Loading

சாதுர்யா பற்றிய கேள்விகள் ரத்னாவிற்குள் எழ,அதற்கான விடைகளை சொல்வதற்கு  சாதுர்யா தயக்கம் காட்டவில்லை. என்று இருந்தாலும் இவை பற்றிய முழு விஷயங்களும் ஸ்கந்தனுக்கும் தெரியத்தான் வேண்டும் என்பதில்  சாதுர்யாவுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. முதன்முறையாக எந்த மகனும் கேட்கக்கூடாத தனது தாயின் அந்தரங்க விஷயங்களை ஒரு மகனாக அவன் கேட்க வேண்டி இருந்தது. இதை இவர்கள் எல்லோருக்குமே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. சிறிது நேரம் வேறு வேறு விஷயங்கள் பேசி இருந்து கொண்டு விட்டு, ரத்னாவும் அவள் கணவரும் கிளம்பினார்கள்.  சாதுர்யாவும் ஸ்கந்தனும் அந்த வீட்டிலேயே  இரண்டுநாட்களுக்கு  தங்கி விட்டார்கள்.

 

ரத்னா கிளம்புவதற்கு முன்னதாக சாந்தாவுக்கு அலைபேசியில் அழைத்து சிறிதுநேரம் சாந்தாவின் குடும்பத்துடனும் ஸ்கந்தன் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு கனடாவில் தனக்கென தம்பி தங்கை இருப்பது பரம சந்தோஷம். அதை வெளிப்படையாகவே சொன்னான். இத்தனை நாட்களாக தனியாக இருப்பதாக அவன் மனம் நொந்து இருக்கிறான். ஆனால் இப்போது அவனுக்கு இன்று உறவுகள் இருக்கிறது என்பது அவன் மனதின் பலத்தை கூட்டியது.  அவனது எல்லா பேச்சுக்களிலும்  சாதுர்யா ஏதாவது ஒருவகையில் இடம்பெற்றிருந்தாள். 

 

இதன்மூலம் ரத்னாவுக்கும், சார்ந்தோருக்கும் ஸ்கந்தனின் வாழ்வில் சாதுர்யா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவள் என்பது புரிந்தது. தங்கள் அக்கா மகன் வளர்ப்பதற்கு ஆளின்றி தவிக்காமல் தெய்வம் இந்தப் பெண்ணை அனுப்பி இருக்கிறது என்று ரத்னாவுக்கும் சாந்தாவுக்கும் சந்தோஷமே!

 

உமாவின் இழப்பு சாந்தா ரத்னா இருவரையுமே புரட்டிப் போட்டது. சாந்தாவுக்கு அக்கா இறந்த இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்றாலும் திரும்பவும் ரத்னாவிடம் இதை பற்றியே பேசும் போது தன் அக்கா மகனைப் பற்றி யோசிக்காமல் விட்டு விட்டோம் என்ற குற்ற உணர்வு சாந்தாவுக்குள் வந்து சென்றது.

 

அருணாச்சலம் அவர்களது கட்சியில்  தேர்தலுக்காக எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடும் நபர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. சாதுர்ய பெண்ணின் மனதில் பல போராட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘நான் நினைப்பதை தனது மாமனாரிடம் எவ்வாறு சொல்வது என்ற தயக்கம் உங்களுக்குள்.’

 

