். என்கிட்டே இதற்கு மேல் எதுவுமே கேட்காதே விக்ரம்! நான் குழந்தையைக் கூட்டிட்டு போறது போறது தான். இதை யார் நினைச்சாலும் மாத்த முடியது.!” மனசாட்சியே இல்லாமல் அவள் கேட்ட கேள்வியில் அமைதியாகிப் போனேன் நான்.
இப்படித்தானே நானும், மனசாட்சியே இல்லாமல் சம்யூவை கேட்டிருக்கிறேன். அவள் எத்தனை வேதனைப்பட்டிருப்பாள்? அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும்? என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் உணர்ந்து என்ன பயன்? அவளிடம் மன்னிப்பு கேட்டு நிம்மதியடையும் கொடுப்பினை கூட எனக்கு இல்லையே? என் கையில் பொக்கிஷமாய் கிடைத்தவளை ஒட்டுமொத்தமாய் தூக்கிக் கொடுத்துவிட்டேன்.
நான் என்னதான் அழுது கரைந்தாலும், அவள் திரும்பி வரப் போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.
அமைதியாய் வாகனத்தைச் செலுத்தி, வீட்டில் கொண்டு நிறுத்தினேன். மகிழுந்திலிருந்து இறங்கி, என்னைத் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள் சமுத்ரா.
இப்போதெல்லாம் இவளின் உதாசீனங்கள் எனக்குப் பழகியிருந்தது. நான் சம்யூவிற்குக் கொடுத்தது, சமுத்ராவின் வழியே திருப்பி கிடைக்கிறது என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
உடனே வீட்டிற்குள் போக மனமின்றி, மகிழுந்தில் அமர்ந்தபடியே, கொஞ்ச நேரம், அலைபேசியோடு நேரத்தை செலவழித்துவிட்டு, அதன் பின்னே வீட்டிற்குள் நுழைந்தேன்.
சமுத்ரா முகம் கழுவி இலகு உடைக்கு மாறியிருந்தாள். குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
குழந்தை தன் குட்டி வாய் திறந்து உணவை வாங்கிக் கொண்டிருந்தாள். “காக்கா வந்துச்சாம்.. நரி வந்துச்சாம்.. பூனை வந்ச்சாம்..”என ஏதேதோ கதை சொல்லி ஊட்டிக்கொண்டிருந்தாள்.
குழந்தை உணவை உண்டுக் கொண்டிருக்கும் போதே, குழந்தையின் கண்கள் தூக்கத்தில் சொக்கியது.
“சமுத்ரா! குழந்தைக்கு தூக்கம் வந்துடுச்சு!” என நான் சொல்ல, என்னை முறைத்தபடியே குழந்தைக்கு கடைசி வாயை ஊட்டிவிட்டு, வாயைத் துடைத்து, தோளில் போட்டு தட்டி உறங்க வைத்து, தொட்டிலில் கிடத்தினாள்.
அதே நேரம், நான் அலைபேசியை எடுத்துக்கொண்டு, சித்தார்த்திடம் பேசுவதற்காய், பால்கனியை நோக்கி நகர,
“விக்ரம்! ஒரு நிமிஷம்! எதாவது முக்கியமான வேலை இருக்கா?” என்ற சமுத்ராவின் குரல் என்னைத் தேக்கி நிறுத்தியது.
“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தான் போகணும். பட் அவசரமில்லை!”
“முக்கியமான வேலை இருந்தால் பாரு! உன்கிட்டே கொஞ்சம் பேசணும்!”
“நான் சித்தார்த்கிட்டே இன்ஃபார்ம் பண்ணிட்டு மட்டும் வந்துடுறேன்!” என அவளிடம், அனுமதி வாங்கி, சித்தார்த்திடம் தகவல் தெரிவித்துட்டு, சில நிமிடங்கள் நின்றேன்.
மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.
‘என்னை எதற்காக அழைக்கிறாள்? என்ன பேசப் போகிறாள்? ஒருவேளை சென்னையிலேயே இருந்து விடுவாளா? இல்லை என்னை டெல்லிக்கு அழைப்பாளா? எப்படியும் குழந்தைக்காக யோசிப்பாள் தானே?’
