
திமிர்-8
“அடேய்! அரசி மயனே..! இந்த மூணு மலை மாடுங்கக் கிட்டே மிதிபட்டு சாகணுமா? வாடா, எகிறிக் குதிச்சு ஓடிப் போயிருவோம்.!”
“ஆமா! மெத்தையிலிருந்து குதிச்சு ஒரேடியா போய்ச் சேர்ந்திருவோம். லூசுத்தனமாய் பேசாதே காக்காவிரட்டி!”
“ஆமாடா! நான்தேன் லூசுத்தனமா பேசுறேன். நீ உன் மச்சான்காரனுங்க கிட்டே மிதி வாங்கு, அடிவாங்கு. உங்கக் குடும்பப் பஞ்சாயத்துக்கு நான் ஏன்டா அடிவாங்கணும். அந்த மூணு தடிமாடுங்கக் கிட்டே சிக்கினேன். என்னை அக்கு வேரு, அணி வேரா பிச்சிப்புடுவானுங்கடா!”
“ஒரு குடும்பத்தை சேர்த்து வைக்கணும்ன்னா சில இழப்புகளை சந்திச்சுதேன் ஆகணும் காக்காவிரட்டி.! நீ தைரியமான ஆளாய் இருப்பேன்னு நினைச்சேன். நீயே இப்படி பயந்தாகொள்ளியா இருக்கே?”
“அடேய்! உங்கக் குடும்பத்தைச் சேர்த்து வைக்க நான் ஏன்டா இழப்புகளைச் சந்திக்கணும்? நல்ல நியாயம் டா உங்களோடது? என்னைய நம்பி என் கயலு அங்கண காத்துக்கிட்டு கிடக்குறா! நான் உசிரோட ஊரு போய் சேரணும்டா! என்னைய தைரியமான ஆளுன்னு சொல்லுறே? நீதேன் ரொம்பத் தைரியமான ஆளாச்சே, நீ போயேன்.!”
“இப்போ என்ன நானே போகணும் அம்புட்டு தானே? உன்கிட்டே பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டேன். நானே போறேன்.நானும் தைரியசாலிதேன்!” எனச் சொன்னபடியே அவசரமாய் படிகளில் இறங்கப் போன வீரபத்ரன், மீண்டும் காத்தவராயனை நோக்கி வந்தான்.
“தைரியமா போறேன்னு சொல்லிப்புட்டு என்னடா திரும்ப என்கிட்டே வர்ரே?” எனக் காத்தவராயன் கேட்க,
“பயமா இருக்கு காக்காவிரட்டி, மூணு பேரும் சேர்ந்து நசுக்கிப்புட்டாய்ங்கன்னா என்ன செய்யட்டும்? லட்டு உதிர்ந்து பூந்தியான மாதிரி பொடிப்பொடியா போயிருவேனே?!” எனப் பயந்தபடியே காத்தவராயனின் கரம் பற்றினான் வீரபத்ரன்.
“அதுக்கு இப்போ என்ன செய்யணும்ங்கிறே?”
“நான் இப்போ என்ன சொல்றேன்னா, நீ முன்னாடி போவியாம். நான் உன் பின்னாடி வருவேனாம்.!”
“ஆமா! நான்தேன் அந்த மீசைக்காரனுங்களுக்கு மச்சானாகப் போறேன்.. நான்தேன் முன்னால் போவணும்! அடேய்! நீங்க கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தறதுக்குள்ளே என் குடும்பத்தை அழிச்சுப்புடாதீங்கடா!” எனச் சலித்துக் கொண்டான் காத்தவராயன்.
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அந்தப் புள்ளை உனக்கு தங்கச்சி! நல்லா நெனைப்பில் வச்சுக்கோ!” என வீரபத்ரன் சொல்ல,
“ம்க்கும்! இந்த வியாக்கியானமெல்லாம் நல்லா பேசு! முதலில் அந்தப் புள்ளையைத்தேன் கட்டப்போறேன்னு நீ மனசில் இருத்திக்கடா! மறந்துட்டு ஓடிப் போயிற போற?”
“அதெல்லாம் ஓட மாட்டேன்! மயிலம்மா இந்த வீராவுக்குத்தேன்!”
“ம்க்கும்! சொன்னாய்ங்க! மயிலம்மாவை உனக்குத்தேன் கட்டி வைக்கப் போறோம்ன்னு சொன்னாய்ங்க! இப்படி பயந்து என் பின்னாடி ஒளிஞ்சால், எப்படிடா அந்தப் புள்ளையைக் கட்டுவ? உன்னையும் ஹீரோன்னு நாங்க நம்புறோம் பாரு, எங்களைச் சொல்லணும்.!”
