Loading

திமிர்-7

“அடேய் அரசி மயனே! இந்தா இந்த அடுப்பில் வேகுதே அது என்னடா? என்னமோ சின்ன சைஸ் மூங்கில் குச்சி மாதிரி நீள நீளமா இருக்கு.?” விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதி நெருப்பை எரிய வைத்தபடியே கேட்டான் காத்தவராயன்.

“இது தெரியாதாக்கும் காக்காவிரட்டி, இதுக்குப் பேர்தான் பாஸ்தா!”

“அது எந்த பிஸ்தாவா வேணும்ன்னாலும் இருக்கட்டும் இது எனக்கு வேணாம்டா சாமி! நாலு ரொட்டித் துண்டு, அப்பறம் அந்த ரெண்டு நிமிஷ நூடுல்ஸு, இப்போ இந்த பிஸ்தா! இதைத் தின்னு மனுஷன் வாழ முடியுமா? ரெண்டு நாளாய் நீ சாப்பிடக் கொடுக்கிறதெல்லாம் பார்த்தாலே பயந்து வருது டா! உங்க ஆத்தா சொன்னுச்சுன்னு வந்தேன். ஆனால் நீ இந்த பிஸ்தாவையும், ரொட்டியையும் போட்டு கொலையாய் கொல்லுறியேடா! முடியலை டா!”

“எனக்கு இம்புட்டுதேன் காக்காவிரட்டி செய்யத் தெரியும். உனக்கு வேணும்ன்னா உனக்குப் பிடிச்ச மாதிரி நீயே சமைச்சுக்கோ!”

“ம்க்கும்! உன்னைத் தூக்கி உள்ளே போட்டுத்தேன் சமைக்கணும். அடேய் நீ போடுற சாப்பாட்டைத் தின்னே செத்துருவேன் போலடா! எனக்கு காரசாரமா கறிக்கஞ்சி சாப்பிடணும் டா! என் கயலு, எம்புட்டு பக்குவமா அம்மியில் மசாலா ஆட்டி வச்சு தருவா தெரியுமா? அவள் அயிரமீனை ஆய்ஞ்சு போட்டு குழம்பு வைச்சா அம்புட்டு ஊரும் மணக்கும்.!” கண்மூடி கற்பனை செய்து சிலாகித்தான் காத்தவராயன்.

“பேசாமல் ஊருக்கு கிளம்பிருங்கிறேன்..!”

“ம்க்கும், நீ சுளுவா சொல்லிப்புடுவ ராசா, மருதையில் உன் ஒட்டுமொத்தக் குடும்பமும் என்னை ஆட்டுக் கல்லுக்குள்ளே போட்டு ஆட்டிப்புடுவாய்ங்க! நீ ஆக்கிப் போடுற இந்த சாப்பாடெல்லாம் எனக்கு சரி வராது. நான் போய் புதுத் தங்கச்சிக்கு ஐஸ் வச்சு சாப்பிடுக்கிறேன்.!”

“பார்த்து காக்காவிரட்டி! அவ அண்ணனுங்க மூணு பேரும், உன்னை இலையில் போட்டு விருந்தா சாப்பிட்டுட போறாய்ங்க!”

“அவிங்கதேன் வீட்டில் இல்லையே!” எனக் காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“என்ன தம்பி வீடெல்லாம் வசதியா இருக்கா?!” எனக் கேட்டபடியே வந்து நின்றான் போஸ்பாண்டி.

“வீடெல்லாம் ரொம்ப பெருசுதேன்! இந்த அடுப்புதேன் இன்னும் பழக்கத்துக்கு வரலை! சீக்கிரம் பழகிரும்! நீங்க உட்காருங்க!” என்றபடியே நாற்காலியை இழுத்துப் போட்டான் காத்தவராயன்.

