
சொல்லாமல்…!
மௌனம் – 06
அந்த இருளிலும் கொட்டிய அடை மழையிலும்,ஒற்றைக் கையால் குடையை பிடித்து,பாதங்கள் அவ்விடத்தை அலசிட அதை தெளிவுபடுத்த உதவிக் கொண்டிருந்தது,மறுகையில் இருந்த டார்ச் வெளிச்சம்.
அவள் அழவில்லை.
ஆனால்,விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.
மடத்தனங்கள் என்று தெரிந்தும்,வலிக்க வைப்பதென்பது, ஆழமான நேசங்களில் மாத்திரமே சாத்தியம்.
அவனின் தோழன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும், காதுகளில் எதிரொலிக்க ஏனோ உள்ளுக்குள் உறுதிகள் ஆட்டம் காணும் சாயல்.
பதட்டத்தில் ஸ்தம்பித்தவளின் ஸ்திரங்கள், சில்லுகளாய் சிதறியிருக்க,தேடல் நீண்டது.
வீசிய காற்றுக்கு அசைந்த குடை அணையிட மறந்திட,தெப்பமாய் நனைந்தாள்.ஸ்வெட்டரையும் தாண்டி,ஈரத்தை தேகம் உணர்ந்தது.
மருகித் தவித்த,மனம் கலங்கி பாரமேறிட சுற்றம் மறந்தவளாய் தேடிக் கொண்டிருந்தாள்,அவள்.
இதையே வேறு யாராவது கண்டிருந்தால் சுத்தமான பைத்தியக்காரத்தனம், என்று நகர்ந்திருக்க கூடும்.இதற்கா இத்தனை அலப்பறை என்று எண்ணிடவும் கூடும்.
மற்றவருக்கு எப்படியோ,அவரவர்க்கு அவரவர் உணர்வுகள் பெரிதே.அவற்றின் உயிரிழைகள் பொக்கிஷமே.
ஆங்கே,ஒரு மூலையில் வெளிச்சம் பட்டு ஏதோ மின்னிட அவள் விழிகளில் சடுதியாய் ஒரு விகசிப்பு.இதழ்கள் விரிய பட்டென குனிந்து தரையை துழாவிட,கிடைத்திட்ட ஏமாற்றத்தில் அவள் மனம் கனமாக இதழ்கள் பிதுங்கிற்று.
இன்னும் விழிகள் சிவக்க அவள் நின்றிருக்க,நிற்பது அவளென்பது அறிந்தவனாய் சுருங்கிய புருவங்களுடன் பின்னே வந்து நின்றான்,தேவேந்திரன்.
வீட்டினுள் இருந்தே,கண்டிருந்தாள் அவளை.இவளுக்கு இந்நேரம் இங்கென்ன வேலையென்று,அவன் கிளம்பி வந்திட,அதன் அரவத்தை அவள் உணரத் தவறி இருந்தாள்.
“தர்ஷினீஈஈஈ…” அவன் குரலைச் செருமி அழைத்திட,கொஞ்சம் அதிர்ந்து தன்னை மீட்டவளாய் திரும்பினாள்.
கலக்க முகமும் சிவந்த விழிகளும்,அவனுக்கு வேறு செய்தி சொன்னது.முகத்தில் அப்பிக் கிடந்த வருத்தம்,அவனுக்குள் வினாக்களை விதைத்தது.
“என்னாச்சு தர்ஷினீஈஈஈ..இந்த மழைல இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க..?” காட்டமாய், அவன் கேட்டிட மறுப்பாய் தலையசைத்தாள்,அவள்.
அவனுக்கு அவள் சொல்வது பொய் என்பது புரிந்தது.
“பொய் சொல்லாத தர்ஷினி…இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க..?அதுவும் இந்த நேரத்துல..?”
“ஹான் ஒன்னுல்ல..” எப்போதும் போல் அழுத்தமாகவே வெளிவந்தது, அவள் குரல்.அந்த குரலே,அவனை எட்ட நிறுத்த,இவனுக்கு கோபமும் ஆற்றாமையும் ஒன்றாக கலந்தடித்து.
“சொன்ன தான தர்ஷினி புரியும்..சரி என்னமோ தேடிகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு..”கனிவாய் விழுந்த அவன் வார்த்தைகளில் மறுக்க இயலாமல் ஆமோதிப்பாய் அசைந்து ஒப்புக் கொண்டது,அவள் சிரசு.
“சரி..என்ன காணோம்னு சொல்லு..நானும் ஹெல்ப் பண்றேன்..தேடலாம்..” மிக மென்மையாக அவன் சொல்லிட அவளுக்கு அதற்கு மேல்,மறுப்புச் சொல்லி அப்படியே வெட்டி விட சங்கடம் எழுந்திருக்க வேண்டும்.