“உனக்கு என்னைப் பத்தி தெரியாது.. ஐ அம் ஹீரோ.. ஐ அம் எ வில்லன்.!” என வீரபத்ரன் சொல்ல, வீரபத்ரனைச் சுற்றி சுற்றி வந்து பார்த்த காத்தவராயனோ,
“ஹீரோ களையே தெரியக் காணோம்! இதில் வில்லனாம். நாங்க நம்பிட்டோம் டா!” என நக்கலாய் சொன்னான்.
“என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுற காக்காவிரட்டி! ஒருநாள் இல்லைன்னா ஒருநாள், நானும் ஹீரோன்னு நீயே சொல்லுவ பாரு!”
“அதெல்லாம் நடந்தால் பார்த்துக்கிடலாம் ராசா! இப்போ வா உன் மச்சானுங்க உனக்காக வழிமேல் விழி வச்சு காத்திருப்பாய்ங்க! இந்நேரம், உன் மயிலு அம்புட்டையும் ஒப்பிச்சிருக்கும். நீ அந்தப் புள்ளைய ஃபோட்டோ பிடிச்சன்னு தெரிஞ்சுது, உன்னைய ஃபோட்டோவாக்கி தொங்க விடப் போறாய்ங்க!”
“நீ வேற உன் பங்குக்கு பயமுறுத்தாதே காக்காவிரட்டி! பயம் தொண்டையைக் கவ்வுது!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“தம்பி கீழே வாங்க!” அதட்டலான போஸ்பாண்டியின் குரல் இடி முழக்கமாய் வீராவினௌ செவிகளில் விழுந்தது.
“ஆத்தி! இந்தா கூப்பிட்டாய்ங்க! என்ன செய்யப் போறாய்ங்களோ தெரியலையே? அடேய் அரசி மயனே.. உசிரோட ஊருக்கு போயிருவோமா டா?”
“உசிரு இருந்தால் போவோம் காக்காவிரட்டி!”
“அசால்ட்டா சொல்றியேடா? உசுரு என்னோடது டா! என்னைய நம்பி என் பொண்டாட்டி காத்துக்கிட்டு இருக்கா டா!”
“பயப்படாமல் வா காக்காவிரட்டி! பேசிப் பார்ப்போம், ஒண்ணும் சரி படலைன்னு வையி, அப்படியே கெத்தா காலில் விழுந்துடுவோம்.!”
“கெத்தா அரிவாளைத் தூக்கி சண்டை போடுறவிங்களைப் பார்த்திருக்கேன். கெத்தா காலில் விழறவன் நீதேன்டா! போய்த் தொலை, இன்னும் அவிங்க என்ன செய்யக் காத்திருக்காய்ங்களோ? ஆனால் எந்தப் பக்கம் போனாலும், என்னையத்தேன் வச்சு செய்றீங்க டா!”
என்றபடியே படிகளில் இறங்கி, எதிரிலிருந்த மேகவர்ணாவின் வீட்டை நோக்கிச் சென்ற அதே நேரம், ஜல் ஜல் எனக் கழுத்து சலங்கைகள் குலுங்க, வேகமாய் ஓடிவந்து வீரபத்ரனை முட்டப் பாய்ந்திருந்தது காளை மாடான கருப்பன்.
“டேய் கருப்பா! இதென்ன விளையாட்டு? அங்கிட்டு போ!” முத்துப்பாண்டியின் குரலுக்குப் பணிய மறுத்து, இடவலமாய் தலையை அசைத்தது.
“போன்னு சொல்லுறோம்ல்ல.? அங்கிட்டு போ!” அடுத்து இராஜபாண்டியின் குரல் கேட்டது. இப்போதும் அசைய மறுத்து கொம்பைத் தூக்கிக் கொண்டு நின்றது. அதன் கொம்பு வீரபத்ரனின் வயிற்றுக்கு நேராய் இருந்தது.
