
திமிரே.. தீஞ்சுவையே..!
திமிர்-1
அந்த சூழ்நிலை முழுதையும் ஒட்டுமொத்தமாய் நிசப்தம் மட்டுமே ஆட்கொண்டிருந்தது. அனைவரின் முகங்களிலும் இறுக்கம் படர்ந்திருந்தது. காற்றாடியின் மெல்லிய சத்தம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க, மெத்திருக்கையில் சோர்வாய் அமர்ந்திருந்தார் அந்த வீட்டின் பெரிய மனுஷி அங்கயற்கண்ணி.
தன் கணவர் சொக்கேசனின் மறைவிற்குப் பின்னர் குடும்பத்தை முன்நின்று வழிநடத்துபவர் அங்கயற்கண்ணி தான்.
அங்கயற்கண்ணி – சொக்கேசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்தவர் சரவணன். அவர் மனைவி பூங்கொடி. சரவணன் பூங்கொடியின் ஒரே மகன் நெடுமாறன். நெடுமாறனின் மனைவி மதுரிமா.
அங்கயற்கண்ணியின் இளையமகன் கதிர்வேல். கதிர்வேலின் மனைவி அரசி. கதிர்வேல்-அரசி தம்பதிகளுக்கு இரு மகன்கள். மூத்தவன் துடிவேல் அழகர். அவன் மனைவி கருவிழி. இளையவன் வீரபத்ரன்.
சொக்கேசனுக்கும் அங்கயற்கண்ணிக்கும் பிறந்த ஒரே செல்ல மகள் தங்கமீனாட்சி. தங்கமீனாட்சியின் ஒரே மகள் தான் கருவிழி. இந்தக் கருவிழியைத் தான் கதிர்வேல்- அரசி தம்பதிகளின் மூத்தமகன் துடிவேல் அழகருக்கு திருமணம் செய்திருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே வயதுக் கோளாறால், காதல் என நம்பி ஏமாந்து வயிற்றில் பிள்ளையோடு வந்து நின்ற தங்க மீனாட்சிக்கு பிறந்த வீடே நிரந்தரமாகிப் போனது.
“எம்மா! இதுக்குத்தேன் நாங்க சொன்னோம்! எங்க கேட்டீக? ஒட்டு மொத்த ஊரு முன்னேயும் எம்புட்டு அசிங்கமா போச்சு? அப்பா இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டுருப்பாகளா?” அந்தச் சூழலின் நிசப்தத்தைக் கலைத்தார் அங்கயற்கண்ணியின் மூத்த மகன் சரவணன்.
“நாம என்ன சொன்னாலும் இங்கே யாருக்கும் புரியாது சரவணா! பொம்பளைங்களா சேர்ந்து இராஜ்ஜியம் பண்ணினால் இப்படித்தேன். ஒட்டுமொத்த மருதையும் கூடிப்பேசி சிரிக்குது. என்ன நடந்தால் இவுகளுக்கு என்ன? இவுகளா சோலியைப் பார்க்க வெளியே போகப் போறாக? குடும்பத்தில் என்ன நடந்தாலும், அதில் அவமானமும் அசிங்கமும் ஆம்பிள்ளைக்கு மட்டுந்தேன்.!” இது இரண்டாம் புத்திரன் கதிர்வேல்.
“இப்போ என்னத்துக்கு அத்தையை மாத்தி மாத்தி வையுறீக? நமக்கு எம்புட்டு வேதனையும் வருத்தமும் இருக்குமோ, அதே தான் அத்தைக்கும். அவுகளே விசனப்பட்டு போய் கையும் ஓடாமல், காலும் ஓடாமல் உட்கார்ந்திருக்கிறாங்க!” மூத்த மருமகளாய் மாமியாருக்குப் பரிந்து வந்தார் பூங்கொடி.
“இந்த வீட்டில் என்ன நடந்தாலும், எங்க அப்பா இருந்திருந்தால், இதெல்லாம் நடந்திருக்காது. அவரு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமான்னு பேசுறீகளே.. செத்துப் போனவரை உசிரோட கூட்டி வந்து உட்கார வைக்கவா போறீக? அவர் இந்த உலகத்தை விட்டுப் போய் வருஷம் நாலாச்சு!” இது இளைய மருமகள் அரசி.
