Loading

திமிர்-6

 

“யாரைக் கேட்டு அவனை அனுப்புனீக? கையில் கேமராவைத் தூக்கிக்கிட்டு திரிஞ்சான். இப்போ ஊரு ஊரா அலையப் போறானாக்கும்.? ஏம்மா, நீதேன் இந்த வீட்டுக்கு பெரிய மனுஷி, நீ கூட உம் பேரனுக்கு புத்தி சொல்ல மாட்டியாக்கும்?!” என வீரபத்ரனின் தந்தையான கதிர்வேல் வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க,

 

“அவனும் என்னமாவது செஞ்சு சம்பாதிச்சுட்டு போவட்டும். அவன் போக்குக்கு அவனை விட்டுரு. அவன் போற வழி சரியில்லைன்னா அவனா திரும்பி வருவான். அப்போ நீ சொல்றதைக் கேட்டுக்கப் போறான்.!” என பதில் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டார் அங்கயற்கண்ணி. இவர்களுடன் மல்லுக்கு நிற்பதில் அவருக்கு துளியும் விருப்பமில்லை.

 

“ம்க்கும்! துரை அப்படியே நான் சொல்றதைக் கேட்டுறப் போறாராக்கும்? எல்லாம் இவ கொடுக்கிற இடம்.! என்னமோ அதிசயமா பெத்த மயன்னு அவன் சொல்றதுக்கெல்லாம் மண்டையாட்டிட்டு இருக்கா! அவன் எதாவது ஏழரையை இழுத்துட்டு வரட்டும் அப்பறம் இருக்கு உனக்கு!” என்ற கதிர்வேலின் கண்டிப்பான குரலில்..

 

“என்ன அரசி, கொழுந்தனாரு இப்படிக் கோபப்படுறாரு! எங்கே போயிருக்கான்னு தெரியும் முன்னமே இந்தக் கூத்து.. தெரிஞ்சுச்சுன்னு வையி.. அம்புட்டுதேன்.!” என அரசியின் காதுக்குள் இரகசியம் பேசினார் பூங்கொடி.

 

“அடப் போங்கக்கா! இவருக்குப் பயந்து பம்மிக்கிட்டு திரிஞ்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சு!” என பதில் சொன்ன அரசி,

 

“அதிசயமா பெத்த மயன்தேன். பெத்தது நான் தானே? நான் பெத்த ரெண்டும் எனக்கு அதிசயந்தேன். இப்போ என்ன செய்யணும்ங்கிறீக? அவன் என்ன செஞ்சாலும் உங்களுக்கு குத்தமாத்தேன் படும். வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம்ங்கிற மாதிரி, என் புள்ளைங்க என்ன செஞ்சாலும் உங்களுக்கு குத்தம்தேன்.!” எனக் கணவனிடம் முடித்தார்.

 

“என்னடி வாய் நீளுது? உட்கார்ந்து தின்னு உடம்பில் கொழுப்பு கூடிப்போச்சோ?”

 

“நான் உங்க வீட்டில் ஓசியில் சோறு திங்கலை சாமி! நான் செய்ற வேலைக்கு நான் சாப்பிடுறேன். ஆம்பிள்ளை சோறு தின்னால் கொழுப்புக் கூடாது. பொம்பளை தின்னால் மட்டும் கூடிப் போயிருது. நல்ல நியாயம் உங்களோடது. இந்த வீட்டில் இருக்கிற அம்புட்டு வேலையையும் செஞ்சு முடிச்சுப்புட்டு, சமையல் வீடியோ, பாட்டு பாடுற வீடியோவெல்லாம் போட்டு நாங்களும் சம்பாதிக்கத்தேன் செய்றோம். நாங்களும் சும்மா ஒண்ணும் இல்லை!” கொஞ்சமாய் அரசியின் குரல் உயர்ந்தது.

 

“ம்க்கும்! நீங்க சம்பாதிச்சுதேன் இந்த வீட்டில் சோறு வேகுதாக்கும்? பத்து பைசா சம்பாதிச்சதும் திமிரு உனக்கு கூடிப் போச்சுடி!”

 

“யாரு சம்பாதிச்சாலும், சோறு அதுவா வேகாது. அடுப்பில் பானையை வச்சு நாங்கதேன் வேக வைக்கணும். இம்புட்டு வருஷத்தில், ஒரு சுடுதண்ணீ வைக்க உங்களுக்குத் தெரியுமா? சம்பாதிச்சு போட்டுட்டா எல்லாம் முடிஞ்சுருமா? வீட்டில் என்ன நடக்குது? ஏது நடக்குதுன்னே தெரியாது.. எதுவுமே தெரியாமல் பேச வந்துடுறது.!”

 

“இந்தாரு டி! நீ ரொம்ப ஓவராத்தேன் பேசுறே! கை நீட்டிப்புடக் கூடாதுன்னு இல்லாத பொறுமையை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்கேன். வாயை மூடிட்டு போயிரு!”