“டேய்! கருப்பா! என்ன விளையாட்டு இது? நல்லப் புள்ளையில்ல? அங்கிட்டு போ!” எனச் சொன்னபடியே போஸ்பாண்டி மூக்கணாங்கயிறை பிடித்து இழுக்க, கயிறை இழுக்க விடாமல், தலையை ஆட்டி மறுத்து, போஸ்பாண்டியை முட்டுவதற்கு முயல,
“டேய் கருப்பா! போடா! போடா அங்கிட்டுன்னு சொல்றேன்ல்ல? இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு திரிஞ்சன்னு வையி, இழுத்துப் பிடிச்சு கட்டிப் போட்டுருவேன் பார்த்துக்கோ! எம்புட்டு தைரியம் இருந்தால் எங்க அண்ணனையே முட்ட வருவ? இரு.. உன்னை இந்த வாரச் சந்தையிலேயே வித்துப்புடுறேன்.!” என மேகவர்ணா அதட்டலாய் பேச, இரண்டடிகள் பின்னால் எடுத்து வைத்துவிட்டு, பாவமாய் முகத்தை வைத்தபடி அவளைப் பார்த்தது.
“இந்தப் பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.. அப்படியே பச்சைப் புள்ளை கணக்கா மூஞ்சியை வச்சுக்குவ? இந்த நடிப்பெல்லாம் நல்லாத்தேன் கத்து வச்சிருக்க!” அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க, அவள் அருகில் சென்று, முகத்தால் அவள் மீது உரசி சமாதானம் செய்ய முயற்சித்தது கருப்பன்.
“ஆத்தி ஜஸ்ட் மிஸ்ஸு! கொஞ்சம் விட்டிருந்தாலும் குத்தி தூக்கியிருக்கும்!” பயத்துடன் வியர்வை வழிய இத்தனை நேரமாய் அசையாமல் நின்றிருந்த வீரபத்ரன், நீண்ட பெருமூச்செறிந்தான்.
“என் அழகு கருப்பன்! கொஞ்சம் மூஞ்சியைத் தூக்கிட்டா, அப்படியே வந்து கொஞ்சிருவியே?” என்ற மேகவர்ணா கருப்பனின் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்ச, அவளை முறைத்தபடியே நின்றிருந்தான் வீரபத்ரன்.
“பொறாமை பொங்கிட்டு வருதாக்கும்? அந்தப் புள்ளை மாட்டுக்கு முத்தம் கொடுக்கிறதையே உன்னால் பார்க்க முடியலையா? அந்தப் புள்ளையை நீ வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறதுக்கு, அந்த மாடு பொறாமைப்பட்டு உன்னைக் குத்தித் தூக்கப் போகுது ராசா! சூதானமா இருந்துக்கோ!” எனக் காத்தவராயன் சொல்ல,
“இவளைக் கரெக்ட் பண்ணுறேனோ இல்லையோ, முதலில் இந்தக் கருப்பனை கரெக்ட் பண்ணணும். கண்ணு சிமிட்டுற நேரத்துக்குள்ளே உசிரு பயத்தைக் காட்டிப்புட்டான்.!” என பதில் சொன்னான் வீரபத்ரன்.
“மயிலு! கருப்பனை கட்டிப் போட்டுட்டு இங்கிட்டு வா ராசாத்தி!” என்ற போஸ்பாண்டியின் குரலில் வேகமாய் அண்ணனை நோக்கி ஓடி வந்தாள் மேகவர்ணா.
“தம்பி! வெளியில் வச்சு எதுவும் பேச வேணாம்! உள்ளார வாங்க!” என போஸ்பாண்டி வீரபத்ரனைப் பார்த்து சொல்ல, பயத்துடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் வீரபத்ரன். மனம் படபடவென அடித்துக் கொள்ள, பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் நின்றான்.
அந்தப் பெரியக் கூடத்தில், மேகவர்ணாவின் மூன்று அண்ணன்களும், வீரபத்ரனைச் சூழ்ந்து நிற்க, காத்தவராயனின் அருகே, அமைதியாய் நின்றிருந்தான் வீரபத்ரன்.
“என்ன தம்பி! மயிலு சொன்னதெல்லாம் உண்மையா?” என்ற போஸ்பாண்டியின் கேள்விக்கு,
“நம்ம தங்கச்சி சொன்னால், அது உண்மையாத்தேன் இருக்கும்! இந்தச் சின்னப் பையன் கிட்டே கேட்டு தெளிவு வேற படுத்தணுமாக்கும்?”
“நான்தேன் இவிங்க வந்த அன்னைக்கே சொன்னேன், இவிங்க முழியே சரியில்லைன்னு, நீங்கதேன் நாங்க சொல்ற எதையும் கேட்கவே இல்லை!” என, முத்துப்பாண்டியும், இராஜபாண்டியும் பதில் தந்தனர்.
