
வணக்கம் வாசக தோழமைகளே,
நித்தம் வருவாயா நட்சத்திரமே கதை நேரடிப் புத்தகமாக வெளி வந்த என்னுடைய இரண்டாவது கதை. உங்களுடன் கதையை பகிர்வதில் மகிழ்ச்சி.. படித்துவிட்டு நிறை குறைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
மதிளா சுகி 🙂🦋
ஊர் கூடி மேள தாளங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட மணமேடையில் யாகக் குண்டத்தின் தீ ஜூவாலையின் அருகே அமர்ந்திருந்தவள் ஐயரின் அறிவுரைப்படி மஞ்சளில் மூத்த கடவுளான விநாயகரை செய்து தன் முன் வைத்தவள், ப்ரோகிதர் சொல்லச் சொல்ல மந்திரங்களை உச்சரித்துப் பூக்களைப் போட்டுக்கொண்டிருந்தாள், மஞ்சள் குங்குமம் மணத்தோடு, பூக்களின் சுகந்தமும் சேர்ந்து நறுமணத்தைப் பரப்ப, தலைக்கவிழ்ந்து அமர்ந்தருந்தவளின் மனதுக்குப் பிடித்த திருமணம் அல்ல தாய் தந்தையின் வற்புறுத்தலிலே அந்த மணமேடையில் ஜீவனற்ற உடலாய் அமர்ந்திருந்தாள்,
அவளருகே அமர்ந்திருந்தவனும் அவளைப் போலவே மந்திரங்களைச் சொல்லிப் பூக்களை மஞ்சளிலான விநாயகர் மேல் போட, அரங்கம் நிறைந்த உறவுகளின் கூட்டம் சிரிப்பொலியின் சலசலப்பு, அவளைத் தவிர அங்கிருந்த அனைவரின் முகத்தில் மகிழ்ச்சி தவழ, மகிழினி முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை, மங்கல நாண் பெரியோரின் ஆசிர்வாதம் பெற்று மணமேடை வந்து சேர, மங்கல இசை முழங்க மஞ்சள் அரிசி ஆசிர்வாத மழையாய் பொழிய, சுற்றமும் சந்தோசத்தில் இருக்க, அடுத்த இரண்டு முடிச்சைப் போட தங்கை முறையைச் சேர்ந்த பெண் குனிந்து மங்கல நாணைத் தேட, மகிழினியின் கழுத்தில் மங்கல நாண் இல்லை சிறிய சலசலப்புடன் மணமகனின் கையிலே இருந்த மங்கல நாணை பார்த்துச் சபையில் அனைவரும் அதிர்ச்சி அடைய,
“அண்ணா தாலியை கட்டு” எனத் தங்கை முறையைச் சேர்ந்த பெண்னொருத்தி மணமகனை உலுக்க,
“அய்யோ வேண்டாம்” என அலறிய படி உறக்கத்திலிருந்து எழுந்தாள் மகிழினி .
“என்னடி மகிழ் இன்னைக்கும் தாலி கட்டலையா” என்றபடி காய்கறிகளை அரிந்து கொண்டிருந்தார் விஜயலட்சுமி மகிழினியின் தாயார்.
“முண்ணுத்தி அறுபத்தி அஞ்சு நாளும் ஒரே கனவு, அவனும் டெய்லி தாலிய கையில எடுக்குறான் கட்ட மாட்டேன்றான், என்னமா செய்றது, ஒரே கனவ பார்த்துப் பார்த்து ரொம்பப் போரடிக்குது” எனச் சலித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் மகிழினி.
“உனக்கு என்னடி அவன் தாலி கட்டணும்ன்னு நினைக்குறியா.? வேண்டாம்னு நினைக்குறியா.?” என நக்கலாய் கேட்ட விஜயலட்சுமியை பார்த்து,
“மா. அம்மா மாதிரி பேசுங்க, எதோ ப்ரெண்ட் மாதிரி பேசுறிங்க” என முகத்தைச் சுழித்தாள்.
