Loading

சுழலி-20

கல்வராயன் மலை.

நேரம் கடந்துக் கொண்டிருந்தது. வஞ்சன் தனது இறுதி நொடிக்காகக் காத்துக் கொண்டிருந்தான். கருநாகத்தின் நஞ்சு மெல்ல மெல்ல அவனது உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது. மாரிவெண்கோ அனுப்பிய படைகள் வந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் செந்தூரன் ஆங்காரம் கொண்டு வஞ்சனை தேடி அலைந்தான்.

“கொங்கு நாடு முழுக்க இனி எனக்கே சொந்தம். வஞ்சா என் கை உன் குருதியைக் குடிக்கப் போகிறது. காளிங்கா, நல்ல காரியம் செய்தாயடா! நல்ல காரியம் செய்தாய்.” என்று கொக்கரித்தான் செந்தூரன். அவன் முழுதாய் ஏவலின் கட்டிற்குள் வந்திருந்தான். அவனின் நல்லெண்ணங்கள் அனைத்தும் ஆழத்தில் அமிழ்ந்துபோனது. பேராசையும், அனைத்தும் தனக்கே, நானே சிறந்தவன் என்ற தலைக்கணம் மட்டுமே அவனுள் வியாபித்து இருந்தது.

ஆனால், வனக்காட்டிற்குள் செந்தூரனால் நுழைய முடியவில்லை. அவன் உடலில் வாசம் செய்துக் கொண்டிருந்த ஏவலால் செந்தூரன் திடீரென தூக்கியெறியப்பட, அழுத்தம் தாங்காது செந்தூரன் ஆன்மா வெளியேறியது. தன்முன்னே தன் உடல் அவதியுறுவதை செந்தூரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“கடவுளே! எந்த துன்பத்தையும் நான் தாங்கிக் கொள்வேன். ஆனால், நடக்கவிருக்கும் அனைத்து தீங்கிற்கும் நானே காரணமாகிப் போனேனே. ஒரு நிமிடம் யோசித்திருந்தால் அந்த கயவனை கண்டுக்கொண்டிருப்பேனே. நொடி நேரம் சித்தம் தப்பியதால் இத்தனை இன்னல்களா? ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதனை சரிசெய்ய நான் சித்தமாயிருக்கிறேன் ஆண்டவா” கதறிக் கொண்டிருந்தது செந்தூரனின் ஆன்மா.

ஏவல் வனக்காட்டிற்குள் செல்ல முயற்சி செய்துக் கொண்டிருக்க, அந்த நேரம் சித்தமுனி தோன்றினார்.

“மாபெரும் தவறு செய்தபின், இனி வருத்தம் கொள்வதில் ஏதும் பயனில்லை செந்தூரா. அந்த ஏவல் பல அகோரிகளின் மந்திர உருவால் உருவாக்கப்பட்டது. அதனை தற்சமயம் கட்டுப்படுத்தக்கூட என் கமண்டல நீர் தேவை. ஆனால் அதனையும் நீ என்னால் சாபம் பெற்றவர்களுக்கு கொடுத்துவிட்டாய். எப்படியாவது வனக்காட்டிற்குள் நுழைய முற்படு. அங்கு சென்றபின், அந்த ஏவலால் உன் உடலில் இருக்க முடியாது. ஆனால், கவனம்! வனதேவதை காளிங்கன் செய்த செயலால் உக்கிரத்தில் இருக்கிறாள். எக்காரணம் கொண்டும் அவளின் கோபத்திற்கு ஆளாகி விடாதே. வனக்காட்டைக் கடந்து, ஒரு குன்றின்மேல் வஞ்சன் உன் வரவுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறான். அவனின் கடைசி நிமிடங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைந்து செல்.!” என்றவர் அங்கிருந்து மறைந்தார். புரிந்தும் புரியாத நிலைதான் செந்தூரனின் ஆன்மாவிற்கு.

பல முயற்சிகள் செய்தும் ஏவலால் செந்தூரனின் உடலோடு வனக்காட்டிற்குள் நுழைய முடியவில்லை. அனைத்தையும் செந்தூரனின் ஆன்மா கண்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது. சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்குபோல அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன் ஆன்மாவாக.

காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்க, ஏவலால் நிலைக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தனது குரு சொன்ன சூட்சம சக்திகளின் நிலை அவனுக்கு புரிந்தது.

அதாவது, வனக்காட்டிற்குள் எந்த தீய சக்தியும் நுழைய முடியாது. மேலும், அங்கு பல காலமாக மந்திரஉருவேறிய முருகன் சிலை இருப்பதால் எந்த மந்திர சக்தியும் வனக்காட்டிற்குள் எடுபடாது.

ஒரு மனிதனின் உடலில் துயில் கொண்டிருக்கும் குண்டலினி சக்திதான் சூட்சம சக்தி. பாம்பாக உருக்கொண்டு நம் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். அதனை சரியான பயிற்சி மூலம் ஆக்ஞா சக்தியாக கொண்டு வருகையில் புத்தி கூர்மையை அளிக்கும். பெரும்பால மனிதர்கள் ஆக்ஞா சக்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், சித்தர்களும் முனிவர்களும் குண்டலினியை இயக்கி சகஸ்ராரம் என்னும் உச்சநிலை அடைந்து ஞானநிலையை அடைகின்றனர். இதனை அடைவது ஒன்றும் சாதாரண விசயம் அல்லவே, பொறுமையும் சூட்சமும் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் செந்தூரன் அறிந்தே இருந்தான்.

இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குள் திட்டமிட்டவன், அங்குள்ள பாறையில் அமர்ந்து ஈசனை வழிபட துவங்கினான்.

ஊனாவன் உயிரானவன்,

உடலானவன் நம் உலகானவன்

எண்ணானவன் எழுத்தானவன்,

என்னுள் எல்லாமும் அவனானவன்

புல்லானவன் பூடானவன்,

பூமிதனில் பெரும் புயலானவன்

அண்டமும் பேரண்டமும்

அனைத்தும் அவனுள் அடக்கம்

ஆதியே சிவசக்தியே

அருள் புரிவாய் எனக்கும்.

சிவாய நம! நமசிவாய!

ஆதியே சிவசக்தியே

அருள் புரிவாய் எனக்கும்.

ஓம்! ஓம்! ஓம்!

மனமுருகி பாடியவன் தியான நிலையில் அமர்ந்துவிட்டான். அதன்பின் அவ்விடத்தையே பேரமைதி ஆட்கொண்டது.

தன் உதரத்தில் இருந்து உயிர்கள் குருதியாய் வழிந்ததை கண்டு கதறினாள் மஞ்சரி. எத்தனை எத்தனை ஆசையாய் காதல் செய்து மணி வயிற்றில் உதித்த தருணம் பேருவகை கொண்டாளோ, தற்போது காதல் கொண்ட கணவனின் வாயாலேயே இந்த உயிர்கள் அழிந்துவிட்டதை எண்ணி ஆங்காரம் கொண்டாள். நீலா அவளை அடக்கும் வழியறியாது தவிக்க, யட்சினி கமண்டல நீரோடு அங்கு வந்து சேர்ந்தாள். கோதைக்கு கமண்டல நீரை சிறிது அளித்தவள், மஞ்சரியை சமன்செய்ய முற்பட்டாள்.

“மஞ்சரி, நீ இருக்கும் நிலையும் படும் வேதனையும் என்னால் உணர முடிகிறது. ஆனால், இவையனைத்தும் செந்தூரனின் சுயநினைவால் உருவானது அல்ல என்பதை நீ உணர வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்…”

“போதும் நிறுத்து! இனியொருமுறை அந்த நயவஞ்சகனின் பெயரை உச்சரித்தால் நான் என்ன செய்வேன் என்றே தெரியாது. காதல் கொண்டு களித்து கந்தர்வ மணம் புரிந்து ஈருடல் ஒன்றான பின் மாய மந்திரத்தால் என் பிள்ளைகளை கொன்றவனின் பெயர் இனியொருமுறை என் செவிதனில் விழக் கூடாது. வீரத்தை பயன்படுத்தாது மாயத்தை நம்பிய கோழையவன். எம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற சாபமவன். சூல் கொண்ட என் கருவை உணர்ந்த சிறிது நொடிகளில் பிண்டங்களாய் மாற்றிய ராட்சசனவன். என் நெஞ்சம் இரணத்தில் கொதிக்கிறது.

பேராசை என்னும் பேய் பீடித்து, தலைக்கணம் என்னும் ஏவலால் ஆக்கிரமிக்கப்பட்ட அவன் கொடுத்த சாபம் பெரிதனில், இனி இறையும் இறைக்கான வேள்வியும் எதற்கு? எனது காதல் உண்மையென்றால், எனது பதிவிரதம் உண்மையென்றால் இழந்த சூல் மீண்டும் என் உதரம் வந்து சேரட்டும். நான் வணங்கும் ஈசனின் மீது ஆணை, அவனின் முடிவு என் கையில் மட்டுமே!” என்று ஆங்காரக் காளியாக கர்ஜித்தவள், மயங்கி சரிந்தாள்.

அவளின் மணிவயிற்றில் இருந்து வெளியேறிய உதிரம் மெல்ல மெல்ல அவளின் உடலுக்குள் சென்றுக் கொண்டிருந்தது. அங்கு நடப்பதை வெறும் பார்வையாளர்களாக அதிர்ச்சிக் கலந்து பார்த்துக் கொண்டிருந்தனர் யட்சினியும் நீலாவும் உடன் செவ்வேலனும்.

சித்தமுனி தோன்றினார். “யட்சினி, உடனே கமண்டல நீரை மஞ்சரிக்கு புகட்டு.” ஆணைக்கு மறுபேச்சின்றி நீரைப் புகட்டினாள் யட்சினி. மஞ்சரியின் உடலில் சூல் தங்கியது. யாரும் எதிர்பாராவண்ணம் இந்த நிகழ்வை எவராலும் நம்ப இயலவில்லை. ஆம், அவளின் காதல் உண்மையானது.