என முகத்தில் புன்னகையுடன் நான் கற்பனையில் கோட்டைக் கட்டிக் கொண்டிருக்க, அவள் நான் கற்பனையிலும் நினைத்திராத இன்னொன்றைக் கேட்பாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. என் மனதிற்குள் நிறைய கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும், என்ன கேட்கப் போகிறாளோ? என்ற பயமும் எனக்குள் இருந்தது.
மூச்சை இழுத்து ஆசுவாசப்படுத்திவிட்டு, அவள் முன்னே சென்று நின்றேன்.
“உட்காரு விக்ரம்! பீ ரிலாக்ஸ்!”
என அவள் சொன்னதும் தான் அவ்வளவு அப்பட்டமாக என் முகத்தில் பயம் தெரிவதையே உணர்ந்தேன். எதாவது நல்லது நிகழ்ந்துவிடாதா? என் மகள் என்னுடனே இருந்துவிட மாட்டாளா..? என்ற எதிர்பார்ப்பு தான் என் பதற்றத்திற்கு காரணம் என்பது புரிந்தது. நீண்ட பெருமூச்சுடன், மீண்டும் என்னை ஆசுவாசப்படுத்த முயன்றேன்.
“சொல்லு சமுத்ரா!” என் குரல் வெளிவர சிரமப்பட்டது. படிக்காமல் தேர்வுக்கு வந்ததைப் போல் பயமாக இருந்தது.
“நீ நிஜமாவே சம்யூவை விரும்பினியா? அதாவது லவ் பண்ணுனியா?” என்ற கேள்வியில் திகைத்து விழித்து அவளைப் பார்த்தேன்.
“நிஜமாவேன்னா என்ன அர்த்தம் சமுத்ரா?”
“கேள்வி கேட்டால் பதில் சொல்லணும் விக்ரம்! திரும்பவும் கேள்வி கேட்கக் கூடாது!”
“என் லவ் உண்மையானதா? இல்லையான்னு சம்யூவுக்கு தெரியும்!”
“அவள் இல்லாததால், அவள் பெயரைச் சொல்லி தப்பிச்சுக்கணும்ன்னு நினைக்கிறியா?”
“அவள் இருந்திருந்தாலும் என்கிட்டே இருந்து இதே பதில் தான் வந்திருக்கும்!”
“அப்போ நீ உண்மையை மட்டும் தான் சொல்றே.. அப்படித்தானே? நான் என்ன கேள்வி கேட்டாலும், நீ உண்மையை மட்டும் தான் சொல்லுவ.. உன்னை நான் நம்பலாம் தானே?” எனக் கேட்டாள். அவள் கேட்டதன் அர்த்தம் புரியாமல், வலிய சென்று அவள் விரித்த வலையில், என்னை அறியாமலே விழுந்தேன் நான்.
“யெஸ்.. கண்டிப்பா!” என நான் உறுதியளித்த மறு நிமிடம், அவள் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“நீ உண்மையை மட்டும் தான் சொல்லுவேன்னு நான் நம்பறேன் விக்ரம்! எனக்கு தெரிய வேண்டியதும், உண்மை மட்டும் தான். அன்றைக்கு சம்யூவிற்கு என்ன நடந்தது? சம்யூ ஏன் தனியாய் போனாள்? அதுவும் குழந்தையை விட்டுப் போகவேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அவளோட முடிவு, அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சுடுச்சா? குழந்தையை உன்கிட்டே விட்டுட்டு போகிற அளவிற்கு அவளுக்கு என்ன அவசரம்? அந்த இராத்திரியில் அவள் யாரைப் பார்க்கம் போனாள்? எனக்கு உண்மை தெரியணும் விக்ரம்..!” என அவள் கேட்ட நொடி, அதிர்ந்து எழுந்துவிட்டேன்.
கண்களுக்குள் அன்றைய நாளின் ஞாபகங்கள் அணிவகுத்து நின்றன. என் உடல் வெளிப்படையாய் நடுங்கியது. அன்றைய நாளை நினைக்கவே எனக்கு பயமாய் இருந்தது.
வைரமாய் என் வாழ்வில் வந்தவளை, வெறும் கண்ணாடிக்கல்லாய் நினைத்து அலட்சியப்படுத்தி அவளைத் தொலைத்த நாள்.