“இங்கண கேஸ் அடுப்பெல்லாம் வச்சு சமைக்க மாட்டாங்க தம்பி. ஒண்ணு ரெண்டு வீட்டில்தேன் கேஸ் அடுப்பு இருக்கும். இப்போத்தேன் மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தட்டுப்படுது. எல்லாம் விடியும் முன்னமே எழும்பி, கஞ்சியைக் குடிச்சுப்புட்டு, காடு கழனிக்குப் போற சனங்க! பெருசா ஒண்ணும் பொங்க மாட்டாங்க! காலையில் நீராகாரம், உச்சிப் பொழுதுக்கு தண்ணிக்கஞ்சியும் தயிரும்தேன். இரவைக்குதேன் வீட்டுக்கு வந்து சோறு பொங்குவாங்க!” எனச் சொன்னவரின் கண்கள் அந்த வீட்டைச் சுற்றிலும் அலசியது.

எதையோ தேடுவது போன்ற அவனின் பாவனையில், காத்தவராயனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

காத்தவராயனின் பார்வையில் தெரிந்த பயத்தைப் உணர்ந்துக் கொண்ட, வீரபத்ரன்,

“என்ன சார் தேடுறீங்க? எதாவது வேணுமா?” எனக் கேட்டான் வீரபத்ரன்.

“அது ஒண்ணுமில்லை தம்பி! உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு. முக ஜாடை, நமக்கு நெருக்கமான ஆளுன்னு சொல்லாமல் சொல்லிக்கிட்டே இருக்கு. அதேன் ஃபோட்டோ எதுவும் மாட்டி வச்சிருக்கீகளா? உங்க பெத்தவங்க ஜாடையைப் பார்த்தால் என்ன ஏதுன்னு விளங்கிருமேன்னு, பார்க்கிறேன்.!” எனச் சொன்னான் போஸ்பாண்டி.

“ஃபோட்டோவை மாட்டினால், நாங்க மாட்டிக்கிடுவோமே?” எனக் காத்தவராயன் முணுமுணுக்க,

“என்ன தம்பி சொன்னீக? சரியா விளங்கலை?”

“அது ஒண்ணுமில்லை சார்! இந்த ஊருக்கு வரணுமின்னு வந்துட்டோம். ஆனால், இங்கே தங்க இடம் கிடைக்குமா? என்னன்னு தெரியாதில்லையா? அதனால் தான் எதுவும் எடுத்துட்டு வரலை சார்!” தட்டுத் தடுமாறி பதில் சொன்னான் வீரபத்ரன்.

“இருக்கட்டும் தம்பி! அப்பறம், சும்மா சார், மோருன்னு கூப்பிடாதீக, நம்ம ஊருதானே, உரிமையாய் அண்ணேன்னு கூப்பிடுங்க!” என போஸ்பாண்டி சொல்ல, திருதிருவென விழித்து வைத்தான் வீரபத்ரன்.

“இவனை அண்ணேன்னு கூப்பிட்டால் அவ தங்கச்சி ஆகிடுவாளே? நான் இவனை மச்சான்னு கூப்பிடணும்! ஆனால், இவனை நேராய்ப் பார்த்து பேசுறதுக்கே பயமா இருக்கே?” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் வீரபத்ரன்.

“கூப்பிடு! வீரபத்ரா! கூப்பிடு! நீ அண்ணா என அழைப்பாய் என ஆசையாய் ஓடி வந்திருக்கும் போஸ்பாண்டியை அநியாயமாய் ஏமாற்றிவிடாதே வீரபத்ரா.!” என காத்தவராயன் வீராவின் காதுக்குள் முணுமுணுக்க,

“இந்தாரு, காக்காவிரட்டி! வாயை மூடிட்டு இரு! அப்பறம் ஊருக்குப் போகும் போது, உன்னைய மாட்டிவிட்டுட்டு நான் எஸ்கேப் ஆகிருவேன்.!” என வீரபத்ரன் காத்தவராயனைப் பயமுறுத்திப் பார்த்தான்.