“சரி..என்ன காணோம்..?”
“என்..என்னோட கீ செய்ன்..” அதை சொல்லி முடிக்கும் முன்னரே அவள் குரல் உடைந்திட அவன் விழிகளில் மெல்லிய அதிர்வு.
பயந்தவள் என்று தெரியும்.ஆனால்,இத்தனை கலங்கி அவன் கண்டதில்லை.அதுவும்,பயத்தை தாண்டிய உணர்வுகளை அவள் வெளிப்படுத்துவது அரிதிலும் அரிது,அந்நியரிடம்.
அப்படி இருப்பவள் முதன் முறையாக தன்னை மீறி,கலக்க மிகுதியான உணர்வொன்றை, காட்டுவது புதிராய்த் தான் இருந்தது,அவனுக்கு.
ஏனோ தெரியவில்லை.
அவனுக்கு அவளின் பதிலில் சிரிப்பு வந்திருக்க வேண்டும்.புன்னகையில் துடித்த இதழ்களை அடக்கினான்,சிரமப்பட்டு.
“கீ செய்னா..?” அவன் மீண்டும் கேட்டிட ஆம் என்பதாய், தலையசைத்தவளின் முகம் சோர்ந்தது.
“காலைல தேடலாமே..”
“இல்..இல்ல..அது அவசரம்..”
“சரி என்ன அவசரம்னாலும் காலைல பாத்துக்கலாம்..இப்போ போ” கனிவாய் சொன்னவனிடம் எப்படித் தான் அவளும் எடுத்தெறிந்து பேச..?
“அது..ரொ..ரொம்ப..ஸ்..ஸ்பெஷல்..நீங்க போ..போங்க நா தேட்றேன்” திக்கித் திணறி சொல்லி முடித்திருந்தன,அவளிதழ்கள்.
அதை தேடி எடுத்திடாமல் நகரப் போவதில்லை,என்று உறுதி மொழி கூறின,விழிகள்.
“சரி வா தேடலாம்..நானும் ஹெல்ப் பண்றேன்..” என்று உதவியாய் அவனும் தேடிட,அவன் விழிகள் அடிக்கடி அவளைத் தொட்டு மீண்டன.
வியக்காமல் இருக்க முடியவில்லை,அவனால்.அவளின் கலக்கம்,அவள் மாற்றத்தை காட்ட,அதை ஏற்க அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது.
அதுவும் ஒரு சிறு பொருள் வேண்டி,இத்தனை கலங்கி நிற்பது மடத்தனமாகவும் தோன்றியது.மாற்றம் ஒன்றே மாறாதது என்று நெடுமூச்செறிந்தான்.
காலத்தால் மட்டுமா மாற்றங்கள் துளிர்த்திடும்..?
காதல் அதற்கு ஒன்றும் விதிவிலக்கு இல்லையே.
அவனுக்குள் காதல் வந்திட்ட போது அவனுள் துவங்கி எழுந்த மாற்றங்களை, எல்லாம் மறந்து விட்டிருந்தது
அவன் மனம்,அந்தக் கணம்.
கொட்டும் மழையை மறந்து,ஈரத்துளிகளில் நனைந்து தேடிட அவன் விழிகளிலேயே முதலில் சிக்குண்டது,
அறுந்து விழுந்திருந்த அவளின் கீ செய்ன்.
முதலில் கையில் எடுத்தவனின் விழிகளில் சட்டென மின்னலொன்று, வந்தாலும் அதில் இருந்தது,அவள் கணவனின் பெயர் எனக் கண்டதுமே முகம் இருண்டது.
ஏதோ விபரிக்க முடியா வலி,ஒன்று மனதினுள் ஊடுருவி உள்ளுக்குள் நொருக்கிப் போட்டது.
“தர்ஷினீஈஈ..” அழைத்திட அவன் முன்னே வந்து நின்றவளின்,முகத்தில் இருந்த எதிர்ப்பார்ப்பின் ரேகைகள்,அவனை இன்னும் வலிக்க வைத்தது.
அவளின் செயலாக்கம் ஒவ்வொன்றும்,அவள் கணவனின் மீதான அளப்பறிய நேசத்தை வெளிக்கொணர,அவனால் அத்தனை எளிதால் அதை ஜீரணித்திட இயலவில்லை.