“நீங்க ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க! சம்மந்தப்பட்டவிங்க கிட்டே கேட்க வேணாமா? என்னதேன் மயில் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சாலும், விசாரிக்க வேணாமா?” என்ற போஸ்பாண்டி,
“மயிலு சொன்னது உண்மையா? என்னத்துக்கு தம்பி உண்மையை மறைச்சீங்க?!” போஸ்பாண்டியின் குரலில் எறியிருந்த அழுத்தத்தில், வீராவிற்கும், காத்தவராயனுக்கும் உள்ளீக்குள் குளிரெடுத்தது.
“வகையா வந்து சிக்கிட்டியா? இப்போ நீ சொல்லித்தேன் ஆகணும். நான்தேன் அரசி மயன்னு சொல்லித்தேன் ஆகணும். நீ என்ன சொல்றன்னு நானும் பார்க்கிறேன்.!” என வீரபத்ரனின் காதுக்குள் முணுமுணுத்தான் காத்தவராயன்.
“அது வந்துங்க சார்.. நானும் வந்ததுமே சொல்லிப்புடணும்ன்னு நினைச்சேன். ஆனால் உங்களைப் பார்த்துக் கொஞ்சம் பயம். இதை எப்படி எடுத்துப்பீங்களோன்னு.. நான் யாருன்னு தெரிஞ்சால் நீங்க.. என்ன செய்வீங்களோன்னு..!” எனத் திக்கி திணறி அவன் நிறுத்த,
“இதில் எங்களைப் பார்த்து பயப்பட என்ன இருக்கு. ஒண்ணுக்குள்ளே ஒண்ணாகிட்டோம், ரெண்டு மூணு நாளாய் இங்கண தங்கி இருக்கீங்க, ஒரு வார்த்தைக்கு கூட சொல்லலையே.? கையில் வெண்ணெய் வச்சிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதையா நாங்க ஊரெல்லாம் தேடி திரிஞ்சுக்கிட்டு கிடக்கோம். ஆனாலும் நீங்க ஒத்தை வார்தைக் கூடச் சொல்லலையேன்னு சங்கடமா போச்சு தம்பி!” எனச் சொன்னார் போஸ்பாண்டி.
“அடேய்! வீரபத்ரா நீ மச்சக்காரன் தான்டா! இல்லைன்னா உன் மச்சான்காரனுங்களே கூப்பிட்டு வச்சு பொண்ணு தர்ரோம்ன்னு சொல்வாய்ங்களா?”
“உளறாத காக்காவிரட்டி! அவிங்க எங்க பொண்ணு தாரோம்ன்னு சொன்னாய்ங்க? நானே ஒண்ணும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துட்டு நிற்கிறாய்ங்களே.. என்ன பண்ண போறாய்ங்களோன்னு நடுங்கிக்கிட்டு நிற்கிறேன்! நீ வேற லூசுத்தனமா உளறிக்கிட்டு கிடக்காதே!”
“அடேய் அறிவு கெட்டவனே.. என்னதான் நீ அரசி மயனா இருந்தாலும், உங்க அப்பன் கதிர்வேலுவுக்கும் மயன்தான்னு அடிக்கொருதரம் நிரூபிச்சுட்டே இருக்கே! அவிங்கதேன் சொல்றாய்ங்களே, ஊரு முழுசும் மாப்பிள்ளை தேடி திரிஞ்சுருப்பாய்ங்க போல! அதைத்தேன் அந்த ஆளு சொன்னாரு. பேசாமல் எனக்கு சம்மதம்ன்னு சொல்லிப்புடு! கல்யாணத்தை முடிச்சி நம்ம வீட்டுக்கே கூட்டிப் போயிருவோம்.!” என வீரபத்ரனை அவசரப்படுத்தினான் காத்தவராயன்.
“உன் வாய்க்கு வந்ததெல்லாம் வக்கனையா பேசிப்புட்டு, என்னைய எதிலாவது இழுத்து விட்டுப்புடாதே காக்காவிரட்டி! இந்த மயிலம்மா என்னத்தை சொல்லி வச்சாள்ன்னு தெரியலை.. இவிங்க தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என்னத்தை பேசுறாய்ங்கன்னு சுத்தமா புரியலை.!” எனப் புலம்பியவன்,
“ஆமாங்க! உங்க தங்கச்சி சொன்னது உண்மைதேன். நான்..!” என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற முடிவுடன், அவன் உண்மையைச் சொல்ல வர,
“அதேன் தெரியுமே! எங்க தங்கச்சி சொன்னுச்சே!” என முத்துப்பாண்டி சொல்ல,
“ஆமா! நீங்க சொல்லாமலே நீங்க யாருன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்!” என இராஜபாண்டி முடித்தான்.