“விடு அரசி! இவிங்க பேசுறதெல்லாம் பேசிப்புட்டு போவட்டும். எல்லா விஷயமும் நாம நினைச்ச மாதிரி நடந்துடாது. எல்லாத்துக்கு பின்னாலேயும் ஒரு காரண காரியம் இருக்கும்.!” என்ற அங்கயற்கண்ணியின் பார்வை அழுத்தமாய், எதிரே நின்றிருந்த வீரபத்ரனின் மீது பதிந்தது. பட்டு வேஷ்டி சட்டையில், கம்பீரத் தோற்றத்துடன் நின்றிருந்த வீரபத்ரனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. முகம் இறுகிப் போய் அழுத்தமாய் மாறியிருந்தது.
இந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு, அதுவும் மகள் வயிற்றுப் பிள்ளையாய் இருந்தாலும், எப்படி கருவிழிக்கு செல்லம் அதிகமோ, அதே மாதிரி கடைக்குட்டியாய் துள்ளித் திரிந்த வீரபத்ரனுக்கும் கொஞ்சம் செல்லம் அதிகம் தான். இப்போது கூட, வீரபத்ரனுக்கு எற்பாடு செய்திருந்த திருமணம் எதிர்பாராமல் நின்றுவிட, மண்டபத்தைக் காலி செய்துவிட்டு இப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.
மஞ்சள் காயாத தாலிக் கயிறும், நெய்யக் கொடுத்து வாங்கிய பட்டுப் புடவையும் நடுக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தாம்பூலத்தில் அனாமத்தாய் கேட்க ஆளின்றி கிடந்தது.
“டேய்! டென் ருப்பீஸ்.. இந்த சீரியஸ் லுக்கு உன் மூஞ்சிக்கு செட்டே ஆகலை டா! நீ எப்பவும் போல லூசு மாதிரியே இரு!” கருவிழியின் குரல், இவன் செவிக்குள் கேட்டது.
“இந்தாரு மைடப்பி! அண்ணே பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன். மரியாதையா அங்கிட்டு போயிரு!” அத்தை மகளும் அண்ணியுமான கருவிழியை முறைத்தான் வீரபத்ரன்.
“சும்மா முறைக்காதே டா! இந்த த்ரிஷா இல்லைன்னா இன்னொரு நயன்தாரா! உனக்குன்னு பொறந்தவ வருவா டென் ருப்பீஸ்.!”
“ஆமா எனக்குன்னு பொறந்தவ இப்போ தான் எல்.கே.ஜி போய்ட்டு இருக்கா! கடுப்பேத்தாமல் ஓடிப் போயிரு. அந்தப் பொண்ணு ஓடிப் போனதையெல்லாம் பத்தி எனக்கு பிரச்சனை இல்லை மைடப்பீ! எத்தனை தடவை பிடிச்சிருக்கான்னு கேட்டேன் தெரியுமா? மண்டையை மண்டையை ஆட்டிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்ட்டா!”
“ஒருவேளை பிடிக்கலைன்னு சொல்றதுக்குக் கூட, நீ வொர்த் இல்லை போல?” கருவிழி விளையாட்டாய் சொல்ல,
“அழகரு..! உன் பொண்டாட்டி இன்னொரு வார்த்தை பேசினாள் அம்புட்டுதேன் சொல்லிட்டேன்.!” தன் அண்ணனிடம் முறையிட்டான் வீரபத்ரன்.
“ஏன்டி! கிறுக்கச்சி! சும்மாவே இருக்க மாட்டியா? ஓயாமல் அவன்கிட்டே ஒரண்ட இழுத்துக்கிட்டே திரியுற?” என்ற கணவனின் கேள்விக்கு,
“அழகரு பசிக்குது அழகரு!” சம்மந்தமில்லாமல் பதில் சொன்னாள் கருவிழி.
“ஏன்டி கரு கரு! வந்து எம்புட்டு நேரம் ஆகுது! பசிக்குதுன்னா முன்னவே சொல்ல மாட்டியாடி? எப்படியும் கயலு எதாச்சும் செஞ்சு வச்சிருப்பா!” என மனைவியை அழைத்துப் போனான் துடிவேல் அழகர்.
“டேய்! பதிற்றுப்பத்து! பார்த்தியா அழகரை எப்படி ஏமாத்தினேன்னு? அழகராவது என்னைத் திட்டுறதாவது?” என நக்கலாய் சொன்னபடியே, தன் நிறைமாத வயிற்றைத் தாங்கியபடியே அழகருடன் நடந்தாள் கருவிழி.