என் வாழ்வின் நிஜமான அஸ்தமன நாள் அன்று தான். அன்று அஸ்தமனமான சூரியன், இன்றுவரை என் வாழ்வில் திரும்பவும் உதிக்கவே இல்லை. சம்யூ போன நாளிலிருந்து இன்று, இந்த நொடி வரை என் உலகம் இருண்டு தான் கிடக்கிறது.
“இப்போ எதுக்கு அது?!”
தடுமாற்றத்துடன் நான் சமுத்ராவிடம் வினவ,
“குழந்தையை உன்கிட்டே விட்டுப் போற அளவிற்கு, சம்யூ பொறுப்பில்லாதவள் இல்லை. அது விபத்து இல்லைன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.!” என அவள், தீர்க்கமாய், தெளிவாய் சொன்னதும், பொத்தென்று இருக்கையில் அமர்ந்தேன்.
என் மீது சந்தேகப்பட்டு தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது.
இப்போது நான் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. பதில் சொல்லித்தான் தீர வேண்டும். பதில் சொல்லாது இவள் விடப் போவதும் இல்லை. ஆனால், அன்றைய நாளின் இரணங்களை மீண்டும் அனுபவிக்கப் போகிறேன் என நினைக்கையில் நெஞ்சு நடுங்கியது.
அன்று நிகழ்ந்தவைகளை மீண்டும், மீண்டும் எனக்கு நானே ஞாபகப்படுத்தி, எனக்கு நானே தண்டனைக் கொடுத்துக்கொள்கிறேன். நல்லதோ கெட்டதோ, நடந்து முடிந்து, கடந்து போனவைகளையே நினைத்து நினைத்து, தன்னைத் தானே வருத்திக்கொள்வது தான் காதல் வாங்கி வந்த வரமும் சாபமும். நாம் கடந்து வந்த இனிமையான நினைவுகள் வரமாகவும், மறக்க நினைக்கும் நினைவுகள், வாழ்நாள் சாபமாகவும் அமைந்து தொலைகின்றன. வேறு வழியில்லாமல், என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டு அவளிடம் சொல்லத் துவங்கினேன்.
*******
எனக்கும் சம்யுக்தாவிற்கும், இடையே இருந்த விலகலும், விரிசலும் அப்படியே தான் இருந்தது. குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, எங்கே வேண்டுமானாலும் போ! என நான் சொன்னதன் பிறகு, அவள் என்னிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தாள்.
வீடு நிரம்பவும் அமைதியாகவும் நிசப்தமாகவும் இருந்தது. எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சுத்தமாய் நின்றிருந்தது. அவள் எதற்காகவும் என்னை எதிர்பார்த்து நிற்கவுமில்லை.
அவள் அமைதியாகிப் போனது, எனக்கு ஒருவகையில் நிம்மதியாய் இருந்தது. அவள் என்ன நினைக்கிறாள், அவள் என்ன எதிர்பார்க்கிறாள்? என எதுவும் தெரியாமல், என் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி நான் ஒருபுறம், அவள் ஒருபுறம், என தனித்தனி தீவுகளாய் இருவரும் இருக்கையில், அவள் வழக்கமாக செல்லும் மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
எதற்காக வரச் சொன்னார்கள் என்பது, எனக்குத் தெரியாது. ஏதோ வேண்டா வெறுப்பாகத்தான் மருத்துவமனைக்குச் சென்றேன். எனக்கு இருக்கும் வேலைப்ளுவின் இடையே இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று தான் நினைத்தேன்.
நான் மருத்துவமனைக்குச் செல்லும் போது, அந்தப் பெண் மருத்துவரின் முன்னால் சோர்ந்து அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.
“வாங்க விக்ரம்! உட்காருங்க!” எனச் சொன்னதும் சம்யுக்தாவின் அருகில் அமர்ந்தேன். சம்யூவின் முகமோ, வாடிப் போயிருந்தது.
சில்லிட்டுப் போயிருந்த அவள்கரத்தால், என் கரம் பற்றினாள். எனக்கோ, சம்யூவின் செயல் நிரம்பவும் வித்தியாசமாய் இருந்தது.
