Loading

சலனம்-17

என் இதயத்தின் ஒரு பகுதியை மட்டுமே நான் இழந்திருக்கிறேன் என நினைத்தேன், ஆனால் என் முழு உலகமுமே அவளில்லாமல் சூனியமாகிவிட்டது.

 

எனக்கென்று இருக்கும் ஒரே உறவு அவந்தி மட்டுமே.. அவளையும் பிரிந்துவிட்டு என்ன செய்யப் போகிறேன்.?’ கேள்வி எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

 

சமுத்ரா கொட்டிவிட்டுப் போன வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் செவிக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. அதிலும்,

 

‘அவள் செத்ததற்கு பதில் நீ செத்திருக்கலாம்!’

 

என்ற வார்த்தைகள் எனக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

 

‘ஒருவேளை சம்யூவிற்கு பதில் நான் இறந்திருந்தால், அவந்தி நிம்மதியாக இருந்திருப்பாளே?’ என்ற எண்ணம் எனக்குள்ளும் தோன்றத்தான் செய்தது.

 

சம்யூவின் ஒவ்வொரு வார்த்தைக்கும், அர்த்தம் கண்டுபிடித்து வாக்குவாதம் செய்யும் நான், அவளைப் போலவே என் முன் வந்து நின்று கேள்வி கேட்கும், சமுத்ராவிற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறேன்.

 

என் வாழ்க்கை ஒரே உருவமுள்ள இரு பெண்களிடம் சிக்கித் தவிக்கிறதோ? இதன் முடிவு என்ன? என் வாழ்க்கை எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது? என்னவென்று புரியாமல் என் மனம் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தது.

 

குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு, அவளைத் தூங்க வைப்பதற்காய் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருக்கும், சமுத்ராவைப் பார்க்க, பார்க்க, குற்றவுணர்வு என்னைக் கொன்று தின்றது.

 

 

பால்கனியிலிருந்து அறையை நோக்கிப் போனேன். சிணுங்கும் குழந்தையைத் தட்டிக் கொடுத்தபடி நடந்துக் கொண்டிருந்தாள் சமுத்ரா.

 

“நான் எதாச்சும் ஹெல்ப் செய்யவா?” மெதுவாகத் தான் கேட்டேன். அவள் முறைப்பை மட்டுமே பதிலாய் தந்தாள். ஆனால், அவள் கண்களில் தெரிந்த வெறுப்பு, என்னை எரித்து சாம்பலாக்கியது.

 

“அவந்தியை மட்டும் தான் என்னால் பார்த்துக்க முடியும்! மத்ததுக்கெல்லாம் மெய்ட் ஏற்பாடு பண்ணு! சும்மா சும்மா என் முன்னாடி வந்துட்டே இருக்காதே எரிச்சலா இருக்கு.!”

 

என அவள் சொன்ன பிறகு என்னால் அங்கே நிற்க முடியவில்லை. ஒருவரின் உச்சபட்ச வெறுப்புக்கு உள்ளாகிறேன் என்றால், நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்? சம்யூவின் மீதான பாசம் தானே, இவளை இப்படிப் பேச வைக்கிறது.. ஆனால் நான், அவள் மீது நான் வைத்திருந்த நேசத்தையும் சரி, நான் அவள் மீது வைத்திருந்த காதலையும் சரி, நான் உணரவே இல்லை.

 

 

சம்யூவின் மீதான பாசம் தானே சமுத்ராவை இப்படிப் பேச வைக்கிறது? சம்யூ உயிரோடு இருந்தபோது, அவள் என் மீது வைத்திருந்த ஆழமான காதலையும், நேசத்தையும் நான் எந்த அளவுக்கு உணர்ந்தேன்? உணரவே இல்லை என்பது தான் என்னால் ஏற்க முடியா நிஜம்.

 

 

எதை எதையோ யோசித்து இறுதியில், அவளின் கடைசி நொடிகள் மின்னல் கீற்றாய் என் கண் முன் வந்து போனது. அவளின் உதிரம் தோய்ந்த முகம். பல நாட்களாய் என்னை உறங்கவிடாமல், நீளமான இரவுகளைப் பரிசளித்த சம்யூவின் முகம் மீண்டும் நினைவிற்கு வந்தது.

 

நான் மறக்க நினைத்து மறக்க முடியாமல் தவிக்கும் நொடிகள் அவை.