“அப்படி என்ன தான்டா தெரியும் உங்களுக்கு? நீங்களும் சொல்ல மாட்டேங்குறீங்க? என்னையும் சொல்ல விட மாட்டேங்குறீங்க! கொலையா கொல்லுறாய்ங்களே சாமி..!” தனக்குள் வீரபத்ரன் புலம்பிக் கொண்டிருக்க,
“நான்தேன் சொன்னேன்ல்ல அண்ணே! சார் பெரிய ஃபோட்டோகிராஃபர். பறக்கற கேமிரா எல்லாம் வச்சிருக்காரு! இன்னைக்கு பள்ளிக்கூடத்துப் புள்ளைங்க அம்புட்டும், இவர் கேமிரா பின்னடித்தேன் சுத்திச்சுங்க! இம்புட்டு பெரிய ஃபோட்டோகிராஃபரை வச்சிக்கிட்டு நாம என்னத்துக்கு டவுனுக்கு போய் அலையணும்?” என மேகவர்ணா சொல்ல, அதிர்ந்து மேகவர்ணாவை நிமிர்ந்து பார்த்தான் வீரபத்ரன்.
“அடியே என் மாமன் மவளே.. இதுக்குத்தேன் இம்புட்டு பில்ட்-அப்? கொஞ்ச நேரத்தில் மூச்சே நின்னு போயிருச்சு. அண்ணனுங்களும் தங்கச்சியும் நல்லா வந்து சேர்ந்திருக்கீங்கடா! நொடிக்கு நொடி, நிமிஷத்துக்கு நிமிஷம் பதற வைக்கிறாய்ங்க!” என தனக்குள் புலம்பியபடியே மேகவர்ணாவை முறைத்தான் வீரபத்ரன்.
“உத்து உத்து பார்த்து கண்ணு நொள்ளையா போயிற போகுது!” அவனுக்குக் கேட்கும்படி சத்தமாகவே முணுமுணுத்தாள் மேகவர்ணா.
“தம்பி! உங்களை எதுக்குக் கூப்பிட்டேன்னா, நம்ம பக்கத்து வீதியில், ஒரு விஷேஷம்! திடீர்ன்னு ஃபோட்டோ பிடிக்கிற பய வரலைன்னு கையை விரிச்சுப்புட்டான். இரவைக்கு ஃபோட்டோ எடுக்க ஆளு வேணும். இதுக்கு மேல டவுனுக்கு போய் ஆளைப் பிடிக்கிறதெல்லாம், பாற்கடலைக் கடைஞ்சு வெண்ணெய் எடுக்கிற கதைதேன். நல்ல வேளையா, மயிலுதேன் நீங்க ஃபோட்டோ பிடிப்பீங்கன்னு சொன்னுச்சு. கொஞ்சம் பிடிச்சு கொடுத்துருங்க தம்பி! காசு முன்னே பின்னே இருந்தாலும் பார்த்துக்கிடலாம்! பொழுது சாய்ஞ்சதும் சொல்லி விடறேன். வந்துருங்க தம்பி!” என போஸ்பாண்டி கேட்க வீரபத்ரனால் மறுக்கவே முடியவில்லை. சம்மதமாய் தலையை உருட்டி வைக்க,
“அப்பறம் என்ன தம்பியே சரின்னு சொல்லிப்புடுச்சு! அம்மாடி மயிலு, ரெண்டு பேருக்கும் காப்பியைப் போட்டுக் குடு. நாங்க சோலியைப் பார்க்கக் கிளம்புறோம். ஏலக்காய் லோடு வந்து இறங்கிருச்சுன்னு மாரி ஃபோன் பண்ணினான். இன்னைக்கு கரும்பு வெட்டுறதுக்கு வேற ஆளு வாராங்க! வெரசா கிளம்புங்க போவோம்!” என அனைவரையும் அழைத்துக் கொண்டு போஸ்பாண்டி வெளியேறிவிட, அந்தக் கூடத்தில், மேகவர்ணா, காத்தவராயன், வீரபத்ரனைத் தவிர யாருமில்லை.
“எம்மா தங்கச்சி! உங்க பஞ்சாயத்தை அப்பறமா பேசிக்கிடுங்க! பசி குலையை அக்குது. இவன் போடுற பாஸ்தாவும், ரொட்டியும் எந்த மூலைக்கு? இவனை நம்பி இங்கே வந்ததில் இருந்தே நாக்குக்கு ருசியா சாப்பிடவே முடியலை. தண்ணியும் கஞ்சியும் இருந்தாலும் பராவாயில்லை கொண்டாந்து ஊத்து தங்கச்சி!” எனச் சொன்ன காத்தவராயன், தரையில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டான்.