“மிஸ்டர். விக்ரம்! சம்யுக்தாவிற்கு இப்போ எட்டு மாசம். நீங்க இவங்களை ஒழுங்கா பார்த்துக்கிறீங்களா? இல்லையா? வீட்டில் யாராவது பெரியவங்க இருக்காங்களா?” எனக் கேட்டார் அந்த மருத்துவர்.
‘எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. இவளை என்ன நான் பார்த்துக்கொள்ளை வேண்டும்? இவள் என்ன சின்னக் குழந்தையா? வீட்டில் பணிப்பெண்ணை அமர்த்தியிருக்கிறேன். எது வேண்டுமானாலும், செய்யச் சொல்லி சாப்பிட வேண்டியது தானே?’ என்ற எண்ணம் தான் எனக்குள் இருந்தது.
“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை மேம்?”
“சம்யுக்தா, ஹேப்பியா இல்லை. அவங்களுக்கு நிறைய ஸ்ட்ரெஸ் இருக்குன்னு நான் நினைக்கிறேன். ஹீமோகுளோபின் கம்மியா இருக்கு. பேபியும் வெய்ட் கம்மியா இருக்கு. இன்னும் ஃபைவ் வீக்ஸ் மட்டும் தான் இருக்கு. குழந்தை ஆரோக்கியமா இருக்கணும்ன்னா நீங்க இவங்களை நல்லா பார்த்துக்கணும். அவங்க பக்கத்தில் உட்கார்ந்து பேசுங்க! என்ன பிரச்சனைன்னு கேளுங்க! நல்லா ஹெல்த்தியா சாப்பிட சொல்லுங்க! வீட்டில் பெரியவங்க யாராவது இருந்தால், அவங்களுக்குப் பிடிச்சதை செஞ்சு கொடுக்க சொல்லுங்க! நெக்ஸ்ட் வீக் கூட்டிட்டு வாங்க!” எனச் சொல்ல, மருத்துவரிடம் தலையை ஆட்டிவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
“இதுக்குத்தான் என்னை இங்கே வர வச்சியா? நீ என்ன சின்னக் குழந்தையா? நான் உன்னை நல்லா பார்த்துக்கல, உன்னை கேர் பண்ணலைன்னு எல்லார்கிட்டேயும் ப்ரூவ் பண்ணணும் அதற்குத்தானே இந்த ட்ராமா? உன்னை நான் நடிக்க விடாமல் பண்ணிட்டேன்னு பழி வாங்கறியா? வேணும்ன்னே சாப்பிடாமல், உன் உடம்பைக் கெடுத்துக்காதே.. என் குழந்தை நல்லபடியா பிறக்கக் கூடாதுன்னு தானே இதெல்லாம் செய்ற?” என மனசாட்சியே இல்லாமல் கேட்டேன் நான். நான் கேட்ட கேள்வியில், அவள் முகம் இயல்பைத் தொலைத்து, இறுக்கமாய் மாறியது.
“ஏன்டா இப்படி மாறிட்டே? என்னைப் பற்றி உனக்கு கவலையே இல்லையா.? இது நம்ம குழந்தை விக்ரம்! ஆனால் நீ என்னடான்னா நான் யாரோ மாதிரி தான் நீ என்கிட்டே நடந்துக்கிற. என் மேலேயும், குழந்தை மேலேயும் உனக்கு அக்கறையே இல்லையா? வீட்டில் சம்யூன்னு ஒருத்தி இருக்காள்ன்னு உனக்கு நினைப்பு இருக்கா? இல்லையா? என்னால் முடியலை டா! ரொம்ப தனியா இருக்கற மாதிரி இருக்கு. நாம ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிட்டு எத்தனை நாள் ஆகுதுன்னு சொல்லு? சொந்த வீட்டிலேயே அநாதையாய் இருக்கிற மாதிரி இருக்கு டா. நீ என்னை நிஜமாகவே லவ் பண்ணுனியா? ஏன்டா இப்படி இருக்கே?”