மயக்கத்தில் இருந்து எழுந்தவளின் முகத்தில் கிஞ்சித்தும் கோபக்கனல் மட்டும் குறையவேயில்லை. பெருமூச்சுகள் அவளிடம். அவளின் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. யட்சினி, மஞ்சரி, நீலா, செவ்வேலன், கோதை, செங்கொடி, மணிக்கொடி இவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரையும் வேள்வியின் புகை சூழ்ந்தது. யாருக்கும் தெரியாதவாறு ஒரு மாயவலையை உருவாக்கினார் சித்தமுனி.

“மஞ்சரி! வேள்வி எதற்கு என்று உனக்கு தெரியாதா? இனி யாராலும் விதியின் விளையாட்டை மாற்ற இயலாது. இனிவரும் காலங்கள் கடினமான முட்பாதைகளாக அமையும். நாடும் நாட்டு மக்களின் நலனுக்கும் இந்த வேள்வி மிக அவசியம். இங்கு பல ஊடுருவிகள் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு நாட்டை காக்கவே உன் உதரத்தில் மீண்டும் கருவுற்று இருக்கின்றனர் உனது குருத்துக்கள். உன் பிள்ளைகள் இம்மண்ணில் உதிக்கும் வரை எக்காரணத்திற்கொண்டும் நீ கல்வராயன் மலைக்கு செல்லக் கூடாது. அது பேராபத்தை நல்கும். கமண்டல நீரை கவனமாகக் காத்து வாருங்கள். தக்க சமயத்தில் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். ஓம் நமசிவாய!” என்றவர் காற்றோடு காற்றாகினார்.

….

செந்தூரனின் பாடல் கேட்டு வனக்காளி சற்று ஆசுவாசம் அடைந்தாள். ஆனால், அவனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒரு வித வெப்ப சக்தி ஏவலை நிலைக் கொள்ள இயலாமல் தவிக்க செய்தது. அது செந்தூரன் ஆன்மாவின் பிரதிபலிப்பு. ஒரு நொடி, ஒரே ஒரு நொடி ஏவல் பெருங்கூவலோடு செந்தூரனின் உடலை விட்டு வெளியே வர, சட்டென்று தனது உடலை அடைந்து வனக்காட்டிற்குள் நுழைந்தான் செந்தூரன்.

ஒரு பெருத்த பாறையின் அடியில் அமர்ந்தவன், தனது உடலை ஒருமுறை தொட்டுத்தடவிப் பார்த்தான். ஆன்மாவையும் ஏவலையும் ஒருசேர தாங்கியதால் உடல் பெரும் சோர்வடைந்தது. ஆனால், மனதோ தன்னவளுக்குத், தான் அளித்த சாபத்தை எண்ணிக் கலங்கியது. இந்நேரம் அவள் தன்னை எப்படி நினைத்து இருப்பாள் என்பதே பெரும் கலக்கமாய் இருந்தது செந்தூரனிற்கு.

அவனின் உடல்தளர்வாகிக் கொண்டே சென்றது. ஒருபுறம் தன் வரவிற்காக காத்துக்கிடக்கும் வஞ்சன். இன்னொருபுறம் தனது உடலுக்காக கொக்கரிக்கும் ஏவல் சக்தி. தற்போது அவனுக்கு இந்த வனக்காடு ஒன்றே உபாயம் என்று எண்ணியவன் சிறிது நேரம் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். காட்டில் கலைந்தாடிய காற்றும் சற்று நிதானத்திற்கு வந்தது.

சருகுகள் உரசும் சத்தம் கேட்டு மெல்லக் கண் விழித்தான் செந்தூரன். கிட்டத்தட்ட அரை மயக்க நிலைக்கு அவன் சென்றுவிட்டான். அரைக் கண் விழித்தவன் முன் தேவநாகவேடர் குலத்தின் தலைவர் படமெடுத்து நின்றிருந்தார்.

பதினைந்து அடிக்கும் மேல் அவரின் வால் நீண்டு சென்றது. அதனைப் பார்த்தவனிற்கு பயம் ஏதும் எழவில்லை. அதற்கு மாறாக குற்றவுணர்ச்சி தான் எழுந்தது. ஒரு நிமிடம் தனது கவனச்சிதறலால் நடக்கக் கூடாத காரியங்கள் நடந்து விட்டதை எண்ணி மனம் வெம்பி தவித்தது.

“என்னை மன்னித்துவிடுங்கள், உங்களின் சிவன் காப்பு தற்போது என்னிடம் இல்லை. என்னைவிட வஞ்சனுக்குத்தான் அது அதிகம் தேவைப்படும் என்று எண்ணி அவனிடம் கொடுத்துவிட்டேன்.” மூச்சு வாங்கியது செந்தூரனிற்கு. அவனின் இறுதி நொடி வெகு அருகில் இல்லை என்பதை உணர்ந்தான்.