“இதான்னு பாரு..” அவன் நீட்டிட அதை கண்டவளின், விழிகளில் வந்து ஒட்டிக் கொண்டு விகசிப்பும்,இதழ்களில் சடுதியாய் தோன்றிய புன்னகையும், முகத்தில் இருந்த ஒளிர்வின் சாயலும் அவனுக்கு ஒரு குழந்தையாகத் தான் காட்டியது,அவளை.
தன் கையில் வாங்கியது தான் தாமதம்,அதற்கு முத்தமிட்டு உள்ளங்கையில் கீ செய்னை வைத்து இறுகப் பொத்திக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து விழிகளை அழுந்த மூடி நின்றிருந்தாள்,ஒரு கணம்.
அவளின் அந்த செயல் வார்த்தைகளின்றி வெளிப்படுத்தியதே,
அவள் உயிரில் சுமக்கும் தேடலை.
அவளின் ஒற்றை செயலில்,அவன் முற்றாய் வலுவிழந்தான்.
ஏனோ அவனால் அதைக் கண்டிட இயலவில்லை.ஒரு நொடி நிதானமாகியவள் அவனைப் பார்த்து புன்னகைத்திட பதிலுக்கு புன்னகைத்தான்,
கசப்பான மனதுடன்.
“சரி..நா வர்ரேன்..” என்றவனோ, விறுவிறுவென நகர்ந்திட அவள் கத்திய “தேங்க்ஸ்..” காற்றோடு கலந்து மெதுவாய் வந்து அலைமோதியது,
அவன் செவிகளில்.
அறைக்குள் நுழைந்து தலையை துவட்டியவளுக்கு, மழையில் நனைந்ததால் இலேசாக ஜுரம் வரும் போல் இருந்தாலும், முதற் பணியாய் முன் வந்து நின்றது அறுந்திருந்த கீ செய்னை சரி செய்வது தான்.
ஈரம் பாதி வற்றாத தலையுடன்,அமர்ந்து மிக நுணுக்கமாய் ஆராய்ந்து உடைந்திருந்த கொக்கிகளுக்க,பதில் தன்னிடமிருந்த புதியதை மாட்டி விட்டு திருப்தி பட்டவளாய் அவள் புன்னகைக்கும் போது நேரம் கரைந்திருந்தது.
தலை விண்ணென்று வலித்தாலும், வேலையே முடித்த பின்பே உறக்கம் எட்டியது,விழிகளை.
கட்டிலின் அருகே இருந்த மேசையில் சரி செய்த,கீ செய்ன் வீற்றிருக்க மின் விளக்கை கூட அணைக்க மறுத்து,அதை விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,உறக்கம் தழுவிடும் போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
ஏனோ அந்த சிறிய நிகழ்வும் அவளுக்குள் பெரும் பயத்தை உண்டு பண்ணியிருக்க,கலங்கி நின்றாள்,தாலி வாங்கியவள்.
விலகலே வேண்டாம், விடாப்பிடியில் நிற்கிறாள் அவள்..
விலகித் தான் செல்வேன்,என விடை கேட்கிறான் அவன்…
மொழிகள் தவறினாலும்,அவள் விழிகள் அவனிடம் மௌனமாய் காதல் கூறிட,அவள் வானெங்கும் வானவில்லாய்,அவன் விம்பங்கள்.
ஆழம் காண இயலாமல்,அவள் காதல் ஜீவனை நிரப்பி இருக்க,அவளுக்கெனவும் ஒரு காதல் காத்திருக்கிறது,அவள் நினைவுகளை மட்டுமே சுவாசித்துக் கொண்டு.
காதலித்தல் இணையை இரசிக்க வைக்குமென்றால்,
காதலிக்கப்படுதல் தன்னையே இரசிக்கக் கற்றுத் தந்திடும்.
அவளுக்கும் தன்னை ரசிக்கக் கற்றுத் தந்திடுமோ,அந்தக் காதல்..?
விதியின் முன் யாவரும் விளையாட்டு பொம்மைகளே.
●●●●●●●
நேற்றிரவு,யோசனையில் கழிந்ததால்,சரிவர உறக்கம் இல்லை,தேவேந்திரனுக்கு.அடுத்த கட்டம் என்ன செய்வதென்கின்ற எண்ணம் தான்,மனதில் வியாபித்து நின்றிருந்தது.
என்னவாயினும்,அவளின் விவாகரத்து வரை காத்திருக்க வேண்டும்.அதன் பின்னரே,அடுத்த அடியை எடுத்து வைத்திட முடியும் என்கின்ற நிதர்சனம் புரிந்திட,பொறுமையை இழுத்துப் பிடித்தான்.