“இந்த படங்காட்டுற வேலையெல்லாம் நம்மகிட்டே ஆகாதுடா! நீதேன் தைரியமான ஆளாச்சே, அவனை அண்ணன்னுதேன் கூப்பிட்டுப் பாரேன்.!” என மீண்டும் காத்தவராயன், காலைவார, அவனை முறைத்தே பஸ்பமாக்கினான் வீரா.

“வந்து ரெண்டு மூணு நாளு தானே ஆகுது. போகப் போக அதுவா முறை வச்சுக் கூப்பிட வந்துரும்ங்க சார்!” சிரித்தபடியே மழுப்பினான் வீரா.

அதே நேரம், “அண்ணே! அண்ணே!” என்ற குரல் கேட்க, அவள் வருவதன் முன் அறிவிப்பாய், மெல்லிய கொலுசொலி செவியை மோத, மென்மையான ஏலக்காயின் வாசம், காற்றில் கலந்து வந்து வீரபத்ரனின் நாசியில் மோதி நழுவியது.

இதய அறைகளுக்குள் நிரம்பிய வாசனையில் மயங்கிக் கிறங்கியபடியே, அவள் வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்திருந்தான் வீரபத்ரன்.

“மயிலு! அண்ணே இங்கண இருக்கேன் ராசாத்தி!” என்ற போஸ்பாண்டியின் குரலில், அவசரமாய் உள்ளே ஓடிவந்தாள் மேகவர்ணா.

“என்னத்துக்கு இம்புட்டு வேகமா ஓடியாற? கொஞ்சம் பொறுமையா வந்தாத்தேன் என்ன?”

“அண்ணே! நீ என்னத்துக்கு இங்கண வந்தே? எனக்குதேன் இவிங்களைப் பிடிக்காதுன்னு தெரியும்ல்ல? தங்கச்சி பகை, அண்ணே உறவா? இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்.!”

“அப்படியெல்லாம் பேசக்கூடாது மயிலு! நம்ம ஊருக்கு வந்திருக்க விருந்தாள் இல்லையா?!”

“ம்க்கும்! இவிங்க விருந்தாளிங்களாக்கும்? மூஞ்சியைப் பாரு, களிவாணிப் பயலுக்கான பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்கு. பல மாசமா முடி வெட்டாத மண்டையும், ஷேவ் பண்ணாத தாடியும், நல்லாவா இருக்கு? பெரிய அர்ஜூன் தாஸூன்னு நினைப்பு.!” நாடியைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள் மேகவர்ணா.

“நான் அர்ஜுன் தாஸுன்னு உன்கிட்டே சொன்னேனா? களவாணிப் பய, அது இதுன்னு சொன்னே? நானும் சும்மா இருக்க மாட்டேன். பெரியவுங்க நிக்கிறாங்களேன்னு பொறுமையாய் பேசிட்டு இருக்கேன் பார்த்துக்கோ!” அடக்கப்பட்டக் குரலில் பேசினான் வீரபத்ரன்.

“மயிலு! சும்மா இருத்தா!” எனத் தங்கையை அமைதிப்படுத்தியவன்,

“தப்பா எடுத்துக்கிடாதீங்க தம்பி! ரொம்ப வருஷஞ்செண்டு பொறந்த பொம்பளப்பிள்ளை. எங்க வீட்டுக்கே இளவரசி அவதேன். மருதையை மீனாட்சி ஆளுற மாதிரி, எங்க வீட்டை ஆளுறவ இவதேன். வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம். தாய் இல்லாத பிள்ளைன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துப்புட்டோம்.! இடம் பொருள் ஏவல் தெரியாத பச்சைமண்ணு தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க!” என போஸ்பாண்டி சொன்னாலும், குரலில் பெருமையும் கர்வமும் மட்டுமே மிளிர்ந்தது.