“ஏய் காக்காவிரட்டி என்ன செய்ற?”
“எப்பா ராசா! உங்கக் குடும்பப் பஞ்சாயத்தை வேற எங்கேயாவது போய் வச்சிக்கோங்க டா! என்னைய சாப்பிட விடுங்கடா!”
“என்னைத் தங்கச்சின்னு கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக உங்களுக்கு மட்டுந்தேன் கொண்டு வருவேன். வீராப்பா வீரபத்ரன்னு பேரு வச்சவிங்களுக்கெல்லாம் எதுவும் கிடையாது.!” வேண்டுமென்றே அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தவள், விறுவிறுவென அடுக்களையை நோக்கி நகர, அவள் பின்னாலேயே சென்றான் வீரபத்ரன்.
அடுக்களைக்குள் அவள் நுழையப் போகும் முன் அவள் கரம் பிடித்து இழுத்து, சுவற்றோடு சாய்த்தவன்,
“என்னடி வர வர வாய் கூடிக்கிட்டே போகுது. நானும் பார்த்துட்டே இருக்கிறேன், ரொம்பத்தேன் திமிரு பண்ணிக்கிட்டு திரியுற? உன்னோட அந்தக் கருப்பனை வச்சு முட்ட வைக்கிறே? உன் அண்ணேகிட்டே மாட்டி விடுவேன்னு சீனைப் போடுற? கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லை.?” அவள் இருபுறமும் கரத்தால் அணைக்கட்டியபடி, நெருக்கமாய் நின்றபடியே கேட்டான் வீரபத்ரன்.
“ம்க்கும்! ரொம்பத்தேன் ஆசை, மட்டு மரியாதையோட பேசுறதுக்கு நீங்க எனக்கு மாமனா? மச்சானா? எனக்கு சம்மந்தப்படாத மூணாவது மனுஷனுக்கு இம்புட்டு மரியாதைக் கொடுக்குறதே பெருசுதேன்.!” துளி பயமில்லாமல் அவள் பேசிய தோரணையில் இரசனையாய் அவளைப் பார்த்தான் அவன்.
“இந்த ஜென்மத்தில் உனக்கு மாமன், மச்சான், புருஷன் எல்லாமே நான்தேன்!” அவள் முகத்தில் அவன் மூச்சுக்காற்று பட்டுத் தெறிக்க அவன் பேசிய போதிலும், அவளிடம் துளி மாற்றமில்லை.
“ஆமா! ஆமா! சொல்லிக்கிட்டாய்ங்க சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு!” சாதாரணமாய் அவள் சொல்ல,
“உனக்கு பயமே வராதா டி?” எனக் கேட்டான் அவன்.
“நான் என்னத்துக்கு பயப்படணும்? மதுரையாளும் மீனாட்சி வம்சம்! பயந்தா வேலைக்கு ஆகுமா? கைலாசத்து மேலேயே படையெடுத்துப் போன, மீனாட்சி வழி வந்து பொறந்தவ, எமனையே வந்து பாருன்னு சொல்லுவோம்ல்ல? உன்னைய மாதிரி புள்ளைப் பூச்சியைப் பார்த்தா பயப்படுவோம். என்னை பயமுறுத்த பெட்டரா வேற எதாச்சும் ட்ரை பண்ணு!”
“நானும் மதுரைக்காரன் தான்டி!”
“யாத்தே! படத்தில் வீராப்பா சொன்ன வசனத்தை இம்புட்டு காமெடியாய் நான் எங்கேயும் கேட்டதில்லை!” எனச் சொன்னபடியே அவள் கலகலத்து சிரிக்க,
“சும்மா சிரிச்சு சிரிச்சு என்னைக் கடுப்பேத்தாதே மயிலம்மா! அப்பறம் ஆவேசப்பட்டு நான் என்னத்தையாவது செஞ்சுற போறேன்.!” என மிரட்டிப் பார்த்தான் வீரபத்ரன்.
“என்ன செய்வ? நீ ஆவேசப்பட்டு என்ன செய்றன்னு நான் பார்க்கணும்.! உன்னால் என்னைய எதுவுமே செய்ய முடியாது டென்ருப்பீஸு! ஏன்னா நீ ரொம்ப நல்லப் பையன்.” அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து அவன் காதுக்குள் கதை சொன்னாள் மேகவர்ணா.