 

“நீட்டுங்க! கையை நீட்டித்தேன் பாருங்களேன்! அதுக்குதானே காத்துட்டு இருக்கேன். டொமஸ்ட்டிக் வைலன்ஸ்ன்னு கேஸைப் போட்டு உள்ளே தள்ளிப்புட மாட்டேன். இந்தாருங்க, என்னைய பழைய அரசியா நினைச்சுட்டே இருக்காதீங்க! முன்னே மாதிரி வாயை மூடி அழுதுக்கிட்டு அறைக்குள்ளே அடைஞ்சு கிடைப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க! எனக்கு என் புள்ளைங்கதேன் முக்கியம். அவிங்க ரெண்டு பேரும், அவிங்களுக்குப் பிடிச்சதைத்தேன் செய்வாய்ங்க! முன்னாடி எப்படி என் மயன் அழகருக்காக நான் பேசினேனோ? அதே மாதிரி, எம் மயன் வீரபத்ரனுக்காக நான் நிற்பேன். உங்களால் என்ன முடியுமோ பார்த்துக்கோங்க!”

 

“ஆமாடி! மயனுக்காக பேசுறேன், மயனுக்காக பேசுறேன்னு எங்க அப்பனை எதிர்த்துப் பேசித்தேன், அந்தாளை ஒரேடியா இந்த உலகத்தை விட்டே அனுப்பிட்ட. இப்போ உன் இளைய மயனுக்காக பேசி யாரோட உசிரை எடுக்கப் போறியோ?!” இத்தனை நாளாய் மனதிற்குள் இருந்த போதும், இதுவரை வார்த்தையால் சொல்லாததை, இப்போது அரசியின் மனதைக் குத்த வேண்டும் என்பதற்காய், தன் மனைவிக்கு வலிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னார் கதிர்வேல்.

 

“இத்தனை நாள் சொல்லலையேன்னு நினைச்சேன். இந்தா சொல்லிப்புட்டீகளே..! நான் என்ன எம தர்மனுக்கு அஸிஸ்டென்ட்டாகவா இருக்கேன்.? உங்க அப்பன் உசிரை பாசக் கயிறை வீசி இழுத்துட்டு போறதுக்கு. விதி வந்துச்சு உங்கப்பன் போய்ச் சேந்தாரு! அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நீங்க சொன்னதும், ஐயோ! நாம எதிர்த்துப் பேசின அதிர்ச்சியில் தான் மாமாவுக்கு இப்படி ஆகிடுச்சோன்னு, நான் குத்தவுணர்ச்சியோட உங்க காலடியில் நான் கிடப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, நீங்க இந்த அரசியை சரியாப் புரிஞ்சிக்கலைன்னு அர்த்தம்.!” எனச் சொல்லிவிட்டு, கணவனைக் கண்டுக் கொள்ளாமல், அரசி அடுக்களையை நோக்கி நகர,

 

“ஏன்டா! நம்ம வீட்டுப் பொம்பளைங்கதேன் அல்லி ராஜ்ஜியம் நடத்துறாங்கன்னு தெரியுமே! பிறகு ஏன்டா வலியப் போய் வாயைக் கொடுக்கிறே? நம்ம அப்பா போன பிறகு, நம்ம அம்மா மருமகள்களுக்கு ஓவரா இடம் குடுத்துப்புடுச்சு. சும்மாவே ஆடுவாங்க! இப்போ சலங்கைக் கட்டிக்கிட்டு ஆடுவாங்க!” என அணணனாய் தன் தம்பியிடம் சரவணன் சொல்லிக் கொண்டிருக்க, மகன்கள் கிளம்பும் அரவம் கேட்டு அறையின் கதவை அவசரமாய் திறந்து வெளியே வந்தார் அங்கயற்கண்ணி.

 

“சரவணா! கதிரு! இங்கேதேன் இருக்கீகளா? புறப்பட்டுடீகளோன்னு நினைச்சேன். உங்கக் கிட்டேதேன் நேத்தே பேசணும்ன்னு நினைச்சேன். சோலி அதிகமாய்யா? வெள்ளனவே கிளம்புறீக?”

 

“எம்புட்டு சோலி இருந்தால் என்னம்மா? நாங்க எம்புட்டு சாம்பாதிச்சாலும், உம் மருமவளுங்கதேன் உனக்கு உசத்தி! என்ன சொல்லணுமோ, சொல்லு!” சலிப்பாய் சொன்னபடி, தன் தாயின் முன்னிருந்த மெத்திருக்கையில், தமயனுடன் அமர்ந்தார் கதிர்வேல்.

 

“ஒரு நாளைக்கு ஒருநேரமாச்சும், அவளுங்களை வையலைன்னா உங்களுக்குத்தேன் பொழுது அடையாதே!” என நக்கலாய் மகன்களைப் பார்த்துச் சொன்னவர், கதிரும், சரவணனும் முறைப்பதைக் கண்டுக் கொள்ளாமலே தொடர்ந்தார்.