அவர் சொல்வதில் இருக்கும் உண்மை அவனுக்கும் தெரியும் தான். தன்னுடன் பிறந்த தங்கையோ, தமக்கையோ இல்லாத போதும், தோழியாய், சகோதரியாய், அத்தை மகளாய், அந்த இடத்தை அவன் வாழ்வில் நிரப்பியவள், கருவிழி தான். அண்ணன் மனைவியாய் இருந்தாலும் கூட, இப்போது வரை, அவனுக்கு நல்ல தோழியாய் இருப்பவள் கருவிழி மட்டுமே.

தங்கள் வீட்டில் வளர்ந்த ஒற்றை பெண் என்பதால், அவளும் கிட்டதட்ட மேகவர்ணாவைப் போலவே செல்லம் தான். அதை அவன் தான் கண் முன்னே பார்த்திருக்கிறானே.

போஸ்பாண்டி சொன்னது புரிந்தாலும், அவள் தன்னை வாய்க்கு வந்தபடி பேசியதை அவனால் எளிதாக எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.

“நீ எதுக்குண்ணே இங்கெல்லாம் வர்ர? பெரிய ஜில்லா கலெக்டருன்னு சாருக்கு நினைப்பு. நீங்க நிற்கிறது எங்க வீடு. எங்க வீட்டில் நின்னுக்கிட்டு எகத்தாளமா பேச வேணாம். நான் அன்னைக்கே சொன்னேன் இவிங்களை ஊருக்குள்ளே விடாதேன்னு, நீதேன் கேட்கவே இல்லை! என்னத்துக்கு இவிங்களை உள்ளே விடணும், என்னமோ கொலைக் குத்தம் செஞ்ச மாதிரி விளக்கம் கொடுக்கணும்?” வார்த்தைகள் தன் அண்ணனுக்காய் இருந்தாலும், பார்வை வீரபத்ரனிடம் இருந்தது.

“என்னத்துக்கு மயிலு, பார்க்கிற நேரமெல்லாம் பொருமிக்கிட்டே திரியுற? இப்படித்தேன் வந்தவங்களை மரியாதை இல்லாமல் பேசச் சொல்லி உன்னை வளர்த்தோமா?சத்தங்காட்டாமல் நில்லுத்தா! இப்போ என்னத்துக்கு இங்கண வந்தே?” கண்டிப்பாய் வெளி வந்தது போஸ்பாண்டியின் குரல்.

“நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன். அதைச் சொல்லத்தேன் கூப்பிட்டேன்.! உன்னைக் காணோம், அதனால் தான் இங்கண வந்தேன். நான் வந்ததுக்கு நீதேன் காரணம். ஊரு பேரு தெரியாதவிங்களுக்காக என்னை வையுற.? போண்ணே நான் உன்கிட்டே பேசமாட்டேன்.!” கோபமாய் முறைத்தபடியே மேகவர்ணா வெளியேற,

“தங்கச்சி கோவிச்சுட்டு போவுதுங்க சார்! கூப்பிட்டு சமாதானப் படுத்துங்க!” என இடையிட்டான் காத்தவராயன்.

“அது அப்படித்தேன்.. கோபால்பட்டி பால்பன் வாங்கியாந்து கொடுத்தா சமாதானமாகிப்புடும்.! இந்தக் கோபமெல்லாம் சும்மா ரெண்டு நிமிஷங்கூடத் தாங்காது. எங்கக் கிட்டே பேசாமல் தங்கச்சியால் அரை நிமிஷங்கூட இருக்க முடியாது.!” தன் தங்கையை தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதென்ற கர்வம் அவர் குரலில் தெரிந்தது.

“காக்காவிரட்டி! அவ என்னத்துக்கு ஸ்கூலுக்கு போறாள்ன்னு கேளு!” காத்தவராயனின் காதைக் கடித்தான் வீரா.

“ஓஹோ.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? அதே கேள்வியை நீ கேட்கிறது?”

“நான் கேட்டால், இந்த மீசைக்காரன் சொல்ல மாட்டான். நீயே கேளு! உன் தங்கச்சி எங்கே போறா, வர்ரான்னு ஒரு அண்ணனா நீ தெரிஞ்சுக்க வேணாம்?”