“ஆமா! இப்படியே பேசுங்க! இம்புட்டு செலவு பண்ணி கல்யாணம் ஏற்பாடு பண்ணி, அந்தப் பொண்ணு வேணாம்ன்னு சொல்லிப்புட்டு ஓடிப் போயிருச்சு. இன்னுமும் நீங்க பேசுறதுதேன் சரின்னு பேசுங்க! எம் மயன் வாழ்க்கையைப் பத்தி எனக்கு கவலை இருக்காதா?” இன்னுமும் அரசிக்கும், கதிர்வேலுக்கும் இடையேயான வாக்குவாதம் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
“ரொம்பத்தேன் கவலைப் பட்டுற போறீங்க? அழகர் கல்யாணத்தோட. நீங்க கவலைப் பட்டதை நான்தேன் பார்த்தேனே? அத்து விடுறதில் தானே குறியா இருந்தீக? எங்க அப்பாருக்குப் பிடிக்கலை இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு தானே கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சீக? நம்ம மயனோட மனசுக்கு அவளைத்தேன் பிடிச்சிருக்குன்னு கொஞ்சமாச்சு ரோசனை(யோசனை) பண்ணீகளா? இப்போ வீரபத்ரனோட வாழ்க்கையை நினைச்சு மட்டும் கவலைப் படுறீகளாக்கும்? உங்க கவலையெல்லாம், கல்யாணம் நின்னு கௌரவக் குறைச்சல் ஆகிருச்சுன்னு தானே ஒழிய, எம் மயனை நினைச்செல்லாம் இல்லை! எப்படி அழகருக்குன்னு ஒரு கருவிழி வந்தாளோ, இவனுக்குன்னு பொறந்தவ வருவா!” அழுத்தமாய் கணவரின் முகம் பார்த்துச் சொன்னார் அரசி.
“அரசி! விடு அரசி! போதும்! நாம எம்புட்டு சொன்னாலும், இவுகளுக்கு புரிஞ்சிடவா போகுது!” அரசியை தடுத்து நிறுத்த முயன்றார் பூங்கொடி.
“விடுங்கக்கா! இந்த மனுஷனோட பொழுதன்னைக்கும் இதே ரோதனையாய் போச்சு. புள்ளைங்க மனசைப் புரிஞ்சுக்காமல், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டியதே வேலை. நம்ம எல்லாரையும் விட, அதிகமா பாதிக்கப்பட்டவன் எம் மயன்தேன். அவனைப் பத்தி கொஞ்சமும் யோசிக்காமல், இவர் என்கிட்டேயே சண்டைக்கு வர்ராரரு.!” என அரசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“எம்மா! போதும்! கல்யாணம் நின்னு போயிருச்சு தான். அதுக்காக, நீங்க சண்டை போட்டால், நின்ன கல்யாணம் திரும்பி நடந்துடுமா? திரும்பத் திரும்ப இதையே பேசாமல் அமைதியாய் இருங்க!” தீர்ந்துப் போன பொறுமையுடன் கத்தியவன் மாடியேறி போய்விட்டான்.
“போதுமாங்க! அவனை விரட்டுறதுக்குத்தானே இம்புட்டும் பேசுனீங்க? ஒரு நாளாவது புள்ளைங்க பக்கத்தில் உட்கார்ந்து, ஆசையா.. பாசமா நாலு வார்த்தை பேசிருக்கீங்களா? எப்போ பார்த்தாலும், கொம்பு முளைச்ச ஒனிடா பூதம் மாதிரியே மூஞ்சியை வச்சுக்க வேண்டியது.!” எரிச்சலுடன் அரசி அடுக்களை நோக்கி நகர, வெடித்துக் கிளம்பிய சிரிப்பை அடக்கியபடியே பூங்கொடி, அரசியின் பின்னாலேயே செல்ல,
“ஏன் சரவணா! கொம்பு முளைச்ச ஒனிடா பூதம்ன்னு சொல்லிட்டு போறா! அம்புட்டு மோசமாவா இருக்கு என் மூஞ்சி?” எனச் சந்தேகமாய் தமையனிடம் கேட்டார் கதிர்வேல்.
“அட நீ வேற கதிரு! உன் பொண்டாட்டி பூதம்ன்னு தான் சொன்னாள். என் பொண்டாட்டி என்னை பிரம்மராட்சசன்னு சொல்றா.!” எனப் பேசியபடியே இருவரும் வெளியேறியிருந்தனர்.
******
“வீரபத்ரா! அடேய்! பத்ரா!”
“என்ன அப்பத்தா!