 

நம் உயிருக்கும் மேலாய் நேசிப்பவர்களின் உயிர் பிரிவதைக் கையாலாகாதத் தனத்துடன் வேடிக்கைப் பார்க்கும் கொடுமை எதிரிக்கும் வாய்க்கக் கூடாது.

 

சம்யூவின் கண்கள், குழந்தையைத் தேடியபடியே, அசைவற்றுப் போனது, அழியாத சித்திரமாய், நேற்று கண்டதைப் போல் எனக்குள் இருக்கிறது. அவளின் ஆழ்ந்த கபிலநிறக் கண்களில் விழுந்த கடைசி பிம்பம் என்னுடையது தான்.

 

சம்யூ போன பிறகுதான் தனிமையை நான் முதன்முதலாய் உணரத் துவங்கினேன். ஆளில்லாத பாலைவனத்தில், வெற்றுக்காலுடன், உச்சி வெயிலில் நடப்பது போலிருந்தது அவளில்லாத பொழுதுகள். என், கோபம், காமம், அனைத்தையும் அவளிடம் மட்டுமே காட்டியிருக்கிறேன். அளவிற்கு அதிகமாகவே.. கோபத்தையும், காமத்தையும் வெளிப்படையாய் அவளிடம் காட்டிய நான், காதலைக் காட்டத்தான் மறந்து போனேன். இப்போது அவள் இல்லை.. நான் அவள் மீது கொண்ட காதல் மட்டும், நடுத்தெருவில் தேற்ற ஆளில்லாமல் அநாதையாய் நிற்கிறது.

 

கண்களில் நீர் வற்றிப் போகுமளவிற்கு அழவேண்டும், அவளைக் கட்டிப்பிடித்துக் கதற வேண்டும். அவள் கால் பிடித்து மன்னிப்பை யாசிக்க வேண்டும் என என்னென்னவோ தோன்றுகிறது. ஆனால் காற்றாகி கரைந்து போனவளை நான் எங்கே சென்று தேடுவது.? என்னென்னவோ யோசனைகள் மூளையை ஆக்கிரமித்திருக்க, எனது இருசக்கர வாகனத்தின் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தேன்.

 

வாகன தரிப்பிடத்தின் இருளுக்குள் தனித்து நின்ற அந்தச் சிவப்பு நிற இருசக்கர வாகனம், தன்னை நோக்கி அழைப்பது போலத் தோன்றியது எனக்கு. அதன் உறைந்திருந்த மேற்பரப்பில் என் விரல்கள் பட்டபோது, சம்யூவின் மூச்சுக்காற்று என்மீது பட்டது போன்ற பிரமை.

 

இருசக்கர வாகனத்தைத் தொட்டதும், மனம் முழுதும் அவள் ஞாபகங்கள். அவளுக்காக ஆசைப்பட்டு வாங்கியது. சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்தது சம்யூ தான்.

 

 

முழுதாக எழுபது இலட்சங்களை தின்றுவிட்டு நிற்கும், இந்த இருசக்கர வாகனம் தான் பெரும்பாலும் எங்கள் இரவு நேரத் துணையாக இருந்திருக்கிறது. இரவின் தனிமையில், ஆளில்லா சாலைகளில், நானும் அவளும் மட்டுமாய் பயணித்த ஞாபகங்கள் கண்களில் வந்து போனது. என்னை இறுக்கி அணைத்தபடி, என் காதோரம் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வருவாள்.

 

 

இப்போது நினைத்தாலும், மனதிற்குள் பட்டாம் பூச்சிகள் பறப்பதைப் போல் இருந்தது.
சாவி சுழன்றது. என்ஜின் உறுமியது. அந்தக் குளுமையான இரவு காற்று, என் முகத்தில் ஒரு கத்தியைப் போல இறங்கியது. ஆனால், அந்த வலியை நான் ரசித்தேன்.

 

​நாம் காதலிக்கும்போது, நம்முடன் வாழும் உயிரைவிட, அவர்கள் சார்ந்திருக்கும் நினைவுகள் தான் நம்மை அதிகம் துரத்துகின்றன என்பதைத் தாமதமாக உணர்ந்துக் கொண்டேன் நான்.