“எனக்கு தெரிய வேணாம் சாமி! என்னத்தையாவது கேட்டு வச்சு, இந்த மீசைக்காரன் கையில் மிதிபட, நான் தயாராய் இல்லைடா சாமி!”

“போ! கேட்காதே! நானே கேட்டுக்கிறேன். அதுக்கு முன்னே நான்தேன் அரசி மயன்னு இந்த பெரிய கரடி கிட்டே சொல்லிப்புடுவேன்.!” என வீரபத்ரன் சொல்ல,

“அடேய் அரசி மயனே.. நானே உன்னைக் கொன்னுபுடுவேன் பார்த்துக்கோ! உங்க ஆத்தா சொன்னுச்சுன்னு உன்கூட வந்தது குத்தமா டா? கொலையா கொல்லுறீங்களேடா..!” எனப் புலம்பியவன்,

“தங்கச்சி ஸ்கூல் படிக்குதுங்களா சார்?” என பம்மியபடி கேட்டான் காத்தவராயன்.

“ஹ்ஹா..! ஹா..! ஹா..!” வெடிச் சிரிப்பு சிரித்தபடியே,

“அவளைப் பார்த்தால், பள்ளிக்கூடம் போற சின்னபுள்ளை கணக்காவா இருக்கு? இங்கே பள்ளிக்கூடம் எட்டாவது வரைதேன் இருக்கு. பள்ளிக்கூடத்துக்கு பாடம் சொல்லிக் கொடுக்க போறா.!” எனப் பதில் சொன்னான் போஸ்பாண்டி.

“ஓ! டீச்சருக்கு படிச்சிருக்குதுங்களா?”

“படிச்சது விவசாயப் படிப்புதேன் தம்பி! மருதைக்குப் போய் படிச்சுட்டு வந்தாள். இங்கண, பள்ளிக்கூடத்தில் ஒரு டீச்சர்தேன் இருப்பாக! அவுங்க ஒத்தாசைக்கு கொஞ்ச நேரம் போய் சொல்லிக் கொடுத்துட்டு வருவா. பணத்துக்காக இல்லை தம்பி! நம்ம ஊருக்கு நாமதேன் செய்யணும்ன்னு போறா! அது மட்டுமில்லாமல், ஏலக்காய் தரம் பிரிச்சு வேற ஊருகளுக்கு அனுப்பறது, ஆர்டர் எடுத்து ஏலக்காய் மாலை செஞ்சு கொடுக்குறதுன்னு எல்லாம் பண்ணுறா. ஒருநேரம் கூட சும்மாவே இருக்க மாட்டா! நம்ம வீட்டில் இருக்கிற தோட்டம், பூச்செடி எல்லாம் அவள் பார்த்து பார்த்து வளர்த்ததுதேன்.!” எனச் சொன்னவர்,

“சரி, வரேன் தம்பி! உங்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருளெல்லாம் வாங்கணும்ன்னா, நெய்க்காரபட்டியில் போய் வாங்கிக்கிடுங்க! வாராவாரம், திங்கள் கிழமை, மத்தியானம் ரெண்டு மணியிலிருந்து சந்தை போடுவாங்க! என்ன வேணுமோ வாங்கிக்கிடுங்க!” எனச் சொல்லிவிட்டு வெளியேறியிருந்தார்.

“என்ன மாப்பிள்ளை! அடுத்து சந்தைக்குப் போவணுமா?” என்ற காத்தவராயனின் கேள்விக்கு,

“இல்லை ஸ்கூலுக்கு..!” வீரபத்ரன் பதில் சொல்ல அதிர்ந்து விழித்தான் காத்தவராயன்.

*******

“அடேய்! அரசி மயனே! என்னடா ஸ்கூலுக்குப் போவணும்ன்னு சொல்லிப்புட்டு, இப்படி மொட்டை வெயிலில் மெத்தையில் கூட்டியாந்து நிப்பாட்டி வச்சிருக்கே?!”