“அனைத்தும் யான் அறிவேன் செந்தூரா. உனது உடலுக்கு அழிவு நெருங்கி விட்டது. உடனே நீ வஞ்சனிடம் செல்ல வேண்டும். உனது சுவடிகள் அனைத்தும் நான் காபந்து செய்துவிட்டேன் என்று சொல்லவே உன்னைத் தேடி வந்தேன். முடிந்தளவு நல்வழியில் செல்ல முயற்சி செய்” என்று சூசகமாக கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வர, மையிருட்டில் கால் போன பாதையில் செல்லத் தொடங்கினான் செந்தூரன். முழுநிலவின் வெளிச்சம் அவனுக்கு வழிகாட்டிட, நட்சத்திரத்தின் அமைப்பு அவனுக்கு ஒன்றை உணர்த்தியது. யாதெனில்,கொங்கு நாடு அழிவை சந்திக்க இருக்கின்றது. தட்டுத்தடுமாறி வனக்காட்டின் மற்றொரு எல்லைக்கு வந்துவிட்டான் செந்தூரன்.

குன்றின்மேல் உடல் முழுக்க நீலம் பாய்ந்து மயக்க நிலையில் இருந்தான் வஞ்சன். நாட்டை ஆண்டு மக்களுக்கு மனமார நன்மை செய்த மாமன்னன், மலைக் குன்றின் மீது மண், புழுதி சேர மாய்ந்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தன்னால் தான் என்ற குற்றவுணர்வு செந்தூரனை மேலும் வாட்டியது. வஞ்சனின் காலில் காளிங்கனின் பற்தடம் பதிந்து இருந்தது. அதிலேயே உணர்ந்துக் கொண்டான், வனக்காட்டிற்கு வந்த பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை. தீராக் கோபம் கனன்றது அவனின் நெஞ்சத்தில்.

வஞ்சனின் தலையை தனது மடியினில் எடுத்து வைத்தான் செந்தூரன். கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாகக் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது. தனது நண்பனின் அருகாமை உணர்ந்தவுடன் மெல்ல கண் விழித்தான் வஞ்சன்.

“செந்தூரா… வந்துவிட்டாயா! யான் அறிவேனடா. எப்படியும் என்னைத் தேடி நீ வருவாயென. அ… அரண்மனை சென்றாயா? கோதை… கோதையிடம் நீர் கொடுத்தாயா?” திக்கித்திணறி வார்த்தைகள் வெளிவந்தன. ஒவ்வொரு நொடியும் உயிர் பிரியும் வலியை வஞ்சனோடு செந்தூரனும் அனுபவித்தான்.

“மகாராணியார் கரு சுமந்து இருக்கிறார் நண்பா.” அந்த ஒற்றை வார்த்தை வஞ்சனுக்கு ஓராயிரம் உணர்வை கொடுத்தது. ஆனால், அதனை வெளிப்படுத்த உடல்தான் ஒத்துழைக்கவில்லை.

“கோ… கோதை… நம் நாட்டிற்கு வாரிசு வரப்போகின்றதா?”

பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தான் செந்தூரன்.

நெஞ்சம் முழுவதும் மகிழ்ச்சியில் ததும்பியது வஞ்சனிற்கு. தான் இல்லையென்றாலும் மாமன் ஸ்தானத்தில் இனி செந்தூரன் எனது பிள்ளையை வளர்ப்பான் என்ற பேருறுதி உதித்தது. அதனை வாய்மொழியாகவும் கூறிவிட்டான் வஞ்சன்.

“நான் பிழைக்க மாட்டேன் செந்தூரா. நான் இல்லையென்றாலும் தாய்மாமன் என்ற இடத்தில் நீதான் என் பிள்ளைக்கு தாயுமானவனாக இருக்க வேண்டும். உன் மடிதனில் நான் மடிவது எனக்கு எத்தனை பெரிய நிம்மதி தெரியுமா? மறுபிறப்பு ஒன்று உண்டென்றால் என்றும் மறவாத உன் நட்பே எனக்கு காலம் முழுவதும் வேண்டும் என வேண்டுவேன் செந்தூரா” வாயில் இருந்து நுரை தள்ளியது. கருநாகத்தின் நஞ்சால் இத்தனை நேரம் அவன் உயிரோடிருந்ததே பெரிய விடயம் என்பது செந்தூரனுக்கு தெரியும். தன் கண்முன்னே அனைத்தையும் இழப்பது எத்தனை வலி என்பதை நொடிக்கு நொடி உணர்ந்து மடிந்தான் செந்தூரன்.

தான் என்றும் உடன் வைத்திருக்கும் மரகதவாளை செந்தூரனிடம் கொடுத்தவன் அப்படியே தன் கண்களை மெதுவாக மூடத் தொடங்கினான்.

“வஞ்சா, என்னை மன்னித்துவிடு.” என்று கதறியவனின் கண்ணீர் துளி வஞ்சனின் நெற்றிப்பொட்டில் தெறித்து அவனுள் மறைந்தது உடன் வஞ்சனின் உயிரும் மடிந்தது.

“வஞ்சாஆஆஆஆ” காடே அதிரக் கத்தினான் செந்தூரன்.