காலையில் எழுந்து உடற் பயிற்சியை முடித்துக் கொண்டு கீழே வரும் போது,செவிகளை தொட்டுச் சென்றது,ஆர்த்தியின் சிரிப்பு சத்தம்.கலகலவென்று,சிதறிய சில்லறை போல் எதற்கோ தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
“பச்ச்ச்..வந்துட்டா..”,எரிச்சல் குவியலாம் முகத்தில் மண்டிக் கிடக்க,சமயலறைக்குள் நுழைந்த மகனின் முகமாற்றத்தில் தாயவருக்கும் கோபம் வந்தது.
மகனின் மனநிலையும் தெரியும்.மருமகளின் நிலைப்பாடும் அவர் அறிந்ததே.அவருக்கு,அவள் ஆர்த்தியை திருமணம் செய்வதில் முழு சம்மதமே.உரியவன் பிடி கொடுக்க மாட்டேன் என்கின்றானே,என்ற வருத்தம் இப்போதும் மேலோங்க மகனின் முகம் பார்த்திட,அவனோ இருவரையும் பார்வையால் கூட தீண்டவில்லை.
கலக்கி வைத்திருந்த காஃபியை எடுத்துக் கொண்டு அவள் வெளியே செல்ல,அவன் மறையும் வரை ஆர்த்தியின் பார்வை அவனில் தான்.
பலரிடம் ஈர்ப்புக்களை கடந்து வந்தவள்.கூறப் போயின்,”க்ரஷ் லிஸ்ட்” பெரிதாய் நீளும்,ஆட்களை பட்டியலிட்டால்.ஆனால்,காதல் என்பது இவன் மீது வந்தது போதாதென்று அவளைப் பிடித்து பேயாட்டிக் கொண்டிருக்க,அதற்கு தான் இத்தனை போராட்டமும்.
“உங்க பையன எப்டி தான் கரெக்ட் பண்றது அத்த..? எல்லா எஃபோர்ட்டும் நாசமா போகுது..” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு,அவனைப் பெற்றவரிடமேயே சொல்ல,போலியாய் முறைத்தார்,அவர்.
“பையன பெத்தவ கிட்ட பேசற பேச்சாடி இது..?” அதட்டல் போல கேட்டுக் கொண்டே,அவள் முதுகில் ஒன்று போட,சிரித்துக் கொண்டே எழுந்து நின்றாள்,தேவேந்திரன் வருவதைக் கண்டு.
அலுவலகம் செல்ல கிளம்பியவனின் பின்னூடு வால் பிடித்து வந்து,அவளும் வண்டியில் ஏறிக் கொள்ள,அவளைக் கிளப்ப முடியாது என்று தெரிந்தவனோ,அவனை ஏற்றிக் கொண்டு வண்டியை செலுத்தினான்.
நேற்றைய நினைவில் தாக்கம்,இப்போதும் எட்டிப் பார்த்து வதம் செய்திட,தன்னை மீறிய நெடுமூச்சு,ஆழமாய்.
நாம் நினைப்பவர் நம்மை நினைக்காவிடினும், ஏற்றுக் கொள்ளும் மனது,நாம் நினைப்பவர் வேறொருவரை நினைப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.அதுவே,நேசத்தின் சுயநலம்.
அவனுக்கும் புரிந்து விட்டது,தர்ஷினியின் மனதில் அவள் கணவனுக்கு மட்டுமே இடம் என்று.ஆனால்,தன் மனைவியாக வந்தால்,அதை தன்னால் மாற்றி விட என்று ஆழமாக நம்பினான்,அவன்.
ஆழமான நம்பிக்கைகள்,ஒரு போதும் பொய்ப்பது இல்லை.அது பிரபஞ்சத்தின் விதியும் கூட.
ஆழம் காண இயலா நேசங்கள்,பிரபஞ்ச விதிகளையும் தோற்கடித்திடுமே!
அவன் அமைதியாக வண்டியோட்ட,ஆர்த்தி அவனின் உணர்வுகள் மௌனமாய் உள்வாங்கி வண்ணம் அமர்ந்திருக்க,சில நொடிகள் கழித்தே அங்கு நிலவிய மௌனக்காற்றை, அவளே கலைத்தாள்.
“அத்தான்ன்ன்ன்..”
“ப்ச்ச்..என்ன..?”
“ஏதாச்சும் ப்ராப்ளமா..?”
“நத்திங்க்..”பட்டும் படாமல் வந்த அவன் பதிலில் அவள் முகம் ஒரு நொடி வாடி, மறுநொடி இயல்பாகியது.
எப்போதும்,அவனின் எதிர்வினை புறக்கணிப்பே.கேட்காமல் கிடைப்பதற்கு இங்கு மதிப்பேது..?
“அத்தான்…எங்க வீட்ல மாப்ள பாக்குறாங்க..”