“வெயிலு அடிக்குதா? இல்லையான்னு பார்க்க வந்தேன் காக்காவிரட்டி!”

“ஜன்னலைத் திறந்தாலே, மூஞ்சி எரிஞ்சு போற அளவுக்கு வெயில் அடிக்குது. இதில் வெயில் அடிக்குதா? இல்லையான்னு பார்க்க வந்தானாம்? ஏன்டா உசுரை வாங்குறீங்க?” எனக் காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் கையிலிருந்த ட்ரோன் கேமிராவை இயக்கி பறக்க வைக்கத் துவங்கியிருந்தான் வீரா.

“அடேய்! என்னடா செய்றே?!”

“கழுகுப் பார்வையில் இந்த ஊரைப் படம் பிடிச்சு, நம்ம சேனலில் போடப் போறேன்.!”

“இம்புட்டு அவசரமா நீ பரபரக்கிறதைப் பார்த்தால், சேனலுக்கு வீடியோ போடுற மாதிரி தெரியலையே? காலையில் கண்ணராவியா செஞ்சு கொடுத்தியே அந்த ஊதுகுழல் பாஸ்தா அதை வீடியோ எடுத்து போட வேண்டியது தானே?!” நக்கலாய்க் கேட்டான் காத்தவராயன்.

ஆனால், அதைக் கண்டுக் கொள்ளாத வீராவின் கவனம் முழுவதும், ட்ரோன் கேமிராவை இயக்கியபடியே, திரையில் தெரிந்த காட்சிகளில் தான் இருந்தது. கழுகுப் பார்வையில் பச்சைப் பசேலென பட்டாடைப் போர்த்தியது போன்ற, அந்த ஊரின் ஒட்டுமொத்த சூழ்நிலையும், அந்தக் கேமிராவில் பதிவாகிக் கொண்டிருந்தது.

மலை முகடுகளின் மீது பஞ்சுப் பொதியாய் மோதித் தழுவி, நழுவி விருப்பமின்றி நழுவும், மேகங்களை இரசித்துக் கொண்டிருந்தவனின் காண்கள் எதையோ விடாமல் தேடிக் கொண்டே இருந்தது. கரம் இடைவெளி விடாமல், ட்ரோனை இயக்க, தேடித் தேடி சலித்து ஒருவழியாய் தேடியதைக் கண்டவனின் கண்களில் அதீத பளிச்சிடல்.

வீராவின் முகத்தில் தெரிந்த பளிச்சிடலில் பின்னிருந்து எட்டிப் பார்த்தான் காத்தவராயன்.

“அதானே! நினைச்சேன், நீ இந்த அகராதிப் பிடிச்ச வேலையத்தேன் செய்வன்னு எனக்குத் தெரியும்டா. அந்தப் புள்ளை போற பள்ளிக்கூடத்தைதேன் இம்புட்டு நேரம் தேடுனியாக்கும். அந்தப் புள்ளையோட அண்ணேங்களுக்கு தெரிஞ்சுச்சு, அம்புட்டுதேன் பார்த்துக்கோ!” என எச்சரித்தான் காத்தவராயன்.

“அதெல்லாம் தெரியும் போது பார்த்துக்கிடுவோம்! என்கிட்டே மட்டுந்தேன் முறைச்சுக்கிட்டே திரியுறா! எம்புட்டு அழகா சிரிக்கிறா பாரு! இவளுக்கு சிரிக்கத் தெரியும்ன்னு எனக்கு இப்போதான் தெரியுது.!” அந்த ஓடு வேய்ந்தப் பள்ளிக் கட்டிடத்தின் அருகே நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவளை ஜூம் (Zoom) செய்து பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.