“நீங்க தானடி சொல்றிங்க அம்மானா ப்ரெண்ட் மாதிரி இருக்கணும்னு இப்ப என்ன அம்மா மாதிரி நடந்துக்கங்க சொல்லுற, இப்ப கூட நம்ம ரெண்டு பேரும் ரோட்ல நடந்து போன, இவங்க யாரு உங்க தங்கச்சியா கேக்குறாங்க உன்னைய காட்டி, நான் இந்த வயசுலையும் உனக்கு அக்கா மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, நானும் உன் ப்ரெண்ட் மாதிரி நினைச்சுக்க” எனச் சொன்ன விஜயலட்சுமியை பார்த்து,
“அதுக்குன்னு இதெல்லாம் டூ மச் மா” என்றவள் பல்லைத் துலக்க ஆரம்பித்திருந்தாள்.
“இப்ப என்ன அம்மா மாதிரி நடந்துகணும் அவ்வளவு தான, இப்ப பாரு” என்றவர் வெளியே சென்று துடைப்பமும் கையுமாய் வந்து,
“மரியாதையா சொல்லு யாரு அந்தப் பையன் மணமேடை வரைக்கும் வந்து உன் பக்கத்துல உட்காருர வரைக்கும் தைரியமா இருந்தவன், ஏன் தாலியை கட்டலை, முன்ன பின்ன அவனைப் பாத்துருக்கியா? அதுவும் ஒரு வருசமா ஒரு நாள் கூட லீவ் போடாம கனவுல வரான் என்னடி சங்கதி? ” எனக் கேள்விகளை அடுக்க,
“மா இதுவரை நான் ஒரு தடவ கூட அவனைப் பார்த்ததில்லை மா ஏன்மா? காலையிலயே உயிர வாங்குற, டீயை போட்டுத்தா” எனக் கேட்ட மகிழினியை,
“நீ தானடி ஸ்ட்ரிக்ட் அம்மாவா இருக்கச் சொன்ன, பாரு முழுசா ஸ்டிரிக்ட்டான உன் அம்மா விஜயலட்சுமியை பாரு” என முகத்தை அவளருகே காட்டி சிரிக்க,
“அய்யோ அம்மா நீ நார்மலா இரும்மா” எனக் கத்த தொடங்கினாள் மகிழ்.
“இந்தாடி டீயை குடி, இங்க இருக்க வரைக்கும் நல்ல சொகுசா இருந்துக்க, அப்பறம்” என அவர் எதோ சொல்ல வர,
“மாமியார் வீட்ல போய் இப்படிலாம் இருக்க முடியாது அதானேமா?” எனச் சொன்ன படி டீயை பருகினாள்.
“பொட்டைபுள்ளை எந்திருக்குற நேரமா டி இது, மதிய சாப்படுற நேரத்துல எந்திருக்குற, போய்க் குளிச்சுட்டு வா” என வசைபாடியபடி சுட சுட சாதமும் மகிழினிக்கு விருப்பமான முருங்கைகாய் சாம்பரும் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
“சாப்பிட்டுக் குளிக்கிறேன் மா ரொம்பப் பசிக்குது, உன் முருங்கைக்காய் சம்பார் வாசம் என் கனவுல கூட வந்துச்சுனா பார்த்துக்கயேன்”
“அப்புடியா டி, அடுத்தத் தடவ கனவு வரும்போது மாப்பிளைக்கும் முருங்கைக்கா சாம்பார் வாசனை வந்துச்சான்னு மறக்காம கேட்டுச் சொல்லு” எனச் சிரிக்க,
“அவன் யாருனே தெரியல அதுக்குள்ள மாப்பிள்ளைனு முடிவு பண்ணிட்டியா, எனக்கு இப்ப தான் இருபத்தி மூணு வயசாகுது அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்”எனப் புலம்பியவளை,
“நான் எங்கடிம்மா கல்யாணத்துக்கு அவசரபடுறேன், நீ தான் கல்யாண கனவு வருது உலகத்துல இல்லாத ராசகுமாரன பாத்துட்ட மாதிரி வானத்துல பறந்திட்டு இருக்க, கனவுல பார்த்ததுக்கே இந்தப் பறவை பறக்குற நேர்ல பார்த்துட்ட இந்த அம்மாவலாம் மறந்தே போயிருவ” என முகத்தைத் திருப்பிக்கொள்ள,
“மூஞ்ச அப்படி வைக்காத உனக்குச் செட் ஆகலை, வந்து சாப்பாடு ஊட்டுமா பசிக்குது” என மழலையாகிப் போனாள் மகிழினி,
“வாடி என் கண்ணு” என ஒவ்வொரு உருண்டையாய் உருட்டி ஊட்டிவிட அவள் ரசித்து உன்பதை கண்டு மனநிறைவுக்கொண்டார் விஜயலட்சுமி.