என அவள் மனம் நொந்து கேட்ட போது கூட, அவளின் வேதனைகளை கஷ்டங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
“இப்போ நீ என்ன சொல்ற? எல்லாத்திற்கும் நான் தான் காரணம்ன்னு சொல்றியா? குழந்தை மேலே எனக்கு அக்கறை இல்லைன்னு சொல்ற.. அப்படித்தானே? முதலில் உனக்கு அக்கறை இருக்கா? குழந்தை வயிற்றில் வந்ததையே மறைச்சு நடிக்கப் போனவள் தானே நீ? நீ இதெல்லாம் பேசலாமா? வேணும்ன்னே சாப்பிடாமல் இருந்து, உடம்பைக் கெடுத்துக்கிட்டு, அதற்கு என்னைக் காரணமாக்கப் பார்க்கிறியா சம்யூ? உன்னை மட்டும் நான் பார்த்துட்டே இருந்தால், என் வேலையை யார் பார்க்கிறது? நான் என்ன உன்னை மாதிரி சும்மாவா இருக்கேன்?” என நான் சொன்னதில் ஒட்டுமொத்தமாய் உடைந்துப் போயிருந்தாள் சம்யுக்தா.
ஒரு பெண்ணின் மனம் என்னவெல்லாம் எதிர்பார்க்கும்? நான் என்ன செய்ய வேண்டும்? எதுவுமே எனக்குத் தெரியவில்லை. அவள் மனதைப் புரிந்துக்கொள்ளாமல், அவளை வேதனைப் படுத்தியிருக்கிறேன்.. என நினைக்கையில் எனக்கே என்னை நினைத்துக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
அதன் பிறகான நாட்களும், தாமரை இலையின் நீர் போல் ஒட்டியும், ஒட்டாமலும் தான் சென்றுக்கொண்டிருந்தன.
அவளுக்காக ஒரு டயட்டீஷியனை சந்தித்து, அவளின் உணவுப் பழக்கங்களை மாற்றினேன். பணிப்பெண்ணை அவளுக்குப் பிடித்தமாதிரி சமைத்துக் கொடுக்க சொன்னேன். ஆனால், அவள் மனம் விரும்புவது என்னுடனான பொழுதுகளைத்தான். என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
அவளுடைய உண்மையான தேவை என்ன என்பதைப் புரிந்துக்கொள்ளாமல், இத்தனை செய்தும், இவள் முகத்தில் மலர்ச்சி இல்லையே? என எனக்குக் கோபமாக வந்தது.
“என்னதான்டி உனக்கு வேணும்? இதுக்கு மேல் நானும் என்ன பண்ணணும்? டயட்டீஷியன் சொன்ன டயட் ஃபாலோ பண்ணுறியா இல்லையா? அந்த டாக்டர் முன்னாடி என்னைக் குற்றவாளியாய் நிறுத்தணும்.. அதானே உன் எண்ணம்?”
“எனக்கு நீ வேணும் விக்ரம்! என் பக்கத்தில் நீ வேணும். ரொம்ப தனியா இருக்கிற மாதிரி இருக்கு டா! குழந்தை அசையுதா? இல்லையா? நான் என்ன ஃபீல் பண்ணுறேன்? நான் என்ன செய்றேன்? எனக்கு என்ன வேணும்? எதுவுமே நீ கண்டுக்க மாட்டேங்குறே? வாழ்க்கையே வெறுத்துப் போச்சு டா! எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் கூட இருக்கக் கூடாதா? இப்போவெல்லாம் நீ பக்கத்திலேயே இருக்கணும்ன்னு என் மனசு ரொம்பவும் எதிர்பார்க்குது.!” என அவள் வெளிப்படையாய் சொல்லியும் கூட, நான் அவளைக் கண்டுக்கொள்ளவே இல்லை.
“இப்போ என்ன செய்யணும்ங்கிற?”
“டெலிவரி வரை மட்டும், என் கூட இருடா ப்ளீஸ்.. நம்ம குழந்தைக்காக!”
“அடுத்த படத்தோட இறுதி கட்ட வேலைகள் நடந்துட்டு இருக்கு சம்யூ! இப்போ என்னால் எங்கேயும் நகர முடியாது. உன்னை மட்டுமே பார்த்துட்டு இருந்தால், என் வேலையை யார் பார்க்கிறது?”