 

“நம்ம கருவிழிக்கு நாள் நெருங்கிடுச்சு. அவளுக்கு வளைகாப்பு செய்யணுமே கதிரு! தலைச்சன் பிள்ளை வேற? சரவணா உம் மருமவ மதுவுக்கும் தலைச்சன் பிள்ளைக்கு வளைகாப்பு பெருசா செய்யலையே? அவதேன் மெட்ராஸில் இருந்துக்கிட்டு, பிள்ளை பெறுவதற்கு ஒருவாரம் முன்னே தானே வந்தாள்?”

 

“அதுக்கு நான் என்னம்மா செய்யட்டும்? அவங்க ரெண்டு பேரும், வெளியூர் போறதில் எங்களுக்குப் பிடித்தம் இல்லைன்னு தெரிஞ்சும், நீங்க தானே அவங்களை அனுப்பி வச்சீக?” கோபமாய்க் கேள்விக் கேட்டார் அங்கயற்கண்ணியின் மூத்த மகன் சரவணன்.

 

“ஏன்டா, நான் என்ன சொல்றேன்? நீ என்ன புரிஞ்சுக்கறே.? மதுவுக்கும் பெருசா எதுவும் பண்ணலை! நம்ம கருவிழிக்காவது பெருசா பண்ணணும்ன்னு சொல்ல வந்தால், எனக்குதேன் எல்லாம் தெரியும்ன்னு பேசுங்கடா! ஓயாமல் ஒரண்டை இழுத்துக்கிட்டே திரியணும்ன்னு அண்ணனும், தம்பியும் அலைவீகளோ?”

 

 

“இப்போ என்னம்மா? வளைகாப்பு பண்ணனும்ன்னா பண்ணுங்க! என்னமோ எங்கக் கிட்டே கேட்டத்தேன் எல்லாத்தையும் செய்ற மாதிரி, இதுக்கு மட்டும் ஏன் எங்கக்கிட்டே கேட்குறீக?” எனச் சொல்லிவிட்டு எழுந்து நின்றிருந்தார் கதிர்வேல்.

 

 

“ஏன்டா! பொறுமைன்னு ஒண்ணு உங்களுக்கெல்லாம் இல்லவே இல்லையா? முழுசா சொல்லி முடிக்கும் முன்னே என்னடா அவசரம் உங்களுக்கு? முதலில் உட்காருடா!” மகனை அதட்டினார் அங்கயற்கண்ணி.

 

 

“நாங்க ஒண்ணும், வெயில் படாமல், நிழலில் உட்கார்ந்துக்கிட்டு வீடியோ போட்டு சம்பாதிக்கலை! வெளியே போய் சோலியைப் பார்த்தால்தேன், அரிசி பருப்பெல்லாம் வீட்டுக்குள்ளே வரும்! உள்ளே உட்கார்ந்து உலையை வச்சு சமைக்க முடியும்.!” எரிச்சலுடன் கதிர்வேல் சொல்ல,

 

 

“எந்நேரமும், உங்களையே மேய்ச்சுக்கிட்டே திரியணுமா? அவளுங்களுக்கு பிடிச்சதை செஞ்சுட்டுப் போவட்டும்ன்னு விடுங்களேன் டா! இம்புட்டு பேசுறீங்களே, இம்புட்டு வருஷமா உங்களை எருமைமாடு மாதிரி வளர்த்து விட்டிருக்கேனே.. எனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காதுன்னு உங்க ரெண்டு பேரில் யாருக்காவது தெரியுமா? அதை விடுங்கடா, இம்புட்டு வருஷமா, ஒண்ணு மண்ணா குடுட்பம் நடத்திருக்கீங்களே, அரசிக்கு இதுதேன் பிடிக்கும், பூங்கொடிக்கு இது பிடிக்காதுன்னு நீங்க கட்டினவளுங்க விருப்பத்தைப் பற்றியாவது தெரியுமா? இதுவே என் பேரனுங்களைப் பாருங்க, நெடுமாறன் மதுவைப் புரிஞ்சு நடந்துக்கறான். கருவிழிக்கு என்ன பிடிக்கும்ன்னு அழகரைத் தவிர யாருக்கும் தெரியாது. இம்புட்டு ஏன், கருவிழியைப் பெத்த எம் மவ மீனாட்சிக்கு கூடத் தெரியாது. அடுத்த அடுத்த தலைமுறைகள் வர வர சில மாற்றங்கள் வரத்தேன் செய்யும்! அதை ஏத்துக்கப் பழகிக்கணும் டா! வீட்டுக்குள்ளே நடக்கிறே எதையும் தெரிஞ்சுக்காமல், மீசையை முறுக்கிவிட்டுப்புட்டு நாங்க சம்பாதிக்கிறோம்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சால் மட்டும் பத்தாது.!” என நிறுத்தி எதிரில் அமர்ந்திருந்த மகன்களைப் பார்த்தார் அங்கயற்கண்ணி.