சொல்லியிருந்தால் நானே கீழே வந்திருப்பேனே? என்னத்துக்கு மேலே ஏறி வந்தீக?” எனக் கேட்டபடியே அவசரமாய் நாற்காலியை இழுத்து அங்கயற்கண்ணி அமர்வதற்காய் போட்டான் வீரபத்ரன்.
“உன் கிட்டே கொஞ்சம் பேசணும்டா!” என அவர் சொன்னதும், அவர் கால்மாட்டிலேயே அமர்ந்துக் கொண்டான் வீரபத்ரன்.
“சொல்லுங்க அப்பத்தா!”
“அப்பத்தாக்கிட்டே ஒளிக்காமால் சொல்லணும்! இந்தக் கல்யாணம் நின்னு போச்சுன்னு ஏதாச்சும் உனக்கு வருத்தம் இருக்கா?”
“வருத்தம் கல்யாணம் நின்னு போனதில் இல்லை. கல்யாணத்தை நிறுத்துறதுக்கு அந்தப் பொண்ணு சொன்ன காரணத்தில் தா..ன்.!” எனச் சொன்ன வீரபத்ரனின் மனநிலை நன்றாகவே அங்கயற்கண்ணிக்கு விளங்கியது.
“அப்போ, வேற பொண்ணு பார்க்கட்டுமா?”
“வேணாம் அப்பத்தா! கொஞ்ச நாளைக்கு என்னை என் போக்கிலேயே விட்டுருங்க! நான் ஆசைப்பட்டு, விரும்பி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கலை. ஆனால், பெரியவங்க சொன்னீங்களேன்னு ஒத்துக்கிட்டேன். அதுக்காக நான் வாழ்க்கை முழுசுக்கும் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லலை. கொஞ்ச நாளைக்குக் கல்யாணத்தைப் பத்தி பேசாதீங்க அப்பத்தா!” உறுதியாய் தன் முடிவைச் சொல்லிவிட்டான் வீரபத்ரன்.
“விடுங்கத்தே! அவன் கொஞ்ச நாளைக்கு அவனுக்குப் பிடிச்ச மாதிரி இருந்துட்டுப் போவட்டும். கடவுள் யாருக்கும், யாருக்கும் முடிச்சு போட்டுருக்கான்னு நமக்கு தெரியாதே!” கையில் காபியுடன் பின்னால் வந்து நின்றார் அரசி.
“அதுக்கில்லை அரசி! என்ன நடந்துச்சுன்னு தெரியாமல், நம்ம புள்ளையைப் பத்தி நம்ம காதுபடவே பேசையிலே மனசுக்கு சங்கடமா கிடக்கு அரசி.!”
“யார் வேணும்னாலும், என்ன வேணும்னாலும் பேசிட்டுப் போகட்டும் அத்தே! நம்ம பிள்ளையைப் பத்தி நமக்குத் தெரியாதா? நம்ம பிள்ளைங்க மனசு நமக்குப் புரியாதா? நெடுமாறன் மதுவை விரும்பித்தேன் கட்டுனான். நம்ம அழகரும் விழியும், ஒரே வீட்டுக்குள்ளே வளர்ந்தாலும், விரும்பித்தேன் கட்டுனாங்க! அதே மாதிரி நம்ம வீராவுக்கும் ஏதோவொரு பொண்ணு காத்திருக்காளோ என்னவோ?!” என அரசி சொல்ல,
“என்னம்மா நீ.. சினிமா டைலாக்கெல்லாம் பேசுறே? எனக்காக அவ பொறந்ததிலிருந்தே காத்திருக்கப் போறாளா? போம்மா நீ வேற?” எனக் கேட்டான் வீரபத்ரன்.
“உனக்கு ஏத்தம் தான்டா! புள்ளை மனசு உடைஞ்சு போயிருப்பானேன்னு சொன்னால், என்னையே நக்கலடிக்கிறே பார்த்தியா?”
“எம்மா! இந்த அட்வைஸ் பண்ணுறது அனுதாபப் படுறதெல்லாம் விட்டுருமா! சத்தியமா உனக்கு செட் ஆகலை. அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே தானே ஓடிப் போச்சு. கல்யாணத்திற்கு அப்பறம் இல்லையே? விடும்மா! பாஸ்ட் இஸ் பாஸ்ட்! திரும்பத் திரும்ப அதையே பேசிப் பேசி அதை மறுபடியும் மறுபடியும் ஞாபகப் படுத்திட்டே இருக்கீங்க!” என தன் மனதிலிருப்பதை மறைக்காமல் சொல்லிவிட்டான் வீரபத்ரன். நிஜமாகவே திருமணம் நின்றதை விட, இவர்கள் திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்துவதைக் கடந்து வருவது தான் அவனுக்கு நிரம்பவும் கடினமாக இருந்தது.