இந்த ஒரு வருடக்காலமாக இந்தக் கனவு அவளுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது ஏன் எதுக்கு என்று புரியாமல் இருக்கும் மகிழினி ஒரு வேளை கனவில் வருபவனை நேரில் கண்டால் அவளால் எதையாவது கண்டுபிடிக்க முடியும் என எண்ணுகிறாள், ஒரு வேளை அவனைக் கண்டுவிட்டால் இந்தக் கனவு வராமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆழமாக நம்புகிறாள் மகிழினி.
விஜயலட்சுமி கலகலப்பான அம்மா, தன் மகளுடன் ஒரு தோழி போல் நடந்துக்கொள்வார் பெற்ற பிள்ளையிடம் கோபப்பட்டு அதட்டி வளர்த்து அவர்கள் மனதில் வில்லனாய் இருப்பதை விட நல்ல தோழியாக இருப்பதையே அவர் தேர்வு செய்தார், தோழியாக இருந்தால் தான் அவர்களுக்கு நடக்கும் நல்லது கெட்டதை நெருக்கமாக இருந்து கண்காணிக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை, இவை அனைத்தும் அவர் கடந்து வந்த கரடு முரடான பாதை கற்றுக் கொடுத்தது மகிழினி பிறந்து ஒரு வருடத்தில் கணவனை இழந்தார் ஊர்காரர்கள் உறவுகாரர்கள் அனைவரும் மகிழினியை கள்ளி பால் ஊற்றிக் கொன்றுவிட்டு மறுமணம் செய்ய வற்புறுத்த,
ஊரும் வேண்டாம் உறவும் வேண்டாமெனச் சென்னைக்கு வந்து தனக்குத் தெரிந்த தையல் கலையை மெருகேற்றி அதை அஸ்திவாரமாக்கி குழந்தையை வளர்த்தவர், மகிழினி மட்டுமே அவருக்கு உயிர் அவளுக்காக மட்டுமே வாழும் ஒரு ஜீவன் விஜயலட்சுமி.
“விஜி அக்கா.! விஜி அக்கா.!” என்ற குரலில் நினைவு களைந்தவர் வாசலைப் பார்த்து,
“இருடி பவுணு! குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டிகிட்டு இருக்கேன் உள்ள வாயேன்” எனக் குரல் கொடுக்க,
“இதோ வரேன்க்கா” எனக் குரல் கொடுத்த படி உள்ளே வந்தார் பக்கத்துவீட்டுப் பவுண்.
“வாங்க ஆண்ட்டி, இன்னக்கி என்ன டீ போட இஞ்சியா? ஏலக்காயா? என்ன வாங்க வந்தீங்க?” எனக் கேட்டாள் மகிழினி ,
“அடி கழுதை நான் உனக்கு ஆண்ட்டியா? எனக்குக் கல்யாணமாகி ஐஞ்சு வருசம் தான் ஆகுது” என அவளின் தலையில் தட்டினார் பவுண்.
“குழந்தைய கழுதைன்னு சொல்லாதடி” எனக் கண்டித்தார் விஜயலட்சுமி.