“டென்ருப்பீஸா? இதை யாரு உனக்கு சொன்னது?” என அவன் கேட்க,
“அதுக்கு பதில் நீயே கண்டுபிடி!” எனச் சொன்னவள், அவனைத் தள்ளிவிட்டு விலகி நடக்க, அவள் கரம் பிடித்து மீண்டும் இழுத்து நிறுத்தினான் வீரபத்ரன். மாமன் மகள் என்ற உரிமை உணர்வு அவளை உரிமையோடு தொட்டு இழுத்து நிறுத்தியது.
“சொல்லிட்டுப் போ மயிலம்மா!”
“சொல்ல முடியாது!”
“ரொம்ப திமிரு பண்ணாதே டி!”
“அப்படித்தேன் பண்ணுவேன்! என்ன எங்க அண்ணேங்க இல்லைன்னதும், தொட்டுப் பேசறதுக்கு தைரியம் வந்திருச்சாக்கும்.?! சத்தம் போட்டு ஊரைக் கூட்டினேன்னா உன் கதி என்ன ஆகும்ன்னு தெரியும்ல்ல?!”
“நான் தைரியமானவன்தேன்! உன் மீசைக்கார நொண்ணனுங்களைப் பார்த்து எனக்கு ஒண்ணும் பயமில்லை. அதெல்லாம் சும்மா நடிப்பு! என் ஃபோகஸ் மட்டுமில்லை. என் கேமிராவோட ஃபோகஸும் உன் மேல மட்டுந்தேன் மயலம்மா! அப்படி என்னைய என்ன பண்ணி தொலைச்சடி? வந்து ரெண்டு நாள் ஆகலை.. உசிருக்குள்ளே புகுந்து சடுகுடு விளையாடுற டி!”
“ஐயய்யோ போஸண்ணே!” என அவள் அவனுக்குப் பின்னால் பார்க்க, பதறி அவளை விட்டு விலகி நின்றவன்,
“தண்ணீர் குடிக்கலாம்ன்னு வந்தேன் சார்!” எனப் பதற்றத்துடன் சொல்ல,
“இந்தா தெரிஞ்சுருச்சுல்ல வீரபத்ரனோட வீர சாகசம்!” என அடக்கமாட்டாமல் சிரித்து வைத்தாள் அவள். அதன் பிறகே அவள் விளையாட்டுக்கு சொல்லியிருக்கிறாள் என்பது புரிய, அவளை முறைத்தபடியே,
“அப்போ நான் உன் அத்தை மயன்னு உனக்கு தெரியுமா?” எனக் கேட்டான் வீரபத்ரன்.
“நீ வந்த மறுநாளே தெரியும்! உன்கிட்டே ஒரண்டை இழுத்ததெல்லாம் அத்தை மயன்ங்கிற உரிமையில்தேன். அது கூடவா உனக்குத் தெரியலை?”
“நான் எதுவுமே இங்கே யார்கிட்டேயும் சொல்லலை, உனக்கு மட்டும் எப்படி தெரியும்? உனக்கு யாரு சொன்னது?”
“உனக்கு யாரு டென்ருப்பீஸுன்னு பேரு வச்சாங்களோ, அவங்கக் கிட்டே போய் கேளு! அப்பறம், மிஸ்டர்.வீரமில்லாத வீரபத்ரன், நாளைக்கு உன்னைய பெத்தவங்க இங்கே வரப் போறாய்ங்கன்னும் தெரியும்!” என சர்வசாதாரணமாய் சொன்னாள் மேகவர்ணா.
“ஆத்தி! என்னத்துக்கு வராய்ங்க? மிஸ்டர். கதிர்வேலுவுக்கு நான் மட்டும் இங்கண இருக்கிறது தெரிஞ்சது, என்னைய உசிரோட உப்புக்கண்டம் போட்டுருவாய்ங்களே!” என அவன் புலம்பியபடியே நின்றிருக்க, தன்னை இழுத்து நிறுத்தியிருந்த வீரபத்ரனை தள்ளிவிட்டபடியே ஓடிப் போனாள் மேகவர்ணா.
“ஏய் மயிலம்மா! நான் உனக்கு அய்த்த மயன்னு தெரிஞ்சும், உன் மீசைக்கார அண்ணேங்கக் கிட்டே ஏன் சொல்லலை?!”