 

“எம்மா போதும்! உங்க மருமவளுங்க புராணத்தையும், பேரனுங்க புராணத்தையும் கேட்டு கேட்டு, புளிச்சுப் போச்சு? என்னமோ சொல்லனும்ன்னு சொன்னியே அதைச் சொல்லு! பார்க்க வேண்டிய சோலி நிறைய கிடக்கு.!” அவசரப் படுத்தினார் சரவணன்.

 

“என்னைய எங்கேடா சொல்ல விடுறீங்க? நான் வாயைத் திறக்கும் முன்னே இம்புட்டுதேன் விஷயம்ன்னு நீங்களே பேசி முடிச்சுப்புடுறீங்க!”

 

“எம்மா! நாங்க எதுவும் பேசலை! நீ பேசு! டேய் கதிரு! அம்மா பேசி முடிக்கிற வரைக்கும் வாயைத் திறக்காதே டா!” எனச் சொல்லிவிட்டு கைகட்டி நிமிர்ந்து அமர்ந்தார் சரவணன்.

 

“அரசி! அரசி! இங்கண கொஞ்சம் வந்துட்டு போ!” என அரசியை அங்கயற்கண்ணி அழைக்கவும்,

 

“இப்போ என்னத்துக்கும்மா அவளை அழைக்கிறே? இருக்கிற பஞ்சாயத்து பத்தாதுன்னு அவளைக் கூப்பிட்டு எங்களுக்குள்ளே ஒரண்டை இழுத்துவிடப் போறியாக்கும்?” மின்னல் வேகத்தில் கேட்டார் கதிர்வேல்.

 

“அடேய்! அவசரத்துக்குப் பொறந்தவனே, கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இருடா!” சரவணனே தம்பியை அடக்கினார்.

 

“என்னங்கத்தே! கூப்பிட்டீங்களா?”

 

“ஆமா அரசி! நம்ம கருவிழி வளைகாப்பை பெருசா நடத்திப்புடணும்ன்னு மனசுக்குள்ளே ஒரே ரோசனையா கெடக்கு. உங்க மாமன் முடியாமல் கிடந்தாருன்னு, நெடுமாறன் கல்யாணமும் சரி, அழகரு கல்யாணமும் சரி, சிறப்பா செய்யலை! அதனால், கருவிழி வளைகாப்பை பெருசா ஊரைக் கூட்டி நடத்திப்புடணும்!”

 

“செஞ்சுப்புடலாம்! அதுக்கு ஒண்ணுமில்லை! ஆனால் அவளே, நாலு வருஷஞ்செண்டு புள்ளை உண்டாகி இருக்கா. ஊரைக் கூட்டி செஞ்சு வச்சு, கண்ணு பட்டுடுச்சுன்னா? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாகளே?” தயக்கமாய் நிறுத்தினார் அரசி.

 

“நம்ம என்னத்துக்கு அப்படி நினைக்கணும்? உற்றார் உறவினரோட ஆசீர்வாதம் நம்ம புள்ளைகளுக்கு வேணுமின்னு நினைப்போம்! எல்லாம் சரியா வரும்! நல்லா சிறப்பா வளைகாப்பை நடத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். வத்தலக்குண்டு ஜோசியர் கிட்டே ஃபோனை போட்டு கேட்டுப்புட்டேன். அடுத்த வாரமே நாள் நல்லா இருக்குன்னு சொன்னாரு! கருவிழிக்கும் நாள் ஒரு மாசந்தேன் மிச்சமிருக்கு. அதனால் அடுத்தவாரமே வச்சுப்புடுவோம்.!”

 

“நீங்க சொன்னால் சரிதான் அத்தே! செஞ்சுப்புடுவோம்!”

 

“செய்றதெல்லாம் செஞ்சுபுடுவோம் அரசி, அதுக்கு முன்னே சொந்தக்காரங்களைப் போய், அழைக்கணுமே? முக்கியமா உன் ஒண்ணுவிட்ட தம்பி நாச்சியப்பன் குடும்பத்தையும் அழைக்கணும்!”

 

‘ஆத்தி! அத்தை புரிஞ்சு பேசுறாகளா? புரியாமல் பேசுறாங்களான்னு தெரியலையே? அங்கண போனோம்ன்னா வீரா மாட்டிக்குவானே? இந்த மனுஷனுக்கு அவன் அங்கண இருக்கான்னு தெரியாதே?!’ என மனதிற்குள் புலம்பிய அரசி,

“அங்கண என்னத்துக்குத்தே? ஏற்கனவே அவிங்களோட பெரும் பஞ்சாயத்தா கிடக்கு! அது மட்டுமில்லாமல், என் பக்கத்து சொந்தத்துக்கெல்லாம் வரணும்ன்னு உங்க மயன் விரும்பமாட்டாக!” கணவனை சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ள முயன்றார் அரசி.