“கண்முன்னே நான் நேசித்த அனைவரும் என்னை விட்டு பிரிகையில் இனி இழப்பதற்கென்று எனக்கு என்ன இருக்கிறது? இத்தனை நாட்கள் நகமும் சதையுமாய் இருந்துவிட்டு இப்போது நகத்தை மட்டும் வேரோடு பிய்த்து எறிந்ததைப் போல் என்னைவிட்டு போய்விட்டாயே வஞ்சாஆஆ… ஏவல் வசத்தால் மஞ்சரிக்கு சாபம் விடுத்தேன். என் வாயாலேயே என் வம்சம் கலைந்துபோகட்டும் என்றேன். இனி இந்த ஆத்மபலன் என்னிடம் இருந்து என்ன பலன்?

பஞ்சபூதங்கள் சாட்சியாக என்னுடைய ஆத்மபலன் முழுவதையும் வஞ்சனிற்கு அளிக்கிறேன். மீண்டும் ஒரு பிறப்பெடுத்து அவன் கையாலேயே எனது முடிவு தொடங்கட்டும்.

மீண்டும் அவசரப்பட்டுவிட்டான் செந்தூரன்.”

……..

வனக்காட்டின் தொடக்க எல்லையில் தூக்கியெறியப்பட்ட ஏவல் நேராக கொங்கிளக்கேசரிடம் சென்றது. கல்வராயன் மலைக்கு அடியில் அமர்ந்து அகோரிகளிடம் மேலும் மந்திரம் கற்றுக் கொண்டிருந்தவன் முன்பு தோன்றிய ஏவலை புரியாது பார்த்தான் கொங்கிளக்கேசர்.

“இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? இந்நேரம் நீ செந்தூரனை முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்க வேண்டும்.” கொங்கிளக்கேசர் அனலாகக் கொதித்தான்.

“காட்டின் எல்லைக்குள் என்னால் நுழைய முடியவில்லை. செந்தூரன் அவனது சூட்சம சக்தியின் வெப்பத்தால் என்னால் அவனின் உடலில் இருக்க முடியவில்லை. வனக்காளியால் தூக்கி வீசப்பட்ட நான் தற்போது இங்கு இருக்கிறேன். எனது சக்தி குறைந்தது போல் உணருகிறேன். உடனடியாக இரத்த பலி வேண்டும்”

“உன்னை அனுப்பி வைத்தவன் நான், எனக்கே நீ ஆணையிடுகிறாயா?” என்று ஏவலிடம் சினம்கொண்டு எகிறினான் கேசர்.

அப்போது அங்கிருந்த அகோரிகளில் மூத்த வயதுடைய அகோரி எழுந்தார். அவன்தான் அங்கிருக்கும் அனைவருக்கும் குரு.

“சினம் என்றும் ஒருவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்பதை நீ மறவாதே கேசா. நடந்த அனைத்தையும் யாம் அறிந்தோம். இன்னும் சில நிமிடங்களில் செந்தூரன் உயிர் துறக்கப் போகின்றான். முதலில் தனது புண்ணியப் பலன்களை மக்களுக்காக கொடுத்தவன், தற்போது அவனின் ஆன்மபலனையும் வஞ்சனின் மறுபிறப்பிற்காக கொடுத்துவிட்டான். அனைவரும் புறப்படுங்கள். வனக்காட்டின் மற்றொரு எல்லையில் இருக்கும் குகைக்குன்றின் அருகில் தான் அவன் இருக்கின்றான். எல்லையை ஒட்டியபடி ஒரு வேடுவன் குகை ஒன்று உண்டு. அதனருகே செந்தூரனை செல்லவிடாமல் அவன் உயிர் பிரிந்த மறுநொடி அவனது உடலையும் ஆன்மாவையும் பிடித்து வாருங்கள். நம்மை விட பலம் பொருந்தியவன் செந்தூரன். தூய ஆன்மாவை நாம் கட்டுக்குள் வைத்து, அதனை சித்திரவதை செய்யும்போது நிச்சயம் அது பாதாளஅரக்கனை சரணடையும். அவன் ஏற்கனவே கற்றறிந்த அனைத்து மந்திர தந்திர வித்தைகளும் இன்னும் அவனுக்கு பலத்தை கொடுத்து அரக்க வழியில் செல்ல வழிவகுக்கும்.

தற்போது அவனின் கிரகப்பலன்கள் அனைத்தும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கின்றன. இதுதான் பாதாளஅரக்கனை உயிர்ப்பிக்க நமக்கு சரியான வழி. அனைவரும் விரைந்து வனக்காட்டின் எல்லைக்கு செல்லுங்கள்.

கொங்கிளக்கேசா! நீ அரியணை ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீ உடனே கொங்கு தேசத்திற்கு சென்று நடக்கும் வேள்வியை நிறுத்து. அவ்வாறு நிறுத்த முடியவில்லை என்றாலும் பாதகமில்லை. செம்பியன் உதவியோடு எப்படியாவது அந்த யட்சினியை உன்வசம் கொண்டுவர முயற்சி செய். நீ தற்போது மந்திர வித்தைகள் கற்றிருக்கும் சாதாரண மானுடன் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள். ஓதம் இருக்கும் நாட்களன்று எக்காரணத்திற்கொண்டும் ஆலயம் பக்கம் சென்றுவிடாதே.