“அதையும் நீயே கண்டு பிடி! எல்லாக் கேள்விக்கும் நாங்களே பதிலை எழுதணுமாக்கும்?!” என அவள் திரும்பாமலே சொல்லிவிட்டுப் போக, புன்னகையுடன் நின்றிருந்தான் வீரபத்ரன்.
“நீ ஜித்துதாண்டி..
நான் வெத்து தாண்டி..
இருந்துட்டு போகட்டுமடி..
நீ ஜில்லுதாண்டி..
நான் ஜக்குதாண்டி..
பரவாயில்லை கவலை இல்ல..
திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
என் மனச குழப்புற ஹார்ட் உழப்புற…
காதல் வேணாமடி…
திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…!”
*****
117.75 ஏக்கரில் 47 அலகுகளுடனும் (units), 297 அறைகளுடனும், 1332 கைதிகளை அடைத்து வைக்கும் திறன் கொண்டதாக எண்கோண வடிவில் அமைந்திருந்த பாளையங்கோட்டையின் மத்திய சிறைச்சாலை. கொடுங்குற்றம் புரிந்தக் கைதிகள், மற்றும் அரசியல் கைதிகளை அடைத்து வைக்கப்படும் அதீத பாதுகாப்பான சிறைச்சாலை. ஆகவே, இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது.
சிறை வளாகத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களும், அதன் மேல் மின்னூட்டப்பட்ட இரும்புக்கம்பி வளையங்களும், 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரங்களும் உள்ளன. வளாகச்சுவரைச் சுற்றிலும் 10அடிக்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட சிறையின் அதீத பாதுகாப்பான அறையில் அடைக்கப்பட்டிருந்தான் அவன். மிகவும் ஆபத்தான குற்றவாளி என்ற காரணத்தினால், தனியாய் சிறையில் அடைக்கப் பட்டிருந்தான். அந்த அறையில், மங்கலான மஞ்சள் நிற ஒளியை உமிழ்ந்துக் கொண்டிருந்தது அந்த மின்விளக்கு.
மின் விளக்கின் மங்கலான ஒளியில், தனக்கான படுக்கையில் அமர்ந்திருந்தவனின் உருவம் நிழலுருவமாய், சுவற்றில் விழுந்திருந்தது.
மொட்டைத் தலையும், மேலேறி அடர்ந்த புருவமும், திண்ணிய உடல்வாகுமாய், அவன் அமர்ந்திருந்த தோற்றம், நிஜமாகவே ஒரு இராட்சசனை போலவே இருந்தது. அவனின் தோற்றம் மட்டுமல்ல, அவனும் நிஜமாகவே ஒரு இராட்சசன் தான். சில மாதங்களில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கைதி அவன்.
ஆனால், இப்போது அவனுக்கு, தனக்கு கிடைத்த தண்டனையைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. தான் எட்டிப் பிடிக்க முயன்று, தட்டிப் போன அந்த இலக்கைப் பற்றி மட்டுமே அவன் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.
“ஐ மிஸ்ட் யூ டார்லிங்! ஐ மிஸ்ட் யூ! ஆனால், இந்த சிறைக் கம்பிகளோ, இந்த சிறையின் பத்தடி சுவரோ, எதுவுமே உன்னைப் பார்க்க தடையாய் இருக்கப் போறதில்லை. இந்த எல்லா தடைகளையும் தாண்டி உனக்காக நான் வருவேன்.!”
என்றவனின் கண்களில் தெரிந்தது வன்மமோ, பழி வாங்கும் உணர்வோ இல்லை. இரசனை! ஒரு சிற்பத்தை இரசித்துச் செதுக்கும் சிற்பியின் இரசனை. ஆனால் இந்த இராட்சசனின் இரசனை உயிரில்லா சிலைகள் மீதானது அல்ல.. உயிருள்ள பெண்ணின் மீதானது.
வில்லேற்றிய நாண் போல் விரைத்து, அந்த ஒற்றைப் படுக்கையை சிறிதாக்கி, ஆஜானுபாகுவான தோற்றத்தில் அமர்ந்திருந்தவனின், சாம்பல் நிற விழிகள் மூடியிருக்க, அவன் கண்களுக்குள் ஓவியப்பாவையாய் விரிந்த பெண்ணின் தோற்றத்தை கண்கள் மூடியபடியே இரசித்து சிலாகித்துக் கொண்டிருந்தவனின், உதடுகள் பாம்பின் சீறலைப் போல் கிசுகிசுப்பாய் அந்தப் பெயரை உச்சரித்தது.
“வர்ணா..!”
தித்திக்கும் 🔥