“நான்தேன் சொல்றேன்ல்ல? அந்தப் புள்ளைக்குதேன் உன்னைப் பிடிக்கலையே? பேசாமல் இந்தக் குடும்பத்தைச் சேர்க்கிற வேலையெல்லாம் விட்டுப்புட்டு ஊரைப் பார்த்துப் போவோம்.! உன் ஆத்தாளும் சரி, இந்த கருவிழி புள்ளையும் சரி,ஓயாமல் ஃபோன் அடிச்சுக்கிட்டே இருக்காய்ங்க! நீ என்னடான்னா ஃபோன் எடுக்காதேன்னு சொல்லுற! உங்க ஆத்தா என்னை வச்சு செய்யப் போவுது.!”

“ஃபோனை எடுத்தால், உடனே கிளம்பி வரச் சொல்வாய்ங்க! அப்பறம் என் லட்சியம் என்ன ஆகிறது?”

“அப்படி என்ன உயர்ந்த லட்சியம் உங்களோடது?”

“குடும்பத்தைச் சேர்த்து வைக்கணும்ங்கிறதே பெரிய லட்சியந்தேன் காக்காவிரட்டி!”

“ரொம்பப் பெரிய லட்சியம் டா! அந்தப் பொண்ணை உனக்குப் பிடிச்சுருக்கு. சும்மா குடும்பத்தை சேர்க்கிறேன், கொய்யாக்கா விற்கிறேன்னு பொய் சொல்லிக்கிட்டு திரியுற! நீ வேலை வெட்டி இல்லாமல் திரியறன்னு தெரிஞ்சுது, அந்தப் புள்ளை உன்னை ஏறெடுத்தும் பார்க்காது.!” என காத்தவராயன் சொல்ல, வீரபத்ரனின் முகம் சட்டென சுருங்கியது.

அதே நேரம், வீரபத்ரனின் அலைபேசி அழைக்கவும், எதையோ சொல்ல வந்தவன், அப்படியே நிறுத்திவிட்டு, அழைப்பை ஏற்று காதில் வைத்தான். வீராவின் கல்லூரி நண்பன் கார்த்திக் தான் அழைத்திருந்தான்.

“சொல்லுடா கார்த்திக்!”

“டேய் வீரா எங்கேடா இருக்கே?”

“மதுரையில் இல்லை டா!”

“இல்லைடா! ஒரு ஆஃபர் வந்திருக்கு. பெரிய டைரக்டர் ஒருத்தர், அஸிஸ்டண்ட் டைரக்டர் வேணும்ன்னு கேட்டுருக்கார். உன் டீட்டெய்ல்ஸ் அனுப்பறியா கொடுத்து வைக்கிறேன்.!”

“வேணாம் டா! அஸிட்டெண்ட் டைரக்டர்ன்னு வரச் சொல்லிட்டு, என் கதையை வாங்கி, இயக்கம்ன்னு அவனுங்க பேர் போட்டுப்பாணுங்க! என் கதையை நான் தான் இயக்கணும். அதுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லை. நான் அஸிஸ்டெண்ட்டா எங்கேயும் வொர்க் பண்ணுறதா இல்லை டா. ஒருதடவை பட்டதே போதும் டா!” என்றவனின் குரலில் ஏமாற்றப்பட்டதன் அப்பட்டமான வலி தெரிந்தது.

“ஒருதடவை நடந்தால் எல்லா முறையும் அப்படியே நடக்குமா? இந்த ஒரு தடவை ட்ரை பண்ணி பாரேன் டா!”

“யோசிக்கிறேன் டா! சரின்னு தோணிச்சுன்னா டீட்டெய்ல்ஸ் அனுப்பறேன்.!”

எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தவன், மீண்டும் ட்ரோனை இயக்குவதில் கவனத்தைச் செலுத்தினான். ஆனாலும் அவன் முகம் யோசனையைச் சுமந்திருந்தது.
சில நிமிடங்கள், எதையும் கவனிக்காமல், தன் போக்கில் இயக்கியவன், சட்டென ஞாபகம் வந்தவனாய், ட்ரோனை இயக்கியபடியே, அதில் தவறவிட்ட மேகவர்ணாவின் பிம்பத்தைத் தேடினான்.