“நீயும் என்ன அரசி, விவரம் கெட்டத்தனமா பேசுறே? அவன் விரும்ப மாட்டானா? பொண்டாட்டி மட்டும் வேணும்! அவள் சொந்தக்காரய்ங்க வேணாமா? அதெல்லாம் போய் அழைச்சுதேன் தீரணும். சண்டை சச்சரவு சொந்தத்துக்குள்ளே வரும். அதுக்காக எல்லாரும் விலகியே நின்னுட்டோம்ன்னா, யாரு முயற்சி எடுத்து சேர்த்து வைக்கிறது. தராசில் இறங்கிற பக்கந்தேன் எடை அதிகம், நாம இறங்கிட்டுப் போவோம்!”

“எம்மா! இதெல்லாம் என்னால் முடியாது. இவ தொம்பியையும் அந்தாள் குடும்பத்தையும் கூப்பிடணும்ன்னா இவளைப் போகச் சொல்லு. நானெல்லாம் அந்த வீட்டு வாசலைக் கூட மிதிக்க மாட்டேன். அழகர் கல்யாணத்திற்கு முறையாய் அழைக்கப் போனதுக்கே, அந்தாளு வானத்துக்கும் பூமிக்கும் குதியா குதிச்சார்.!”

“உருத்து இருக்கவிங்களுக்கு கோபம் வரத்தான்டா செய்யும். உன் புள்ளைங்க ரெண்டும் பிறந்ததிலிருந்து இப்போ வரைக்குமே, எதாவது செய்முறை அவிங்களை செய்ய விட்டுருக்கீங்களா? உங்க அப்பன் அதற்கு மேல, ஒட்டிப் பொறந்தவீங்கதேன் உருத்தா செய்முறை செய்ய உரிமை இருக்குன்னு சொல்லிப்புட்டார். ஒட்டிப் பொறந்த சொந்தமே இல்லாதப்போ, ஒண்ணு விட்ட சொந்தம் செஞ்சால் என்ன தப்புன்னு கேட்கிறேன்?”

“ம்மா! நீ முடிஞ்சு போன விஷயத்தைத் திரும்ப ஆரம்பிச்சு வைக்கிறே! இது சரியில்லை சொல்லிட்டேன். ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் ஒட்டுக்கா போய் அவிங்க காலில் விழச் சொல்றியா?!”

“உன்னைக் காலில் விழச் சொல்லலை! அரசிக்குன்னு இருக்கிறது அவிங்க மட்டுந்தேன். அரசிக்கு அப்பன் ஆத்தாளும் இல்லை போய்ச் சேர்ந்துட்டாங்க! அவள் போய் வரவும் தாய் வீட்டுச் சொந்தமோ, தகப்பன் வீட்டுச் சொந்தமோ, ஒண்ணு இருந்துட்டு போகட்டுமே..!”

“இவளுக்கு இங்கண என்னை குறை இருக்குன்னு, அவள் அங்கே போயே தீரணும்.? அதெல்லாம் போகத் தேவையில்லை! அந்த ஆள், அதேன் அந்த நாச்சியப்பன் மூஞ்சியில் போய் முழிக்க விருப்பமும் இல்லை!”

‘இவரு மூஞ்சியை விட, என் தம்பி மூஞ்சி நல்லாத்தேன் இருக்கு.!’ மனதிற்குள் பேசிக் கொண்டார் அரசி.

அதே நேரம்,
“யாரு மூஞ்சியில் முழிக்க விருப்பமில்லை?!” எனக் கேட்டபடியே அழகரும் கருவிழியும் உள்ளே நுழைந்தனர்.

“ஹான் அதை, உங்க அம்மாக்கிட்டேயே கேளு!” என ஆரம்பத்தில் சடைத்துக் கொண்டவர்,

” உங்க அம்மாவுக்குன்னு தொம்பி குடும்பம் ஒண்ணு அம்மாப்பட்டியில் கிடக்குதே.. அங்கண போய் பழம் பாக்கு வெற்றிலை வச்சு, கருவிழி வளைகாப்புக்கு அழைக்கணுமாம்!” கோபமும் எரிச்சலுமாய் சொன்னார் கதிர்வேல்.

“என்னது அம்மாப்பட்டிக்கா?”

“அங்கண எதுக்குப்பா?” என கருவிழியும் அழகரும் அதிர்ந்து நிற்க,

“உனக்கே இம்புட்டு அதிர்ச்சியா இருக்கே அழகரு, உங்க அப்பத்தா சொன்னப்போ எனக்கு இப்படி அதிர்ச்சியாதேன் இருக்கு. உனக்குப் புரிஞ்சது கூட, என்னைப் பெத்தவகளுக்குப் புரியலை!” வேண்டுமென்றே சொன்னார் கதிர்வேல்.

“அழகரு! டென்ருப்பீஸ் மட்டும் அங்கே இருக்கான்னு தெரிஞ்சுது அம்புட்டுதேன். அழைக்கணும்ன்னு சொன்னதுக்கே இம்புட்டுக் கோபப்படுறாரு?”