“சரிடா! நான் எதுவுமே பேசலை! அதுக்காக நீ இப்படி வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், இதெல்லாம் சரியாகிடும்ன்னு நினைக்கிறியா? அடுத்த வேலை என்னவோ அதைப் பாருடா!”
“அடுத்த வேலை தானே அதைத் தான் பார்க்கப் போறேன். அதுக்குத்தான் ப்ளான் யோசிச்சிட்டு இருக்கேன்.!”
“என்னடா பண்ணப் போறே?!” ஆர்வமாய் கேட்டார் அரசி.
“ஹான்.. அதெல்லாம் இரகசியம்.!”
“டேய்! அப்போ இந்த வாட்டி கன்டென்ட்டில் நான் இல்லையா டா?”
“எம்மா! நான் வேற ஊருக்குப் போகலாம்ன்னு இருக்கேன். நீயெல்லாம் இந்தக் கண்டென்ட்டில் இல்லை.!”
“நீ வேற ஊருக்குப் போனால் நானும் வருவேன்.! என்னை விட்டுட்டுப் போகணும்ன்னு நினைக்காதே! உன் கன்டென்ட்டில் இந்த வட்டமும் நான் இருக்கேன். அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.!”
“எம்மா இது வேற சீரிஸ் மா!”
“ஆமா! அப்படியே பெரிய வெப் சீரிஸ் எடுத்து கிழிச்சுருவாரு! நாலு யூ ட்யூப் வீடியோவைப் போட்டு விட்டுட்டு, செலிப்ரெட்டி லெவலுக்கு சீனு வேற!”
“இந்தா இப்படியெல்லாம் பேசினேன்னு வையி! ஆட்டைக்குச் சேர்த்துக்க மாட்டேன் பார்த்துக்க!”
“இங்கே பாருங்கத்தே! உங்க பேரனை, என்னை வீடியோ எடுக்க சேர்த்துக்க மாட்டேங்கிறியான்.!”
“அடேய்! உங்க அம்மா பாட்டுப் பாடி தானே டா, உனக்கு காசு வந்துச்சு. அவளையே வேணாம்ன்னு சொல்லுற?” என மருமகளுக்குப் பரிந்து வந்தார் அங்கயற்கண்ணி.
“உங்க அப்பத்தாவே சொல்லிப்புட்டாக! நானும் வருவேன்.!” பிடிவாதமாய் நின்றார் அரசி.
“எம்மா நானே எந்த ஊருக்குப் போறேன்னு எனக்கே தெரியலை! போய்ட்டு இடமெல்லாம் செட் பண்ணிட்டு சொல்லுறேன். பிறகு நீங்க வாங்க!”
“டேய்! இந்த அம்மாகிட்டே எதையும் மறைக்கலையே? ஃபேஸ்புக்கில் உன் ஃபோட்டோவுக்கு ஹார்ட் விடுமே அந்தப் புள்ளை பேரு என்ன.. ஹான்.. மில்லியா எல்லியா? அந்த வெள்ளைக்காரியை எதுவும் பர்க்கப் போறியா?”
“அது லில்லி மா! அந்தப் பொண்ணு நெதர்லாண்டில் இருக்கு. நான் அங்கெல்லாம் போகலை. அந்தப் பொண்ணு ஜஸ்ட் க்ரஷ் மா!”
“ஆமா க்ரஷ், ப்ரஷன்னு எனக்கு ஒண்ணும் புரியலை டா! ஆனால் உங்க அப்பனைக் கட்டும் முன்னே இந்த க்ரஷ் எல்லாம் தெரிஞ்சிருந்தால், எனக்கும் உன்னைப் போல நிறைய க்ரஷ் இருந்திருக்கும்.!” மகனின் செவிக்குள் ரகசியமாய் சொன்னார் அரசி.
“க்ரஷ் வேற லவ் வேற மா! எனக்கு நம்ம அழகரையும் மைடப்பியையும் மாதிரி, புரிதலோட வாழணும்ன்னு ஆசை மா! மைடப்பி பண்ணுறதெல்லாம் கிறுக்குத்தனமாதேன் இருக்கு. ஆனாலும் அழகருக்கு மட்டும், தான் அவள் செய்யற ஒவ்வொரு செயலிலும் இருக்கிற அர்த்தம் புரியும். இதே மாதிரி எனக்கு மட்டும் புரியற ரகசிய டிக்ஷ்னரியா ஒரு பொண்ணு வேணும்மா!”
