
சலனம்-16
என்னதான் அவந்திகாவை முன் நிறுத்தி, என் மனதை நான் சமாதானப்படுத்த முயன்றாலும் கூட, என்னால் முடியவில்லை. சம்யூவின் இடத்தில் இன்னொருத்தியை வைத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை.
அவள் சம்யூவைப் போலவே உருவ அமைப்பில் இருந்தாலுமே, எனக்குள் அவள் யாரோவாகத் தான் தெரிந்தாள். நிஜமாகவே இந்தக் கடவுள் கல்நெஞ்சக்காரர் தான். நான் விரும்பிய அதே முகத்தையே என்னை வெறுக்கவும் வைக்கிறார். இந்த சமுத்ராவையும் சம்யூவின் முகச் சாயலில் படைத்துவிட்டு, என்னை நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையில் அல்லாட விடுகிறார்.
“உன்னைப் போய் கூப்பிட்டேனே டா என்னைச் சொல்லணும்! என்னால் சம்யூவின் இடத்தில், வேறு யாரையும் கற்பனைக் கூட பண்ணி பார்க்க முடியாது சித்தார்த்! ஒருத்தி வாழ்க்கையில் நான் விளையாடினதே போதும்.!” என் எதிரே அமர்ந்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திடம் சொன்னேன்.
“மச்சி! இது உன் வாழ்க்கை! அதில் நீ எடுக்கிற முடிவு உன்னோடதாகத் தான் இருக்கணும். உன் வாழ்க்கையை வெளியில் இருந்து பார்த்து, நான் மட்டுமில்லை, என்னை மாதிரி எத்தனையோ பேர், உனக்கு ஆலோசனை சொல்லலாம். ஆனால் முடிவெடுக்க வேண்டியது நீ மட்டும் தான்.!” தெளிவாகவே சொன்னான் சித்தார்த்.
“புரியுதுடா! பட் இப்போ இருக்கிற சூழ்நிலையில் நான் என்ன பண்ணுறது? அவந்திக்காக யோசிக்கவா.? சம்யூவிற்காக யோசிக்கவா? எனக்கு பயமா இருக்கு டா! சம்யூவைத் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தற அந்த முகத்தைப் பார்க்க பார்க்க எனக்கு பயமா இருக்கு.!” எதற்கும் அசைந்துக் கொடுக்காத எனக்கே, இந்த வாழ்க்கை பயத்தைக் காட்டியது. அடுத்தது என்ன? என யோசிக்க முடியாமல், தலையை வலித்தது.
“விக்ரம்! என்னைப் பொருத்தவரை, நீ அவந்திக்காக தான் யோசிக்கணும். சம்யூ இப்போ இல்லை. ஆனால் அவந்திகா குழந்தை டா! இது அவந்திக்கு கிடைச்சிருக்கிற இன்னொரு வாய்ப்பு! எதுவா இருந்தாலுமே, யோசிச்சு முடிவெடு. எந்த முடிவாக இருந்தாலும், அவந்தியையும் மனசில் வச்சிக்கோ! நாளைக்கு ஷூட்டிங் லொக்கேஷன் பார்க்கப் போகணும் மறந்துடாதே! போன மாசமே ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டியது..!” ஒரு நல்ல நண்பனாய், அறிவுரையும் சொல்லிவிட்டு என் பணியையும், அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்திவிட்டே கிளம்பியிருந்தான் சித்தார்த்.
நான் தான் குழம்பிப் போய், செய்வதறியாமல், இருளை வெறித்தபடி, பால்கனியில் நடந்துக் கொண்டிருந்தேன். மனம் மீண்டும், மீண்டும் சம்யூவை மட்டுமே நாடியது. அவள் என்னுடன் இருக்கும் போதெல்லாம் அவள் அருமை புரியவில்லை. காலம் கடந்த பின்னே காதல் புரிகிறது. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்.. நிறைய திரைப்படங்களில் கண்டிருக்கிறேன்.
ஆனால், முதல் பார்வையிலேயே காதல் வருமென்பதை நான் உணரவே இல்லை. நான் காமம் என்ற பெயரில் சம்யூவை, என்னுடன் தக்க வைத்துக் கொண்டேன். அவளும் நான் இயக்குநர் என்பதற்காய் என்னுடன் இருந்தாளா? அவளின் தேவை தீர்ந்ததும், அவள் நடித்த படம் வெற்றி பெற்றதும் என்னை விட்டு சென்றிருக்கலாம் தானே? ஆனால் அவள் என்னுடன் இருந்ததற்கான காரணம் காதலா? காலம் கண்ணுக்குத் தெரியாமல் கடந்த பின் தான், காதலும் புரிந்துத் தொலைக்கிறது.