ஈ.சி.ஆர் ரோட்டில் இருக்கும் தங்களது பங்களாவிற்கு தனிமை தேடி சென்றவள் பலவற்றை மனதிற்குள் யோசித்து வைத்தாள். தயக்கம் உதவாது என்ற முடிவுக்கு வந்து இருந்தாள் அவள். எப்படியும் அரசியல் குடும்பத்திற்குள் வந்த பிறகு, அரசியலில் கால் வைத்த பிறகு  தனக்கு தேவையானவற்றை போராடயாவது பெறுவதில் எந்த சமாதானமும் தேவையில்லை. அருணாச்சலதிடம் கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். அவளுக்கு தேவை அதிகாரம், பதவி. உயிரை பணையம் வைத்து அரசியலுக்குள் நுழைந்தாயிற்று. தனக்கென ஓர் பெரிய இடத்தை பெற எவ்வளவு விஷயங்கள் நடப்பதை ஜீரணிக்க வேண்டியதாயிற்று!போதாது குறைக்கு இதில் நீந்துவதற்கு வேறு மூன்றாண்டுகள் கடும் பயிற்சி. அருணாசலம் ஓரளவு ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே தன்னை நிலைநிறுத்திக் கொண்டால்தான் இங்கு ஜெயிக்க முடியும், நிலைக்க முடியும் என்பது அவளுக்கு புரிந்து விட்டது.

சாதுர்யாநினைப்பது தவறு என்று சொல்ல முடியாது ஏனென்றால் அருணாசலத்திற்கு ஏற்கனவே அவளின் தாத்தா வயது ஆகிவிட்டது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டே தனது மகிழுந்தில் வந்துகொண்டிருந்த-

சாதுர்யா  தனது வண்டியின் எதிரில் வண்டிச் சக்கரத்தில் பாய்வதுபோல் ஓடிவந்து கொண்டிருந்தாள். சுமார் இருபது வயது மதிக்கத்தக்க  அந்த சிறு பெண்ணின் வேகத்தை கண்டு பயந்து வண்டியை நிறுத்தி விட்டாள் 

சாதுர்யா. அவளின் வண்டியின் பின் அவளின் பாதுகாப்பிற்காக வந்துகொண்டிருந்த  பாதுகாவலர்களும் தனது வண்டியை நிறுத்தி விட்டார்கள். எதிரே வந்த பின் மூச்சு வாங்க, இவளிடம் ‘தன்னை சுமார் ஐந்து ஆண்கள் குடித்துவிட்டு,தன்னை துரத்தி வருவதாகவும், எப்படியாவது சென்னையில் கொண்டுபோய் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினாள். அந்த சிறு பெண்ணின் கை கால்கள் நடுங்கியது. அவள் முதுகில் புத்தக பை.

முகம் முழுவதும் பயம்.சாதுர்யாவின் பின்னால் வந்த பாதுகாவலர்கள் அந்த  பெண் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று பார்ப்பதற்காக சிறிது தூரம் சென்று பார்த்து வந்தனர். ஆம் அந்த பெண் சொன்னது உண்மைதான். இவளை கோட்டை விட்டுவிட்டு நடு ரோட்டில் வழி மறித்துக் கொண்டு நிற்கிறோம் என்ற யோசனையே இல்லாமல் இந்தப் பெண்ணை தேடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.சாதுர்யாவின் பாதுகாவலர்கள் அவர்கள் அனைவரையும் மயக்கம் வரும் அளவிற்கு அடித்து ரோட்டின் ஓரமாக போட்டு விட்டு வந்தார்கள். மணி தோராயமாக இரவு பத்து இருக்கும். அந்த பகுதியில் அதிகமாக ஜனநடமாட்டமோ வாகன நடமாட்டமோ இல்லை. சாதுர்யா அந்தப் பெண்ணை தனது வாகனத்திலேயே ஏற்றிகொண்டாள். அவளின் வீடு எங்கே என்று கேட்டு வீட்டில் கொண்டு போய் விட்டாள்.அது ராக்காயியின் வீடு. அந்தப் பெண் வேறு யாருமல்ல அவளது மகள் தான்!

 

சந்தர்ப்ப சூழ்நிலைகள் காலம் இவையெல்லாம் ஒரு சேர சேரும்போது எது நடக்க வேண்டுமோ அவை எல்லாம் சரியாகவே நடக்கிறது. இதுவும் அது போன்ற ஒரு நிகழ்வு தான்!