 

குளுமையான எதிர்க்காற்று, என் முகத்தில் மோதியது. வெகு நாளைக்குப் பிறகான இரவு நேரப் பயணம் எனக்குள் உற்சாகத்தைத் தோற்றுவித்தது. சம்யூ என் தோளைப் பிடித்தபடி என் பின்னால் அமர்ந்திருப்பதைப் போன்ற பிரம்மை கூட, எனக்குள் எழுந்தது. பின்னால் அமர்ந்தபடியே, தலை சரித்து என் கன்னத்தில் முத்தமிடுவாள்.

 

நான் அந்த நினைவுகளின் வேகத்தோடு மோதிக்கொண்டிருந்தேன். ஆளில்லா சாலைகள். இருபுறமும் ஒளிரும் தெருவிளக்குகள், அவளது நினைவுகளின் நிழல்களாக மாறின.

 

“ஷேவ் பண்ணேன்டா! பாதி மூஞ்சியை மறைக்கிற மாதிரி தாடியை வச்சிக்கிட்டு, கிஸ் கூடப் பண்ண முடியலை!” எனச் சலித்துக் கொள்வாள்.

 

“டைரக்டர் இப்படித்தான் தாடி வச்சிக்கணுமாம்!” அவளை வெறுப்பேற்றுவதற்காகவே சொல்வேன்.

 

“உன் தாத்தா போட்ட சட்டமா? எந்த சட்டப் பிரிவில் வருது? இடியட் மாதிரி பேசாதே டா. நமக்குப் பிடிச்ச மாதிரி தான் நாம இருக்கணும்.”
எனச் சொல்வாள். நானும் அவளுமாய் பேசியபடியே, நடைபாதைக் கடையில் தேநீர் அருந்திவிட்டு, மீண்டும் பேசியபடியே திரும்பி வருவோம்.

 

இப்போது அதே பாதையில் அவளில்லாமல் தனியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமாகவே தனிமை வலிக்கிறது. வாய்விட்டுக் கூட கதற முடியாமல், தோள் சாய்ந்து அழ ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

 

போனவள் நான் சுமந்து நிற்கும் அவள் நினைவுகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்.

 

ஒரு தாயின் சுமை பத்து மாதங்கள் தான். ஆனால் நான் ஆயுள் முழுதும் சுமக்க வேண்டும். அவள் தந்துவிட்டுப் போன நினைவின் கனங்களை..

 

என் இருசக்கர வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம், இருளைக் கிழித்துக்கொண்டு முன்னேறியது. ஆனால், என் மனதின் இருளை அந்த வெளிச்சத்தால் துடைக்க முடியவில்லை.

 

​கண்கள் பனித்தன. காற்றின் வேகத்தில் என் கண்ணீர் கன்னங்களை அறுத்துச் சென்றது. பின்னால் திரும்பிப் பார்த்தேன்… அங்கே யாரும் இல்லை, வெறும் காற்று மட்டுமே என்னைத் தழுவிச் சென்றது.இந்தத் தனிமைப் பயணம்… எப்போது முடியும்? என்ற கேள்வி என்னைக் கொல்லாமல் கொன்று கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது.

 

 

அவளின் நினைவுகள் வலியைத் தர, என் தனிமைப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு, திரும்பினேன். வீட்டிற்குச் செல்ல மனம் வரவில்லை. வீட்டிற்குச் சென்று, அந்தக் ஆழி நிற விழியழகியிடம் பேச்சு வாங்க விரும்பவில்லை. இப்படியே இரவு முழுதும், சுற்றிக் கொண்டே இருக்க முடியுமா தெரியவில்லை. வேறு வழியில்லாமல், எதேச்சையாய் என் கண்களில் பட்ட மதுபான விடுதிக்குள் நுழைந்தேன்.

 

காலை வரை இங்கேயே இருந்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம் என நினைத்தேன். ஆனால் அங்கிருந்த சூழலும், சகஜமாய் புழங்கிக் கொண்டிருந்த மதுபானமும், என் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத் துவங்கியிருந்தது.