இந்த உலகம் மொத்தமுமே இரண்டு முகங்கள் கொண்டது தான். பகல் இரவைப் போல், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல், பிறப்பும், இறப்பும் போலவே எல்லாமே இரண்டு தான். ஒரு மனிதன் தனக்குள் இருக்கும் இன்னொன்றை அறிந்துக் கொள்ள தன்னையறிதல் மிகவும் அவசியம்.
ஒருவன் தன்னை அறிவதற்கும், நிறைய அனுபவப்பட வேண்டியிருக்கிறது. எனக்கு சம்யூவின் இறப்பு என் மறுபக்கத்தை உணர வைத்திருக்கிறது.
நான் செய்வது மட்டுமே சரி, என்ற மேம்போக்கான மனப்பான்மையில், அவளின் கனவுகளையும், அவளையும் அடியோடு அழித்து ஒழித்துவிட்டேன் என்பதை நான் புரிந்துக்கொள்ளும் போது, அவள் என் பக்கத்தில் இல்லை.
நான் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டாள். இது தான் ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெறுவதோ?
கண்டதையெல்லாம் யோசித்து, செய்வதறியாமல் குழம்பிய எனக்கு, தலை வெடித்துவிடும் போல் இருந்தது.
சம்யூவின் நினைவின் கனம் தாங்காமல், தலையை வலிக்க, அவசரமாய் என் அறைக்குச் சென்று, மேஜை இழுப்பறையைத் திறந்து, சிகெரெட்டையும், லைட்டரையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். சிகெரெட்டைப் பற்ற வைத்துப் புகைக்கத் துவங்கினேன். நுரையீரல் தொட்டு வெளியேறும் புகை ஒருவித ஆசுவாசத்தைத் தந்தது.
இது உடலுக்குக் கேடு என எனக்குத் தெரியும். ஆனாலும் இது இப்போது எனக்கு தேவையாய் இருந்தது. நான் மட்டுமல்ல, என்னைப் போலவே நிறைய பேர் இருக்கிறார்கள். எதையோ மறப்பதற்காக, எதிலிருந்தோ தப்பிப்பதற்காக, மது, மாது, புகை, போதை என ஏதாவது ஒன்றிற்காவது அடிமையாகிக் கிடக்கிறார்கள். இதற்கு ஆண் அப்படித்தான் இருப்பான், ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பொது மனநிலையும் ஒரு காரணம் என்பது என் கருத்து. என் கருத்து மட்டுமே..
நான் எனக்குள் யோசித்தபடி புகைப்பிடித்துக் கொண்டிருக்க, பால்கனி கதவைத் திறக்கும் சத்தத்துடன், சமுத்ரா என்னை நெருங்கி வருவது எனக்குப் புரிந்தது. என்னிடம் எதையோ பேச வருகிறாள், என நான் நினைத்திருக்க, அவசரமாய் என் அருகே வந்து, என் கரத்தில் ஆறாம் விரலாய் புகைந்துக் கொண்டிருந்த வெண்சுருட்டைப் பிடுங்கி தூக்கி எறிந்தாள். என் கண்ணுக்குள் அகப்படாத ஏதோவொரு எல்லையில் விழுந்து தன் ஜீவனை முடித்துக் கொண்டது அந்த வெண்சுருட்டு துண்டு.
“வீட்டில் குழந்தை இருக்கு. உனக்கு அறிவில்லை.! வீட்டுக்குள்ளே ஸ்மோக் பண்ணக் கூடாது!” அவளின் நீலநிறக் கண்களில் கோபம் தெரிந்தது.
“இது என் வீடு! நான் ஸ்மோக் பண்ணுவேன். உனக்கென்ன?” அவள் கண்களில் தெரிந்த கோபம், என் வார்த்தைகளுக்கு நெருப்பு மூட்டியது.
“அவந்தியை என் கிட்டே கொடுத்துடு! அப்பறம் உன் வீட்டில் நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்! யார் கேட்கப் போறா?” என அவள் சொன்னதும்,
“அவள் என் பொண்ணு!” என அழுத்தமாய்ச் சொன்னேன் நான்.