நீ நாட்டிற்குள் இருந்து அகோர சக்திகளை வழிபட துவங்கு. எப்படியாவது செந்தூரனின் ஆன்மாவை நாம் அடக்கிவிட்டால் அவன் மாபெரும் அகோர சக்தியாக வெளிப்படுவான். இனி, இந்த உலகத்தில் அரக்க சக்திகளே மேலோங்கி இருக்கும்.” என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்த, மற்ற அகோரிகள் குருவின் சொல்லை செய்துமுடிக்க மாயமாய் மறைந்தனர்.

இரத்தத்திற்காக காத்திருந்த ஏவலுக்கு ஒரு சேவலின் தலையை திருகி போட்டவன், கேசரிடம் “சில நேரம் நம் செயல்களுக்காக உயிர்பலி அவசியமாகித்தான் போகிறது கேசா. முடிந்தால் தேவநாகவேடர் குலத்தின் குமரியை கவர்ந்து வா.” என்றான்.

….

கொங்கு நாடு.

வேள்வி முடியும்தருவாயில் இருந்தது. மஞ்சரி ஒரு இடத்தில் கண்களில் உக்கிரத்தோடு அமர்ந்திருந்தாள். அவளின் உடலில் இருந்து ஒரு வித வெப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. யட்சினி தான், இதனால் மஞ்சரிக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் அருகில் செல்ல முடியாமல் நின்றிருக்க, நீலாவோ, ஏன் மஞ்சரி செந்தூரன்மீது இத்தனை ஆங்காரத்தோடு இருக்கிறாள் என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

அங்கு அரண்மனையில், செம்பியன் மயக்கத்தில் இருந்து தெளிந்து இருந்தார். அவருக்கு சற்று நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. மாரிவெண்கோ கல்வராயன் மலைக்கு படைகளை அனுப்பி விட்டிருக்க, தனது அறையில் யோசனையோடு நின்றிருந்தவரை தேடி வந்தார் செம்பியன்.

“அமைச்சரே! என்னவாயிற்று? படைகளை முடுக்கிவிட்டாயிற்றா? செந்தூரன் என்ன ஆனான்? வஞ்சனின் நிலை என்ன?” என்று பதட்டமாகக் கேட்டவருக்கு, பளாரென்று அறைதான் கிடைத்தது அமைச்சரின் கையால்.

கன்னத்தில் அறையை தாங்கிய செம்பியன் வதனம் சினத்தில் சிவந்தது. “அமைச்சரே!”

“வாயை மூடு செம்பியா. எத்தனை பெரிய திட்டம் வகுத்து இருந்தோம் என்று உனக்கு நினைவிருக்கிறதா? மலைவாசி பெண் வந்ததும் மதிமயங்கி மந்தி போல் அந்த பெண்ணின் பின்னே செல்கிறாய். நாடாள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது, தக்க சமயத்தில் மங்கி கிடக்கும் மூளையை சலவை செய்ய வேண்டும். உன்னை அழைத்து சென்றது பெண்ணே கிடையாது. அவள் செந்தூரனின் யட்சினி. நல்லவேளை உன்னை மயக்கமடைய செய்துவிட்டு மட்டும் சென்றாள். பசிக்கிறது என்று உதிரத்தை உறிஞ்சி எடுத்திருந்தால் இந்நேரம் உனக்கும் சேர்த்து இறுதி காரியம் நிகழ்த்த வேண்டியிருக்கும். ச்சே, அப்படி நடந்திருந்தால் கூட இந்த வேள்வி தடைப்பட்டு போயிருக்கும்.”

இறுதி வரிகளில் சற்று எள்ளல் எட்டித்தான் பார்த்தது. தான் செய்த காரியத்தை எண்ணி வெட்கம் கொண்டான் செம்பியன். இருந்தாலும் மாரிவெண்கோ அவனை அறைந்தது உள்ளுற கனன்று கொண்டுதான் இருந்தது.

“என்னவாயிற்று?” மெல்லியக் குரலில் கேட்டான்.

“வேள்வி முடியும் தருவாயில் இருக்கிறது. வஞ்சனை எங்கு தேடியும் காணவில்லை. கல்வராயன் மலை முழுவதும் நம் வீரர்களை முடுக்கிவிட்டு இருக்கிறேன். செந்தூரன் பற்றியும் இன்னும் தகவல் வந்து சேரவில்லை.” அப்பொழுது தான் ஒரு ஆந்தை ஓலையை எடுத்துக் கொண்டு வந்தது.

அதனை பார்த்த செம்பியன், “தந்தையிடமிருந்து செய்தி வந்திருக்கிறது” என்றான்.

ஆந்தையிடமிருந்து ஓலையை வாங்கிய மாரிவெண்கோ, அறையில் ஏற்றப்பட்ட விளக்கின் அருகே சென்று அதனை வாசித்தார்.

“சேவலும் மயிலும் காட்டில் வேடுவன் குகைக்கு அருகில் மடிந்துவிட்டன. தீக்கங்கை நெருப்பாக மாற்றும் நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தது.

அப்படியென்றால்…?

…..

கல்வராயன் மலை.