“இதுக்குத்தேன்.. அந்த ஊரு வேணாமுன்னு அம்மா சொன்னுச்சு. ஆனால் இவன்தேன் காது கொடுத்துக் கேட்கவே இல்லையே? ரெண்டு குடும்பத்தையும் வச்சு சமாளிக்கட்டும்! ஆனால் நம்ம வீட்டிலிருந்து அங்கே போற நேரம் எப்போன்னு பார்த்து அவனுக்கு தகவலைச் சொல்லிப்புடுடி கரு கரு!”

“நானே ரெண்டு நாளாய் ஃபோன் போட்டு ஓய்ஞ்சு போய்ட்டேன். எங்கிட்டு சுத்திக்கிட்டு திரியறான்னு தெரியலை! ஃபோன் பண்ணினால் எடுக்கவே மாட்டேங்கிறான்.!” எனச் சலித்துக் கொண்டாள் கருவிழி.

“இந்தாரு கதிரு! நான் இன்னும் எம்புட்டு நாளைக்கு இருக்கப் போறேன்னு தெரியலை! எம் பேரன் வீரபத்ரன் கல்யாணத்திற்கு நான் சொந்தம், பந்தம்ன்னு எல்லாத்தையும் அழைக்கணும். பொசுக்குன்னு கல்யாணத்திற்கு போய் கூப்பிட்டால், சரியா இருக்காது. கருவிழி வளைகாப்புக்கு எல்லாரையும் கூப்பிட்டு, வந்து போய் இருந்தாகன்னா சண்டை சச்சரவு எல்லாம் காணாமல் போய்டும்.!”

“அதெல்லாம் அவன் கல்யாணம் முடிவு பண்ணும் போது பார்த்துக்கிடலாம் ம்மா! உம் பேரனுக்கு பொண்ணு பார்த்து பேசி முடிச்சு வச்சுட்டியா? அவனே சம்பாதிக்கத் துப்பில்லாமல் கேமிராவை தூக்கிட்டு திரியறான். அவனுக்குக் கல்யாணம் ஒண்ணுதேன் கேடு! காடு கண்ணியைப் பார்த்தோம், அப்பனுக்கு உதவியாய் இருப்போம்ன்னு கொஞ்சமும் எண்ணமில்லை! கேமிராவைத் தூக்கிட்டு திரிஞ்சால், பெரிய டைரக்டருன்னு அவனுக்கு நினைப்பு? அவனுக்குப் பொண்ணு கொடுக்க வரிசையில் வந்து நிற்கிறாய்ங்களாக்கும்? ஏற்கனவே ஒரு கல்யாணம் நின்னுப் போய் அசிங்கப்பட்டது பத்தாதா? இனிமே அசிங்கப்பட நான் தயாராய் இல்லை.!” அழுத்தம் திருத்தமாய் கதிர்வேல் சொல்ல,

“ஒருநாளும், அவனை நம்பவே மாட்டீகளா? அவன் கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருக்கிறவன்தேன். ஆனால், எல்லா சங்கதியிலும் அப்படி இருக்க மாட்டான். கல்யாணம் நின்னுப் போனதை நினைச்சு எம் மயன் எம்புட்டு வேதனைப் பட்டான்னு எனக்குதேன் தெரியும். பொழுதுக்கும் அவனையே துவைச்சுக் காயப் போடாமல் போய்ச் சோலியைப் பாருங்க!” என கணவனிடம் பதிலுக்கு பதில் பேசினார் அரசி.

“இந்தாருடி வாயை மூடிக்கிட்டு பேசாமல் போயிரு! அவன் செய்றதெல்லாம் சரிங்கிற மாதிரி பேசுற? அப்படி என்ன என்னை விட, உனக்கு அவனை அதிகமா தெரிஞ்சுடுச்சு.? பெரிய சாதனை பண்ணி சாய்ச்சுப்புட்ட மாதிரி பேசுறே?” எனக் கேட்ட கணவனைக் கோபமாய் முறைத்தார் அரசி.

“ஆமா! அவனை உங்களுக்குத் தெரியாதுதேன்.! என் அளவுக்கு என் மயங்களை உங்களுக்குத் தெரியாதுதேன். என் புள்ளைங்களை எனக்கு நல்லா தெரியும்ன்னு பெத்தவளா, நான் மார்தட்டி சொல்லிப்பேன். கல்யாணம் நின்னு போனதுதேன் உங்களுக்குத் தெரியும். அந்தப் பொண்ணை அவன் விரும்பினான்னு உங்களுக்குத் தெரியுமா?” என அரசி கணவனை திரும்பி கேள்வி கேட்க, அதிர்ந்து நின்றிருந்தார் கதிர்வேல்.

“நாம வீட்டில் பார்த்து முடிவு பண்ணின கல்யாணம்தேன்.. ஆனாலும், அந்தப் பொண்ணைக் கட்டிக்கணும்ன்னு அவன் ஆசைப்பட்டான்னு உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கிறது என் முட்டாள்தனம்தேன். இம்புட்டு வருஷமா, குடும்பம் நடத்தின என்னையவே உங்களுக்கு இன்னுமும் முழுசா தெரியலை. எம் மயனுங்க மனசை நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு நான் நினைக்கிறது பெரிய முட்டாள்தனம்தேன்.! சாகும் மட்டும் இந்த நாலு சுவத்துக்குள்ளேயே அடைஞ்சு செத்துப்போறதுதேன் என் விதின்னா அதையும் சிரிக்கிற மாதிரி நடிச்சுட்டே ஏத்துக்கறேன் விடுங்க!” விழியோரம் நீர் துளிர்க்கப் பேசிவிட்டு உள்ளே சென்றிருந்தார் அரசி.