 

தன் மகளை அந்த நேரத்தில் சாதுர்யாவுடன் கண்ட ராக்காயிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. தன் மகள் இத்தனை நேரத்திற்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் மருத்துவக் கல்லூரியின் ஹவுஸ் சர்ஜென் மாணவியான அவளுக்கு நேரம் என்பது அளவுகோல் கொண்டு அளக்க கூடியதல்ல. ஆனால் எப்படி இருந்தாலும் இதுவரை கல்லூரி பேருந்தில் ஏறி வீட்டிற்க்கு வந்து விடுவாள். ஆனால் இன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை.

சாதுர்யாவை தனது மகள் எப்படி பார்த்தாள் என்றும் தெரியவில்லை.

 

சாதுர்யாவோ, “நாளைக்கு வீட்டுக்கு வாங்க ராக்காயி வீட்டுல வச்சு பேசிக்கலாம். இப்ப ரொம்பவே நேரம் ஆகிடுச்சு’’என்று விட்டு கிளம்பி விட்டாள்.ராகாயியும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, மறுநாள்  வருவதாகச் சொல்லி விடை தந்தாள்.தன் மகளை விசாரித்ததில், வேலையை முடித்து விட்டு வெளியே வருவதற்குள் பேருந்து கிளம்பி விட்டது. பேருந்து நிலையத்திலும் வேறு பேருந்து வராத நிலையில், குடித்துவிட்டு முழு போதையில் வந்திருந்த  கயவர்களிடம் சிக்கிக் கொண்டதாகவும், எதிரே வந்த வாகனத்தில் சாதுர்யாவை கண்டு உதவி பெற்றதாகவும் கூறினாள். ஏற்கனவே அவள் சாதுர்யாவின் ரசிகை தான். இப்பொழுது, தன்னைக் காப்பாற்றிய நன்றிப் பெருக்கில் கோபுரத்தில் ஏற்றி பூசை செய்யும் அளவிற்கு பக்தி விட்டது.  ராக்காயியின் மனமோ பெண்களுக்கு எதிரான ஆண்களின் இந்த மனோபாவமும் அவர்கள் செய்யும் கொடுமையும் எப்போதுதான் முடிவுக்கு வருமோ?

பெண்கள் என்ன வெறும் சதையை கொண்டு சுகம்தரும் போதைப்பொருளா என்று நொந்து கொண்டாள்.அவள் கண்கள் தனது பழைய வாழ்க்கையை எண்ணி கண்ணீரைக் கொட்டியது. அவள் மகளுக்கு அவளது பழைய வாழ்க்கை தெரியாதுதான்!ஆனால் தனது அம்மா படக்கூடாத ஏதேதோ கஷ்டங்களைப் பட்டு இருக்கிறாள் என்பது வரை ஒரு ஊகம் அவள் மனதில் உண்டு.

 

அடுத்தநாள் ராக்காயி அருணாச்சலம் வீட்டிற்குச் சென்றாள்.சிறுது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அலுவலக அறைக்குள் சென்றுவிட்டார் சிவம்.

சாதுர்யா  தனது மாமனாருடன் தீவிர விவாதத்தில் ஈடுபட்டு இருந்தாள்.அவர் முன்வைத்த வாதங்கள் அருணாச்சலதால் மறுக்க முடியவில்லை.

 

 சிவம் ஆணித்தரமாகச் சொன்னார்,சாதுர்யாவுக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கு அவளை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவிடும் என்று. இத்தனை வருடங்களாக போராடியும் அருணாசலத்திற்கு கிடைக்காத வாய்ப்பு. இன்று அவரது மருமகளுக்கு கிடைக்கும் என்றால் அதையும் யோசிக்க வேண்டிய நிலைமை.கட்சியையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் அருணாச்சலம்.  இதையெல்லாம் சிவம் எடுத்துச் சொல்லும் போது தனக்கு பிறகான அரசியல் வாரிசு இவள்தான் என்று தீர்மானம் செய்து விட்டார் அருணாச்சலம்.