“என்ன பொண்ணு! என் பொண்ணுன்னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிட்ட. ஆனால் உன் பொண்ணுக்காக என்ன பண்ணிருக்க விக்ரம்? குழந்தை இருக்கிற வீட்டில் ஸ்மோக் பண்ணக் கூடாதுங்கிற பேசிக் சென்ஸ் இல்லை! உனக்கெல்லாம் எதுக்கு, குடும்பம் குழந்தை எல்லாம்?” அவள் என் எதிரே நின்று, ஆட்காட்டி விரலை நீட்டிப் பேசும் தோரணை, அப்படியே என் சம்யூவை நினைவுபடுத்தியது.
“ம்ப்ச்! உனக்கு என்ன வேணும்? என்னைக் கொஞ்சம் தனியாய் இருக்க விடு!” எரிச்சலில் என்னை மீறி கத்தியிருந்தேன்.
“தனியாய் இருக்கணும்ன்னா, நீ கல்யாணம் பண்ணாமல் இருந்திருக்கணும். கல்யாணம்ங்கிற பேரில் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கமல் இருந்திருக்கணும். நீ உன் வாழ்க்கை முழுசும் தனியாய் இருந்திருந்தாலே, சம்யூ இப்போ உயிரோட இருந்திருப்பா. உனக்கு அவள் மனைவியாக இருந்திருக்கலாம்.”
“ஒரு நாலு, அஞ்சு வருஷமா உனக்குத் தெரியுமா? நான் கருவிலிருந்தே அவளோட ஒண்ணா இருந்திருக்கேன். என்னோட வலி பெருசு. அதெல்லாம் உனக்குப் புரியாது! நீ ஏன் சம்யூ வாழ்க்கையில் வந்த? அவளை ஒரேடியாய் இல்லாமல் பண்ணுறதுக்காகவா?” என அவள் கேட்ட நொடி,
“இப்போ என்ன சொல்ல வர்ர? சம்யூவை நான் கொன்னுட்டேன்னு சொல்றியா?” என திருப்பிக் கேட்டேன் நான்.
“ஆமா! நீ தான் சம்யூவைக் கொன்னுட்ட! உன்னோட ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும், அவள் எவ்வளவு ஹர்ட் ஆகியிருப்பாள்ன்னு உனக்குத் தெரியுமா? உனக்கு எங்கே தெரியப் போகுது? உனக்கு நீ மட்டும் தானே முக்கியம். நீ எப்போ எதிரில் இருக்கிறவங்களைப் பற்றி கவலைப் பட்டிருக்க? அப்படி அக்கறை இருக்கிற ஆளாய் இருந்தால், இப்படி ஸ்மோக் பண்ணுவியா? இதிலேயே தெரிஞ்சுடுச்சு உன் லட்சணம்.!” என அவள் சொன்ன குற்றச்சாட்டுகளை என்னால் மறுக்க முடியவில்லை. எதுவும் பேசாது அமைதியாய் நின்றேன். என் கண்கள், இருள் சூழ்ந்திருந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தது. அள்ளி வீசிய வைரக் கற்களாய், விண்மீன்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தாலும், வானம் நிறைந்துக் கிடந்தாலும் கூட, நிலா இல்லாமல் வானம் வெறுமையாக இருந்தது. என் வாழ்க்கையைப் போலவே..
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர அவ என்ன தப்பு செஞ்சுட்டா விக்ரம்? அவள் உயிரோடு இல்லைங்கிறதையே நியூஸ் பார்த்துத் தெரிஞ்சுக்க வச்சிட்டியே? அவளைப் பெத்தவங்களுக்கு சொல்லணும்ன்னு கூடத் தோணலையா உனக்கு? என்னோட ஒட்டிப் பிறந்தவளோட முகத்தைக் கூட, கடைசியாய் என்னால் பார்க்க முடியலை. ஆனால், இதில் என்னவொரு நல்ல விஷயம்ன்னா மரணம் தான் அவளுக்கு உன் கிட்டே இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்துருக்கு. நீ தானே கேட்ட, குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு போன்னு சொன்ன? அவ போய்ட்டா! இந்த ஒருமாசத்தில் உன்னால் குழந்தையைப் பார்த்துக்க முடிஞ்சுதா? இந்த சினிமா உலகத்தில் நீ பிரபலமான இயக்குநரா இருக்கலாம். ஆனால், ஒரு தனிப்பட்ட மனிதனா நீ வெறும் ஜீரோ விக்ரம்!” அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், விஷ ஊசியாய் என் உள்ளத்தில் ஆழமாய் இறங்கியது.