“ஆமாக்கா குழந்தை குழந்தைன்னு சொல்லிட்டு இரு அவளுக்குக் கல்யாண வயசாகிருச்சு அது உனக்குத் தெரியலையா.?” எனப் பவுணு கேட்க,
“என்னைக்கு என் பொண்ண வந்து எனக்குக் கல்யாணம் பண்ணிவைனு கேட்குறாளோ அதுவரைக்கும் நான் கல்யாண பேச்சை எடுக்கமாட்டேன், அவளே கனவுல பார்த்த ராசகுமாரனை கூட்டிட்டு வந்தாலும் எனக்கு டபுள் ஓகே” எனச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று சில துணிகளை எடுத்து வந்து
“இந்தாடி தச்சுட்டேன் அளவு சரியா இருக்கா பார்த்துச் சொல்லு“ எனப் பவுணிடம் கொடுத்தார்.
“எனக்கு உன்னை மாதிரி ஒரு அம்மா இல்லாமா போச்சேனு வருத்தமா இருக்குகா, குழந்தை தொட்டில்ல தூங்க வச்சிட்டு வந்திருக்கேன், அப்பறம் வரேன்கா” எனப் பவுண் கிளம்பி விட,
“அம்மா நான் யாரை கூட்டிட்டு வந்து காமிச்சாலும் எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருவியா?” எனக் கேள்வியாய் பார்த்தாள் மகிழினி.
“ஆமாடா கண்ணு, உன் சந்தோசம் தான இந்த அம்மாக்கு முக்கியம்”
“நான் அப்படிலாம் பண்ணமாட்டேன் அம்மா, எனக்கு நீங்க தான் முக்கியம்” என்றவள் அன்னையைக் கட்டிக்கொண்டு தோள்மேல் சாய்ந்தாள்.
“எனக்குத் தெரியும்மா உனக்கு அந்த எண்ணம் வராதுன்னு, பறவையைக் கூண்டுக்குள்ள அடைச்சு வச்சா தான் அதுக்குச் சிறகடிக்கவும் தோணும் அன்பை தேடி உறவுகளை வெளியில் தேட தோணும் அதே பறவையா சுதந்திரமா விட்டால், அதோட எல்லை எதுன்னு அதுவே வரையறுத்து அதுக்குள்ள சுதந்திரமா வாழப் பழகிக்கும் எல்லை மீறியும் போகாது” என அவளின் தலைக்கோதியபடி விஜயலட்சுமி சொல்ல அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள் மகிழினி.
******
மறுநாள் பொழுது விடிந்தும் விடியாமல் இருக்க என்றும் இல்லாத திருநாளாய் அன்று விழித்துக் குளித்துவிட்டு தன் சிகையை அலங்காரம் செய்தவள்,
“அம்மா அம்மா, பஸூக்கு காசு வேணும்” எனக் கத்தினாள் மகிழினி.
“வெளி ஜன்னல்ல வச்சிருக்கேன் எடுத்துக்கடி” எனக் குரல் கொடுத்தபடி அவளுக்கான சாப்பாடு சமைத்துக்கொண்டிருந்தார் விரைந்து சென்று பார்த்தவள்,
“அம்மா வெளி ஜன்னல்ல எங்கமா காசு இருக்குச் சாவி தான் இருக்கு” என வாசலில் நின்று கத்தினாள் மகிழினி.
“என்ன சாவிடி“ என அடுக்களையில் நின்றபடியே குரல் கொடுத்தார் விஜயலட்சுமி.
“பைக் சாவி மா” எனக் கத்தியவள் ‘ஆமா நம்ம வீட்ல ஏது பைக்’ என நினைத்தபடி “அம்மா யாரோ பைக் சாவிய நம்ம வெளி ஜன்னல்ல வச்சிட்டு போயிருக்காங்கமா எனச் சொல்லியபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“யாரோ வச்சிட்டு போகல நான் தான் வச்சேன், என் கூட வா”என வாசலுக்கு அழைத்து வந்தவர் அவளுக்கு விருப்பமான கருப்பு நிற ஸ்கூட்டியை காட்டி “உனக்குத் தான் டி மகிழ் இதுல ஆபிஸ் போ” எனச் சொல்ல,
“அம்மா நான் இன்னைக்கு இன்டர்வீயூ தான் போறேன் எதுக்குமா வண்டிலாம் வேலை கிடைச்சதுக்கு அப்பறம் வாங்கிக்கலாம்னு இருந்தேன் ஏன்மா உனக்கு இந்த அவசரம்“ என வசை பாடினாள் மகிழினி.