 

கோப்பைகளில் நிரம்பி வழியும் மது, என் மனதை சுட்டுக் கொண்டிருக்கும் மாதுவின் நினைவுகளை மறக்கடிக்கும் மருந்தாகுமா.? என யோசித்து, எனக்குப் பிடித்த மதுவகையை ஆர்டர் செய்து அருந்தத் துவங்கியிருந்தேன். அடுத்த அரைமணி நேரம், என்ன நடந்ததென தெரியாது.. எவ்வளவு குடித்தேன் எனத் தெரியாது. ஆனால் ஏனோ மனம் லேசானதைப் போல் இருந்தது. தட்டுத் தடுமாறி வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தேன்.
என் வாகன ஒலிப்பானின் சத்தம் கேட்டு, கேட்டைத் திறந்துவிட்ட, காவலாளி கூட, நான், வளைத்து, வளைத்து ஓட்டிக்கொண்டு வந்து வாகன நிறுத்தத்தில் நிறுத்தியதை ஒரு மாதிரியாய் பார்த்தான்.

 

“சாப்பிட்டியா?”

 

எனக் குழறும் வாயோடு காவலாளியிடம் கேட்டுவிட்டு, தடுமாறியபடியே மின்தூக்கியினுள் நுழைந்து, மேல் தளத்திலிருந்த வீட்டை அடைந்திருந்தேன். அங்கே நான் அழைப்பு மணியை அழுத்துவதற்கு முன்பாகவே கதவைத் திறந்தபடி நின்றிருந்தாள் சமுத்ரா.

 

“குடிச்சுட்டு வந்து தொலைச்சிருக்கியா? நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?!” எனக் கோபமாய் கேட்டபடி அவள் நின்றிருக்க,

 

“வழி விடு சம்யூ! தூக்கம் வருது!” அவளை விலக்கித் தள்ள முயன்றேன். என் கரம் அவள் மீது படாமல் விலகிக் கொண்டவள்,

 

“இப்படி குடிச்சு வந்தேன்னா வீட்டுக்குள்ளே விட மாட்டேன். முதலில் இங்கிருந்து போ! வீட்டுக்குள்ளே வராதே!” சத்தமில்லாத அழுத்தமானக் குரலில் சொன்னாள்.

 

“இந்த இராத்திரியில் போன்னு சொன்னால், எங்கே போவேன் சம்யூ?” போதையின் உபயத்தால், சமுத்ரா எனக்கு சம்யூவாகத்தான் தெரிந்தாள்.

 

“எங்கேயாவது போய்த் தொலை! வீட்டில் ஒரு குழந்தை இருக்குன்னு நினைப்பு இருக்கா? நீ குடிச்சுட்டு வந்தால் எல்லாம் சரி ஆகிடுமா? இல்லை போனவள் தான் திரும்பி வந்துடுவாளா?” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, மீண்டும், மீண்டும் நான் கண்களைக் கசக்கிப் பார்த்த போதும் கூட, அவள் சம்யூவாகத்தான் என் கண்களுக்குத் தெரிந்தாள்.

 

“சம்யூ ப்ளீஸ்..!” அவளை இழுத்து இறுக்கி அணைக்க முயன்றேன். என்னை விலக்கித் தள்ளி, என் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள்,

“இடியட்!”

 

எனத் திட்டிவிட்டு கதவைப் பூட்டிக் கொண்டாள். என் சொந்த வீட்டிலேயே, என்னை வெளியே தள்ளி, அவள் கதவைப் பூட்டியிருக்க, கன்னத்தை அனிச்சையாய் தடவியபடியே, இருந்த எனக்கு சம்யூவும் இடியட் எனத் திட்டுவது அனிச்சை செயலாய் ஞாபகம் வந்து தொலைத்தது.

 

“கதவைத் திற சம்யூ!”

 

என வாசலிலேயே அமர்ந்திருந்தேன் நான். அப்படியே வாசலில் அமர்ந்தபடியே நான் உறங்கியிருக்க வேண்டும். காலையில் காதருகே கேட்ட பறவைகளின் சத்தத்தில் கண்களைத் திறந்து பார்க்க, வீட்டின் கதவு திறந்திருந்தது.

 

‘இங்கேயே தூங்கிட்டேனா?’ என்ற சிந்தனை மேலோங்க, இரவு நடந்தவை அத்தனையும், ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர, நெற்றியில் அறைந்தபடியே, அவசரமாய் உள்ளே சென்ற எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

 

“நான் கடந்தகாலத்தில் அப்படி ஒன்றும்
மகிழ்ச்சியாக வாழவில்லை..
ஆனாலும் கடந்த காலத்தை நினைத்து
ஏன் ஏங்குகிறேன் என்று
தெரியவில்லை..!”

(மனுஷ்ய புத்திரன்)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்