வஞ்சனின் உயிர் பிரிந்த நொடி, தனது ஆத்ம பலனை வஞ்சனின் ஆன்மாவிற்கு அளித்துவிட்டான். அதனை ஏற்றுக்கொண்ட வஞ்சனின் ஆன்மாவும் கலங்கிய விழிகளோடு செந்தூரனை பார்த்துக் கொண்டிருந்தது. எமதூதர்கள் வந்து வஞ்சனின் ஆன்மாவை அழைத்து சென்றுவிட்டனர்.

காலத்தின் கணக்குப்படி, வஞ்சனிற்கு அடுத்த பிறவி என்பது கிடையாது. முன்பிறவி பலனும், தற்போதைய பிறவியில் அறம் பிறழா மன்னனாக நல்லாட்சி புரிந்து புண்ணிய பலன்களை சேர்த்ததாலும், பாவக்கணக்கு மிகவும் குறைவு என்பதாலும் அடுத்த பிறவி அவனுக்கு இல்லை. ஆனால், மனிதனின் ஆசை என்பது எதனையும் மாற்றும் வல்லமை உடையது. அப்படித்தான் இறுதி நொடியில் தன்னவள் கருவுற்று இருக்கும் செய்தியும், தனது நண்பனை மீண்டும் காண அவன் கொண்ட ஆசையும் அவன் வாயாலேயே தெரிவிக்க, தனது ஆன்ம பலனை அவனுக்கு கொடுத்துவிட்டான் செந்தூரன். செந்தூரன் தனது புண்ணியக் கணக்கை ஏற்கனவே மக்களின் நலனுக்காக தாரைவார்த்ததால், தற்போது அவனின் பாவக் கணக்கு வஞ்சனையே சேரும். அதனைக் கழிக்க, வஞ்சன் மறுபிறவி எடுத்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

செந்தூரனின் விதி விளையாட்டு இங்கு தொடங்கவில்லை.
என்று தான் கற்ற மந்திரங்களை மஞ்சரிக்கு கற்றுக் கொடுத்தானோ அன்றே தொடங்கியது. மந்திரக்கலை என்பது தமது ஆன்மபலத்தோடு ஒன்றிணைந்து இருப்பது. சித்தர்களும், குருவும் நமக்கு மனமுவந்து அளிக்கும்போது கூட அவர்களின் காலக்கணக்கின்படி, முறையான பயிற்சியில், கற்றுக்கொள்பவன் அதற்கு தகுந்தவனா என்று சோதித்த பிறகே கற்றுக் கொடுப்பார்கள். ஆனால், செந்தூரன், மஞ்சரி மீது அவன்கொண்ட அதீத காதலால், எந்தவித முறையான பயிற்சியும் முன்னெடுக்காது, அனைத்தையும் அவளுக்கு ஒரே மூச்சில் கற்றுக் கொடுத்துவிட்டான். இதனால், செந்தூரனின் ஆயுள் குறைந்து போனது.

அடுத்து, தேவநாகவேடர் குலத்தலைவர் அவனின் தயாள குணத்திற்காக கொடுத்த சிவன்காப்பை வஞ்சனிற்கு கொடுத்ததால் அரூபங்களை காணும் வல்லமையை இழந்தான். அது உடனிருந்திருந்தால் கொங்கிளக்கேசரை முன்னரே அடையாளம் கண்டிருப்பான். அதன் பிறகு நடந்த இன்னல்களும் தடுக்கப்பட்டிருக்கும்.

மந்திரங்கள் ஒருபக்கம் இருக்க, தனது தந்திரத்தையும் கிரகபலனால் இழந்தான். சித்தமுனி பல எச்சரிக்கையுடன்தான் அவனிடம் கமண்டல நீரைக் கொடுத்திருப்பார். ஆனால், அவனது தந்தை உருவில் இருந்த கொங்கிளக்கேசரின் சொற்களுக்கு மயங்கி, ஒரு நிமிடம் உண்மையை அவன் உணராது கமண்டல நீரை கொடுத்துவிட்டான். சொன்ன வாக்கை காப்பாற்ற இயலாததும் அவனது பாவக் கணக்கில் சேர்ந்தது.

சரியான நேரத்தில் நாகவசியக் காப்பை பயன்படுத்திய வரை சரிதான். ஆனால், வனக்காட்டில் எந்த மாயமந்திரமும் பயன்படாது என்று தான் அறிந்ததை மறந்தவன், காளிங்கனை அனுப்பினான். அவன் வஞ்சனை கொன்றான். ஆக, வஞ்சனின் மரணத்திற்கு காரணமானவன் காளிங்கனை அனுப்பிய செந்தூரன்தான். இதுவும் அவனது பாவக்கணக்கில் சேர்ந்தது.

ஏவல் தன்னை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்று அறிந்துதான் வைத்திருந்தான் செந்தூரன். ஆனால், தாம் அறிந்த அனைத்தும் அதன்படி நடந்துவிடாது என்பதற்கு சான்று, தன்னுடன் மஞ்சரி இணைய மறுக்கிறாள், தன்னுடைய வார்த்தைக்கு அவள் செவிசாய்க்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக, அவன் வாயாலேயே, மஞ்சரிக்கு அளித்த சாபம்தான். தான் காதல் கொண்டு கந்தர்வ மணம் புரிந்த தனது துணையாளை சபித்து, அதனால் அவளின் கரு அழிந்தது கொலைக்கு சமம் என்பதனை உணராது போனவனிற்கு பின்னால் ஏவல் இருந்தாலும், அவன் மனிதஉருவில் இருப்பதால் பாவக்கணக்கை அவன்தான் சுமந்தான்.