“இந்த வண்டில போயி வேலைய தேடு, இப்ப என்னடி கொறைஞ்சு போச்சு” எனச் சொன்ன விஜய லட்சுமியை கட்டித் தழுவியவள்,
“தேங்க்ஸ்மா” என மகிழினி சொல்ல,
“இப்ப தான் வசை பாடின இப்ப வந்து கட்டிப்பிடிக்கிற கள்ளி” எனச் சொன்ன தாயை “போமா” எனச் சொல்லிவிட்டு,
“சரி காசு கொடு வர நேரம் ஆகிட்டா வெளியவே சாப்பிட்டுக்கிறேன்” எனக்கேட்க,
“இருடி வரேன்” என உள்ளே சென்றவர் பெரிய சாப்பாட்டு பையைக் கொண்டு வந்தார்.
“அம்மா உன்ன யாரு சாப்பாடு கட்டச் சொன்னது, ஒரு நாள் வெளிய சாப்பிட விட மாட்டியே” எனச் சலித்துக்கொண்டாள்,
“எதுக்குடி வெளியா சாப்பிட்டு நோயை இழுத்து வச்சிக்குறதுக்கா, இப்ப இருக்கப் பொண்ணுங்களுக்கெல்லாம் மாத விலக்கு சரியான நேரத்துக்கு வர்ரது இல்லை, அந்திக்கு பூக்க கூடாது சொல்லுவங்க அதுகெல்லாம் நம்ம உணவு முறை மாறுனது தான் காரணம், எல்லாம் வயித்துல புள்ளய சுமக்கும் பாத்தா நீர்கட்டிய சுமந்துகிட்டு இருக்குதுக, நம்ம பவணுக்கே பாரு நாலு வருசம் கழிச்சு இப்ப தான் தென்னாங்குருத்துக் கணக்கா பெத்திருக்கா” எனச் சொல்லிய விஜயலட்சுமியை பார்த்து,
“அம்மா போதும்மா அடுத்து என்ன சொல்லப் போற தெரியும் விடு” எனச் சலித்தவளை,
“என்னடி தெரியும் உனக்குச் சொல்லு பார்ப்போம்” என அதட்டினார் விஜய லட்சுமி,
“பர்கர், பீட்சா சாப்பிட கூடாது, ஹோட்டால் சாப்பட்டுல கெமிக்கல் இருக்கும் அதனால வயசு பொண்ணுங்களுக்கு நீர்கட்டி வரும், அது வந்தா ப்ரீயட்ஸ் இர்ரெகுலர் ஆகும், கல்யாணம் ஆன பொண்ணா இருந்தா குழந்தை நிக்காது நம்ம பவுணக்கா ஒரு வருசம் ட்ரீட்மென்ட்க்கு அப்பறம் தான் பாப்பா பொறந்துச்சு, அந்த நிலைமை உன் பொண்ணு அதான் எனக்கு வரக் கூடாது எனக்குக் கல்யாணம் ஆன பத்து மாசத்துல உனக்குப் பேரனோ பேத்தியோ உடனே பாத்திரணும், அதனால நீ சமைச்சு கொடுக்குறத மட்டும் தான் நான் சாப்பிடணும், சரியா சொன்னேனா போதுமா எல்லாம் மைண்ட்ல இருக்கு ஹோட்டல்ன்ற வார்த்தை என் வாய்ல வராது” எனச் சொல்லியவள் மூச்சு வாங்க நின்றாள்.
“அதானே என் பொண்ணு ஆச்சே, பத்திரமா போய்ட்டு வாடித் தங்கம்” என விஜய லட்சுமி சொல்ல, அங்கிருந்து விடைபெற்று எதிர்காலத்தை நோக்கிப் பயணித்தாள் மகிழினி.