“அதுக்கு நா என்ன பண்ணனும்..லுக் ஆர்த்தி..நா அப்போவே சொல்லிட்டேன்..உன் மேல எனக்கு அப்டி ஒரு தாட் இல்லன்னு..அப்றம் ஏன் டார்ச்சர் பண்ற..?”
“உங்களுக்கு இல்லாம இருக்கலாம்..பட் எனக்கு இருக்கே..”
“லிஸின்..காதல கட்டாயப்படுத்தி வர வச்சுர முடியாது..மைன்ட் இட்..” என்றவனின் குரலோ,அவளின் நிலைமையும் அவன் நிலையும் ஒன்றென உணர்ந்து,கடுமையாய் வெளி வந்தது.
“இங்க பாருங்க அத்தான்..நீங்க என்ன சொன்னாலும் தா உங்கள தவிர யாரயும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..” புன்னகையுடன் சொன்னாலும்,அவள் குரலில் அத்தனை உறுதி.துளியும் விளையாட்டுத்தனம் இல்லை,அந்த வார்த்தைகளில்.
“அப்போ ஔவையாராத்தான் ஆகிருவ..”கடுப்பு தெறித்தது,
அவன் குரலில்.
“பரவால..” வாடாத புன்னகையுடன் பதில் சொன்னவள் இதெல்லாம்,பொருட்டே இல்லை.இதை விட காரசாரமாக எத்தனையோ,விவாதங்கள் நடந்தேறியிருக்கத் தான் செய்தன.
ஒரு முறை தன்னை மீறி கை ஓங்கி அறைந்தும் இருக்கிறானே,கன்னம் வீங்க.
அதற்கே,அசராமல் நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்து,அவனை அதிர வைத்தவளுக்கு,இந்த சுடுசொற்களும் வாதவிவாதங்களும் எம்மாத்திரம்..?
அவளை பேரூந்து நிலையத்தில் இறக்கி விட்டு,தன் அலுவலகத்தினுள் நுழைந்தவனுக்கு, வேலைப்பளுவில் தற்காலிகமாய் தர்ஷினியைப் பற்றியான சிந்தனைகள் பின்தள்ளப்பட்டிருந்தன.
●●●●●●●
சொல்ல மறந்த கதை..
“இந்த பிப்டீன் மில்லி மீட்டர் லென்ஸ ரிமூவ் பண்ணுங்க..அப்போ தான் ஓகேவாகுமா இருக்கும் மச்சான்..”கேமரா வைத்துக் கொண்டிருந்த குணாவிடம் ப்ரித்வி கூற,அவனுக்கும் அதுவே சரியெனத் தோன்றிற்று.
“லோ கீ லைட்னிங்..ஹீரோவோட ஷெடோ மெய்னா தெரியனும்..அதுக்கப்றம்,அவன் நடக்கும் போது,ஃபில்லிங் லைட்ட கூட்டுனா சரி..” அவனுக்கு கட்டளைகளை பிறப்பித்து விட்டு,ஆடவனின் முன்னே வந்து நின்றான்,ப்ரித்வி.
“சிவா ஓகே தான..?”
“ம்ம்ம்ம்..”
“உன் ஐ மூவ்மண்ட் ரைட் டு லெஃப்ட் ஸ்லோவா இருக்கனும்..அமைதியா இருந்தாலும்,உன் கண்ணுல சின்னதா ஒரு குரூரம் தெரியனும்..அப்றம்,கீழே விழுந்தவன பாத்து,லேசா நக்கலா கண்ணு சிரிக்கனும்..தென்,அவன் யாருன்னு கேக்கற மாதிரியும்,அப்றம் நீ துணியோட முடிச்ச அவிழ்க்குற மாதிரி கைய கொண்டு போவ..அப்போ ஃபோகஸ் உன் பின்னால போகும்..அதோட சீன் கட்..” என்க,கவனமாய் கேட்டுக் கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில்,விழிகள் மட்டுமே தப்பும் விதமாய்,முகத்தை கருநிறத் துணி மறைத்திருக்க,முன்னே வந்து நின்றிட,அவன் விழிகள் ஆளை வெட்டியது.
“ஷார்ப் ஐஸ்டா உனக்கு..மின்னலே தான்” ப்ரித்வி கூறியது கேட்டிருக்குமோ என சந்தேகிக்கும் படி இருந்தது,அவன் காண்பித்த பாவனை.
“ஒரு அப்ரிஷியேஷன இத விட யாராலயும் கேவலப்படுத்த முடியாது டா..” நெஞ்சில் அடித்து முணுமுணுத்தவாறு ஓரமாய் அமர்ந்து இருந்தான் பாலா,வேர்க்கடலையை மென்றவாறு.