இத்தனை வருடக் காலத்திற்குப் பின், முதன்முறையாய் மனைவியின் கண்ணீர் ஏனோ, கதிர்வேலின் மனதைச் சுட்டது.

*********

அதே நேரம் அம்மாப்பட்டியில் தான் தங்கியிருந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி, தன் அலைபேசி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.

அவனின் நுனி விரல், அலைபேசியின் திரையில் விளையாடி, அதை முன்னும் பின்னுமாய் நகர்த்தி மீண்டும், மீண்டும் பார்வையிட்ட அதே புகைப்படங்களைத் திரும்பத் திரும்ப பார்வையிட்டுக் கொண்டிருந்தது.

அவன் பார்த்துக் கொண்டிருந்தது அவனுக்கும் அந்தப் பெண்ணுக்குமான நிச்சயதார்த்தப் புகைப்படம்.

அவள் கரம் பற்றி அவன் மோதிரம் அணிவிக்கும் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆயிரத்து நூறாவது முறையாய் அவன் பார்வை மீண்டும் மீண்டும் நிலைத்தது.

‘இதழ் வழியும் புன்னகையோடு, நின்றிருக்கும் அவளுக்கு எந்த இடத்தில் தன்னைப் பிடிக்காமல் போனது? நான் என்ன தவறு செய்தேன்? பிடிக்கவில்லையென்றால், ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம் தானே.? தன்னோடு நான்கு மாதங்கள் அலைபேசியில் பேசியதெல்லாம் வெறும் நடிப்பா?’ அவன் மனம் அவனிடத்தில் கேள்வி கேட்டது.

ஆனால் அவன் மனம் தினம், தினம் அவனிடம் கேட்டுக் குடையும் கேள்விகளுக்கு, நிச்சயமாய் அவனிடம் பதில் இல்லை. இதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியவள் அவள் தான். ஆனால் அவள் பதில் சொல்ல மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும்.
ஒருவரால் காதலிக்கப்படுவது எத்தனை இன்பமானதோ, அதை விட ஆயிரம் மடங்கு கொடுமையானது நேசிக்கப்பட்ட அதே நபரால் புறக்கணிக்கப்படுவது. அவள் புறக்கணித்ததை விட, தன்னைப் புறக்கணிப்பதற்கு அவள் சொன்ன காரணம் தான் அவனுக்கு அதிகமாய் வலித்தது.

“ஓ! உனக்கு கல்யாணம் எல்லாம் ஆகிருச்சா? பார்க்க இளந்தாரிப் பயலுக மாதிரிதேன் இருக்கே?” முதுகின் பின்னால் கேட்ட பெண்ணின், குரலில் திடுக்கிட்டுப் பின்னால் திரும்பினான் வீரபத்ரன்.

‘என்ன இவ ஈஈஈன்னு பல்லைக் காட்டிட்டு நிக்கிறா! சரியில்லையே..!’ என வீரபத்ரனின் மனம் சத்தமில்லாமல் எச்சரித்தது. தனக்கு முன்னால் நின்றிருந்த மேகவர்ணாவின் பின்னால் தன் பார்வையை செலுத்தினான் வீரபத்ரன்.

“யோவ்! நான் இங்கே நிற்கிறேன், எனக்குப் பின்னால் என்னத்தை பார்க்கிறே?”

“பூனைக் குட்டி மாதிரி உன் பின்னாலேயே சுத்துமே? அந்த மாடு வீட்டுக்குள்ளே வந்துருச்சோன்னு பயந்துட்டேன்.!”

“இந்தாரு! அவன் பேரு கருப்பன். கருப்பன்னு சொல்லு! மாடு கீடுன்னு சொன்னே மண்டையை உடைச்சுப்புடுவேன் பார்த்துக்கோ!” என மிரட்டியவள்,

“யோவ்! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு! நெசமாவே உனக்கு கல்யாணம் ஆகிருச்சா? பொண்டாட்டியை விட்டுட்டு இந்த ஊருக்கு எதுக்கு வந்தே? உன் பொண்டாட்டிக்கு சொந்த ஊரு இதுவா?” அவன் இங்கே வந்திருக்கும் காரணம் அறிய முற்பட்டாள் மேகவர்ணா.

“ஏன் எங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகக் கூடாதா? இல்லை கல்யாணம் ஆகிடுச்சுன்னு நம்ப முடியலையா?” கொண்டு வந்திருந்த உணவைக் கையில் வைத்தபடியே நின்றிருந்த மேகவர்ணாவைப் பார்த்து எதிர் கேள்வி கேட்டான் வீரபத்ரன்.