என்னதான் தனக்கு முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட வயதும்,  முதுமையும்,உடல் நிலையும், அவருக்கு பெரிய பின்னடைவுதான். இதை எல்லாம் ஓட்டு போடும் மக்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள் இல்லையா? கண்டிப்பாக குரு தனது அரசியல் வாரிசாக முடியாது. இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சியை வேறு யாரோ நடத்தட்டும் என்று எடுத்துக் கொடுக்கும் நிலைமையில் அருணாச்சலம் இல்லை. அவருக்கு தனது குடும்ப உறுப்பினர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதே தீராத ஆசை.

 

ஏறத்தாழ மூன்று மணி நேர உரையாடலுக்கு பிறகு அருணாச்சலம் சாதுர்யாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார். வேறு வழியும் இல்லை. பல வருடங்களாக பழிவாங்குவதற்கு காத்திருந்த பெண்ணின் கண்களில் ஜொலித்தது.  இதை அருணாசலம் கவனிக்கவில்லை அவள் முகத்தில் கூடியிருந்த ஒளியை மட்டும் அவர் கண்கள் கண்டது. ஆனால், சிவனின் கண்களை அவளது தீக்கங்குகள் போல் ஜொலிக்கும் கண்களையும் கண்டு கொண்டது.

 

 சிறிது நேரம் கழித்து வெளியே வந்த சாதுர்யா கூடத்தில் அமர்ந்திருந்த ராக்காயியை கண்டாள். அவள் எதிர் பார்த்து இருந்த நபர் ராக்காயி தான்.

உமாவின் எழுதப்பட்ட குறிப்புகளிலிருந்து வீரனுக்கும் ராக்காயிக்கும் இடையில் இருக்கும் வெளியில் சொல்லப்படாத உணர்வுகள் பற்றி குறிப்பு கிடைத்திருந்தது சாதுர்யாவுக்கு. இன்று அருணாச்சலம் குடும்பத்திற்கு உயிரை கொடுக்கும் துணியும் விசுவாசிகள் என்றால் வீரனும் ராக்காயியும் தான்.

 

முதல்நாள் நிகழ்வுக்குப் பிறகு இரவெல்லாம் யோசித்திருந்த சாதுர்யா, வீரனையும் தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள். வீரனும் அங்கு வர அருணாச்சலம் சிவம் இருவரின் முன்நிலையில் வீரனும் ராகாயியும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தாள்  சாதுர்யா.

 

திருமண வயதில் பெண்ணை வைத்துக்கொண்டுதான் திருமணம் செய்து கொள்வது எந்த விதத்திலும் சரியாகாது என்ற கூற்றை முன்வைத்தார் ராக்காயி. ‘வீரனும் ராக்காயி சொல்வது சரிதான்’ என்றான். ஆனால் வயது பெண்ணிற்கு தேவையான பாதுகாப்பை அப்பா வயதில் இருக்கும் ஒருவரால் கொடுக்க முடியும்.அதுவும் வீரனால் மட்டுமே அதை செய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைத்தாள் சாதுர்யா.

 

இறந்து போனதாக நினைத்த அவர்களது காதல் உயிர்தெழ தேவையான நீராய் அமைந்தது சாதுர்யாவின் வார்த்தைகள்.

 

நிஜத்தில் தனது குறிப்புகளில் உமா ராக்காயியின் மகள் குருவின் மகள் ஆக கூட இருக்கலாம் என்றும் எழுதி இருந்தாள். அதைப் படித்து இருந்த சாதுர்யா மனம் நிலையில்லாமல் தவித்தது. ஒருவேளை ராக்காயியின் மகள் குருவின் மகளாய் இருந்தால்? என்றுமே அருணாச்சலம் அந்த குழந்தையை தங்களது குடும்ப வாரிசு ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனும் போது அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தனது கடமை என்று நம்பினாள். நேற்று அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் சாதுர்யாவின் மனதை ஆட்டம் காண செய்திருந்தது. இத்தனை வருடங்கள் தகப்பன் இல்லாமல் வளர்ந்த அந்த பெண்ணுக்கு  வீரன் போன்ற பொறுப்புள்ள ஒரு ஆண்மகன் அப்பா ஆகும்போது அந்தப்பெண்ணின் கூடுதல் பொறுப்புடன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை சாதுர்யா மனதினுள் எழ அதற்காகத்தான் இவ்வளவு பேசிக் கொண்டிருக்கிறாள்.