கேமராவைப் பிடித்தவாறு,குணா முன்னே வர,”ஃபோகஸ் முழுக்க ஹீரோ கண்ணு மேல இருக்கனும்..” என்றிட,அவனும் கையைசத்து சரியென்றான்.
“ஆக்ஷன்” என்றதுமே,அவனுடன் சேர்ந்து கேமராவும் நகர்ந்திட,மின்னல் விழிகளில் இயல்பாய் வந்து போன உணர்வுகளை,அப்படியே கேமரா உள்வாங்கிக் கொள்ள,”கட்” என்றான்,அந்த காட்சியை படமாக்கிய பின்னர்.
“எக்ஸலன்ட் டா..” கேமராவை பார்த்தவாறு ப்ரித்வி சொன்னவனின் விழிகளில் பிரமிப்பு.”ஷாட் ஓகே!” என்றதுமே,முகத்திரை நீக்கியவாறு ஆடவன் அமர்ந்து விட,பாலா தான் ப்ரித்வியுடன் இணைந்து கேமராவை பார்த்தது.
“செம்மயா இருக்கு மச்சி..” பாலா சொல்ல,முகத்தில் எந்த வித உணர்வுமின்றி அமர்ந்து இருந்தவனோ,விழி நிமிர்த்தி பார்த்திட,”அழுத்தம் தான்..” என முணுமுணுத்துக் கொண்டான்,தோழன்.
அன்றுடன் அன்றைக்குரிய காட்சிக்கான படப் பிடிப்பு முடிந்திட,ப்ரித்வியிடம் சொல்லிக் கொண்டு விடைபெற்றனர்,இருவரும்.
ஆடவனோ,போகும் முன்னமே அணிந்திருந்த நீல நிற காஸ்மெடிக் கான்டெக்ட் லென்ஸை கழற்றி பத்திரப்படுத்திட,பாலாவோ சலிப்பாய் பார்த்தான்.
“இந்த லென்ஸ் இல்லாம நார்மலாவே நடிச்சி இருந்தா,இந்த கண்ணு இன்னும் பிச்சிக்கும்..அந்த எரும மாடு எங்க கேட்டான்..இப்போ யோசிக்கிறான்..” புலம்பியவாறு வண்டியை உதைத்து கிளப்பினான்,பாலா.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஆடவனை அவன் வீட்டில் விட்டு விட்டு,அவன் அகன்றிருக்க குளியலறைக்குள் நுழைந்து குளித்து விட்டு,தலையை துவட்டியவாறு வெளியே வர,மேசையில் அவனுக்கான இரவுணவு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அலைபேசியை நோண்டியவாறே உண்டு முடித்தான்.வேலைக்கு இருக்கும் பாட்டியும்,இன்று ஊருக்கு கிளம்பிச் சென்றிருக்க,தனிமை அவ்விடம் முழுவதும் வியாபித்து நின்று,அவனையும் இழுத்துக் கொண்டது.
வாசற்கதவை திறந்து வைத்து,திண்ணையில் அமர்ந்து இருந்தவனோ,அதற்கு மேலும் தாமதித்திட முடியாமல் உறங்கச் செல்ல,மெத்தையும் அவனை தனக்குள் வாகாய் சுருட்டிக் கொண்டது.
அலைபேசியை மீளவும்,எடுத்துப் பார்த்து விட்டு விழி மூடும் முன்,அவள் நினைவு.அவளின் நடத்தைகள்,அவனின் யோசனையில் இடம் கொள்ள,அவனின் சம்மதமின்றி அவன் உணராமலே அவன் சிந்தைகள்,அவளால் களவாடப்பட்டு இருந்தன.
நாளை,ஏதேனும் நடந்தால்,அவளிடம் நிச்சயம் கேள்வி கேட்பது தான் என்ற முடிவில் உறங்கிப் போக,அவள் நினைவுகள் மெதுவாய் மங்கின.
அவளிடம் கேள்வி கேட்க வேண்டிய தேவை இல்லை.ஏன்,அப்படி கேள்வி கேட்பது அவன் இயல்பும் இல்லை.ஆனால்,கேட்க வேண்டும் என்கின்ற உறுதி,அவனின் இயல்பை மீறி.
உணராமல் உள்ளத்தில் உழலும் அவள் எண்ணங்களே,அவனின் உணர்வாகி உயிர்க்கோர்த்திடும் என்று ஆடவன் அறிந்திருக்கும் சாத்தியமில்லை.
காதல் புதிரே!
●●●●●●●●
இரு நாட்கள் கடந்திருந்தன.