“ம்க்கும்! உனக்கு இந்த அண்ணே ஃப்ரெண்டுங்கிறதையே நம்ப முடியலை! இதில் கல்யாணம் ஆகிடுச்சுன்னு எப்படி நம்பறது? இதைப் பார்த்தால் கல்யாணம் மாதிரியே இல்லை. ஏதோ சினிமா ஷூட்டிங் மாதிரி இருக்கு.!” எனச் சொன்னவள் நங்கென்று உணவுப் பாத்திரத்தை தரையில் வைத்தாள்.

எதேச்சையாய் மேகவர்ணாசொன்னதைக் கேட்ட, வீரபத்ரனுக்குள் ஓர் திடீர் பளிச்சிடல். இந்தப் புகைப்படங்களை எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறான். ஆனால் அவன் அருகில் புகைப்படத்தில் நின்றிருந்த அந்தப் பெண்ணின் புன்னகைக்குள் ஒளிந்திருந்தது வெறும் நடிப்பு என்பது அவனுக்குப் புரியவே இல்லையே? இதுவரை ஒருமுறை கூட அவனுக்கு அந்தப் பெண் நடிக்கத்தான் செய்கிறாள் என்று தோன்றவே இல்லை.

ஏனென்றால், அவன் அந்த அளவிற்கு அந்தப் பெண்ணை நம்பியிருக்கிறான். நாம் ஒருவரை நம்மை விட அதிகமாய் நம்பினோமானால், அவர்களைச் சந்தேகப்பட மாட்டோம். அவர்கள் சொல்வதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்வோம். அது தான் வீரபத்ரனின் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

“ஏம்மா தங்கச்சி! நான் சிவனேன்னு சும்மாதானே இருக்கேன். என்னை என்னத்துக்குத்தா இடையில் இழுக்கிறே.? ஆனால் நீ சொன்னது சரித்தேன்.. இந்தப் பய எனக்கு ஃப்ரெண்டு இல்லை. இவன் அண்ணன்தேன் என் உயிர் நண்பன்.!” பெருமையாய் சொன்னான் காத்தவராயன்.

“யாத்தே! பெருமை பொங்கி வழியுதே! ஆமா நீங்க மதுரையில் எங்கே இருக்கீங்க?”

“மதுரையில்தேன் வேற எங்கே?” முந்திக் கொண்டு பதில் சொன்னான் வீரபத்ரன்.

“யோவ்! நீ லூசா? நான் லூசா? மதுரையில் எந்த ஊரில் இருக்கீக?” அழுத்தம் திருத்தமாய் கேள்வி கேட்டாள் மேகவர்ணா. அவள் பார்வை அவனை ஆழமாய்த் துளைத்தது.

“என்ன ரெண்டுபேரும் ஆந்தை மாதிரி முழிக்கிறீக? ஊரு பேரைச் சொல்லுறதுக்கு இம்புட்டு ரோசனையா? என்னமோ சரியில்லையே? ஏதோ விவகாரம் இருக்கு!” இடுப்பில் கை வைத்தபடியே இருவரையும் பார்த்தபடி நின்றாள் மேகவர்ணா.

“அடேய், அரசி மயனே.. நீ சொக்கேசனோட பேரத்தேன்னு சொல்லிப்புடவா? நானாவது தப்பிக்கலாம் பாரு!” என காத்தவராயன் வீராவின் காதுக்குள் முணுமுணுக்க, காத்தவராயனை எரிப்பது போல் பார்த்தான் வீரபத்ரன்.

“சரி! சொல்லலை! உனக்கு நானும் உன் கூடவே சேர்ந்து குழிக்குள்ளே விழணும். அதானே உனக்கு ஆசை?” எனச் சலித்தபடியே,

“அட, ஊரு பேரைச் சொல்றதுக்கு என்னம்மா? நம்ம காளவாசல்தேன். ரொம்பத் தூரமெல்லாம் இல்லை.!” என சமாளிப்பாய் வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தான் காத்தவராயன்.

“ஓ!” என மேகவர்ணா இழுத்து நிறுத்திய தோரணையிலேயே அவள் நம்பவில்லை என்பது வீரபத்ரனுக்குப் புரிந்தது.

“நீங்க சொல்றது அம்புட்டும் பொய்ன்னு எனக்குத் தெரியும். என்னைக்காவது ஒருநாள் அகப்படாமலா போவீங்க? சிக்கும் போது இருக்குடி உங்களுக்கு.!” என அவள் விரல் நீட்டி மிரட்டிவிட்டுப் போக, அவள் மிரடிப் போனத் தோரணையை இரசித்தபடி வீரபத்ரன் அமர்ந்திருக்க,

“இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?” என்ற பயத்தில் உள்ளுக்குள் குளிரெடுக்க, வீரபத்ரனையே பார்த்திருந்தான் காத்தவராயன்.

தித்திக்கும்.. 🔥

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்