எங்கு தேடியும் அவள் காணாமல் போக, பரபரப்போடு வேகமாய் அவன் ட்ரோனை இயக்கிய நேரம்,

“ஒரு பொண்ணோட அனுமதி இல்லாமல், அவளைப் படம் பிடிக்கிறது தப்புன்னு உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கலையா மிஸ்டர்.வீரா! பேரில் வீரத்தை வச்சிக்கிட்டு, இப்படி கோழைத் தனமான வேலையைச் செய்றீங்க?” என்ற குரல் கேட்டு அவன் திரும்ப, அங்கே அவனை முறைத்தபடியே நின்றிருந்தாள் மேகவர்ணா.

“இந்தாரு, இந்த எகத்தாளப் பேச்செல்லாம் என்கிட்டே வேணாம்! நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டே இருக்கேன். ரொம்பத்தேன் மட்டம் தட்டுற? நாங்க உன் வீட்டில் இருக்கலாம். ஆனால் சும்மா ஒண்ணும் இருக்கலை! வாடகைக் கொடுத்துதேன் இருக்கோம். என்னமோ ஓசியில் வீட்டைக் கொடுத்துட்ட மாதிரி ஓவராய் பேசுறே?!”

“அப்படித்தேன் பேசுவேன்! ஊரு பேரு தெரியாத உன்னையெல்லாம் எப்படி விட முடியும்?!” அவளும், அவனுக்கு சமமாய் எகிறிக் கொண்டு நின்றாள்.

“ஊரு பேரைச் சொல்லிட்டா மட்டும், என்ன பண்ணிருவ? அப்படியே ஆரத்தி எடுத்து அழைச்சுப்புடுவியாக்கும்?”

“ஆமா, நீ இந்த வீட்டு மாப்பிள்ளை பாரு, ஆரத்தி எடுத்து அழைக்கிறதுக்கு? என்னைய ஃபோட்டோ பிடிச்சன்னு என் அண்ணேங்கக் கிட்டே சொல்லி உன்னைய என்ன பண்ணுறேன் பாரு?!”

“போய்ச் சொல்லு மயிலம்மா! நான் உன்னைத்தேன் ஃபோட்டோ பிடிச்சேன்னு உன்கிட்டே என்ன ஆதாரம் இருக்கு? நான் இந்த ஊரை ஃபோட்டோ பிடிச்சேன். உன் மூஞ்சியைப் போய் யார் ஃபோட்டோ எடுப்பா?” நக்கலாய் அவன் கேட்க,

“இந்த மேகவர்ணாவோட வார்த்தையே ஆதாரம்தேன் தம்பி! நீ சொல்றதை நம்புறாங்களா? நான் சொல்றதை நம்புறாங்களான்னு பார்ப்போம். என் அண்ணேங்கே கூப்பிடுவாய்ங்க, எல்லாத்துக்கும் தயாராய் இரு. ஊருக்கு போறதுக்கு உசிரு மிஞ்சுமோ என்னமோ?” என தெனாவெட்டாய் அவள் சொல்லிவிட்டுப் போக,

“அடேய்! அரசி மயனே..! நம்ம சோலி முடிஞ்சுதுடா! கட்டி வச்சி உரிக்கப் போறாய்ங்க! நான் இப்படியே மெத்தையிலிருந்து எகிறி குதிச்சு ஓடிரவா?” எனப் பயத்துடன் காத்தவராயன் கேட்டது மேகவர்ணாவின் செவிகளில் தெள்ளத்தெளிவாய் விழுந்திருந்தது.

என்னதான் அவளிடம் தைரியமாய் பேசியிருந்தாலும், பதற்றமும், பயமும் மேலோங்க, அவள் போன திசையைப் பார்த்தபடியே நின்றிருந்தான் வீரபத்ரன்.

தித்திக்கும் 🔥

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்