இறுதியாக, அவனிடம் இருந்த ஒன்று அவனின் ஆன்மபலன். செந்தூரன் தனது ஆன்மாவை பிரித்து சில பொருட்களில் மறைத்து வைத்திருப்பதாய் சொன்னான் அல்லவா, அவையனைத்தும் ஆன்மபலனோடு ஒன்றிருக்கும். இனி, தன்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று தன்னுடைய ஆன்மபலனை வஞ்சனிற்கு கொடுத்தத் தருணம், மற்ற பொருட்களில் மறைந்து இருக்கும் ஆன்மசக்திகள் அனைத்தும் செந்தூரனின் பாவத்தை சுமந்தனவாக மாறியது.

இவையனைத்தும் விதிப்படி நடந்தாலும், அவனின் கவனம் ஒரு இடத்தில் சிறிது நிலைத்திருந்தால் கூட ஏற்பட்ட இன்னல்களை தடுத்திருக்கலாம். ஆனால், எது நடக்குமோ, அது நடந்தே தீரும் என்பதற்கு செந்தூரனே இங்கு சான்று.

அனைத்து புண்ணிய பலன்களை இழந்தவனின் ஆன்மா பாவங்கள் பீடித்து, அவனது தீய எண்ணங்கள் அனைத்தும் வெளிவந்தன. இதுவரை உள்ளே ஒரு மூலையில் அடங்கியிருந்த கொங்கு நாட்டின் அரியணை ஆசை, இப்போது முழுவதுமாக அவனுள் அடங்கா பேராசையாக கொளுந்துவிட்டது.

வஞ்சனின் உடலை தன் மடியிலிருந்து எடுத்தவன், அவனைப் பார்த்து எள்ளல் நகை ஒன்றை உதிர்த்து, “நீ இருந்தால், என்னால் அரசாள முடியாது. நீ இறந்தது தெரிந்தால் உனது வாரிசு தான் அரசாள தகுதியுடையவன் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். இந்த தேசத்தை ஆளப் பிறந்தவன் நான் ஒருவன் மட்டும் தானடா வஞ்சா. காணாபிணமாக மறைந்து போ” என்று அப்படியே வஞ்சனின் உடலை மலைச்சரிவிலிருந்து உருட்டிவிட்டான். அவனோடு, அவன் அளித்த மரகத வாளும் மாயமாய் மறைந்ததை செந்தூரன் அறியவில்லை.

செந்தூரனின் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவனது உயிர் பிரிய இருக்கிறது. அந்த நேரம் தான் அவன்முன் வந்தனர் அகோரிக் கூட்டங்கள்.

மரணம் நெருங்கும் தருவாயில் செந்தூரனின் கண்களுக்கு அவர்கள் அனைவரும் தென்பட்டனர். அப்போது அவன்முன் தோன்றினான் அகோரிகளின் தலைவன், வயதான அகோரி, முதுகிழமகுடபதி.

“உனது வேதனையை நாங்கள் அனைவரும் அறிவோம் செந்தூரா. நல்வழியில் சென்றால் உன்னால் எதையும் அடையமுடியாது. இன்னும் சில நொடிகளில் நீ மரணித்துவிடுவாய். ஆனால், உனது கிரகப்பலன்கள்படி, நீ அசகாயசூரனாய் தீய சக்திகளின் தலைவனாய் வந்திருக்க வேண்டியவன். தற்போதும் ஒன்றும் பாதகமில்லை. நாங்கள் நினைத்தால் உன்னை மரணமே கண்டு அஞ்சும் சக்தியாளனாய் மாற்ற முடியும். இந்த கொங்கு தேசம் மட்டுமல்ல, இந்த உலகையே ஆளும் வல்லமை உன் ஒருவனுக்கு மட்டுமே இருக்கிறது. வா… எங்களோடு இணைந்துவிடு… தேசத்தோடு, உன் மஞ்சரியையும், உனது பிள்ளைகளையும் நான் உனக்கு திருப்பித் தருகிறேன் வா…” என்றவனின் வார்த்தைக்கு தற்போது பேராசை பெருக்கெடுத்து இருக்கும் செந்தூரன் ஒத்திசைத்தான். இப்படித்தான் அனைத்தும் நிகழும் என்றால், இவன் வாழ்வில் காதல் எதற்கு? நட்பு எதற்கு? விதி சிரிப்பாய்தான் சிரிக்கிறது.

மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று எண்ணிய இரு உயிர்களில் ஒன்று மடிந்திட, இன்னொருவனோ தனது ஆசையை முன்னிருத்தி செல்லக் கூடாத வழியினை தேர்ந்தெடுத்துவிட்டான். இனி, கொங்கு தேசத்தின் நிலை?

அந்த அரியணை யாருக்கு?

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்