என்றவனின் பார்வை தோட்டத்தின் கல் திண்டில் அமர்ந்து, தன் மனைவிக்கு கால் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் அழகரின் மீது பதிந்தது.
“டிக்ஷ்னரி, என்சைக்லோபீடியான்னு, அது பொண்ணா? இல்லை புக்கா டா? பேசாமல் ப்ரிண்டிங் ப்ரஸ்ஸில் போய் அச்சடிக்கக் கொடுத்துடு, தயாராகி வந்ததும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம். கருவிழி வெர்ஷன் டூ எல்லாம் இல்லை டா. ஒண்ணே ஒண்ணு தான்.!” சிரித்தபடியே சொன்னார் அரசி.
“போம்மா உனக்குப் புரியவே இல்லை. நான் சொல்லாமலே நான் நினைக்கிறது அந்தப் பொண்ணுக்கு புரியணும்மா!”
“அதுக்கு அந்தப் பொண்ணு ஜோசியக்காரியாகத்தேன் இருக்கணும். இல்லைன்னா அந்த ஒரு குச்சியை வச்சு குறி சொல்லுவாகளே அவங்களாத்தேன் இருக்கணும்!”
“எம்மா அரசி! நீ ரொம்ப பண்ணுற மா! ரொம்பப் பண்ணுற நீ..!”
“பின்னே என்னாடா, அது பொண்ணா இல்லை பொருளா? நாம நினைக்கிறதை புரிஞ்சுக்கிற பொண்ணு வேணும்ன்னு நினைக்கிற? அந்தப் பொண்ணைப் புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்க மாட்டேங்கிற? அரசி சப்போர்ட் எப்போவுமே வரப் போற மருமகளுக்குத்தான்.!”
“இதுக்காகவே ஒரு அடங்காப்பிடாரியைப் பிடிச்சு கூட்டிட்டு வர்ரேன் இருங்க!”
“உனக்கெல்லாம் அம்புட்டு தைரியம் இல்லைடா ராசா.!”
“இந்த வீரபத்ரனை அவ்வளவு லேசா எடை போட்டுறாதீங்க மம்மி! நான் கூட்டிட்டு வர்ரேனா இல்யான்னு பாருங்க!”
“அப்போ நெசமாவே பொண்ணு பார்த்து வச்சிட்டியா டா? அதுக்குத்தான் ஊருக்குப் போறியா? அந்தப் பொண்ணு பேரு என்னடா? ஃபேஸ்புக்கில் இருக்காளா? லிங்க் கொடு டா! ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் போய் பேசிப் பார்க்கிறேன்.! என்னடா திருதிருன்னு முழிக்கிறே?”
“எம்மா போம்மா! எப்படி பேசினாலும் கோல் போடுற! உன் விளையாட்டுக்கு நான் வரலை. நான் நாளைக்கு ஊருக்குக் கிளம்பறேன்.!” என அவன் சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைய,
“ஏன் அரசி! நீயும் வீரபத்ரனும் ஃபோனில் ஏதோ பண்ணுறீங்க, அதை நான் ஒண்ணும் சொல்லலை! ஆனால் இப்போ ஊருக்குப் போகணும்ன்னா, நம்ம விழிக்கு வேற நாள் நெருங்கிடுச்சே! அவளுக்கு பேறுகாலம் பார்த்து நல்லது, பொல்லது ஆக்கிப் போடணுமே? நீ ஊருக்குப் போய்ட்டால் என்ன செய்றது?”
“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு அத்தே! நான் சும்மா அவன்கிட்டே ஒரண்டை இழுக்கிறதுக்காக பேசினேன். நம்ம அழகரு பிள்ளையை பார்க்காமல் நான் எங்கேயும் போறதாக இல்லை. அவன் போய் எந்த ஊரு என்னன்னு பார்த்து வச்சிட்டு வரட்டும். பி றகு பார்ப்போம்.!” எனச் சொன்ன அரசியின் பார்வை, தோட்டத்தில் அமர்ந்திருந்த அழகரின் மீதும், கருவிழியின் மீதும் விழுந்தது.
இதே போல் வீரபத்தரனும் அவன் மனதிற்குப் பிடித்தவளுடன் கண் நிறைந்து வாழ வேண்டும் என அன்னையாய் ஆசைக் கொண்டது அவர் மனம்.
தித்திக்கும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆரம்பமே செமடா.