ஆடவனுக்கு பயந்தே ஒரு வழியாகி விட்டிருந்தாள்,வர்ஷினி.எப்போதும்,பதட்டத்திலேயே இருக்க காயத்ரி தான்,திட்டித் தீர்த்தாள்.
ஒருமுறை வீட்டுக்கு வந்த சமயம்,இவளின் கூத்தை தாயாரிடம் ஒப்பிக்க,அவரோ அன்று நடந்ததை அப்படியே காயத்ரியிடம் புலம்பி,மீளவும் முதுகில் ஓங்கி ஒன்று வைத்து விட்டே நகர்ந்திருந்தார்.
இப்போதும்,அதை நினைக்கையில் தோழிக்கும் அதிர்ச்சி தான்.
“மழைல நனஞ்ச கோழி மாதிரி எல்லாத்துக்கும் வெடவெடன்னு நடுங்கிட்டு இருப்ப..என்ன தைரியத்துல டி பேசப் போன..? அதுவும் யாருன்னு தெரியாம..”மேவாயில் கை வைத்து திகைப்பு விலகாது கேட்க,”அது ஒரு குருட்டு நம்பிக்க டி..அப்பப்போ நடந்துப்பேன்ல..உனக்கு தெரியும் தான..” என்றாள்,பாவமாய்.
“ம்ம் சரி தான்..அதுக்கு மட்டுமா,அந்த ஆளு முன்னாடி வர பயப்பட்ற..?”
“அதுவும் தான்..ஆனா,அவரு மனசுல என்ன பத்தி இருக்குற தாட் வேறல..அதனால முன்னாடி போக ஒரு மாதிரி சங்கடமா இருக்கு..அதான் மேக்ஸிமம் அவாய்ட் பண்றேன்..”
அவ்வளவு உண்மை,அவள் குரலில்.நிஜத்துக்குமே,அவன் மனதில் இருக்கும் எண்ணப் போக்கை அறிந்தவளுக்கு,அவனை எதிர்கொள்வதில் சங்கடமோ சங்கடம்.உள்ளுக்குள் தவறு செய்த உணர்வு வேறு குத்தித்தின்றது.
பேசியவாறு நூலகம் வந்திட,அங்கும் ஆடவன் இருக்க வந்த வழியே திரும்பி நடந்தவளை ஆடவன் எரிச்சலுடன் பார்த்திட,உடன் இருந்த கிஷோருக்கு விழிகள் இடுங்கின.
“சிவா,நோட் பண்ணியா..?இந்தப் பொண்ணு டிஃபரண்டா நடந்துக்குது இல்ல..” ஆடவனிடமே அவள் கூறிட,வெறுமனே தலையாட்டி வைத்தான்,அவன்.
“உன்ன பாத்து தான் பயப்டுது போல..” கேலியாய் அவன் சொல்லி வைத்திட,ஆடவனின் மனதின் தீ,இன்னும் வலுப்பெற்றது.
காலையில் வரும் போது,அன்று பாட்டியிடம் அவனைப் பற்றி பேசி விட்டுச் சென்ற நபர் எதிர்ப்பட,அவரின் பார்வையே இவன் மீது குற்றம் சுமத்துவதாய்.
இதில்,அவரின் பள்ளி செல்லும் மகளிருவரையும் இவன் பார்வையில் இருந்து காப்பாற்றுவது போல்,அவர் கூட்டிச் செல்ல பொங்கியவனின் கோபத் தீ முழுக்க,பெண்ணவளின் மீது திரும்பியிருக்க,இதோ இப்போது மீளவும் நெய் ஊற்றும் நிகழ்வு.
அதுவும்,அவரின் பார்வை.என்னவோ,பெண் பித்தன் போல் அது சுட்டிட,அறுவறுத்துப் போனவனுக்கு,அணையா கோபம் அளவில்லாமல்.
சில மணி நேரங்கள் கடந்திருந்தன.
சிவாவின் பார்வை வீச்சின் வாடை கூட இல்லாத பக்கத்தில், ஒரு ஓரமாய் அமர்ந்து ஆசுவாசமாய் உண்டு கொண்டிருந்தாள்,பெண்ணவள்.பெரிதாய் சிற்றுண்டிச் சாலையில் எவரும் இல்லாதது,நிம்மதியைத் தந்தது.
அவளின் பயத்தில் நொந்து போய் அமர்ந்திருந்தாள்,தோழி.இடைக்கிடை திட்டினாலும்,அது விழலுக்கு இறைத்த நீர் தான்.