“ஐ ஹேட் யூ விக்ரம்! எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை. நான் உன்னையும் இந்த சினிமாவையும் அறவே வெறுக்கிறேன். நீ டைரக்டரா இல்லாமல் இருந்திருக்கலாம் விக்ரம்! எனக்கு இந்த செலிப்ரட்டி லைஃப் ஸ்டைல் பிடிக்கலை விக்ரம். நீ சாதாரண மனுஷனா இருந்திருக்கலாம். நானும் நடிகையாய் இல்லாமல் இருந்திருக்கலாம்.! ஒரு சராசரி மனிதனுக்கான சாதாரண ஆசைகளைக் கூட நிறைவேத்திக்க முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? இந்த வாழ்க்கையையே நான் வெறுக்கிறேன்.!” தன்னையும் மீறி கத்தியிருந்தாள் சம்யுக்தா.
அவளின் மனதில் தேங்கிக் கிடந்த அழுத்தங்கள் வார்த்தைகளாய் வெளி வந்திருந்தது. அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அசையாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன் நான்.
ஒவ்வொரு சாதாரண மனிதனும், இதே வசதியான வாழ்க்கைகாக ஏங்கி, வாழ்க்கை முழுதும் உழைத்துக் கொண்டே இருக்க, இவளோ, கிடைத்த வாழ்க்கையை வேண்டாம் என்கிறாளே.? என எனக்கு வியப்பாய் இருந்தது. அவளின் வாடிக் களைத்த முகமும், அவள் உதிர்த்துவிட்டுப் போன வார்த்தைகளும், என்னை ஏதோ செய்ய, முடிந்தவரை அவளுடன் நேரத்தை செலவழிக்க முயற்சி செய்தேன்.
ஆனால் எனக்கு இருந்த பணிச்சுமையில், வாரம் இரண்டு நாட்கள், அவளுடன் நேரம் செலவளிப்பதே, மிகச் சிரமமாக இருந்தது. நான் அவளுடன் நேரம் செலவழிக்க முயன்றதிலேயே அவளிடம் நிறைய தெளிவு வந்திருந்தது.
“தேங்ஸ் விக்ரம்!”
அவள் கைப்பிடித்து மெல்ல நடப்பதற்கே நன்றி சொன்னாள். மிகவும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவளை மிகவும் ஏங்க வைத்திருக்கிறேன். என்பதையும் நான் உணரவே இல்லை. பணம் வாழ்க்கை முழுக்க சம்பாதிக்கலாம். ஆனால், சில தருணங்கள், கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப வராது என்பதையும் நான் புரிந்துக்கொள்ளவே இல்லை.
இப்படியே குழந்தை பிறப்பிற்கான நாள் நெருங்க, நெருங்க, அவள் முகம் மீண்டும் தெளிவில்லாமல் மாற ஆரம்பித்தது. சரியாய் அதே நேரத்தில் பட வெளியீட்டு விழா நிகழ்வுகளில் இருந்ததால், சம்யூவைக் கண்டுக்கொள்ள மறந்திருந்தேன்.
அன்றைய தினம், எனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிறகாக நான் சென்றிருக்க, சம்யூவோ, என்னை அலைபேசியில் விடாது அழைத்துக்கொண்டே இருந்தாள். விழா மேடையில் என்னால் அழைப்பை ஏற்றுப் பேசவும் முடியவில்லை. அப்போதைக்கு நான் இருந்த மனநிலையில், படம் வெற்றி பெறுமா? என்றக் குழப்பத்தில், சம்யூவின் அழைப்பை சாதாரண அழைப்பாய் புறந்தள்ளிவிட்டேன்.
அவளின் பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்பதையும், நான் மறந்து போயிருந்தேன். விழா முடிந்து நான் வீட்டிற்கு வரும்போது காலம் நிரம்பவும் கடந்திருந்தது. இரத்தச் சகதியின் பிசுபிசுப்பில், தன்னந்தனியாய் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அந்த நாளின் பின் தான் என் வாழ்க்கைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் துவங்கியது.
“நமக்குள் ஏன் இத்தனை தொலைவு?
நீயும் நானும் ஒரே உலகத்தில் தானே வாழ்கிறோம்?
ஒரே நாட்களைத்தானே கழிக்கிறோம்?
எனக்கு புரிகிறது..
சில தூரங்கள், தொலைவுகளால் வருவது அல்ல..
எனக்கு வலிக்கிறது..
உனக்கு வலித்தால் என்னிடம் சொல்..
உனக்கும் சேர்த்து நானே என்னை வருத்திக்கொள்கிறேன்..!”
(படித்ததில் பிடித்தது)