 

ஒருவாறாக  இருவரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள, அந்த வாரக் கடைசியில் சாதுர்யா, அருணாச்சலம் மற்றும் சிவம் வாழ்த்த  ராகாயியின் மகளுக்கு தகப்பன் ஆனான் வீரன் ராகாயி கழுத்தில் மங்கல நாண் அறிவித்ததன் மூலம்.

 

உண்மையில், ராக்காயியின் மகளுக்கு தன் அம்மா எத்தனையோ கஷ்டங்கள் பட்டுவிட்டாள். தானும்  திருமணம் செய்து கொண்டபிறகு அம்மாவின் மனதிற்கு இதமாக துணையாக யார் இருப்பார் என்ற எண்ணம் உறுத்திக்கொண்டே இருந்தது. என் அம்மாவையும் வைத்துக் கொள்வேன் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளும் மனிதரைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால்,சாதுர்யா வேறு மாதிரி முடிவை கொண்டு சென்று விட்டாள்.

 

அவர்களது திருமண பரிசாக, ராகாயிக்கு உதகை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் அருணாச்சலம். உதகை தொகுதி பெண்கள் மட்டும் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் தங்களது வேட்பு மனுவையும் தாக்கல் செய்ய தொடங்கினார்கள். சாதுர்யா தனது சொந்த தொகுதியான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வேட்பாளராக நின்றாள்.

சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகள் சேகரிக்கத் தொடங்கினாள்.அவளது பிரச்சாரம் இளைஞர்களை யோசிக்க வைத்தது. பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, இளைஞர்கள் இவளது பிரச்சாரத்தில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து வீட்டில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு தீவிரமானதாக இருந்தது அவளது வார்த்தைகள். அவள் தனது பிரச்சாரத்தில் எந்த கட்சியையும் குறை சொல்லவில்லை. யாரையும் தாக்கிப் பேசவில்லை. “தங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டியது இருக்கிறது இப்போது என்ன எல்லாம்  மக்களுக்கு கிடைக்கவில்லை. எந்தெந்த இடத்தில் தாங்கள் அதிகமாக தங்கள் பார்வையை செலுத்த வேண்டி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலம் சாதிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

தற்போதைய உள்ள நிதி நிலைமை என்ன… விவசாயிகளின் நிலை என்ன? கிராமப்புறங்களுக்கு வளர்ச்சி என்பது எவ்வளவு தூரம் சென்று கொண்டிருக்கிறது… நகர்ப்புறங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன…” என்று புள்ளி விவரங்களுடன் பிரச்சாரம் செய்ய தொடங்கியிருந்தாள் சாதுர்யா.

ஸ்ரீரங்கத்தில் தனது தாத்தா பாட்டி வீட்டின் அருகிலேயே பிரச்சார கூட்டம் நடத்தினாள். ரங்கனும் கூட தனது மனைவி பிரச்சாரம் செய்வதை கேட்பதற்காக ஸ்பெயினிலிருந்து வந்திருந்தான். அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. ஆனால் இவ்வளவு தனது குரல் வீட்டின் கொல்லைப்புறம் வரையும் கேட்க வேண்டும் என்றே அவர்கள் வீட்டு அருகில் பிரச்சார மேடை அமைத்து இருந்தாள்.

அங்கு அனைவருக்கும் தெரிந்த பெண் ஆகையால் திருச்சியை சுற்றி இருந்த கிராமங்களிலிருந்து கூட கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் தங்களது வாக்கு அவளுக்கு தான் என்று அவளை பார்க்கும் முன்னரே முடிவு செய்துவிட்டார்கள். ரேணுகாவும் அவர் குடும்பத்தினரும் கூட தாமோதரனின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்