“சும்மா பயந்து சாகாத..நாம காலேஜ்ல இருந்துட்டு தலைமறைவாவா சுத்த முடியும்..தைரியமா ஃபேஸ் பண்ண பழகு..” அவளின் அறிவுரைகளை பொம்மை போல் தலையாட்டி ஏற்றுக் கொண்டாள்.
பாதி உணவு மீதமிருக்க,தண்ணீரை பருகியவளின் செவியை நிரப்பியது,அழுத்தமான காலடியோசை.
அழுத்தமான நடையை அது குறித்துக் காட்ட,இதயத்தில் பிடித்துக் கொண்ட பயமதில் சட்டென திரும்பியவளின்,விழிகள் ஏகத்துக்கும் விரிந்தன.
சட்டையைக் கையை முட்டி வரை ஏற்றி மடித்து விட்டு,மெல்லிய குரலில் பாலாவிடம் ஏதோ கூறியவாறு,அவர்களை நோக்கி எட்டு வைத்துக் கொண்டிருந்தான்,ஆடவன்.
அவளோ வாயில் அடைத்திருந்த உணவை,மென்று விழுங்கக் கூட மறந்து அவனைப் பார்த்திருக்க,மின்னல் விழிகளின் பார்வை மின்னலென அவளைத் தழுவி மீண்டது.
செறிந்த புருவமது கண்ணுக்கே தெரியாத அளவில் சுருங்கிட,அது பறைசாற்றியது அவளின் முகவதனத்திலும் உடல்மொழியிலும் வந்த மாற்றமொன்று கூட,அவனிடம் சிக்காமல் தப்பித்திடவில்லையென்று.
“முழுங்குடி மாடு..” காயத்ரி உலுக்கிடவே,உணவை மென்றவள்,அதிர்ந்து திகைத்து என்ன செய்வதென்று புரியாமல்,எழுந்தே நின்று விட,திக் பிரமை பிடித்தது போல் அவளிருந்த தோற்றத்தில் அவன் விழிகளோரம்,எள்ளல் புன்னகை.
ஏதோ தோன்ற,விழிகளை சுழற்றியவளுக்கு,அவ்விடத்தில் தம்மைத் தவிர யாருமில்லை என்பது புத்திக்கு உரைத்திட,உள்ளம் சில்லிட விழிகளில் அப்பட்டமான மிரட்சி.
அதுவும்,காலரை தூக்கி பின்னந்தலையோ கோதிய படி வந்த,அவனின் தோரணையில் அரண்டு விட்டது, பெண்மை.
அவனின் ஒவ்வொரு பாதவெட்டுக்கும் இவள் இதயத் துடிப்பு எகிற,நெஞ்சடைத்துப் போய் விட்டது,பெண்ணவளுக்கு.
அவர்களின் அருகே வந்தவனோ,அவளுக்கு முன்னிருந்த மேசையில் ஒற்றைக் கரம் குற்றி ஏறி அமர்ந்திட,அவ்வளவு தான் பயத்தில் கால்களில் நடுக்கம்.
ஒரு பாதத்தை கதிரையில் வைத்து,மறுபாதம் சுவாதீனமாக அசைந்திட,வலக்கரத்தை மேசையில் ஊன்றியவாறு,அவன் வீசிய கத்திமுனைப் பார்வையில் அவளின் தைரியம் மொத்தமாய் கூரிடப்பட,மலங்க மலங்க விழித்தாள்.
அவளின் விழிமொழியில்,அவன் முகத்தில் ஆயாச பாவம்.சட்டென,கரங்களை மாருக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நிமிர்ந்தவனின்,பார்வை அனல் வீசியது.
ஒற்றைக் கால் காற்றில் அலைய,ஒய்யாரமாய் ராஜ தோரணையில் அவன் அமர்ந்திருக்க,காயத்ரியின் மனமோ,”ஜஸ்ட் வாவ் ஃபீல்” இல் நனைந்தது.
“அட செம்ம கெத்து தான் போ..மேனரிசம் அள்ளுதே..” இமைக்க மறந்து அவனைப் பார்த்திருக்க,மனமோ அவனை புகழ்ந்து தள்ளியது.
“சிட்!” என்றான்,தனக்கு முன்னே இருந்த இருக்கையை விழிகளால் சுட்டி,அவளிடம்.அவன் விழிகளோ,அடிக்கடி அலைந்து அவ்விடம் வேறொருவரும் இல்லை என உறுதிப்படுத்தின.
“நானா..?” என்றவள்,அவனின் முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டு அமர்ந்து விட,பார்வை நிமிராமல் தரையை மேய்ந்தது.
காவலரிடம் அகப்பட்ட கைதியென,அவள் நிலை.
தொடரும்.
🖋️அதி..!
2026.07.05