இத்தனை நேரமாய் நான் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த அடர்த்தியான மௌனம் கலைந்து,
“ஜஸ்ட் ஸ்டாப் இட்! போதும் சமுத்ரா! இதுக்கு மேல் ஒரு வார்த்தை பேசாதே!” அவசரமாய் இடையிட்டு அவள் பேச்சை நிறுத்தினேன்.
“நீ நிறுத்துன்னு சொன்னால், நான் நிறுத்திடணுமா? முடியாது.. நான் பேசுவேன்.. பேசிட்டே தான் இருப்பேன். சம்யூ அவளுக்காக உன்கிட்டே பேசினாளான்னு தெரியாது. ஆனால் நான் அவளுக்காக பேசுவேன். நீ செஞ்சதையெல்லாம் திரும்ப திரும்ப உனக்கு ஞாபகப்படுத்திட்டே இருப்பேன். திரும்பத் திரும்பக் கேட்டு கேட்டு, நீ குற்றவுணர்ச்சியில் சாகணும். அது தான் எனக்கு வேணும்!” அழுத்தமும் கோபமுமாய் கத்தினாள் சமுத்ரா.
“சமுத்ரா போதும்! ஐ அம் ஸாரி.. நான் பண்ணினது தப்புத்தான். என்னை மன்னிச்சுடு. நானே உள்ளுக்குள்ளே மறுகிட்டு கிடக்கிறேன். பேசிப் பேசியே என்னைக் கொல்லாதே!” இவள் பேசாமலிருந்தால் போதும், என்ற எண்ணத்தில், வேறு வழியில்லாமல் சொன்னேன்.
“ஸாரி சொல்லிட்டா, என் சம்யூ வந்துடுவாளா? இப்போ அவளை என் கண்ணு முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியுமா? முடியாது தானே? அப்போ உன் ஸாரியைத் தூக்கிக் குப்பையில் போடு. என் கிட்டே ஸாரி கேட்க முடிஞ்ச உன்னால் சம்யூ கிட்டே கேட்க முடிஞ்சுதா? யாருன்னே தெரியாதவனுங்க கிட்டே ஸாரி கேட்ப, பட வாய்ப்புக்காக காலைப் பிடிப்ப.. ஆனால் உன் வொய்ஃப்கிட்டே கேட்க உன் ஈகோ தடுக்கும். அப்படித்தானே? நீயெல்லாம் என்ன பிறவியோ? அவள் செத்ததுக்கு பதில் நீ செத்துப் போயிருக்கலாம்!” சமுத்ராவின் கனமான வார்த்தைகளில் என் இதயம் ஒருநொடி நின்று துடித்தது.
நான் எதுவுமே பேசவில்லை. நான் பேசுவதற்கு என்பக்கம் நியாயம் இல்லை. சமுத்ராவின் ஒவ்வொரு வார்த்தைகளின் பின் இருந்த வலியும், அவளின் ஆற்றாமையும், உடன்பிறப்பை இழந்துவிட்ட தவிப்பும் என்னால் உணர முடிந்தது. பளிங்கு போல் மின்னிய அவளின் நீல நிறக் கண்களில் வழிந்தக் கோபம் என்னைச் சுட்டுப் பொசுக்காமல் இருந்தது தான் ஆச்சர்யம். அடர்த்தியான மௌனம் என்னை இருள்போல் சூழ்ந்திருக்க, சமுத்ராவே மீண்டும் அந்த நிசப்தத்தைக் கலைத்தாள்.
“நான் அவந்திக்காக மட்டும் தான் இந்த வீட்டில் இருக்கேன். இப்போவும் குழந்தையைத் தூக்கிட்டு என்னால் இங்கிருந்து போக முடியும். ஆனால், அவள் உன்னை அப்பான்னு கூப்பிடுறாளே? அந்த ஒரேயொரு காரணம் தான் என்னை தடுத்து நிறுத்தி வச்சிருக்கு. அவசரப்பட்டு குழந்தையைக் கூட்டிட்டு போய் கஷ்டப்படுத்த வேணாமேன்னு தான் அமைதியாய்இருக்கேன். நான் சட்டப்படி அவந்திகாவை இங்கிருந்து கூட்டிட்டுப் போகப் போறேன். அப்போதானே நீ என் பொண்ணுன்னு பின்னால் வர மாட்டே! கூடிய சீக்கிரம் அவந்தியைப் பிரியறதுக்கு ரெடியா இருந்துக்கோ! அதற்கான வேலைகளை நான் துவங்கிட்டேன்!”
எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். நானோ மரமாய் அசையாமல் நின்றிருந்தேன்.

